இவர்களை மன்னிக்காதீர்


'ஏலி, ஏலி, லாமா சபக்தானி!

இறைவனே, இறைவனே என்னை ஏன் கைவிட்டீர்?'

உயரத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கத்தினார். ராஜவிசுவாசம், உருவ வழிபாடுகளில் அடைக்கலமாகியிருந்தவர்கள் அவரை 'இவன் ஏன் கத்துகிறான்' என்று ஏறிட்டுப் பார்த்தனர். 'இந்த அறிவிலி யாரிடம் முறையிடுகிறானோ, அந்த இறைவன் இதியாஸ் இவனைக் காப்பாற்றட்டும்' என்றனர்.

'இறைவனே இறைவனே, என்னை ஏன் கைவிட்டீர்'

மறுபடியும் உரத்த குரலில் கத்தி ஏசு உயிரைவிட்டார் (மத்தேயு 27: வசனம் 46,47).

நண்பகல் 12-மணிக்கு சிலுவையிலறையப்பட்ட இயேசு, பிற்பகல் 3 மணிக்கு சிலுவையில் ஏற்றப்பட்டபோது உதிர்த்த வாசகம் இது.

சரியாக 1998 ஆண்டுகளுக்குப் பின் இதேபோல் முறையீடு, அனாதியான குரலில் ஒரு உயரதிகாரியின் உதடுகளிலிருந்து விழுந்தது.
’Gulpa, mea Gulpa' 
'பாவி, நான் பெரும்பாவி'
உதிர்த்த உதடுகள் – சதாகாலமும் வாயில் புகை பிடிக்கும் 'குழாயை' (pipe) ஏந்திப் பிடித்திருந்தன.

விவிலியத்திலுள்ள இவ்வாசகத்தை உதிர்த்தவர் – ராஜிவ்காந்தி பிரதமராயிருந்தபோது இலங்கைக்கான தூதுவரும், பின்னாளில் இந்திய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்தவருமான ஜே.என்.தீட்சித் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர் 1998-ல் எழுதிய இந்திய-இலங்கை ஒப்பந்தம் (Assignment Colombo) என்ற நூலில் வெளிப்படும் வார்த்தைகள் இவை.

'ஜே.ஆர் ஜெயவர்த்தனா எங்களை ஏமாற்றிவிட்டார். தமிழ் மக்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்'.

இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தெரிவித்தபோது அது புத்தகத்தின் கெட்டியான தாள்களுக்குள் இறுகிக் கொண்டது. தமிழ் மக்களின் காதுகளில் சேர்க்கப்படவில்லை.

இயேசுவின் முறையீடு இறைவனிடம், தீட்சித்தின் புலம்பல் தமிழ் மக்களிடம். இயேசுவின் கதறல், அராபிய மொழிக்கும் ஹீப்ரு மொழிக்கும் முன்னரிருந்த 'அராமலிக்' என்னும் மொழியிலிருந்து, விவிலியத்தில் பதியப்பட்டது. அராமலிக் - மக்கள் மொழி.

தீட்சித்தின் ஒப்பாரி வார்த்தைகள் லத்தீன் மொழியிலுள்ளவை. லத்தீனிலிருந்து பின்னர் விவிலியத்தினுள் கோர்க்கப்பட்டது.

'சொன்னால் சிங்களராகிய நீங்கள் வருத்தப்படுவீர்கள். ராஜீவ்-ஜெயவர்த்தனா கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் முதல் உடைப்பை (பின்னடைவை) உண்டுபண்ணியவர் ஜெயவர்த்தனா. சிறந்த ராஜதந்திரியான ஜே.ஆர் எங்களை ஏமாற்றிவிட்டார். ஒப்பந்தத்தில் வரையப்பட்ட தமிழ்மக்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. நான் தமிழர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.'

(Tamils Hope not met – J.N. Dixit. The Sunday Leader, Sep. 4, 1994  நாளிதழுக்கு அளித்த நேர்காணல் Assignment Colombo – நூலில் இணைக்கப்பட்டுள்ளது) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், போராளிகள் இனி கைது செய்யப்படமாட்டார்கள்,  கைதானவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இருக்கிறது. வெளிப்படையாக ஜே.ஆர் செய்தியாளர்களிடமும் தெரிவித்தார்.

பருத்தித்துறைக்கு அருகில் படகில் வந்த புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 போராளிகளை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். புலேந்திரன், குமரப்பா இருவரும் மாவட்டத் தலைவர்கள். 'அவர்கள் கடத்தல்காரர்கள். ஒப்பந்தத்துக்குள் வரமாட்டார்கள்' என்று ஜெயவர்த்தனா அரசுத் தொலைக்காட்சியில் கூறினார். இந்தப் பொய்யுரைத்த மறுநாள் 'அவர்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு திரும்பும்போது பிடிபட்டார்கள்' என்றார்.

திருகோணமலையில் நடைபெற்ற சிங்கள மக்களின் கொலை தொடர்பாக விசாரணை நடத்த அவர்களைக் கொழும்பு கொண்டுவரும்படி பணித்தார். இந்திய அமைதிப்படையின் ஜெனரல் ரோட்ரிக்ஸ் அதை தடுக்க முயன்றும் பலனளிக்காமல் தோல்வியில் முடிந்தது. டெல்லியிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, அவரை அவ்வாறு செய்ய அழுத்தம் கொடுத்தது. இந்திய அமைதிப்படை இலங்கை ராணுவக் கூட்டுச் சதியை எதிர்த்து 17 போராளிகளும் சயனைட் அருந்தி வீரமரணம் எய்தினார்கள்.


கொழும்பிலிருந்து வெளியாகும் The Sunday Leader நாளிதழுக்குப் பேசும் போது, தீட்சித் தரும் ஒப்புதல் வாக்குமூலம்:

'உங்கள் அரசுடன் மோதி நான் சற்றே அவப்பெயர் எடுத்திருந்தாலும் ஒப்புக்கொண்ட உறுதிமொழிகளை முதலில் உடைத்து சிங்களராகிய நீங்கள்தாம்'

1948 முதல் ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைவர்கள், தமிழினத் தலைமையோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தியதில்லை என்பது முந்தைய வரலாறு. உடைத்திருக்கிறார்கள். கிழித்து வீசியிருக்கிறார்கள். இம்முறை சிங்களர் கிழித்து எறிந்தது தமிழ் அரசியல் தலைமைகளோடு செய்திருந்ததை அல்ல. இந்தியா- இலங்கை என்ற இரு நாட்டின் தலைவர்களும் கைச்சாத்திட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை!

'உண்மையைச் சொன்னால் சிங்களராகிய நீங்கள் என்னைக் கல்லெறிந்து விரட்டிவிடுவீர்கள். ஒப்பந்தத்திற்கு முதல் பின்னடைவை உண்டாக்கியது நீங்கள் தாம்'

தீட்சித் என்ற எமகாதகப் பேர்வழி, அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொள்வது இருக்கட்டும். அவ்வாறு சொல்வதற்குக் காரணமிருக்கிறது. 'நான் அது பற்றி அரைநாள் பேசமுடியும். தமிழ்மொழிக்கு உரிய தகுதிகளை அளிக்க அரசு தயங்கியது. தமிழர்களுக்கு நிதி உட்பட அதிகாரப் பகிர்வை அளிப்பதில் தாமதமும், உருப்படியில்லாத ஆலோசனையும் நடத்திக் கொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளும் மக்களும் 1983-க்கு முன்பிருந்த நிலைமைகளில் ஓரடி முன்னேற்றம் கூட இல்லை என நினைத்தார்கள். ஆனால் இதனை இன்னும் மோசமடையச் செய்த ஒரு சம்பவம் 17 போராளிகளை கடற்பரப்பில் கைது செய்து அவர்களை கொழும்புக்குக் கொண்டுவருமாறு செய்யப்பட்ட முயற்சி.

இதன் பின்னணியில் முழுவீச்சாய் செயல்பட்டார் அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி. போராளிகளை கொழும்புக்கு ஏற்றிச் செல்வது விபரீதமான விளைவுகளை உருவாக்கும் என பிரதமர் ராஜிவிடம் எடுத்துவைத்தேன். 'நான் ஜே.ஆருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்' என்றார். நான் இருமுறை பேசிய போதும் அவ்வாறே ராஜீவ் பதில் தந்தார். ஆனால் அதுலத் முதலியின் விருப்பம் வேறொன்றாக இருந்தது. எனக்குத் தகவல் தராமலே கைது செய்யப்பட்ட போராளிகள் கொழும்பு கொண்டுபோக விமானத்தில் ஏற்றப்பட்டார்கள். வேறு வழியில்லை. 17 பேரும் சயனைட் சாப்பிட்டு உயிர் துறந்தார்கள். மோசமான துன்பியல் இது. இந்தக் கொடூரமான நிகழ்வு, புலிகளின் தலைமையை இந்தியாவுக்கு எதிராய் ஆயுதம் ஏந்த வைத்தது. அவர்களின் கோபம் இயற்கையானது. இது ஒரு நம்பிக்கைத் துரோகம். போராளிகளை விடுதலை செய்யும் முயற்சியில் சிறிதும் உதவவில்லை என்று விடுதலைப் புலிகள் என் மீது குற்றம் சுமத்தினார்கள். அப்போது நான் டெல்லியில் இருந்தேன். உடனே கொழும்பு சென்று நடந்த மோசமான நிகழ்வின் மீது மதிப்பீடுகளைச் செய்ய ஜே.ஆரிடம் வலியுறுத்தினேன். உண்மையில் ஒப்பந்தம் குறித்து நேர்மையான, துணிச்சலான அணுகுமுறையை, நடவடிக்கையை ஜே.ஆர் மேற்கொண்டிருக்க வேண்டும்'

ஆனால் ஜே.ஆர் வேறொரு சூழ்ச்சித் திட்டத்தில் செயல்பட்டிருந்தார். இந்தியப் படையையும் விடுதலைப் புலிகளையும் யுத்தத்துக்குள் இழுத்துவிட்டு, விடுதலைப் புலிகளது இடுப்பை முறிப்பது நோக்கமாக இருந்தது. இந்திய ஒப்பந்தத்தை அவரது அமைச்சரவை நண்பர்களே ஏற்கவில்லை. காமினி திசநாயக்க, லலித் அத்துலத் முதலி, பிரதமர் பிரேமதாஸா உள்ளிட்டோர் ஒப்பந்தம் அரை வேக்காடு என்று கருதினார்கள்.

'இப்போது நீங்கள் என்னை எதிர்க்கிறீர்கள், பின்னால், நீங்களே என்னைப் பாராட்டப் போகிறீர்கள்' என்றார் ஜெயவர்த்தனா.

எதிர்த்தவர்களுக்கும், சிங்கள மக்களுக்கும் உரைத்த சூளுரையை ஜெயவர்த்தனா நிரூபித்த தொடக்கப் புள்ளியாக அந்நிகழ்வு அமைந்தது.

புலிகளின் யுத்தம், நம்பிக்கைத் துரோகமிழைத்த இந்தியாவுக்கு எதிராக நடந்தது. எது நமக்கு வேண்டுமென ஜெயவர்த்தனா எதிர்பார்த்தாரோ, எந்தச் சிந்தனாவழியில் பேரினவாதத்துக்குள் வழிநடத்தப்பெற்ற சிங்களர் எதிர்பார்த்திருந்தார்களோ அது நன்றாக நடந்தது.
அரிசியின்னு அள்ளிப்பாக்க நாதி இல்லே
உமின்னு ஊதிப்பாக்க கதி இல்லே
என்ற துன்பியல் நிலை இன்றைய ஈழத் தமிழர்களை முற்றுகையிட்டுள்ளது. துன்ப முற்றுகைக்குள் தள்ளியதற்கான பின்னணியில் ஜே.என்.தீட்சித் போன்றோர் முக்கிய காரணிகளாக இருந்தார்கள்.

சரி,
மதுரையில அடிவாங்கிட்டு
மானாமதுரையில போயி மீசை படபடன்னுச்சாம்
என்கிற கதையாக அப்போதைய நெருக்குவாரமான நிலையை உள்வாங்கி சரியான எதிர்வினை ஆற்றத் தவறிய ஜே.என். தீட்சித், ஓய்வுபெற்ற பிறகு பத்தாண்டுகள் கழித்து வெளிப்படுத்தினார். தீட்சித் இந்திய 'மதியூகத் தலைமைகளின்' ஒரு குறியீடு.

'இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அச்சாணியாக இருக்கும் அவர்களின் பாதுகாப்பை ஓரளவேனும் உறுதிசெய்யும் அரசமைப்பின் 13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை'

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்திய நாடாளுமன்ற மேலவையில் அறிவித்த நாள் 23.8.2013. ஆனாலும் 13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்திட இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்கிறார்.

செப்டம்பரில் வடக்கு மாகாணத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இப்போது ராசபக்சே வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் 'ஒருக்காலும் மாகாணசபைகளுக்கு காணி, காவல் அதிகாரம் அளிக்கப்பட்டாது. அது பிரிவினைக்கு இட்டுச் செல்லும்'

நவம்பரில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெறவும் ராசபக்சேக்கள் காத்திருக்கிறார்கள். நவி பிள்ளையும் ஒரு சுற்று வந்து போயிருக்கிறார்.

உலகெங்குமுள்ள தமிழர்களிடமிருந்து ஒற்றைக்குரல் எழுகிறது.

''இந்தியாவே,

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்காதே. காமன்வெல்த் நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கக் குரல்கொடு"

இந்தக்கோரிகையை முன்வைத்து இங்கொரு தமிழ் மகன் – தோழர் தியாகு உயிர் துறக்கும் நாள்வரை பட்டினிப் போராட்டம் தொடங்கியிருக்கிறார்.

வித்தியாசமாய் ஒரு குரல் தமிழ்ப் பிரதேசத்தின் முதல்வர்(!) விக்கினேஸ்வரனிடமிருந்து கேட்கிறது

'இந்தியப் பிரதமர் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதை வரவேற்கிறேன். பங்கேற்று இலங்கை மீதான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.'

ஜெயவர்த்தனாவின் பேரப்பிள்ளைகள் தாம் இந்த ராஜபக்சேக்கள்.

தீட்சித்தின் பேரப்பிள்ளைகள்தாம் இன்றைய இந்தியத் தலைமைகள்.

இவர்களை மன்னிக்காதீர்கள்.

நன்றி: பொங்குதமிழ் - 10 மார்ச் 2013

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌