மணிப்பூர் மகளிர்

(மணிப்பூர் மாநில அரசின் கலை இலக்கிய அமைப்பு [Manipur State Kala Akadami] நான்காம் இலக்கிய விழா [4th Festivel Of Literature] 2015 ஜுன் 6, 7 ஆகிய இரு நாட்களில் தலைநகர் இம்பாலாவில் நடந்தது. அந்நிகழ்வில் பங்கேற்ற பா.செயப்பிரகாசத்தின் பயண கட்டுரை இங்கே) 


உலகத்துக்கு  இனிது விடிந்த புத்தாயிரம் 2000-ஆம் ஆண்டு மணிப்பூர் மக்களுக்கு குத்துயிரும் குலையுயிருமாய் வந்து சேர்ந்தது. நவம்பர் 2 -ஆம் நாள்.   மலோம் என்ற இடத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்ற    பெண்டிரும் மாணவர்களுமான பத்து உயிர்கள் சிறப்புஆயுதப் படையால் பறிக்கப்பட்டன. துப்பாக்கி வெடிச் சத்தத்துக்குப் பின், மலோம் பகுதியில் சிறப்பு ஆயுதப்படையின் தேடுதல் வேட்டை. தேடுதல் வேட்டை என்றால் காக்கி, சிமெண்ட் வண்ண சீருடைக்கு என்ன அர்த்தம் தரப்பட்டுள்ளதோ, அந்த சித்திரவதைகளும் வங்கொடுமைகளும்.

தனது மண்ணில் தனக்கு அருகிலே நிகழ்த்தப் பட்ட வங்கொலைகளுக்கு எதிராய் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்  ஒரு இளம்பெண்;  “ஆயுதப் படைச் சிறப்புச் சட்டம் திரும்பப் பெறப்படும் வரை பட்டினிப் போராட்டம் தொடர்வேன்"  என்பதான அறிவிப்பு. அந்த இளம்பெண் மணிப்பூரின் ‘இரும்பு மகள்’ (Iron Lady) இரோம் ஷார்மிளா.

15.7.2004 அன்று மணிப்பூர் மகளிர் சிலர்  சிறப்பு ஆயுதப்படை தலைமை இடம் முன்பு திரண்டனர். சிறப்பு ஆயுதப்படை என்றால் இராணுவம் தான். ராணுவமுற்றத்தில் ராணுவத்தினர் முன்னால்  ஆடைகளைக் களைந்து நிர்வாணமாகினர்.
இந்திய  ராணுவமே எங்களைப்பாலியல் வல்லுறவு செய்எங்களைக் கொல்
Indian ArmyRape usKill us
நிர்வாண உடல்களுக்கு முன் பதாகைகள் ஏந்தி அணிவகுத்து முன்னேறிய போது, உலகம் முதன்முதலாய் இந்த விசித்திரத்தை மனச்சாட்சியின் விழிகள் விரித்துப்   பார்த்தது.   அரசுகளுக்கு ஆதரவாக துருத்தி ஊதிப் பழக்கப்பட்ட இந்திய ஊடகங்கள் இதுவரை கண்டிராத காட்சியால் அதிர்ச்சியாகி   எழுதுகோலைக் கூர்படுத்தத் தொடங்கின.
வாழ்க்கையை ஆயுதமாக ஏந்தினார் ஒரு இளம்பெண். 
நிர்வாணத்தையே ஆயுதமாய் ஏந்தினர் இளம் பெண்கள்.
“யாராவது ஒருவரை போராட்டக்காரர் என ஆயுதப்படை சந்தேகித்தால், விசாரிப்பு எதுவுமின்றி சுட்டுக் கொல்லலாம்” இது ஆயுதப்படைச் சிறப்புச் சட்டம். 1942 -ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு கொண்டு வந்த சட்டத்தை,  இம்மியும் மாற்றாமல் 1958 -ஆம் ஆண்டு இந்திய அரசு மறுபடி அறிமுகப் படுத்தியது.

இம்பால் நகரில் வீதிக்கு வீதி, முக்குக்கு முக்கு இராணுவ ‘பங்கர்’ இருக்கிறது. எந்த ஒரு பங்கருக்குள்ளும் எப்போதும் ஒரு சிப்பாய் உட்கார்ந்து பங்கர் துளைவழி துப்பாக்கியைச் சுழலவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். எனக்கு அது இந்திய சனநாயகம் செயல்படும் ஆச்சரிய வித்தையாய்த் தோன்றிற்று. ஏ.கே. 47 அல்லது இன்னும் நவீனரகத் துப்பாக்கியின் சிறுதுளை வழியாய் இந்திய சனநாயகம் பரிபாலிக்கப்படுவது நேரில்கண்டு ஆச்சரியம் கொண்டேன்.

மன்னர் ஆளுகைக்குட்பட்ட சமஸ்தானமாக மணிப்பூர் இருந்த போது, பிரிட்டீஷாருக்குக் கீழாய்க் கொண்டுவர பர்மாவில் (தற்போது மியான்மர்) பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்திய விடுதலைக்குப் பின்   புதசந்திரா என்ற மன்னர் மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்க கையெழுத்துப் பதித்தார். மக்களின் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்தாமல், சனநாயகத்தின் கீற்று துளியும் தென்படாமல், மணிப்பூர் தேசத்தை இன்னொரு தேசத்துக்கு அடிமையாக்கியது   அரசர் கையெழுத்துப் பதித்த அன்று நடந்தேறிற்று; மக்களை  மொத்தமாய்க் கப்பம்கட்டிய நாள் அன்று. “இந்திய நாய்களே வெளியேறு” என்ற முழக்கம் அன்றுதான் எழுந்தது.

இம்பாலிலிருந்து 30 கி.மீ தொலைவில் ’மொராங்’ என்ற சிறுநகரில் நடந்தது இரண்டாம் நாள்  கவிஅமர்வு ; ‘இந்திய தேசிய ராணுவ’ மண்டபம் ( I.N.A Haal )தான் கவியரங்கம் நடைபெற்ற அரங்கு. இந்திய விடுதலையை அடைய நேதாஜி, பர்மாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய தேசிய ராணுவத்தைத் கட்டியமைத்தார். இந்தியாவில் மணிப்பூரின் ‘மொராங்’என்ற  நகரில்  முதன் முதலில் இந்திய தேசிய விடுதலைப் படையின்  கொடியேற்றப்பட்டது. அவ்விடத்தில் இந்திய தேசிய ராணுவ மண்டபத்தை (INA Hall) நிறுவி, முற்றத்தில் நேதாஜி சிலையையும் நிறுவியுள்ளனர். முதல் விடுதலைக்  கொடி ஏற்றப்பட்ட இடத்தில், அந்த வாசகம் பொறிக்கப்பட்ட கல்லின் அருகே, ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.                 

‘மொராங்’ பகுதியில் லேக்டாக் என்னும் மிகப்பெரிய ஏரி. ஏரியின் முன்னுள்ள சிறுகுன்றின் மேல் ஏறிப் பார்த்தால், கழுத்தில் புரளும் வெள்ளைமுத்துச் சரமாக  பிரமாண்ட நீர்நிலை தெரியும். ஏறுகிறபோது வலப் புறத்தில் “அசாம் ரைபிள்ஸ்” என்ற சிறப்பு ஆயுதப் படை முகாம் இருந்ததைக் கண்டேன்; “அசாம் ரைபிள்ஸ்” போன்ற சிறப்பு இராணுவ முகாம்கள் நிரத்தரமாக மணிப்பூர் மண்ணில் பல இருக்கின்றன.

‘மாலோம்’ பிரதேசத்தின் தாக்குதலில் முன்னணியில் பயன்படுத்தப் பட்டது “அஸாம் ரைபிள் படை”; மணிப்பூர்மக்கள் மீதான தாக்குதலில் மணிப்பூர் ஆயுதப் படையினரை ஏன் பயன்படுத்தவில்லை என்பது நியாயமான கேள்வி. இந்திராகாந்தி ஆட்சியில் பஞ்சாபில் அமிர்தசரஸ் பொற்கோயிலின் மீது ‘நீல விண்மீன்’ ( Blue Star Operation) தாக்குதலில் ஏன் கூர்க்கா படை பயன்படுத்தப்பட்டது? பிரிட்டீஷார் ஆட்சியில் இந்திய விடுதலைப் போராட்டக்காரர்களை ஏன் கூர்க்கா படை கொண்டு வேட்டையாடினர்? இந்திய அமைதிப் படை 1987-ல் ஈழப்பிரதேசத்தில் இறங்கிய போது, பஞ்சாப்பின் சீக்கியப் படைப்பிரிவுகளும், வடமாநிலப் படையினரும் பெருவாரியாக இறக்கப்பட்டது ஏன்? கேள்விகளுக்குள்ளே பதில்கள் தங்கியுள்ளன.

சொந்த இன உறுத்து வந்துவிட்டால் ”கொல்வதற்கே துப்பாக்கி” என்ற தாரக மந்திரம் மறந்து போய் விடும்.

அன்றிலிருந்து இன்றுவரை உரத்து எழுந்து வந்து கொண்டிருக்கிறது விடுதலைக் குரல். ’ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை’  நீக்கவேண்டுமென்று கோரி இரோம் ஷர்மிளா 15 ஆண்டுகளாய் உண்ணா நோன்பு இருந்து வருகிறார். மருத்துவமனையில் சேர்த்து மூக்குவழியே திரவ உணவு செலுத்தி வருகிறது அரசு. பட்டினிப் போர் நடத்தும் இரோம் ஷர்மிளாவும், நிர்வாணப் போர் நடத்திய பெண்களும் மணிப்பூர் தேசத்தின் குரல்கள்.

தேசத்தின் குரலை உரத்து எழுப்புகிற அக்கினிக் குஞ்சுகள் முன்னர் வரலாற்றின்  பொந்துகளில் பத்திரமாகப்   வைக்கப்பட்டிருந்தன. 1904-ல் ஆங்கிலேய அரசுக்கு எதிராகக் கொடி ஏந்தியவர்கள் மணிப்பூர் மகளிர்.

மணிப்பூர் மீதான  அடக்குமுறையின் வெஞ்சினக் குரல்கள் கலை இலக்கிய அரங்கில், குறிப்பாய் கவிதை வாசிப்பில் அதிகமாய்க் கேட்டன.கவிதாயினிகள் பொர்கன்யா,   அகோம் யாண்டிபாலா தேவி,கவிஞர் தேவதாஸ் மரின்பாம் ஆகியோர் இரண்டாம்நாள் அரங்கில் கவிதைகளால் விளாசினர். கவியரங்கில் பங்கேற்ற பொர்கன்யாவிடம் (Borkanya)என் ஆசையைத் தெரிவித்தேன்.

“இரோம் ஷார்மிளாவை நான் சந்திக்க முடியுமா”

பொர்கன்யா விநோதமான பிராணியைப் போல் என்னைப் பார்த்தார்; “முதலில் உங்களை அழைத்த ஏற்பாட்டாளர்களிடம் அனுமதி பெறுங்கள்” என்றார்.

”என்ன விளையாடுகிறீர்களா” ஏற்பாட்டாளர்கள் மறுத்து விட்டார்கள்.

“அவர் மருத்துவமனையில் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரைக் காண எவருக்கும் அனுமதியில்லை. கட்டிலைச் சுற்றிலும், அறையின் வாசலிலும், மருத்துவ மனை முகப்பிலும் ‘ரைபிள்’ ஏந்திய சிப்பாய்கள் நிற்கிறார்கள். இராணுவ அதிகார வட்டத்துக்குள் இலக்கியவாதிகள் நுழைய இயலாது”
 
ஒரே அடியாய் அடித்துவிட்டு  நகர்ந்தார்.

எந்த அதிகாரத்தையும் ஊடுருவி நுழையும் வலிமை   எழுதுகோலுக்கு உண்டு என்று சொல்வது எவ்வளவு பெரிய புனைவு  என அப்போது உணரக் கூடியதாயிருந்தது.  யதார்த்த உலகில் எழுதுகோலினும் காண துப்பாக்கியே வலுவாக இருக்கிறது.

சாகித்ய அகாதமியின் ’இளம்புரஸ்கார் விருது’ பெற்றிருக்கிறார் அகோம் யாண்டிபாலா. அடக்குமுறையால், அடாவடித்தனங்களால் அங்குள்ள மக்கள் போல் கலை, இலக்கியவாதிகளும் நொந்து நொம்பலப்பட்டுப் போகிறார்கள்.போராடிப் போராடி அலுத்துப் போயுள்ளார்கள்.இந்த அலுப்பு அவர் கவிதைகளில் வேர்கொண்டு மேலே வருகிறது.
காரணம் சொல்
ஒன்றோ, பலவோ,
இதுவோ அதுவோ
எதுவாயினும்
என் சாவுக்கு ஒரு
காரணம் சொல்.
இல்லையெனில்
இவ்வுலகிலோ,
சொர்க்கத்திலோ
எனக்கு இடம் கிடையாது.
எத்தனை காலம்
நானிவ்வாறு ஓடிக்கொண்டிருப்பது
எனது குற்றம் எதுவென அறியாது;
மரணத்தை முத்தமிடும் நாளில்
என் அறிவிலாப் பயணத்துக்காய்
உறுதியாய் வெட்கப்படுவேன்
கொலையாளியே,
குற்றப் பத்திரிகையேனும் கொடு
அதற்காய் நன்றி சொல்வேன்.
அது எனது அடையாள அட்டை
அதனைக் கையளித்து
என்னை சொர்க்கத்துக்கு அனுப்புவாயாக
எனது சாவுக்கு,
ஒரு காரணமேனும் காட்டு.
எந்த ‘மாலோம்’ கொலைகளை எதிர்த்து நீதி விசாரண நடத்தப்படவேண்டுமென இராம் ஷார்மிளா பட்டினிப்போரைத் தொடங்கினாரோ, அந்த விசாரணை 15 ஆண்டுகளாகியும் இன்னும் முற்றுப்பெறவில்லை. நவம்பர் 2, 2000 முதல் தற்கொலைக்கு முயன்றதாக பிரிவு 309 -ன் கீழ் ஷர்மிளா மேல் வழக்கு: விரைந்து முடிப்பார்கள். முடிப்பது மறுபடி ஓராண்டுதண்டனையை புதுப்பிப்பதற்காக. விடுவிக்கப்படுதல், மீண்டும் கைது செய்யப்படுவதின் பொருட்டாய் அமையும்.

இரும்புப் பெண் ஷர்மிளாவுக்கு, 2007- ல் தென்கொரியாவின் தகைமைத்துவமுள்ள மனித உரிமைகளுக்கான ’குவாங்ஜூ’ விருது, 2010 -ல் அமைதிக்கான ரவீந்திரநாத் தாகூர் விருது எனப் பல விருதுகள்.

ஷர்மிளாவின் சகோதரர் சிங்ஜித்: “10 வயதுவரை, ஷர்மிளா மற்ற குழந்தைகளிலிருந்து தனித்து நிற்பாள். அவள் முழுக்க முழுக்க சைவம். பத்து வகுப்பு முடித்ததும் யோகா பயிற்சியில் சேர்ந்தாள். இயற்கை மருத்துவம், கீதை விரும்பி ; ஷார்மிளாவுக்கு நான்கு நண்பர்கள் தாம். தனிமையில் அமர்ந்து வானொலி கேட்பாள். கவிதை எழுதுவாள். சுருக்கெழுத்து கற்றுக் கொண்டாள். மாலோமில் துப்பாக்கிகள் வெடித்த சத்தம் கேட்ட அந்த வியாழக்கிழமையிலிருந்து உண்ணா நோன்பு என்ற எதிர்ப்புப் போரைத் தொடங்கினாள். மாலோம் பகுதியில் கொலைகள் நடந்த இடத்திலேயே உட்கார்ந்து தொடங்கினாள். 6- ந் தேதி காவல்துறை கைது செய்து கொட்டடியில் வைத்தது. நவம்பர் 11-ல் சிறையிலடைத்தது” என்றார். ஷர்மிளாவின் சகோதரர் சிங்ஜித் தன் சகோதரி பற்றிப் பதிவுசெய்யும் நினைவுகள் கதகதப்பூட்டுவன.

தனது தங்கையை சிறையில் சந்தித்துப் பேசியபோது, “நாம் இணைந்து போராடுவோம். முதலில் உண்ணா நோன்பை நீ முடிக்க வேண்டும்” என்றேன்.

ஷர்மிளா சொல்வாள் “என்னை ஊக்கப்படுத்துவதற்காக எனில் வா; அதைரியப்படுத்துவதென்றால் வராதே”.

”அந்த மணித்துளியில் நானொரு முடிவு மேற்கொண்டேன்.மதிப்பு வாய்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் வேளாண் அலுவலர் வேலையை விட்டு விலகினேன். என்றென்றும் நான் எனது சகோதரியுடனிருக்க வேண்டும் என முடிவெடுத்தேன். இன்றுவரை சகோதரியின் போராட்டத்துக்காக வாழுகிறேன்.”

உண்ணா நோன்பு தொடங்கிய நாள் முதல் தாயும் மகளும் பார்த்துக் கொண்டதில்லை. அப்படியான சந்திப்பு தன் மகளின் போர்க்குணத்துக்கு இடையூறு செய்வதாக - மகளின் மனதில் சஞ்சலதை ஏற்படுத்துவதாகச் செய்து விடும் என்று தாய் எண்ணினார். “மகளின் வீரம் செறிந்த போராட்டமும் அதன் விளைவும் என்னை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கிறது. ஆனால் அவளைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் துக்கிக்கிறேன்”, கண்ணீரின் வெதுவெதுப்புக் கொண்டது அன்னையின் வார்த்தை.

அன்னையின் பல இரவுகள் கண்ணீரில் கழிகின்றன. தாயின் ஒரேயொரு ஆசை, “ஷர்மிளாவின் சாவுக்குப் பின்னரே நான் சாக விரும்புகிறேன்”.

ஊடகங்கள் குழுமியிருக்க அந்தத் தாய் மத்திய, மாநில அரசுகளிடம் வைத்தது ஒரேயொரு வேண்டுகோள்;

“ஆயுதப் படைகள் சிறப்பதிகார சட்டத்தை பத்து நாட்களுக்குத் திரும்பப் பெறுங்கள். ஷர்மிளா வெளியே வரட்டும். என் மகளைப் பார்த்து விட்டுச் சாகிறேன்”.

சாகவாவது இந்திய அரசு வழிகாட்டடும்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்