காலத்தின் அவசியமா உலகத் தமிழ் மாநாடு?

“இது என்ன காலம்?
நுழைவாயிலில் அமர்ந்து கொண்டு
நம்வீடு எங்கேயென்று
தேடிக் கொண்டிருக்கிறோம்”
- பாடியவர் பஞ்சாபிக் கவிஞர் மஞ்சித் திவானா. 

சீக்கியரின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலின் மீது தொடுக்கப்பட்ட ஆஃப்ரேஷன் புளுஸ்டார் - தாக்குதலில் அலைக்கழிவுக்குள்ளான சீக்கியரின் நிலை பற்றிப் பேசுகிறது இக்கவிதை. ஆனால் சொந்த பூமியில் வீடு எங்கே, ஊர் எங்கே, நிலம் எங்கே, வாழ்வு எங்கே என்ற மிகப்பெரிய கேள்விகளுடன் துக்கித்து நிற்கிற ஈழத்தமிழருக்காகவும் எழுதப்பட்டது போல் தோன்றுகிறது.

ஆபரேஷன் புளுஸ்டாரை நடத்தியவர் சாதாரண ஆள் அல்ல; தென்னாசியாவை தன் கட்டுக்குள் வைத்து ஆண்ட பிரதமர் இந்திரா காந்தி. இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளைப் போற்றிப் பாராட்டி பொற்கோயிலுக்குள் அவர்களின் உருவப் படத்தை வைத்து இன்றளவும் வழிபட்டு வருகிறார்கள். டெல்லியிலும், பொற்கோயிலிலும் சீக்கியர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு வருத்தம் தெரிவித்து கொலையாளிகள் படம் முன்பு சோனியா காந்தி மன்னிப்புக் கோரியது சமகாலநிகழ்வு. 

பஞ்சாபியருக்கு வரலாறு மீண்டது போல் அல்லது அவர்கள் தமது வரலாற்றை மீட்டெழுதிக் கொண்டது போல், ஈழத்தமிழருக்கு நிகழுமானால், அது உண்மையில் தமிழ்ப் பிரதேசத்தின் வசந்தம் மீட்டெடுக்கப்படும் காலமாக அமையும். 

“ஆயிரம் இட்லர்கள் சேர்ந்தாலும், ஒரு இராசபக்ஷேக்கு ஈடாக மாட்டார்கள். ஆயிரம் கோயபல்ஸ்கள் இணைந்தாலும் ஒரு கோத்தபய ராசபக்ஷேக்கு சமமாக முடியாது”. அமிர்தசரஸில் சோனியாகாந்தியை மண்டியிடச் செய்தது போல் ஒப்பில்லாக் குரூரங்களின் உற்பத்தியாளர்களை மண்டியிடச் செய்ய ஈழத் தமிழர்களுக்கு வலிமையில்லை. தமது வலிமையை மறுபடி சேகரித்துக் கொள்ள இத்தனை ஆண்டுகள் என காலவரையறை ஏதும் செய்ய முடியாத பின்னடைவு.



பிணங்களுக்கூடாக ஒரு பெண் தப்பி வந்த ஒரு நிகழ்ச்சியை பேராசிரியர் சரசுவதி விவரித்தார். முகாம்களில் ஒவ்வொரு நாளும் பிணங்கள் குவிகின்றன. ஒரு வாரத்தில் 1400 பேர் மரணமடைவதாக ஐ.நா. குறிப்பு ஒன்று கூறுகிறது. சிங்களச் சிப்பாய்களுக்குப் பிணங்களைப் புணருவது பிடிக்கும் பிணங்களின் நாற்றம் பிடிக்காது. லாரிகளில், வேன்களில் குவியல் குவியலாகப் பிணங்கள் ஏற்றப்படுகையில், வாகன ஓட்டுநருக்குப் பணம் கொடுத்து பிணங்களோடு பிணமாய் மறைந்து கொள்வார்கள். அப்படி தப்பித்து வந்து ஒரு பெண் மீது பதினைந்து பிணங்கள் கிடந்தனவாம். பிணத்தைக் கொட்டுகிற இடத்திலிருந்து தப்பித்து வர, அங்கேயும் பணம் அளக்க வேண்டும். சில லட்ச ரூபாய் செலவில் உயிர் தப்பி வந்தாள் அந்தப் பெண்.

யானையின் கால்பட்ட சிறு புழுப்போல், மொழி, இன, வரலாறு சார்ந்த அடையாள அரசியல்கள் அழிக்கப்படுகின்றன. இத்தகைய அடையாளங்களிலிருந்து எழுகின்ற எதிர்ப்புக் குரல்கள் தேச விரோத, மனித விரோத, பயங்கரவாதக் கருத்துக்களாக அனைத்து அரசுகளாலும் ஏகாதிபத்தியங்களாலும் பார்க்கப்படுகின்றன. உலகமயமும், உலகமயத்தின் பொருட்டு தேசிய அரசியலை அழிப்பதும், அது பயங்காரவாத ஒடுக்கு முறையாக முன்னிறுத்தப்படுவதுமாக தற்போதைய காலம் உள்ளது. 

ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கலுக்கும், தேசிய, இன, மொழி, விடுதலைப் போராட்டங்களை பயங்கரவாதமாக உருவகித்து ஒடுக்குவதற்கும் இடையே உள்ள உறவை தேசபக்தி அறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அண்மையில் வெளிவந்துள்ள ‘புதிய தலைமுறை’ என்ற வாரஇதழ் (1.10.2009 தலையங்கம்) இந்தியாவை வல்லரசாக ஆக்கிக் காட்ட இன்றைய இளைஞர்களை அழைக்கிறது. “இந்தியா வல்லரசாக மாற வேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம் எல்லோரிடையேயும், குறிப்பாக இளைஞர் மத்தியில் பரவவேண்டும். அதற்கு ஏன் மாற்றம் வேண்டும், எதில் மாற்றம் வேண்டும் என்னும் சிந்தனைகள் புதிய தலைமுறையினரிடையே எழவேண்டும்”- என்று வெளிப்படையாக அறிவிக்கிறது மாறத் தடையாக இருப்பவைகள். 

“மனித நேயத்தை மீறி ஓங்கி விட்ட இனப்பற்றும், நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப் பற்றும்” எனப் பட்டியலிடுகிறது. இனப்பற்று, மொழிப்பற்று போன்ற தேசிய இன அடையாளங்களை நாட்டு நலனுக்கு எதிராகக் காணுகிற இந்தப் பார்வை - ஆளும் வர்க்கக் குழுக்களின், அதிகார நிலையிலிருப்போரின் இயல்பான கருத்தாக இருக்கிறது. தேசிய இன அடையாள அரசியலை மறுக்கிறதோடல்லாமல், அவைகளை நாட்டு நலனுக்குகெதிரானதாகக் காட்டுவது அரச பயங்கரவாதம்  (புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் மாலன்).

உலகமயம், தாராளமயம் தனியார் மயம் - என்பவை தேசியப் பொருளியல் மீதான போர். இந்தப் போரைத்தான், இந்தியா உட்பட அனைத்து விரிவாதிக்க நாடுகளும் அரசியல் தளத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என அறிவித்துள்ளன. 

இலங்கைப் பருந்தின் கால்களில் அகப்பட்ட சின்னஞ்சிறு கோழிக்குஞ்சைத் தீர்த்துக் கட்டுவதற்கு, மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியா முதல் சீனா, பாகிஸ்தான் வரை அனைத்துப் பயங்கரவாதிகளும் அணிவகுத்தார்கள். சமீபகால வரலாற்றின் ஒப்பில்லா இனப்படு கொலையைச் செய்து முடித்தார்கள். 

சிங்களப் பாசிசத்தின் (1) பின்புலமாக (2) துணையாக (3) நேரடி நெறியாளனாக மூன்று கட்டங்களாய் நின்றது இந்தியா. இந்த மூன்று கட்டங்கள் தென்னாசியாவில், ஒரு வல்லரசாக விரிவாதிக்கமாக வளர்ந்து வந்த இந்தியாவின் படிநிலை வெளிப்பாடுகள். இந்திய விருப்பம் சார்ந்தே இலங்கை இயங்க வேண்டும் என்பதின் அர்த்தமாக மட்டுமல்ல. வல்லரசு சார்ந்தே பிறநாடுகள் இயங்க வேண்டுமென்பதின் நிரூபணமும் ஆகிறது. இது போன்று துணைக்கிரகங்கள் சுற்றுவதைத் தான் மாலன் போன்ற தேசப்பற்றாளர்களும், பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு வித்திட்ட அப்துல்கலாம் போன்றவர்களும் விரும்புகிறார்கள்.

ஈழப்போர் ஒரு இனமக்களின் அடையாள மீட்புப் போர். 2001- செப்டம்பர் 11க்குப் பிறகு எந்தவொரு இன மக்களின் எழுச்சிகளையும், விடுதலைப் போராட்டங்களையும், ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் அணிவகுப்பையும் பயங்கரவாதம் எனவும் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ எனவும் தனியொரு கொள்கையாக்கி நடைமுறைப்படுத்த ஏகாதிபத்தியங்களும், இந்திய வல்லாதிக்கமும் முன் வந்தன. 

அரசபயங்காரவதம், உலகளவில் ஒரு இணைப்பாக ஆகிவிட்ட நிலையில் தான், இந்த நாடுகள் ஒன்று சேர்ந்தார்கள்.  
இது என்ன காலம்?
ஈழத்தமிழர்களின் இழவுக் காலம்.
எவருடைய உலகு?
அரச பயங்கரவாதிகளின் உலகு.
அனைத்துலக அரச பயங்கரவாதிகளும் அணிவகுத்து நிற்க எதிரிகளாய் மக்கள் நிற்கிறார்கள்.  காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் - கோவையில் ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இப்போது வேறொரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவரான நெபுரு கெரோஷிமா ஒப்புதல் தராமல் 2011 ஜனவரியில் மாநாடு நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். ஆகவேதான் அவருடைய ஒப்புதலின்றி உலகத் தமிழ் மாநாட்டிற்குப் பதிலாக முதலாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தன்னுடைய சொன்ன சொல் கேட்கக்கூடிய பிள்ளைகளான தமிழறிஞர்களையும் வளைத்துப் போட்டிருக்கிறார். உலகத் தமிழ் செம்மொழி மாநாடோ அல்லது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடோ 14 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இப்போது நடத்துவதற்கு தீவிரம் காட்டுவது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

II

“கீழை நாடுகளின் பண்பாட்டு ஆராய்ச்சியாளர்களின் 26-வது காங்கிரஸ் 1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் கூடியது. அதற்கென அழைக்கப்பட்ட பிர திநிதிகளில் தமிழ் அல்லது திராவிட மொழிகள் அல்லது பண்பாட்டுத் துறைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போர் டெல்லியில் ஒன்றுகூடி இக்கழகத்தை அமைத்தனர். இதன் நோக்கம் தமிழ்மொழி, இலக்கியம், சமயங்கள், தத்துவம் முதலிய பண்பாட்டுத் துறைகளில் ஆராய்ச்சிகளை வளர்ப்பதாகும். தென்னிந்திய மொழி இலக்கியங்களும், பண்பாடுகளும், தென்கிழக்கு ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சியும் என்ற அகன்ற எல்லைக்குட்பட்டு, தமிழ்ப் பண்பாட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அதன் நோக்கம்.

ஆண்டுதோறும் உலகில் எப்பகுதியில் தமிழ் - அல்லது தென்னிந்தியப் பண்பாட்டில் எத்துறையில் ஆராய்ச்சி நடப்பினும் அதனைச் சேகரித்து ஆண்டறிக்கையொன்று வெளியிடுவது. முதல் அறிக்கை கடந்த 5 ஆண்டுகளுக்குரிய ஆராய்ச்சிக் குறிப்புகளைத் திரட்டி வெளியிடுவது அந்த அறிக்கை 1966 -க்குள் வெளியிடப்பட வேண்டும்.

இரண்டாவது பகுதித் திட்டமாக 1966-ல் தமிழ்நாட்டுக் கருத்தரங்கை நடத்துவது. இந்த நிறுவனத்திற்கு சர்வேதச தமிழ் ஆராய்ச்சிக் கழகம் என்ற பெயரிடப்பட்டது. இக்கழகத்தின் தலைவராக பேராசிரியர் போலியசோவும், தாமஸ் பர்ரோ, எப்.பி.ஜே.கூப்பர், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர் மு.வரதராசனார் ஆகிய நால்வரும் துணைத் தலைவர்களாகவும், கமீல் சுவலபிலும், சேவியர் தனிநாயகமும் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

1965 ஜுன் மாதத்திலேயே உலக முழுவதிலுமுள்ள தமிழாராய்ச்சியாளர்களுக்கு இக்கழகத்தில் சேர அழைப்பு அனுப்பப்பட்டது. தமிழ் ஆராய்ச்சிகளில் ஏதாவது ஒரு துறையில், அல்லது தமிழக வரலாறு, பண்பாடு இவற்றோடு தொடர்புகொண்ட ஒரு துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு நூல்கள் எழுதியவர்களுக்கு மட்டுமே உறுப்பினர்களாகச் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப்பட்டது. அவ்வாறு உறுப்பினர்களைச் சேர்த்த பிறகு தமிழாராய்ச்சி மாநாட்டுக் கருத்தரங்கை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

இது பொது மாநாடு அல்ல, கருத்தரங்க மாநாடு என்பதையும், இதில் தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பெற்று அவற்றை எழுதியவர்களையே மாநாட்டு உறுப்பினர்களாக அழைத்தல் வேண்டும் என்பதையும் மாநாட்டு அமைப்பாளர்கள் கவனத்தில் கொண்டிருந்தார்கள்”.

இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - இலக்கிய உலகம் எதிர்பார்ப்பது என்ன? பேராசிரியர் நா.வானமாமலை. 

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அப்போது கூட உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. உலகத் தமிழ்மாநாடு என சுருக்கப்படவில்லை. இதனைப் பொது மாநாடாக மாற்றிவிடக் கூடாதென்பதிலும், இது கருத்தரங்க மாநாடு என்பதிலும் ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருந்தார்கள். பொது மாநாடாக மாற்றிவிடுகையில், கொண்டாட்டமாக, ஆர்ப்பரிப்பாக ஆகிவிடுமென்று கருதினார்கள்.

“சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. ‘தமிழும் தமிழர் பண்பாடும் உலக ஆராய்ச்சியாளர்களால் போற்றப்படுகிறதென்பதற்கு முதல் மாநாடு ஓர் அயல் நாட்டில் நடைபெற்றதும், அம்மாநாட்டில் அயல்நாட்டுப் பிரதிநிதிகள் பலர் பங்கு பெற்றதும் சிறந்த சான்று” - என நா.வானமாமலை குறிப்பிடுகிறார். 

அம்மாநட்டின் தொடர்ச்சியாக நிறைவேற்றவேண்டிய திட்டமிடல்கள் பற்றி நா.வா. கூறுவார். “1966-ல் தமிழ்மாநாட்டுக் கருத்தரங்கை நடத்த சர்வதேச ஆராய்ச்சிக் கழகம் முடிவெடுத்தது. 1965- ஜூனிலேயே உலகெங்குமுள்ள தமிழாராய்ச்சியாளர்களுக்கு இக்கழகத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாடு நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்னரே ஐந்து முக்கியப் பிரிவுகளில் எழுதப்பட வேண்டிய கட்டுரைப் பொருள்களைப் பிரித்தனர். இவ்வைந்து பிரிவுகளும் தமிழாராய்ச்சிக்கு தமிழ் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை.
  1. இலக்கியக் கொள்கைகள்
  2. தமிழ்ச்சமூக வரலாறு
  3. தென்கிழக்காசியப் பண்பாடு
  4. மொழி (அமைப்பு வகை மொழியியல், வரலாற்று வகை மொழியியல், திராவிட மொழிகளின் ஒப்பீட்டு மொழியியல், தமிழை, தமிழரல்லாதோருக்கு கற்பிக்கும் வழிமுறைகள், தமிழ் மொழியில் பாடங்களைத் தொகுத்தல் எனப்பல)
  5. மொழிப்பெயர்ப்புத் திட்டங்கள்.
இத்துறைகளில் இதுவரை அதிகமான ஆராய்ச்சிகள் நிகழ்ந்ததில்லை. எனவே, புதிய திசைகளில் தமிழராய்ச்சியைத் திருப்பிவிட இம்முயற்சி பயன்படும் என அமைப்பாளர்கள் கருதினார்கள்.

ஐந்து துறைகள் குறித்து ஒவ்வொரு துறைக்கும் தேவையான இதுவரை வெளிவந்த நூல்களைப் பற்றி முழு ஆராய்ச்சி நடத்துவதும், ஆராய்ச்சிக்கான பயிற்சியை நடத்துவது பற்றி ஆலோசனை கூறுவதும் இக்குழுக்களனைத்தையும் உள்ளடக்கிய ஆராய்ச்சிக் கழகத்தின் முழுப் பணியாகும்.” (இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - இலக்கிய உலகம் எதிர்பார்ப்பதென்ன? பேராசிரியர் நா.வானமாமலை)

முதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுக்கான பணிகள் எவ்வாறு பகுக்கப்பட்டு, எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்று காணுவதின் வழியாக, தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் எவை என அறிய முடியும். வெற்றி - தோல்விகளை மதிப்பிடுவதின் வழியே முன்னர் நிகழ்ந்த தவறுகளைக் களைந்து, வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். முக்கியமாக “எதிர்காலத் திட்டமிடல்களை முழுமையாகச்செய்ய முடியுமென” - நா.வா.கருதினார்.

அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் சென்னையில் 1968 சனவரியில் நடந்த மாநாடு சர்வதேச தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு. சர்வதேச தமிழ் ஆராய்ச்சிக் கழகம் என்பது உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 

முதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் முடிவுற்ற பின்னர் செய்யத் தவறியதும், செய்ய வேண்டியதுமான பணிகளை நா.வா. விரிவாகப் பட்டியலிட்டார். மொழிப் பாதுகாப்பில், மொழிவளர்ச்சியில் உண்மையான ஈடுபாடு கொண்ட ஒரு தமிழ்நெஞ்சத்தின் கருத்துக்களாய் இவை வெளிப்படுத்தப்பட்டன.

இதுபோன்ற தமிழ்அறிஞர்களின் விமர்சனம் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால், அண்ணா ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு வெற்றியடைந்திருக்கும்.

பொது மாநாடாக நடத்துவதன் வழி பெருந்திரளான மக்களை ஈர்க்க எண்ணி வெகுமயப்படுத்தினர். மக்களுக்கான நிகழ்ச்சிகளாக தனிப்பிரித்துக் கொள்வது சரியானது தான். மக்களிடமிருந்து மொழியைப் பிரித்து தங்களுக்கான ரசசியக் குகையாக தனிமைப்படுத்திக் கொண்டனர் தமிழ் அறிஞர்கள் என்ற பழி முன்பே இருந்து வந்தது. ஆனால் ஆராய்ச்சி வயல்களுக்கு நீர்தளும்பப் பாய்வதற்கான பணிகள் - ஏற்கனவே பெற்ற அனுபவங்களிலிருந்து திட்டமிடப் பட்டிருக்க வேண்டும்.

இரண்டாவது உலகத் தமிழ்மாநாட்டுக்கான தயாரிப்புகள் அவ்வாறு நடைபெறவில்லை. மாநாட்டுச் செயற்குழு ஒன்று, முதலமைச்சர் அண்ணா தலைமையில் தமிழறிஞர்களே இல்லாமல், முழுக்க அலுவலர்களைக் கொண்டதாக உருவானது. கலைமகள் இதழின் ஆசிரியர் கி.வா.ஜெகந்நாதன், தாம்பரம் கிறித்துவக் கல்லூரி முதல்வர் தவிர, தமிழ் வாசனை படாத ஒரு குழுவாக அமைக்கப்பட்டது. இக்குழு தான் இம்மாநாட்டின் ஆராய்ச்சி அலுவல்களை வடிவமைத்து வழிநடத்தியது. 

“ஆனால் ஆராய்ச்சிக் கருத்தரங்கை நடத்த வழிகாட்டுவதற்கு வேறு ஒரு இணைப்புக்குழு தேவை. அக்குழுவில் பலதுறை ஆராய்ச்சியாளர்கள் மட்டும் அங்கம் வகிக்க வேண்டும். அத்தகையதோர் குழுவே ஆராய்ச்சிப் பணியை வழிநடத்த முடியும். அத்தகையதோர் குழு அமைக்கப்பட்டதா என்பது யாருக்கும் தெரியாது. அமைக்கப்பட்டிருந்தாலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்ப ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு அனுப்புவது போன்ற வேலைகளில் அக்குழு ஈடுபட்டதாகத் தெரியவில்லை”- என்று நா.வா. சுட்டிக் காட்டினார். 

“இத்திட்டங்களை நிறைவேற்ற தமிழாராய்ச்சியிலும், இலக்கியங்களைப் பரப்புவதிலும் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழகங்கள், கலை, இலக்கிய மன்றங்கள், (அமைப்புகள்) எழுத்தாளர் மன்றங்கள், வாசகர் வட்டங்கள், தனி ஆராய்ச்சியாளர்கள், அனைவருடைய ஒத்துழைப்பையும் பெறுவது அவசியம்” - என்று வழி காட்டினார்.

தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழறிஞர்களின் வழிகாட்டல் கவனத்தில் கொள்ளப்படவில்லை.  சமகாலத்தில் நாம் எழுப்புகிற கேள்விகள் அல்ல இவை. 1968 சனவரியில் சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ்மாநாடும், எம்.ஜி.ஆர். ஆட்சியில் மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடும், அம்மையார் ஜெயலலிதா நடத்திய ஏழாம் உலகத் தமிழ் மாநாடும் இக்கேள்விகளுக்கான பதில்களை வழங்காமலே தொடர்ந்தன. உண்மையான தமிழை, தமிழ் வளர்ச்சியைப் புறக்கணித்தன. தனிமனிதப் புகழ்பாடுதலில் ஒடுங்கித் தாழ்ந்தன. 

அண்ணாவின் காலத்தில் திட்டமிடப்பட்ட மாநாடு அறிஞர்களின் ஒன்றுகூடல் என்பதிலிருந்து சரிந்து கொண்டாட்டம், ஆர்ப்பரிப்பு என்ற புள்ளிகளுக்கு இறங்கியது. அப்போது மாநாட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தவர் கருணாநிதி என்று சொல்கிறார்கள். 

தலைநகர் சிலைகளால் நிறைந்தது. சிலை திறப்பு விழாக்கள் ஏழு நாட்களும் தொடர்ந்தன. பழம் பெருமை பேசும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. சென்னையின் அனைத்துக் கலை அரங்குகளும் கலை நிகழ்ச்சிகளால் அதிர்ந்தன. சொற்பொழிவு அருவிகள் மக்களை நீராட வைத்தன. கவியரங்க ஆற்றில் மக்கள் நீந்தினார்கள்.
“விழுந்தாலும் விதைபோல விழுவார்
எழுந்தாலும் சூரியன் போல் எழுவார்”
- என்று அண்ணாவைப் பற்றி கவிஞர் அப்துல் ரகுமான் பாடிய கவிதை வரிகள் அந்தத் தீவுத்திடலை அன்று அதிரச் செய்தது. ஆர்ப்பரிப்பு, ஆரவாரம், கொண்டாட்டம் என்ற அப்போது தொடங்கிய கடல்கோள் இந்த ஒன்பதாம் மாநாட்டிலும் தொடர இருக்கிறது. 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை உலக கால்பந்துப் போட்டி. ஆண்டுக்கு ஒருமுறை உழவர் பொங்கல். அதுபோல் உலகத்தமிழ் மாநாடு இத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று வரையறை இருக்கிறதா? 

ஒரேயொரு விதிதான்; அண்ணா நடத்தினார்; எம்.ஜி.ஆர். நடத்தினார். மூன்றாவதாய் அம்மையார் நடத்தினார். இப்போது நான் என்ற கணக்கைத் தவிர, வேறு ஆண்டுக் கணக்குகள் எதுவுமில்லை. 1969 முதல் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தும், ஒரு உலகத்தமிழ் மாநாடு கூட நடத்தியதில்லையே என்ற கணக்கைச் சரிசெய்ய இப்போது ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாடு.

ஏதொன்றையும், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்களோடு தொடர்புபடுத்தி ஆய்வுக் கட்டுரைகள் வழங்க தமிழறிஞர்கள் காத்திருக்கிறார்கள். மடியிலேயே தயாராக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆய்வு செய்து தயாரிக்க உலகத்தமிழறிஞர்கள் கால அவகாசம் வேண்டுமெனக் கேட்டதால் ஆறுமாதம் தள்ளிவைக்கப்படுகிறதாம். அறிவிப்பை வெளியிடுகையில் தமிழறிஞர்கள் ஒளவை நடராசன், மா.நன்னன், வா.செ.குழந்தைசாமி, கவிக்கோ அப்துல் ரகுமான், கவியரசு வைரமுத்து அருகிருந்தார்கள்.

“கும்பிடுகிற என் கைகள்
ஒரே கைகளாகத் தான் இருக்கின்றன
கால்கள் தான் மாறிக் கொண்டே இருக்கின்றன” என்று பெருமையாய் ஒப்புதல் வாக்கு மூலம் தந்தார் ஒரு தமிழறிஞர். இது இவர்கள் தகுதியைச் சுட்டிக்காட்டப் போதுமானது. 

“தொல்காப்பியர் விருது - முதல்விருது கலைஞருக்கு வழங்கப்பட வேண்டும்” - என்று அறிவித்துள்ளார் பேராசிரியர் தமிழண்ணல். எப்படி இருந்த இவர் இப்படி ஆகிவிட்டாரே என்ற வருத்தம் மிஞ்சுகிறது.
“மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்”
என்று சிலிர்த்தெழுந்த தன்மான உரை - இன்று விதந்து பேசப்படுகிற இலக்கியச் சுவைக்கான வரிகள் மட்டுமே.

தனக்குள் வீங்கிப் பெருத்த படைப்பாளுமை பற்றிய மிதமிஞ்சிய கணிப்பில் பிறக்கும் அறிவுச் செருக்கு ஒன்றுண்டு. சிங்கம் போல் கர்ஜிக்கும். யானை போல் பிளிறும். ஆனால் அங்கீகாரத்தின் முன், மு.சுயம்புலிங்கத்தின் யானை போல் அடங்கிப் போகும். 
“ஐம்பது பைசாவுக்கு
கால் மடக்கி, கையேந்துகிறது
எங்கள் ஊர் யானை”
நவீன இலக்கிய வட்டத்தில் இயங்குகிற கலை இலக்கியவாதிகள், கம்பீரம் காட்டி, கம்பீரமாய் உள்ளடங்கிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. அடையாள விரும்பிகள் எல்லா வட்டத்திலும் இருக்கிறார்கள். எனக்குரிய இடம் எங்கே என்று அலைகிறவர்களை, ஏற்கனவே சென்னை சங்கமம் நடத்திய அனுபவம் உள்ளவர்களால் உள்ளிழுத்துக் கொள்வது எளிது. 

மொழிவளர்ச்சியை உறுதிசெய்யும் ஆய்வுகளோ, புதிய ஆக்கங்களோ, இந்த ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் நிகழப் போவதில்லை. உருப்படியாய் எதுவொன்றும் நிறைவேறாது என்பதை உறுதிபடச் சொல்வதற்குரிய முக்கிய ஆவணமாக நமக்கு இருப்பது திராவிட முன்னேற்றக் கழகங்களின் (தி.மு.க., அ.தி.மு.க, ம.தி.மு.க.) பாரம்பரியக் கலாச்சாரமும், கலைஞரின் சுபாவமும் தான். 

கருத்துத் திரட்சியை விட, காட்சிப்படுத்துதலை முதன்மையாகக் கொண்டு வேரூன்றி வளர்ந்த கட்சி தி.மு.க. முதலில் அவர்கள் கற்றலில், எழுதுவதில் தான் தொடங்கினார்கள். வாசிப்பு, கற்றல் என்ற எழுத்து மொழியை விட, அடுத்த கட்டத்தில் நாடகம், திரைப்படம் காட்சி போன்ற மொழியை பிரதானமாக்கினார்கள். அலங்காரம், அடுக்குமொழியில் பேசுவது, உவமான உவமேயங்கள், நாடகம் போல் பேச்சில் விவரிப்பது - என சொற்பொழிவு, காட்சிரூபமாய் ஆக்கப்பட்டது. 

“எங்கள் பேச்சுக்கு ஓராயிரம் வாக்குகள் என்றால், எம்.ஜி.ஆர். முகத்துக்கு ஒரு லட்சம் வாக்குகள்” என்று அண்ணா மேடைப்பேச்சில் சொன்னது உண்மையானது.

காட்சி ஊடகமான திரைப்படத்தை முதன்மைப்படுத்தி வளர்ந்தார்கள். அவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு இந்தக் காட்சி ஊடகம் ஆதாரமானது.

“தணிக்கை செய்யாது திரைப்படங்களை அனுமதித்தால், இரண்டு ஆண்டுகள் போதும்; திராவிட நாட்டு விடுதலை பெற்று விடுவேன்” என்று அண்ணா அப்போது பேசுவார். மொழி, நாடு - என்பவைகளில் உண்மையான தீவிர ஈடுபாடு எதுவுமில்லாமல், அர்ப்பணிப்பு உணர்வு ஏதுமற்று ஒரு இயக்கம் இருபது ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததெனில் கருத்துப் பதிவை விட காட்சிப் பதிவுகளை நடைமுறைகளாய்க் கட்டியமைத்தது காரணம். வங்கக் கடலின் அந்தக் கரையில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ்மக்கள் மரணத்திற்குள் போய்க்கொண்டிருந்த வேளையில், அதே கடலின் இந்தக் கரையில் உண்ணா நோன்பை அரங்கேற்றிக் கொண்டிருந்தது இதனுடைய உச்சம் எனலாம்.

முக்கியமான அம்சம் இன்னுமொன்றுண்டு ; அது - கருணாநிதியின் குருதியில் கலந்து விட்டிருக்கிற அரசியல் இயல்பாகிப் போன ‘விழாமோகம்’, ‘தன்புகழ் வேட்கை’. அது இன்று பல கழகங்களின் அரசியல் கலாச்சாரமாக ஊத்தம் கொண்டுவிட்டது. ஒரு நாலு மீட்டர் பாலம் கூட இன்று தானாகத் திறந்து கொள்ளாது.

III

“உலகில் வேறெங்கும் நடக்காத ஒரு கொடூரம் தமிழகத்தின் வெகு அருகில் உள்ள இலங்கையில் நடந்தும், அதற்கான எதிர்ப்பு இந்தியாவிலிருந்து எழவில்லை. இதற்குப் பதில் கேட்கத்தான் இந்தியாவுக்குப் புறப்பட்டேன். ஆனால் விஷா ரத்து செய்யப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டேன்” - என்கிறார் எலீன் ஷான்டர் என்ற பெண்மணி. 

இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவர், மனிதஉரிமைப் போராளி. ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்துப் பேசிக்கொண்டிருப்பவர். அமெரிக்காவில் ஒரு மாநாட்டில் இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து - “எலின் ஷான்டர் ஒரு வெள்ளைக்கார தமிழச்சி” என வியந்தாராம். (வைரமுத்து இன்று யாருடைய கைகளுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறார் என்பதை பலர் அறியச் செய்யவே இந்த வாசகம்).

எலின் ஷான்டரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, பேசச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவுக்கு வர ஒருமாதம் முன்பே விஷா கிடைத்துவிட்டது. புறப்பட இரு நாட்களிருக்கையில், அவரது விஷா இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. தினமணி போன்ற நாளிதழ்கள் முன்பக்கத்தில் தலைப்பிட்டு எழுதின. நரக வேதனை அனுபவிக்கும் தமிழர்களின் குரலலை - இந்தியாவுக்குள் ஒலித்து விடுவார் என்ற அச்சம் காரணம். 

“இலங்கையின் நேரடி நெறியாளனாய் இயங்கியது ஏன் என்று இந்தியாவைக் கேட்பதாக இருந்தேன்” - என்று எலின் ஷான்டர் தெரிவித்திருந்தது ஒரு குமட்டில் (கன்னத்தில்) குத்துவிட்டு மறு குமட்டில் எடுப்பது போல் இந்தியாவுக்கு வலி எடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் விஷா ரத்து செய்யப்படுவதில் முனைப்புக் காட்டினார் என்று எலின் ஷான்டரே தெரிவித்திருக்கிறார்.

தமிழினப் பாதுகாப்பு பற்றி உரை நிகழ்த்த, கேள்வி எழுப்ப வந்தவரே, விஷா ரத்து மூலம் தண்டிக்கப்படுகிறார். கருணாநிதி வருத்தம் கொள்ளவில்லை; வழக்கமாய் செய்வது போல் கடிதம் எழுதியும் கண்டிக்கவில்லை. உலக முழுதும் உள்ள தமிழர்கள் அவரை ‘தமிழினப் பகைவராகக்’ காணுவதில், அர்த்தம் உள்ளது; தமிழினத்தைக் காக்காமல், தமிழின மக்கள் பேசும் மொழியைக் காப்பது என்பது எவ்வளவு நூதனமான விளையாட்டு! தமிழை - தமிழர்களிடமிருந்து பிரித்து பூஜையறைப் படமாக உயர்த்தி மாட்டி விட ஒரு மாநாடு. தமிழர்களைக் கொன்றது போலவே அப்படியே தமிழையும் கொன்று விடலாம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?