ஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்

கீற்று இணையம் - 21 செப்டம்பர் 2009-ல் ‘பா.செ.யின். ஒரு சார்பு அரசியல் மேதமை’ என்ற தலைப்பிட்டு, சதீஷ்குமார் எழுதியிருந்தார். இணையத்தில் ஒரு வசதி எழுதியவர் யார் என தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. வெளியிடும் இணையத்துக்குக் கூட அவர் யாரெனத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அறியப்பட்டவர் வேறு பெயருக்குள் புகுந்தும் எழுதலாம். செப்டம்பரில் வெளியான கட்டுரைக்கு இப்போது பதிலளிக்க வேண்டுமா எனக் கேள்வி எழக்கூடும். எதிர்வினை செய்யாததின் காரணமாகவே இறுதியாக வந்த கருத்து சரியான கருத்து என்றாகி விடுகிற ஆபத்து ஒளிந்திருக்கிறது. சதீஷ்குமாராக இருந்தாலும், அவர் அணைந்து நிற்கிற அ.மார்க்ஸ் என யாராக இருந்தாலும் அவர்கள் யார் என்பதினும், அவர்கள் முன்னிறுத்தும் கருத்துக்களுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. பா.செ.மட்டுமே அது போன்றவைகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென இல்லை.

ஒரு சார்பு அரசியல் மேதமை எனப்படுவது இரு வகையினரின் தேவையாயிருக்கிறது. கட்சி நிலைப்பாட்டில் நின்று, அது வகுத்துக் கொடுத்த முடிவுகளுக்கேற்ப சிந்திப்பைக் கூட்டிக் கொண்டே போகும் ஒரு வகையினர். இன்னொரு பிரிவினர் முன் கூட்டிய முடிவுகளின் அடிப்படையில் இயங்குபவர்கள். இந்த இருவகையினரும் அவரவர் வழியில் முன்னிற்கும் முடிவுகளுக்காக சிந்திப்பில் பயணப்பட்டாலும் அது ஒரு அராஜகமான சிந்தனைப் போக்குத்தான். எதிரில் இயங்கும் நிலைமைகளிலிருந்து தொகுத்துக் கொள்வதற்குப்பதில், தமக்கு ஆதரவான தரவுகளை மட்டுமே தொகுத்துக் கொள்வது இதன் அடிப்படை. மனஓசையில் மார்க்சியப் பாதை அடிப்படையில் தனது அரசியல் மேதமையை பா.செ.உறுதிப்படுத்தியது உண்மையே. அது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகத் தொடங்கவில்லை. 1983-ல் ஜூலை இனக் கொலைத் தாக்குதலுக்குப் பிறகு, பல போராளிக் குழுக்கள், “இனவெறிப் பாசிசத்திலிருந்து விடுதலை தனிநாடு” என்ற முழக்கங்களை முன்வைத்து வெளிப்பட்டார்கள். 1983-ன் மன ஓசையைப் புரட்டிப் பாருங்கள். கிடைப்பது சிரமமாக இருக்குமெனில், தோழமைப்பதிப்பக வெளியீடாக இப்போது வந்துள்ளது மன ஓசைத் தொகுப்பு.

“தன்னியல்பு வாதத்துக்கு ஆட்பட்டு ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரித்து விட்டோம்; மார்க்சிய லெனிய வழிகாட்டுதலின்படி, இரு இனங்களின் உழைக்கும் மக்களின் ஒன்றிணைவில் இலங்கை ஆளும் வர்க்கங்களைத் தூக்கியெறிவதின் வழியேதான், தமிழ்மக்கள் விடுதலையடைய இயலும்;”- என அந்நாட்களில் நான் இயங்கிய மா.லெ.அமைப்பு முடிவெடுத்தது. இன்று ஷோபா சக்தியும், அ.மார்க்ஸூம் முன்வைக்கிற கற்பனாவாதத்தை மா.லெ.அமைப்பும் அன்று வைத்தபோது நாங்கள் முரண்பட்டோம். சில ஆண்டுகளின் பின்னர், “ஒடுக்கும் பெருந்தேசிய இனம் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லும் பலத்துடன் இயங்கும்போது, ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றிணைந்து போராட முடியும். அம்மாதிரி நிலைமைகளில் மட்டுமே ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஒன்றிணைந்த போராட்டத்தை நாம் கோரமுடியும். அவ்வாறு பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான இயக்கங்கள், வலிமையாய்த் திரண்டிராத வேளையில், ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை பக்கமே நாம் நிற்க முடியும்” தேசிய இனைப்பிரச்சினையின் அடிப்படைகள் - லெனின் - என்ற பகுதி இருப்பதை பரிசீலனை செய்யாமல் விட்டு விட்டோம் என ஈழவிடுதலையை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு அமைப்பு திரும்பியது. போராளிகள் விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது, தமக்குள்ளே இராணுவாதத்தை செயல்படுத்தாமல் பகைவனை நோக்கி முன் வைப்பது, ஐக்கிய முன்னணி கட்டுவது என்ற விமர்சனங்களை அமைப்பு வைத்தது. அது சதீஷ்குமார், சிராஜீதின், ஆதவன் தீட்சண்யா, ஷோபாசக்தி, சுகன், அ.மார்க்ஸ் போல விடுதலைப்புலிகள் எதிர்ப்பை மையப்படுத்தி விடுதலைப்போராட்ட எதிர்ப்பாக உருமாற்றியல்ல.

“இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் பக்கங்களை விட, ஒளித்து வைக்கம் பக்கங்கள் அநாகரிகமானவை”- என்ற எனது முந்திய கருத்தை மீள்பதிவு செய்வது அவசியமாகிறது. பிரதான தாக்குதல் நிலையைக் கண்டறிவதைத் தவிர்த்து, புலிகளோடு இவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட முரண்கள், குரோதங்கள் அடிப்படையில் விடுதலைப் போராட்டக் கோட்பாட்டை வரையறுப்பதைத் தவிர்த்த இவர்கள் செயல் யாருக்கு வெண்சாமரம் வீசியதாக மாறியது என்பது அனுபவத்தில் உணரப்பட்டது. ‘புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள். அதுபற்றி ஏன் பேசவில்லை’ என்று சதீஷ்குமார் கேள்வி எழுப்புகிறார். நீங்கள் குற்றம் சுமத்துகிற காலகட்டத்தில் களத்தில் நின்ற அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் “உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புக்கள் போர் நடக்கும் வன்னிப்பகுதிக்கு வந்து உண்மை அறியட்டும்” என வருந்தி, வருந்தி அழைத்தார். சர்வ தேசத்தின் காதுகளில் விழாதது போலவே உங்கள் காதுகளிலும் விழவில்லை. இப்போது கேட்கிற நீங்கள் உலக நாடுகளை நோக்கி, அழுத்தம் தந்து உண்மை அறிந்திருக்க வேண்டும். உலக மௌனமும் உங்கள் மௌனமும் ஒன்றிணைய படுகொலை நடந்தது. அல்லது அக்கோரிக்கையை ஏற்கும்படி வலியுறுத்தினால் புலி ஆதரவாகப் போய் விடுமோ என்று தவிர்த்தீர்கள்.

அண்மையில் இலங்கை அரசின் எந்தப் பரிந்துரையுமில்லாமல், யாருடைய பண உதவியுமில்லாமல், மீள்குடியேற்றப் பகுதியிலுள்ளோரைச் சந்தித்து திரும்பினேன். (ஆதவன் தீட்சண்யா போய் வந்தது எவ்வாறு என்பது நீங்கள் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்) மீள் குடியமர்த்தப்பட்டவர்களில் நான் சந்தித்த யாரும், புலிகள் தங்களைக் கட்டாயப்படுத்தி வைத்ததாகத் தெரிவிக்கவில்லை. தங்களுக்கு ஆதரவாக, துணையாக வந்ததாக தெரிவித்தார்கள். இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குச் செல்லும்படி புலிகள் தெரிவித்து, பணம், பொருள் மற்றதும் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் என்பது அவர்களே சொன்னது: “நூறு சனங்கைளக் கொன்றால் அதில் ஒரு புலியாவது இருப்பார். ஒரு புலியைக் கொல்ல நூறு மக்களை இராணுவம் கொன்றது” என்றார்கள் விம்முதலுடன். கடைசிக்கட்டத்தில் ஏறுக்கு மாறாக நடந்தது உண்மை. புலிகள் மீதும் புலிகள் முன்னெடுத்த போராட்ட முறைகள் மீதும் எங்களுக்கு விமரிசனம் உண்டு; ஆனால் எந்த நேரத்தில் எதைப் பிரதானப்படுத்த வேண்டுமென்ற கூடுதலான அரசியல் நாகரிகமும் எங்களுக்குள்ளது.

என்னை “உங்கள் புலி ஆதரவு சக பயணி வைகோ” என்று மனச்சாட்சி கூசாமல் பேசியிருக்கிறார் சதீஷ்குமார். ஈழப் போராட்டத்தில் வைகோவை, திருமாவளவனை, மருத்துவர் ராமதாசை விமரிசித்து நான் எழுதிய ‘புலிகள் அல்ல; புலிவேடக்காரர்கள்’ என்ற கட்டுரை இதே கீற்று இணையத்தில் 16.04.2009-ல் வெளியானது. எதிர்ப்பில் முகிழ்க்கும் பண்பாடு - என்ற கட்டுரையும் வெளியாகியிருக்கின்றது. இக்கட்டுரைகள் செழுமைப்படுத்தப்பட்டு, “ஈழ விடுதலைப் போராட்டமும், காந்தியமும்” என்ற எனது நூலிலும் இணைக்கப்பட்டுள்ளன. வாசித்துப் பாருங்கள். தேர்தல் கட்சிகள் தமிழ்த்தேசிய இயக்கங்களாய் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள எந்த நியாயமுமில்லை. சென்ற மாதத்தில் (டிசம்பர் 2009) கொழும்பு சென்றிருந்தபோது, “ஈழத் தமிழர் விடயத்தில் தமிழகக் கட்சிகள் நேர்மையாகச் செயற்படவில்லை” என நான் அளித்த விரிவான நேர்காணல் கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் (27.12.2009) இதழில் வெளிவந்துள்ளது. “எந்தப் பிரச்சினையிலும் மக்களுக்கு நேர்மையாயில்லாத தமிழக அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையிலும் நேர்மையாக நடக்கவில்லை” - என்பதை அதில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

“பா.ஜ.க.வோடு கூடிக்குலவும் நெடுமாறன் தா.பாண்டியன் குறித்து உங்கள் கருத்து என்ன” என்று கேட்டிருக்கிறீர்கள். முன்னர் நான் எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியிருப்பது தான் என்னுடைய கருத்து. சீமான் பேசுவதற்கெல்லாம், அவருடைய செயற்பாடுகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா? “காலச்சுவடு மீது எப்போதாவது கண்டனத்தை வெளிப்படுத்தினாரா” என சாதுரியமாக ‘சைடில்’ புகுந்திருக்கிறார் சதீஷ்குமார். புதுமைப்பித்தன் வெளியீடுகள் உரிமை தொடர்பான பிரச்சினையில் காலச்சுவடு மீது என் கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறேன். காலச்சுவடு மீது எனக்கு விமர்சனமும் உண்டு. இணக்கமும் உண்டு. “இன்று காலச்சுவடு இதழில் அடைக்கலமாகியதோடு மட்டுமல்லாமல், மனஓசைப் பதிப்பகத்தில் இரண்டு நூல்களை வெளியிட்டு (காலச்சுவடு தயாரித்துக் கொடுத்தது) அந்நூல்களுக்கான (தீட்சண்யம், தொப்புள் கொடி) விற்பனை உரிமையையும் வழங்கி இருக்கிறீர்கள்” என குற்றம் காண்கிற சதீஷ்குமார் அவர்களே! முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை - மனஓசைக் கென்று தனியாக ஒரு பதிப்பகம் எந்த காலத்திலும் இருந்ததில்லை. நான் மா.லெ.அமைப்பில் இயங்கிய காலம் வரை இல்லை ; தீட்சண்யம், தொப்புள் கொடி என்ற நூல்களை நான் அச்சிட்டதுமில்லை. நடக்காத ஒன்றுக்கு எப்படி விற்பனை உரிமை வழங்க முடியும்? ஆதாரங்களற்று, அவசரக்குடுக்கைகளாக பழி சுமத்துவது உங்கள் கூட்டத்தின் இயல்பு போலும்.

காலச்சுவடு ஆகஸ்டு, 2009 இதழில் வன்னிமுகாமில் நடந்தவை பற்றி வெளிவந்த கட்டுரைக்கு நான் எதிர்வினையாற்றாமல் இருந்ததற்கு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று - அக்கட்டுரை எழுதிய ரமேஷ்குலநாயகம் யார், எந்தப் பின்னணியில் அவர் எழுதினார் என்ற விபரங்களைச் சேகரித்துக் கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டது. ஒருவர் அல்ல ; இருவர் இணைந்து எழுதினார்கள். ஒருவர் நிதர்சனம் இதழின் ஆசிரியர் - கருணாகரன். அவருடைய புனைபெயர் ரமேஷ். மற்றொருவர் நிலாந்தன். இவர் எழுதும் புனைபெயர் குலநாயகம். கருணாகரன் களத்தில் கடைசிவரை இருந்தவர் - கருணாகரன் புலிகள் அமைப்பைச் சார்ந்தவரல்ல. ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த அவர் நிதர்சனம் பொறுப்பாளராக - வெளிச்சம் இதழின் பொறுப்பாளராக ஊதியம் பெற்றுக் கொண்டு விடுதலைப்புலிகளுக்காகப் பணியாற்றியவர். களத்திலிருந்து பதிவுகளாய் வெளியான அந்தக் கட்டுரையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி பிரபாகரன் பற்றிக் குறிப்பிடுகிற இடத்தில் எழுந்தது. தான் கொண்ட இலட்சியத்துக்காக ஒரு போராளி வாழ்வைத் தேர்வு செய்தவர் அவர். ஆனால் தன் வாழ்வையும், மகன், மகள், போன்ற குடும்ப உறுப்பினர்கள் வாழ்வையும் போராளி வாழ்வியலிலிருந்து அந்நியப்படுத்தி வைத்திருந்தாயும், தன் பிள்ளைகளைப் போராளிகளோடு கலந்து விட அனுமதிக்கவில்லை என்றும் அவதூறு செய்கிற இந்த இடம் தான், கட்டுரை வெளிப்படுத்தும் மற்ற தகவல்களின் மீதான நம்பகத்தையும் சீர்குலைத்தது.

புலிகளுக்கு வக்காலத்து வாங்காமல் புலிகளுக்கு எதிராய் திமறி நிற்கிறார் அ.மார்க்ஸ் என்கிறீர்களே, அவரே பிரபாகரனும், அவருடைய மகன் சார்லஸ் ஆண்டனியும் யுத்தகளத்தில் மரணமடைந்ததாகச் சொல்லியிருக்கிறார். மருத்துவப் படிப்பு முடித்த மகள் துவாரகாவும் போராளியாய் களத்தில் மடிந்தார். அக்டோபர், 2009 காலச்சுவடு இதழில் ரமேஷ் குல நாயகம் குறிப்பிடுவதாக ஒரு செய்தி வருகிறது. “அண்மையில் நிலாந்தன், கருணாகரன் போன்றோருடன் உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவரை தவறான பாதையில் சென்று கொண்டிருந்ததாகவும், தூர நோக்கற்ற தலைவனால் ஓர் உரிமைப் போராட்டம் மீண்டெழ முடியாத மோசமான பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். இது காலம் கடந்த ஞானம் தான் என்றாலும் தம்நிலையுணர்ந்து விட்டார்கள்”- என்ற குறிப்பு வருகிறது. அந்த கருணாகரனும், நிலாந்தனும் தான் ரமேஷ்குலநாயகம் தங்களைப் பற்றி தாங்களே எழுதிக்கொண்டார்கள். சொல்வதும், சொன்னதாகச் சொல்வதும் எல்லா பெத்த பெருமாளும் அவர்கள் தான். அனாமதேயன் தொகுத்ததாக கதை விட்டிருப்பதும் அவர்கள் தான்.

இந்த உண்மை விவரங்கள் அறிய வந்ததும் காலச்சுவடுக்கு எழுத குறிப்புக்கள் எடுத்துக் கொண்டிருக்கையில், நவம்பர் 2009 இதழில், வன்னிக்களத்துப் பதிவுகளுக்கான எதிர்வினை மு.புஷ்பராசன் எழுதியது வெளிவந்தது. “விலங்குப் பண்ணையும் மாற்றுக் கருத்தாளர்களும்” என்ற தலைப்பில், அவர் முன்வைத்த அத்தனை கருத்துக்களோடும் நான் உடன்படுகிறேன். “விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதன் பின், அனைத்தையும் மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் அவசியம் உணரப்படும் இவ்வேளையில், விடுதலைப் புலிகள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரின் செயற்பாடுகளும் மீள் பரிசீலனைக்கு உட்பட்டே ஆகவேண்டும். தமது சொந்தக் குரோதங்களை முன்னிட்டு தமிழினத்தின் விடுதலையில் பகைத்துக் கொள்ளுதலும் இந்தப் பகையின் வெறியும் தங்கள் சுய முரண்பாடுகளையே கண்டு கொள்ள முடியாதவர்களாகவும், உண்மையை மறுப்பவர்களாகவும் இவர்களை மாற்றியுள்ளன” என்ற நிலைப்பாட்டில் எனது நிலைப்பாட்டையும் அவருடைய குரலில் எனது குரலையும் காண்கிறேன். அதேநேரத்தில், முன்னர் எழுதப்பட்ட அநாமதேயன் (?) கட்டுரைக்கு முற்றிலும் எதிரான கருத்துக்களுள்ள இக்கட்டுரையும் காலச்சுவட்டில்தான் வெளியாயிற்று என்பதை சதீஷ்குமார் போன்றவர்கள் எண்ணிப்பார்ப்பது நல்லது.

விடுதலைப்புலிகள் செய்த மாபெரும் அரசியல் தவறு வட மாகாணத்தில் முஸ்லீம் சமூகத்தை வெளியேற்றியமை - என்ற மு.புஷ்பராசனின் கருத்தை அப்படியே ஏற்கிறேன். விடுதலைப் புலிகள் இச்செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பின்னர், 1995-ல் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணக் கட்டுப்பாட்டை இழந்து, இராணுவத்தின் வசம் வந்த பின்னும், இஸ்லாமியர்கள் மீள் குடியேற்றம் நடைபெறவில்லை. அக்காலகட்டத்தில் குடிபெயர்ந்த யாழ் தமிழ்மக்களுக்கு மீள் குடியேற்ற முயற்சி மேற்கொண்டபோது என்ன நடந்ததோ, அதுதான் முஸ்லீம்களுக்கும் நடந்திருந்தது. அவர்களின் வாழ்விடங்களில் நிலை கொண்டிருந்தது ராணுவம். இதை நான் எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக் காட்டி சிராஜூதின் என்பவர், “கீற்று வாசகர்கள் எல்லோரும் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என பா.செ.நம்புவது போல் தெரிகிறது” என கிண்டலடித்தார். “விடுதலைப்புலிகள் 1995-க்குப் பின் யாழ்ப்பாணத்தில் இல்லையே, அப்போது முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் பற்றி அவர்களோ, நீங்களோ பேசவில்லையோ? இப்போது புலிகள் வீழ்ச்சியடைந்து விட்டனரே, இப்போதும் நீங்களும் அவர்களும் மீள் குடியேற்றத்துக்கு சிறு முயற்சியேனும் மேற்கொள்ளவில்லையே?” என்ற கேள்வியை இப்போதம் சிராஜீதினை நோக்கி எழுப்புகிறேன்.

அங்கு இராணுவம் மட்டுமே நிற்க முடியும். யதார்த்தத்தை காண முடியாதவர்களின் நோக்கம், முஸ்லீம் பிரச்சினையை விடுதலைப் புலிகளுக்கும், விடுதலைப் போராட்டத்துக்கும் எதிராகப் பயன்படுத்துவது மட்டுமே; முஸ்லீம் மக்களின் நலனை முன்னிறுத்துவது இரண்டாம் பட்சமே. விடுதலைப்புலிகள் அல்லாத தமிழ் தேசிய ராணுவம் முஸ்லீம் போலீஸ்காரர்களை இனம் பிரித்துக் கொன்றது, முஸ்லீம்கள் தமிழர்களைப் படுகொலை செய்தது - போன்ற கசப்பான உண்மைகளைப் பட்டியலிட்டு, இதுபற்றியெல்லாம் இவர்கள் ஏன் பேசுவதில்லை என கேள்வி எழுப்புகிறார் மு.புஷ்பராசன். சிராஜூதின் போன்றவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? “முள்ளிவாய்க்காலில் மூன்று லட்சம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு, எந்த நேரமும் மிகப்பெரும் பேரழிவு நடைபெறலாம் என்ற சூழலில் முஸ்லீம் மக்களிடமிருந்து ஒரு ஆதரவுக் குரல் ஒலிக்கவில்லை. பேரிய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை” என்று ஷோபாசக்தியே ஒத்துக் கொள்கிறார். ஆனால் வித்தியாசமாக ஒலிக்கிறது கிழக்கிலிருந்து வந்த பேராசிரியர் சிராஜ் மசூரின் குரல், “முகாம்களில் வதைபடும் தமிழர்களுக்கு முஸ்லீம்கள் போய் உதவியதாக, அவரே நேரில் சென்றிருந்தாக” உரைக்கிறார். எவ்வளவு பெரிய முரண். தனிப்பட்ட சிலர் உதவியதை, முஸ்லீம் சமுதாயமே முன்னின்ற செய்ததாக சிராஜூதினும் காட்ட முயன்றிருக்கிறார்.

சிராஜ் மசூரின் கருத்துக்கள் பற்றி இன்னொரு கட்டுரையில் (புலி எதிர்ப்பாளர்களின் இன்னும் சில முகங்கள்) விரிவாகப் பேசியிருக்கிறேன். 27.08.2009 அன்று தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் நடத்திய மாநாட்டில் ஈழ விடுதலைப்போர் பற்றி ஒரு மிகத்தெளிவான அறிக்கையை புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம் சார்பில் சமர்ப்பித்திருந்தனர். ஈழப் போராட்டம் முளை விட்டதற்கான அடிப்படைகள், எழுச்சிகள், இன்று ஏற்பட்ட பின்னடைவு என தொகுத்திருந்தனர். விடுதலைப் புலிகளின் பங்களிப்பையும் புறக்கணிப்பையும் சரியாக மதிப்பிட்டிருந்தனர். பலரது கவனத்துக்கு அது வராமல் போனாலும், ஒன்றிரண்டு இடங்கள் தவிர, நான் அதனுடன் முழுமையாய் ஒன்றுபடுகிறேன். அதுதான் இன்றைய என்னுடைய நிலைப்பாடு. அதை தேடிப் படித்துப் பாருங்கள். அந்தத் தோழர்கள் பலருக்கும் அனுப்பியிருக்கிறார்கள். அனுப்பப்பட்ட பட்டியலில் நீங்கள் கூட இருக்கலாம். முடியுமானால், உங்களுக்கு விருப்பமிருப்பின், நகலெடுத்து அனைவருக்கும் விநியோகியுங்கள். மார்க்சிய வல்லமையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை அது எனக் கருதுகிறேன். “தமிழீழ விடுதலைப்போர் நீதியானது ஈழவிடுதலையை உறுதியாக ஆதரிப்போம்” என முன்வைத்து புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம் தொடர்கிற முழக்கங்களில் எனக்கு எந்த வேறுபாடும் இல்லை.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு - என்பார்கள். உறைப்பாய் விழும் கருத்துக்களை எதிர்கொள்ள இயலாமல், உதாசீனமான வார்த்தைகளால் சீறுவது அ.மார்க்ஸ் இயல்பாக ஆகியுள்ளது. ஈழம் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து. “ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும்” என்றொரு நூலை வெளியிட்டுள்ளார் அ.மார்க்ஸ். நீண்ட விரிவான முன்னுரையும் எழுதியிருக்கிறார். கிண்டல், கேலி, நக்கல், அவதூறான வார்த்தைப் பிரயோகம் நூல் முழுவதும் விளம்பியிருப்பதோடு, இவைகளின் மொத்தமாக முன்னுரை வெளிப்பட்டுள்ளது. “புலி முகவர்களாகிய நீங்கள் எவ்வளவு நாட்களாக மீனவர்கள் பிரச்சனையைப் பேசுகிறீர்கள்? ஏன் நீங்கள் தலித்துகள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை?” (பக்-33). என்று இவர் கேள்வி எழுப்புகிற தோரணை அந்தப் பிரச்சனைகளுக்காக இவர் ஒருவர் மட்டுமே நிற்பது போலவும், தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது போலவும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்த்தேசியர்கள் மீனவருடனும் தலித்துகளோடும் இணைந்திருக்கிறார்கள். டிசம்பர் 21, 2009-ல் இராமேசுவரம் தங்கச்சி மடத்தில் நடத்தப்பட்ட மீனவர் வாழ்வுரிமை மாநாட்டில் பழ.நெடுமாறன், மணியரசன், கண. குறிஞ்சி போன்ற தமிழ்த் தேசியர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். நாகை, தஞ்சை, திருவாரூர் போன்ற ஆறு மாவட்டங்களில் தொகுக்கப்பட்ட பிரச்சனைகளின் அடிப்படையில், பொது விசாரணையும் நடத்தப் பெற்றது.

மீனவர்களிடம் உரையாடுகையில் ஒரு கருத்து உறுதிப்பட்டது. அவர்கள் அரசியல் கட்சிகளை நம்பத் தயாராக இல்லை. மதங்களையும் நம்பத் தயாராயில்லை. (தென்மாவட்ட மீனவர்களில் பெரும்பான்மையினர் கிறித்துவர்கள்.) அதுபோல் நம்மைப் போன்ற அறிவு ஜீவிகளையும் அவர்கள் நம்பவில்லை. அறிவு ஜூவிகளின் சமூகப் பாத்திரம் குறித்து கேள்விகள் எழுகிற போது, என்னைக் குறை சொல்வதா என்ற கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. சமூகம் பற்றிய ஆய்வுகள் என வருகிறபோது எல்லாவற்றிலும் தானே ஆசான், தான் ஒருவரே ஆசான் என நினைக்கிறார் அ.மார்க்ஸ். எதிர்வினைகள் இல்லாமல் தான் வைப்பது ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறார். எதிர்வினைகள் வரும்போது அவர் எப்படி எதிர்கொள்வார் என்பதை இந்த முன்னுரை அடையாளம் காட்டுகிறது. “பா.செயப்பிரகாசம் போன்ற கோமாளிகள் முதல் விடுதலை ராசேந்திரன் போன்ற போராளி ‘கம்’ அறிவு ஜூவிகள் வரை இதுதான் அவர்களின் நிலைப்பாடு” - என்று பாய்ந்திருக்கிறார். (பக்.17)

பெயர் குறிப்பிட்டு அவர் சாடுகிறவர்களில் இம்முறை பி.யு.சி.எல். சுரேஷ் தப்பவில்லை. “தமிழகத்தில் பி.யூ.சி.எல். அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் சுரேஷ் இரண்டு மாதங்களுக்கு முன் அவர் பெங்களுரில் ஏராளமான செலவுடன் நடத்திய ஈழப்பிரச்சனை தொடர்பான மாநாட்டில், இத்தகைய சீன எதிர்ப்பு முன்னிலைப்படுத்தப்பட்டது” (பக் - 29). ஏராளமான பொருட்செலவில் என்ற வார்த்தையைப் போடுவதன் மூலம் சுரேஷ் பற்றி ஒரு மோசமான பிம்பத்தை கட்டியமைக்க முண்டுகிறார் அ.மார்க்ஸ். லண்டனிலிருந்து எழுதும் யமுனாராசேந்திரன் என்ற எழுத்தாளரை, பெயர் குறிப்பிடாமலே “வழக்கமாக என்னிடம் பகைமை காட்டும் ஒரு லண்டன் தமிழ் எழுத்தாளர்.................. தன் வழக்கமான மூடத்தனத்தையும் (இந்த வார்த்தையை நான் மிகவும் கவனமாகவே இங்கு பிரயோகிக்கிறேன்) வெளிப்படுத்தியுள்ளார்” (பக்.10) என்று தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். தடித்த, அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறபோது - மிகவும் நிதானமாக, கவனமாக பயன்படுத்துகிறவர் அ.மார்க்ஸ் என்பதை கருத்தில் கொள்வோமாக.

கிழக்கு மாகாணத்திலிருந்து சிராஜ் மசூர் என்பவரை அழைத்து வந்து இங்கு சென்னையில் அ.மார்க்ஸ் பேச வைத்தார். “உண்மையிலேயே முஸ்லீம் பிரச்சனையைப் பார்க்கத்தவறிய குற்ற உணர்ச்சி நம் இயக்கத்தவர்கள் மற்றும் அறிவு ஜூவிகளிடம் இருந்திருந்தால் அவரது கருத்தை அவர்கள் கவனித்திருக்க வேண்டும். ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஆனால் எத்தனை இறுக்கத்துடன் இவர்கள் அனைவரும் அவரைப் புறக்கணித்தனர்.......... வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டிலிருந்து யார் பேச வந்தாலும் ஓடி ஓடிப் பேட்டி எடுக்கும் தோழர் தியாகு, சிராஜ் மசூர் தமிழ்நாட்டில் தங்கியிருந்த ஒருவார காலத்தில் எங்கே போய் ஒளிந்து கொண்டார்” (பக்.16) - என்று கேள்வி எழுப்புகிறார். கேள்வியல்ல எங்கள் மீதும் தோழர் தியாகு மீதுமான குற்றச்சாட்டு. சிராஜ் மசூர் இங்கு அமைத்து வரப்பட்டதோ, பேசியதோ, எங்களுக்குத் தெரியாது. பத்து நாட்கள் கழித்துத் தான் அவர் வந்ததும் போனதுமான செய்திகளை இன்குலாபும் நானும் கேள்விப்பட்டோம்.

சிராஜ் மசூர் 2009, ஜூலை 4-ந் தேதி சென்னைக் கூட்டத்தில் பேசுகிறார். புதுவிசை செப்டம்பர் இதழில் அவருடைய விரிவான பேட்டி வந்த பிறகுதான் அவர் வந்து சென்றது உறுதியானது. ஒருவேளை ரகசியமாகக் கூடி, ரகசியமாகத் தனக்குத் தெரிந்தவர்களைக் கூட்டி நடத்திய ரகசியக் கூட்டமாக இருக்கலாம். மாற்றுக் கருத்து வரும் என்று தெரியும். மாற்றுக் கருத்தை தெரிந்து கொள்வதற்காகவாவது நாங்கள் வந்திருப்போம். அ.மார்க்ஸ் எழுதியிருப்பதின் தொடர்பில் தோழர் தியாகுவிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன பதில், “சிராஜ்மசூர் வந்ததோ, கூட்டம் நடத்தியதோ எனக்குத் தகவல் இல்லை. அ.மார்க்ஸ் இப்படி எழுதியிருக்கிறாரோ என்று நீங்கள் கேட்கிற இந்த நேரத்தில்தான் அதை நான் அறிவேன். ஒருவார காலம் சிராஜ்மசூர் இங்கே இருந்திருக்கிறார். அ.மார்க்ஸ் அப்போது என்னுடன் நல்ல தொடர்பில் தான் இருந்தார். இப்போதும் இருக்கிறார். ஏதாவதென்றால் அவ்வப்போது தகவல் சொல்வார். ஆனால் இது தொடர்பாக அவர் எனக்கு எந்தத் தகவலும் சொல்லவில்லை. செய்தி தெரிந்தால் தானே நேர்காணல் செய்வதற்கு? எங்களுடைய பத்திரிக்கையில் (சமூகநீதித் தமிழ்த் தேசம்) எழுதப் போகிறேன்” என்றார். எதையும் அது தொடர்புடைய யாரிடமும் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் எழுதுவது அ.மார்க்ஸ் நடைமுறையாக இப்போது மாறியுள்ளது.

“இந்து அடையாளத்துடன் இங்கே ஈழ ஆதரவு பேசிய சிவாஜிலிங்கத்தை மேடை ஏற்றுவதில் எள்ளவும் வெட்கமற்ற இவர்கள், சிராஜ்மசூரைப் புறக்கணித்ததற்கும், புறணி பேசியதற்கும் இவர்கள் எல்லோரிடமும் ஒளிந்துள்ள இந்து மனம் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்” என்று எங்களுக்குள் இந்து மனம் இயங்குகிறதாக அவச்சொல் சொல்லிக்கொண்டே போகிற தொடர்ச்சியில் ‘நம் மரியாதைக்குரிய நண்பர் விடியல் சிவா, சிவாஜிலிங்கத்தையும் சீமானையும் வைத்து மாநாடுகள் நடத்தியதை என்னென்பது’- என்று விடியல் சிவாவை விளாசுகிறார். ‘முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்களை விடுதலை செய்’ என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் விடியல் சிவா, குறிஞ்சி போன்றோர் கோவையில் முழுநாள் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அம்மாநாட்டில் சீமான் பேசினார்; சிவாஜிலிங்கம் இல்லை. மாநாடு முடிந்து ஏறக்குறைய நான்கு மாதங்களின் பின்தான் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள் விழா வருகிறது. தேவர் சிலைக்கு சீமான் மாலையணிவிக்கிறார். இதற்கு முன் சீமான் அவ்வாறு செய்ததாக இல்லை. இப்போது அவர் ஒரு தேர்தல் கட்சியைக் கட்ட வேண்டிய அவசரத்திலிருப்பதால் அத்தகைய செயல்பாட்டுத் தேவை எழுந்திருக்கிறது. எந்த வகையிலும் அதன் காரணமாக நாங்கள் சீமான் செய்ததை நியாயப்படுத்தவில்லை. ஆனால் நிகழ்வுகளின் கால முன்பின் என்பதைக் கணக்கிலெடுக்காமல், அவசரமாய்ப் பாய்ந்து நண்பரின் காலரைப் பிடித்து உலுக்குவது எவ்வாறு சரி?

அடுத்து திருப்பூரில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் சிவாஜிலிங்கத்தை அழைக்க முடிவு செய்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தவர் சிவா. சிவா போன்றோரின் எதிர்ப்பையும் மீறி, சிவாஜிலிங்கத்தை மேடையேற்றியதால், சிவா அந்த மாநாட்டைப் புறக்கணித்தார். இந்த உண்மைகைளத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாது சகட்டு மேனிக்கு தாக்கியிருக்கிறீர்களே என சிவா நேருக்கு நேர் கேட்டபோது, பதிலளிக்காமல் இறுக்கமாக இருந்திருக்கிறார் அ.மார்க்ஸ். (சீமான் தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததால் - ஒரு சமுதாயத்தின் தலைவர் அவர் என பேட்டி கொடுத்ததால் அவர் அந்த சாதியைச் சேர்ந்தவர் என நினைப்பது தவறானது) லத்தீன் அமெரிக்கா நாடுகளை குறிப்பாக கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளின் அரசியல் தலைமைகளை அமரந்தா போன்ற லத்தீன் நட்புறவுக்கழகத் தோழர்கள் ஆதரிப்பது - அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தம் சுயச்சார்பை நிறுவிக் கொள்ளும் போராட்டங்களுக்காக மட்டுமே. ஏகாதிபத்திய எதிர்ப்பின் காரணமாக - அந்த பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்ற பாதையிலிருந்து திரும்பி, ஏகாதிபத்திய பயங்கரவாதத்துடன் இணைந்து நடத்திய பயங்கரவாதத்துக்கு ஐ.நா. அவையில் முட்டுக்கொடுத்ததை எவரும் எதிர்பார்க்கவில்லை; சீனாவும் ருசியாவும் என்ன செய்தாலும் ஆதரிப்பது என்ற இந்தியக் கம்யூனிஸ்டுகளின் நிலைபோல் அமரந்தா போன்ற தோழர்கள் மேற்கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாய்ப் பேசியவர்கள் இவர்கள் என்ற ஆத்திரம் பொங்க அ.மார்க்ஸ் ‘கியூபா அங்கோலாவை ஆக்கிரமித்த நாடு என்பதை நாம் மறந்து விடலாகாது’ (பாக்-28) என போகிற வேகத்தில் ஒரு குண்டை வீசி விடுகிறார். எல்லோர் மீதும், எல்லாவற்றின் மீதும் அவதூறு பூசுவது என்ற மனப்போக்கு - இங்கு வரலாற்றைப் பலிகடா ஆக்கியுள்ளது. உண்மை வரலாற்றை திரித்துப் புரட்டுகிற அளவுக்கு கடுஞ்சினம் அறிவை மறைத்து விட்டது. கியூபா சர்வதேசிய வழியில் முன்பு நடைபோட்டது. உலகெங்கும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு உதவுகிற புதிய பாதையை தன் விடுதலைக்குப்பின் அது தேர்வு செய்தது; சர்வதேசியத்தின் அடிப்படையில், பிற நாடுகளில் புரட்சியை முன்னெடுக்கிற போராளியாக ஃபிடல் காஸ்ட்ரோ தன்னை நிரூபித்துக் கொண்டார். போர்ச்சுகிசிய காலணியாதிக்கத்தை எதிர்த்து ஆப்பிரிக்காவின் சின்னஞ்சிறிய நாடான கினி பிஸ்ஸாவின் விடுதலைப்போரை, 31 வயதேயான கபரா நடத்திக் கொண்டிருந்தார். ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவுவது என்று முடிவெடுத்த ஃபிடலின் கண்களில் பட்டது இந்த சின்னஞ்சிறிய நாடு. ஆயுதங்கள், தொழில்நுட்ப பயிற்சி, மருந்துகள் என உதவிகள் அனுப்பப்பட்டன. கியூபாவின் உதவியுடன் 1971-ல் போர் முடிவுக்கு வந்து விடுதலை பெற்றபோது, விடுதலை நாள் விழாவில் கேஸ்ட்ரோ பங்கேற்றார். அந்த மேடையில் அருகில் நின்றிருந்தார் அங்கோலாவின் போராளி அகஸ்டின் நேடோ. காலனியாதிக்கத்துக்கு எதிராக போராடும் எம்.பி.எல்.ஏ. விடுதலை இயக்கத்தின் முன்னணிப் போராளியான அகஸ்டினோ நேடோவின் கைகளைப் பிடித்து உயர்த்தி ‘இனி அடுத்த உதவி இவர்களுக்குத் தான்’ என அறிவித்தார் ஃபிடல் காஸ்ட்ரோ.

1975-ல் கிஸ்ஸிங்கர் என்ற மிகப்பெரிய சாணக்கியர் அமெரிக்காவின் செயலராக இருந்தார். மூன்றாம் உலக நாடுகளை ஆக்கிரமிப்பது; பலிக்கவில்லையென்றால் சி.ஐ.ஏ. சதியால் கவிழ்ப்பது என பேயாட்டம் ஆடினார். ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான அங்கோலாவில், இடது சாரித்தன்மை கொண்ட எம்.பி.எல்.ஏ. விடுதலை இயக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி விடாமல் செய்ய - உலக மக்களுக்குத் தெரியாமலே காய் நகர்த்தினார். யூனிட்டா - பழங்குடியின மக்களின் அமைப்பு. அது வெள்ளைக் கூலிப்படைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. எப்.என்.எல்.ஏ. - சி.ஐ.ஏ. வின் நேரடி கைக்கூலியான ஹோல்டன் ரொபார்ட்டோ என்பவனது தலைமையில் விடுதலைக்கு எதிராக இயங்கிய அமைப்பு. தென்னாப்பிரிக்காவின் கறுப்பினப் படைகளை முன்னகர்த்தி அங்கோலாவைக் கைப்பற்ற சி.ஐ.ஏ. சதித்திட்டம் போட்டுக் கொடுத்தது. வெள்ளை இனத்தால் ஒரு கறுப்பின நாடு கைப்பற்றப்பட்டது என்ற தோற்றம் வந்து விடாமல் மறைக்க இவ்வாறு தந்திரோயம் மேற்கொள்ளப்பட்டது.

தென்னாப்பிரிக்கப் படைகள் முன் செல்ல, அமெரிக்கப் படைகள் உடன்வர, யூனிட்டா தெற்கிலிருந்து தாக்குதல் செய்தது. மற்றொரு கூலிப்படையான எப்.என்.எல்.ஏ. சையர் என்ற நாட்டின் வழியாக வடக்கிலிருந்து தாக்குதல் நடத்தியது. இருபக்கமும் தாக்குதல் தொடுத்து, அங்கோலா தலைநகர் லுவாண்டா நோக்கி முன்னேறின. ஏற்கனவே விடுதலைப்போருக்கான உதவிகளை கியூபாவிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த எம்.பி.எல்.ஏ தலைவர் அகஸ்டினே நேடா இந்த நெருக்கடியான நேரத்தில் கியூப வீரரர்களை அனுப்பி உதவும்படி ஃபிடலைக் கேட்டுக் கொண்டார். ஏற்றுக் கொண்ட ஃபிடலுக்கு ராணுவ வீரர்களை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கடல்வழியாக அனுப்பினால் காலம் கடந்து விடும். வான்வழியாக இறக்க இராணுவ விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும். 80-மைல் தொலைவிலுள்ள ஜமாய்க்கா நாடு எரிபொருள் நிரப்ப ஒப்புக்கொண்டது. அதையும் தாண்டி தொலைவிலிருந்த கானா நாட்டின் பிரதமர் போரஸ் பன்ஹாமிடம் கேஸ்ட்ரோ பேசினார். கானா பிரதமர், தன் நாட்டில் கியூப விமானங்கள் எரிபொருள் நிரப்பிக்கொள்ளச் சம்மதித்தார். வேடிக்கையென்னவென்றால் போராஸ் பன்ஹாம் ஒருகாலத்தில் சி.ஐ.ஏ.வின் உறவுகளில் திளைத்தவர். தன் நாட்டில் நிகழ்த்தப்பட்ட நெருக்கடிகளையும் அங்கோலாவில் நிகழ்த்தப்போகும் சதிகளையும் சி.ஐ.ஏ.வின் உள்நோக்கங்களை அறிந்திருந்ததால் ஒப்புதல் அளித்தார். ஒரு வாரத்திற்குள்ளேயே இது சாதிக்கப்பட்டது.

அங்கோலா தலைநகர் லுவாண்டாவை நோக்கி கியூபா படைகளின் துணையுடன் எம்.பி.எல்.ஏ. முன்னேறிக் கொண்டிருந்த வேளையில், கேஸ்ட்ரோவின் சகோதரர் ராவுல்கேஸ்ட்ரோ ஆயுத உதவி கேட்டு ருசியாவுக்கு நேரில் சென்றார். ஏற்றுக் கொண்டு ருசியா உடனே நவீன ஆயுதங்களை வழங்கியது. எதிரி எந்த மொழியில் பேசினானோ, அதையே கூடுதல் வல்லமை மொழியில் பேசி வெற்றி சாதிக்கப்பட்டது. கியூபா, ருசியா ஆதரவு நாடான அங்கோலாவை வீழ்த்த வேண்டுமென்ற கிஸ்ஸிங்கரின் கனவு நொறுங்கியது. ஃபிடல்காஸ்ட்ரோ 35 ஆயிரம் படை வீரர்களை அங்கோலா விடுதலைப் போராட்டத்துக்கு துணை செய்ய இறக்கினார். அமெரிக்காவின் நேரடித் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ருசியா வழங்கிய நவீன ஆயுதங்களையும் அங்கோலாவின் எம்பிஎல்ஏவுக்கு வழங்கினார். அங்கோலாவில் இறக்கப்பட்ட படைகளை கியூபாவிலிருந்தபடியே வழிநடத்தினார். 13 ஆண்டுகள் போரின் பின், விடுதலையை எம்பிஎல்ஏவிடம் கையளித்து உறுதிப்படுத்திய பின் நாடு திரும்பினர் கியூப வீரர்கள்.

படையினரை அங்கோலாவில் இறக்கியபோது - பெட்ரோல் போன்ற கனிம வளங்களைச் சுரண்டுவதற்கான இராணுவத்தலையீடு இது என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஃபிடல்காஸ்ட்ரோ சொன்னார். “பெட்ரோல், தாமிரம், நிலக்கரி போன்ற கனிம வளங்களைச் சுரண்டுவது உமக்குக் கைவந்தகலை. அதுவல்ல எமது நோக்கம். எமக்கு ஓர் அடிப்படையான சர்வதேசக் கடமை உள்ளது” (ஆதாரம்: Cuba’s Role in Africa - Author : Saul Landou, Progreso weekly, 4th, April, 2002) சர்வதேசக் கடமையை அன்றைய கியூபா நிறைவு செய்த இந்த வரலாற்று நிகழ்வை தலைகீழாய் மாற்றி, கியூபா அங்கோலாவை ஆக்கிரமித்திருந்தது என்கிறார் அ.மார்க்ஸ். இது அவரது மற்ற எழுத்துக்களின் மீதும் சந்தேகம் கொள்ளச் செய்கிறது. இலங்கைக்கு ஆதரவளித்த கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளின் நிலைப்பாட்டை விமரிசித்து கடிதம் எழுதினார் அமரந்தா. அவருடைய குரல் கியூபாவின் மனச்சாட்சியை உலுக்கியதோ இல்லையோ, அங்குள்ள ரெய்னூர் போன்ற மார்க்சியர்களை யோசிக்க வைத்திருக்கிறது. “நமது ஆயுதப் போராளி நண்பர் (கியூபா) சோர்வுற்றுப் போய் விட்டார்” என்று கேலி செய்து விட்டு, “தற்போது நடைபெறுகின்ற பூர்சுவா ஜனநாயகப் போராட்டங்களினால் சாதகமான விளைவுகளைச் சந்தித்து வரும் பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க நாடுகளின் கதகப்பான நட்புறவில் இளைப்பாற முயல்கிறார். ஆனால் ஆயுதப் போராட்டமென்னவோ கைக்கெட்டிய தூரத்தில் தான் இருக்கிறது. காரணம் பெரும்பான்மையான மக்கள் சனநாயகத்தையும் அமைதியையும் நல்வாழ்வையும் விரும்புவதால் மட்டுமே பூர்சுவாக்களோ, அமெரிக்க ஏகாதிபத்தியமோ ஒரு போதும் மாறப்போவதில்லை” என கியூபாவையும் இலங்கைக்குத் துணை போன நாடுகளையும் விமர்சிக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் சோசலிசக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள - சனநாயக சோசலிசக் கண்ணோட்டம் எனும் அமைப்பின் உறுப்பினர் க்ரீஸ்-ஸ்லீ - இதற்கு சரியான எதிர்வினையாற்றியுள்ளார். “கியூபாவுக்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவாளன் என்றளவில் நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால் இதில் ஆச்சரியமடையவில்லை. இயன்றளவு பல நாடுகளுடன் நட்புறவு கொள்ள எண்ணும் கியூபா இந்நாடுகளின் அரசின் தன்மையைக் கணக்கில் கொள்வதில்லை........... ஆனால் இந்நாடுகள் தமது மக்களை ஒடுக்குவதைக் கூட கியூபா விமரிசிக்காமல் இருப்பதுதான் இதன் மறுபக்கம்” என்று விளாசியிருக்கிறார். அமரந்தா போன்றவர்கள் கியூபாவை விமரிசனப்படுத்திக் கொண்டே, அங்குள்ள ரெய்னூர் போன்ற மார்க்சியர்களோடு மட்டுமே உறவைப் பேணிவருகிறார்கள். கியூபா ஆட்சியாளர்களோடு அல்ல. இது போன்ற தொடர்ச்சியான செயல்பாடுகள் பற்றியெல்லாம் அ.மார்க்ஸ் கவலை கொள்ள மாட்டார். அவருக்குக் குறி தாக்குதல் முனை எங்கே இருக்கிறது என்பது மட்டுமே. கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.

‘பா.செயப்பிரகாசம் போன்ற கோமாளிகள் முதல் விடுதலை ராசேந்திரன் போன்ற போராளி ‘கம்’ அறிவு ஜீவிகள் வரை’- என்று தரக்குறைவான வார்த்தைகளை நக்கலாய்க் கையாளுகிறபோது, தரக்குறைவை தன் மீது தானே பூசிக் கொள்கிறார் என்று தோன்றவில்லையா? ‘தன் வழக்கமான மூடத்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார்’ என்று யமுனா ராசேந்திரனைச் சாடுகிறபோது - (இதில் இந்த வார்த்தையை நான் மிகவும் கவனமாகவே பிரயோகிக்கிறேன் என்ற விளக்கம் வேறு) நீங்களும் தானே என்று திருப்பினால்.................. வேண்டாம், நாங்களும் உங்களைப் போல் ஆகமாட்டோம். ஒவ்வொருவர் மீதும் தடித்த வார்த்தைகளைப் பிரயோகிக்கிறபோது, எதிர்கால உரையாடலுக்கான எல்லாக்கதவுகளையும் இறுக மூடிவிடுகிறார்கள் என்று தானே பொருள். உரிமைகளுக்காக நின்ற ஒருவரை – கதவுகளை இறுக மூடிவிட்டு அறைக்குள் போட்டுத் தாக்கிய இராமேஸ்வரம் புகழ் ஷோபாசக்தி கருத்துரிமை, சனநாயகத்திற்கான இன்னொரு சாட்சி. சிவில் சமூக கலாச்சாரத்தின் வேரையே பொசுக்கிய கொடுங்கோலர்கள் புலித்தலைமைகள் என்று பாய்கிற ஷோபாசக்தி சொந்தவாழ்வில் கடைப்பிடித்த சனநாயகம் தமிழக மக்களின் மூக்கில் நாறுகிறது.

‘செங்கடல்’ என்ற பெயரில் ஈழ அகதிகள் பற்றி விவரணப்படம் எடுக்கிறார் லீனா மணிமேகலை. படப்பிடிப்பு ராமேசுவரத்தில்; கதை வசனம் ஷோபாசக்தி. பத்து நாட்களாக யூனிடடில் பணியாற்றிய உதவியாளர்களுக்கும் ஒளிப்பதிவாளர் தீபக்குக்கும் ஊதியம் கொடுக்கவில்லை. செலவுக்குக் காசில்லாமல் தவித்தார்கள். விரக்தியடைந்த உதவியாளர்கள் “புட்டேஜ்” எனப்படும் படச் சுருளை எடுத்துக்கொண்டு சென்று விட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒளிப்பதிவாளர் தீபக் தான் பின்னணி எனக்கருதி, தீபக்கை அறைக்குள் அடைத்து அடித்துத் துவைத்திருக்கிறார்கள் ஷோபாசக்தியும் இன்னும் ஆறேழு பேரும். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மியளவும் மனித உரிமைகளுக்கோ, சனநாயக நெறிகளுக்கோ இடம் தராதவர்கள் புலிகள் என்று, புலிகளுக்குப் பாசிசப் பட்டம் கட்டுகிற இராமேசுவரம் புகழ் ஷோபாசக்தி எனும் சனநாயக குமாரன் இம்மியளவும் சனநாயகவாதியாக இல்லை என நிரூபித்திருக்கிறார். சுதந்திரம், சனநாயகம், சமத்துவம் என்ற வாசகங்கள் எங்கிருந்து பெறப்பட்டதோ, அந்த தேசத்தில் புகலிடம் அடைந்தவர் - அந்த வாசகத்துள் புகலிடம் அடையவில்லை. அவர் நையப்புடைத்தது தீபக் - என்ற ஒளிப்பதிவாளரை அல்ல இந்த வாசகங்களை.

போராளிகள் சனநாயகத்திற்காக, மனித உரிமைகளுக்காக நின்றார்களோ இல்லையோ, அவைகளை மீட்டெடுக்கும் கடப்பாடும் சாத்தியமும் உடையவர்கள். போர்க்குணத்திலிருந்து கழன்று விட்ட உதிரிகளுக்கு சனநாயகத்தோடு எந்த சங்காத்தமும் இல்லை. ஈழப்பிரச்சனையில் கருத்துச் சொல்ல எவருக்கும் உரிமை கிடையாதெனவும், தாங்கள் மட்டுமே ஈழத்துக்கான எல்லா வெளிச்சத்தையும் சுமந்து வருவதாகவும் எண்ணுகிற போக்கு உரையாடல் களத்துக்குப் பொருந்தாது. தான் மட்டுமே என்ற போக்கு ஈழப்பிரச்சனையில் மட்டுமல்ல, அனைத்துப் பிரச்சனையிலும் விவாதக் களத்தை அடைத்து விடும். இங்கு இதுபோன்ற விவாதங்களில் அவசியப்படுவது, யார் என்ன கருத்து வைத்தார்களோ அதற்கான பதில். அதனூடாக நம்முடைய கருத்துக்களை, சிந்தித்தவைகளைக் கூடுதலாய் வழங்குதல். எதிர்வினையாற்றுவதற்கான திறன் இது. ஆத்திரப்படுதலும், அவசரமும் அல்ல. நிதானம் தவறவும், நிட்டூரம் பண்ணவும் இதுவே வழி அமைகிறது. அ.மார்க்ஸ் அவர்களே, உங்களுடைய மொழியிலேயே பேசுகிறேன் “அபத்தமாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்”.

நன்றி: கீற்று - 20 ஜனவரி 2010

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்