ஈழ விடுதலைக்கான அய்க்கியம், மதிநுட்பம் குறித்த சிந்தனைகள்

(அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பிலடெல்பியாவில்    உள்ள லாங்செஸ்டர் நகரின் ”விடுதலை அரங்கில்“ (FREEDOM HALL) 18 மே 2013 அன்று நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் சுதந்திர சாசனம் வெளியீட்டு நிகழ்வில் வாசிக்கப்பட்ட உரையின் எழுத்துவடிவம்.)

நான் உங்கள் முன் இரண்டு செய்திகளுடன் வந்திருக்கிறேன்.

வெற்றியின் எக்களிப்பில் எதிரி நமது தமிழீழத்தை நசுக்கி அழித்துக்கொண்டிருக்கையில் -

எதிரி நமது பெண்களை நிர்வாணப்படுத்தி, அவமானப்படுத்தலின் உச்சமாய் கொல்லப்பட்ட வீரமங்கையர்களின் பிறப்புறுப்புக்களை பூட்ஸ் கால்களால் மிதித்துச் சிதைத்த காட்சிகளின் பின்பு -

பல்லாயிரக்கணக்கில் நம் குழந்தைகளை சின்னஞ்சிறிய புலிக்குட்டிகள் என்று கொன்று குவித்த பின்னர்,

இப்போதும் 'புலிப் பூச்சாண்டி' அரசியலால் ஜீவிக்கிறான் எதிரி.     

ஒரு தாய் தலையில் கடைசியாய் எஞ்சியிருந்த சிறு மூட்டையை வலது கையில் பிடித்துக்கொண்டு இடதுகையில் மூன்று வயதுப் பையனை நடத்தியபடி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடக்கிறாள். முன்னால் போகிறான் ஆறு வயதுப் பையன். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போகையில் இரு கைகளையும் உயர்த்தியபடி செல்ல வேண்டும். சிங்களச் சிப்பாய் 'ஹேண்ட்ஸ் அப்' என கத்துகிறான். அவனுடைய கத்தலின் அர்த்தம் புரிகிறது ஆறு வயதுப் பாலகனுக்கு. இரு கைகளை உயர்த்தினான். மூன்று வயதுப் பிள்ளைக்குத் தெரியவில்லை. தாய் பதறியபடி அச்சிறுபிள்ளையின் இரு கைகளையும் பிடித்து உயர்த்தி நிற்கிறாள். பிடிமானம் அற்ற மூட்டை கீழே விழுந்து விட்டது. பகையனைத்தும் ஒன்று திரண்டு மூட்டையாய் வந்தது போல், வன்மத்துடன் சிப்பாய் அதை நோக்கிச் சுட்டுத் தள்ளுகிறான். மூட்டைக்குள்ளிருந்த ஓட்டை உடைசல் பாத்திரங்கள் 'சலா'ரென்ற சத்தத்துடன் சிதறிப் பறந்தன.

மூன்று வயது ஏதோன்றையும் புரிந்து கொள்ளும் வயதில்லை. இராணுவத்தானைக் காணும் சிறுவிழிகளில் அச்சமில்லை. அச்சமெல்லாம் இராணுத்தானுக்குத்தான். சிறுபாலகன் என்றபோதும் அவர்களுக்கு விடுதலைப் புலிகளாகவே தென்படுகிறார்கள். கருப்பையில் கிடக்கும் சிசுவென்றாலும் அவர்களுக்கு விடுதலைப்புலியே.

பிரேதங்களை வைத்து அரசியல் நடத்தியவன் நமது எதிரி. மேலே, கீழே, கிழக்கே மேற்கே, வடக்கே தெற்கே என்று எல்லாத் திசைகளிலும் சவப்பெட்டி அரசியல் நடத்தியவன் அவன். நாம் எதிரிக்கு எதிராக அணிதிரண்டு போராடுவதற்குப் பதில் நமக்குள் நாம் துண்டுபட்டு, சேர, சோழ, பாண்டியர்கள் தமக்குள் அடித்துக்கொண்டு அழிந்தது போல், நாமும் அழியப் போகிறோமா?

இதுதான் முதலாவது செய்தி.

ஈழத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.

புலம்பெயர் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.

உலகத் தமிழர்களே உறுதுணையாய் நில்லுங்கள்.

இரண்டாவது செய்தி – சர்வதேச அரசியலில் நம் பணி.

ஒரு கோட்பாட்டைத் தூய்மையாகப் பின்பற்றுவது என்பதல்ல. நடைமுறைக்குப் பொருத்தமாகப் பயன்படுத்துவது என்பதுதான் அதை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்யும். எதிரி நம்மை அழிக்கிறான் என்பதை அடையாளம் கண்டுவிட்டோம். இனி நமது செயற்பாடு நடைமுறை சாத்தியத்துக்குப் பொருந்திய வழிகளைப் பேணுவதுதான்.

எது ஒன்று தன்னை தப்பிப் பிழைக்க வைக்குமோ, எது ஒன்று நம் இருப்பை உறுதிப்படுத்தி பிழைக்கச் செய்யுமோ, அதனுடன் நம்முடைய சமகால நடைமுறையைப் பொருத்திக்கொள்வதே சரியானது.

இன்னொருவனுடைய வாய்ப்போடு, தன்னுடைய வாய்ப்பை அடையாளம் கண்டு கொண்டு, அதனோடு தன்னை இணைத்துக்கொள்கிறவன் இராசதந்திரி. எதிர்மறையில் இந்த ராசதந்திரத்தைப் பயன்படுத்தி இராசபக்க்ஷேக்கள் வெற்றி பெற்றார்கள். இதை நாம் நேர்மறையில் பொருத்திப் பயன்படுத்தினால் என்ன பிழை?

பன்னாட்டு அரசியலில் நடைமுறைச் சாத்தியமான, யதார்த்தபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ளாவிட்டால், தமிழீழம் உருவாவது சாத்தியமில்லை. எந்த ஒரு அரசும் சரி, எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் சரி – பன்னாட்டு அரசியலுடன் தொடர்புற்று பின்னிப்பிணைந்தே இருக்கும். குறிப்பாக அரசியல் பூகோளமயப்படுத்தப்பட்ட இன்றைய சூழலில், பன்னாட்டு அரசியல் தொடர்பான உறவில், திட்டவட்டமான, தெளிவான, பொருத்தப்பாடான அணுகுமுறை இன்றேல், விடுதலை பகற்கனவாகிவிடும்.

‘No ideological Barriers between or among the States or nations’

அரசுகளுக்கோ நாடுகளுக்கோ இடையில் சித்தாந்த ரீதியான சுவர்கள் எதுவுமில்லை –

என்ற வாசகத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். அரசுகள் அல்லது தேசங்களுக்கு- அவை சார்ந்த புவிசார் மற்றும் சொந்த நலன்கள் தான் முக்கியமே தவிர, கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் சார்ந்தவை அல்ல என்பது இதன் பொருள். மாறாக வெறுமனே கொள்கை சார்ந்திட்ட-நீதி சார்ந்த எதிர்பார்க்கைகளுடன் காத்திருப்போமேயானால், இலவு காத்த கிளியின் கதையாக முடிந்து விடும்.

இவ்விரு செய்திகளையும் இங்கு விவரிப்பதுதான் எனது பணி.

ஈழப்போராட்ட தியாகத்துக்கு குறைவில்லை. வேறு எந்த ஒரு போராட்டத்தோடும் ஒப்பிடமுடியாத அளவுக்கு மக்கள் தொகை விகிதத்திற்கும் மேலாய் இழப்பின் எண்ணிக்கை காணக் கிடைக்கிறது.

நீண்டகாலம் இயக்கத்திலிருந்து ஒரு மூத்த போராளி எழுதி இன்னும் வெளியாகாத 'புதினத்தில்' ஒரு வசனம் வருகிறது.

'விடுதலைக்கு, தக்க விலைதான் கொடுக்க முடியும்; அதற்கு மேலும் கொடுத்தால் நாம் தோற்றுப்போவோம்'

நான் ஒரு இலக்கியவாதி. போராட்டம் தொடர்பான உரையாடலில் களத்தில் நின்ற பலருடன் பேசும்போது எனது இலக்கிய மனமே மேலெழும். போராளிகள் புரிந்த தியாகங்களை நான் அறிய நேர்ந்தபோது, கடலைப் பிளந்து ஈழத்துக்கு வழிவிட்டது போல் எனது மனத்துக்குத் தோன்றும்.

ஆனையிறவுத் தாக்குதலில், கனரகப் பீரங்கிப் பிரிவைத் தகர்ப்பதில் தான், அதன் வெற்றியே அடங்கியிருந்தது. உள்ளே நுழைந்து தாக்குவதற்கென ஒரு அதிரடிப் படைப்பிரிவு தயாரானது. அதில் ஒரு போராளியின் பொறுப்பு, முள்ளுக்கம்பிச் சுருளை உடைத்து பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். வெடிமருந்தை வைத்துத் தகர்த்தபோது, பெரும்பகுதி முள்ளுக்கம்பி தகர்ந்து துரதிருஷ்டவசமாக நான்கைந்து அடி நீளமுள்ள ஒரு பகுதி வெடிக்கவில்லை. அந்த முள்ளுக்கம்பி வெடித்து நீக்கப்படாவிட்டால், அந்தப் பாதை தடைப்பட்டு கனரகப் பீரங்கிகளைத் தகர்க்க முடியாது. ஆனையிறவுத் தாக்குதல் வெற்றி பெறவும் முடியாது. அவ்வேளை அதற்குப் பொறுப்பான போராளி வியக்கத்தகுந்த முடிவொன்றை எடுத்தார். நான்கைந்து அடி நீளமான கம்பியின்மேல் தான் படுத்துக்கொண்டு தன் மேல் காலூன்றி உள்ளே பாயுமாறு கூறினார். எனக்குச் சொல்ல இயலாத இச் செயலை அவர் செய்து முடித்துவிட்டார்.

அவர் உடலில் கால் பதித்துத்தான், ஆனையிறவில் வெற்றிக் கொடி ஏற்ற முடிந்தது. அந்த ஒரு போராளியின் தியாகத்தில்தான் வெற்றிக்கொடி பறந்தது. இப்படி இப்படி 'போராளிகளின்' தொகை எண்ணிக்கையற்றது.

இத்தகைய எண்ணற்ற இழப்புகளின் வரிசையான படிக்கற்கள் மேல் கால் வைத்து விடுதலையின் சிகரத்தை அடையப்போகிறோமா? அல்லது நமக்குள் நாம் மோதுண்டு அழியப்போகிறோமா?

விடுதலையின் பெயரால் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, எவ்வித தயக்கமும் இன்றி மக்கள் அரும்பெருந் தியாகங்களைப் புரிந்தனர். எந்தவித வேண்டுகோளையும் ஏற்று போர்க்களம் புகுந்தனர். தம் இனிய வாழ்வை, இளமையை, உறவுகளை அர்ப்பணித்தனர். உயிர்களை, உடமைகளை, வாழ்விடங்களை, வழிபாட்டுத் தலங்களை இழந்தனர். சொல்லி மாளா இழப்புக்கும், விடுதலைக்காக கொடுத்த விலைக்கும் பொறுப்பாக நாம் நடந்து கொள்ளப்போகிறோமா? தனிப்பட்ட கர்வத்தையும் குழுவாதத்தையம் முன்னிறுத்தப் போகிறோமா? நம்மை நாம் அய்க்கியப்படுத்தத் தவறினால், நாகரீக மனிதர் என்பதை நிரூபிக்கத் தவறியவர்களாக ஆகிவிடுவோம்.

அல்லது ஈழத் தமிழர்கள் செத்து மடிய, தமிழீழம் வீழ்ந்த அந்த வேளையில் இந்தியப் பேயரசின் அமைச்சுப் பீடங்களையும், தமிழக ஆட்சிக் கட்டிலையும் அலங்கரித்தவர்கள் போல் துரோகத்தை அரங்கேற்றப் போகிறோமா? தமிழீழம் வீழ தமிழகத்தில் வாழ்ந்த அரசியல் தலைமைகளை அடியொற்றி நடப்பவர்களா நாம்?

ஈழவிடுதலைப் போர் மட்டுமல்ல, ஒடுக்கப்படும் எந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலையின் மேலும் அக்கறை கொண்டவன் நான். அந்த அடிச்சுவடுகளில் நடந்து, விடுதலைப் போர் நடந்த மண்ணுக்கு இருதடவை சென்று வந்துள்ளேன். தலைவர் முதல் தொண்டர் வரை, ஆண், பெண்ணென பல தரப்பட்ட போராளிகளையும் மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளேன். போராட்டத்தின் தேவையையும் வலியையும் உணர்ந்தவன் என்ற வகையில் உங்களிடம் நான் விடும் செய்தி இதுதான். அய்க்கியப்படுங்கள்.

16-இயக்கங்களை ஒன்றிணைத்த அய்க்கிய முன்னணியின் கீழ்தான் புரட்சிப் பாதையை வெளிச்சமாக்கினார் லெனின். 20-இயக்கங்களை ஒன்றிணைத்த ஒரு அமைப்புக்குப் பெயர்தான் பி.எல்.ஓ. (பாலஸ்தீனின விடுதலை இயக்கம்). யதார்த்தம் இப்படியிருக்கையில், நாம் மட்டும் நமக்குள் குழுக்களாகப் பிளவுண்டு கிடக்கையில் வரலாறு நம்மை எள்ளி நகையாடும்.

உலகில் 192 அரசுகள் உள்ளன. அனைத்து அரசுகளும் இலங்கைக்கு ஆதரவு அளித்தன. ஓர் அரசேனும் ஈழப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, அனுசரணையாகவும் இல்லை.

192-நாடுகளில் முக்கிய 20 நாடுகள், இலங்கை அரசை ஆதரித்தது மட்டுமல்ல, யுத்த வியூகத்திலும் பங்கெடுத்தன. இது எப்படி சாத்தியமாயிற்று? நீதிக்கும் சனநாயகத்திற்குமான விடுதலைப் போராட்டம் உலக அரங்கில் முற்றிலும் அந்நியப்பட்டிருந்து மட்டுமல்ல, உலகின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும் ஆளாகியிருந்தது. சிங்கள அரசு ஒட்டுமொத்த உலக ஆதரவையும் தனக்காக்கி, ஈழத்தமிழர்களை அனாதரவாக்கி எதிர் நிலையில் நிற்கச் செய்ததை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?

சிங்களர் – தமிழர் என்ற இரு இனத்தின் பிரச்சனையாகப் பார்ப்பதினூடாக இதனை ஒரு சர்வதேசப் பிரச்சனையாகவும் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக முள்ளிவாய்க்கால் யுத்தம் முழுக்க முழுக்க சர்வதேச பரிமாணத்தில் நிகழ்ந்த ஒரு யுத்தமாகும். ஆனால் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்கு கிடைத்த உலகப் பரிமாணம் – இரட்டை வாய்க்கால் (முள்ளிவாய்க்காலின் ஒரு பிரிவு இரட்டை வாய்க்கால்) படுகொலைகளுக்கு கிட்டாதபடி சர்வதேசங்களும் பார்த்துக் கொண்டன. இன்றும் அனாதரவாய் விடப்பட்ட ஈழத்தமிழ்மக்கள் சர்வதேசக் கதவுகளைத் தட்டி 'எமக்காகவும் கொஞ்சம் பேசுங்களேன்' என்று முறையீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஓர் உண்மையை முதலில் புரிந்து கொள்வோம். விடுதலைப் போராட்டம் நேரடியாக ஒரு நாட்டின் ஆதரவின்றி ஒருபோதும் சாத்தியமாகாது. நடந்து முடிந்த பேரழிவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான். இலங்கை ராணுவம் குண்டுவீசி தமிழ்மக்களைக் கொன்றிருந்தாலும் அது ஒரு கொலை இயந்திரம், அந்தக் கொலை இயந்திரம் செயல்படுவதற்கான வாய்ப்பையும் ஏற்பாடுகளையும், இராஜபக்சே அரசு, சர்வதேச வியூகத்தினூடாகவே அடைந்து கொண்டது. இராஜபக்சேக்கள் அடைந்த வெற்றி என்பது, அவர்கள் அமைத்த சர்வதேச வியூகத்திலேயே தங்கியிருந்தது. இராஜபக்சே அரசு 192 நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்த போது, புலிகளுக்கு ஒரு நாட்டின் ஆதரவும் இல்லாத நிலையிலேயே யுத்தம் நிகழ்ந்தது. இது கண்ணுக்கு முன் நிகழ்ந்த பச்சை உண்மை. இந்நிலையில்  ஈழத் தமிழர்கள் வெற்றி பெறுவதற்கான அடிப்படை நிபந்தனை பன்னாட்டு உறவிலும் சர்வதேச வியூகத்திலும் தளமிடப்படுகிறது. விடுதலைக்கான ஈழத்தமிழர்களின் கவனம் இப்போது அதை நோக்கியே திரும்பவேண்டும்.

சீனா, பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவின் பாரம்பரிய எதிரிகள். இம் மூன்று நாடுகளின் நெருக்கமான உறவை இராஜபக்சே தன் பக்கம் பெற்றுக் கொண்டார். சீனா குறித்தும், இந்தியா குறித்தும், பின்வருமாறு விளக்கினார்.

'இந்தியா எமது அண்டை நாடு. சீனா நட்பு நாடு'

தம்மிடையே வரலாற்றுப் பகைமையையும், எல்லைத் தகராறுகளையும் கொண்ட இருபெரும் நாடுகளை இவ்வாறு கூறி இராஜபக்சேயால் அணைக்க முடிந்தது. அதேவேளையில் ஈழத்தமிழரின் தொப்புள்கொடி உறவு மாநிலமாக தமிழகம் இருக்கும் இந்தியாவுடன், தமிழகத்துக்கும் இந்தியாவுக்குமிடையே உறவைப் பகைமையாக ஆக்கியது மட்டுமன்றி, மரண அழிவை இந்திய மக்கள் பொருட்படுத்தாத அளவுக்கு ராஜதந்திர நகர்வுகளைச் செய்ய முடிந்தது.

இது ஓர் இலகுவான காரியமல்ல. இதனை சிங்கள அரசு சாதித்தது. உலகில் வேறு எந்த அரசினாலும் செய்யமுடியாத அளவுக்கான நகர்வு இது. வெளிப்பார்வைக்கு இராஜபக்சே ஒரு முரடன் போல் தெரிந்தாலும், உண்மையில் வேறு எவராலும் சாதித்திருக்க முடியாத அளவுக்கு ராசதந்திரத்தைக் கையாண்டார்.

முதல்வட்டத்தில் ஆசியாவின் இருபெரும் நாடுகளும் இலங்கைக்கு தோள்கொடுத்த அதே வேளையில், இரண்டாவது வட்டத்தில் அடுத்த இரு ஆசிய நாடுகளாக பாகிஸ்தானும் ஈரானும் இருந்தன. புலிகளை சர்வதேச பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டு யுத்தத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை உயிராகக் கொண்டு, தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடாகவும் உலக அரங்கில் பட்டியலிடப்பட்டிருந்தது என்பது குறிக்கப்பட வேண்டியது. இது உயிர்த்துடிப்பான உதாரணம். புலிகளுடனான யுத்தத்தில் இலங்கை அரசுடன் இடக்கரமும் வலக்கரமுமாக இந்தியாவும், பாகிஸ்தானும் கைகோர்த்துக் கொண்டிருந்த வேளையில் 2008, நவம்பர் 26-ம் நாள், இந்தியாவைக் கதிகலங்க வைத்த மும்பைத் தாக்குதலை பாகிஸ்தான் சூத்திரதாரியாய் நின்று நடத்தியது. அப்படியிருந்தும், இந்திய அரசையும் பாகிஸ்தான் அரசையும் இடமும் வலமும் என கரம்பிடித்து வழி நடத்த முடிந்தது.

புலிகளைப் பயங்கரவாதி என்று வர்ணித்தால், அது ஒரு சிறிய அமைப்பு மட்டுமே. ஆனால் பாகிஸ்தான் அணு ஆயுத பலத்துடன் கூடிய பயங்கரவாதத்தினை ஏற்றுமதி செய்யும் அரசு என்பதில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடம் மாற்றுக் கருத்தில்லை. அப்படியிருந்தும் இந்தியாவை ஒரு கரத்திலும் பாகிஸ்தானை ஒரு கரத்திலும் இணைத்துக்கொண்டு வீறு நடைபோட முடிந்திருக்கிறது. என்ன நடந்தது, இது எப்படி நடந்தது என்பதை நாம் ஆற அமர இருந்து அசை போட்டு, எடைபோட வேண்டும்.

அடுத்து ஈரான் விடயம். அமெரிக்காவின் நோக்கில் ஈரான் ஒரு பயங்கரவாத அரசு. ஈரான், சிரியா, வடகொரியா என்ற மூன்றையும் பயங்கரவாதத்தின் அச்சுநாடுகள் (evil axis) என அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ. புஷ் வரையறை செய்தார். அந்த ஈரானையும் அமெரிக்காவையும் இங்கு இராஜபக்சேயால் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற சக்கரத்தின் ஆரக்கால்களாக மாற்ற முடிந்தது.

கியூபப் புரட்சியாளர்களான கேஸ்ட்ரோ, சேகுவேராவை புரட்சியின் முன்னணிப் பாத்திரங்களாய் அங்கீகரித்து – அவர்கள் படங்கள் போராளிகளின் வீடுகளை அலங்கரித்தன. 2009, மே நடுவில் யுத்தம் முடிவுக்கு வந்த பத்து நாட்களின் பின், மே-28-ல் ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை மீது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதம் நடந்தவேளை, கியூபா அதற்கு எதிராக இலங்கையை ஆதரித்தது. தன்னைச் சுற்றியுள்ள வெனிசுலா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளையும் இலங்கைக்கு அணைவாக இருக்கச் செய்தது மட்டுமல்ல, இலங்கையின் இனப்படுகொலையை நியாயப்படுத்தி, இலங்கையை ஆதரிக்கும் மாற்றுத் தீர்மானத்தை கியூபா முன்மொழிந்தது. இன்றுவரை சிங்கள இனவெறி அரசுக்கு கியூபாவின் தொடர்ந்த ஆதரவு கண்டு வெம்பிப் போன நமது தமிழ் இளையோர்கள் கேஸ்ட்ரோவை, சேகுவாராவை நெஞ்சிலிருந்தும், மேலே அணிந்த பனியன்களிலிருந்தும் அகற்றியுள்ளனர். இதுவல்ல முக்கியம். சோசலிச முகாமிலிருந்த ஒரு நாட்டை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது என்ற போர்வையைக் கையில் எடுக்க வைத்து மார்க்சிய-லெனினியத்தைக் கை கழுவி விடச்செய்த இராஜபக்சேயின் சாதுரியம்தான் இங்கு முக்கியப் பிரச்சனை.

அதே வேளையில் உலக அரசியலின் இருபெரும் வல்லரசுகளான அமெரிக்காவினதும், ருசியாவினதும் அனைத்து வகை ஆதரவுகளையும் பெற்றுக் கொண்டது இலங்கை. இவைகளைக் கூர்ந்து நோக்கினால் உலக அரசியலில் எந்த அரசையும் எப்படிக் கையாள வேண்டும் என்பதை, இலங்கை அரசிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் எடுக்கத் தவறக்கூடாது. சிங்கள அரசு தனது மதியூக வியூகத்தால் ஈழப் போராட்டத்தினை இந்துப் பெருங்கடலில் மூழ்கடித்துவிட்டது. அந்த ஆழ்கடலின் அடியிலிருந்து மூழ்கடிக்கப்பட்டுள்ள ஈழவிடுதலையை எப்படி மீட்டெடுக்கப் போகிறோம் என்ற சிந்தனையே இப்போது தலையாயது.

(உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழ சுதந்திர சாசனம் ஒன்றை முரசறைந்து தெரிவிப்பதென 2012-ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இலண்டன் மாநகரில் நடந்தேறிய ”நாடு கடந்த தமிழீழ அரசின்” நான்காவது அரசவை அமர்வில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நிகழ்ந்தேறி நான்கு ஆண்டுகள் முடிவடையும் வேளையில் மே மாதம் 15-தொடங்கி 18-ந் தேதி வரை அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம், லங்காஸ்ரர் நகரில்  தமிழீழ சாசனம் நிறைவேற்றி முரசறையப்பட்டது.

மே-மாதம் 15-முதல் 18 வரை நிகழ்வுற்ற  ”நாடுகடந்த தமிழீழ அரசின்” சுதந்திர சாசன மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வில்
“அய்க்கியத்திற்காகப் போராடுவோம்;
போராடுவதற்காக அய்க்கியபடுவோம்”
என்ற குறிக்கோளை முன்வைத்து இக்கட்டுரை வாசித்தளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் அடிமைத்தளையை அரசியலமைப்புச் சட்டம் மூலமாக சட்ட விரோதமாக்கி, மக்களுக்கிடையே சமத்துவத்தை உறுதி செய்த, சகல மக்களின் வாக்குரிமையை உறுதி செய்த அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த  தாடியஸ் ஸ்டீப்ன்ஸ் வாழ்ந்த நகர் லங்காஸ்ரர் என்பது முக்கியத்துவம் கொண்டது. அமெரிக்க குடியரசுகளின் தலைவரான  ஆப்பிரகாம் லிங்கனின் விடுதலைப் பிரகடனத்தின் 150- வது ஆண்டில் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.)

நிகழ்ச்சி உரையை இங்கு கேட்கலாம்.

நன்றி: பொங்குதமிழ் 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?