பூக்கூடையில் மினுக்கும் கத்தி

2008ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதை மேலாண்மை பொன்னுசாமி பெற்றிருக்கிறார். விருது அறிவிக்கப் பெற்றதும் அவருடைய முதல் நேர்காணல் குமுதம்,(7.1.09) ச.செந்தில்நாதன் எழுதிய பாராட்டுக் கட்டுரை (தீக்கதிர் 29.12.2008) மூன்றவதாய் என் கையிலிருக்கிற கட்டுரை- புத்தகம் பேசுது (சனவரி 2009) இதழில் “கரிசல் காட்டின் வார்த்தை மனிதன்.”

எந்த வம்பு தும்பும் பண்ணாமல் மூன்று இதழ்களும் அவருடைய படைப்புகளின் ஆதார அம்சமான சமூக நெருக்க மேன்மையை மேல் நோக்கிக் கொண்டு சென்றிருக்கின்றன. அவரது இலக்கிய மேன்மை யாது என்ற கேள்வி எழுப்பி, வம்பு, தும்பு பண்ணுகிறவர்கள் இனிமேல் வரலாம்.

சிலநேரங்களில் சில படைப்பாளிகள், சாகித்ய அகாதமி விருது பெறாததினாலேயே தகுதி பெற்றவர்களாகி விடுகிறார்கள். சாகித்ய அகாதமி விருது பெறாதவர்கள் என்று ஒரு தனித் தகுதியே உருவாக்குவது நல்லது. உண்மையில் இந்த விருதை விட மேலானதும் சாதாரண மக்களின் எழுத்துக்காரன் என்பதுமான உயரிய விருதை மேலாண்மை ஏற்கனவே பெற்றுள்ளார்.

மேலாண்மை பொன்னுசாமி எந்த நிலையிலிருந்தும் எழுத முடியும் என்பதின் சாட்சியாய் நிற்பவர். எழுத்துக்கு நிலை முக்கியமல்ல என்று எளிய சாதாரணவாழ்வு நிலையிலிருந்து எழுதி அறிமுகம் பெற்றவர். குமுதம் இதழ் குறிப்பிட்டிருப்பது போல், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த படைப்பாளி அவர். த.மு.எ.ச. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கலை இலக்கிய அமைப்பு. மேலாண்மை பெற்ற விருது த.மு.எ.ச. முகாமுக்கு கிடைத்ததாக குமுதம் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு கட்சிக்குக் கிடைத்த முதல் சாகித்ய அகாதமி விருதாகவும் நீட்டிப்பு பெறுகிறது. த.மு.எ.ச போன்ற கலை இலக்கிய அமைப்புகள் சமுதாயம் பற்றிய புரிதலில் இயங்குபவை. அதன் சமுதாயப் புரிதலில் கட்சி அரசியல் முக்கிய பங்காற்றுகிறது.

அரசியல் நீக்கிய இலக்கிய வெளிப்பாடு என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவ்வாறு இயங்கவும் ஏலாது. உலையில் போடுமுன் அரிசி கழுவுவது போல், களைந்து நீக்கி விடக்கூடியது அல்ல, அது அரிசிக்குள் அமர்ந்திருக்கும் சத்து போன்றது. ஒவ்வொருவருக்குள்ளும் வேர்கொண்டு இயங்கும் சமூகம் பற்றிய பார்வையே அரசியல். சமூகத்துள் இயங்கும் எவரொருவரும் மனிதன் தாண்டியும், சுற்றிலும் இயங்கும் நிலைமைகளுக்குத் தொடர்பற்றும் சிந்தித்து விட முடியாது. இந்த உணர்தல்களின் திரட்சியே ஒருவருக்குள் தான் என்ற ‘சுயம் ‘ உருக்கொள்ளச் செய்கிறது.

தனி இலக்கியக் கோட்பாடு என்ற சிலாகிப்பில், அதை அப்படியாக உருவகிப்பதில் ஒரு அரசியல் ஓடுகிறது. அவ்வாறு பயணிப்பதாக எண்ணுகிற தனி இலக்கியப் பயணிகளுக்கு எதிர்த் திசையில் வெளிப்படையான அரசியலோடும், அரசியல் இயக்கத்தின் வழிகாட்டுதலோடும் இலக்கியப் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருப்பவர் மேலாண்மை பொன்னுசாமி.

1.“இன்றைய யுகத்தில் உலகளாவிய வர்த்தக ஆதிக்கத்தில் யார் ஈடுபட்டாலும், அது ஏகாதிபத்தியம்தான். அதில் இடது வலது என்ற வேறுபாடு இல்லை. ஏகாதிபத்திய தத்துவமே அச்சாணியாகிவிடுகிறது.” (ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் - மு.திருநாவுக்கரசு)

இந்திய முதலாளிகள் உலகளாவிய வர்த்தகப் போட்டியில் குதித்து, பன்னாட்டு முதலாளியமாக மாறி வெகு காலமாகிவிட்டது. பன்னாட்டு முதலாளியம் சொந்த மண்ணையும் சுரண்டும், எல்லைகள் தாண்டியும் விழுங்கும். கியூபா போல சுயதிட்டமிடல், அதன்வழி மக்களின் சுய பொருளியல் வாழ்வு என்ற கருதுகோள் தான் மார்க்சிய வழியாகும். ஆனால் பன்னாட்டு முதலாளிய டாடா நிறுவனம் தனது கார் உற்பத்தி சாலை அமைக்க, நந்திக்கிராம், வட்டார மக்களது வாழ்வாதாரங்களை அபகரித்துக் கொள்ள அனுமதித்து மக்களின் எதிரியாக முகம் காட்டியது மார்க்சிஸ்ட் அரசு. சமூக அக்கறை கொண்ட கலை இலக்கியவாதி என்ற முறையில் மேலாண்மையோ, அல்லது கலை இலக்கிய அமைப்பு என்ற முறையில் த.மு.எ.ச. வோ அசூயை கொண்டிருக்க வேண்டும். அவர்களிடமிருந்து கிடைத்தது பெருத்த மௌனம்.

‘காட் ஒப்பந்தத்தையும் உலகமயமாக்கத்தையும் எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்டுகள் பத்தாண்டுகளுக்கு முன் பரிகசிக்கப்பட்டார்கள்’ என்று கூறுகிறார் மேலாண்மை. சமூக எழுச்சியோடு இணைந்து செல்கிற எவரும் பரிகசிக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை. யதார்த்தத்தில் அதே கால கட்டத்தில் நாங்கள் வேறு தளத்தில் நின்று போராடினோம். மக்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கி முளைக்கிற எந்த ‘மெகா’ திட்டங்களையும் மக்கள் சக்தி எதிர்க்கும் என்கிற போது, நந்திகிராம் முயற்சி உலகமயத்துள் சேர்த்தியா, அல்லது மக்கள் மயத்துள் அடங்குவதா? மக்கள் மயமாக இருந்திருந்தால் மக்களே அதைப் பாதுகாத்திருப்பார்கள். இல்லாதபோது, மக்கள் சக்தி எதிர்க்கும் என்பதற்கு தமிழகத்தில் எழுந்து, பீறிடும் கொந்தளிப்புகளுக்கு தலைமைச் சாட்சியாக இருக்கும் நீங்கள் (மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கம், கந்தர்வ கோட்டை எரிசாராய தொழிற்சாலை) நந்திக் கிராமில் தொண்டையை இறுக்கிக் கொண்டீர்களே, நீங்கள் சுட்டிக் காட்டும் பரிகசிப்பு மறுபடி உங்களை நோக்கியே அரங்கேற வாய்ப்புத் தந்தீர்களே, அது எப்படி ?

2.சாதிய ஒடுக்குமுறை, மதவெறிக்கு எதிரான உங்களின் போராட்டப் பயணம் தொடரப்படும். பாராட்டுக்குரியது தொடரத்தானே வேண்டும். ஆனால் சாதிக்குள், மதத்துக்குள் அடங்கிய தமிழர்கள் தான் முல்லைப் பெரியாறு விவசாயப் பெருமக்களாக இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் பிறகும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த சண்டித்தனம் செய்கிற கேரள இடது சாரி அரசை கலைஞனின் மனசாட்சி கண்டித்திருக்க வேண்டுமா இல்லையா? இடது சாரி அரசாக இருந்தாலும் தன்னினம் காக்கிற இன உணர்வோடு இருக்கிற போது, தமிழக விவசாயிகள் வெம்புகிறார்களே என்ற இன உணர்வை கழற்றி வைத்து விட்டீர்கள்.

கேரள அரசு, தனது அரசு என்ற தன்னிலையிலிருந்து பிறக்கிற மௌனம் த.மு.எ.ச. வின் மௌனம். இந்நிகழ்வில் தனது மக்கள் பற்றிக் கவலை கொள்ளாமல் கட்சிக்காக தமிழக விவசாயிகளை புறக்கணித்து “இரு மாநில அரசுகளும் பேசித் தீர்க்க வேண்டும்” என்று ஒதுங்குகிற சர்வ தேசியம் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது என்று கொள்ளலாமா?

“உலக மயம் இன்று உழவர்களைத் தாக்குகிற போது, அறிவு ஜீவிகள் மௌனம் காக்கிறார்கள்” (குமுதம் 7.1.2009) என்று குறிப்பிடுகிற மேலாண்மை அவர்களே நல்லது! உலகமயம் தாக்கினால் உழவர்களுக்கு வேதனை. கேரளமயம் தாக்கினால், வேதனையில்லை என்ற புதிய அகராதியை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள். ஆனால் ஐந்து தென்மாவட்டங்களின் விவசாயிகளின் நெஞ்சாங்குலையை வகிர்ந்து எடுக்கிற காரியத்துக்கு துணைபோகிறபோது, “ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய, விவசாயப் பெண்களைப் பற்றி” எழுதியதாக நீங்கள் உரிமை கொண்டாடுவது யதார்த்தமாக இல்லாமல் போய்விடுகிறது.

மார்க்சிய ஒளியில் சமூகத்தின் பிரச்னைகளைப் பார்க்கிறீர்கள். மற்றெல்லாப் பிரச்னைகளையும் மார்க்சிய ஒளியில் பார்க்கிற நீங்கள், தமிழ்த் தேசிய நலன்கள் என்று வருகிறபோது மட்டும் கட்சி ஒளியில் பார்க்கிறீர்கள் என்று தானே அர்த்தம். 1950, 60களில் தி.மு.க.வின் வளர்ச்சியும், அந்தக் கால கட்டத்தில் வரலாறு உங்களை விலக்கிவைத்திருந்ததும் தமிழ்த் தேசிய நலன்களை ஒதுக்கிய சர்வதேசியத்தால் விளைந்த வரலாற்றுப் பிழை என்பதை உணருவீர்களா?

ஒரு படைப்பாளி வேறு எவரினும் மேலாய் சுயசிந்தனையோடு இயங்கக் கடமைப்பட்டவன். சுயசிந்தனையோடு என்பது தன் மக்களுக்குத் தான் நேர்மையாக இருத்தல் என்பதை அடிக்களனாகக் கொண்டது. இந்தச் சுயசிந்தனைதான், சமூகத்தின் மனச் சாட்சியாக படைப்பாளியை இயங்கவைக்கிறது. நாமெல்லாம் இந்த உறவின் அடிப்படையில் இயங்குபவர்கள் என்ற நேயத்தில், தமிழ்த் தேசிய நலன்கள் பற்றி பரிசீலனை செய்யுங்கள் என்று கோரலாமா? மக்கள் என்று குறிப்பிடுவது தேசிய இனம் தான். என்று மார்க்சியம் வரையறுக்கிறது. “இந்த மார்க்சிய அளவு கோலை சுலபமாக முறித்துப் போட்டு, முறிந்த குச்சி கொண்டு முதுகும் சொறிந்து கொள்கிறீர்கள். ஒடுக்கு முறை என்பது நீங்கள் கருதுவது போல வர்க்கம் என்ற ஒற்றைத் தளத்தில் மட்டும் உருவாவது அல்ல. மதமாக இனமாக பல வகைகளில் உருவாகும் என்பதை ஏற்கிறீர்களா?

3.“தன்னை உலக தாதாவாக வெளிப்படுத்திக் கொள்ள அமெரிக்கா வியட்னாமில் கால் வைத்த போது, வியட்னாம் விடுதலைக்கு ஆதரவாய் குரல் தந்தீர்கள். கியூபா விடுதலைக்குப் போராடிய போது, எழுச்சிக் குரல் உங்களுடையது. சிலியில் உதித்த முதல் கம்யூனிச ஆட்சியை ஏகாதிபத்தியம் கொலை செய்த போது எதிர்ப்பில் உங்களோடு நாங்களும் கரம் கோர்த்தோம். ஈராக் மீது நிகழ்த்திய ஆக்கிரமிப்பைக் கண்டித்து “பீரங்கிக்கு எதிராய் தூரிகைகள்” என்று நீங்கள் அணிதிரட்டியதில் நாங்கள் கலந்து கொண்டிருக்கிறோம். இப்போதும் பாலஸ்தீனிய விடுதலைக்காக குரல் கொடுத்து அந்த மக்கள் இஸ்ரேலிய விமானங்களின் குண்டுப் பொழிவால் துவம்சம் செய்யப்படுகிறபோது, கண்டித்து அந்த மக்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறீர்கள்.

விடுதலை எழுச்சிகளுக்கு உலகெலாம் ஓடிப் போய் தாங்குற நீங்கள் இங்கிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கிற ஈழம் - அங்கு நடைபெறும் விடுதலைப் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் மௌனம் சாதிக்கிறீர்கள். அது தொப்புள் கொடி உறவாகவும் இருக்கிறது. சர்வதேசியவாதிகளுக்கு தொப்புள் கொடி உறவு தேவை இல்லை போல.

குறிப்பிட்ட இனம் ஒரு நாட்டில் ஒடுக்கப்படும்போது, வேறு நாடுகளிலுள்ள அதை ஒத்த இனம் அல்லது இன்னொரு நாட்டிலுள்ள அதன் சொந்த இனம் ஒடுக்கப்படும் இனத்துக்காக குரல் எழுப்புவது, ஆதரிப்பது இயற்கை. பிரிட்டனில் அயர்லாந்தினர் மீது ஆங்கிலேயர் இன ஒடுக்கு முறை புரிந்தபோது, அமெரிக்காவில் வாழ்ந்த அயர்லாந்து இனத்தவர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அயர்லாந்தின் விடுதலைக்காக உதவினார்கள். (ஐயாயிரம் மைல்களுக்கு அப்பாலிருக்கிற இந்தத் தமிழகத்தில் கூட 1950களில் வளரும் நிலையில் அப்போதிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அயர்லாந்தின் விடுதலைக்காக பேசியதை நான் கண்டிருக்கிறேன்.)

கனடாவில் பிரெஞ்சு இனத்தவர் (கியூபெக்) மீது ஆங்கிலேயர் இன ஒடுக்குமுறை புரிந்தபோது, அதற்கெதிராக சொந்த ரத்தத்துக்காக பிரெஞ்சுக்காரர்கள் குரல் எழுப்பினார்கள். ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் மீது குண்டு பொழிந்து கொலை செய்வதினும் கூடுதலாய், இலங்கை இராணுவம் தமிழின மக்களைச் சாகடிக்கிற போது, உங்கள் மௌனம் அவர்களை கொல்லாமல் கொல்கிறது. மட்டுமல்ல காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நிலையில் நாட்டுப் பற்றோடு விளங்கும் உங்களிடமிருந்து எதிர்ப்புக் குரலும் வருகிறது. (தமிழ் ஈழத் தனியரசுக்கு ஆதரவுக்குரல்களா? - உ.ரா.வரதராசன்- 19.12.2008 தினமணி)

சுயநிர்ணய உரிமை அல்லது விடுதலைப் போராட்டம் என்பதை, ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் ஒடுக்குமுறை இருக்கிறதா இல்லையா என்ற அடிப்படையிலிருந்து தீர்மானிக்க வேண்டும். யார் ஆதரிக்கிறார்கள் யார் எதிர்க்கிறார்கள் என்ற பக்கத்திலிருந்து முடிவு காணவேண்டியது அல்ல இது. அண்மையில் தனி நாடான கொசோவா விடுதலையை, போஸ்னிய விடுதலையை அமெரிக்கா ஏகாதிபத்திய சக்தியும் அதன் தொங்கு சதைகளும் ஆதரிக்கின்றன என்ற காரணத்தினால் அந்த விடுதலைகளுக்கு எதிர்ப்பு நிலை எடுக்க வேண்டியதில்லை. செர்பானிய இனத்தின் ஒடுக்கு முறை இந்த இன மக்கள் மீது இருந்ததா இல்லையா என்பது தான் அடிப்படை.

தென்னாசியாவில் தன்னை ஒரு வல்லரசாக உருவாக்கிக் கொள்ள என்னும் இந்திய விரிவாக்க நலனுக்கு இலங்கைத் தீவு இரு நாடுகளாகப் பிரிவது, உகந்தது அல்ல. ஓரரசாக இலங்கை தனது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியாக இருக்கவேண்டும் என்பதே இந்திய ஆளும் வர்க்கக் குழுக்களின் நலனுக்குகந்தது. எனவே தமிழீழக் கோரிக்கையை தனது நலனுக்கு ஏற்ற வகையில் ஓரளவு தீர்த்து வைப்பதும், இலங்கைப் பேரின வாதத்துக்குட்பட்டு சமரசமாகப் போக வைப்பதுமான இந்திய அரசின் நிலைப்பாடே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாக இருக்கிறது. அவ்வாறெனில் இந்தியா வல்லரசாக வளருவதற்கும் இலங்கையின் பேரின ஒடுக்குமுறைக்கும் துணை போகிற நிலையில் இருக்கிறீர்கள். தருக்க ரீதியாக அந்த இடதுக்குத்தானே நீங்கள் தள்ளப்படுகிறீர்கள்.

கவிஞர் இன்குலாப் கூறியதை அப்படியே நான் வழி மொழிகிறேன். “இதே ஒடுக்குமுறை சிங்களவருக்கு நடந்திருந்தால் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்து, சிங்கள இனம் சிறுபான்மை இனத்தவராக இருந்து - தமிழர்களால் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்குமானால், அப்போதும் நாங்கள் எதிர்த்துக் குரல் கொடுத்திருப்போம். மார்க்சியவாதிகளாகிய நாங்கள் சிறுபான்மை சிங்களர் பக்கமே அப்போது நிற்போம். சிங்களரின் சுய நிர்ணய உரிமை, அது தடை செய்யப்படும்போது, தனிச் சிங்கள நாட்டு விடுதலைக்காக நாங்கள் துணை நின்றிருப்போம்”. ஆனால் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம், ஈழத் தமிழர்களின் துயரம், தாயகத் தமிழர்கள் எதிர்வினைகள், இவைகளைக் கண்ட பின்பும் இத்தனையும் உள்விழுங்கி அசையும் மலைப்பாம்பான இந்தியாவுக்கு, “தனித் தமிழ் ஈழ ஆதரவுக் குரல்கள், தமிழ் மக்களின் மனித நேய உணர்வுகளை மடை திருப்ப முயல்வதை அனுமதிக்க முடியாது.” (தினமணி - 19.12.2008 உ.ரா.வரதராசன் கட்டுரை) என்று துணைக் குரலாய் ஒலிக்கிற போது இனத்துரோகம் என்ற சொல்லால் இதைச் சுட்டுவதோடும் போதாது மார்க்சிய துரோகம் என்ற சொல்லும் பொருத்தமாய் அமைகிறது.

குமுதம் நேர்காணலில் இதுவரை சிந்தித்தவை பற்றி மட்டுமே நீங்கள் பேசி இருக்கிறீர்கள். நீங்கள் இதுவரை சிந்திக்காதவை பற்றி நாங்கள் பேசுகிறோம். இனிமேலும் தொடர்ந்து நீங்கள் மார்க்சிய ஒளியிலேயே சிந்திக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.

“வன்னிப்பகுதி மீதான படையெடுப்பில் அப்பாவி மக்கள் எவரும் கொல்லப்படவில்லை. புலிகள் மட்டுமே கொல்லப்படுகிறார்கள்” என்று ராஜபக்சே கூறுவதை இந்தியா போலவே நீங்களும் நம்பித் தொலைக்கிறீர்கள் போல. புலிகளைத் தானே கொல்கிறார்கள், கொல்லட்டும் என்று தனது விரிவாக்க நலனில் இருந்து ஊமங்காடையாக உட்கார்ந்திருக்கும் இந்தியாவின் செயல் முறை போல் உங்களது அசைவும் அதனோடு இணைந்து போவதாக இருக்கிற போது ஒன்று புரிகிறது. நீங்களும் இந்தியாவின் இடத்தில் இருக்கிறீர்கள்.

இன்று பாசிச இஸ்ரேல், பாலஸ்தீன காஷா பகுதி மீது நடத்துகிற போரை நிறுத்தச் சொல்கிற இந்தியா, அதை விடக் கொடுமையான இலங்கைத் தாக்குதலை ஒப்புக்குக் கூட நிறுத்தச் சொல்லவில்லை. இரண்டாம் உலக யுத்தத்தில் நாகசாகி, கிரோஷிமா மீது அமெரிக்க வீசிய அனுகுண்டுகளை விட அதிக கதிர்வீச்சும் சேதாரமும் விளைவிக்கக் கூடியவை கொத்துக் குண்டுகள் (Cluster bombs). இந்தக் கொத்துக் குண்டுகளை போரில் பயன்படுத்தக் கூடாது என கடந்த டிசம்பரில் நார்வே, சுவிடன் ஆகிய நாடுகளின் முயற்சியில் போஸ்லேயில் கூடிய 103 நாடுகள் கூட்டத்தில் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வன்னியில் இடம் பெயர்ந்த அகதிகள் முகாம்கள் மீதே இந்தக் கொத்துக் குண்டுகளை வீசி கொத்து கொத்தாய் மக்களைக் கொன்று குவித்திருக்கிறது இலங்கை இராணுவம். இஸ்ரேலை கண்டிக்கிற நீங்களும் இந்தியாவைப் போலவே இந்த கொடுஞ்செயலை கண்டித்ததாய் தெரியவில்லையே.

சிங்கள ராணுவத்தால் துவம்சம் செய்யப்படுகிற தமிழர்களையும், அவர்களுக்காக குரல் கொடுக்கிற தமிழக ஆறு கோடி தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் விட, சிங்களர்களே முக்கியம் என்று உதவுகிற இந்தியக் கரங்களை முறிக்க எங்களுடன் உங்கள் கரங்களும் எழுமா என்று கேட்கத் தோன்றுகிறது.

கள முனையில் இறந்த பெண் புலிகளின் உயிரற்ற உடலை சிங்களச் சிப்பாய்கள் பாலியல் வன்முறை செய்த புகைப்படங்களும், செய்திகளும், ஒலிக் காட்சிகளும் கண்டிருப்பீர்கள். சிங்கள சிப்பாய்களே அதை படம் எடுத்துக் கொண்டாடி இருக்கிறார்கள். உயிரற்ற உடலை- செத்த பிணத்தை வெறி கொண்டு நோக்கும் போது, பெண்கள் கூட அல்ல, பெண்ணுடல்கள் மீது மீறப்பட்ட பாலியல் உரிமைகள் குறித்து பேசப் போகிறோமா? அவர்களை புலிகளாகப் பார்க்கவா, தமிழ்ப் பெண்களாகப் பார்க்கவா? கேள்விகளை யாரை நோக்கி வீச? பெண்ணுரிமை பேசும் அனைவரிடமுமா?பெண்கள் பற்றி எழுதுகிற நாம் எல்லோருமே, குறிப்பாக விவசாய பெண்களைப் பற்றி அதிகம் எழுதி இருக்கிற நீங்களுமே பதில் சொல்லி ஆக வேண்டும். அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் இதுவரை சிங்களத்தி ஒருத்தியையாவது தீண்டியது உண்டா, ஆயிரம் பொய்ச் செய்திகள் பரப்பும் சிங்கள வெறியர்கள் கூட அப்படி ஒரு செய்தி சொன்ன வரலாறு உண்டா என்ற கேள்வியையும் எழுப்பி விடை சொல்லி ஆக வேண்டும்.

ஒரு படைப்பாளியின் ஒட்டு மொத்தப் பணியையும் இந்த ஒரு கோணத்தில் இருந்து மட்டுமே மதிப்பிடத் தோன்றுகிறதா என்ற கேள்வி எழலாம். என்ன செய்வது, கோட்பாடு என ஒன்றிருக்கிறதே! வேறு எவருடையதாக இருந்தாலும், ஒதுக்கி தள்ளி விட முடியும். ஆனால் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே. குறிப்பாக அரசியல் கோட்பாட்டின் நிலைபாட்டிலேயே படைக்கிற ஒருவரை அந்த அளவுகோல் கொண்டு தானே பார்க்க வேண்டி இருக்கிறது. பூக்கூடைக்குள் கை விட்டால் கத்தி தட்டுப்படுகிறது! கூப்பிய கைகளுக்குள் மறைந்திருக்கும் ஆயுதத்தை விட மலர்களுக்கு நடுவே மறைத்து வைத்திருக்கும் ஆயுதத்திற்கு என்ன பெயர் சூடுவது?

நன்றி: குமுதம் தீராநதி பிப்ரவரி 2009, கீற்று - 24 பிப்ரவரி 2010

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?