விடியும் வரை பெய்த கவிதை மழை


புதுவை இரத்தினதுரை எனும் ஈழ விடுதலைக் கவிஞனை நினைக்கிறபோது சட்டென்று இரு நினைவுகள் என் மீது கவிகின்றன.


மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டிற்கு, 2002 அக்டோபரில் யாழ்ப்பாணம் போன போது, எங்களைக் கண்டதும் கட்டிஅணைத்து வரவேற்றார். மாலை மறைந்து இரவு வரும் அரையிருள் நேரம்; தமிழகத்தில் அப்போது நிலவிய நெருக்கடி ஆட்சியின் காரணமாய், எங்கள் வருகை நிகழுமோ, நிகழாதோ என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது.


மறுநாள் முதல் நான்கு தினங்கள் நடைபெறும் மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டிற்கு அவர் பொறுப்பாளர்.

“நீங்கள் புறப்படும் முன் இடைஞ்சல் ஏதாவது ஏற்பட்டதா?” என்றார்.

ஒண்ணா, இரண்டா  ஒவ்வொன்றாய்ச் சொன்னோம். “உங்களைப் பார்த்த பிறகுதான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கிறது” என்றார்.


மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாடு எல்லோருடைய அய்க்கியத்தின் அடையாளமாக இருந்தது. யுத்த காலத்தில் எல்லோரையும் கூட்டி இவ்வாறான ஒரு கோரிக்கையை மேல் எடுக்க முடியாது. போர் நிறுத்த ஒப்பந்தக் காலத்திலேதான் அது சாத்தியப்படும் சூழல் உருவாகிறது. மாநாடு தொடங்குவதற்கு முந்தைய நாள் விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை செய்தியாளர் சந்திப்பில் பின்வருமாறு வலியுறுத்தினார்.

“இன்று உருவாகியுள்ள சமாதானக் காலத்தில் எமது போராட்டத்தின் நியாயத்தையும், நோக்கத்தையும் சிங்கள தேசத்தில் உள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு விளக்கும் நோக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது போராட்டம் தொடர்பாக, எமது இயக்கம் தொடர்பாக சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் நிலவும் தப்பபிப்பிராயங்களுக்கு விளக்கம் அளிக்க மாநாடு உதவும்.

“சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் எங்களுக்குமிடையிலுள்ள பெரும் இடைவெளியை நீக்குவதற்கு இந்த வாய்ப்பு உரிய முறையில் பயன்படுத்தப் பெறும்.”

மாநாட்டிற்கு பலருடைய வருகையும் அவர்களுக்கு முக்கியமாகப் பட்டது. சிங்களப் பகுதியில் ஈழத் தமிழர்களின் போராட்டம் பற்றிய நியாயமான உணர்வு பங்களிப்பு ஏற்பட வேண்டுமென்பதற்காக, இலங்கையிலிருந்து செய்தியாளர்கள், அறிஞர்கள், இலக்கிய வாதிகள் எனப் பலரையும் அழைத்திருந்தனர். தமிழகத்தின் பங்களிப்பு இல்லாமல் போய் விடக் கூடாது என நாங்கள் ஐவர் அழைக்கப்பட்டுச் சென்றிருந்தோம்.

“யாழ்ப்பாணத்தில் முன்னர் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. தமிழ் உள்ளங்களின் சங்கமமாகவே அது அமைந்தது. இந்த நிகழ்வு தமிழ், முஸ்லீம், சிங்கள உள்ளங்களின் சங்கமமாக அமையப் போகின்றது. சகல இன மக்களின் மத்தியில் இந்தச் சங்கமம் நிச்சயம் எழுச்சியை உண்டாக்கும். சகலரின் குரல்களும் இங்கு ஒலிக்கவிருக்கின்றன“ என்றார் புதுவை.

புதுவை மார்க்சிய அரங்கில் உருவாகி வந்தவர். தலித் விடுதலைக் கிளர்ச்சி  சாதி ஒழிப்பாக மேலெழுந்த ஆண்டுகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். மானுடத்தின தமிழ்க்கூடல் மாநாட்டினை சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் தாண்டிய மக்கள் சங்கமாக நிகழ்த்த எண்ணினார். மானுடம் என்பதன் உண்மையான பொருளில் நடத்திட விரும்பினார்.

1983 சூலை இனப் படுகொலையின் போது தோழர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்  போன்ற முன்னணிப் போராளிகள் வெளிக்கடை சிறையில் வன்கொலைக்கு ஆளானார்கள். படுகொலை நிகழ்வுக்கு கொஞ்சம் முன் 1983 பிப்ரவரி 24-ஆம் நாள் உயிருடனிருக்கும் போது தோழர் தங்கதுரை கைதாகி வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போது நீதிபதிக்கும் மற்றவருக்கும் உணர்த்தக் கூடிய ஒரு உரையை ஆற்றினார்.

“தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றேதான் எங்களது முற்றான பணியயன்று சொல்லிவிட முடியாது. எமது நோக்கு விசாலமானது. எங்கெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்குப் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது. அப்படி இருக்கையில் எமது சக தேசத் தவரான மக்களின், குறிப்பாக சிங்கள மக்களின் நலன் அதற்குள் அடங்காது எப்படிப் போகும்?”

தோழர் தங்கதுரை முன்மொழிந்த சர்வதேசியத்தை ஒளித்து வைத்துவிட்டு, சிங்கள மக்களுக்கு இனவெறி தேசியத்தை மட்டுமே ஊட்ட முயன்று, வெற்றியும் பெற்றனர் சிங்கள ஆளும் வர்க்கங்கள்.

“விடுதலையை நாங்கள் பெறுவதன் மூலம் எமது லட்சியம் மட்டுமே நிறைவேறுவது அல்ல, சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மை செய்தவர்களாவோம். காரணம், அதன் பின் இனப் பிரச்சினையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்களர் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விசயங்களில் அடிமைப்படுத்தப் பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும் தமக்கு உண்டான அரசியல், பொருளாதாரத் தளைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன் வருவர்”.

தங்கதுரை நீதிமன்ற உரையில் முன்மொழிந்தவாறு சிங்கள மக்களுக்கும் சிங்கள ஊடகங்களுக்கும் ஈழ விடுதலை பற்றி உள்விழுந்திருந்த எதிர்மறைப் புரிதலை அகற்றிடுவதற்கு, சிங்கள சிந்தனையாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு என பன்னோக்குத் திட்டமாக மாநாடு நடந்தது.

இன விடுதலைப் போர் சர்வதேசிய நோக்கோடு இணைந்தது என்பதை நான்கு நாள் நிகழ்வுகளும் விளக்கின ; பன்னோக்குத் திட்டமாக, அந்த மாநாட்டை வடிவமைத்து, நான்கு நாள்களிலும் நடத்திச் சென்றவர் புதுவை இரத்தினதுரை.

மாநாட்டுக்கான ஏற்பாட்டின் போது அவர் களைப்புற்றிருக்க வேண்டும். யாழ் பல்கலைக் கழகத்தின் அரங்கில் மாணவர், மாணவியர்கள் திரண்ட கூட்டத்தில் எங்களை வரவேற்று தமிழ்த் துறைத் தலைவர் சண்முகதாசா தலைமையுரையாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய உரையில் புதுவை பற்றிய குறிப்பிடல் அவ்வப்போது செய்தார். அரங்கின் பின்பகுதியில் ஒரு கோடியில் அமர்ந்திருந்த புதுவையை மேடையில் அமர்ந்திருந்த நாங்கள் காண முடிந்தது. அவர் களைப்புற்று கண்ணயர்ந்திருந்தார். திரும்பிப் பார்த்த மாணவர்கள் அவர் தூங்கிக் கொண்டிருப்பது கண்டு சிரித்தனர். சிரிப்பொலி கேட்டும் அவர் கண் விழிக்கவில்லை. கடும் உழைப்பின் காரணமாய் கண்ணயர்ந்து கிடக்கும் அந்தக் கவிஞனின் மேல் மதிப்பும், பரிவும் எங்களுக்கு அதிகமானது. எடுத்துக் கொண்ட பணி முடிக்கும் உத்வேகம், அர்ப்பணிப்பு என என்னதான் இருந்தாலும் உடலுக்கென்று வரையறை இருக்கிறது. எல்லை தாண்டி உழைக்கிற போது, உடல் அதற்கு மேல் இறுக்கிக் கசக்கி எடுக்க அனுமதிக்காது என்ற உண்மையை இதற்கு முன்னர் அனுபவமாக உணர்ந்திருந்த போதும், அதன் மேன்மையை உணரவைத்த காட்சி அன்றைய நிகழ்வு.

களமாடுவதிலும், கவிதையாடுவதிலும் புதுவை கடைசி வரை ஓயவில்லை.

ஒரு படைப்பாளி தன் சொந்த அனுபவங்களில் உயிர் வாழ்கிறான். படைப்பாளியின் சுயானுபவம் ஒரு துளியேனும் அதில் தங்கியிருக்கிற போது படைப்பு உயிர்ப்போடு நிற்கும்; ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவரவர் வாழ்வியல் சார்ந்து அனுபவம் ஒவ்வொரு வகையாய் அமையும். ஈழத்துத் தமிழர்களுக்குப் போரியலே வாழ்வியலாக ஆகிவிட்டதால், சுவாசம் கருமருந்தால் நிறைக்கப்பட்டிக்கிறது. அவர்களின் சுவாசமே தனது சுவாசமுமாக இருப்பதால், புதுவையின் கவிதைகள் அனுபவமாகப் பேசுகின்றன.
வெடிக்கும் எதிரிகணைகள் ஒவ்வொன்றுக்கும்
விரல்மடித்துக் கணக்கெடுத்தபடி இருந்தேன்
இடையிற் கண்ணயர்ந்து போனேன்
விழிப்புற்ற போதும்
வந்து வெடித்தன குண்டுகள்
மீண்டும் எண்ணத் தொடங்கினேன்
இடையிற் சிரிப்பு வந்தது, சிரித்தேன்
விளையாட்டாகிவிட்டது யுத்தம்.
அப்பாடா விடிந்துவருகிறது
இரவு எத்தனை குண்டுகள்
என்றாள் மனைவி.
எழுந்தமானத்தில் எழுபது என்றேன்
நேற்று?
என்பது
ஏன் பத்துக் குறைந்தது என்றாள்
நெடுங்கேணியில்தான் நிற்கிறான் கேட்டுப் பார்
“கேட்காமலா விடுவோம்?”
யுத்தம் அவர்களுக்கு சாதாரண அன்றாட நிகழ்வாய், விளையாட்டாய் ஆகிப் போனது. ‘விளையாட்டாகி விட்டது யுத்தம்’-என்று சாதாரணமாய்க் கடந்து போகிறார்.

களத்தில் நின்ற கவிஞர் அவர். கவிதை எழுத ஆரம்பித்தது தொட்டு இன்று வரை. அவரது பாடு பொருளில் பெருமளவு மாற்றமில்லை. மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் அவரது கவிதை பேசும். வதைபடுதல் ஒவ்வொரு இடத்தும் ஒவ்வொரு வகையாக வெளிப்படும் என்பது தவிர வேறொன்றுமில்லை.

வியட்நாம் போராட்டம் நிகழ்ந்த போது, ஒரு வியட்நாமியனாக அவர் கவிதை கலகம் செய்தது. சிலியில் அதிபர் ஆலண்டே கொல்லப்பட்டபோது, சிலிக் குடிமகனாக அவரது கவிதை கோபம் கொண்டெழுந்தது. 1971ஆம் ஆண்டில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது, அவர்களுடன் சேர்ந்து அவரது கவிதை அழுதது; யாழ்ப்பாணத்தில் சாதி ஒழிப்புப் போராட்டம் நடைபெற்ற போது, அந்தப் போராட்ட சக்திகளோடு இணைந்து அவருடைய குரல் ஒலித்தது.

“இப்போது தமிழ் இனத்தின் சார்பாக எனது குரல் கேட்கிறது. என்னுடைய முந்திய காலக் கவிதைகள் என்னைச் சூடு தணியாமல் வைத்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு என்னை ஒப்புக் கொடுத்திருக்கின்றன. இந்தப் பணி முற்றுப் பெறும் போது, வேறு எங்கு வரை குரல் கேட்கிறதோ, என்னுடைய கவிதைகளுமாக நான் அங்கு போய்ச் சேருவேன்”.

எந்த மக்கள் குழுவின் மீதான ஒடுக்குமுறைக்கும், அவர்களின் விடுதலைக்குமாக, பயணிப்பதே சர்வ தேசியம். தங்கள் கவிதைப் பயணம் மூலமாக மட்டுமல்ல, களப்பணியாலும் வளப்படுத்திய பாப்லோ நெருடா, நசீம் இக்மத், வால்ட் விட்மன், பாலஸ்தீனக் கவிஞன் மக்மூத் தார்வீஷ், கருப்பினக் கவிஞன் லாஸ்டன் ஹ்யூஸ் இவர்களின் திசைவழியில் புதுவை பயணிக்கிறார்.

அவர் போல் வாழுதல், இங்கத்திய தமிழிலக்கியச் சூழலில் ஓர் அற்புதமான புனைவாகவே தோன்றும், நமது தமிழிலக்கியப் பணிகள் - போர் முனைப் பணிகள் அல்ல. பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும். ஆனால் போராட்ட உணர்வு கூட அற்றவர்களாய், பெரும்பாலான நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். போர்க்குணத்தை வெளிப்படுத்தும் படைப்பிலக்கியங்களைக்கூட உள்வாங்கிக் கொள்ளாமல், சோதனைகள் என்ற பெயரில் ஏதேதோ இலக்கிய வகைமைகளை, எவர் எவரோ பெயர்கள் இறக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்க் கவிதையுலகம் புதுவை இரத்தினதுரையை அறியாது என்பதே அதன் தடம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி. அவரைத் தமிழீழ மக்கள் அறிவார்கள். எதிர்ப்பில் உயரும் தமிழகப் படைப்பாளிகள் அறிந்திருக்கிறார்கள். சர்வதேசியத்தின் அங்கீகாரம், இம்மக்களினத்தினூடாக நடந்து நிறைவேறியுள்ளது.

இன விடுதலை வேண்டியதன் வழி, அதன் உச்ச எல்லையான மானுட விடுதலையைத் தொட்ட கவிஞனை சாதாரணமான இலக்கியக் கோட்பாட்டுக்குள் சுருக்கிவிட இயலாது; கூடாது. களமும் கவிதையுமாய் வாழுகிறவர் புதுவை.
“மழை பொழிந்து கொண்டிருந்த போது,
கவிதையும் நானுமாக இருந்தோம்
விடியும் வரை பெய்ததாம் மழை
மறுநாள் மனைவிதான் சொன்னார்”
நன்றி: கீற்று - 05 அக்டோபர் 2009

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?