அன்னையர் வளாகம்

(மணிப்பூர் மாநில அரசின் கலை இலக்கிய அமைப்பு [Manipur State Kala Akadami] நான்காம் இலக்கிய விழா [4th Festivel Of Literature] 2015 ஜுன் 6, 7 ஆகிய இரு நாட்களில் தலைநகர் இம்பாலாவில் நடந்தது. அந்நிகழ்வில் பங்கேற்ற பா.செயப்பிரகாசத்தின் பயண கட்டுரை இங்கே) 



இமா (Ima) என்றால் - மணிப்புரியில் அம்மா என்று பொருள்; கெய்த்தல் (Keithel)  என்றால் சந்தை. நகரின் மையத்தில் அமைந்துள்ளது இமா சந்தை. பெண்கள் மட்டுமே ’இமா’ சந்தையில் விற்பனையாளர்கள் (Sellers); நான்காயிரம் பெண்கள்! மதம், சாதி வித்தியாசமின்றி பெண்கள் ’இமா மார்க்கெட்டில்’ வணிகம் செய்யலாம், மாநகராட்சி உரிமம் வழங்குகிறது.

உலகில் பெண்களே நடத்தும் ஒரேயொரு சந்தை இது. சுற்றுலாப் பயணிகளின்   தனிக் கவர்ச்சி இதுதான். மாநிலத்தின் வணிகப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு செலுத்துவதும் பெண்கள்தாம்.

அங்காடி வளாகத்தில் கிடைக்கும் பொருட்களுக்கு கணக்கு இல்லை. காய்கறி, கீரை, அரிசி, பயறு, பருப்பு, இறைச்சி, மீன், கருவாடு - உணவுப் பொருட்கள்; ஆடைவகைகள், உல்லன் ஆடைகள், எண்ணெய், நாட்டு வாசனைத் திரவியங்கள் என வாழ்வுக்குத் தேவையான அத்தனையும் கிடைக்கின்றன . விற்பனையாளர்களான பெண்டிர் வளாகத்தில் நுழையுமுன் கைகூப்பி வணக்குவதைக் காண முடிந்தது. இமா மார்க்கெட் சம்பாதனை கீழ்த்தட்டு, நடுத்தட்டுப் பெண்கள், கிராமப்புறப் பெண்டிரின் குடும்பத்தைக் காக்கிறது.

நடுவாக ஓடி, நகரை இரண்டாகப் பிரிக்கிறது ஆறு. அதன் இணைக் கோட்டில் சந்தை. நூற்றாண்டாக வளாகம் பழைய ஓட்டுச் சாய்ப்புக் கட்டிடத்தில் இயங்கியது; 2011- லிருந்து  மாநகராட்சி கட்டித்தந்த புதிய கட்டிடவளாகத்தில் இயங்குகிறது. வளாகத்தில் இரு பெரும் பிரிவுகள்- காய்கறி, கனிகள் உணவுப்பொருட்கள் ஒரு புறம்; ஆடை முதலானவை  இன்னொரு புறம்; 88 விழுக்காடு பெண்டிர் மணிப்பூரின் பூர்விகக் குடியினரான ‘மெய்தி‘ இனத்தவர்; மீதி இஸ்லாமிய, கிறித்துவப் பெண்டிர். இவர்களில் 96 விழுக்காட்டினர் தலைநகர் இம்பாலாவின் கிழக்கு, மேற்கு சமவெளிகளைச் சேர்த்தோர். நான்கு விழுக்காட்டினர் மலைவாழ் மக்கள்; பெருமளவில் மலைப் பிரதேச மக்களின் வருகையும் விற்பனைமுயற்சியும்  புதிய சந்தை வளாகத்துக்கு (Nagampal Keithal)  வித்திட்டது. சந்தையின் ஒவ்வொரு பகுதி ஒவ்வொரு வகைப் பொருட்களின் முனையம். புராணச் சந்தை என்றோரு பிரிவு பெயரைப் போலவே புராதனமானது. அதைத்தொட்டு லட்சுமி மார்க்கெட்; எல்லாச் சந்தை ஓரங்களிலும் நடை பாதைகளிலும் உரிமம் பெறாத பெண்கள் விற்பனை செய்கிறார்கள்.

விற்பனை உரிம அட்டை ஒவ்வொரு மகளுக்கும் வழங்கப்படுகிறது. உரிம அட்டை  ரூ 15. இங்கு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள நியாயவிலைக்கடை அட்டைகள்  போல  மாத வாடகைக்கு விடுகிறவர்கள், பணத் தேவைக்கு அடகு வைப்பவர்கள் என உரிம அட்டை படாதபாடு படுகின்றது. யார் வசம் அட்டை உண்டுமோ, விற்பனைக்கு ஒதுக்கப்பட்ட இடம் (Space) அவருக்குச் சொந்தமாகி விடும். இம்பால் மாநகராட்சியின் கண்காணிப்பையும் மீறி இவ்வகை உள்காரியங்கள் நடைபெறுகின்றன. எங்கும் போலவே இங்கும் மாநகராட்சியின் துணையுடன் இந்த உள்மோசடிகள் நடக்கின்றன.

மணிப்பூர் ஏழு மலைமாநிலங்களில் ஒன்றாக இருப்பினும் அது இந்தியாவின் ஒருபகுதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவினுள் இருந்தபோது அது இந்து சமூகம் தான். இந்து சமுதாயத்தின் கலாச்சாரம் ஆணாதிக்க  கலாச்சாரம்தான்.  ஆணதிக்க கலச்சாரத்தின் பலமுணைகளை நொறுக்கித் தள்ளியிருக்கிறார்கள் மணிப்பூர் பெண்கள். இந்நிலை அவர்களை வந்தெய்துமுன் நெடிய போராட்டத்தை சுமந்திருக்கிறார்கள்.

கோர் என்னும் அமைப்பு (Centre for organization Research and Education, Manipur) “இந்தச் சந்தை வெறுமனே ஒரு பொருளாதார மையம் அல்ல. அவர்கள் தமக்குள் செய்திகள் பரிமாறிக் கொள்கிற இணையமாக இருக்கிறது. சமூக அரசியல் நிகழ்வு நிரலை அலசுகிறார்கள். அன்றாடம் மதிய உணவு வேளையில் சமூக, அரசியல் பிரச்சனையில் தடையில்லாத் தகவல் ஓட்டம் அவர்களை விழிப்புடன் இருக்கச் செய்கிறது. 1904 -ல், 1939- ல் பிரித்தானியருக்கு எதிரான பெண்களின் எழுச்சி இந்தச் சந்தை வளாகத்திலிருந்து தான் மேலெழுந்தது.   வணிக முனைவோர் மட்டுமல்ல  , தலைமைத் தகைமைக்கும், புரட்சிகரக் குணாம்சத்துக்கும்   அன்னையர் வளாகப் பெண்களே முன் மாதிரிகள் ” என்று   கணித்துள்ளது.1939- ஆம் வருடத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து மகளிர் நடத்திய ‘திருப்பியடி போராட்டம்’  குறிப்பிடத் தக்கது.தலைநகர் இம்பாலில், 1939-ல் பெண்டிர் ஆங்கிலேயரை எதிர்த்து தீரமிகு போராட்டத்தை   நடத்தியதின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மக்கள் திரள் ஓட்டம் நடத்தப்படுகிறது என அறிந்தேன்.

பொதுவாய் வரலாற்றின் செயற்கரிய செயல்வடிவம் ஒவ்வொரு பிரதேசத்திலும் நினைவு கூறப்படுதலைக் கேள்விப்பட்டிருக்கிறோம்; பெரும்பாலும் ஆண்களே வரலாற்றில் பெரும் வகிபாகம் கொண்டுள்ளதால், அவர்களை நினைவு கூர்வதாக இருக்கும்: ஆனால் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து முறியடித்த பெண்களின் மாட்சிமையைக் கொண்டாடும் நாள் - அது டிசம்பர் 12 அவர்களின் நாள். 2015-ல் அவர்கள் திரண்டு ஓடிய எழுச்சியை நினைவு கூர் நாள்.


இம்பாலின் அன்னையர் வளாகப் பெண் - பெண்ணாற்றலின் (Women empowerment) முழுப்பரிமாணத்தையும் தன் சமுதாயத்துக்கு வழங்குபவள். மணிப்பூர் பிரதேசத்தில் பல குடும்பங்களில் பெண்கள் தீர்மானிக்கும் சக்தியாக நிற்கிறார்கள்.
அது ’இமா’ சந்தையில் மட்டுமல்ல, மணிப்பூர் முழுக்கவும் சில்லறை வணிகம் பெண்டிரின் கையில் இருக்கிறது. சுயமான உழைப்பில் உண்டாகிற சம்பாத்தியம் குடும்பத்துக்குப் போய்ச் சேருகிறது. அந்த வாய்க்காலை பெண்கள் ஆற்றுப் படுத்துகிறார்கள். சந்தையில் நின்று வியாபாரம் செய்யும் மகளிரில் 60 விழுக்காட்டினருக்கு நடப்பு வயது 40 முதல் 60; பிள்ளைகளின் படிப்பு, அவர்களை மேலே உயர்த்துவதற்கான பொறுப்பு,  திருமணம் - இவைகளுக்கு ஆகும் செலவு எனவரிசையாய் எதிர்கொள்கிறார்கள். அது அவர்களுக்குவாழ்வு முறை.

“நாங்கள் பள்ளிக்கூடம் ஒதுங்க முடியல; பிள்ளைகளாவது படித்து மேலே வரட்டும் ”

மகளிர் சந்தையின் முந்திய தலைமுறை கல்வியறிவு இல்லாதது; அதற்காக அவர்கள் இப்போதும் வருந்துகிறார்கள். ‘இமா சந்தையில்’ ஒரு பெண் பள்ளிக்கூடம் செல்லும் தன் மகளிடம்’கால்குலேட்டரில்’ கணக்குப் போடக் கற்றுக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றேன். விற்பனையாளர்களில் 1.5 விழுக்காட்டுப் பெண்கள் பட்டம் பெற்றவர்கள். ஆனால் பட்டம் பெறுவதற்கும் சந்தை வியாபாரத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பிள்ளைகள் வளர்ப்பு முழுப் பொறுப்பினையும் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.  பிள்ளைகள் வேலைக்குப் போய் வசதியாய் ஆன பிறகும், இந்தப் பெண்கள் ‘மகளிர் சந்தையை’ விடவில்லை. இதை விட்டுவிட்டு என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணுகிறார்கள். படித்து வேலைக்குப் போன ஒரு பெண் அந்நிறுவன வேலையை விட்டுவிட்டு, மகளிர் சந்தையில் துணி விற்பனை செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். நான்கைந்து மொழிகளில் பேசி விற்பனை செய்வது அப்பெண்களுக்கு கூடப்பிறந்த பழக்கம். ஒரு பெண் ”நான் அரசுத் தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலராக இருக்கிறேன்” என்று சொல்லி அதிர்ச்சியளித்தார்.

ஒரு அதிகாரியின் மனைவியாயிருக்கலாம்; அமைச்சர் வீட்டுப் பெண்ணாயிருக்கலாம். மற்றொருவர் சொகுசு பங்களா வட்டார வசிப்பவராக இருக்கலாம். அன்னையர் வளாகத்துக்குப் போய் பொருட்கள் வேண்டிவர அனைவரும் விரும்புகிறார்கள். கருணையினால் அல்ல, கடமையை நிறைவேற்றுவதாக எண்ணுகிறார்கள். தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ளும் மனநிறைவுடன் அவர்கள் திரும்புகிறார்கள்.

உரிமம் பெற்றும், உரிமம் பெறாமலும் சாலையோரத்திலும் நடைபாதைகளிலும் கடை நடத்தும் பெண்களில் 300 பேர் விதவைகள். காவல் துறையின், இராணுவ அதிகாரத்தின் போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் துணைவியர்தாம் இந்த 300 விதவைகள். உரிமம் இல்லாமல் கடை நடத்துவது எந்த நேரத்திலும் தடை செய்யப்படலாம் எனத் தெரிந்தும், தன்னைச் சார்ந்த உயிர்களை வாழச் செய்வதற்காக கெடுபிடிகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது இந்த விதவைகள்.

1592 - 1652 வாக்கில் பல இடங்களில் மணிப்பூர் சமஸ்தானமாக இருந்தபோது சந்தைகள் உருவாக்கப்பட்டன. இந்த திறந்த வெளிச் சந்தைகள் அனைத்தும் மகளிரால் நடத்தப்பட்டன என 1786 மணிப்பூர் அரசு ஆவணம் குறிப்பிடுகிறது. இவை வெளிச் சந்தைகளானமையால் பெரும்பாலும் முற்பகலில் காலைப் பொழுதுகளில் மட்டும் இயங்கின. பிறகு தற்காலிக கூரையுள்ள கூடங்களின் (Shed)  கீழ் மகளிர் விற்பனை செய்தனர். கூடங்களினுள் வந்த பின் காலையிலிருந்து மாலைவரை என விற்பனை நடந்தது. இந்த  சந்தைக்குப் போட்டியாக சில வியாபாரிகளின் தூண்டுதலுடன் செல்வந்தர் சிலர் 1948 - 52 வாக்கில் தற்காலிக விற்பனைக் கூடங்களை இடித்துத் தள்ள முயன்றனர். மகளிர் பெரும் அளவில் திரண்டதால், இடித்துத் தள்ளும் முயற்சி கைவிடப்பட்டது. “இமா மார்க்கெட்" என அழைக்கப்படும் அன்னையர் வளாகத்தில் இன்றளவும் இப்போர்க்குணம் முண்டிக் கொண்டு நிற்கிறது.

“விதியே விதியே, என் செய நினைத்தாய் எம்மை”

என காலத்தின் குடுமியை கைப்பிடித்து ஆட்டும் வல்லமை தொடர்வதற்கு  1904- லிலிருந்து  ஊட்டப்பட்ட போர்க்குணம் உரம்.
சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த விழையும் எந்த ஒரு நாட்டின், பிரதேசத்தின் கொள்கை வகுப்பாளர்களும் பெண்ணாற்றலின் முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாய் - பாலின நீதியின் அடையாளமாய் ‘இமா மார்க்கெட்டை’ கொள்ளவேண்டும். அவரவர்தம் நாட்டிலும் நட்டு வைக்கக் கடப்பாடுடையவர்கள். இது ஒரு ஆதர்சம்  மட்டுமல்ல: பெண்ணினத்தை  விடுதலை செய்யும் ஒரு செயல்முறை. பெண்ணாற்றலைசமுதாய உந்து சக்தியாய் பலவேறு தளங்களில் பங்கேற்கச் செய்த லெனினின் “சோவியத் ருசியா” நினைவுக்கு வருகிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ