வானம்பாடிகள்

(தாமரை இதழ், ஏப்ரல், 1972)

எங்களின் தலைமுறையிலேயே சமதர்ம பூமியைத் தரிசிக்கும் ‘பேராசை’ கொண்டோர், கோவையிலிருந்து ‘வானம்பாடிகள்’ என்றொரு கவி இதழைப் புட்பித்திருக்கிறார்கள். இவர்களின் ’கவி யமுனைக்’ கரைமேல் ஒரு தாஜ்மகாலும்,  ஒரு உழைப்பாளர் சிலையும் காணத் தருகிறார்கள். ரோஜாவைக் கூட, யாருடைய ரத்தத் துளிகள் என்று இவர்கள் கேட்கிறார்கள். மௌனக்குளியலில் இருந்த  எழுதுகோலை, போராட்ட சாலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர் இந்த அக்கினிக் குஞ்சுகள்.

முகப்பில் ‘விலையிலாக் கவிமடல்’ என்று போட்டிருக்கிறார்கள். உலகில் எனக்குப் பிடித்த முதல் அர்த்தவாகுள்ள  இரட்டுற மொழிதல் இது.

இலையுதிர் மரத்தின் தாபங்களை, கார்காலம் அறிவதுபோல், சமுதாய ஏக்கங்களின் மழைக்காலங்களாய் இவர்கள் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். முதல்பக்கத்தில் இதற்கு விளக்கம்  வருகிறது. “யுகங்கள்தோறும் அவதரிப்பேன் என்று முன்னொரு அவதாரத்தில் சொல்லிப்போனவன், இந்த யுகத்தின் மறு விடியலுக்காக, ‘வானம்பாடிகளாக’ அவதரித்திருக்கிறான்.”

நடைமுறையில் மறுவிடியலைச் சாதிப்பார்களா, அவதாரக் கடவுள்களாக மாயம்செய்து மறைப்புக்  கொண்டுவிடுவார்களா என்பதை தொடர்ந்த செயல்பாடுகள் தாம் சாட்சியமாக்கும். முதலில் சமுதாயப் புதுவிடியலின் பொன்விழிகளைத் திறக்கச் செய்யும் நோக்கில் இணைந்திருக்கிறார்கள். முதலில் இவர் போன்றோருக்கு இணைதல் முக்கியம்; அதற்கு ஆரோக்கியமுள்ள, காற்றோட்டமான (சுதந்திரமுள்ள) சமுதாயப் பார்வையுள்ள பொதுநோக்கு அவசியம். சிலர் தத்துவார்த்த நிலைபாட்டினைத் தீர்மானித்து அதன்பின் செயல்களில் ஒருங்கிணைவர். இன்னொரு வகையாகவுமிருக்கிறது.செயல்களின் ஒருங்கிணைவுடன், கோட்பாட்டுப் புள்ளிகளைத் தெளிவாக்கிக் கொண்டு போகிற காரியார்த்தம் என்ற எண்ணம் இவர்களினூடாக ஓடுகிறது எனக் கருதுகிறேன்.

இலட்சியங்களைக்கூட, இலக்கிய சிங்காரத்துடன் சொல்வதென்று முடிவெடுத்திருக்கிறார்கள். கனவு போதையோடு, கண்ணீரையும் ரசாயனம் செய்து எழுதக் கற்றிருக்கிறார்கள். இவர்கள் பேனாவைச் சாய்க்கிறபோது - அதன் மழையில் இலக்கிய விருட்சங்கள் குப்பென்று பூக்கின்றன.
“கரங்களின் உழைப்பைக்
காலம் அலட்சியப் படுத்தும்போது-
நிறங்களில் சிவப்பையே
நாம்
நிச்சியிக்க முடியும்”
- நிலவுக்கும் ரத்தமுலாம் பூசிப்பார்க்க ஆசைப்படுகிறோராக  தென்படுகிறார்கள். முதல் இதழின், முதல் பாடலில் இது வெளிப்படுகிறது; இப்பாடலில், புல்லாங்குழல் இசையில் புயலை உருவாக்கும் ஞான விளையாட்டு சொல்லப்படுகிறது.
“சூழலைக் கொடுங்கள் ஊதுகிறேன்;
அனலைப் புனலாய் மாற்றுகிறேன்.”
- புவியரசின் இந்த வரிகள் ஆத்மபலத்தின் வெளியீடாய் உதிர்கையில்,
“சத்திய தரிசனங்களின் வைகறைக்காக
நானொரு பூபாள மிசைக்கிறேன்.”
என்ற முல்லை ஆதவனின் நாதம் கேட்கிறது.இங்கு குழலை நாம்தான் கையிலேந்த வேண்டும்; மற்றவர்களின் வழங்கலுக்குக் காத்திருக்கத்தேவையா? அது எப்போதும் நம் செயல்பாட்டு எல்லைக்கு உட்பட்டது. மற்றோரை நோக்கி முன்னிலையில் கேள்வி எழுப்புதலினும், நான், நாம் என்னும் தன்மை இடத்தில்  நின்று சுய காரியப் பாட்டைச் செயல்படுத்த வேண்டும்.

தனக்கென ஒரு லட்சிய வேகமும் இதயத்தைக் கம்பீரப்படுத்தும் சொற்களும், பின்னலிட்டால் அது கவிதையாகிறது. அப்போது கவிதைக்கு ஒரு அர்த்தம் தரப்பட்டு விடுகிறது.

நாமெழுதும் கதை, கவிதை இவைகளின் முடிவுதான் என்ன? இவைகளின் முழுமையான அர்த்தம் தான் என்ன? மனிதத்துவம்!

எனக்குப் பேனா நேர்த்திமட்டும் போதும்; மனித நேர்மை தேவையில்லை என்பவர்களைப் பற்றி, நாமென்ன சொல்லமுடியும்?ஒரு கவி, பிரச்சாரனாக மாறவேண்டுமென்பதுகூட இல்லை; தனது காலத்தின் நிகழ்வுகளுக்காக அவன் பேனா ஒரு முறையாவது சுத்தமாகப் பேசவேண்டும்.

புரட்சியாகத்தில் ஒரு துரும்பைக்கூட வீசியெறியமாட்டோம் என்று சொன்னால் பிறகு ரிசி பத்தினிகளே, உங்கள் கற்புக்கு நாங்கள் பாதுகாப்பில்லை என்று பொதுசனப் பேச்சு மேலெழும்.

‘எங்கள் நிழலைச் சுமப்பதற்காகவாவது எங்களுக்கு ஆகாரம் கொடுங்கள்’ என்று ஏழைகள் எழுதமுடியாது; அவர்களுக்காக நாம்தான் எழுதவேண்டும்.

வானம்பாடிகள் இதை உணர்ந்திருக்கிறார்கள் என்பதோடு  , யாருடைய வீட்டிலும் இலக்கிய சுவீகாரம் எடுத்துக்கொள்ளாத உண்மையின் ஒளியோடு இவர்கள் எழுதுகிறார்கள். இவர்கள் யாருடைய தோப்பிலும் ‘காய்திருடிகள்’ இல்லை, ஒரே நாக்கால் ஊமைக்குழலையும் இசைக்கிற வல்லபவர்களும் அல்லர்.

முதலிரண்டு இதழ்களிலேயே, நீண்ட காலங்களாய் எழுதிவரும் சில கவிஞர்களை - இவர்கள் அசைத்துக் காட்டியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் பேனாவின் அசைவில், எழுத்துக்களின் பீடமாக இருந்தவர்கள், காலராகத்தின் பல்லவியைப் பாடாததால், ஒதுக்குதலுக்கு ஆட்பட்டுள்ளனர். இவர்கள், காலத்தின் தேவையைப் பாடாத போது - இவர்கள் தேவையற்றவராகி விடுகிறார்கள் என்பது சூட்சுமம். நெல் வயலில் ரோஜா கூட களையாகி விடுகிறது.

கவிதா சலங்கை கொஞ்சும் மலையாளத்தில் ‘தலைப்பே’ ஒரு கவிதையாக இடப்படுகிறது. ‘இரவில் பூத்த மலர்’ என்று, ‘இருட்டிண்ட ஆத்மா’ என்று, ‘அசுரவித்து’ என்று, ‘அசுவமேதம்’ என்று அழகாகக் மகுடம் சூட்டுகிறார்கள்.

இரண்டாவது இதழில் தலைப்பே கவிதையாவது, கங்கை கொண்டானின் எந்தக் கண்ணன் இங்குப் பிறந்தால், கரிகாலனின் ‘பசிதேவதைகள்’, அக்னிபுத்திரனின் ‘சுதந்திரப் பிரசவம்’;   ‘எந்தக் கண்ணன் இங்குப் பிறந்தால்’, ‘சுதந்திரப் பிரசவம்’ ஆகியவை நயத்தோடு கவிதைநோக்கி நடைபோடுபவை;
“காந்தீயப் புத்திரர்கள்,
பத்துத் திங்களுக்குள் பரிதவித்துப்போன
வங்கதேவியின் சுதந்திரப்  பிரசவத்திற்கு
ஆயுதங்களேந்தினர்;
ஏனெனில்,
இது ஆயுதகேஸ்.”
- என்கிறார் அக்னிபுத்திரன்
“எங்கள் மாதரசியின்
மானங் காக்க வேண்டுமெனில்
எந்தக் கண்ணன்
இங்கு பிறந்தால்
துச்சாதனக் கரங்கள்
துவண்டு விழும்”
- கேள்வியாக்குகிறார் கங்கைகொண்டான்

இந்தக் கவியிதழைப்பற்றி, சில கடுமையான விமரிசனங்களும்  முகிழ்க்காமல் போகவில்லை. வெறும் வார்த்தைகளிலேயே இலக்கியத்தை நடத்திவிடலாம் என்று பார்ப்பவர்களும் இதில் இருக்கிறார்கள். சில பாடல்களில் வெறும் வார்த்தைகள் காணப்படுகின்றன. மோதிரங்களுக்குப் பதில் சிரங்குகளைச் சூடிக்கொள்கிறார்கள் இவர்கள்.

முடிவில், எல்லாம் வசனமாகவே எழுதியிருக்கிறார்களே என்ற குற்றமாக இருந்துவிடக் கூடாது; எல்லாம் கவிதைகளாகவே இருக்கின்றன என்ற பாராட்டாக இருக்கவேண்டும். இந்த லட்சிய கம்பீரத்துடனும்  கவிதை மேதைமையோடும் எழுதவேண்டும். ஒன்றை முடித்துவிட்டு, அடுத்தப்பக்கம் புரட்டினால் எல்லாம் ஒரே மாதிரியாயிருக்கிறது. ஒருவேளை தேர்ந்தெடுப்பதில் விளைந்த தவறாக இருக்கலாம்.

ஆனால், நிகழ் காலத்தின் பூக்களில்  எந்தப் பூவும் இவ்வளவு அழகாகப் பூத்ததில்லை. இப்படியொரு கவிதை ஏடு பிரகாசம் செய்ததில்லை.

இலக்கிய உலகில், ஐந்து ஆண்டுகளுக்கொரு தலைமுறை பிறக்கிறது. இன்னுமொரு ஐந்து ஆண்டுகள் கழித்துப் புதிதாய்ப் பிறக்கிற எழுத்தாளன் இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளியைக் காட்டிவிட்டுப் போவதுண்டு.

கவிப்பறவைகளே! நீங்களெழுதும் ஒரு கவிதைக்கும் இன்னொரு கவிதைக்கும் இடையே ஒரு நூற்றாண்டுக்கால இடைவெளியைக் காட்டுங்கள். முதல் கவிதையை விட இரண்டாவது கவிதை நூற்றாண்டைக் கடக்கட்டும். தோட்டத்தில் ஒரு ரோஜா பூத்து முடிந்தால் அடுத்துப் பூக்கும் ரோஜா, இன்னொரு வண்ணத்தில்   பூக்கட்டும்.

இன்றைக்குப் புதிதாக எழுதுகிறவர்கள் கவிதா வல்லமையுடன் வல்லமையுடன்  தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் வானத்திற்கும் பூமிக்குமாக விரிந்து நிற்கிறார்கள். ஒரு மாணவன் கட்டுரை ஏட்டில், ஏழைக் கிழவியை எழுதுகிறபோது ‘அந்த எலும்புக்கூட்டை நாய் தூக்கிப்போய்விடுமே என்பதற்காக தோல் போர்த்தி வைத்திருக்கிறார்கள்’ என்று எழுதுகிறான். இன்னொரு மாணவன் நிலவைப்பற்றி எழுதும்போது “அடி நிலவே! நீ எத்தனை பெரிய சோம்பேறி! உனக்கு முகத்திரையை மூடுவதற்குப் பதினான்கு நாளும், முகத்திரையை விலக்குவதற்குப் பதினான்கு நாளும் ஆகிறது” என்கிறான்.

நட்சத்திரச் சிதறலைப் பாடுகிற போது, “சொர்க்கத்தின் சபையில் நீதி தவறிவிட்டது. அங்கொரு பெண் தனது காற்சிலம்பை உடைத்தெறிகிறாள்” என்று எழுதுங்கள். “சூரிய பிரசவம் செய்யுமுன் இரவுபடும் வேதனையில் வெடித்த வியர்வை முத்துக்கள்” என்று எழுதுங்கள். இவை எல்லாவற்றையும் விட “மகா பிரபுவே, உமது சபையில் இத்தனை விளக்குகளை ஏற்றி வைத்திருக்கிறாயே, அவைகளில் ஒன்றை ஏழையின் வீட்டில் ஏற்றி வைக்கக் கூடாதா?” என்று கேளுங்கள்.  கவித்துவத்தோடு மனிதாபிமானமும் சேரட்டும்.

வைகறைப்போதுக்கு வார்த்தைத் தவமிருக்கும் வானம்பாடிகளே! மண்ணில் கூடும், வானத்தில் பாடலுமாய் நீந்தும் பறவைகளே! உங்கள் நிலாச் சிறகுகளில், நானொரு பொன்மணிச் சலங்கை கட்டுவதல்லால் இது வேறொன்றுமில்லை. உங்களின் குரல் சொர்க்கத்தில், நானொரு நட்சத்திரத்தை வீசுவதல்லால் வேறொன்றுமில்லை. எல்லாக் குரலும், ஒரே ரகமாய், வாழ்வுப் புனர் நிர்மாணத்தின் முழக்கமாய்ச் சங்கமமாகட்டும்.

நீங்களொரு ‘அசுவமேத யாகம்’ தொடங்கினீர்கள். அந்த அசுவத்தை நீங்களறியாமல், இலக்கியப் பேரரசில் இன்னொரு இளவரசன் பிணித்துவிட்டால், அதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது.

ஒரு மலையாளக் கவிதையை, அதன் சீதளக் காற்றில் சிறகுலர்த்தும் வானம்பாடிகளுக்கு, வாழ்த்துப் பாடலாக்கி வைத்தால், தோழர்களே! நீங்களே கிழக்காகி, சூரியனை வெளிப்படுத்துங்கள்; நீங்களே திசையாகி வசந்தங்களை நடக்கச் செய்யுங்கள் என்பதின் அழைப்பாகும் ஆகுமல்லவா!
“அக்னி பர்வதம் புகைகிறது; - பூமியின்
தொடுவானங்கள் சிவக்கிறது!
மரணத்தின் குகையில் - புதியதொரு
ரத்தப் பூ மலர்கிறது.
பறவையே… ஓ… பறவையே!
கறுத்த சிறகுமாய்த் தாழப் பறந்து
இந்தக் கனலினைக் கூட்டிலிருந்து எடுத்துக்கொள்;
நாளைய விடியலில்,
இந்தக் கனலை  ஊதி ஊதி
காலமொரு தீப்பந்தமாக்கும்!
எறிகின்ற தீப்பந்தமாக்கும்!
கருடா… ஓ… கருடா!
சிவந்த சிறகுமாய்த் தாழப்பறந்து
இம் முத்தினைச் செப்பிலிருந்து எடுத்துக்கொள்
நாளைய இரவில்
இம் முத்தினை ராவி ராவி
காலமொரு நட்சத்திரச் சுடராக்கி விடும்”
- மலையாளம்:  வயலார், தமிழில்: கவிஞர் இக்பால்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌