ஓவியங்களுக்குள்ளிருந்து உயிர்த்தெழுகிறார்கள்


புகழேந்தியின் ஓவியங்கள் கோடுகளுக்குள் அடங்காதவை. நாற்புறமும் கோடுகள் போட்டு அதற்குள்,  அந்தக் கோட்டுச் சட்டகத்துக்குள் அடங்கமறுக்கின்றன. பெரும்பான்மையான ஓவியங்கள், கோடுகள் தாண்டியே சஞ்சரிப்பவை.

கோட்டுக்குள் அடங்காதவைகளை, இரு வகையாகப் பொருள் தேர்ந்து கொள்ளலாம். பழைய மரபுகளிலிருந்து திமிறி, மீறி வெளிவருகிறேன் என்பது ஒன்று; கோட்டுக்கு வெளியே மனிதர்  தொடஇயலா பெரியவெளி இருக்கிறது. இந்த பிரபஞ்ச வெளியில் சுதந்திரமாக உலாவாருங்கள் எனக் கூவுகிற அழைப்பு மற்றொன்று. கோட்டுக்குள் மறிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத இந்த ஓவியங்களை - இவ்வாறான அழைப்புக்களாக காண்கிறேன். “உயிர் உறைந்த ஓவியங்கள்” காட்சியில் வைக்கப்பட்ட ஓவியங்கள் தலைப்பை பொய்யாக்கவில்லை. ஒவ்வொரு சித்தரிப்பிலும் உயிர் உறைந்து நிற்கிறது.

ஓவியங்கள் தமக்குள் இன அழிப்புத் துயரத்தின் தொடர்பில் கை கோர்த்து நீளுகின்றன. ஒன்று மற்றொன்றைக் காட்டி, நான் பேசிவிட்டேன், அடுத்துள்ளது பேசும் என்கிறது. அஞ்சல் தொடரோட்டம் போல (Relay Race) ஒன்டிலிருந்து, மற்றொன்று, அதிலிருந்து அடுத்தது என கொடுக்குப் பிடித்தபடி வருகின்றன.

ஒரு கவிதை போலவே ஓவியத்துக்கும் பல அறிதல் திசைகள் உண்டு. ஓவியன் உணர்ந்த திசையைவிட, பார்வையாளன் தனக்குள் கிரகித்துச் சென்றடையும் பல்திசைகள் உண்டு. காற்று மரக்கிளைகளினூடாகச் சென்று சிலுப்புவதை ஓவியர்கள் பல வகைகளில், பல வடிவங்களில் வெளிப்படுத்துவார்கள். காற்றசைவின் ஊடாக மரம் சிலும்புவதை பார்வையாளன் உணரக்  கூடுமாயின், அந்த வெற்றி பார்வையாளன் கலைஞன் - என்ற இருமுனைகளிலும் தங்கியுள்ளது.

பார்வையாளனிடம் பலதிசைச் சிந்தனைகளை நடுகிற ஓவியங்கள் பல. மரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியில் வரும். ஈழத் தமிழருக்கு ஒரேயொரு வழியில்; வந்தது. வானில் பறக்கும் அலுமினியப் பறவைகள் - நிலத்தில் பறக்கிற பல்குழல் எறிகணைப் பீரங்கிகள் - சிப்பாயின்  கையிலிருந்து வெடிக்கிற துப்பாக்கிகள்-என கருமருந்துக் குண்டுகளில் அவர்களுக்கு மரணம் வந்தது. மார்பளவுக்கு மேலே மல்லாந்து பார்த்த தலை; பக்கத்தில் தனியாய் ஒரு கை; அது அதன் கையல்ல வேறொரு கை. வேறு பக்கமாய் திரும்பிக்கிடக்கும் அந்தக் கை இன்னொரு உடலின் கை எனத் தெரிகிறது. தலைமாட்டில் தனியாய் ஒரு கால். ஒரு தலை, ஒரு கை, ஒருகால் - முள்ளிவாய்க்காலில் ஒரேயொரு பொழுதில் விழுந்த 25 ஆயிரம் பிணக் குவியலைக் காட்டிவிடுகிறது. இந்த தலை, கை, ஒரு கால் மட்டுமே ஓவியத்தில் தெரிவது அதற்குப் பின் தெரியாமல் மறைந்துள் துயரக் காட்சிகள் பல. அவைகளைத் தொட பெரிய சிந்தனை, தலைநிறைய அறிவு, மலை உயரக் கற்பனை வேண்டிய தில்லை. சிறிதாய் ஒரு மனிதஇதயமும், கொஞ்சமாய் சிந்தனையும் இருந்தால் போதுமானவை.

தொடைகளோடுள்ள இரு கால்கள்; அவைகளுக்கு முன்னால் கதறியழும் விரிந்த இரு கரங்கள். கொத்துக் கொத்தாய் மரித்த உடல்களை, இரண்டு குறியீடுகளால் காட்சிப் படுத்திவிடுகிறார். மறைந்து ஒளிந்துள்ள இந்தக் காட்சிகளைக் காண சின்ன இதயமும், கொஞ்சம் சிந்தனையும் போதும். அதே போல் மார்புக்கு மேல் மல்லாந்த பார்வையுடன் ஒரு உடல்; அதன் மல்லாந்த பார்வைக்கு முன் ஒரு கை, பார்வைதொட இயலாத திசையில் தலைமாட்டில் ஒரு கால். இவர்களெல்லாம வேறு வேறு உடல்கள். ஒன்றாய்ப் பிணமானவர்கள். இந்தக் கண்றாவிகளைப் பார்த்து வெம்மை கனலும் மூச்சுடன் அடுத்த சித்தரிப்புக்கு நகர்கிறீர்கள்; அங்கேயும் வரிசையாய் கொல்லப்பட்ட உயிர்கள்.அங்கொரு போராளி வீழ்ந்து கிடக்க, அவர் தலைக்கருகில் இரு செருப்புகள்; அவர் வீழ்ந்து விட்டாலும் இன்னொரு போராளிக்குள் அந்த வீரம் குடியேறும் என்பதை ‘இன்னொரு போராளியின் காலில் என் செருப்புக்கள்’ என்று ஓவியத்தின் கீழ் எழுதப்பட்ட வாசகம் மெய்ப்பிக்கிறது.

இத்தருணத்தில் நாம் போராடவில்லையென்றால் எதிரி துப்பாக்கியால் நம் உயிரைப் பறிப்பான்; நம் சந்ததியினரைப் பழி எடுப்பான். அதன் பின் நம் எலும்பினைக் குத்திக் காட்டி, இந்த எலும்புகள் அடிமையின் எலும்புகள் என்று ஏளனம் செய்வான் என்பதையும் அது நம் மூளையில் ஏற்றுகிறது.

கள முனையில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உடலை சிங்களச் சிப்பாய்கள் பாலியல் வன்முறை செய்த புகைப்படங்கள் வந்தன. செய்திகளும் காணொளிக் காட்சிகளும் வந்தன. சிங்களச் சிப்பாய்களே அதைப் படமெடுத்துக் கொண்டாடி யிருக்கிறார்கள். ஓவியம் அதைப் பதிவு செய்கிறது. உயிரற்ற உடலை - செத்த பிணத்தை காமவெறிகொண்டு நோக்கிய செயல்களை -  பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் மீறல் என்பதாகக் கொள்வதா? விடுதலைப் புலிகள் என்பதால் வெறி கொண்டனர் என்பதா? அவர்கள் தமிழ்ப் பெண்கள் என்பதால் காமவெறியோடு பிணத்தை புணர்ந்தார்கள் என்பதா? என்ற கேள்விகளை ஓவியம் முன்வைக்கிறது.

அவலங்களை மட்டுமே பதிவு செய்வதாக இல்லை காட்சி. அங்கங்கே எதிர்ப்புக் குரலை பதிவு செய்த ஓவியங்கள் கடைசியில் மொத்தமாய் குரல் உயர்த்திய முஷ்டிகளும் அணிவகுப்புமாய் முடிகிறது. “காயம் சுமக்குமோ இனிவரும் காலம்.” என்று நம்பிக்கை துளிர்க்கச் செய்யும் ஓவியங்களாய் நிறைவு பெறுகிறது.

ஓவியங்கள் சொல்வது ஓராயிரம் என்றால், ஓவியங்களுக்காக வடிக்கப்பட்ட வாசகங்கள் பேசுவதோ பல ஆயிரம்! ஓவியம் எழுப்பும் அர்த்தங்களுக்குச் சமமாய் - சிலபொழுதுகளில் அதையும் தாண்டி  அவை பேசுகின்றன. ஒன்றை இழந்துதான் மற்றொனறைப் பெறமுடிகிறது என்பதை வெளிப்படுத்தும்

“இழப்பதற்கு முடிவெடுத்தோம் பெறுவதற்காக”

என்ற வாசகத்தின் சமத்காரம் பெரிது - ஓவியங்களுக்குப் பொருத்த மான வாசகங்களை கவிஞர் காசி ஆனந்தன், இன்குலாப், கவிபாஸ்கர் ஆகியோர் அறிவுக் கொடையாக அளித்திருக்கிறார்கள். ஓவியத்திற்கு அளிக்கும் பாராட்டுகள் இவர்களுக்கும் உரியவை.

- சூரியதீபன் 

- தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், செப்டம்பர் 2009  

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌