ஒலிக்காத இளவேனில் உள்ளிருந்து சாகசக்காரிகள் உருவாகிறார்கள்



ஒரு பெண் முதலில் தனக்குள், தன்னோடு சண்டையிடக் கற்க வேண்டும். தன்னைப் பெண்ணாக உணர்தலினின்றும் விடுபட்டு மனுசியாக உணர்வதற்கான முதல் கலகம் அது. உள்ளிருந்து புறப்படும் அது பெற்றோர் குடும்பத்தினடனான உரசலாக  இரண்டாவதாய் உருக்கொள்கிறது.   தன்னை உயிரியாக சிந்திக்காத - மனுசியாக ஏற்காத  குடும்பத்துடன் நேசபூர்வ முரணிலிருந்து பகை முரணாக மாற்றம் கொள்ளக் கூடும்.  இரு முரணுமாகவும் நீடிக்கக் கூடும்.   உறவு, சுற்றம், வீதி,  கல்விக்கூடம், பணியிடம், பேருந்து, தொடர் வண்டி என மூன்றாம் நிலையில் பொதுச் சமூகத்தில் அவள் ஒவ்வொரு அங்குலத்திலும் ‘தன்மையை’ உறுதிப் படுத்திக் கொள்ளும் குரலாக திரட்சி பெறவேண்டியிருக்கிறது. முதலிடத்திலிருந்து மூன்றாம் இடம் வரை பெண் போராளியாக உருவெடுக்க வேண்டியவளாய் ஆகிறாள்.

பொதுவுடைமையாளன்(கம்யூனிஸ்ட்) என்பதற்கு அறிவியல்  நோக்கிலான வரையறுப்பு வாசகம் உண்டு. ஒரு கம்யூனிஸ்ட்  தன்னை கம்யூனிஸ்டாக ஆக்கிக் கொள்வதற்காக வாழ்நாள்இறுதிவரை போராடிக்கொண்டிருப்பவன் என்று பொருள். சமுதாயப் பிரச்சினையின் ஏதாவது ஒரு அலகினைக்  கையிலெடுத்துப் போராடும் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும்.சுயமரியாதையாளன், சமூகநீதியாளன், மனித உரிமைப்போராளி, இன விடுதலைப் போராளன்,பெண்விடுதலை முன்னெடுப்போர்  என வேறுவேறு தளச் செயல்பாடுகளுக்கும் இதனைப் பொருத்திக் கொள்ளமுடியும்..

பெற்றோர் - உறவு - குடும்பம் - பொதுச்சமூகம் என ஒவ்வொரு பிரிவினரும், பெண்ணை ஒரு பெண்ணாக வைத்திருப்பதற்கு ஆயிரம் கயிறுகளுடன் முண்டிக்கொண்டிருக்கிற போது, இல்லை, நானொரு  மனுசி என தனது இருப்பை தக்க வைக்க இறுதிவரை போராடிக் கொண்டிருப்பவள் பெண் – இந்த நூற்றாண்டின் பெண்.

சமகால தமிழ்ச் சமூகம் முன்னொருகால தமிழ்ச் சமூகம் அல்ல: இது  முகம் சிதைக்கப்பட்ட இந்துச் சமூகம். தமிழ்ச் சமூகத்தின் உதிரத்துள் இந்துத்வ சிந்தனைகளும் எண்ணங்களும் நடைமுறைகளாக பிணைந்துள்ளன. ஆயிரம் வருடங்களாக புரையோடியுள்ள சிந்தனைத் தடத்தின் வழி பெண்ணைப் புரிந்து கொள்ளல்,  வரலாற்றுரீதியாய் அணுகுதல் அவளுக்கு வலிதருவதாக இருப்பதெனினும், இதனினும் குரூர வலியுடையது இந்துச் சமூகம் பெண்ணைக் கையாளும் முறை.

பிறக்கும் போதே ஆணுக்குத் தாலிகட்டிக் கொண்டு பெண் பிறக்கிறாள் என்று இந்துச் சமூகம் கருதுகிறது. பூப்பெய்தல் என்னும் வயசுக்கு வருதல் இயற்கையான உடல் வளர்ச்சியின் அடையாளம். வயசுக்கு வந்த செய்தி பரிமாறப் படுகிறவேளையில்  ” என்ன ஒங்களுக்குப் பேரன் பெறந்திருக்கான் போல” என நாட்டுப்புற பெரிசுகள் விசாரிப்பார்களாம். பெண் பூப்பெய்துவது ஒரு ஆணுக்குள் அகப்படுவதற்காக: அதிலும் அவனுடைய அடையாளங்களுக்கு வாரீசாக ஒரு ஆணைப் பெற்றுத்தருதற்கு;  என்கிற கொழுப்பு உருக்கப்படாது, பதிலாய் கெட்டிப்பாக்கி நீட்டிவைக்கும்  வாசகம் இது! ஆணாதிக்கத் தர்மங்களின் எரிமலைக்குள் பெண் வெந்து நீராகிறாள். வெந்து தளும்பும்  சாம்பல் துகள்கள், அடுத்த தலைமுறைக்கு உரமாக வேண்டுமெனில் பெண் சாகசக்காரியாக உயிர்கொள்ளல் வேண்டும்.

ஈழமாயினும், தமிழகமாயினும் இந்துத் தமிழ்ச் சமூகத்துக்குள்ளிருந்து  ஒரு பெண் புலம்பெயருகிறாள். ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அசல் அச்சு புலம்பெயர் சமூகம்.  பிறந்து புலம் பெயர்ந்த போதும் புலம் பெயர்ந்து பிறந்த போதும் , வளரும்போதும் அவள் ஒலிக்காத இளவேனில். அவ்வாறு உருக்கொள்ள   நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இந்த ஒலிக்காத இளவேனில் சாகசக்காரிகளை உண்டுபண்ணுகிறது.

சாகசக்காரிகள் தம்சுமையை, நமநமப்பை, காங்கையை  இறக்கி வைக்கும் வழியாக எழுத்தை நாடியிருக்கிறார்கள். எழுத்து, கலை, சமூகச் செயற்பாடு என்னும் சுமைதாங்கிகள் வழி இவர்கள் தம் யுகச் சுமையை இறக்கி வைக்கிறார்கள். வாப்பழக்கம் (பேச்சு), சொலவடை, பாடுதல், நடிப்பு, எழுத்து என எத்தனையோ வழிகள்:  பேச்சு, பாட்டு, இசை, ஓவியம், விளையாட்டு எல்லாமும் அவளுக்கான திறப்புத்தான். இத்தனை வழிகளிலும் மேலான வழியாய் கவிதை திறக்கிறது.

பெண் விரும்பி ஏற்ற, இன்றும் பலர் விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிற சுமைகள் அவளுடையவை அல்ல; அவள் மீது தூக்கி வைக்கப்பட்டவை. அகம் புறம் என இயங்குகிற உலகத்தை ஆண் இயக்குகிறான். தூக்கி வைக்கப்பட்ட சுமைகளை அவனுடைய கருத்தியலோடு இணைந்து சுமக்கிறவரை பெண்ணுக்கு கனம் தெரிவதில்லை. கருத்தியலுடன் முறித்துக் கொள்கிற புள்ளியில்  பெண் நசுங்குகிறாள். அந்த நசுக்கம்தான் கவிதை. அவைதாம் ஒலிக்காத இளவேனில். இந்நசுக்கத்தினுள்லிருந்து ஒரு குரல் பீறிடுவதைக் கேட்கலாம்.எல்லோருக்கும் பிடித்த, எல்லோரும் விரும்பிய கவிதை அது.
“எனக்குள் ஒரு ஜிப்ஸி’
எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறாள்.
அவள்
வரம்புகளை உடைத்தெறிந்து
ஒரு புறாவைப் போலப் பறந்திட
ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.
நாடற்று
நிலமற்று
சுதந்திரமில்லா இந்த வாழ்வற்றும்
பறந்திடக் காத்திருக்கிறாள்“
(இந்திரா – ஒலிக்காத இளவேனில்)
ஜிப்ஸி என்னும் பெண் சுதந்திரப் பிரகடணமாய் அலையும் ஒரு பிரகிருதி ; ஒவ்வொரு பெண்ணும் இவ்வாறு இருக்க விரும்புகிறார்கள். சமுதாயத்தின் பல நிலைகளும், முடியைப் பிடித்து இழுக்கையில் உண்டாகும் வேதனையால் இம்மனப்பாங்கு உருவாக்கம் பெறுகிறது. பறத்தலும் அதன் சுதந்திரமும் தான் ஜிப்ஸி.புற்று சூடாகையில், கரையான்கள் மண்ணுக்குள் நிலத்தடி நீரோட்டம் வரை போய், வயிறு முட்ட நீர் குடித்து, மேலே வந்து நீருமிழ்ந்து புற்றை நனைத்து ஈரமாக்கும். கோடையிலும் குளுமைக்குள் வாழுதல் அவ்வுயிர்களுக்கு இதனால் சாத்தியமாகிறது. புற்றாய் குவிந்த வழ்வின் அனுபவங்களை உணர்தலின் புழைகள் வழிபோய் நீர்கொண்டு வந்து ஈரப்பதமாக்கி கவிதையாக்குகிறார்கள். கவிதை ஜீவிப்பதற்கான ஈரப்பதம் இவர்களின் வாழ்வினாலும், வாழ்வு ஜீவிப்பதற்கான ஈரம் கவிதையாலும் இவர்களுக்கு கைவசமாகியுள்ளது.
”கண்ணுறக்கம் தவிர்த்த நடுநிசி
எல்லை வேலியில்
நெருப்பேந்துகிறது என் இதயம்
ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்காக
என் காவலிருப்பு”
ஒரு பெண்ணினத்தின் காவலினால் தான் இவ்வுலகம் இயங்குகிறது. ”உண்டாலம்ம இவ்வுலகம்“ என்பது இங்கு பெண்ணுக்குரியதே.அவ்வுயர்ந்தோர் பெண்டிரே; ஒரு பொதுச் சமூகத்தின் ஆன்மாவாகப் பொறுப்பெடுத்துக் கடைமையாற்றுதலை அவள் அவதானிக்க வாய்த்ததின் நேர்மையான வெளிப்பாடு இவ்வரிகள். 'ஒலிக்காத இளவேனில்' முன்னுரையில் பிரதீபா கனகா தில்லைநாதன் குறிப்பிடுவதுபோல் ”இங்கே நாம் எதிர்கொள்கின்றவை தனிப்பட்ட ஒரு சமூகம் எதிர் கொள்கின்றவை மட்டுமன்று. யுத்தத்திலிருந்து விலகிவந்த பிறகும், ஆடி ஊடுருவிய அதைத் தொடர்ந்தும் தம்முடன சுமக்கிற இனங்களது யதார்த்தம் புதியதும் அல்ல. போரின் கொடிய கரங்களிலிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொண்டு வந்தவர்கள், புதிய நிலத்தின் இனவாதப் பொறிகளுக்கு அவர்களை இழக்க வேண்டியிருக்கிறது. ஆயினும் புலம் பெயர்ந்த பிறகும் புதிய நிலத்தில் ஓர் இனம் காவுகிற சகலவிழுமியங்களையும் காவ வேண்டியவர்களாய் உடனடியாய் எதிர் பார்க்கப்படுவது பெண்களிடமிருந்தே தொடங்குகிறது. பொது ஊடகங்களில் விமர்சிக்கப்படும் அணியும் ஆடைகளிலிருந்து ஒழுக்கம் வரை உடம்பை முன்னிருத்திய அனைத்து செயற்பாடுகளையும் உதாரணமாய் கூறலாம். தெருவில் திரியும் ஆண்களது ஒழுக்கம் குறித்து விமர்சனங்கள் அத்தகைய முக்கியத்துவத்துடன் எழுவதில்லை.” (ஒலிக்காத இளவேனில் பக் 10-11) குடிபெயர்வென்பது வெற்று மனித உருக்கள் அல்ல. பிரதேசத்தில், பூர்வ பூர்வ ஜென்மங்களாய் காவிக் கொண்டிருந்த மனக் கட்டமைப்பு, கலாச்சாரத்துடனான குடிபெயர்வு அது . யாழ்ப்பாண சாதிச் சமூகத்தின் உருத்திரட்சி. குடும்பம் பண்பாடு உறவு அனைத்து விழுமியங்களும் பெண்ணால் பாதுகாக்கப்படுகின்றன என இந்துச் சமூகம் கருதுகிறது. அவளை புனிதப்படுத்தி அப்படியே உச்சிக்கு உயர்த்தி உள்ளே அமிழ்த்திப் போடும் ஒரு வகை நாசகார உத்தி என இதைச் சொல்லலாம்.. பொதுச்சமூகத்தின் பண்பாட்டைச் சீர்குலைக்கிற ஆணை அது தீண்டுவதில்லை. அவனில் முழுதும் நிறைந்துள்ள ஆணாதிக்கக் குறியை அறுத்தெறிவதற்குப் பதில் பாதுகாக்கிறது. பெண்ணிணத்தை அடிமையாக்கியதில் தொடங்கியது தமிழ்ச் சமூகம் இந்து சமூகமான வரலாறு. தமிழ்ப் பெண்கள் சமூகத்திடையே ஒரு சொலவடை நிலவுகிறது. இந்தச் சொலவத்தின் வேர் பெண் அடிமையாக்கப்பட்ட காலத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும்.
”மண்டை மயிரிறுதி மாவிடிச்சவளே
மயானம் வரை தோசை சுட்டவளே”
என்பது சொலவம். ஒரு பெண் பிறப்பு அந்த முன்னைக் காலத்திலேயே பெண்ணுரிமை பேசியிருக்கும் வெளிப்பாடு இது எனக் கொள்ள முடியும். தன் வெப்புராளத்தை, ஆங்காரத்தை ,வேதனையை ஒரு குரலாகத் தந்திருக்கிறாள் நாட்டுப்புறப் பெண். பேசுதல், அல்லது பேச முனைதல் என்பது சமூகத்தால் ஏளனமாகப் பார்க்கப்படுகின்ற காட்சிக் கூடாக இந்தப் பெண் தன்னை வெளிப்படுத்தியுள்ளாள். ஒத்தைக் குரலாய் அல்ல. காலகாலங்களினூடாக வாழ்ந்து அமிழ்ந்து போன மொத்தப் பெண்ணாகப் பேசியிருக்கிறாள்.

ஈழத்துப் பெண்ணும் புலம் பெயர்ந்த பின் இப்படித்தான் ஆங்காரமாக வெலத்தோடு ஒலிப்பாள்
அவரின் மகள்
இவரின் மனைவி
உங்களின் தாய் என்பதினும் நான் என்பதாக
விட்டுச் செல்ல விரும்புகிறேன்
எனக்கான என் சுவடுகளை
(துர்க்கா- ஒலிக்காத இளவேனில்: பக் 80)
காலமெனும் காங்கிரீட் கலவையால் கெட்டிக்கப் பட்ட குடும்பத்தின் அடித்தளத்தில் குண்டு வைத்துத் தகர்க்கிறார்கள். அந்த அடித்தளக் கருத்து என்னவாக இருந்தது, இருக்கிறது? தான் ஒரு மனித உயிரி என்ற அடையாளத்தால் காணப்பட வேண்டும் என்பதில் தங்கியுள்ளது.
திணிக்கப்பட்ட காலை
திணிக்கப்பட்ட எழுத்து
திணிக்கப்பட்ட ரசனை
திணிக்கப்பட்ட குறி
என்று ஜெபாவிடமிருந்து பிறப்பெடுக்கிற வாசகம்- இஃதொரு அரிதான பிரகடனம். பிரகடனம் மட்டமல்ல, பிரகடனத்தினுள் வாழும் விமரிசனம், சுயவிமரிசனம்.

2

யுத்தத்தையும் யுத்த அத்துமீறல்களையும் இன ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாக காணுதல் ஆண்களின் பார்வை ; யுத்தம் பற்றிய தெளிவான விமர்சனம் பெண்டிரிடமிருந்து மட்டுமே பெறப்பட முடியும்.

”யுத்தம் தேசத்தின் வறிய மக்கள் மீதானது: எப்போதும் தொலைபுலங்களில் இருந்து பேசுபவர்களாய் தேசியவாதிகள் இருக்க, அஃதால் இழப்புக்கு முகங்கொடுத்தவர்களாய் மனப்பிறழ்வுகளுக்கு உள்ளாகிறவர்களாய் பாதிக்கப்பட்பவர்களாய் சாதாரண மக்களே இருந்தார்கள். மரணத்திடம் சரணடைந்த இந்த யுத்தம் அவர்கள் தேர்வாய் இருந்ததில்லை” (ஒலிக்காத இளவேனில் - 164)

யுத்தம் சாதாரண மக்களின் தேர்வாக இல்லை;. பெண்களின் தேர்வாக ஒருபோதும் இருந்ததில்லை. உலக முழுதுமான நியதி இத்தமிழ்ப் பெண்களுக்கும்!. ”அவர்கள் தனியே பெண்கள் அல்ல. சாதீய பொருளாதார நிலைகளால் அவர்கள் பிறந்த நிலப்பிரதேசத்தின் பின் தங்கல் நிலைகளால் ஒடுக்கப்பட்டபவர்களாய் உள்ளார்கள் அவர்களது பிள்ளைகள் போராடினார்கள். அவர்கள் போராடினார்கள். ஆயதம் ஏந்தி மட்டுமல்ல, ஆயுதம் எந்தியவர்களடனும் அவர்கள் போராடினார்கள்." (ஒலிக்காத இளவேனில்- பக்கம்:165)

வெளியிலிருந்து பகையிடமிருந்து நீண்டால் ஆயுதம் :உள்ளிருந்து நீண்டால் அதன் பெயர் ஆயுதமல்ல. அது மல்லிகைப் பூச்செண்டு ; தேசத்தின் பெயரால், இயக்கத்தின் பெயரால், போராட்டத்தின் பெயரால் நீளும் ஆயுதம் முல்லைப்பூச் சரம். ”மாமன் அடித்தாரோ மல்லிகைப் பூச் செண்டாலே: அண்ணன் அடித்தாரோ அரளிப் பூச் செண்டாலே” என தாங்கிக் கொள்ள வேண்டும்-உயிரிழப்பாய் இருந்தாலும். தாலாட்டாய் தடவிட வேண்டும். இத்தகைய விமர்சனம் எதனையும் ஏற்கும் உள்மனது, ஆயுதந் தாங்கிய எந்த உடம்புக்குள்ளும் இருக்காது. தவறுகளிலிருந்து பாடங் கற்றுக்கொள்ளாதவர்கள் பழையபடி அத்தவறுகளைச் செய்யவே விதிக்கப்படுகிறார்கள் என்ற வாசகத்திலிருந்து இவர்களை விலக்க இயலாது. யுத்தச் சமூகத்திலிருந்து முள்வேலிச் சமூகம் உண்டானதும் அதிலிருந்து அனாதரவான சமூகம் அலைவதும் பிழைகளிலிருந்து தவறவிட்ட பாடங்களால்தான். வன்முறையாலும் தனிமையாலும் உருவாகியிருக்கிறது எம் சமகாலம் என பிரதிபா பேசுகிறார். இவ்வகை காரியத்தினூடாக போர்ப் புலத்திலிருந்து, பூர்வீக யுத்த நிலத்திலிருந்து கொண்டு வந்த வன்முறையும் தொடருகிறது.

”பொதுவீதிகளில், வேகக் கார் ஓட்டங்களில், குழு வன்முறைகளில் தன் மொழிக்குரியவனைக் காரினால் அடித்தும் அடிக்கப்பட்டும் ஒரே சமயத்தில் கொலையாளியாகவும் கொல்லப்பட்டவனாகவும் ஆகிற இளைஞர்கள்… இவ்வாறாய் வன்முறையைத் தூண்டியவாறு போர்ப்புலத்தின் காலடிகள் எம்மைத் தொடர்கின்றன. போரின் கோரத்தை அறிந்திராத போரினுள் வாழ்ந்திராத புலத்தில் வாழும் நம் பிள்ளைகளது கரங்களிலும் அதன் வன்முறை வெறி ஊடுருவியிருக்கிறது." (அறிமுகத்தில் பக்கம்-9; பிரதீபா கனகா – தில்லைநாதன்)

பெண் மீதான வன்முறை. முன்பொருகாலம் மட்டுப்பட்டு அல்லது ஒரு மட்டுக்கு இருந்தது ஊடக விளையாட்டுக்களால் நவீன கணிணி தொழில் நுட்பங்களின் வினையால் பாலியல் சீண்டலும் வன்முறையும் மட்டு மீறிய நடப்புகளாகியுள. லாபப் பெருக்கத்துக்கு ’எதை எடுத்தும் எறி ’ என்ற நுட்பமான யுக்திகள் இதன் குரூர உளவியலை உண்டு பண்ணுகின்றன.  சாதி தமிழனில் இருக்கிறது என்பதைவிட தமிழனே சாதியாக இருக்கிறான், இயங்குகிறான். மதம் மாறிய பின்னும் விடாத சாதி , புலம் பெயர்ந்த பின்னும் விடுவதில்லை ;  இங்கு என் போன்றவனால் மனதாலும் உடலாலும் தொடமுடியாத தொலைவுக்கு போர்க்குணத்தில் இயங்கியவரான என் பிரியமான தோழரும் போராளியுமான கி.பி. அரவிந்தனின் அவதானிப்பு சரியானதாகவே அமைகிறது.

“ஆயுதப் போராட்டத்தின் நிழலில் சாதியம் உறங்கிக் கொண்டிருக்கிறது என்கின்ற பலரது ஆதங்கம் சரியானதே. புலம் பெயர்ந்ததனால் நம்மவர் மாற்றம் பெற்று விட்டனர் என்று நான் நம்பவில்லை. மிகக் கச்சிதமாக அதனைப் பேணுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். இங்குள்ள சமூக அமைப்புகள் குறிப்பாக கோயில்கள், சங்கங்கள் சாதியத்தைக் கட்டிக்காக்கவே அமைக்கப்பட்டுள்ளன. இன்னார் யார் என்று அறிவதில் கோயில் ஐயர் முக்கிய தகவல் மையமாக விளங்குகிறார். அமைக்கப்பட்டுள்ள ஊர்ச் சங்கங்கள் ஊர்களின் பன்மைத்தன்மையைக் கொண்டு விளங்குவதாக நான் கூறமாட்டேன். எனது தாய் ஊரான நெடுந்தீவை மையமிட்டு பலநாடுகளில் இயங்கும் சங்கங்களில் பிரதிநிதித்துவம் எப்படி உள்ளது. ஆளுமை யார் செலுத்துகிறார்கள் என்பதை நான் அறிவேன்.முதல் தலைமுறை என்றில்லை: இங்கு பிறந்த அடுத்த தலைமுறையினரிடமே சாதியத்தைக் கேட்டு நட்புக்கொள்ளென பெற்றோர் தம்சிந்தனையைக் கைமாற்றி உள்ளதற்கான சான்று என்னிடம் உண்டு. தாயகத்தைவிடவும் புலம்பெயர் சமூகம் சாதிய வக்கிரங்களை நுண்ணியதாக கட்டமைத்துக் கொள்வதாகவே உணர்கிறேன். பண்பாட்டுக் கட்டமைப்பு என்பதும் அந்தத் திசைநோக்கியே நகர்கின்றது. புலம்பெயர்வு மனங்களை விரிவு படுத்துவதில்லை.” (இருப்பும் விருப்பும் – பக்.139)

இந்து சனாதனத்தின் மகிமையிது என திசைதிருப்பி விட வேண்டியதில்லை.ஈழத்துச் சாதிய மனக்கட்டமைப்பு இன்னும் நுட்பமான தந்த்ரோபயங்களோடு கைபிணைக்கிறது என்பதே உண்மை. ”ஒரு தமிழ்ப் பெண் காப்பிலியையோ பிற இனத்தவன் ஒருவனையோ திருமணம் செய்து விட்டாள் என்றவுடன், (காப்பிலி : கறுப்பு இனத்தவரை புலம்பெயர் தமிழர் அழைக்கிற கொச்சைப் பெயர்). ஒரே இனத்தைச் சேர்ந்த, வேறு ஜாதியான, ஒரு தமிழ் மகனை எப்படி அடையாளம் கண்டு திருமணம் செய்யாமல் விடலாம் என்கிற வகைக் கவலைகளும் அடங்கும். மொழியை விடவும் மதம் பஜனை வகுப்புக்கள் பரதநாட்டியம் கர்நாடக சங்கீதம் எனப்பிள்ளைகளை - முக்கியமாக பெண்பிள்ளைகளை வகுப்புக்களுக்குக் கொண்டு சென்று. தமது கலாச்சாரத்தைக் கைக் கொண்டுவிடவே அவர்கள் விரும்புகிறார்கள்.” (அறிமுகத்தில் பிரதீபா கனகா-தில்லைநாதன்; பக்கம்- 8 )

மற்றைய நாடுகளிலும் தன்னிலும் நிலவும் சமகால நிகழ்வுளினால் எதிர்நிலையில் சிந்தனைகளைக் கருக்கொள்ளும் இவ்வகை உணர்வுகளின் வெளிப்பாடு ஒலிக்காத இளவேனில் தொகுப்பில் தொடர்ந்து முண்டுதல் தருகிறது. ஏதோ ஒன்றாய் அல்ல; கர்ப்பப்பையினுள் முண்டும் குழந்தையாய், உரத்து வெளிப்பட முயலுகிறது.. தொகுப்பை மூடிவைத்ததின் பின்பும், மொத்தப் பக்கங்களின் வாசகமும் – மழைபெய்து முடிந்த மர இலைகள் சிறுகாற்று அசைவுக்கு சலாரெனக் கொட்டி சில்லிட வைப்பது போல் உள்ளுணர்வின் நரம்புகளை சுண்டி எழுப்புகின்றன .

3

சாகசக்காரி என்பதின் பொருள் யாது? அதற்கொரு பொது அர்த்தம் உண்டு. சாகசம் செய்தல், சாமர்த்தியமான நகர்வு, கைவசப்படுத்தல், மயக்குதல் போன்ற இவை இச்சொல் ஒலித்ததும் பொதுப் புத்தியில் தோன்றும் அர்த்தங்கள் . இடம், புலம், காலம், சூழலில் ஒரு சொல் கொள்ளும் அர்த்தம் வேறானது.; கடந்த காலத்தினதான- சமகாலத்தினதான -ஆண்பெண் விகற்பமான சிதைவுகளிலிருந்து வெளிச்சமாய் ஒளி எடுத்து வருபவள் இந்த சாகசக்காரி என்பது இச்சொல்லின் தனிப் பொருள். சாகசக்காரிகள் தோன்றுதற்குரிய அத்தனை சாத்தியங்களையும் இக்கால சமூகம் கொண்டுள்ளது. அதனை ”ஒலிக்காத இளவேனில்சமூகம்” என்றே பெயரிடுவோம்.
என் மையக் குகைகளுக்குள்
சீழ் பிடித்துக் கிடக்கிறது வாழ்வு
யுக யுகமாய்த் தொடர
மீளமுடியாத சதி அழுத்துகிறது
எவரிடமும் பகிர இயலாமல்
தவித்த வனப்பில்
இருள் விரிகிறது
(தான்யா-சாகசக்காரி பற்றியவை; பக்-32)
இந்த சாகசக்காரிகள் தாறுமாறாய் கத்துகிறார்களேயெனில், கீறல் கொண்ட ஒலித்தட்டுகளிலிருந்து இத்தகைய ஒலிகள் பிறக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். தாறுமாறான சமுதாய சிந்திப்பின் அமைவுக்குள்ளிருந்து .இவர்கள் பீறிட்டார்கள் வழக்கமான பேசு பொருள் அல்ல. அதை இவர்கள் பேச மாட்டார்கள். பழஞ் சென்மங்களின் சிந்திப்புப் போக்கை முறித்து அல்லது சொக்கப்பனை கொளுத்தி ஆடுகிற இவர்கள் பேசாப் பொருளையே பேசுவர்: எழுதுவர்.
எத்தனை குழந்தைகள்
பதிலற்று அமைதியாய்
உள்வாங்கிக் கொள்கிறேன்
ஒவ்வொரு உறவும்
கர்ப்பப்பை நிரப்பவே
என்பது தருகிற தளர்ச்சியான உணர்வை
அவன் புரிந்து கொண்டதேயில்லை…
காதலனாய் இருந்தவன்
கணவனாய் இருப்பவன்
தகப்பனானவன்
எவனும் சூனியத்தை எதிர் கொண்டதில்லை.
மலர்ச்சியற்ற ஒரு கணத்தில்
அவளை, அந்த சாகசக்காரியை
மறந்து போதல் சாத்தியமாகிறது
மலையும் மலர்களும் சூழ்ந்த பிரதேசங்களை
கைப்பற்றிக் கொள்ள
எத்தனித்துக் கொண்டிருப்பவர்கள்
அமைதியாய் இருக்கிறார்கள்.
சிறிய துவாரங்களுள் பாம்புகள் நுழையும்
(தான்யா; சாகசக்காரி பற்றியவை- பக்கம் 55)
அதிகாரத்துக்கு எதிரான மனது கொண்டவள் சாகசக்காரி. யாரெல்லாம் சாகசக்காரியாய் எழும்பி தன்னை நிறுத்திக் கொள்ள முயலுகிறார்களோ அந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் அதிகாரத்துக்கு எதிரான மனது உரித்தாக வேண்டும். இக்கலக மனம் தோன்றப் பெற்றிருந்தால் கணவன் சகோதரன் தகப்பன் குடும்பம் உறவு அலுவலிடம், அரசியல் இங்கெல்லாம் சனநாயக நீரோட்டம் நிலைப்பட்டிருக்கும். குறைந்த பட்சம் இவ்விடங்களில் சமநிலை விதையாவது தூவப்பட்டிருக்கும்.

சமனற்ற நிலைக்குள் பெண் என்னும் உயிரி தன்னைத் தேட வேண்டியிருக்கிறது. வேறு இடம் தேடிப் போவாயோ, வேதனையில் மூழ்கிப் போவாயோ என்னும் திரைப்படப் பாட்டாய் ரீங்கரிக்கிறது. ஆனால் கனவிலும் சாத்தியப்படாமல் கரங்களுக்குள் அகப்படாமல் உருண்டு கொண்டே போகிறது.
”இப்போதெல்லாம் கனவில்
கற்களே குவிந்து கொள்கின்றன
உடைக்க முடியாமல் வளர்ந்து
என்னைச் சூழ்ந்து
அவற்றுள் சிக்குண்டு
கல்லுக்குள் அடைபட்டு
காணாமற் போனேன்"
(சாகசக்காரி பற்றியவை : பக்கம் 14)
பெண் காணாமற் போவதின் சாத்தியங்கள் இங்கு நிறைந்துள்ளன. குரல் எழுப்பிடாதவர்கள் காணாமல் போவார்கள்: திமிறி குரல் எழுப்பிட நேரிட்டவர்கள் காணாமல் போனாலும் குறைந்தபட்சம் அடையாளத்தையேனும் எச்சமாய் விட்டுச் செல்கிறார்கள். முளைப்பாரிப் பயிர் அழகானது. பல பயறும் கலந்து தட்டுத்தட்டாய் வளர்ந்த அதன் ஒளி ரம்மியம் கொட்டும்: இருட்டே கதியாய் இருப்பதினால் விளைகிறது ரம்மியம். ஒவ்வொரு அந்தி வந்ததும் முற்றத்தில் வைத்து பாட்டுப்பாடி கும்மி கொட்டி மறுபடியும் இருட்டில் தள்ளப்படும். முளைப்பாரி போன்றவள் பெண்ணென கருத்துக் கொண்டோர் ஒரு உண்மையை உணர வேண்டும். எந்தப் பெண்ணும் முளைப்பாரிப் பயிரில்லை. எந்த முளைப்பாரியும் உள்ளே இல்லை. இருள் தகர்த்த எல்லையற்ற சுயத்தில் சூரியனைப்போல் எழுகிறார்கள். தான்யா தனது கவிதைகள் பற்றி , குறிப்பாக இத்தொகுப்பின் கவிதைகள் பற்றி என்ன கருதினார்?

”இன்று இக்கவிதைகளை வெளியாளாய்ப் பார்க்கின்றபோது ஒரு பிறழ்வுற்ற மனத்தையே காண்கின்றேன். இக்கவிதைகள் இன்றைய எனக்கு அந்நியமாகப்படுகின்றன. இதனூடாக இன்னுமொரு பெண்ணை, என்னிடமிருந்து முற்றாக விலகி மாறுபட்டு நிற்கின்ற ஒரு பெண்ணை உணர்கின்றேன். அந்த முகம் அக்காலத்தின் கதைகளை, சந்தித்த நபர்களை, நண்பர்களை, காதலைப் பேசிக் கொண்டிருக்கிறது. எதற்குள்ளும் இணையாது சுழன்று கொண்டிருக்கிற மனதை, கூட்டத்தில் இருந்தாலும் மனது போய்விடுகிற தனித்த அறைகளை, கூடவேயிருக்கின்ற தனிமையை அப்படடியாகவும் இப்படியாகவும் வேறு எதுவாகவும் இருக்க முடியாத மனோநிலைகளின் பதிவே இக்கவிதைகள்”தன் கடந்த கால வெளிப்பாடு பற்றிய மதிப்பீடு இது. ஆனால் இவ்வெளிப்பாட்டில் உணரப்படும் மனோநிலைகள், வாழ்வு நமைச்சலின் வெளிப்பாடுகளிலிருந்து நிலம் கீறி எழும் ஒளியின் மறுவளமாக நான் கருதுகிறேன். இக்கவிதைகளை மொழியால் உணர்கிறவர்கள் வாசகர்கள்; மொழியாலன்றி ஆன்மாவால் உணர்கிறவர்கள் தனது சகோதரர்கள் என்கிறார் தான்யா. சத்யன், நிரோசின் ஆகியோர் சகோதரர்களாக இருக்கிறார்கள். செயல்பாடற்ற எழுத்து போதனை ரூபமுடையதாக இருக்கும். நமது படைப்பாளிகளில் பலர் போதகர்கள் எனலாம். தமிழ்ப் படைப்புச் சூழல் விசித்திரமானது. அதன் தனித்துவமே பிரபல்யத்தைக் குறியாகவும் எல்லையாகவும் கொண்டது; பிரபல்யமும் போதனையும் ஒற்றை நாணயத்தின் பக்கங்கள். தான்யா எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருக்கும் பணியாது சுயமரியாதையோடும் மாற்றங்களிற்கான செயற்பாடுகளுடனும் வாழக் கூடியவராகத் தென்படுகிறார். கற்றுத்தந்தவர்கள் அம்மாவும் அப்பாவும் என்று உறுதி கூறுகிறார். இதன் தொடரச்சியாக சமூகச் செயற்பாட்டாளர் என்ற தடமும் வந்து சேருகிறது; கனடாவில், அகதிகள், பெண்கள், சிறுவர்கள், தொழிலாளர உரிமைகள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் புதிய குடிவரவாளர்களின் என்பன தொடர்பில் சமூக மாற்றங்களை வேண்டும் வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.
கவிஞனின் பணி
கவிதை எழுதுவது மட்டுமா?
போராடவும் வேண்டும்
அமெரிக்க ஆக்கிரமிப்பு முனைப்புக் கொண்டிருந்த காலத்தின் வியட்நாமின் தலைமைப் போராளி கூறிய வாசகத்தின் தற்கால நிதரிசனமாக தான்யாக்கள் தோன்றியிருக்கிறார்கள் என இக்கவிதாயினிகளை காணுகிறேன்.
இரு நூல்கள்;

1. ஒலிக்காத இளவேனில் - கவிதைகள்.
தொகுப்பாளர்கள்: தான்யா , பிரதீபா. கனகா தில்லைநாதன்
விலை-ரூ135.00

2. சாகசக்காரி பற்றியவை
கவிதைகள்- தான்யா
விலை ரூ 50.00

இரு நூல்களும் வெளியீடு;
வடலி வெளியீடு, 8கி அழகிரி நகர், 4வது தெரு, லட்சுமிபுரம், வடபழனி, சென்னை.
தொலைபேசி; +91—97892 34295
மின்னஞ்சல்: sales.vadaly@gmail.com

நன்றி: ஊடறு - 11 ஜூன் 2015, இனிய உதயம்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ