ஈழம்: இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர்

மண்ணுளிப் பாம்புகளாய்ச் சுருண்டு கிடந்த இந்தியாவும், சீனாவும் தென்னாசியாவை விழுங்கும் மலைப்பாம்புகளாய் உருவெடுத்து வருகின்றன. "நேப்பாளமும் இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அரசுகளின் பாதுகாப்புக்கு ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம்" - சீன வெளியுறவுத் தொடர்பாளர் ஜியாங் யூ (22.4.2009).

இன்னொரு நாட்டின் மக்களைப் பற்றி கவலை கொள்ளாது, அவர்களை பல்வேறு சூழ்ச்சிகளால் அடக்கியாளும் ஆளும் வர்க்கக் குழுக்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பது என்ற சீன நோக்கம் தெளிவாகிறது. இலங்கையில் ஆயுதப் புரட்சியை 1971-ல் மேற்கொண்ட அப்போதைய கம்யூனிஸ்ட் புரட்சிகர இளைஞர்களான ஜனதா விமுக்தி பெரமுனாவை அடக்க இந்தியா படை உதவி உள்ளிட்ட எல்லா உதவியும் வழங்கியது. ஜே.வி.பி.யினர் அப்போது சீன ஆதரவுக் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். ஆனால் அந்த இளைஞாகளின் எழுச்சியை அடக்க இலங்கை அரசுக்கு சீனா படை உதவி வழங்கியது. புவியியல் அமைப்பில் சீனா, இலங்கையிலிருந்து மிகத்தொலைவில் உள்ளது. இந்தியா தன் வாலைச் சுழற்றி வாய்க்குள் விழுங்குவதற்கு ஏதுவாய் இருக்கிறது இலங்கை. இந்திய மலைப்பாம்புக்கு தேவைப்பட்ட தீனியாய் தன்னை தந்து கொண்டிருக்கிற போது, அதற்கு ஈடாய் தமிழினத்தை துடைத்தொழிப்பதற்கான அனுமதியை, உதவியை அடைந்து கொள்கிறது இலங்கை. அந்த வகையில் ஒரு சாமர்த்தியமான இனவெறி விரியன் குட்டி இலங்கை. தேர்தலுக்கு முந்திய ஒரு கவிதை கவிஞர் தமிழ்நதியின் கவிதை இவ்வாறு பேசுகிறது."
"ஒரு வழியாய் நண்பர்களே,
உங்கள் கவனத்தை சவப்பெட்டிகளிலிருந்து
வாக்குப் பெட்டிகளுக்குக்
கடத்தி விட்டார்கள்"
"இலங்கையின் செய்தித்துறை அமைச்சர் லக்ஸ்மண்யப்பா 2008 இறுதியில் சொன்னார் "இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள சூழலில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்த சூடான நிலைமை தேர்தல் முடிவடைந்தபின் தணிந்து விடும். இதைக் கண்டு கொள்ளத் தேவையில்லை". தமிழக அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு செய்த முயற்சியின் பெருவிளைவாக, அவர் சொன்னது உண்மையாகி விட்டது.

ஈழப்பிரச்சினை எனும் போர்வையைப் போர்த்திக் கொண்டு வந்த அனைவரும், தேர்தல் வெயில் அடிக்கத் தொடங்கியதில் போர்வையை வீசி எறிந்தார்கள். ஈழப்பிரச்சினை தொடர்பான ஆர்ப்பரிப்பை மௌனிக்கச் செய்தார்கள். அந்த மௌன கணங்களில், ராசபக்சே இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆயுதங்களுடன் போர்க்களத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார்.

2009 சனவரி முதல் மார்ச்சு முடிய 8000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா மன்றம் காட்டியது. தமிழக அரசியல்வாதிகள் மௌனித்துவிட்ட அந்த நாட்க்களில், ஓராயிரம் ஆண்டு்டுகள் ஓய்ந்து்து கிடந்த்த பின்னர் வாராது போல் வந்த்த மாமணியைத் துடைத்தொழிக்க ராசபக்சே திட்டமிட்டு முன்னேறிக் கொண்டி்ருந்தான்.


இந்திய அரசு கருணாநிதியைப் பற்றி தெளிவாகக் கணித்திருந்தது. நவீன போர்க்கருவிகள், போர்ப் பயிற்சி, இராணுவ வல்லுநர்களைக் கொடுத்து இலங்கை அரசு வழியாக ஈழப் போராளிகளை அடக்கிவிடத் திட்டமிட்டது போல், தமிழக மக்களின் எழுச்சியைக் கருணாநிதி மூலம் திசை திருப்பிவிடலாம் என அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களின் வழிகாட்டுதல் படியே கருணாநிதியும் நாடகக் காட்சிகளின் ஒவ்வொரு படுதாவையும் இறக்கி விட்டுக் கொண்டிருந்தார். பதவியில் நீடிப்பதற்காக எதையும் பலியாக்கத் தயாராகும் இந்த முதிய கருணாநிதியை அவர்கள் அறிவார்கள். அப்படித்தான் ஆயிற்று நண்பர்களே!

தேர்தல் முடிவு வெளிப்பட்டது. இந்தியாவில் தயார் நிலையிலிருந்த வாக்குப் பெட்டிகள் ஈழத்தமிழினத்தின் சவப்பெட்டிகளாய் உருவம் கொண்டன.
"ஒரு வழியாய் நண்பர்களே,
உங்கள் கவனத்தை
வாக்குப் பெட்டிகளிலிருந்து
சவப்பெட்டிகளுக்குக்
கடத்தி விட்டார்கள்"
- தேர்தலுக்குப் பிந்திய கவிதை இவ்வாறு தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். மே 16-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகின. முல்லைத் தீவை பிண மண்டலமாக்கியிருந்த இலங்கை ராட்சசன், கடைசி விசையைத் தட்டிவிட்டான். ரேடார் கருவிகள், போர் விமானங்கள், ஆளில்லா உளவு விமானங்கள், செயற்கைக்கோள்(ளுயவவநடவைந) உதவிகள், 2004-ல் கொடுத்த கிளஸ்டர் கொத்துக் குண்டுகள், ரேடியல் பாம்ப்ஸ், வன்னிமக்கள் மீது இவைகளை வீச இராணுவ வல்லுநர்கள், களத்தில் நின்ற இந்தியச் சிப்பாய்கள் என இந்தியா இதுவரை வழங்கிய உதவிகளை விட, அதிக வீரியம் கொண்ட பேரழிவு ஆயுதமாக இருந்தது தேர்தல் முடிவு. 16-ந் தேதி தேர்தல் முடிவைத் தந்தது இந்தியர் நன்றியாக, பிணங்களை வழங்கினான் இலங்கை ராட்சசன். இந்தியா வாக்குப் பெட்டிகளை சவப் பெட்டிகளாய் மாற்றித்தர, அவன் அதைப் பிணங்களால் நிரப்பினான் கடைசி நாளில் 25 ஆயிரம் பேரைக் கொன்ற அடையாளம் தெரியாமல் செய்ய, இந்தியப் பெட்ரோல் ஊற்றி எரித்தான். மண்ணில் புதைத்தால் நாளை நிலைமை மாறுகிற கணங்களில் உலக மனித உரிமை நாய்கள், தோண்டி வெளியே எடுத்த வீசி விடுமென்று அவன் அறிவான்.

II

ஒரு நாடு இன்னொரு நாட்டுக்குள் நடத்தும் கொள்ளைக்கு பொருளாதார வளர்ச்சி, வணிக ஒப்பந்தம், திட்டமிடல் எனப் பல நாகரீகமான பெயர்கள் உண்டு. இந்தப் பெயர்களில் முதலில் கொள்ளைக்காரர்கள் நுழைவார்கள். பிறகு கொலைகாரர்களாய் மாறுவார்கள். கொள்ளைக்காரர், கொலைகாரர் என்ற இருபாத்திரங்ககளையும் தனித்தனியாய் அவர்கள் வகிப்பதில்லை. ஈராக் மீது அமெரிக்கா கால்பதித்து மனிதக் கொலைகள் நடத்திய போது, பெட்ரோல் கொள்ளைக்காக நடத்தப்பட்ட கொலைகளே என்பதை அனைவரும் அறிவர். 2002ம் ஆண்டு நார்வே போன்ற நாடுகளின் முன்னெடுப்பால் உண்டான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, ராசபக்சே தன்னிச்சையாக முறித்துக் கொண்டான். நார்வே நாட்டையும் வெளியேறச் செய்தான்.

உடனடியாக, திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சம்பூர், மூதூர் ஆகிய பகுதிகளில் இராணுவத் தாக்குதல் நடத்தி வெளியேற்றினான். புலிகள் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் வெளியேற்றப்பட்டு, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்குத் திறந்த வெளி தயாராக்கப்பட்டது் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதே, இப்பகுதியில் 672 சதுர கி.மீ பரப்பில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுமென இலங்கை அரசு அறிவித்திருந்தது. அங்குள்ள 14 கிராமங்களிலிருந்த தமிழர்களை வெளியேற்றி, அதைச் சுற்றி அதி உயர் பாதுகாப்பு வளையம் உருவாக்கிய பகுதியில் 2006ல் இந்திய எரிசக்தித் துறையும், சிலோன் மின்வாரியமும் இணைந்து அனல்மின் நிலையம் அமைக்க 350 மில்லியன் டாலர் திட்டத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது் எந்தக் கொள்ளையையும் அனுமதிப்பேன் தமிழினத்தை நான் அழிக்க்க உதவி செய்த்தால் போதும் என்ப்பது இனவாத அரசின் நிபந்த்தனை. பொருளாதார வேட்டைக்குப் பொருத்தமாய் மனித அடக்கு முறைகள் வருகின்றன.

ஏற்கெனவே இந்தியா-இலங்கை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. "சார்க் நாடுகள்" என்ற பெயரில் அந்த அமைப்புக்கு அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாய் தலைமைப் பீடமாய் செயல்படும் இந்தியா இந்த ஒப்பந்தத்தால் இலங்கைக்குள் தடையற்று நுழைய முடிந்தது் இந்தியாவின் தனியார் மூலதன நிறுவனங்கள் என 50-க்கு மேற்பட்டவை இலங்கையில் உள்ளன. துணி ஆலைகள் (Textiles), பெட்ரோல் நிறுவனங்கள். வாகன உற்பத்தி போன்றவைகளில் 50 விழுக்காடு இந்திய முதலாளிகள் கையில். 1991ல் 740 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்புள்ள 23 இந்தியத் தொழில் திட்டங்கள் 2000த்தில் 125 பில்லியன் (Billion) இலங்கை ரூபாய் மதிப்புள்ள 150 தொழில் திட்டங்களாகப் பெருக்கெடுத்தன. உருக்கு, ரப்பர், சிமெண்ட், கணினி மென்பொருள், மின்னணுத் தொழில்நுட்பப் பயிற்சி, மருத்துவம், பொறியாளர் பயிற்சி போன்ற தொழில்களில் இந்தியாவின் முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் காலடி பதித்துள்ளன என்பது மட்டுமல்ல. இலங்கைப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் தலையாரிகளாக ஆகியுள்ளன. இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தனக்குத் தேவைப்பட்ட தருணங்களில் தேவையான அளவு தீர்மானிப்பதாகவும் இந்தியத் தலையாரி ஆகியுள்ளான். இனவாதத்தால் உள்நாட்டு மக்களை ஏமாற்றியும், நாட்டின் இன்னொரு இனமக்களை ஒடுக்கியும் செயல்படுகிற ஒருவன் புத்தனைக் கொன்றவன். இன்னொருவன் காந்தியைக் கொன்று புதைத்து பேரெடுத்தவன். தத்தம் நாட்டினது, ஆதிக்கக் குழுக்களின் நலன்களுக்காக செயல்படும் இருவரும் இருபெரும் ஆக்கிரமிப்பாளர்களே.

இன ஒடுக்கு முறையை உலகநாடுகளின் ஒத்துழைப்போடு நடத்திக் கொண்டிருந்த போதும், இந்தியாவை நிரந்தரமான துணையாக ஆக்கிக் கொண்டது இலங்கையின் பலம். இது பற்றி தெளிவாகத் தெரிந்த பின்னும், இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம் என்று போராளித் தலைமைகள் பேச வேண்டிய நிலையிலிருந்தது தான் தமிழினத்தின் பலவீனம். 2007ல் புலிகளின் வான்படை, இலங்கை கட்டுநாயக இராணுவ விமானங்களைத் தாக்கியழித்த போது, "இந்திய பாதுகாப்புக்குப் பெரும் ஆபத்து் இந்திய வான எல்லையையும், கடலோர எல்லையையும் பாதுகாக்க, கூடுதல் பலத்துடன் எச்சரிக்கையைhக இருப்போம்" என இந்தியத் தளபதிகள் அறிவித்தார்கள். புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் "இலங்கை இராணுவத்துக்கும் எங்களுக்கு மிடையிலான யுத்தம் இது. புலிகளின் வான் படை இந்தியப் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக இருக்காது" என உறுதிமொழி தந்தார். கடைசியாய் மரண எல்லையிலிருக்கிற வேளையிலும், "நாங்கள் இந்தியாவின் நண்பர்கள், இந்தியாவை ஒரு போதும் எதிரி நாடாய் கருதவில்லை" என்று தான், அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் தெரிவித்துக் கொண்டிருந்தார். "இலங்கையை ஒரே தீவாய் வைத்துச் சுரண்ட, அடக்கி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எமது விருப்பம். இரு நாடுகளாக்கி அழகு பார்த்தால், இந்தியாவிலுள்ள தமிழினம் தனியாகப் போய், இந்தியாவின் கட்டமைப்பு உடைந்து போய் விடும்" என்பது மட்டும் இந்தியாவின் மறைத்து வைக்கப்பட்ட, இன்னும் வெளிப்படுத்தப்படாத உள்நோக்கமாகும். ஒற்றைத் தீவாய், ஒற்றைச் சுரண்டலாய், தனக்கு உள்ளடக்கமாய் இலங்கையை வைத்திருக்க வேண்டுமென்ற இந்திய ஆளும் வர்க்கக் கோட்பாடுகளே, ஈழத்துக்கு எதிர் வினைகளாய் உருவாகின.

III

"இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட ஐ.நா உரிமைக் குழுவின் சிறப்புக் கூட்டம் தேவையற்றது" . ஜெனிவா ஐ.நா மன்றத்தில் மே 26ல் இந்தியப் பேராளர் கோபிநாதன் அச்சங்குளங்கரே எதிர்ப்புத் தெரிவித்தார். (கோபிநாதன் ஒரு மலையாளி. இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கரமேனன், தேசிய பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணன், ஐ.நா.வின் தூதர் விஜய் நம்பியார் இவர்களனைவரும் மலையாளிகள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது)" ஒரு பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்பினால் நடத்தப்பட்டு வந்த துன்பமான, நீண்டகால மோதலுக்கு இப்போது தான் இலங்கை முடிவு கண்டிருக்கிறது. நல்லிணக்கதை ஏற்படுத்துதல், காயங்களை ஆற்றுதல், துன்பமான இந்த மோதலின் விளைவுகளை வெற்றி கொள்ளுதல் என்ற நடைமுறைகளுக்கு ஊக்கம் அளிப்பதில் கவனம் செலுத்துவதே உலக சமுதாயத்தின் குறிக்கோளாகவும் முன்னுரிமையாகவும் இருக்க வேண்டும். மாறாக சில நாடுகள் இந்தச் சிறப்புக் கூட்டத்தைத் திணித்திருப்பதன் மூலம் மனித உரிமை மன்றத்தின் பணிகளையே அரசியல் ஆக்கிவிட்டன. இது வருந்தத்தக்க நிகழ்வு" என்று கோபிநாதன் ஐ.நா.மன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தார். ஐ.நா.வில் தமிழினப் படுகொலையை ஆதரித்து, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா கொடி தூக்கியது இது முதல் முறையல்ல் இந்த கோபிநாதன் அச்சங்குளங்கரேயின் இடத்தில் 1983இல், சையத் மசூத் என்பவர் இருந்தார். 1983இல் இலங்கையில் 5000 தமிழர்கள் கொன்று வீசப்பட்ட இனப்படுகொலையை ஐ.நா மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாகியிருந்த பலரும் கண்டித்துப் பேசினார்கள். "

ஆனால் இந்தியக் குரல் மட்டும், இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ.நா அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என வித்தியாசமாய் ஒலித்தது" (Syed Masud from India supported the suggestion that the subcommittee should not hastily act in with regard to the situation on the Sri Lanka Island) - The Hindu 23.8.1983

அதுபோலவே, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் ஐ.நா.வில் வாய் திறக்கவில்லை. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, எல்லாப் பிரச்சினை பற்றியும் பேசினார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி மட்டும் பேசவில்லை. இது வருந்தத்தக்கது". எம்.ஜி.ஆர் முதலமைச்சராயிருந்த போது, வருவாய்த்துறை அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் வருத்தப்பட்டது மட்டுமல்ல் 1983ல் இவ்வாறு இனப்படுகொலையின் போது பாதிக்கப்பட்ட கொழும்புத் தமிழர்கள், அகதிகளாய் மன்னாருக்கும், யாழ்ப்பாணத்துக்கும் ஏற்றிச் செல்ல இந்தியா கப்பலை அனுப்பியது் அதைக் குறிப்பிட்டு எஸ்.டி.எஸ் "பயணிகள் கப்பலை அனுப்பிப் பயனில்லை. படைக் கப்பலை அனுப்ப வேண்டும்" என்றார். இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்தவில்லை. எனவே, இந்தியாவைத் தாண்டி ஐ.நா மன்றத்துக்குச் செல்வதென எதிர்க்கட்சித் தலைவராயிருந்த கலைஞர் கருணாநிதி முடிவெடுத்து, ஒரு கோடிக் கையெழுத்துகளைத் திரட்டினார்.

29.8.1983 அன்று சென்னைக் கடற்கரைச் சீரணி அரங்கில் ஒரு கோடிக் கையெழுத்துப் படிவங்களை பார்வைக்கு வைத்து உரை நிகழ்த்தினார்.

"இப்படிப்பட்ட கோரக்காட்சி களையெல்லாம் சகித்துக் கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? இந்தியா வேறு, தமிழ்நாடு வேறு என்றில்லாமல், இந்தியா தான் தமிழ்நாடு - தமிழ்நாடு தான் இந்தியா என்று நாங்கள் கருதிக் கொண்டிருக்க நீங்கள் தமிழர்களுக்குச் செய்தது என்ன?"

"உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பால் நின்றுவிடுவது ஏன்?"

கோபம் கொப்பளிக்கக் கேள்வி எழுப்பியவர் கருணாநிதி. அப்போது இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கும் காங்கிரசுக்கும் - ஓரு வேண்டுகோள் வைத்தார்.

"நான் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். நாளைக்கு ஜெயவர்த்தனேயை மிரட்டுகிற அளவுக்கல்ல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுகிற அளவுக்கு இந்தியப் படை இலங்கைத் தீவிலே நுழைந்து, அங்கே தமிழர்களுக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கித் தருமேயானால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் இன்னும் பத்தாண்டு காலத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இங்கே ஆட்சிக்கு வர முயற்சி எடுக்காது. நீங்களே வேண்டுமானால் தமிழகத்தையும் சேர்த்து ஆளுங்கள். உங்கள் காங்கிரஸ் கட்சியே ஆளட்டும். நாங்கள் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியிலே ஈடுபடவில்லை. தமிழன் வாழ வேண்டும், தமிழ் இனம் வாழ வேண்டும். செத்துக் கொண்டிருக்கும் தமிழனை வாழ வைக்க வேண்டும்".

1984ம் ஆண்டு டெலோ மாநாட்டில் கருணாநிதியின் சொற்பொழிவு, "இப்போதே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். எடுத்த முடிவை உடனே செயல்படுத்த வேண்டும்" என்பதாய் அமைந்திருந்தது.

"இங்கே இருக்கின்ற எல்லாக் கட்சியினருக்கும், கட்சி சார்பற்ற முறையில் உடலில் ஓடுகின்ற ரத்தம் தமிழ் இரத்தமானால், இதயத்தில் துடிக்கும் துடிப்பு ஒவ்வொன்றும் தமிழ், தமிழ் என்று துடிப்பது உண்மையானால், அந்தத் தமிழன் சிந்திக்கட்டும். இனி பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும்".

"என்ன செயலில், எப்படிப்பட்ட செயலில்? ஆளுக்கு ஓர் ஆயுதத்தை தூக்குவதா என்று கேட்பீர்கள். அப்படி ஒரு காலம் வந்தால் தட்டிக் கழிக்க முடியாது."

"இந்தத் தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையில் அது வரலாம். ஏனென்றால் தமிழினத்தை அழித்துத்தான் தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதும் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நம்மை ஆளுகின்ற அரசு இங்கே இருப்பதும், அதைப் பார்த்தும் பார்க்காதது போல நாம் பாமரர்களாய், பஞ்சைகளாய், பரிதாபத்திற்குரியவர்களாய் உலவுவதும் நியாயமில்லை".

"எனவே தான் சொல்லுகிறேன். இன்றில்லாவிட்டால் நாளை, நாளை தவறினால் மறுநாள் உலகத்திலே இருக்கின்ற தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்தாக வேண்டும். அப்படிக் கிடைக்கின்ற நாடு எளிதாய்க் கிடைக்கக் கூடிய ஒன்றாக, அதற்குத் தயாராகி விட்ட நிலையிலே உள்ளதாக இருப்பது தனித்தமிழ் ஈழ நாடாகும். அந்தத் தனித் தமிழ் ஈழநாட்டைப் பெறுவதற்காக நம்மாலான அனைத்துத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்".

கருணாநிதியின் நியாயமான இந்தப் பேச்சு் அவரின் அன்றைய உரை முதல்வரான இன்றைய கருணாநிதிக்கு உடன்பாடற்றதாய், எதிர்நிலையாய் ஆனது தான் அவலம். வீரதீரனாக நடிக்கும் கதாநாயகனின் வெற்றுத் திரைப்பட வசனம் போல் ஆகிவிட்டது. இன்று அவர் சொல்வதென்ன?

"இந்தப் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடே எனது நிலைப்பாடு... ஈழம் கிடைத்தால் எதிர்க்கப் போவதில்லை. மகிழ்ச்சியடைவேன்."

கலைஞர் கருணாநிதியின் கடந்தகாலங்கள் அவரின் நிகழ்காலத்தை கேள்விக்குட்படுத்துகின்றன.

அந்தந்த காலத்திற்கு அவர் பேசும் வீரவசனங்களை அந்தந்த காலத்திற்குரிய தனித்தனி கல்லறைகளில் புதைத்து விடுகிறார். பழையவற்றைப் புதைத்த கல்லறைகளின் அருகே புதிய கல்லறைகளை உண்டாக்கி வருவதற்கு, அதிகார நிலையோடு ஒன்றாய்க் கலந்து விட்ட அவரது வாழ்வியலே காரணம்.

"தமிழீழ மக்களின் எதிர்காலத்துக்காக போர்க்களத்தில் தன் மகனையே சாகக் கொடுத்தான் ஈழத்துப் போராளி. மகன்களின் அமைச்சர் பதவிக்காக டெல்லிக்கு அலைந்து கொண்டிருந்தார் இங்குள்ள கருணாநிதி" என்ற புதிய ஒப்புமைச் சொல்லாடலை அவரது வாழ்வியல் தான் உருவாக்கியது. எழுச்சிகரமாகத் தொடங்கி வார்த்தை ஜாலமாக முடிந்து போன அவரது வாழ்க்கைதான் அடிப்படை. கருணாநிதியைப் போல், தமிழினத்தை நம்பச் செய்தவரும் இல்லை. அவரைப் போல் தமிழனத்தை மோசம் செய்தவரும் இல்லை.

அக்டோபர் 14இல் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் கலைஞர். "15 நாட்களுக்குள் போர் நிறுத்தம் செய்ய இந்தியா முயற்சி செய்யவில்லை என்றால் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள்" என்ற தீர்மானம் - அனைத்துக் கட்சிகளின் முடிவாக வந்தது. டெல்லிக்கு அனுப்பப்பட்டது. இந்திய அரசுக்கு நெருக்கடியைத் தருமென போர் முடிவுக்கு வருமென அனைத்துத் தரப்பும் எதிர்பார்த்திருந்தது. ஏனென்றால் இந்தப் போரை இந்தியா தான் நடத்துகிறது என்பது கலைஞருக்குப் புலனாகியிருந்தது போலவே எல்லோருக்கும் வெளிச்சமாகியிருந்தது. ஒரு வாரத்தில் இலங்கையிலிருந்து, ராசபக்சேயின் தம்பி பசில் ராசபக்சே அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து விட்டு, இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதற்கான சூழலே இல்லையென விளக்கிவிட்டுப் போனார் போரைத் தொடருங்கள் என்று அவருக்குச் சொன்ன பிரணாப் முகர்ஜி கலைஞரிடம் வந்து பேசினார். என்ன பேசினார்கள் என்று தெரியாத மூடு மந்திரமானது.

"அனைத்துக் கட்சிகள் கூடி எடுத்த முடிவு இது. எனவே மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நீங்கள் சொன்னதை பரிசீலிக்கிறோம்" என கலைஞர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் மற்ற கட்சிகளை மதிக்க வேண்டுமென்ற குறைந்த பட்ச ஜனநாயகப் பார்வை கூட இல்லாமல், பிரணாப்முகர்ஜியின் பேச்சு எனக்குத் திருப்தியளிக்கிறது என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் நாடகம் போலவே பல நாடகங்களைத் தொடர்ந்து, அரங்கேற்றிக் கொண்டிருந்தவர் - திடீர் உண்ணா நோன்பு நாடகத்தையும் நடத்திக் காட்டினார்.

வங்கக் கடலின் இந்த முனையில் அவர் உண்ணா நோன்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, கடலின் இன்னொரு முனையில் ஈழத்து உறவுகள் சொல்லொணாத் துயரத்து்க்குள்ளும் மரணத்துக் குள்ளும் போய்க் கொண்டிருந்தார்கள். அக்டோபர் 14 துரோகத்தின் பின் ஐம்பதாயிரம் தமிழ் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன. மே 16ல் முள்ளிவாய்க்கால் நெடுக 25 அயிரம் பிணங்கள் ஒரே நாளில் விழுந்தன. கடைசியாய் ஒரு லட்சம் பேரைக் காவு எடுத்து தீவிர வாதத்தை ஒடுக்கியாயிற்று என்று ராசபக்சே குலுக்கிய கரங்களுக்குள் சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் கரங்கள் மட்டுமல்ல் கருணாநிதியின் கரங்களும் இருந்தன.

"உங்கள் யுத்தத்தை நாங்கள் நடத்தினோம்" என்ற ராசபக்சேவின் எக்காளம், இந்தியாவுக்குச் செலுத்திய காணிக்கை மட்டுமல்ல் கருணாநிதிக்குச் செலுத்திய காணிக்கையும் தான். ஈழப்போர் இந்தியாவின் துரோகத்தினால் வீழ்ந்தது் அந்த துரோகத்தின் வேர் தமிழகத்தில் இருந்தது.

- சூரியதீபன்

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், ஆகஸ்ட் 2009 இதழ்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌