அவை அவர்களின் கதைகள் தாம்
வேளாண்மைப் பயணத்தில் முந்தைய பாரம்பரிய முறைகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். விதைப்பில் தொடங்கி, உழவு, உரம், பயிர் வளா்ப்பு, வேளாண் பாதுகாப்பு என்று மீட்டெடுப்புக்கு போகிறார்கள். காட்டிலும் வயலிலும் வீட்டிலும், உடல் நலத்திலும் நவீனம் கொட்டிவைத்த அழிவுகளைவிட அனுபவங்கள் மூலம் முன்பு பெற்றவைகளை காக்க முயலுகிறார்கள்.
பாரம்பரிய உணவுகள் மருந்தாக இருந்தன. உணவே மருத்துவம். நோய் வந்தபோது மூலிகைகளுக்குப் போனோம். மூலிகைச் செடிகளை உண்டாக்க நந்தவனம் உருவக்கினோம். குளிர் பிரதேசங்களான மேலைநாடுகளில் வளருவதில்லை மூலிகைச் செடிகள். இவை நம் மண்ணுக்குரியவை. மண்ணின் மருத்துவம் உண்மையில் ஏற்கனவே நம்மிடம் இருந்தது . பெருமைப்பட்டுப் பீத்திக் கொண்டிருக்கிறோமே இந்த ஆங்கில மருத்துவம் தான் வேற்று மருத்துவம். இதனையே மாற்று மருத்துவம் எனக் குறிப்பிட வேண்டும். ஏற்கனவே இருந்ததை இழந்து, இப்போது இழந்ததை மீட்டெடுத்துக் கொண்டிருப்பது நம் மருத்துவம்.
அது போல் இந்த மானுட சமுதாயம் தன் கைவசப்படுத்தி வைத்திருந்த ஒன்று பாலின சமத்துவம். ஆதியில் பெண் அடிமை இல்லை. அந்தப் பெண் ஆதியில் குடும்பத்துக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கு அன்னையாய் இருந்தாள். பாதியில் அடிமையானாள். உழைப்பே பிரதானமாயிருந்த ஆதிச் சமுதாயத்தில் காடு கரை, வீடுசொத்து என இல்லாதிருந்த காலத்தில் பெண் ஆண் சமத்துவம் இருந்தது. அதாவது பெண் தலைமை இருந்த வரை சமத்துவம் நிலவிற்று. அந்த ஆதி மனுஷியை, ஆதிப் பெண்ணை மீட்டெடுக்கும் சிந்தனை முயற்சிகளாக இரு கவிதைப் படைப்புக்களைக் காண முடிகிறது.
பெண் தன்னைத் தேடுகிறாள். தன் சுயம் எவ்வெவ்வாறெல்லாம் இழக்கப்பட்டிருக்கிறது எனக் கொதித்துத் தேடுகிறாள். எனக்குரிய இடம் எங்கே கேள்விகளுடன் இருப்பை மீட்டெடுக்க முயலுகிறாள். அதுதான் பாலின சமத்துவத்துக்கான போர்.
இது காலத்தின் குரல்; காலத்தின் குரல் ஒலிக்கிறவா்களின் வரிசை தமிழில் மகத்துவமிக்க நெடிய வரிசை. இவர்களின் இருப்பு தனித்துவமுள்ளது.
ஒரு பெண் முதலில் தனக்குள், தன்னோடு சண்டையிடக் கற்க வேண்டும். தன்னைப் பெண்ணாக உணர்தலினின்றும் விடுபட்டு மனுசியாக உணர்தல் முதல் கலகம். உள்ளிருந்து புறப்படும் அது பெற்றோர் குடும்பத்தினர், சுற்றத்தினருடனான உராய்தலாக உருக்கொள்கிற போது இரண்டாம் கலகம். தன்னை உயிரியாக மதிக்காத - மனுசியாக ஏற்காத குடும்பத்துடன் நேசபூர்வ முரணிலிருந்து பகை முரணாக மாற்றம் கொள்ளும். இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவராத வரை, பகையும் நேசமுமாக அல்லாடலுக்குள் தொடர வேண்டும். உறவு, சுற்றம், வீதி, கல்விக்கூடம், பணியிடம், பேருந்து, தொடர் வண்டி என பொதுச் சமூகத்தில் அவள் எதிர் கொள்ளல் மூன்றாம் கலகம். ஒவ்வொரு அங்குலத்திலும் ‘தன்னை’ மனிஷியாக உறுதிப் படுத்திக் கொள்ளும் திரட்சி பெறவேண்டியிருக்கிறது. முதலிடத்திலிருந்து மூன்றாம் இடம் வரை அவள் போராளியாக உருவெடுக்க வேண்டியவளாகிறாள்.
இரண்டு சிந்தனைகளை இங்கு நான் சுட்டிக்காட்டி தீர வேண்டும்; ஒன்று மொழியாக்கம் குறித்து பிரெஞ்சு இலக்கிய வாதியின் சிந்திப்பு.
மொழியாக்கம் என்பது ஒரு படைப்புக் கலை. ஒரு சுயமான படைப்பு உருவாக்கத்துக்கு உண்டான கடின முயற்சிகள் அனைத்தும் மொழியாக்கத்துகு உண்டு. அது மூலத்துக்கு விசுவாசமும் வெளிப்பாட்டு அழகும் ஒருசேரக்கொண்டு அமைந்திருக்கவேண்டும். ஒரு பிரெஞ்சு இலக்கியவாதி சொல்வார்: ”மொழிபெயர்ப்பு என்பது மனைவியைப் போல. அவள் விசுவாசமானவளாக இருந்தால் அழகாக இருக்க மாட்டாள். அழகாக இருந்தால் விசுவாசமாக இருக்கமாட்டாள்”
சரி, ஏன் இவ்வாறு சொல்லவில்லை? ”மொழிபெயர்ப்பு என்பது கணவனைப் போல; விசுவாசமானவனாக இருந்தால் அழகாக இருக்க மாட்டான். அழகாக இருந்தால் விசுவாசமாக இருக்க மாட்டான்”
ஏன் சொல்லவில்லை? சொல்லமாட்டர்கள். ஏனெனில் அவர்கள் ஆண்கள். அவர்ர்களுக்கு அவ்வாறெல்லாம் சிந்தித்துப் பழக்கமில்லை.காலங் காலமாய் கருத்து எதில் ஊறி உப்பிப் போயிருக்கிறதோ, அந்த முகங்களோடு தான் வருவார்கள்.
மற்றொரு உதாரணம். சுதந்திரம் சமத்துவம். சகோதரத்துவம் என்ற உயிர்ப்புள்ள முழக்கங்களைப் பிரெஞ்சுப் புரட்சிக்கு வழங்கிய ‘ரூஸோ’ என்ற மேதையின் வசனம்;
“மக்களாட்சி அரசமைப்பின் அடிப்படை கருத்துருவாக்கத்துக்கு சொந்தக்காராரான ரூஸோவிடம் பெண்கள் கல்வி கற்கும் உரிமைபற்றிக் கேட்ட போது, ஆண்களாய்ப் பிறப்பதாலேயே அவர்களுக்குத் தனிப்பட்ட உரிமைகள் உண்டென்றும், பெண்களுக்கு ரத்துசெய்யப் படக்கூடிய உரிமைகள் மட்டுமே உண்டென்றும் குறிப்பிட்டார். ”பெண்கள் கல்வி உரிமை பெற்றால் படுக்கை அறையில் மட்டுமே ஆண்களின் மேல் அதிகாரம் செலுத்தி வரும் நிலை மாறி, வெளி உலகிலும் ஆண்களின் மேல் அதிகாரம் செலுத்தத் தொடங்கி விடுவார்கள். அதனால் பெண்களுக்கு கல்வி உரிமை கூடாது” என்று கூறினார்.
பாலின அடையாளம் அல்லது வேறுபாடு உடலில் மட்டுமல்ல, அது உள்ளத்தையும் முழுதுமாகப் பீடித்து இயங்குகிறது என்பது இவ்விரு காட்டுகளிலிருந்தும் புலப்படும். பாலின வேறுபடுள்ள உடல் பிறப்பிலிருந்து சாவும் வரை உடன் வருகிறது; பாலினப் பாகுபாடு கொண்ட மனம் சாவுக்குப் பின்னும் தொடருகிறது. அதைக் கிஞ்சித்தும் சேதாரமின்றி அவனது வாரிசுகளும் ஆண் பரம்பரைகளும் சுமந்து வருகிறார்கள். அந்தக் கருத்தியல் மரணமடைவதில்லை.
காந்தி தனது உடல் இச்சையின் மிது தனக்குள்ள கட்டுப்பாட்டைப் பரிசோதித்துக் கொள்ள விரும்பினர். இரவில் இளம்பெண்களைத் தன்னுடன் நிர்வாணமாகப் படுக்கவைத்து தானும் அவ்வாறே ஆடையின்றிப் படுத்துக் கொண்டார். அந்த சுய சோதனையில் தான் வெற்றிபெற்றதாக காந்தி எழுதியுள்ளார். இந்த ஒரு பக்கத்தை விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதியுள்ள ஜெயமோகன், பின்னாளில் காந்தியின் மறைவுக்குப் பிறகு அந்தப் பெண்களில் ஒருவர் பத்திரிக்கைகளில் தன் வேதனைகளைப் பகிர்ந்த பக்கத்தை பற்றிப் பதிவு செய்யாமல் விட்டிருக்கிறார்.
எழுத்தாளன் பழங்கால ஞானி போல் சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கவேண்டும் என்பார் கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கொ. ஆமாம், நமது எழுத்தாளர்கள் இந்த சமூகத்தின் மனச்சாட்சியாகததான் இயங்குகிறார்கள். தன்னில் பாதியான பெண்ணை அடிமையாகப் பார்ப்பதும், தன்னில் பெரும்பகுதியான மக்களை தாழ்த்தப்பட்டவர்களாகப் புணக்கணிப்பதும் இச்சமூகத்தின் மனசாட்சி.
கனடா வாழ் அகதித் தமிழ்ப் பெண் கவிஞா்கள் தொகுத்த “ஒலிக்காத இளவேனில்” தான்யாவின் “சாகசக்காரி பற்றியவை” இரு நூல்களும் இம்மாதிரி ஆண்களிடும் மூக்கணாங் கயிறுகளை அறுத்தெறியத் திமிறுபவை. கவிஞர்கள் தான்யா, பிரதீபா, துர்க்கா, இந்திரா, யாழினி என்ற வரிசை ”ஒலிக்காத இளவேனிலில்“ ஒளிர்கிறது.
“அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
வளைந்தும் நெளிந்தும் ஊா்ந்தும்
கனவுகளில் என்னைப்
பின் தொடா்ந்த படியிருக்கும்
அந்தக் கரு நீல நாகத்துக்கும்”
யார் யாருக்கு இந்த நூலை உரித்தாக்குகிறார் யாழினி? அம்மா, அப்பா என்பவர்கள் மனித உயிரிகள்; அவர்கள் போல் பௌதீகமானதா ஒரு கருத்தியல்? அது ரூபமற்றது; மனிதச் செயற்பாடு பிரயோகிக்கப்படுகையில் அது ரூபம் கொள்கிறது. கருத்தியல் மனித உறவுகளைத் தீா்மானிக்கும் உயிரியாய் நடைபோடுகிறது. தொடரும் கருத்தியலைத்தான் ‘கருநீல நாக’ மென்கிறார் யாழினி. விடுதலைச் சிந்தனையுள்ள ஒவ்வொருவரும் அவ்வாறுதான் கருதுவார்கள்.
“தொன்மங்கள் கனவுகளில் வடிகின்றன
கனவுகள் தொன்மங்களை
வடித்துக் கொண்டிருக்கின்றன”
என்பது அது தான். முன்னா் குறிப்பிட்ட அந்த ஆதியை மீட்டெடுப்பது.
“மரணங்களும் மஞ்சள் நதியாய் மாறி
உங்கள் பாலைவனங்களில்
நீா்த்தடம் பதித்துச் சென்றாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை”
ஒவ்வொரு வரிக்குள்ளும் ஒரு கதை இயங்குகிறது. வெறும் கதைகளா அவை? வாழ்வின் கதைகள்; அவா்களின் கதைகள் தாம் அவை. வாழ்வியல் துயரத்தைப் பேசும் உச்சமான நைப்பு வரிகளின் வார்ப்பு அக்கதைகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக