இசைப் பேரருவி நல்லப்பர்


விளாத்திகுளம் சுவாமிகள் என அழைக்கப்பெறும் இசைமேதை நல்லப்பரின் நினைவு நாள்: 25-04-2017.

அவன் சத்தக் குழல் சடையாண்டி. சத்தக்குழலுக்கு கட்டைக்குழல் என்று ஒரு பெயருண்டு - நல்லா வாய்ச்ச ஆளுக்கு முழங்கை நீளமிருக்கும். கைத் தண்டி பருமனுள்ள இசைக்கருவி. தாழ்த்தப்பட்டோர் கைகளில் மட்டும் அந்தக்குழல் தட்டுப்படுவதுண்டு. குழலிருந்து உண்டாகும் இசைக்கோர்வை கெட்டிமேள நாதசுரமாகவும் இருக்காது: காருகுருச்சி அருணாசலம் நாயனமாகவும் இருக்காது. கொஞ்சம் எக்கியடித்து, காற்றில் நடந்து காதில் வழுக்கி, இதயத்தில் கரையும் மத்திம இசை.

வாசிப்பில் காருகுருச்சிக்கு இணையாகச் சொல்வார்கள் சத்தக் குழல் சடையாண்டியை. காருகுருச்சி அருணாசலம், அவனை ஒன்னாய் ஒரு மேடையில் வாசிக்க விடமாட்டார் என்பார்கள்: அதுபற்றி சுவாரசியமான ஒரு கதை அந்த வட்டாரத்தில் வாழுகிறது. அவருக்கும் சத்தக் குழல் சடையாண்டிக்கும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

“நா கச்சேரிக்குப் போற ’லெக்கில்’ நீ வரக் கூடாது .நா முன்தொகை வாங்குற எடத்தில் நீ வாங்கப் பிடாது, அப்படி வராமப் போனா, நா வாசிக்கிற ஒவ்வொரு கச்சேரிக்கும் ஒனக்கு 50 ரூபா” - என்பது அந்த ஒப்பந்தம். பேச்சுக்கால் படி இரண்டு பேரும் நடந்து கொண்டிருக்கிறார்கள். கருகுருச்சியாரின் கச்சேரி போய்க் கொண்டிருக்கிற ஊர்களில் எல்லாம், சடையாண்டி போய் நிற்பான். அலக்காய்த் தூக்கி 50 ரூபாயை காருகுருச்சியார் அவன் கையில் தந்து விடுவாராம் (50 - ரூபாய் இன்றைக்கு மதிப்பில் ஆயிரம்) .

ஒரு கச்சேரியில் காருகுருச்சியார் வாசித்துக் கொண்டிருக்கிறார். கடன்காரன், பவ்வியமாய் வணக்கம் வைக்கிறான். அதே மேடையில் அமர்ந்து நல்லப்ப சுவாமிகள் தலையாட்டிக் கொண்டிருக்கிறார். காருகுருச்சியின் தோடிராகம் நல்லப்ப சுவாமிகளை கரைத்து, அத்தாசமாய் தூக்கிப் போகிறது. “ஏ, ராஸா, நா காணாமப் போயிட்டண்டா. ஏம் ராஸா, எங்கடா என்னைய கூட்டிட்டுப் போற” - என்று புலம்புகிறார்.

சத்தக்குழல் சடையாண்டி சுவாமிகளை இதுவரை கண்டதில்லை. அறியாதவனாய் காருகுருச்சி முன்னால் வந்து நிற்கிறான். காருகுருச்சியார் “சுவாமிகள் பின்னாடி இருக்கிறார்” என்று கண்ணால் சைகை காட்டுகிறார். கச்சேரி இடைவேளையின் போது, “யாரு ஒரு பய வந்து கும்பிடு போட்டான்” என்று நல்லப்பர் கேட்க, “அவனா ஒவ்வொரு கச்சேரிக்கும் நா மொய் எழுதனும்” என்று நடந்த ஒப்பந்தத்தைச் சொல்லியிருக்கிறார் காருகுருச்சியார்.

அவனை ஏறிட்டுப் பார்த்து “ஏ, சத்தக் குழல் வா, இங்க” என்று கூப்பிட்டார் சுவாமி. அவர் தான் சுவாமிகள் என்று அறிந்ததும், தோள் துண்டை எடுத்து கக்கத்தில் இடுக்கியபடி கும்பிடு போட்டான்.

“நீ என்னடா வாசிப்பே?”

“தோடி ராகம் சாமி”

“பிரமாதமா வாசிப்பயா?”

“ஏதோ, எனக்குத் தக்கன சாமி”

“ஒரு நா வச்சிக்கிருவோம். அது நாள்வரை நீ நம்ம நாதசுர வித்துவான் கிட்ட நிக்கப்படாது,”

அதட்டல் போட்டிருக்கிறார் சுவாமி. மன்னன் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா!

சொன்னபடியே சுவாமிகள் வீட்டுக்கு இன்னொரு நாள் சடையாண்டி வந்தான்.

“ஒனக்கு என்ன பிரியமோ, பிரியப்பட்டதை கொஞ்சம் வாசி” என்றார் சுவாமி.

சடையாண்டி உறைக்குள்ளிருந்து கருவியை எடுக்கிறான். பெத்த பிள்ளையைக் காப்பது போல் அவன் கருவியைப் போற்றிப் பாதுகாத்து வருகிறான் என்பதை சுவாமி கண்டு கொண்டார். எண்ணை குளிரத் தேய்த்த கரு நாகமாட்டம், உறைக்குள்ளிருந்து வெளியில் வந்த கட்டைக்குழல் பட மெடுத்தாடுகிறது: அவன் ஊதுகிறான், சுவாமி அமர்ந்த திண்ணையில் இசை; தாழ்வாரத்தில் இசை; வீடெங்கும் இசை; வெளியெங்கும் இசை. மெய்ம்மறந்து தலையாடுகிறது. ஒருமணி நேரம் தோடி வாசித்தான்.

“ஏ, யப்பா, சடையாண்டி, ஒந் ‘தோடி’ கோடி பெறும்” என்று லாவி அணைத்துக் கொண்டார்.

“இனிமே காருகுருச்சி வாசிக்கிற இடத்தில் போய் தொந்தரவு பண்ணாதே, நா கொடுக்கிறேன் அந்த அம்பது” -
சமாதானம் பண்ணி அனுப்பி வைக்கிறார் சுவாமி.

இதை வரலாறு என்கிறார்கள் சிலர்; வரலாறாக இருக்கும்; வந்ததும் போனதும் சேர்த்துக் கூட்டிச் சொல்வதாகவும் இருக்கும். ஆனாலும் இது ஒரு கர்ண பரம்பரைக் கதையாக உயிர் வாழும்.

இதை எனக்குச் சொன்னவர் பொன்னு என்ற தோழன்; விளாத்திகுளத்தில் சலவைத் தொழிலாளி. இவரைப் பற்றி - ஆற்றுநீரில் நின்று துவைப்புச் செய்கையில் பாடும் துறைப் பாட்டுக்கள் பற்றி - நிறைய விவரிப்புகள் உண்டு.இவருக்கு இக்கதையைச் சொன்னது சின்னமணி நாடார்.

2


காட்சியோடு வருகிற மழை இசையாகக் கொட்டுகிறது. ஏற்ற இறக்கங்களுடன் ‘பிர்க்காவை’ விளாத்திகுளம் என்ற பேரூருக்குள் வடதிசையிலிருந்து நுழைகிறீர்கள். ஊரின் பெயருக்கு கரையில் வரிசை பிடித்த விளாமரங்களும் அத்தியும் செழித்த கண்மாய் மூலமாகியது. கெத், கெத்-தென தண்ணி கிடக்கும் பெரிய கண்மாய், ஒரு சின்னப்பிளையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்ட மாதிரி, அந்தக் கிராமம். அறுபது, எழுபது - வருடங்களின் முன் என் பாலிய காலத்தில் அது பேரூர் இல்லை. கொஞ்சம் பெரிய கிராமம். கண்டமானைக்கு தீனியெடுத்து இடுப்புக் குழந்தை வேகமாய் இனம்கனம் ஆகியது போல், இன்று கடை வீதி, காரடி (பேருந்து நிலையம்), காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம் என பேரூராட்சியாக சகல திக்கும் பெருத்துவிட்டது.

தோப்பும் துரவும், செடியும் கொடியும், தாவரமும் பெருமரங்களாய் கண்மாய் தன் தோள்மேல் போட்டு வளர்த்த செழிம்பு இன்று துடைக்கப்பட்டுவிட்டது. சங்கூரணி என்ற கீழவிளாத்திகுளம் வரை நீர்ப்பாலூட்டி விவசாயத்தைக் காத்த நீர்நிலை சுண்டிப் போய்க் கிடக்கிறது. இந்த ஒருநீர்நிலை என்றில்லை, காலச்சாபமென எல்லாப் பிரதேசத்திலும் வயக்காட்டுக் கண்மாய்கள் காணாமல் துடைக்கப்பட்டுள்ளன.

சகலமும் இழந்த கண்மாய் போல் ஜமீன்கள் சுண்டிப் போக - காடல்குடியிலிருந்த ஒரு ஜமீந்தார் பத்துக்கல் தொலைவுள்ள விளாத்திகுளத்துக்கு குடிபெயர்ந்து வருகிறார். நாலு திசைக்கும் போகவர ஆத்தலான ஊர் விளாத்திகுளம். கோட்டை, கொத்தளம், நஞ்சை, புஞ்சை, நாடு, நகரம் என்று வளம் கொழிக்கும் சொத்துக்களை இடுக்க முடியாமல் இடுக்கிக் கொண்டு வந்து சேர்ந்தவரில்லை. ஜமீன் - காடல் குடியோடு அற்றது; விளாத்திகுளம் வந்தடைந்த போது, சுவாமிகள் என்ற பட்டமும் தொண்டைக் குழியில் இசையும் அவர் கொண்டு வந்தது.

விளாத்திகுளம் வந்தடைந்தவருக்கு தாளக்கருவிகளாய் இரு கைகள், இசைப் பிரவாகமெடுக்கும் ஒரு தொண்டைக்குழி. குடி பெயர்வு - அது ஒரு பேருக்குத் தான். விளாத்திகுளம் கண்மாய்க் கரை தான் வாசம். சங்கூரணியிலிருந்து வயல்களின் ஒத்தையடிப் பாதை பிடித்து நேர் மேற்கில் விளாத்திகுளம் கண்மாய் மேடேறினால் கரைமேல் மரத்தடியில் பாட்டுக்குரலும் தாளக் கைகளுமாய் நல்லப்ப சுவாமிகள் ஆலாபனை செய்து கொண்டிருப்பார்.

கரை மேல் செழித்துக் கிடந்தன தாவரங்களும் மரங்களும் - அவருக்காக!

அங்கு தான் ராகங்களைப் பிரித்துப் பிரித்துப் பின்னுவார்.

விளாவும் அத்தியும் மருதமரமும் தாட்டியமாய்ப் பெருத்து சத்தமிட்டு இசைத்தன - அவருக்காக!

அப்பெருமரங்களின் சலசலப்பில் தான் அவர் ராக ‘பிர்க்காக்களை’ கோர்த்துக் கொண்டிருந்தார். ஆலமர விழுதுகள் ஆகாயத்திலிருந்து எதையோ எடுத்து வந்து அவரிடம் கையளித்தன. மெல்லப் பேசு, மெல்ல மெல்லப் பாடு, கை வீசு, மெது மெதுவாய் மண்ணில் உன் இசையை இறக்கு என விழுதுகள் விளம்பும் ரகசிய மொழியை    காது வைத்துக் கேட்டார்.

இசை கற்க குருபீடம் இல்லை:
இயற்கை அவரின் குருபீடம்.

சப்தங்களால் ஆனது பிரபஞ்சம்! காலை இளங்காற்றில் காது மடலடியில் கனியும் குயில் கீதம், மரத்தின் தாட்டிக் கொப்புகளில் பறவைகளின் ‘கெச் சட்டம்’, நீர் நிலைகளின் அலைத்தாவல் பாட்டு, விலங்குகளின் கத்தல் - நம்மைச் சுற்றி இயங்கும் இந்தப் பிரபஞ்சம் இசையால் ஆனது. இரவுப் பொழுதின் அமைதி ஒரு இசை. பிரபஞ்ச ஓசைகளிலிருந்து தன் இசையை அவர் உருவாக்கிக் கொண்டார்.

கோவில்பட்டிக்கும் விளாத்திகுளத்துக்குமிடையில் 32 கி.மீ. தொலைவு. சப்த நெரிசலில்லாத காலம். கோவில்பட்டி ஆலைகளில் சங்கு ஊதினால், விளாத்திகுளம் மந்தைக்குக் கேட்கும். உள்ளே இருக்கும் தொழிலாளிகளை வெளியே அனுப்பவும், வெளியிலிருப்பவர்களை உள்ளே அழைக்கவுமான சங்கு ஊத்தம் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும். சங்கொலி மெல்ல மெல்ல ஏறி உச்சிக்குப் போய் ஒரு பாட்டம் அந்தரத்தில் நிற்கும். ஆகாயத்தில் நின்று ‘எல்லாம் சரியா இருக்கா’ என்று பார்ப்பது போல் தோன்றும். வழுக்கு மரம் ஏறியவன் தன்னாக்கில கீழிறங்குவது போல், மெது மெதுவாக வழுக்கிக் கொண்டே வரும். விளாத்திகுளம் மேற்கில் வடக்கயிறு போல் கிடக்கும் வைப்பாற்றின் வெட்ட வெளியில் நின்று - சங்கொலிக்கு இணையாக நல்லப்பர் குரல் பிடிப்பார். மேலே மேலே ஏறி ‘கும்’ மென்று உச்சியில் நிறுத்தி கீழே கொண்டு வருவார். விடிகாலை குளுந்த நேரமென்ற போதும், குரலை உள்ளடக்கி மேலேற்றி, விரித்து கீழிறக்குகையில் மேனி, புல்லரித்துப் போக நிற்பார் என சொல்லக் கேட்டது.

அவர் கற்றது தன்னிசை: பெற்றது இயற்கையிடம்! பின்னாட்களில் கூடின இசை வித்துவான்களோடு கலந்து இசைக்கையில், கொடுக்கல், வாங்கல் நடந்ததுண்டு.

வயக்காட்டுக் கண்மாய் விவசாயம் தவிர்த்து விளாத்திகுளம் வட்டாரத்தில் திரும்பிய பக்கமெங்கும் மானாவரி விவசாயம். துளி ஈரம் கண்டுவிட மாட்டமா என்று பயிர்பச்சைகள் நாக்கு நீட்டி ஏங்கும் பூமி. மழை வருதலுக்கான அறிகுறியை சம்சாரி அறிவான். ஆடுகள் மேயாமல் கூடிக்கூடி அடைவது, தூக்கணாங்குருவிகள் வேக வேகமாய்க் கூடு கட்டுவது, மழை எறும்புகள் கூட்டம் கூட்டமாய்க் குடிபெயர்வது போன்ற பல சமிக்ஞைகள். இந்த சமிக்ஞைகள் கண்டதும் நல்லப்பர் உஷாராகி விடுவார். குதூகாலம் கொண்டவராய் தாழ்வாரத்தில் குத்தவைப்பார்.

மற்றவருக்கு மழை இரைச்சல்; நல்லப்பருக்கு அது இசை. இடி, மின்னல் ஒலி ஒளிக்ழை நடத்திக் கொண்டு போகிறது. அவரும் மழையுடன் சரிக்குச் சரியாய் பிர்க்காக்களைப் போட்டுக் கொண்டு கலந்தார். மழையோடு மழையாய் இருந்தார். மழையடிக்கையில், தாழ்வாரத்தில் நின்றும் உட்கார்ந்தும் அவர் பண்ணுகிற அங்க அசைப்புகளை புதிதாய்க் காணுகிறவர்கள் “கோட்டி பிடிச்சுப் போச்சா மனுசருக்கு” என்று சொல்ல வைக்கும்.

பூமியின் மேல் ஒவ்வொருவரும் ‘கோட்டி பிடித்து’த்தான் அலைகிறார்கள். இது இசைக் கிறுக்கு. எத்தனை தடைகளிட்டாலும் சிலபேருக்கு ‘கலைக்கிறுக்கு’ அடங்காது. மழை ஓய்ந்ததும் முன்னிரவில் அவர் தாமசிப்பது கண்மாய்ப் பக்கம். நீர்நிலைகளில் தவளைக் கச்சேரி. முன்னிரவில் தொடங்கும் கச்சேரி எந்நேரம் முடியுமெனச் சொல்ல இயலாது. ’வித்தெடு, விதையெடு - வித்தெடு, விதையெடு’ என்று ஒழுங்கான ஓசைக் கோர்வையாய் தாளம் பிசகாமல் தவளைகள் தொடங்கும். நல்லப்பர் அதை அரட்டையாகக் காண்பதில்லை. இசையாகக் கொண்டார்.நீர்நிலையின் வாகரையில் நின்று சுவாமிகள் கைத்தாளமும் நாக்கை உள்மடித்துக் கிளப்பும் ஓசையுமாய் தவளைக் கும்மாளத்துக்கு ஈடாய் இசைத்துக் கொண்டிருப்பார். பின்னொரு காலத்தில் தன் முன்னால் அமர்ந்து கே.பி.சுந்தராம்பாள், எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.எம்.மாரியப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், காருகுருச்சி அருணாசலம் போன்ற இசை மேதைகளெல்லோரும் கண் சொருக, சொக்கட்டம் போட்டு தலையாட்டிக் கொண்டிருக்குமாறு ஆக்கியது இந்தத் தன் பயிற்சி தான்.

வற்றா இசை அருவியின் பேரோசை அவர் இறப்புக்குப் பின்னும் - நம் காதுகளை, இதயத்தை வளைக்கிறது எனில் அவர் பொங்கிப் பிரவாகமாய் வழியும் இசைப் பேரருவி என்பதில் ஐயமில்லை!

ஆறடிக்கு குறையாத உயரம்; கறுத்த மேனி, களையான முகம், தீட்சண்யமான கண்கள், ஏறிய நெற்றியில் வாடாது நிறைந்த திருநீற்றுப் பூச்சு, கழுத்தில் ருத்திராட்ச மாலை, கண்டத்தில் ருத்திராட்சம், அளவான அடர்த்தியான வெள்ளைமீசை, வெள்ளை வேட்டி, மஞ்சள் நிறத் துண்டு - கம்பீர கோலத்துடன் மைசூர் மகாராஜாவின் அழைப்பின் பேரில் அரண்மனைக்குள் நுழைகிறார் அந்த இசை மேதை.அப்போது மைசூர் மகாராஜா முன்னிலையில்  ஒரு இசை வித்துவான் ஒரே ராகத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆலாபனை செய்து சாதனை படைத்தார். அதிசய சாதனை புரிந்த  வித்துவானுக்கு மைசூர் மகாராஜா பணமுடிப்பும் வைரக்கல் பதித்த தங்க மோதிரமும் பரிசாக அளித்தார். பரிசைப் பெற்றுக்கொண்ட வித்துவான் ”என்னைப் போல் ஒரே ராகத்தை மூன்று நாட்கள் ஆலாபனை செய்யக் கூடியவர்கள் யாராவது வந்து பாடினால், அவருக்கு தான் பெற்ற பரிசுகளத் திருப்பி அளித்து விடுவதாக” கூறினார். இதைக் கேட்ட விளாத்திகுளம் சுவாமிகள் மேடையேறி ‘கரகரப் பிரியா‘ ராகத்தை ஐந்து நாட்கள் வரை பாட, சவால் விட்ட வித்துவான் மெய் மறந்து சுவாமிகளின் காலடியில் விழுந்து வணங்கி தான் பெற்ற பரிசுகளை சுவாமிகளுக்குத் திருப்பி அளித்தார். மைசூர் மகாராஜா சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து நல்லப்பரை அணைத்துப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, சன்மானமும் விலையுயர்ந்த தங்க மெடலும் அணிவித்துச் சிறப்பித்தார்.

பாரதியாருக்கும் சுவாமிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது என்கிறார்கள். சுவாமியின் பாட்டை ரசிப்பதற்காக ”பாடு பாண்டியா பாடு” என்பாராம் பாரதி. சுவாமியைப் பற்றி பாரதியார் இப்பாடலைப் பாடியதாகச் சொல்கிறார்கள்.
“நல்லப்ப சாமி எனும்
நலின் குரல் பாண்டியனே- இனி உன்னை
வெல்லப்பன் யாரப்பா
பழம்பெரும் கவிதைகள் நான் பாடினாலும்
குரல்வளம் கொடுத்தாள் உனக்குக் கலைவாணியே”
எல்லோரும் எட்டயபுரம் அரண்மனை சென்று கவிமாலைகளும் இசைச் சரங்களும் சூடிய போது, அரண்மனைப் பக்கமே எட்டிப் பார்க்காதவர் நல்லப்பர். எட்டயபுரம் சென்றால் இசை மும்மூர்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் மண்டபம் சென்று இசைத்துக் களிப்புற்றுத் திரும்புவார்.

ஏழிசை மன்னர் என அறியப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் ஒருமுறை பரமக்குடியில் நாடகம் முடித்துவிட்டு காரில் விளாத்திகுளம் வருகிறார். விளாத்திகுளம் எல்லை தொட்டதும் காரை நிறுதச் சொல்லி ” கார் போகட்டும். நான் நடந்து வருகிறேன்” என்றிருக்கிறார். உடன் வந்தவர்களுக்குக் காரணம் புரியவில்லை. அப்போது பாகவதர் சொன்னார் ”இது விளாத்திகுளம் சுவாமி இருக்கிற இடம். இந்தப் பூமியில் நம் பாதம் பட்டாலே பெருமை. நான் நடந்தே வருகிறேன்“ என்றாராம்.

என்.ஏ. எஸ். சிவகுமார் - ஒரு இசை ஆர்வலர்.விளாத்திகுளம் சுவாமிகள் என்றழைக்கப் பெறும் நல்லப்பர் பற்றி கரிசல்காட்டுக்காரான இவர் நிறைய ஆவணங்களை, தரவுகளை, தகவல்களை உள்ளடக்கி ஒரு நூலையும் ஆவணப்படம் ஒன்றையும் நம் கைகளில் தந்திருக்கிறார். குற்றால மலையில்  செண்பக ஏரி என்றழைக்கப்படும் தடாகத்திலிருந்து அருவியைக் கீழிறக்கிக் கொண்டுவரும் வரும் சாரல் போல் - நல்லப்பர் என்னும் இசைப் பேரருவியை நமகாக இறக்கி, சுகமாக நாம் நீராடும் காட்சியைக் கண்டு பேருவகை கொள்கிறார் இந்த இசைஅன்பர்.

சமுதாய மேம்பாடு என்பது ஒரு புள்ளியில் இல்லை. அது பலப்பல துறைகளின் வளர்ச்சி என்னும் புள்ளிகள் இணைந்த கோலம். ஆதிமனிதன் குரல் கொஞ்சம் நீண்டு வளைந்து ஏற்ற இறக்கமாய் ஒலித்த போது இசையாக உருக்கொண்டது. ஆதித் தமிழனின் கலைகளில் இசை முதன்மை கொண்டதெனில், அதனைச் செப்பம் செய்து வளர்த்த பெருமக்கள் வரலாற்றில் நினைக்கப்பட வேண்டிய சிலருண்டு - நல்லப்பர் போல!

(இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் இந்து தமிழ் - 26 ஏப்ரல் 2017 வெளியானது.)

கருத்துகள்

  1. கட்டுரை அபூர்வ தகவலை தந்து சாமிகளை பெருமைபடுத்துகிறது.பாராட்டுகள்.பா.இசக்கிமுத்து,வெள்ளளானைக்கோட்டை தென்காசி மாவட்டம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ