புலிகள் அல்ல, புலிவேடக்காரர்கள்

ஈழத் திசைக்கு ‘வடஞ்சுருட்டி’ மூலை என்று ஒரு பெயருண்டு. காட்டு வேலைக்குப் போய், அவிழ்த்து விட்ட, மாடு, வண்டிகளின் வடத்தை (கயிறு) சுருட்டுவதற்கு முன், ஈழத்திசையில் ஒரு மின்னல் மின்னினால் மழை கால் வாங்கி வந்துவிடுமாம்.


பூமி வெப்படைவதால் ‘ஓசோன்’ படலங்கள் ஓட்டையாகி தற்கால பருவநிலை சிதைந்து பாழாகியுள்ளது. அது போல், நாடாளுமன்ற ‘‘ஸீட்டுக்’’ காக அடித்துக் கொள்ளும் தேர்தல் வெப்பத்தில், ஈழத்திசையில் சூல்கொண்ட மேகக் கூட்டம், திசை மாற்றி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தாயகத் தமிழினத்தின் எதிர்வரும் தலைமுறைகளின் வாழ்வும் ஈழமழையால் பசுமையாய் வடிவுகொள்ளும் என்றிருந்த எதிர்பார்ப்பு பொய்யாகியது.

நாசமாக்கினார்கள் தமிழ்த் தேசியம் பேசிய அரசியல் தலைமைகள். ஒரு இடத்துக்கும், இரண்டு இடத்துக்கும் ஓடி ஓடி, இந்த அணியா, அந்த அணியா என்றலைந்து, எங்கெங்கே உட்கார வேண்டுமோ அங்கே உட்கார்ந்து கொண்டார்கள். புரட்சிப் புயல், எழுச்சித் தமிழர், தமிழ்க்குடி தாங்கி, ‘புதுப் புனல்’ வலது கம்யூனிஸ்டு - எல்லோரும் ஸீட்டுக்கு ஏங்கிகளாக மாறி அலைந்த கேவலம் நிகழ்ந்தது.

இலங்கையின் செய்தித்துறை அமைச்சர் லக்ஸ்மண் யாப்பா இருமாதங்கள் முன்பு சொன்னதை இங்கு நினைவு கொண்டாக வேண்டும்; ‘‘இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்தச் சூடான நிலைமை தணிந்து விடும். இதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை’’ என்று சொன்னார்.

‘‘தேர்தல் குளிர் அடிக்கப் போகிறது. ஈழப்பிரச்னையை எடுத்து வீசிவிட்டு, எல்லோரும் தேர்தல் போர்வையைப் போர்த்திக் கொள்ளப் போகிறர்கள்’’ என்று ஊடுருவிப் பார்த்து லக்ஸ்மண் யாப்பா சொன்னதின் மெய்ப் பொருளைக் கொள்ளவேண்டும். கொள்கையற்றதுகள் தமிழக அரசியல் தலைமைகள் என்ற உண்மையை அந்த வாசகம் மெய்ப்படுத்தியிருக்கிறது.

தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் தங்கள் ஆற்றலை தாங்கள் அறிந்திருக்கவில்லை. மக்களால் வழங்கப்பட்டிருந்தது இந்த ஆற்றல். எதிரிகளை துல்லியமாக குறிபார்த்து அடிக்கும் வித்தையை தந்தது அது; தமிழகம் முழுக்க சிறுகுடிசை முதல் உயர் நடுத்தர வாழ்வு வரை எழுந்து உயர்ந்த தமிழின உணர்வு அலை எனும் அபூர்வ ஆற்றலை, இச்சக்திகள் தி.மு.க, அ.தி.மு.க என்ற தலைமை பூதங்களிடம் மாற்றி அளித்தனர். ஈழப் பிரச்னையில் ஒருமித்த நிலைப்பாடுடைய ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தாமே ஒரு அணியாக உருக்கொள்ள வேண்டுமென்பது மக்கள் விருப்பம்.

ஒரு தானி (ஆட்டோ) ஓட்டுநர் சொன்னார். ‘‘இவங்க ஒன்னாச் சேர்ந்தா, நாற்பது ஸீட்டையும் பிடிச்சிரலாம் ஐயா’’

அவர் ஒருவர் என்றில்லை; தமிழக மக்களில் பாதிப் பேர், இந்தச் சொல்லால் தான் பதிலளித்தார்கள். தேர்தலில் பங்கேற்காத, தமிழ்த் தேசிய நலன்களை, ஈழத்தமிழரது விடுதலையை முன்வைக்கும் பெரியார் திராவிடர் கழகம், தமிழத் தேசிய இயக்கம், தமிழ்த் தேசப்பொதுவுடமைக்கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் போன்றவை மக்களுடனிருந்தன. முன்னர் தனித்தமிழால் தனிமைப்பட்டு, இப்போது காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்னைகளாலும் ஈழத் தமிழர் பிரச்னையாலும் மக்களோடு இணைந்து விட்ட தமிழுணர்வாளர்கள் தீவிரமாய் முன்வந்தார்கள். இத்தனையையும் திரட்டி, தலைமைப் பூதங்களுக்கு எதிராய், தங்களுக்கென திடமான வாக்கு வங்கியை தமிழ்த் தேசிய சக்திகள் உருவாக்கியிருக்க முடியும். இந்தத் தேர்தல் போல், இனியொரு தேர்தல் வர முடியாது. தமிழ்த் தேசியம் சார்ந்த ஒரு வாக்குவங்கியை உண்டு பண்ண முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. தமக்கென தனித்த வாக்குவாங்கியைக் கொண்டுள்ளதாக கருதப்படுகிற தலைமை பூதங்களிடம் ஓரிடத்துக்கும் ரெண்டிடத்துக்கும் போய் சரணாகதியாகினர்.

சரணாகதிப் படலத்தை முதலில் தொடங்கியவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர். அகில இந்தியத் தலைமை நேரடியாக அ.தி.மு.க. மகாராணியைக் காண போயஸ் தோட்டம் புகுந்தது. உடன்பாடு பற்றிப் பேசியது; காத்திருந்த மார்க்சிஸ்டுகள், அடுத்தாக போயஸ் தோட்டம் புகுந்தனர்.

ஒன்றுக்கும் இரண்டுக்குமாக அவருக்கு இவ்வளவு, எனக்கு இவ்வளவுதானா என்று பேரம் பேசினர். இடப்பிரச்னையில் ஈழத்தின் பேரவலம் தூரப்போனது. அதே நேரத்தில் மூன்று கட்சிகளில் கால்வைத்து, கால் எங்கிருக்கிறது என்று கண்டுகொள்ளவிடாமல் பேரம் பேசிக்கொண்டிருந்த தமிழ்க் குடிதாங்கிதான் தமிழர்களை ஆச்சரியப்படவைத்ததில் முதல்வர்.

உண்மையில் - தமிழ்த் தேசிய நலன்விரும்பிகள் ஓரணியாய் சேருவதற்கான முயற்சியை பழ.நெடுமாறனும் தொல்.திருமாவளவனும் மேற்கொண்டார்கள். ‘‘அப்படியொரு அணி உருவாக வேண்டுமென்கிற பெரு விருப்போடு எத்தனை முறை ஒவ்வொரு கட்சி அலுவலகத்துக்கும் அலையாய் அலைந்தேன்’’ என்று தொல்.திருமாவே ஒரு அரங்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இவர்களிருவரும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன; மக்களுடைய எதிர் பார்ப்பு ஒன்றாகவும், அரசியல் இயக்கங்களின் ஆசை, செயற்பாடு வேறொரு திசையிலும் இருந்தன என்பதை இது காட்டுகிறது.

முதலாளிகளுக்கும் ஆதிக்கக் குழுக்களுக்குமான ஜனநாயகம் இது. அதற்கான தேர்தல் இது. எல்லோரும் பங்கேற்கும் தேர்தல் என்பதின் மூலம் மக்களுக்கானதாக வேடமிட்டு வருகிறது. தேர்தல் மூலம் நிலைப்படும் முதலாளிகளுக்கான அரசியல் அதிகாரம் அனைத்து மனிதர்களையும் சீரழித்துவிடும், நகக் கண் அளவுகூட கொள்கையாளராய் இருக்க எவரையும் விட்டு வைக்காது என்பதற்கு, தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளும் பொதுவுடமைக் கட்சிகளும் நேரடி நிரூபணமாகினர். ஈழவிடுதலைப் போருக்கு எதிராக எப்போதும் கொடியேந்தும் ஜெயலலிதா, ஈழத்துப் பிரச்னையில் எப்போதும் நிரந்தர வேடதாரி கருணாநிதி - ஆகியோரை தலைமையாக்கி தேர்தல் நடத்தும் கேவலத்துக்கு வந்தனர். தாமே தலைமைச் சக்தியாகி ஈழத் தமிழர்களின் துயர் நீக்கும் வாய்ப்பை இடறி விட்டனர்.

கடைசியில் ஈழத் தமிழருக்கான யாதொரு வேலைத் திட்டங்களும் இல்லாது முடங்கிப் போயிற்று. தாய்த் தமிழக மக்கள் தங்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்ற ஈழத் தமிழரின் எதிர்பார்ப்புகளை சிதைத்தார்கள்.

யாழ்ப்பாணம், வன்னி வட்டாரங்களில் மட்டுமல்ல; கொழும்பிலும், கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தின் தேடுதல் வேட்டை, சித்திரவதை, மரணக்குழி எப்போதும் தயாராக உள்ளன. வெள்ளைவேன் கடத்தல்கள், கொலை அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிக்கின்றன. யுத்தகளப் பகுதிக்கும், யாழ்வட்டாரத்துக்குள்ளும் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட, அவுட்லுக் வார இதழின் செய்தியாளர் கவிதா முரளிதரன் ‘‘உங்கள் புத்தர் இதையா சொன்னார்’’ என்று கேள்வி எழுப்பினார். ‘‘அங்குள்ள நடைமுறைகள் இங்குள்ள தமிழரை இயற்கையாக பாதித்தது என்று கூறுவதைவிட பாதிக்கும் என்று கூறுவதே சரி. தொப்புள்கொடி உறவு...... எல்லாவற்றையும் இழந்த அவர்களுக்கு சிறிய ஆறுதலாக போர்நிறுத்தத்தைக் கூட நம்மால் தர முடியவில்லை’’ என்று கூறிய அவர் தொடர்கிறார்.

‘‘நாம் இருக்கிறோம் தோள் கொடுக்க என்று சொல்லி அவர்களை ஏமாற்றுகிறோமா என்று தோன்றுகிறது’’

ஆமாம், நமது தலைவர்கள் தேர்தல் கூட்டு என்ற பெயரில் அதை வெறிறிகரமாகச் செய்து முடித்துள்ளனர். தமிழ்த் தேசிய நலனின் அக்கறையோடு இருக்கும் கட்சிகள் - எதைச் செய்ய மாட்டார்கள் என்று கருதினோமா, அதனைக் கொஞ்சமும் தயக்கமேதுமின்றி செய்தார்கள்.

8.4.2009 அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலைஞரையும் நடுவணரசையும் எதிர்த்து வீராவேச உரைநிகழ்த்திய புரட்சிப்புயல், அந்த இடத்துக்கு ஜெயலலிதாவை, அ.தி.மு.வை ஏன் கூட்டிவர முடியவில்லை? கலைஞரை, நடுவணரசை சாடுவது அந்த அம்மாவுக்கு உடன்பாடானது தானே? அவ்வாறானால், ஈழப்பிரச்னையில் ஆத்மார்த்த ஈடுபாடில்லாத ஒரு நபர் செல்வி என்பது தானே பொருள்? திருமங்கலம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் செல்வியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஈழப்பிரச்னை பற்றி உதடு பிரிக்காத புரட்சிப்புயல், இந்தத் தேர்தலிலும் அந்தவழி மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம். கருணாநிதி மீது முக்கி முக்கி குற்றச் சாட்டுக் குண்டு வீசுகிற தமிழ்க் குடிதாங்கி, அதே குண்டுகளை போயஸ் தோட்டம் கருகும் வண்ணம் வீசக்கடமைப்பட்டவரா, இல்லையா?

கூட்டணி தர்மம் பற்றி இவர்கள் நிறைய, நிறைய முத்துதிர்க்கிறார்கள்; முன்னர் பகையாளிகள்; இப்போது பங்காளிகள். தோசை திருப்புவது போல் திருப்பிப் போடலாம். ‘‘கொள்கை முரண்பாடுகள் உள்ள கட்சிகள், தேர்தல் கூட்டணியில் இடம் பெறக் கூடாதென்றால் இந்தியாவில் யாரும் யாரோடும் கூட்டுச் சேர முடியாது’’ எழுச்சித் தமிழர் கூறுகிறார், அதனால் ‘‘இலங்கைத் தமிழர்களைக் காக்க உள்ளது ஒருகை தான், அந்தக்கையை விடமாடேன்’’ என்று கருணாநிதி உறுதியுடன் கூறியதை, ‘‘சோனியாகாந்தி ஒருவர்தான் எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை’’ என்று பின்பாட்டுடன் வழிமொழிபவராக வந்து நிற்கிறார்.

ஒரு சீக்கியனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், தமிழனுக்கு இல்லை. அமிர்தசரஸ் பொற்கோயிலில் ‘நீல விண்மீன் தாக்குதல்’(ழுpநசயவழைn டீடரந ளுவயச) என்றபெயரில் சீக்கியர் படுகொலை நிகழ்த்தப்பட்ட 1982 முதல் சீக்கிய இனப் பயம் டெல்லி அரசின் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

டெல்லிக்கு அருகிலேயே இருக்கிறது பஞ்சாப். டெல்லியின் தண்டுவடமாக அதன் புவியியல் அமைப்பு ஆகிவட்டது.

மற்றொன்று: போரிடும் இனம் சீக்கியஇனம். வரலாற்றின் தொடக்கந் தொட்டு, படையெடுப்புகளையும் ஆக்கிரமிப்புகளையும் எதிர் கொண்டு போராடிப் போராடி வீர உயிர்ப்பு கொண்ட இனம். பஞ்சநதிகள் ஓடும் பூமியில் போருக்குச் சென்றவர் ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும். ஒவ்வொரு பெண்ணும் போர் வீரனை விரும்பினாள். போருக்குக் செல்லும் போது கூட, தன்னைக் கூட்டிச் செல்ல வேண்டுமென அவள் கேட்டுக்கொண்டாள்.
‘‘நீலக் குதிரை ஓட்டிச் செல்பவனே
என்னையும் உன்
முதுகுச் சேனத்தில் கட்டிக்கொள்.
இரவு இறங்குகிற போது
நீலக் குதிரை வீரனே
என்னை வெளியே எடுத்து
கைகளில் ஏந்திக் கொள்’’
வீரமும் மானமும் உள்ள இனமாக சீக்கிய இனம் இன்றும் பரிணமிப்பதற்கு இத்தகு வலுவான அடிப்படைகள் உள்ளன.


‘முதுகில் வேல்பட்டு, என் மகன் இறந்தானெனக் கண்டேனாகில், அவனுக்குப் பால்தந்த மார்பகங்களை அறுத்தெறிவேன்’ என்று வீரம் பேசிய புறநானூற்றுத் தாய் இங்கேயும் உண்டு. ஆனால் அவள் செத்துவிட்டாள். வாய் வீரம் பேசிப் பேசியே புறநானூற்றுத் தாயைப் புதைத்து தன் வாழ்வை உயிர்ப்பித்துக் கொண்டவன் இன்றைய தமிழன்.

புவியியலில் தமிழகம் டெல்லியிலிருந்து வெகுதூரத்திலுள்ளது; தென் கோடியில் அது ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக 14ம் நூற்றாண்டு வரை தனித்த ஆட்சியைக் கொண்டிருந்த தமிழர்கள் - இன்று எங்கோ வட கோடியில் அதிகாரம் மையம் இருப்பதால் அதில் பங்கேற்க துடிக்கிறார்கள். மற்ற மாநிலத்தவரை விட, விசுவாசமுள்ளவராக டெல்லிக்கு காட்டிக் கொள்வதின் வழி, அதிகாரத்துக்குள் செல்ல முனைகிறார்கள். எதையாவது செய்து, தேர்தல் திருவிழாவில் முண்டியடித்து டெல்லிக்குப் போய்விட நினைக்கிறான் இன்றைய தமிழன். அதிகார மையத்துக்கு எப்போதும் விசுவாசமுள்ள அடிமை தேவைப்படுகின்றான்.

சீக்கியர்கள் தமக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராக நீதிமன்றத்தை சூறையாடினார்கள் யாரும், எதுவும் சொல்ல இயலவில்லை. அந்த இனத்தைப் பகைத்துக் கொள்ளப் பயம். தன்மேல் செருப்படி வீசிய சீக்கிய செய்தியாளரை ‘மன்னித்து விட்டேன்’ என்கிறார் ப.சிதம்பரம்; ஒன்றும் செய்யாதீர்கள் என்று சொன்னது சிதம்பரத்தின் நாக்கு அல்ல; டெல்லிக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நடுநடுங்கவைக்கும் அச்சம். மறுபடியொரு முறை சீக்கிய இனத்தை உசுப்பிவிட்டு, இந்தியா இரத்த பூமியாவதை அதிகார மையம் விரும்பவில்லை.

கோவையில் வழக்குரைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் (9.4.2009) ஒரு முழக்கம் தென்பட்டது.
‘‘மானமுள்ள சீக்கியன் செருப்பிலே அடிக்கிறான்
வெறுப்பிலே அடிக்கிறான்
மானங்கெட்ட தமிழன் ஸீட்டுக்காக அலையறான்’’
சுயநலம் தமிழனை சுத்தமும் மானமில்லாமல் செய்து விட்டது. மெய்ப்படுத்தும் காரியத்தை தமிழ்த் தலைவர்கள் செய்து முடித்து விட்டார்கள்.

மக்கள் எப்போதும் நியாய, அநியாயங்களுக்கெதிராய் போராடும் நேர்கோட்டிலேயே சென்றுகொண்டிருக்கிறார்கள். சொன்ன சொல் காத்தல், நேர்மை, உண்மை, இதனாலேயே ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்கொள்ளும் தீரம் - மக்களிடம் நிலவுகிறது. அவர்களிடம் இன்னொரு சுயபுத்தியில்லாத சிந்தனையில்லாத குணமும் இருக்கிறது. தலைவர்கள் வழிகாட்டுவார்கள் என்கிற நம்பிக்கை அது. சூதும் வாதும் மிக்க தலைமைகள் நேர்கோடுகளை வளைத்து, ஒடித்து, முறித்து, தன்முன்னேற்றம் ஒன்றையே பிரதானமாய் வைப்பதை, இந்த மக்களும் ஆதரித்துப் பேச வேண்டியவர்களாய் ஆகிவிடுகிறார்கள். மக்களின் சிந்திப்பை பிறழ்வழியில் செலுத்தி, அதுசரி என கெட்டுப் போக வைப்பவர்கள் இந்ந முன்னோடிகள் தாம்; இவர்களுக்கு ஏற்ப இவர்கள் வழியில் நடந்து செல்லும் அடிமைச் சிந்தனையை மக்களுக்குள் செலுத்துவது இவர்கள் தாம்.

முன்னுதாரணமாக இருக்கவேண்டிய முன்னோடிகளின் இலட்சணம் இது.

தமது சொந்தங்களுக்காக உலகம் முழுவதினும் தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ‘‘பிரிட்டன் பிரதமர் இப்போதே போர் நிறுத்தம் செய்ய பேச வேண்டும். இனப் படுகொலைக்கு உடனே முடிவு கட்டுங்கள்’’ என்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் நடாளுமன்றத்தின் முன் ஒரு லட்சத்திற்கும் மேலாய் தமிழர்கள் இரவு, பகல் தொடர்ந்து போராட்டம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சாகும் வரை நாடாளுமன்ற முன்வெளியில் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள தலைமைகள் நாடாளுமன்றத்திற்குள் போவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர் பருத்தியன் தனது கட்டுரையில் குறிப்பிட்டது போல தற்போது சிங்கள அரசுக்கு நெருக்கடியை தந்துகொண்டிருப்பது உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற ஈழத் தமிழர் நடத்துகின்ற போராட்டங்கள் தாம். அந்தப் போராட்டங்கள் உண்டு பண்ணுகிற அழுத்தங்கள் தாம்; ஈழத் தமிழர் பிரச்னையில் இதுவரை எதிர்முகம் கொண்டிருந்த உலக நாலடுகள், இந்த அழுத்தத்தால், போர்நிறுத்தம் செய்யச் சொல்கிற துடிப்புகள் தாம்.

கொடுங் குளிர்நாடுகளில் ஈழத் தமிழர்கள் ஒற்றுமையை உயர்த்துகிற வேளையில் அதில் கால்பங்கு பணிமட்டுமே ஆற்றிய இங்குள்ள தமிழன் தேர்தல் குளிரில் முடங்கிக் கிடக்கிறான.

தன்னலம் விட்டு தன்மானத்தோடு ஒன்று சேர்ந்தவர்கள் புலம் பெயர் தமிழர்கள்.

தன்மானம் விட்டு தன்னலத்தோடு கூட்டுச் சேர்ந்தனர் இங்குள்ள தமிழர்கள்.!

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் புறப்பட்ட இடத்தில் கொளத்தூரில் 13.04.2009 முதல் நூறு பெண்கள் சாகும் வரை உண்ணாநோன்புப் போரை மேற்கொள்கிறார்கள். தேர்தல் அரசியலின் துர்நாற்றம் இந்தக் கூட்டணிக் கட்சிகளால் அவர்கள் மேல் பரவாமல் காக்க விழிப்புடனிருப்போம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?