அ.மார்க்ஸின் இன்னும் சில முகங்கள்

புலிகளின் 20 விழுக்காட்டை, நூறு விழுக்காடாய் ஊதிப்பெருக்கி பழியை புலிகள் மீது சுமத்துகிற வன்மம் இங்குள்ள சிலருக்குள் ஆணிவேர் போட்டுள்ளது. இலங்கை இராசபக்சேக்களும் இந்திய மன்மோகன்களும் இந்தப் பழியிலிருந்து தப்பி விடுகிறார்கள். இலங்கை அரச பயங்கரவாதம், இந்திய ஏகாதிபத்தியம் இணைந்து எதைப் பேசி, எவ்வழியில் நடக்கிறார்களோ அதையே பேசுவது, அதே வழிநடப்பது என்பதைச் செய்கிறார்கள் இந்த மகானுபாவர்கள். இதற்கான ஆதாரம்- இவர்கள் எதைப் பேசுகிறார்கள் என்பதை விட, எதைப் பேசாமல் விடுகிறார்கள் என்பதில் அடங்கி உள்ளது.

புலிகளின் பாசிஸம் பற்றி மேளம் அடிப்பவர்கள், புலிகளுக்கும் முந்தி - கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த சிங்களப் பாசிசம் பற்றி மௌனம் காப்பார்கள். இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் பக்கங்களை விட, ஒளித்துவைக்கும் பக்கங்கள் அநாகரிகமானவை. இவை இவர்களை யாரென வெளிச்சப்படுத்துபவை.


இருபத்தேழாயிரம் பேர் விடுதலைப் புலிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம். ஆள் காட்டிகளின் துணையோடு முகாம்களிலிருந்து அகற்றப்பட்டதும், ஆம் அவர்கள் புலிகளே தான் என்ற குதூகலம் அரசுக்கு. இராணுவத்தால முகாம்களிலிருந்து அகற்றப்பட்டு, தனி சித்திரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட 27ஆயிரம் பேர் பற்றி இவர்கள் பேசியதில்லை. 8 - வயது முதல் 14 வயது வரையுடையோர் நமக்குச் சிறுவர்கள்; இலங்கை இனவெறிக்கு அவர்கள் இளைஞர்கள். பெற்றோர்களிடமிருந்து, சேக்காளிகளிடமிருந்து விசாரணைக்காக பிரிக்கப்பட்ட 14ஆயிரம் சிறுவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர்? எல்லோரும் கேட்டாயிற்று. இவர்கள் மட்டும் கேட்கவில்லை.

கைதுசெய்யப்பட்ட போராளித் தலைவர்கள் - பெயர் வெளியுலகுக்குத் தெரியவந்தது; ஒருவர், இருவராய், குழுக் குழுவாய் அழித்தொழிப்பு செய்ததும் உலகத்துக்குத் தெரியவந்தது. உலகமட்டம் வரை தெரிந்த சேதி - இவர்களுடைய கண்னோட்டத்தில் ஒரு கண்டன சம்பவமாகக்கூட பதிவாகவில்லை. கேட்டால் புலிகள் செய்யவில்லையா என எதிர்க்கேள்வி எழுப்பத் தயார். பதிலாய், அரசபயங்கரவாதம் பழி எடுக்கிறது என்பார்கள்.

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் அ.மார்க்ஸ் அவர்களே?

வதைமுகாம்களில் சாகிறவர்களை, அவரவர் ஊர்களில், நிலத்தில், வீடுகளில் போய் சாகவிடுங்கள் என்று கேட்டதுண்டா? கொன்று போட்டவனின் கரங்களுக்கு பூமாலை சுற்றுவது மட்டுமே செய்கிறவர்களை எந்த மனித உரிமைப் போராளி ரகத்தில் சேர்ப்பது?

இந்தக் கட்டுரை எழுதுகிற நேரத்தில் தினமணி நாளிதழில் (9.9.2009) “இலங்கைத் தமிழரின் தற்போதைய நிலைக்குக் காரணம்” - எனும் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள்  -     19.8%
இலங்கை அரசு     -     21.33%
இந்திய அரசு -     58.69%

-          மக்களின் கருத்துக்கள் முடிவுகளாய் வந்துள்ளன.

தமிழகத்தில் செயல்படும் பல மனித உரிமை அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து ‘வன்னி வதைமுகாம் தமிழர் விடுதலைக்கான இயக்கம்’ என்றொரு அமைப்பை சென்னையில் உருவாக்கியுள்ளன. மூன்று தீர்மானங்கள் அடிப்படையில் செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  1. தமிழகத்தில் பரப்புரை செய்து, எழுச்சியை உருவாக்கி அழுத்தம் தருவது.
  2. இந்தியாவில் பிற மாநிலமனித உரிமைச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு - இந்திய அளவில் விழிப்பை உருவாக்குதல்.
  3. இராசபக்சேக்களை போர்க் குற்றவாளிகள் என விசாரித்து தண்டிக்க - ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் செல்வது.

என மூன்று நடைமுறைகளை மேற்கொள்ளும் நேரத்தில், இலங்கையில் இதே முனைப்போடு செயல்படும் மனித உரிமை ஆர்வலர்களை அழைத்து இங்கே பேச வைப்பது, அவர்களை நம்முடன் இணைந்து செயல்பட வைப்பது. இந்த குரலில் ஒன்றில் கூட உங்கள் குரல் காணப்படவில்லையே அ.மார்க்ஸ் அவர்களே!

நீங்கள் எப்போதுமே தன்னடையாளத்தை முன்நிறுத்தி தனித்து செயற்படும் நபர். இவர்களோடு இணைய முடியவில்லை என்றால் அவர்கள் எழுப்பும் இந்தக் குரல்களில் ஏதாவது ஒன்றையாவது நீங்கள் எடுத்துக் கொண்ண்டிருக்க வேண்டும். தன்னடையாளத்தை எப்போதுமே பிரதானப்படுத்தி வருகிற நீங்கள் தனியாக மனித உரிமைத் தளத்தை உருவாக்கி உடுக்கடித்திருக்கலாமே! தனித்து செயற்படும் உங்களுடன் இணைந்து செயற்பட்டதால் நாம் அறிந்தவை இவை. இம்மாதிரி அனுபவத் தொகுப்பின் அடிப்படையில் பாவப்பட்ட வன்னிமுகாம் மனிதர்களை மீட்க குரல் கொடுத்திருக்கலாம்.

அம்னெஸ்டி இன்டர்நேசனலின் முன்னாள் இயக்குனரும் இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியருமான பிரான்சிஸ் பாய்ல் மனித உரிமைத் தளத்தில் செயல்படுகிற ஒருவர். மனித உரிமைத் தளத்திலேயே நடந்து, இனப்படு கொலைக்கு தீர்வு என்னவாக இருக்கமுடியும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“பன்னாட்டுச் சட்டங்களின்படியும் செயல்முறைகளின்படியும் தங்கள் சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும். எனினும் இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளாகும் எந்த மக்கள் குழுவும், தங்களுக்கென்று ஒரு சுதந்திரமான தனி நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது, எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்டன. எனவே, இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்டதிட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்”

(தலித் முரசு ஜூலை 2009 - பேராசிரியர் பாய்ல் நேர்காணல்)

மனித உரிமைத் தளத்தில் நீங்கள் ஒரு நேர்மையான பயணியாக இருந்திருந்தால், பிரான்சிஸ் பாய்ல் வந்தடைந்த அந்தப் புள்ளியில் வந்து சேர்ந்திருப்பீர்கள். நீங்களோ விடுதலைப் புலிகளின் மீதான வன்மத்தை ஒரு இனத்தின் விடுதலைப் போருக்கு எதிராக மாற்றியுள்ளீர்கள்.

நீங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்புதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்து பேராசிரியர் சிராஜ் மசூரை அழைத்து வந்து மேடை தயார் செய்கிறீர்கள். ஷோபா சக்திகளுடன், சுகன்களுடன் கூட்டாய் சேர்த்துக் கொண்டு விடுதலைப்போராட்டத்திற்கு எதிராய் விதைதூவச் செய்கிறீர்கள்.

“அவர்கள் புலிகளின் அரசியல் தவறுகளைப் பற்றிப் பேசுவதின் வழியே தெற்காசியாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மாபெரும் இனப்படுகொலையை சமன்படுத்தி விடக் கூடும்.” என கவிஞர் மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டது போல் பணியாற்றும் இந்த இலங்கையர்களை தமிழகம் அழைத்துவந்தீர்கள்.

“இந்தக் காயம், இந்த வீழ்ச்சி - புலிகளின் வீழ்ச்சி அல்ல. வேட்டையாடப்பட்ட சமூகத்தின் வீழ்ச்சியின் சரித்திரம் இது” - மனுஷ்யபுத்திரன் போல ஆவேசம் கொள்ள முடியாத நீங்கள் எதிர் நிலையில் நின்று கொண்டாடுகிறவர்களுக்கு தளம் உண்டாக்கித் தருவீர்கள்.

வீரச் சாவுகளுக்கு எதிர் நிலையில் நின்று மரணத்தைக் கொண்டாடும் மனம் பாசிஸ்டுகளுக்கு மட்டுமே வாய்க்கும். ஒரு இலட்சம் மனிதர்கள் சர்வதேச அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட நிகழ்வு - ஒரு இனத்தின் இரத்தசாட்சியமாக உணரப்படாமல், துயரங்களின் சாம்பலில் கும்மியடித்துக் கொண்டாடும் மனத் துணிவு இனவெறியர்களுக்கு அல்லாமல் வேறு யாருக்குக் கிட்டும்?

II

கடந்த ஆறேழு மாதங்களாக ஈழத்தமிழின அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் பரவலாய் ஏற்பட்ட எந்த எழுச்சிகளிலும் அ.மார்க்ஸின் முகம் இல்லை. இனப்படுகொலை முற்றுப் பெற்று, ஈழப்பிரதேசம் அவலத்தின் உச்சத்தில் நிற்கிறபோதும் இவருடைய குரல் இல்லை. ஆனால் மரணவாசனை உலக நாசியைப் புடைக்கச் செய்யும் சூழலிலும், விடுதலைப் புலிகள் மீதான அ.மார்க்ஸின் வன்மம் தீர்ந்த பாடில்லை.

இவருக்கும், இவரைப் போல் குரல் தரும் ஷோபாசக்தி, சுகன், சுசீந்திரன், புதிதாய் இணைந்து கொண்ட ஆதவன் தீட்சண்யா வகையறாக்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது. பாசிசம் இவர்களை உள்வாங்கி அங்கீகரித்துக் கொண்டதின் இன்னொரு பக்கம்தான், சிங்களப் பாசிசத்தை நேரடியாய் கண்டிக்காத, அதற்கென அணிதிரளாமல் இருக்கிற இவர்களின் செயல்.


லசங்த விக்கிரமதுங்கே - என்ற உலகறிந்த ஊடகவியலாளர் படுகொலை, யாரால், எதற்காக நடத்தப்பட்டது என்பதை உலகறியும். தன் கொலைக்கு முன் அவர் எழுதிவைத்துச் சென்ற மரண சாசனத்தையும் உலகறியும். அந்தக் கொலையைக் கூட புலிகள் செய்திருப்பதாக சந்தேகப்படுகிறார் சுகன். ‘வாழ்க நீ எம்மான்’ என கருணா அம்மானுக்கு வாழ்த்துப் பா இசைக்கிறார். லண்டன் புகழ் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதல் ஜெர்மனியின் சுசீந்திரன் வரை பங்கேற்ற திருவனந்தபுரத்தில் ஒரு திங்கள் முன்பு நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு இலங்கை அரசாங்கச் செலவு 60 இலட்சம் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்த புலம்பெயர் அறிவு ஜீவிகளை சிங்களத் தேசியம், தமிழ்த் தேசியத்துக்கு எதிராய் பரப்புரை செய்ய அழைக்கிறது. வரிந்து கட்டிக்கொண்டு இவர்கள் முதலில் உள்ளேன் ஐயா சொல்கிறார்கள். தமிழ்த் தேசியம், இஸ்லாமியத் தேசியம் எல்லாவற்றுக்குமான அச்சுறுத்தலாக சிங்களத் தேசியம் மாறியுள்ளது அது தேசியத்திலிருந்து பாசிசமாக உருக்கொண்டுள்ளது. நாமெல்லாம் இலங்கையர்கள் என்னும் மஹிந்தராசபக்சேயின் அழைப்பு - பிற இனங்களை மயிருக்குச் சமமாக கருதும் குரல்தான். இலங்கையர் எனும் ஒற்றை அடையாளம் போதுமென்றால் மதம் சார்ந்த குழும அடையாளத்துக்கு, வட்டார அடையாளத்துக்கு (மலையகம்), தலித் அடையாளத்துக்கு எந்த வித அவசியமும் இல்லை. தமிழ்த் தேசியம் பேசியவர்களைக் கொன்றொழித்த சிங்கள தேசியம், பிற அடையாளங்களையும் கொன்றொழிக்கும். பிற தேசியங்களை இலங்கையில் ஒரு புள்ளி கூட இல்லாமல் அழிப்பதற்குரியவன் யார்? இன்றைய மஹிந்தாதான். இவனை விட உயரம் கூடியவர்களாக எதிர்கால மஹிந்தாக்கள் வருவார்கள். மக்களை சனநாயகத்துக்கு எதிரானவர்களாய் பயங்கரவாதியாய் கருதும் உலக அரசுகள், தமிழ் மக்களையே பயங்கரவாதிகளாய்க் காணுகிற இலங்கைக்கு துணையாகின.

அனைத்துத் தேசியங்களையும் அடக்கும் சிங்களத் தேசியத்தைக் கண்டிக்கும் அவசியத்தைக் கருதாமல் பேராசிரியர் சிராஜ் மசூரை அழைத்து வந்து, இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் புலிகள் என்று பேச வைப்பது தனக்கிருக்கும் வன்மத்தை வெளிப்படுத்தக் கையாளுகிற உத்தியாக மட்டுமே மிஞ்சும். சிராஜ் மசூரின் கணிப்பில் விடுதலைப்புலிகள் மட்டுமே ஆயுதக் குழுக்களாம். இலங்கையிலிருந்து இங்கு வந்து, இலங்கையின் தூதுவராய் எதை வேண்டுமானாலும் பேசலாம்; கேள்விகேட்க நாதியில்லை எனத் துணிந்து விட்டார் போல.

புதுவிசை இதழில் (2009 - ஜூலை-செப்டம்பர்) இலங்கையில் ‘இஸ்லாமிய ஜிகாத் ஆபத்து என்று பாலசந்திரன் போன்றோர் எழுதுகிறார்களே என்ற கேள்விக்கு “புலிகளுக்கு பிந்திய சூழலை ‘இஸ்லாமிய ஜிகாத்’ என்ற போலிக் கண்டுபிடிப்பின் மூலம் மாற்றீடு செய்யலாம் என சில சக்திகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன... தனது மனஅரிப்புகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இவ்வாறான புதிய அபாயங்களை இவர்கள் கட்டமைக்கின்றனர்” என்று பதிலளிக்கிறார்.

இல்லாத ஒன்றைக் கட்டமைப்பது அல்ல இருக்கிற ஒன்றைத்தான் பாலசந்திரன் போன்றோர் எடுத்து வைக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராய் அவர்களை ஒழிக்கவும் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அரட்டி ஒடுக்கவும் இலங்கை ராஜதந்திரிகளால் பாகிஸ்தானிய மூளையால் உருவாக்கப்பட்ட ஜிகாத் அமைப்பினர் ஆயுததாரிகளாய் வலம் வந்தார்கள். ஆயுதங்களால் பேசினார்கள். அரசாங்கத்தின் ஆசியில் ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கியாகி விட்டது. இன்று ஜிகாத் அமைப்பிடமிருந்து ஆயுதங்களைக் களைவது எப்படி என்பது அரசபயங்கரவாதத்துக்கே பெரும் சிக்கலாகியுள்ளது. ஜிகாத் அமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அது முடிந்துவிட்டது (புலிகள் அழிப்பு) இனி ஜிகாத் அமைப்பினர் ஆயுதக் குழுவாக செயல்படாமல், ஒரு மத அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று கெஞ்சும் வேண்டுகோள் அரசிடமிருந்து வெளியாகி ஊடகங்களிலும் இடம் பிடித்தது. இத்தனைக்குப் பிறகும், யதார்த்தத்தை மறைக்கிற. அறிவுஜீவிப் பணியை சிராஜ் மசூர் தன்தோள் மேல் எடுத்துப் போட்டுக் கொள்கிறார்.

“போர் உக்கிரமாக நடைபெற்ற சூழல் ஆயுத சூனிய சூழலாக இருக்குமென்று யாரும் கனவு காணத் தேவையில்லை” என்று ஆயுதக் குழுக்கள் நீடிப்பதற்கான நியாயத்தை முன்வைக்கிறபோது, இதற்குமுன் ஒரு பொய்யை முன்னுரைத்தார் என்பது வெளிப்பட்டுப் போகிறது. இதையேதான் நாங்களும் பேசுகிறோம். ஒடுக்குமுறை எல்லை கடந்து விட்டபோது, ஒடுக்கு முறைக்கு எதிரான எதிர்வினைகள் அழகானவையாக இருக்க முடியாது என இதையே தான் நாங்களும் முன்வைக்கிறோம்.

நாங்கள் மட்டுமே இதைப் பேசவில்லை. இந்தியாவிலுள்ள தாரிக் அலி போன்ற இடது சாரிகள், தீர்க்கமாய் இதைப் பரிந்துரைக்கிறார்கள். “நீங்கள் ஒரு குரூரமான ஆக்கிரமிப்பை எதிர்கொள்கையில், உங்களின் எதிர்ப்பு அழகானதாக இருக்க முடியாது” என்கிறார் தாரிக் அலி.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கம் நடத்தும் தற்கொலைத் தாக்குதல்கள், ஈராக்கியர் நடத்தும் கார்க் குண்டுத் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு இந்த வாசகம் பொருந்துமானால் விடுதலைப் புலிகளின் எதிர்வினைக்கு ஏன் பொருந்தாது?

III

அ.மார்க்ஸின் புதுவிசை (ஜூலை - செப்டம்பர் - 2009) கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, சில விவாதங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. வாய்க்கு வந்தபடி பேசுவது போலவே கைக்கு வந்தபடி எழுதப்பட்ட ஒரு கட்டுரை தான் அது. புதுவிசை இதழ் சனநாயகத்தின் மிகப் பெரிய திறந்த வெளி என கருதப்படுவதால், புதுவிசையின் சனநாயக வெளியைச் சோதிப்பதற்காக இக்கட்டுரையை புதுவிசைக்கும் அனுப்பியுள்ளேன்.

புதுவிசையில் அ.மார்க்ஸ் எழுதுகிறார்: தமிழ் அறிவு ஜீவிகள் மத்தியில் மரண அமைதி நிலவுகிறதாம்; அதையும் வேறொருவர் சொல்லி வருத்தப்பட்டாராம். பொய் பேசுகையில் மற்றொருவரை துணைக்கழைத்துக் கொள்வது அ.மார்க்ஸின் வழக்கம். தனது குடும்ப அட்டையைத் அரசிடம் திருப்பிக் கொடுக்கப் போவதாக கன்னியாகுமரியிலிருந்து ஒரு எழுத்தாளர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தாராம். எழுத்தாள நண்பர் பெயரைத் துணிவாய்க் குறிப்பிட வேண்டியது தானே? தான் முன்வைக்க வருகிற கருத்துக்கு இட்டுக்கட்டல்களை முன்வைப்பது அ.மார்க்ஸின் சிந்தனைக் கலாச்சாரத்தின் ஒரு கூறு.

அலட்சியப்படுத்தப்பட்ட சில பிரச்னைகளை முன்னிறுத்திப் போராடும் மக்கள் - குறிப்பான போராட்ட வடிவமாக ரேஷன் அட்டைகளை அரசிடம் திருப்பிக் கொடுக்கின்றனர். அவர்களது ஒற்றுமையை எடுத்துரைக்கும் புதுமையான, யுக்தியான போராட்ட முறை இது. தான் சொல்லவருவதற்கு வலுச் சேர்க்க அதையும் கொச்சைப்படுத்துகிறார்.

எழுத்தாளர்களின் ஆறுமாதகால பருவ நிலையை கணிக்கிற வானிலை அதிகாரியாக தன்னைத் தீர்மானித்துக் கொண்டார். மற்ற எழுத்தாளர்களைப் பற்றிக் கணிப்பது - இவருக்கு அல்வா சாப்படுவது போல. கணிப்பு அல்ல, விமர்சனமும் அல்ல, அவதூறுகளின் மட்டத்துக்கே அது மிஞ்சும்.

அ.மார்க்ஸின் பெரும்பாலான ஒதுக்குதல்கள், அரவணைப்புகள் பிரச்னையின் தாரதம்மியத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல. தனி மனிதர்கள் மீதான அவருடைய வெளிப்பாடுகள் விருப்பு வெறுப்புகள் மீது எழுபவை. பிறரோடு கொள்ளும் உறவையும் இந்த வகையிலேயே அமைத்துக் கொள்வார். நேற்றிருந்தார் இன்றில்லை, இன்றிருப்பார் நாளை இல்லை - இவருடைய அறிவு ஜீவிப் பயணிப்பில்.

புதுவிசை கட்டுரையில், தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் மீது தனக்குப் பெரிய மரியாதை கிடையாது எனத் தெரிவிக்கிறார். இவர் எந்த அளவுக்கு மரியாதை தருகிறார் என்பதைப் பொறுத்து தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் தமது பணியை முன்னெடுக்கவில்லை. தமக்கு ஒரு சமுகக் கடமையுள்ளது எனத் தீர்மானித்து போரை நிறுத்து என ஒருநாள் உண்ணா நிலைப் போராட்டத்தையும் பின்னர் தொடர்ச்சியான பணிகளையும் மேற்கொண்டனர். போர் என்ற பெயரில் நிறைவேறிய இனப்படுகொலையைக் கண்டித்து இருமாதங்கள் முன்பு பேரணி நடத்தினர். அவர்களுடன் இணைந்திருக்க வேண்டும். ஈழப் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாடுடைய இவரால் அவர்களுடன் இணைய முடியவில்லை. ஈழப் போராட்டம் பற்றி, ஈழவிடுதலைப் போராளிகள் பற்றி இவருக்கு எந்த மரியாதையும் இல்லை என்பது தான் அதற்கு ஆதரவானவர்கள் மீதும் எந்த மரியாதையும் கிடையாது என்பதாக வெளிப்பட்டிருக்கிறது.

நக்கீரன், ஜீ.வி, ரிப்போர்ட்டர் போன்ற வாரஇதழ்கள் வியாபாரப் போட்டியில் கடந்த ஆறுமாதங்களாக புலிகளைப் பற்றிய செய்திகளை - ஆதாரப்பூர்வமற்ற செய்திகளை வெளியிட்டன என்கிறார் அ.மார்க்ஸ். வார இதழ்களுக்கிடையேயான வியாபாரப் போட்டியை நாங்கள் அறிவோம். நக்கீரன் - வெளிப்படையாக புலிகளை வைத்து - வியாபாரம் பண்ணுவதையும் அறிவோம். அதனுடைய ஒற்றைத் தனத்தோடு எல்லா இதழ்களையும் சமனப்படுத்தி விடக்கூடாது.

தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், புலி ஆதரவு மாவோயிசம் பேசும் இளைஞர்கள் நாளிதழ்களைக் கூடத் தேடிப் படிப்பதில்லை என்கிறார். தமிழ் நாட்டின் நாளிதழ்கள் மட்டுமல்ல இந்திய நாளிதழ்களும் இராசபக்சேயிசம் பேசின; பரப்பின. இலங்கை அரசும் இந்திய ஏகாதிபத்திய அரசும் என்ன கொடுக்கிறரர்களோ அந்தச் செய்திகளை அப்படியே ‘ஈயடிச்சாங் காப்பி’ பண்னின. எந்த நாளிதழ்களைத் தேடிப் படிக்கச் சொல்கிறார்? தினமலரையா? தினமணியையா? தி ஹிந்துவா, இன்டியன் எக்ஸ்பிரஸ்ஸா? ஈழப்பிரச்னை பற்றி துளி அக்கறையும் காட்டாத இந்திய நாளிதழ்களில் எதைத் தேடி இளைஞர்களை வாசிக்கச் சொல்கிறார்?

அதே பொழுதில் வார இதழ்கள் ஓரளவு சுயத்தன்மையுடன் அவர்களே தேடி, விசாரித்து எடுத்த ஈழச் செய்திகளைத் தந்தனர். அதனாலேயே கடந்த ஐந்தாறு மாதங்களில் அவைகளின் விற்பனை பெருகின. களப்பிர தேசத்திலிருந்து தமிழகத்தை ஏதோ ஒருவகையில் வந்து சேரும் சிலரையும் பலரையும் சந்தித்து செய்திகள் சேகரித்து, அலசி, பெருமுயற்சிக்குப் பின் வெளியிட்ட வார இதழ்ககளின் இந்த நடைமுறைக்கும், இலங்கை இந்தியா நாடுகளின் ஊதுகுழல்களாகச் செயற்பட்ட நாளிதழ்களின் நடைமுறைக்கும் இடையிலான வேறுபாட்டை வெளிப்படையாகக் காணமுடியும். வாரஇதழ்கள் வெளியிட்ட செய்திகள், கட்டுரைகள் புலிகளுக்கு ஆதரவாகவும் அந்த மக்கள் பக்கம் இருந்தன என்பதும் இயல்பானது. அதன் காரணமாகவே அ.மார்க்ஸுக்கு ஏற்படுகிற ஆத்திரமும் இயல்பானது. இலங்கைப் பாசிசத்தின் தூண்களாய் செயற்பட்ட இந்திய நாளிதழ்களை தேடிப் படியுங்கள் என்று அவர் சொல்வது ஒன்றை உறுதிப்படுத்துகிறது. அவருடைய இந்தப் பார்வை அவரை நோக்கியே விரல் நீட்டுகிறது. “நீர் ஒரு விடுதலை எதிர்ப்பாளர்”

அவர் குற்றம் சுமத்துகிற தமிழ்த் தேசியர்கள், புலிகளின் முகவர்கள் இதையே வேறொரு மொழியில் சொல்வார்கள். “நீரொரு தமிழினப் பகைவர்”

இதன் பொருள் வேறொன்றுமில்லை. மக்களின் எதிரி என்பதே.

கிறித்துவப் பாதிரிமார்கள், போதகர்கள், கன்னியர் எல்லோரும் இணைந்து ஈழத்தமிர்களுக்கு ஆதரவாக இருமாதங்களுக்கு முன் உண்ணா நிலைப் போராட்டம் நடத்தியபோது தொடங்கிவைக்க இவரை அழைத்தார்களாம். அழைத்திருக்கக் கூடாது; அழைத்தார்கள். இவரும் போயிருக்கக் கூடாது, போனார். ஏனெனில் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் அது. ஈழத்தமிழருக்கு ஆதரவாய் போரை நிறுத்து என்ற முழக்கம் விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவானது தானே என்று அவர்களும் நினைத்துப் பார்க்கவில்லை, இவரும் நினைத்துப் பார்க்கவில்லை. கொள்கை அடிப்படையில் தீர்மானிக்கிறபோது மட்டுமே எந்த மேடையையும் பயன்படுத்திக் கொள்வது என்ற சந்தர்ப்பவாதம் இல்லாமல் போகும்.

முதிய வயதில் முதல்வர் கருணநிதி ஓய்வு பெறுவது நல்லது என்ற கருத்தை பரிக்ஷா ஞாநி முன்வைத்தார். இன்ஸ்டன்ட் காப்பி என்பது போல் ஞாநியை சாடுவதற்காகவே உடனே ஒரு புதிய அமைப்பை உருவாக்கி அதன் பேரில் வாணிமகாலில் ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்தார்கள். அதில் ரவிக்குமார் (சட்டமன்ற உறுப்பினர்), இமயம், அ.மார்க்ஸ் போன்றோர் பங்கேற்றார்கள். என்னையும் பங்கேற்குமாறு தொலைபேசியில் கேட்டார்கள். ‘ஞாநி எழுதிய அந்தக் குறிப்பிட்ட கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அதனால் கலந்து கொள்ள இயலாது’ என மறுத்தேன். அ.மார்க்ஸ் கலந்த கொள்கின்ற செய்தி எனக்கு ஆச்சரியம் அளித்தது. தொலைபேசியில் அவரிடம் கேட்டபோது, “என்ன இருந்தாலும் ஞாநிக்குள் ஒரு பார்ப்பன சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. கலைஞரைப் பற்றி விமரிசிக்கிறபோது எதிர்வினையாற்றுகிற இவர்கள் பெரியாரை காமுகன், பெண் விடுதலைக்கு எதிரானவர் என்று பழிசுமத்திய போது எங்கே போய் இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பப் போகிறேன்” என்றார். அவ்வாறு பேசியதாகவும் நான் கேள்விப்பட்டேன். கலைஞரைத் தாக்கி எழுதியதைக் கண்டிப்பது மட்டுமே ஏற்பாட்டாளர்களின் நோக்கம். இதை தாண்டி வேறொரு பிரச்னையை அங்கு பேசுவது விவாதிப்பது அவர்களின் நோக்கம் அல்ல. அதனால் அவர்கள் அதற்குப் பதிலளிக்கவும் இல்லை. இதிலிருந்து கூட்ட ஏற்பாட்டாளர்கள் பற்றி ஒரு முடிவுக்கு வருவதை விட, எந்த அரங்கையும் பயன்படுத்தி தனது அறிவாளி மேன்மையை நிறுவுகிறவர் இவர் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

புலிகள் எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டும் உறுதியாய் நின்றிருந்தால் கூட கிறித்துவ பாதிரியார்கள், கன்னியர் நடத்திய ஈழ ஆதரவு கூட்டத்துக்கு அ.மார்க்ஸ் போயிருக்கக் கூடாது. அந்தக் கூட்டத்தில் பேராசிரியர் சரசுவதி பேசிய பேச்சில் சென்னையில் நந்தம்பாக்கத்தில் பாதுகாப்புத் துறை மருத்துவனையில் இலங்கையில் படுகாயமுற்ற 122 இந்திய இராணுவ வீரர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தான் கூறும் செய்திகள் ஆதாரபூர்வமானவை என வலியுறுத்தியதாகவும் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அதன் பின்னர் வரும் கேள்வி தான் மிகப்பெரிய முரண் நகைச்சுவை.

“பல்வேறு ஆதரவுப் போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த தாங்கள் ஏன் அந்த மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றைச் செய்ய முனையவில்லை?” என்று அ.மார்க்ஸ் எழுப்புகிற கேள்விதான் அது. என்ன அபத்தம்! பெரியார் தி.க.வினர் ஈழ ஆதரவுப் போராட்டங்களை மட்டுமே நடத்தவில்லை. இந்திய அரசுக்கு எதிராக – விமான நிலையத்தை முற்றுகையிடுதல், மத்திய அரசின் வருமான வரி அலுவலகங்களை இழுத்துப் பூட்டுதல், ஆயுதங்களுடன் வந்த இராணுவ லாரிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தல் என அவர்கள் தொடர்ந்து போராடித்தான் வருகின்றனர். அ.மார்க்ஸ் போல் அறிக்கை விட்டு காணாமல் போகிறவர்கள் அல்ல.

அ.மார்க்ஸ் பல்வேறு பிரச்னைகளுக்காக உண்மை அறியும் குழு அமைப்பார். விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார். மனித உரிமைத்தளத்தில் அதன்பின் மூச்சுக் காட்ட மாட்டார். ஏப்ரல் 2008-ல், கருத்துரிமைக்கான மனித உரிமைகளின் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அதன் அமைப்பாளர் அ.மார்க்ஸ்.

“மனித உரிமைக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தின் போக்கை எதிர்க்கும் விதமாக இனி கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, பொதுக் கூட்டமோ, ஊர்வலமோ நடத்தினால் அதற்கு போலீஸ் அனுமதி வாங்கமாட்டோம். என்ன செய்கிறது இந்த அரசு என்பதையும் பார்த்து விடுகிறோம்” என்று அரசுக்கு அறைகூவல் விடுத்தார். பாராட்டுக்குரியது. ஆனால் அரசு தொடர்ந்து கருத்துரிமைப் பறிப்பு செய்து கொண்டுதான் இருக்கிறது. பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பின் எத்தனை நிகழ்வுகளை அ.மார்க்ஸ் அனுமதியில்லாமல் நடத்தினார்? உண்மையில் தமிழ்தேசிய உணர்வாளர்கள் தான் அனுமதியின்றியும், தடையை மீறியும் ஈழ ஆதரவுப் போராட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அ.மார்க்ஸ் உருவாக்கிய எத்னையோ அமைப்புக்கள் எந்த செயற்பாடுகளும் அற்று முடங்கிக் கிடக்கின்றன. அமைப்பு உருவாக்கியதாக அறிக்கை வரும். அதன் பின் அனாதையாய் அந்த அமைப்பு விடப்படும். அறிக்கை விடுதல் - அதன் பின் செயலற்ற தன்மை - இது தான் அ.மார்க்ஸ். எந்தப் போராட்ட களத்திலும் தெண்பட மாட்டார். அறிக்கை விட்டுக் கொண்டே இருப்பது ஒரு செயல் தன்மையாக ஆகிவிடுமல்லவா? இவர் மட்டுமல்ல, இவருடைய சீடர்கள் எனப்படும் ஷோபா சக்தி போன்ற ஆட்களும் அறிக்கை திலகங்கள் என்று பெயரெடுத்தவர்கள் தாம். இவர்கள்தான் தொடர்ச்சியாக களத்தில் நிற்கும் பெரியார் தி.க. மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகள் மீது சேற்றை வாரியிறைக்க முற்படுகிறார்கள்.

அ.மார்க்ஸின் கற்றல் நேர்மை, சிந்திப்பு நேர்மை, செயல்பாட்டு நேர்மை ஆகியவை குறித்த கேள்விகள் முக்கியமானவை. கற்றதும் பெற்றதுமான கருத்து எந்தச் சூழலுக்கு சொல்லப்பட்டதோ அதில் இருந்து பிரித்து வேறொன்றிற்குப் பொருத்தி விடுவதை ஒரு புதிய கண்டுபிடிப்புப் போல செய்வது அதன் பயன்பாட்டு நேர்மை குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. புதிதாக கற்றுப் பெற்ற ஒன்றை உடனே தன் சுயசிந்தனையிலிருந்து பெற்றது போல் இறக்கி வைத்து விடுவது சிலருக்கு கைவந்த கலை. எந்த விசயத்திலும் தானே அத்தாரிட்டி என்ற அறிவின் கர்வம் உச்சமாக வெளிப்படும்.

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பணிகளைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை சார்பில் நடைபெற்ற அரங்கில் ருசியாவில் நிலவிய சர்வாதிகாரத்திற்கு வித்திட்டவர் லெனின் என்று பேசினார். அந்த இடத்திலேயே அவருடைய கருத்துக்கு எதிர் வினையாற்றியிருக்க முடியும். நிகழ்ச்சியின் தன்மை குறித்தும், அரங்க நாகரிகம் கருதியும் அமைதி காத்தோம் - அதற்கு முன்னான தருக்கம் எதுவுமின்றி, திடு, திப்பென்று ஒன்றை கையெறி குண்டாய் வீசி விட்டு போய்கொண்டிருக்கிற ஆத்மா அவர். அதன் பின்னான உரையாடல், விவாதம், விளக்கம் எதற்குமே இடமில்லை.

உலகமயமாதல் இன்றைய காலத்தின் அவசியம்; அந்த ஜோதியில் கலப்பதற்கு அனைவரும் ஆங்கிலம் கற்க வேண்டும் என வக்காலத்து வாங்குவார். தலித்துகள் ஆங்கிலம் கற்க வேண்டியது அவசியம் என்பார். தலித்துகளின் வாழ்வு நிலை பூமிக்கு அடியில் இருக்கிற போது, ஆரம்பக் கல்வி கூட வாய்க்கப் பெறாமல் அவலம் நிலவுகிற போது தலித்தோ அடித்தட்டு மக்களோ ஆங்கிலத்தை கைப்பற்றுவது எங்ஙனம் என்ற கேள்வி எழுவது நியாயமானது. அதற்கான எந்தப் பதிலும் அவருடைய விவாதத்தில் இருக்காது.

இறுதியாக ஒன்றைச் சொல்லி வைப்போம். சிதிலங்களில் இருந்து மேலெழுந்து வருவது பற்றி சமூக விஞ்ஞானி சிந்திப்பான். அவ்வாறு இல்லாமல் மாட்டுப்புண்னைக் கொத்திக் கொண்டேயிருக்கும் காக்கை போல் இருப்பவன் குதர்க்க விஞ்ஞானி.

“மனிதர்கள் இதுவரை படைத்துள்ள அகிம்சைத் தத்துவங்கள், புரட்சிகர தத்துவங்கள், மனித நேயக் கோட்பாடுகள், உரிமைச் சாசனங்கள் இவை எவையாலுமே இதுவரை ஈழமக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சிங்களத்தின் முன்னே காந்திய அகிம்சை தோற்றுள்ளது. மார்க்சியத்தின் மக்கள் வன்முறை தோற்றுள்ளது. சர்வதேச நெறிமுறைச் சட்டங்கள் அமைதியாகி உள்ளன. இந்நிலைமைகள் இதுவரை நாம் பின்பற்றிவந்த அனைத்து சமூகக் கோட்பாடுகளையும் மீள்பரிசீலனை செய்யக் கோருகிறது. அவற்றில் நமது தோல்விக்கு காரணமானவற்றை உடனடியாகக் கைவிட வேண்டும். தேவையான புதிய எதார்த்தமான கோட்பாடுகளை நாம் தயக்கமின்றி ஏற்க வேண்டும். இவற்றிலிருந்து ஈழவிடுதலைப் போராட்டத்தின் தீர்வுக்கான அணுகுமுறைகளை நாம் வகுத்தாக வேண்டும்.”

ஈழம் - விடுதலைக்கான இறுதிக் கணக்கீடு - என்ற கட்டுரையில் சிதிலங்களில் இருந்து மேலெழும் பார்வையில் பிரபா எழுதிய அறிவாந்திரமான சிந்திப்புகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதுதான் புதிய சிந்தனையின் அடையாளம். வாய் புளித்ததோ கைபுளித்ததோ என்று விமர்சனம் என்ற பெயரில் எதையாவது எழுதிக்கொண்டிருப்பதை விட்டு ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்குரிய சிந்தனைகளை முன்வைப்பது மட்டுமே சமூகவிஞ்ஞானம்.

நன்றி: கீற்று - 12 செப்டம்பர் 2009

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?