கி.ரா துணைநலம்

கதை சொல்லி – 33 இதழ் பற்றிய எனது கருத்துக்களில் ஒரு பகுதி இங்கு.


கரிசல் வட்டாரத்தில் எங்கள் ஊரில் ஓலைக் கொட்டானில் வைத்துக் கட்டிவரும் “கருப்பட்டி மிட்டாய்” போலப் பொத்திப் பாதுகாப்பாய்க் காப்பது, கொஞ்சம் கொஞ்சமாய் தித்தப்பை நாக்கில் கடத்தி, சொட்டாங்கு போட்டு சுவைத்துத் தின்பதற்காக.
‘கதை சொல்லி’ காலாண்டிதழ் தற்பொழுது கைவசம்.

கி.ரா.வின் எடுத்துரைப்பு முறை ஒரு சொக்குப்பொடி; கணவதியம்மாளின் நிலை குறித்து எழுதுகையிலும் கைச்சொடுக்கில் வருகிறது அந்தச் சொக்கு. அம்மா, மாடிப்படியிலிருந்து இறங்குகையில், கடைசிப்படி என்று நினைத்துக் கால்வைக்க, சறுக்கி விழுந்துவிடுகிறார்; ‘சட்டடியாய்’ படுத்து விட்ட அம்மாவை நினைத்துக் கலக்கமாகி,
“இடி விழுந்தான் கூத்தை
இருந்து இருந்து பாரு
என்கிற மாதிரி ஆகிவிட்டது கதை”
- என்று தன் பேச்சிடையில் தனியாய்த் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார். இதனுடைய இன்னொரு பக்கம் - கீழே விழுந்து இரண்டாம் நாள் மாலை அம்மாவை, புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனையில் பார்த்தபோது, அம்மா சொன்னார், “அய்யா, ரொம்பப் பயந்து போய்ட்டாரு. நீங்க அவரைக் கவனமாப் பாத்துக்கோங்க.”

ஒரு பஞ்சாபிக் கவிதை பேசுகிறது.
“ஏரியின் நீரில் நதி ஓடுகிறது .
ஒவ்வொரு நதியிலும்
அமைதியான ஏரி இருக்கிறது.”
அது நீர் எனப் பார்க்கிறவர்களுக்கு ஏரி, நதி என இரண்டாகத் தென்படுகிறது. ஆனால், ஒன்றில் ஒன்று இருக்கிறது. அதுபோலத்தான் ஏரியும் நதியுமான அம்மாவும் அய்யாவும்; அவர்கள் ஓருரு.

தன்னின் முழு உருவாகிய அம்மா பற்றி கி.ரா. எழுதுகிறார்
“தோளுக்குத் தோளாக வாழ்ந்துவந்த எனது ‘அய்ராவதம்’ சாய்ந்துவிட்டது: நேரங்கெட்ட நேரத்தில் எத்தனைபேர் வந்தாலும் ருசி குறையாமல் பசி தீர்த்திடுவாள்.... காட்டிலும் மேட்டிலும் உடம்பைப் பிழிந்து உழைத்தவள். உழைத்ததுக்கெல்லாம் சேர்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள்.”

தமிழகத்து ஆளுமைகள், இலக்கிய ஆளுமைகள், அறிவாளுமைகள் - தன் இல்லத்து ‘பெண் ஜீவன்’ பற்றி எவரும் பதிவு செய்ய முன்வராத குறையைக் கி.ரா.வின் சொற்கள் நிவர்த்தி செய்துள்ளன.

ஆலத்தின் ஒற்றை விழுது இது; ஒட்டுமொத்த விருட்சம் நூலாக வெளிவரப்போகிறது.

2

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுத்து என்றால், அவருடைய விரல்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரைதீர்க்கப் புரட்டிக்கொண்டிருக்கும்.
என்னுடைய ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ நூலில் ‘லிங்கம்பட்டி கிட்ணம்மா’ பற்றி 1998-இல் எழுதியிருக்கிறேன். கே.எஸ்.ஆர் குறிப்பிடுவதெல்லாம் அச்சு அசலாக உண்மை; எட்டயபுரம் அரசர் அழைத்துச் சிறப்புச் செய்தது, “என்ன வேண்டுமோ கேள்” என அரசர் கேட்க, “அன்னதான அணையா அடுப்பெரிய தங்களுக்குப் பாத்தியப்பட்ட நிலங்களில் உள்ள காய்ந்த விறகுகளை வெட்டிக்கொள்ள அனுமதி வேண்டும்” என்று லிங்கம்மா கேட்டது அனைத்தும் உண்மை.

கிட்ணம்மாள் ராமேஸ்வரம் போனபோது ‘இது விங்கம்பட்டி கிட்ணம்மா புண்ணியம் புண்ணியம்’ என ஒரு அந்தணர் குரல் ஒலித்ததாக ஓரிடத்தில் பதிவாகியிருக்கிறது. இதே சம்பவம் வேறொரு வகையாக எனக்குத் தரப்பட்டிருந்தது. “கிட்ணம்மாள் வந்தவர்கள், போனவர்க்கெல்லாம், அன்னமிட்டும் கைப்பொருள் கொடுத்தும் உதவி வந்தார். இது கணவருக்குப் பிடிக்கவில்லை. குடும்பத்தைவிட்டுப் பரதேசியாக வெளியேறிவிட்டார். பல காலம் ஊர், நாடெல்லாம் சுற்றித் திரிந்தார். கடைசியாக ராமேஸ்வரம் போனார். அங்கே கடலில் நீராடும்போது ‘லிங்கம்பட்டி கிட்ணம்மாளுக்கு அரோகரா, அரோகரா’ என்று சாமியார்கள், பரதேசிகள், ஆண்டிகள் குரல் எழுப்பியபடி கோயில் நோக்கிச் செல்வதைக் கண்டார். இவ்வளவு கீர்த்தி பெற்ற ஒருத்திக்கு அவப்பெயரை உண்டாக்கிவிட்டோமே என மனம் வெதும்பி, லிங்கம்பட்டிக்குத் திரும்பிவந்து மனைவியின் அறச்செயல்களுக்கு உடனிருந்து வாழ்நாள் முழுதும் உதவினார்” -
என வேறொரு சித்திரமாய் என் எழுத்தில் பதிவாகியிருக்கும்.

நம் கால்களுக்குள் இருப்பவைதாம், கைகளில் வரப்போகின்றன. அவை ஒருவரிடத்துப் புனைவாக, மற்றொரு எழுத்தில் அபுனைவாக, இன்னொரு கையில் வரலாற்று விவரிப்பாகப் பதிவாகும். அடைக்க எல்லாம் ஒரே வடிவில் வெளிவரவேண்டியதில்லை. கோவில்பட்டி விவசாயப்பண்ணை - ஒரு காலத்தின் வேளாண் உன்னதம்: இக்காலத்தில் அஃதொரு பரிதாபம்: ஒரு காலத்துப் பசுமை: இன்று இறுதி மூச்சுவிட்டவாறு நிலைகுத்தி நிற்கின்றன அதன் விழிகள்.

அந்தப் பசுமைப் பூமிக்கு, 1950-கள் கடைசியில் என ஞாபகம். பள்ளியிலிருந்து சுற்றுலா சென்றிருக்கிறோம். காலச்சுவடு ,மே 2016- இதழில் “ குடிபெயர்வு” என்னும் எனது சிறுகதையில் கோவில்பட்டி பண்ணை பதிவாகியிருக்கும்.

“சுற்று வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மையைக் கற்றுத்தருகிற நவீன விவசாயப்பண்ணை கோவில்பட்டியில் அரசாங்க முயற்சியில் அமைக்கப்பட்டது. விவசாயப் பண்ணையில் மத்தியம் கட்டுச்சோற்றைப் பிரித்துச் சாப்பிட்டுவிட்டு, மரநிழல்களில் இளைப்பாறினார்கள் பள்ளிப் பிள்ளைகள். இந்தப் பிள்ளைகள் என்ன பேசி, என்ன சொல்லி, என்ன சிரித்து, என்ன பாட்டுப் பாடி குலுங்கிக் கொள்கிறார்கள் என்று விரிந்து கவிந்த குடைகளாய் மரங்கள் கவனித்துக்கொண்டிருந்தன. குளுகுளு புங்கைமரம் நிறைய பெண்பிள்ளைகளைத் தன்கீழ் சேர்த்து வைத்துக் கொண்டு கர்வம் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தது. வெள்ளி முத்துக்களை விசிறியடிப்பது போல் அடிக்கடி பூக்களைச் சிதறிச் சிப்பாணிக் கூத்து ஆடியது. இரு கைகள் சேர்த்து சிறுசுகள் கொட்டிய ’தத்தாங்கியால்’, அந்தப் புங்கைமரம் ஒரு சுத்துப் பெருத்து விட்டது போல் தோன்றியது.

”வீட்டுக்குள் கிட்டாத உல்லாசக் களிப்பு சுற்றுலாத் தலத்தில் கோவில்பட்டி விவசாயப் பண்ணையில் வசப்பட்டிருந்தது.வீட்டுக்கு வெளியில் எந்தப் பெண் பிள்ளையும் உம்மணா மூஞ்சி இல்லை என்பதை விவசாயப் பண்ணை தத்ரூபமாக்கியது.நாலுகால் பாய்ச்சலில் பறிகிற பெண்பிள்ளைகளைப் பார்த்து கூட்டிப் போன ஆசிரியமார் ஆச்சரியமாய்ச் சத்தம் கொடுக்க வேண்டியதாயிற்று . வீட்டில், வீதியில் அசைந்தசைந்து நடக்கிற நடையை ஏறக்கட்டி விட்டவர்கள் போல் நெட்டோட்டமாய் ஓடினார்கள். அன்னநடை என்று சொல்வார்களே அதை அன்றைக்கு மறந்து போனவர்கள் பெண்பிள்ளைகள் ”.

ஒரு அனுபவம் புனைவாய் வெளிப்பட சில மாயமந்திரம் உண்டு. அது 5 நாட்களில் வெளிப்படலாம். 50 ஆண்டுகளுக்கு மேலாகக்கூட ஆழ்மனதில் படுத்துறங்கியிருக்கலாம். 1957- இல் என் ‘பொடிவட்டு வயதில்’ பதிவான நிகழ்வு, மே 2017, காலச்சுவடு இதழில் ‘குடிபெயர்வு’ என்ற புனைவாக வெளிப்பட்டிருந்தது.

- பா. செயப்பிரகாசம் முகநூல் பக்கம் (29 ஜூன் 2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ