ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு - கும்பல் கலாச்சாரமும் அரசியல் தலைமைகளும்

தமிழ்நாட்டு மனோவியல் விநோதமானது. ‘வீரயுகவழிபாடு’ – இன்னும் முற்றுப் பெறவில்லை என தலைமேல் சுமந்து போற்றி வருகிறது. வீரவான், மாவீரன், சகல நோய் நிவாரணன், சாதனையாளன் – போன்ற பிம்பங்களைக் கட்டமைத்தவை புராண, இதிகாசங்கள் மட்டுமல்ல, புறநானூற்றுப் புலவன் முதல் இன்றைய வீரம் போற்றிகள் வரை கட்டமைத்தார்கள். புறநானூற்றுக் காலத்தில் இருந்த வீரயுகம் முடிவுபெற்று விட்டபோதும், வீரவழிபாடு மனோபாவம் திராவிடக் கட்சிகளால் மீட்டமைக்கப்பட்டது.


ஒன்றைப் பிம்ப உருவாக்கம் – இவர்களின் கைவந்த கலை. அரசியல், கலை, குறிப்பாய் இன்றைய திரைப்படக்கலை, ஊடகங்களினூடாக இந்த ஒற்றைப்பிம்பம் உருவாக்கப்படுகிறது. இந்த ஒற்றைப் பிம்ப உருவாக்கத்திலிருந்து அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்றவர்கள் உதித்தார்கள்.

“நமக்காக தலைவன் சிந்திப்பான்; தலைவன் செயல்படுவான்; தலைவன் வழி நட்த்துவான். அவன் வழிநடந்தால் போதும்” - என்கிற சுயசிந்தனையற்ற, சுயமான செயல்பாடுகளிலில்லாத கும்பலை இது உருவாக்குகிறது; ‘தொண்டர்கள், பின்பற்றாளர்கள்’ என இவர்களுக்கு மரியாதையான பெயர்கள் உண்டு.

சமகால தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தையும் கணக்கிட்டாலும் தொண்டர்கள் மக்களில் நூறில் 5 சதவீதம் இருப்பார்கள். சில இடங்களில் சில நேரங்களில் இந்த அளவு ஆயிரத்துக்கு 5 சதவீதம் கூட தேறாது. சிறு எண்ணிக்கையிலான இவர்கள், பெரும் தொகையில் உள்ள மக்களின் தொடர்பாளர்களாக, பரப்புரைரையாளராக, மக்களை ஒருங்கிணைப்புச் செய்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஏற்பாடு செய்து நடத்தும் பேரணி பொதுக்கூட்டங்களையும், தேர்தலின் போது வாக்குச் சாவடிக்கு வருகிற மக்களையும் ஒப்பீட்டளவில் நோக்கினால், இந்த யதார்த்தம் புலனாகும். இவர்களும் இவர்களால் திரட்டப் படுபவர்களும் சிறுபகுதியினர் என்பது புரியவரும்.

கட்சியினர் யாது செய்கிறார்கள்?

இலட்சியத்தின் இடத்தில்- தலைவன்.

கொள்கைகளின் இடத்தில் – தலைவன்

செயல்பாடுகளின் இடத்தில் – தலைவன்

அனைத்துக்கும் பதிலீடாக தலைவனை நிறுத்தி, கட்சியை முழுமையாக தலைவனாக மாற்றியுள்ளார்கள். தலைவனே சனநாயகம், தலைவனே நீதி, தலைவனே எல்லாமும்! அகில இந்தியக் கட்சிகளானாலும் மாநிலக் கட்சிகளானாலும், தமிழ்த் தேசிய இயக்கங்களானாலும் எதுவும் விதி விலக்கல்ல.

தம்போல் தலைமையைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் முறையை கூட்டத்துக்கும் ஊட்டி, கூட்டத்தின் சுயசிந்திப்பை முடக்குகிறார்கள். ஒவ்வொருவருள்ளும் செயல்படும் சுயசிந்திப்பை முடக்குவதன்மூலம், கூட்டுப் பொறுப்பான சமூக சிந்தனை மூட்டை கட்டப் படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கும் மற்ற மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கை எத்தனை ஆண்டுகள் தாமதப்படுத்த முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சான்று. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்திலும், இப்போதுள்ள ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் அ.தி.மு.க. அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் மேல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் வழக்கு போட்டது.

“இந்த வழக்கு முடியப் போவதில்லை. வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள் நான் இறந்து போய்விடுவேன்”

அவர் சொன்னது சரியாக இருந்தது. சொன்னது போல் செத்தும் போய்விட்டார். சாகிற காலம் வரை வழக்கை இழுத்தடிக்கும் திறன் கொண்டவர்கள் இன்றைய கழகங்களின் தலைமைகள்.

ஆனாலும் 18 ஆண்டுகளுக்குள் ஒரு தீர்ப்பு வந்துவிட்டது.

நீதிமன்றத் தீர்ப்புவந்த பின்னரும் கும்பல் கலாச்சார உளவியல் அதை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. அம்மாவின் தண்டனை கிடைக்க காரணகர்த்தா கருணாநிதிதான் என கருணாநிதி உருவப் பொம்மை எரிப்பு, தி.மு.க. அலுவலகங்கள் மேல் தாக்குதல் என எதிர்வினை செய்கிறார்கள். நாளைக்கு கருணாநிதிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் இவ்வகைத் தீர்ப்பு வரும், அப்போது வானவேடிக்கை நடத்திக் கொண்டாடுவோர்களோ? செய்வார்கள் என சிலர் பேசியதை, காதுபடக் கேட்க நேர்ந்தது. ஊழல் இரத்தம் மட்டுமே இரு கழகங்களிடம் ஓடுகிறது. அடுத்து தி.மு.க.வுக்கு ’கில்லட்டின்’ தயாராகிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் ”பட்டாசு வெடித்துக் கொண்டாடாதீர்” என பம்மிக் கொண்டு வேண்டுகோள் விடுக்கிறார் கருணாநிதி தன் கண்மணிகளுக்கு.

தீர்ப்பு வழங்கப்பட்ட செப்டம்பர் 27-ம் அடுத்த நாளும் தமிழகம் அ.இ.அ.தி.மு.க.வினரின் வன்முறையின் விளையாட்டுத் திடலாக மாறியது. “ தமிழகமெங்கும் அ.தி.மு.கவினர் வன்முறை” என இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியட்டது. புதிய தலைமுறைத் தொலைக்காட்சி “ வாழ்வுப் பயம் மக்களை தொற்றிக் கொண்டது. பணியிடங்களிலிருந்து வீடு திரும்ப முடியவில்லை. எங்கும் பயணிக்க முடியவில்லை.” என ஒளி பரப்பிற்று.


“அமெரிக்கா, சப்பான் போன்ற நாடுகளில் ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்கள் சிலர் ஊழல், சதி, கொலை வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளனர். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நாடும் மக்களும் அமைதியாக இருந்தனர்” என்று மக்கள் கருத்து அறிந்து அவ்வப்போது வெளிப்படுத்தியது.

இது போன்ற தீர்ப்புகள் மற்ற மாநிலங்களிலும் வழங்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி. ரஷீத் மசூத் ஊழல் குற்றச் சாட்டில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பதவி இழந்தார். மற்றொரு ஊழல் வழக்கில் பீகாரின் ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் லல்லுபிரசாத் யாதவ், ஐக்கிய சனதா தளக்கட்சியின் ஜகதீஷ் சர்மா ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழந்தனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக முதலில் பதவி இழந்த நாடாளுமன்ற உறுப்பினர் தி.மு.க.வைச் சேர்ந்த செல்வகணபதி. அதற்கு முன்னரே கர்நாடகத்தில் காங். அமைச்சராக இருந்த ஜனாதன ரெட்டி சுரங்க ஊழலில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டார். இதற்கு முன்னரான எவர் பதவியிழப்பும், சிறையிலடைப்பும் ஜெயலலிதா தீர்ப்பின் காட்சிகளை அரங்கேற்றியதில்லை.

வரலாறு பலப்பல விடுதலைப் போராட்டங்களைக் கண்டுள்ளது. ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சிகள் நிகழ்ந்தன. குறிப்பிட்ட கட்சி ஆட்சியின் அராஜகத்தை கண்டித்து மக்கள் திரள் போராட்டங்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன. வரலாறு கண்டிராத வேடிக்கையாக – ஊழல்குற்றவாளி என தீர்ப்பு தந்த நீதிமன்றத்துக்கு எதிராக, மிகப்பெரிய போர்க்களம் காணுவது இதுதான் முதல்முறை.

டான்சி ஊழல் வழக்கில் மாட்டுப்பட்டு தண்டனை பெற்று 2001-ல் முதலமைச்சர் பதவியை ஜெ. இழந்த போது - அந்நாட்களில் அ.தி.மு.க.வினர் ஆடிய வெறியாட்டத்தில் தர்மபுரி பஸ் எரிப்பில் 3 மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

இவ்விதமாக தமக்கு ஆதரவான காட்சிகள் அரங்கேறுவதை ஜெயலலிதா மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளின் தலைமைகளும் விரும்பவே செய்கிறார்கள்.

இரு நாட்களும் காவல்துறை, அரசு இயந்திரம், சட்டம் ஒழுங்கு இயங்கியதா? அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டபோது காவல்துறை தடியும் எடுக்கவில்லை; துப்பாக்கியும் தூக்கவில்லை. அமைதி நிலவிய ஓரிடம் என்றால் அது காவல் நிலையம் தான்.

திலீபன் நினைவைப் போற்ற சென்னை கோயம்பேடு அருகில் தனியார் இடத்தில் 26.09.2014 அன்று இருபது பேர் அமைதியாக உண்ணாநிலை மேற்கொண்டிருந்தனர். அவ்விடத்துக்கு பொதுமக்கள் வராமல் செய்யவும், அவர்கள் கண்ணில் படாமல் மறைக்கவும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் முற்றுகையிட்டு பதட்டத்தை உண்டாக்கினர். ஆனால் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில், அதே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை ஓடவிடாமல் ஆக்கியும், கோயம்பேடு வணிகவளாகத்தை மூடச் செய்தும் அ.தி.மு.க.வினர் வெறியாட்டம் போட்டபோது, எந்தப் பதற்றமும் கொள்ளவில்லை சென்னை காவல்துறை.

வன்முறைக்குத் துணை போவது என்பது தவிர அதற்கு வேறு பொருள் கூற இயலாது.

நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டோர் நால்வர் மட்டுமே! கட்சிக்காரர்கள் ஏன் கொதித் தெழுந்தார்கள்? ஆளும்கட்சித் தலைமைகள் மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளின் தொண்டர்களும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏதோ ஒரு வகையில் சம்பாத்தியம் செய்தவர்கள். அதற்கு ஆசிவழங்கும் தலைமையை இழக்க அவர்கள் ஒப்பவில்லை. ஆளும் கட்சியில் இருப்பவர்களும், மற்ற அரசியல் கட்சிகளில் இயங்குவோரும், இதில் ஏதோ ஒரு கண்ணியில் இணைக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

பெண்கள் மாரடித்து அழுதல், அமைச்சர்கள் தலையில் அடித்துக் கொண்டு அழுவது, அமைச்சர்களான கோகுல் இந்திரா, வளர்மதி போன்றவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதல் போன்றவை வெறும் ஒப்புக்கு அல்ல; தலைமைக்கு தங்கள் விசுவாசத்தை ஒப்புவித்து, தொடர்ந்து தம் சுய சம்பாத்தியம் முடக்கப் படாமல் நீட்டிப்பதற்கு மட்டுமே. இதன் மூலம் நீதிக்கு எதிரான உணர்வையும் அம்மாவுக்கு அனுதாபத்தையும் ஏற்படுத்தும் கருத்துருவாக்க முயற்சியில் முழுமூச்சாக ஈடுபடுகின்றனர். கும்பல் கலாச்சாரத்தில் இந்த முனைப்புகள் இதுவரை கண்டிராத ஒரு புதிய கூறு. மீனவர் அமைப்புகள், வணிகர் சங்கத்தினர் (ஜெயலலிதாவுக்கு ஆதரவான விக்கிரம சிங்கராஜா தலைமையிலான சங்கம்), அ.தி.மு.க.வுக்கு ஆதரவான உழவர் உழைப்பாளர் கட்சி (விவசாயிகள் சங்கம்), திரையுலக அமைப்புக்கள் போன்றவைகளால் ஆங்காங்கு உண்ணாநோன்பு, கடையடைப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

நண்பர் ஒருவர் முன் யூகித்து தெளிவாகச் சொன்னார்: தீர்ப்பு சாதமாக வந்தாலும் எதிராக வந்தாலும் ஜெயலலிதா தனக்கான நிகழ்ச்சி நிரலாக மாற்றம் செய்து கொள்வார் என்பது நண்பர் கருத்து. அது வெற்றிகரமாக இப்போது நடைபெற்று வருகிறது. எத்தனை நல்ல நல்ல சமூக நலத் திட்டங்களைச் செய்துள்ளார் அம்மா. அவர் மீது வேண்டுமென்று பழி சுமத்தி கொடுமையாகத் தண்டிக்கச் செய்திவிட்டார் கருணாநிதி என வெறுப்பையும், ஜெயலலிதா மேல் அனுதாபத்தையும் உருவாக்கும் முயற்சி நடைபெறுகிறது. மட்டுமல்ல, நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகாவின் தீர்ப்பாக மாற்றிக் காட்ட இவர்கள் தயங்கவில்லை. காவிரிநதி நீர்த் தீர்ப்பு ஆணையை நடுவணரசின் கெஜட்டில் வெளியிட வைத்த ஜெயலலிதா மேல் பழி எடுக்க இத்தருணத்தை வாய்ப்பாகிக் கொண்டது கர்நாடகம் என பரப்புரை ஏகமாக நடக்கிறது.

“நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பு, ஊழல்தடுப்புச் சட்டவிதிகளின் படி வழங்கப்படவில்லை. அபராதம் விதித்ததில் நீதிபதி ஜான் மைக்கால் டி குன்ஹா கோட்பாடுகளை மீறிவிட்டார். இந்தத் தீர்ப்பை வழங்கியதன் மூலம் நீதித் துறையில் மிகப் பெரிய தவற்றை அவர் செய்துவிட்டார்” என இந்தியாவின் மூத்த வழக்குரைஞர்களில் ஒருவரான ராம்ஜெத்மலானி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ஒரு துரும்புபோதும், அ.தி.மு.க.வினர் இதையே விருட்சமாக்கி, குடைபோல் பிடித்துக் கொள்ள: ராம்ஜெத்மலானிக்கு இரண்டு விசயங்களை விளக்க வேண்டியுள்ளது.

ஒன்று-

“நூறு கோடிரூபாயை எப்படி வசூல் செய்வீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு ’இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்’ என அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானிசிங் வாசித்த நீண்ட பட்டியல்.

இரண்டாவது – பின்வரும் வாசகம்:

“அரசியல் வர்க்கத்துக்கு நிகராக அதிகார வர்க்கமும் ஊழலில் திளைக்கிறது. அறத்தின் மையமாக இருக்கவேண்டிய அமைப்புகளும், அதைப்பாதுகாக்க வேண்டிய மனிதர்களும் நெறிபிறழும் போது, சாதாரணக் குடிமக்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். ஒட்டுமொத்த அமைப்பின் மீது மட்டுமல்லாமல், அறத்தின் மீதே நம்பிக்கையற்றவர்களாக மாறிப் போகிறார்கள். நீதிமன்றங்கள் தங்களது கடமையைச் சரியாகச் செய்யும் போது, சமூகத்தில் நடக்கும் முக்கியமான பணி குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவதோ, அவர்கள் தண்டிக்கப்படுவதோ கூட இல்லை. அறத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும் இப்படிப்பட்ட சாதாரண மக்களை மீட்டெடுப்பதாகும்..... ஏறத்தாழ 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு இது. அதிகார உச்சத்தின் அழுத்தங்களை, எண்ணற்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட விசாரணை. இறுதியில் நீதியின் முன் எல்லோரும் சமம் என்னும் ஒளிபொருந்திய உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்திய நீதித்துறையின் பணி, இந்திய சனநாயகத்தின் மீதான கம்பீரத்தை மேலும் ஒருபடி உயர்த்தியிருக்கிறது” (தி.இந்து, தமிழ் – தலையங்கம் – 29.09.2014)

ஊழல் என்று தீர்ப்பு வெளியான பின்னும் சட்டை செய்யாத அம்மா, தன் கட்சியின் தொண்டர்கள் செய்யும் வன்முறைகளை உள்ளுக்குள் ரசிக்கும் அரசியல்வாதி – ஈழப்பிரச்னைக்கு ஆதரவாக இருப்பதேன்? இராசபக்சேவுக்கு கேலி செய்ய ஒரு பொருள் கிடைத்து விட்டது.. எந்தக் கொடூரத்தையும் செய்த எவர் ஒருவரும் தன்னை நியாயப்படுத்த இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

இந்த பிம்ப உருவாக்கத்தின் பின் விளைந்த பேரழிவு – மக்களின் மனோவியலில் ஏற்பட்ட மாற்றம். 50-ஆண்டுக்காலத்தில் மக்கள் வேறொரு திசையில் திருப்பிவைக்கப்பட்டிருப்பது தான் கொடுமை. முன்னர் இருந்த தலை முறைகளின் மக்களால் எவை அறமற்றதென ஒதுக்கிவைப்படனவோ அவையும், புதிதாக முளைத்த கேடுகள் உட்பட அனைத்தும் அறமாகக் கொள்ளப்பட்டு விட்டன. அரசியல் தலைமைகள் தம்மை முன்னிறுத்த உண்டு பண்ணிய கும்பல் உளவியல், இன்று முற்ற முழுக்க தமிழ்ச் சமுதாயத்தின் மேல் கவிந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சி நிரலினும் பெரிதான சாட்சியம் வேறெது உண்டு?

நன்றி: கீற்று - 30 செப்டம்பர் 2014

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ