இரண்டாம் முள்ளிவாய்க்கால்


அமெரிக்கத் தீர்மானம் உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோராத சூழலில் ஐ.நா. மனித உரிமை அவையில் ஒரு மனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கையில் இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பில், பன்னாட்டு நீதிமன்றம் அமைப்பதற்கான காரணங்கள் என மூன்று அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளார் :

  1. போர்க்குற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாகவோ, அவர்களைப் பாதுகாக்கவோ போதிய   நிர்வாக அமைப்புக்கள் இலங்கையில் இல்லை.
  2. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றமானது சர்வதேச அளவிலானது . இது குறித்து விசாரிக்க உள்நாட்டு அமைப்பின் செயல்திட்டம் போதுமானதாக இல்லை.
  3. இலங்கையில் நீதித் துறைகளும் பாதுகாப்பு அமைப்புகளும் நம்பகத் தன்மை இல்லாத வகையில் சீர்குலைக்கப்பட்டுள்ளன.

இனப்படுகொலை என்ற நேரடிச் சொல் பயன்படுத்தப்படவில்லையே தவிர, அரசின் போர்க்குற்றங்களும் அவைகளைப் புரிந்தவர்கள் மீது அழுத்தமும் அதிகமாய்த் தரப்படும் என்ற அளவீடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு விசாரணை என்பதை முற்றாக சாத்தியமற்றது என்பதை உறுதி செய்திருந்தது ஐ.நா.மனித உரிமை ஆணையர் அறிக்கை. ஆனாலும் தான் உரைத்தவைகளை தானே அழித்து விடுவது போல், சுதந்திரமான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப் பரிந்துரைப்பதற்குப் பதில், இலங்கை நீதித்துறை இணைந்த கலப்பு விசாரணைப் பொறிமுறையை முன்மொழிகிறார். (அவர் சிறு பள்ளிக் குழந்தையல்ல; மனித உரிமை அமைப்பின் உலகளாவிய தலைவர். பென்சிலால் எழுதி ரப்பரால் அழிப்பதற்கு); மனித உரிமைகள்  ஆணையரின் இவ்வாசகத்தை கையகப்படுத்திக்கொண்ட அமெரிக்கா தனது புவிசார் அரசியல் ஆதிக்கத்தை இறுக்கிவைத்துக் கொள்ள, தீர்மானமாக வழிமொழிந்தது. இனப்படுகொலையாளியான இலங்கை சார்பில் அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமை அவையில் முன்னெடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தீர்க்க தரிசனம் கொண்டதாகும். இதுவும் இலங்கையின் இராசதந்திர முன்னேற்பாடுதான் என்பதில் ஐயம் இல்லை.

போரின்போது இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் குற்றமிழைத்தததாக அறிக்கை தெரிவிக்கிறது. இரண்டையும் சமப்படுத்த முடியாது என்கிற உண்மையைக் காண வேண்டும். ஐ.நா. அறிக்கையில் அரசு திட்டமிட்டு போர்க்குற்றங்கள் தொடர்ந்து செய்தது என்னும் குறிப்பிடல்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால் கலப்புப் பொறிமுறையின் கீழ் இலங்கை நீதித்துறையின் மேற்பார்வையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய குழு விசாரிக்கும் என்பது இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்களை மறைத்து, விடுதலைப் புலிகளின் பக்கமாக குற்றங்களை நகர்த்திடும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. மனித உரிமை அவையில் பேசிய இலங்கைத் தூதர் இதை முன்னுணர்ந்தவராய் ”தேசிய விசாரணையை இலங்கை அரசு நடத்தும்” என்று வரவேற்றுப் பேசியிருக்கிறார். அமெரிக்காவும், இலங்கையும் கை கோர்த்துள்ளமை, எத்திசை நோக்கி இவ்விசாரணை நகர்த்தப்படப் போகிறது எனத் தெளிவாக்கியுள்ளது. பன்னாட்டு விசாரணை அல்ல; தேசிய விசாரணையாகவே நடத்தப் போகிறார்கள்.

முதல் முள்ளிவாய்க்காலை 2009-ல் ராஜபக்க்ஷேக்கள் நடத்தினார்கள்; 2015-ல் இரண்டாம் முள்ளிவாய்க்காலை அமெரிக்காவும் ஐ.நா.வும் இணைந்து நடத்தியிருக்கின்றன.

இரண்டு முள்ளிவாய்க்காலிலும் இந்தியா முன்னிற்கிறது.

ஐ.நா. ஒரு வல்லரசுகளின் சூதாட்டக்களம் - அதன் உள்ளரங்கம் உலக மனித உரிமை ஆணையம் என்ற உலக முழுதுமுள்ள பாதிப்புக்குள்ளானோரின் கூற்று சரியானால், மேதை பெர்னார்ட்ஷா “இது சர்வதேச அய்க்கிய நாடுகள் சபையல்ல; சர்வதேச அயோக்கியர்கள் சபை” என்று பிரகடனப் படுத்தியதும் உண்மையாகிறது.
 
இதே மனித உரிமை அவையில் பன்னாட்டு நீதிமன்ற விசாரணைத் தீர்மானம் நிறைவேறி, பாதுகாப்பு அவையும் ஒப்புதல் அளித்து சில நாடுகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்ட வரலாறுகள் அண்மையில் உலகு தரிசித்தவை. செர்பியா, ருவாண்டா, சிரியா போன்ற நாடுகள்    எடுத்துக்காட்டுகள்: அத்தனை நாடுகளும் இனப்படுகொலை நடத்திய நாடுகள்; இனப்படுகொலை    நாடுகளின் குற்ற அம்சங்களை முன்னிறுத்தி அந்நாடுகள் முயற்சி செய்த உள்ளக விசாரணையை   முற்றாக மறுத்திருந்தது இதே ஐ.நா: இந்நாடுகளின்அரசுத் தலைமைகள் குற்றவாளியாய் நிறுத்தப்பட்டு, விசாரணை நடத்தி தண்டிக்கப்பட்டும் உள்ளார்கள். தண்டிக்கப்பட்டனரா, தண்டனை அனுபவிக்கின்றனரா இல்லையா என்பது அல்ல  முக்கியம். இனக்கொலையாளர்கள் பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டமையே வல்லரசுகள் என்ற அயோக்கியர்கள் உள்ள ஐ.நா.வில் நீதியின் பாதிப்படிக்கட்டுகளைத் தாண்டிவிட்ட சாதனை  எனலாம்..
இலங்கை பன்னாட்டு நீதிமன்றத்தில் உறுப்பு நாடு இல்லை. உறுப்பினராக இல்லாத ஒருவரை விசாரிக்க முடியாது என்ற கவசத்தை இலங்கை லாவகமாக அணிந்து கொள்ளும். ‘ரத்தம் சரணம் கச்சாமி’ என்று இலங்கையில் சிங்கள அரசு ஆட்சியேறிய காலமுதல் நடத்திவரும் இன ஒடுக்குமுறை அரங்கேற்றத்தை இடையீடில்லா ஆட்டமாய் நடத்த இந்தப் பாதுகாப்புக் கவசம் ஊக்கம் தந்து வருகிறது.

இனப்படுகொலை, மதப்படுகொலை, குழுப்படுகொலை என எந்த ஒரு நாட்டில் நடந்த கொலைகளானாலும், பெரும்பான்மை  வல்லரசுகளின் புவியியல் நலன்களுக்காக நடைபெற்றுள்ளன. “அரசுகள் அரசுகளோடு மட்டுமே கைகுலுக்கும்; மக்களோடு கைகுலுக்குவதில்லை” என்றொரு வாசகம் உண்டு:   ஒரு நாட்டு அரசால் கொடூர அடக்குமுறைக்கு ஆளாக்கப்படும் மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட உலகில் எந்த ஒரு நாடும் இல்லை என்பது  நடைமுறை யதார்த்தம்.

இதனை உலக அளவில் செயல்படுத்தும் ஒரு வாய்ப்பாக, 2001, செப்டம்பர் 11, அமெரிக்காவுக்கு அமைந்தது.

ஸீனியர் ‘புஷ்’ இரண்டாம் முறை உலக அதிபராக ஆசைப்பட்டார். அமெரிக்க அதிபர் ஆவது என்றால் என்ன?  உலக அதிபர் ஆவது தானே! இரண்டாம் முறையும் அதிபர் தேர்தலில் வெற்றி ‘ஈட்ட’ அவருக்கு ஒரு யுக்தி தேவைப்பட்டது. அதன் பொருட்டு அவர் நட்டு வைத்த விதை “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”. 2001 செப்டம்பர் 11. அமெரிக்கா முன்னெடுத்த “பயங்கரவாதத்திற்கெதிரான போரில்” உலகஅரசுகளே ஒன்று சேருங்கள் என ஸீனியர் புஷ் அழைப்புவிடுத்தார். மறந்தும் உலகமக்களே ஒன்று சேருங்கள் என அழைக்கவில்லை. பயங்கரவாதத்தை உருவாக்குபவர்கள் மக்கள் தாம் என்ற  எண்ண ஓட்டம் அவர்களுடையது.  “யார் யார் பயங்கரவாதத்துக்கு எதிராக திரள்கிறார்களோ அவர்கள் எமது நட்பு நாடுகள். யார் எதிர்க்கவில்லையோ அவர்கள் எதிரி நாடுகள்” என அதிபர் புஷ்ஷின் பிரகடனம் இருந்தது.

இனவெறி இலங்கை அரசின் கையில் தானாக விழுந்த வரம் இது . வரம் கைநழுவிப் போகாமல், உலக நாடுகளை அரவணைக்கும் இராசதந்திரத்தை ஏந்தி இராச பக்க்ஷேக்கள் சுளுவாக முன்னகர்ந்தனர்;

சிறந்த சனநாயகவாதியும், ஈழப்போராளியுமான கவிஞர். கி.பி. அரவிந்தன் “2001, செப்டம்பர் 11-ஐப் பயன்படுத்திக்கொண்டு சிறீலங்கா தனது வெற்றிக்காக மிக நுட்பமாய்த் திட்டமிட்டது. உலக நாடுகளிடையேயான முரண்பாடுகளைத் திறமையாகக் கையாண்டார்கள். ராசதந்திரக் காய் நகர்த்தலில், தங்களது 2500 ஆண்டுக்கால முதிர்ச்சியை அவர்கள் பெற்றிருந்தார்கள். எமது ராசதந்திரப் பாரம்பரியம் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை. போராட்ட வழிமுறைக்குள் அரசியலையும் நாம் இணைக்கவில்லை” என ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

ஒரு விடுதலைப் போராட்டத்தில் எழும்  பலவீனங்கள் வரலாற்றில் நாம் அறிந்ததே. தவிர்த்திருக்கக் கூடிய பலவீனங்கள், பிழைகள் சேகரமாகி, விடுதலைப் போரைச் சேதாரம் செய்வதும் நாம் அறிவோம்; மிகப் பெரிய சேதாரம் 2001, செப்டம்பர் 11-ஐ, விடுதலைப் போராளிகள் இராசதந்திரத்துடன் கையாளாமல் கைவிட்டதில் தொடங்கியது.  தனது வழிகாட்டியான அமெரிக்காவுடன் அப்போதே இலங்கை கைகோர்த்து அதனை லாவகமாகப் பயன்படுத்திக் கொண்டது.  இப்போதும் இலங்கை அதே இராசதந்திர மதிநுட்பத்துடன் ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையில் காணப்படும் காத்திரமான அம்சங்களை ஒதுக்கி, அதில் விடப்பட்ட ஒரு ஓட்டையை அமெரிக்கத் தீர்மானமாகக் கொண்டுவந்து கெட்டிக்காரத்தனமாக  வெற்றி ஈட்டியுள்ளது.

பள்ளிக்கூடம் போக ‘சண்டித்தனம்’ பண்ணிக் கொண்டிருந்த பிள்ளை, இப்போது துள்ளிக் குதித்து ஓடுவது போல், இதுகாலம் வரை போர்க்குற்ற விசாரணையினை   உறுதியாக  எதிர்த்த இலங்கை, இப்போது மகிழ்வு பொங்க வரவேற்றிருப்பது இந்தக் கலப்புப் பொறிமுறை விசாரணை என்ற காரணத்தால் தான்: இதையும் தேசீய விசாரணை என்று சுருக்குமுடிச்சாக்கி உள்ளக விசாரணையாக குறுக்கப் பார்க்கிறார்கள். புவிசார் ஆதிக்க அரசியல் நலன் அடிப்படையில் அமெரிக்காவும் இந்தியாவும்  அதற்கும் வழிஅமைக்கும் என்னும் வியூகத்துக்குள் தமிழர்கள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள்? மீண்டும் முள்ளிவாய்க்காலுக்குள் நிறுத்தப்பட்டிக்கிறார்கள் என்ற உணர்தலோடு, இரண்டாம் முள்ளி வாய்க்காலைக் கடப்பது எவ்வாறு என்ற யோசிப்புக்கு கடப்பாடுடையோராக தமிழர்கள் இருக்கிறார்கள்.

இனக்கொலைக்கும், தொடர் இனவழிப்புக்கும் எதிராய் உளகளாவிய குரல்கள் எழுந்தனவே தவிர, உலக அரசுகளில் ஒன்றும் ஆதரவுக் கரம் நீட்டவேயில்லை என்ற யதார்த்தத்தினை உள்வாங்கி தமிழர் இராசதந்திரத்தினையும் கெட்டிக்காரத்தனத்தினையும் நிரூபிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிலையில் இரண்டு தேர்வுகள் நம்முன் உள்ளன. 1. கலப்புப் பொறிமுறை விசாரணயில் பங்கேற்று  “இது போதாது, இதுபோதாது“ என்ற அம்பலப்படுத்தலின் ஊடாக உலக கவனத்தை ஈர்ப்பது;  2.முற்றிலும் நிராகரிப்பது; சுதந்திரமான பன்னாட்டு நீதிவிசாரணைப் பொறிமுறைக்காக தொடர்ந்து போராடுவது. இதில் இரண்டாவது நிலைப்பாட்டின் பக்கமே நாம் நிற்க முடியும்.
இலங்கைக்கு 2500 ஆண்டுகளின் ராசதந்திரப் பாரம்பரியம் செயற்படுகிறது. தமிழரின் இராசதந்திரம் இனித்தான் செயற்பட வேண்டும்.

- பா.செயப்பிரகாசம் முகநூல் (2 நவம்பர் 2015)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ