"இலங்கை அரசியல் யாப்பு’’ பிரெஞ்சு மொழியாக்க நூல் வெளியீட்டு உரை

(04.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான லாக்கூர்னேவ் நகரத்தில் உள்ள Maison du people Guy Moquet  மண்டபத்தில் நடந்த "இலங்கை அரசியல் யாப்பு" பிரெஞ்சு மொழியாக்க நூல் வெளியீட்டின் உரை)






யாழ்நகரில் என் பையன், கொழும்பில் என் பொண்டாட்டி,
வன்னியில் என் தந்தை:
தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்பர்ட்டில்:
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில் -
நானோ வழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட
ஒட்டகம் போல் ஓஸ்லோவில்.
என்ன நம் குடும்பங்கள் !
காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?
-வ.ஐ.ச.ஜெயபாலன்
அயல்நாடுகளுக்கு புலம்பெயர்ந்த குடிபெயர்வு நம் விருப்பம் கொண்டா நடந்தது? விட்டேற்றித் தனமாய் வேறு நாடுகள் மாறி வந்தோமா?

பிறந்த மண்ணில் வாழத் தகுதியற்றவர்கள் என விரட்டப்பட்டோம்: உயிரழிவுக்கு ஆளாக்கப் பட்டு, இனவெறி விதிக் குறங்கு கிழித்தெறியும் பஞ்சணையானோம்.

வாழவிடாமல் ஆக்கிவிட்டதே இனவெறி என்ற சினம், தன்மானம், தியாகம், விடுதலை இலட்சியம் எல்லாவற்றையும் சுமந்து வந்தோம்:தனியாக வெளியேறவில்லை; களத்தில் நடக்கும் விடுதலைப்போர், தியாகம், அர்ப்பணிப்பு அத்தனைக்கும் துணைநின்று வாழ்வையும் தூக்கிச் சுமந்தோம்.

சிங்கள இனவெறி ஒடுக்குமுறை படிப்படியாக மேலேறி முள்ளிவாய்க்காலை நிறைவேற்றியது. முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரக்காட்சிகளைக் ஒரு கணம் மனக்கண்முன் கொண்டு வாருங்கள்.

கணவனைப் பாஸ்பரஸ் கொத்துக் குண்டுகளுக்கு பறிகொடுத்த ஒரு தாய் முள்ளிவாய்க்காலிருந்து முகாமிற்கு விரட்டப்படுகிறாள்: இடுப்பில் ஒரு குழந்தை: தலையில் உடைந்து நொறுங்கிய பானை, குவளையுடன் ஒரு பொதி. வலது கையில் நடைபயிலும் சிறுபையன்: துப்பாக்கியை உயர்த்திப்பிடித்தபடி எதிரில் நிற்கிறது இராணுவம்: ராணுவத்தைக் கண்டதும், இரு கையையும் உயர்த்தி நடக்க வேண்டுமென தாய் அறிவாள்: மூன்று வயதுச் சிறுவன் அறிந்திருக்க மாட்டான். பதறிப்போய் தாய், தன் கையால் அவன் கைகளை உயர்த்திப்பிடித்தாள். தலையிலிருந்த பாத்திரப்பொதி கீழே ‘ணங்’கென்ற சத்தத்துடன் விழுந்து உருண்டு, சிதறியது - ஏதிலிகள் வாழ்க்கை போல.

உலகம் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த இந்த இனப்படுகொலை யிலிருந்து எப்படி வெளியேறுவது?

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குறியீடு. ஒடுக்கப்படும் இனங்கள் எங்கெங்கு கழுவேற்றப்படுகிறதோ, அந்த பலிபீடங்களைச் சுட்டிகாட்டும் அடையாளம். இந்தக் குறியீட்டை, இந்த அடையாளத்தை, இந்த உருவகத்தை, இந்தத் துன்பியலை எவ்வாறு துடைத்தெறியப் போகிறோம்?

ஆங்கில வாசகம் ஒன்றுண்டு: “கடந்தகாலப் பிழைகளிலிருந்து படிப்பினையைக் கற்றுக் கொள்ளாதவர்கள் மீண்டும் அதே தவறுகளைச் செய்யப் விதிக்கப்படுகிறார்கள்”.

கிரேக்க வாசகம் ஒன்றுண்டு: “பித்தன் தன்னைப் பற்றிப் பேசுவான்: அற்பன் அடுத்தவனைப் பற்றிப் பேசுவான்: சாமானியன் சம்பவங்களைப் பற்றிப் பேசுவான்: ஞானி பிரபஞ்சத்தைப் பற்றிப் பேசுவான்.”

ஞானிகள் போல் நாமெல்லோரும் பிரபஞ்சத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும்; பிரபஞ்சத்துக்கு, இந்த உலகத்துக்குப் பேசியாகவேண்டும். அது நம்முடைய மொழியில் மட்டுமல்ல.

என்ன பேசுவது? இந்த உலகத்துக்கு என்ன நாம் சொல்வது?

அதுதான் ’இலங்கை அரசியல் யாப்பு’ என்ற இந்நூல்: நம்முடைய அனாதரவு நிலைமையை, இந்த அனாதரவுக்குள்ளிருந்து அடையவேண்டிய விடுதலையைப் பேசுகிற நூல். நம்மை இல்லாமல் ஆக்க உலகின் எல்லா நாடுகளும் இனவெறிக்கு கைக்கோர்த்தனவே, அந்த உலக நாடுகளுக்கு முன் தூக்கிப் பிடிக்கும் கண்ணாடி.

நமக்கு நம்முடைய நிலை தெரியும். நம் கையில் ஒரு புண். மற்றவர்களுக்குத் தெரிய கையை நீட்டி விரித்தால் போதும்; கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. ஆனால் நம் இதயத்தில் ஒரு புண் இருக்கிறது: அது ஆறாவடு. நமது வேதனையை, வெக்கரிப்பை நமக்குள்ளே வைத்துப் பேசிக் கொண்டிருப்பதில் சிறு பயனும் இல்லை.இந்த உலகத்துக்குக் காட்டவேண்டும். அப்படி உலகுக்குச் சொல்வதற்கு ஒரு கண்ணாடி தேவை. அதுதான் மொழியாக்கக் கண்ணாடி. பிரஞ்சு மொழிபெயர்ப்பின் மூலம் உலகத்தின் முன் முதல் கண்ணாடியை ஏந்தியுள்ளோம். இன்று பிரெஞ்சு சமூகத்தின் முன் தூக்கிப் பிடிக்கும் இக்கண்ணாடியைப் போல, எங்கெங்கு தமிழர்கள் வாழுகிறார்களோ, அந்த நாடுகளின் மொழிகளில் நம் பிரச்சினைகளை எடுத்துப் பேச கடமைப்பட்டுள்ளோம்.

சர்வதேச ஆய்வு - முதலில். ஆய்வு என்பது ஒரு செயலுக்கான புத்திப் பூர்வ முன்னேற்பாடு என்பார் அரசறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு. இனி நாம் செய்யவேண்டுவது யாது என்ற செயற்பாட்டுத்தளத்தை ஆய்வு என்ற புத்திப்பூர்வ ஏற்பாடு முன்னகர்த்தும்.

ஆய்வு காலத்தை உந்தும் செயல் மட்டுமண்டு,காலத்தை முந்தும் செயல்; ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பது போல ஆய்வு. ஆய்வின் இறுதி இலக்கு என்ன? செயல். ஆய்வுக்கு அடிப்படை சிந்தனைச் சுதந்திரம்.

சீனாவின் பக்கம் சாய - அல்ல: சரணடைய இலங்கை முடிவெடுக்கும் அளவுக்குச் சீனா சாதுரியமாகக் காய் நகர்த்துகிறது: சீனா இந்தியாவுக்கு எதிரிநாடு: இலங்கை இந்தியாவுக்கு நட்புநாடு. இதை மாற்றி ஈழப்பிரதேசம் தனக்கு நட்பு வட்டாரம் என்றெண்ணுகிற சுழற்சியை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும். இலங்கை நாட்டை விட, ஈழப்பிரதேசமே தனக்குப் பாதுகாப்பு என்பதை இந்தியா உணரவேண்டிய காலக்கட்டம் இது. ஆனால் எதிர்பார்ப்பு இலவு காத்த கிளிகளாக்கி ஏளனம் செய்கிறது.

1931-ல் டொனாமூர் அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது; அது பிரிட்டீஷ் ஆட்சிக்கு ஒப்புதலான யாப்பு.

1948-இன் பின்னர் பிரிட்டீஷ் ஆட்சியின்போது, சோல்பெரி தலைமையிலான குழுவினர் எழுதியது “சோல்பேரி யாப்பு”. பெரும்பான்மை இனத்தின் நலன்களுக்குச் சாதகமாக, அந்த யாப்பை உருவமைக்க முயன்ற சிங்களத் தலைவரான சேனநாயகா (இலங்கையின் முதல் பிரதமர்), சோல்பெரியின் அருகிருந்து ஒவ்வொன்றையும் எடுத்துக் கொடுத்தார். சோல்பெரி யாப்பு வடிவமைக்கப்பெற்றது.

சோல்பெரி அரசியல் யாப்பின் 29-வது பிரிவு சிறுபான்மையினங்களின் பாதுகாப்புக்கு வகை செய்திருந்தது. அந்த விதியை மீறி 1949-ஆம் ஆண்டு மமலையகத் தமிழரின் வாக்குரிமை, குடியுரிமை பறிக்கப்பட்டது: 1956-ஆம் ஆண்டு தனிச் சிங்களச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இங்கு சிறுபான்மை இனத்தின் நலன்களைப் பறிக்க, அரசியல் யாப்பு விதியை மீறல் நிகழ்த்தப்பெற்றது.

1961-இல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்ற  சோல்பெரி “இப்போது இலங்கையில் நடத்தப்பெறும் இனக் கொடுமைகளுக்கெல்லாம் நான் எழுதிய யாப்பு அமைந்துவிட்டதே” என்று மாய்ந்துபோய் புலம்பியிருக்கிறார்.

பண்டாரநாயகா ஆட்சியில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டபோது, சிறுபான்மையினங்களின் பாதுகாப்புக்கு வகை செய்த இந்த 29-வது பிரிவு முற்றிலும் நீக்கப்பட்டது.

போரை எதிர்த்த புத்தனின் மார்க்கத்தைப் போர் செய்யத்தூண்டும் மார்க்கமாக மாற்றியமைத்த எழுத்து வடிவம் இலங்கை அரசியல் யாப்பு. ஒவ்வொரு கட்டத்திலும் யாப்பு இந்தப் பேரினவாதத்தின் கட்டளைகளை நிறைவேற்றும் பணியாளன். பேரினவெறி எஜமான் : யாப்பு பணியாளன்.

மு.திருநாவுக்கரசு சொல்வார் “யாப்பை அதன் வரிகளில் அல்ல, செயல்பாடுகளில் காணவேண்டும்”.

தமிழ் மண்ணில் கால்வைத்து அகதியாக வாழ விதிக்கப்பட்ட இந்த ஆய்வாளர் - இங்கே வர இயலாது: நூல் எழுதிய ஆசிரியனே இல்லாமல், ஒரு நூல் வெளியீடு நடைபெறுவது ஒரு புதினம்தான்.

‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற புரட்சிகர முழக்கங்களை உலகுக்கு அளித்த நாடு பிரான்ஸ். உறக்கத்தில் ஆழ்ந்திருந்த உலகத்தை ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற புரட்சிகரப் பாடல் எழுப்பிற்று. தொண்டைக்குழியில் குரல் எழுப்பி, தோள்கள் உயர்த்த வைத்தது.

”புரட்சிகர முழக்கத்தைத் தந்த பிரான்ஸ் மக்களுக்கு, சகோதரர்களுக்கு எனது அன்பைத் தெரிவியுங்கள்: வேறெந்த நாட்டினையும் விட, நான் பிரான்ஸை நேசிக்கிறேன்” என்று மு.திருநாவுக்கரசு என்னிடம் தெரிவித்த வாழ்த்துக்களை இங்கு திரண்டிருக்கும் உங்களிடம் பரிமாறிக் கொள்கிறேன்.

மு.திருநாவுக்கரசு எழுதிய “இந்தியாவும் ஈழவிடுதலைப் போராட்டமும்” என்ற சிறுநூல் 32 பக்கம். 1985-இல் வெளியிடப்பட்டது. அமைதியான நீர்நிலையில் மலைப்பாறை உருண்டுவிழுந்து, அதலகுதலமாக்குவது போல்,இந்திய அமைதிப்படை (IPKF) 1987-இல் ஈழப் பிரதேசத்தில் குதித்தது. இந்தியச் சாத்தான் படையினர் குதியாட்டம் போடக் கால்வைத்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இச் சிறுநூல் இந்தியநோக்கததைத் தெளிவாகக் காட்டியிருந்தது. 2008-இல் போர் உச்சத்திலிருந்தபோது, சென்னையில் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியிருந்த நாங்கள், இச்சிறுநூல் பரவலாய்ச் சென்று சேரவேண்டுமென்பதின் பொருட்டு, டிசம்பர் 2008-இல் பத்து ரூபாய் விலையிட்டு 5 ஆயிரம் படிகள் அச்சிட்டு தமிழகமெங்கும் விநியோகித்தோம்.

அதே காலச் சூழ்நிலையின் போது சென்னையிலும், தமிழ்நாடெங்கும்  நடைபெற்றது. சென்னையில் கொட்டும் மழையில் ஒரு ’மனிதச் சங்கிலிப்’ போராட்டம் நடைபெற்றது. மு.திருநாவுக்கரசின் “இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள ராஜ தந்திரம்” என்ற சிறு வெளியீட்டைப் பத்தாயிரம் படிகள் அச்சிட்டு, மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் விநியோகித்தோம்.

இவ்விரு வெளியீடுகளும் அச்சில் மறுபதிப்பாக வேண்டுமென்னும் தனது பெருவிருப்பை வெளிப்படுத்தி – எனக்கு இதை மின்னஞ்சலில் அனுப்பிவைத்தவர் பிரான்சில் வாழ்ந்து கொண்டிருந்த எனது அனுக்கத் தோழர் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் என்ற கி.பி.அரவிந்தன். வெளியீடுகளுக்கான பண உதவியையும் அவர் எங்களுக்கு அளித்தார். அவருடைய துணையில்லாமற் போயிருந்தால் இந்தப் பிரசுரங்கள் வெளிவந்திருக்காது.

இன்று இங்கு வெளியிடப்பெறும் மு.திருநாவுக்கரசின் “இலங்கை அரசியல் யாப்பு” என்ற நூலுக்கு அனைத்து உதவிகளையும் செய்தவர் வரவேற்புரை ஆற்றி அமர்ந்துள்ள புவனேஸ் பரராஜா. இது ஒரு தற்செயல் நிகழ்வு. திருச்சிக்கு குடும்ப நிகழ்வு தொடர்பாக வந்திருந்த அவரைச் சந்தித்தபோது, தமிழில் அப்போதுதான் வெளிவந்திருந்த இந்நூலை அவரிடம் கையளித்தேன். வாசித்துப் பார்த்துவிட்டு என்னிடம் “எங்கள் பிரச்சனைகளை நாங்கள் எங்களுக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. உலகுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். இந்த நூலை பிரெஞ்சு மொழியிலேயே கொண்டுவந்தால் நல்லது” என்றார். அவரது தன்னலம் அறியாப் பெருவிருப்பம், தொண்டு இன்று உங்கள் கையில் நூலாகக் காட்சித்தருகிறது.

புதுச்சேரி என்கிற பாண்டிச்சேரி ஏற்கெனவே பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்த பிரதேசம். பிரெஞ்சுத்துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றுவிட்ட பேரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களை “இதுபோல் ஒரு நூல் பிரெஞ்சு மொழியில் ஆக்கம் செய்து தர இயலுமா?” எனக் கேட்டேன். ஒரு நல்ல மொழியாக்கம், அதன் மூலத்துக்கும் வெளிப்பாட்டுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டுமென்ற இலக்கணத்தை ஈர்க்கு இடைவெளியில்லாமல், நேர்த்தியாய் நிறைவு செய்துள்ளார் பேரா.கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வேன்.

இந்நூல் வெளியீடு செய்வதன்மூலம் ஒரு முன்னுதாரணமான பணியை எடுத்து வெற்றிகரமாக முடித்துள்ளார் தம்பி புவனேஷ். பிரெஞ்சில் மொழியாக்கம் செய்ய பேரா.கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு பக்கமாய் பயணிக்கையில் தன்னறியாமல் ஈர்க்கப்பட்டார். மொழியாக்கம் நிறைவாய்ச் செய்தமைக்காக ஒரு தொகையை மொழிபெயர்ப்பாளரிடம் வழங்கியபோது, அவர் சொன்னார் “இந்தத் தொகையை எனது சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்தமாட்டேன்; ஈழத்திலிருந்து இங்கு வந்துள்ள அகதிகளுக்கு வழங்கப்போகிறேன்” என்றார். இதுதான் ஒரு நூல் புரியும் வினை: ஒரு கவிதை, ஒரு படைப்பு, ஒரு ஆய்வு - என்னவெல்லாம் வினைபுரியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எழுத்து காலத்தைவிட உறுதியானது: காற்றைவிட வேகமானது: மனிதக் கால்களை விடவும் வலிமையானது.

இப்போது பிரெஞ்சில் நீங்கள் ஏந்தியுள்ள இந்தக் கண்ணாடியைப் போல்
”தமிழன் இல்லாத நாடில்லை”
என்று தமிழர் வாழுகிறா நாடுகளில் கொண்டு வந்தால்,
“தமிழனுக்கென்று ஒரு நாடில்லை”
என்று சொல்லும் அவச்சொல் அழியும்; பாரீஸின் ஒரு ஆண்டனி ருசேல் அல்ல, பல ருசேல்கள் உங்களோடு வருவார்கள்: அவர்கள் தங்களுடைய நாட்டு மக்கள் முன் ஒரு புதிய கருத்தாக்கத்தை விதைப்பார்கள்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிலிருந்து வெளியேறி – விடுதலைக்கான செயற்பாட்டில் சரியான தலைமைத்துவத்தை ஈழத்துச் சொந்தங்கள் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

- காக்கை சிறகினிலே, டிசம்பர் 2018 இதழில் வெளிவந்தது

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?