பெரியார் தமிழனா?


”கொள்கை அறிக்கைகள், பிரகடனங்களின் காலம் முடிவடைந்து விட்டது. மாற்றாக வல்லுநர்களின் புள்ளிவிவரங்கள், தகவல்கள், அறிவிப்புகள் வந்துவிட்டன என்கின்றனர் ”–
இவ்வாறு உருட்டிவிடப்படும் கருத்தை முன்வைத்து மருத்துவர் வெ.ஜீவானந்தம், ஒரு தருக்கத்தை முன்னெடுக்கிறார். (யு.ஆர்.அனந்தமூர்த்தியின் ‘இந்துத்வாவா, இந்திய சுயராஜ்ஜியமா’ என்னும் நூலுக்கான அணிந்துரை: இந்நூல் இவரது மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது.)

கொள்கை அறிக்கைகளின் காலம் முடிந்து போனதெனில், பொருள் என்ன? இலட்சியங்கள், குறிக்கோள்கள் - வெளிப்பாடுகளுடனான வாழ்க்கை முற்றுப் பெற்றுவிட்டது என அர்த்தம்: இலட்சியம், குறிக்கோளுக்கான அவசியங்கள், அவற்றின் காலம், அதற்கான யதார்த்த நிலைமை அற்றுப்போயின என்றாகிறது.

ஊர் தெரிகிறது: பாதை தெரிகிறது: ஊரெல்லையை அடைந்துவிட்டோம்: இனி ஊரும் வேண்டா, பாதையும் தேவைப்படா: எல்லையும் இனி இல்லை என்று முதலாளியம் தீட்டிக் கொடுத்துப் பரப்புரைசெய்து வருகிற ஒரு கருத்தை, தோள் மேல் போட்டுக்கொண்டு அறிந்தோ அறியாதோ தனியுடமைக் கருத்தியலுக்கு பொட்டிட்டு பூவிட்டு அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர் நம் அறிவுப் பயணிகள். அப்படியான ஒன்று நடக்காமலேயே திசை மாற்றுதல் முதலாளிய அசுரக் குழந்தையான உலகமயத்துக்குத் தேவைப்படுகிறது.

புவி இருக்கிறது: புவி மீது மக்களினம் இருக்கிறது: மக்களின் வாழ்வியல் இருக்கிறது: வாழ்வியலை நேர்வழியில் அடைய இயங்கும் மக்களும், சுழிப்பு வழியில், குறுக்கு வழியில் அடைந்திட எண்ணும் சுயநலக் கூட்டங்களும் இரு எதிரெதிர் துருவங்களாக இருக்கும்வரை, கொள்கைகள், பிரகடனங்கள் இயங்கியபடி இருக்கும்.

கொள்கை அறிக்கைகளுக்கு சில இலக்கணங்கள் உண்டு என்கிறார் மருத்துவர் வெ.ஜீவானந்தம். “சிறந்த அறிக்கை என்பது உரையுடன், உரைநடையும் இணைந்து அரசியல் எழுச்சியூட்ட வேண்டும்: சிறந்த அறிக்கை பேச்சு மற்றும் எழுத்துமரபை நிறைவு செய்வதாக அமையவேண்டும். உரக்கப்படிக்கும் அறிக்கை போல, அதில் குரலின்வளம் கொண்டாடப் படவேண்டும்” என்று கூறிவிட்டு, “அது மேற்கோள் காட்டத்தக்கதாக, சிறந்த நடையாற்றல் கொண்டதாக அமையவேண்டும்” என்று சொல்கிறார்.

கொள்கை அறிக்கை அல்லது முழக்கமானது மொழியின் அத்தனை சாத்தியங்களையும், அறிவுச் சேகரிப்பின் அத்தனை முதுசத்தையும் உள்ளடக்கி வெளிப்பட்டிருக்கவேண்டும்.
“உலகத்தொழிலாளர்களே,
ஒன்றுபடுங்கள்”
"இழப்பதற்கு என்ன உண்டு?
இரு கைவிலங்குகள் தவிர”
மார்க்ஸ்-ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை, ஃபிடல் கேஸ்ட்ரோவின் “வரலாறு என்னை விடுதலை செய்யும்”, ஜீலியஸ்பூசிக்கின் “தூக்கு மேடைக் குறிப்புகள்” - போன்ற நூல்கள் சிறந்த சில சான்றுகள்.கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் “உன்னையே நீ எண்ணிப் பார்” என்று இளைய காளைக் கூட்டத்தினை நோக்கி ஆற்றிய உரை ஒரு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான ஒரு பிரகடனம் அல்லவா?

அந்தத் தடத்தில் ஒரு புதிய பிரகடனம் பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?”, “சாதி ஒழியவேண்டும், ஏன்?” மற்றும் சுயமரியாதைப் பரப்புரைப் பொழிவுகள் யாவும் பிரகடனங்களே.

சற்றேறத்தாழ ஒரு நூற்றாண்டுக்காலம் வாழ்ந்து, முக்கால் நூற்றாண்டுக் காலம் சமுதாயத்தை முன்னகர்த்தும் செயல்பாடுகளைத் தம் தோள்களில் போட்டுக் கொண்டார் பெரியார்: இனியொரு ஆயிரம் ஆண்டுக்கால அளவுக்கு, அசைவை உண்டாக்குவன அவர் கையளித்த பகுத்தறிவுப்பொழிவுகள். இச்செயல்களுக்குத் தமிழக மண்ணை ஊடகமாக்கினார். வாழ்நாள்ப் பரியந்தம் அவர் கையெலெடுத்தவை கேள்வி, சிந்திப்பு, பகுத்தறிவு ஆய்வு.

கேள்வியும் சிந்திப்பும் மாற்றை முன்னகர்த்தும் இயக்கிகள் என்றார்.

“இந்துத்வா சாவர்க்கர் இடுவது கட்டளை: காந்தியின் இந்திய சுயராஜ்யம் நெருக்கமான பகிர்வு, உரையாடல்: இந்துத்வா - பழமையின் புகழ்ப் போதையில் ஆடுகிறது. வியாசரின் பாரதம் அனைத்தும் வஞ்சகம், வசை, ஏமாற்று, பாலியல் வன்முறை, மூர்க்கத்தனம், பகை, அடிமைத்தனம் நிறைந்தனவாக உள்ளது; சாவர்க்கார் இவைகளுக்கு வாசனைத் திரவியம் பூசி மணக்கச் செய்கிறார்” என்பார் கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி. (இந்துத்வாவா? இந்திய சுயராஜ்யமா? - பக்கம் 9, 10)

இத்தனை மோசமான மனித இயல்களுக்கு மாற்றாக எழுந்தது புதுமைப்பித்தனின் “சாப விமோட்சனம்”. பின்னர் வந்த மாற்றுக்குரல் மராட்டிய எழுத்தாளர் வி.ஸ.காண்டேகரின் “யயாதி”. தொடர்ந்து கேள்விக்கணைகளின் அம்புறாக்கூடாக எழுகிறது இந்தியில் நந்திகிஷோர் ஆச்சார்யாவின் “மகாபாரதத்தில் பெண்ணியம்” என்னும் இருநாடகங்கள்! இவை எதிர்க் கேள்வியில் முளைவிடுகிற மாற்று, முன்னகர்வு!

“அரேபியாவின் வாசனைத் தைலங்களையெல்லாம் தேய்த்துக் கழுவினாலும், என் கைகளில் படிந்துள்ள ரத்தக்கறை போகாது” என மேக்பத் நாடகத்தில் தன் கொலைக்கரங்களைக் காட்டி மேக்பெத் அரற்றுவாள்; ஆயிரம்வாசனைத் திரவியங்கள் பூசினாலும் போகாத அழுக்குகள் கொண்டிருக்கும் புராண, இதிகாசங்களைக் கழுவி “வெண்முரசு” வீசிக்கொண்டிருக்கிறார் தமிழில் ஜெயமோகன்.

ஜெயமோகனின் ‘மெய்யியல்’ புராண இதிகாசங்களில் இருக்கிறது; நமது ‘மெய்யியல்’ நாட்டார் வழக்காறுகளில், அவர் தம் வாழ்வியலில் இருக்கிறது.

முந்தையகால இலக்கியத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துதல் வேறு: அதனை மீட்டுருவாக்கம் செய்தல் வேறு: மறுவாசிப்புச் செய்தல் தான் புதுமைப்பித்தனின் ’சாப விமோட்சனம்’ அதுதான் காண்டேகரின் ’யயாதி’. மறு வாசிப்புச் செய்ததது தான் நந்தி கிஷோர் ஆச்சார்யாவின் ‘மகாபாரத்தத்தில் பெண்ணியம்’.  சமகாலச் சிந்தனையில் நோக்குதல் மறுவாசிப்பு. சங் பரிவார்களின் சிந்தனையில் வாசித்தல் ’வெண்முரசு’. அந்த இலக்கியம் வெளிப்படுத்தும் கருத்து, விவரிக்கும் காட்சிகள் சமகால முன்னகர்வுக்கு என்னவாக இருக்கிறது என்பதுதான் கேள்வி. அதன் கருத்துக்கள், நிகழ்வுகள் போன்றவற்றை அவ்வாறே ஏற்று, நிகழ்காலத்துக்குப் பொருத்தும் ஒவ்வாமை மீட்டுருவாக்கம்.

புதுமைப்பித்தன், காண்டேகர், நந்திகிஷோர் ஆச்சார்யா செய்வன மீள்வாசிப்பு: ஜெயமோகன்கள் செய்வதெல்லாம் மீட்டுருவாக்கம்: சுயமான யோசிப்பு செய்வதாக ஒரு மாய்மாலம்; அந்தப் பிரமையில் மீண்டும் ஒரு அடிமைத்தனமான, சுய மரியாதையற்ற பழஞ்சமுதாயத்துக்கு கைப் பிடித்துச் செல்கிறார்கள்.

இது பற்றி 60, 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே அண்ணா ஆரோக்கியமான கருத்தை முன்வைக்கிறார்; ”இராமாயாணம், பாரதம், பெரிய புராணம் போன்றவை புளுகுகள்.அவை மக்களின் மனதைப் பாழ் செய்கின்றன. ஒரு இனத்தினை மற்றொரு இனம் ஆதிக்கம் செய்யும் வேலை செய்கின்றன….. பொதுவாகவே கலை விசயத்தில் நாங்கள் கொண்டுள்ள கருத்து இதுதான் - கலை மக்கள் உள்ளத்துக்குக் களிப்பூட்டும் கருவியாக இருப்பின், அதனிடம் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை; ஆனால் கலை ஒரு இனம் மற்றொரு இனத்தை அடக்கியாள உபயோகமாகும் வலையாக இருக்கிறது. அந்த வலையின் பின்னால் எத்தனை பெரிய சக்திகள் இருந்தாலும், ஒன்று வலையை சின்னாபின்னப்படுத்துவது, அல்லது அந்த முயற்சியிலே நாங்கள் சின்னாபின்னமானாலும் கவலையில்லை என்ற முடிவுக்கு வருவது“

அடிமைத்தனமில்லாத சுயமரியாதை வாழ்வு ஒன்றே மனிதகுலத்துக்குப் பிரதானமானது: அடிமைத்தனத்தின் வேர் எதில் நிற்கிறது எனக் கண்டுவிட்டால், அந்தப்புள்ளியில் சுயமரியாதை பிறக்கிறது. சுயமரியாதை, பகுத்தறிவு அடிப்படையில் உருவாகிறார்கள் பெரியார், அண்ணா, பாபுராவ் பூலே, நராயண குரு, அம்பேத்கர் போன்றோர்.

சிந்திப்பு, செயல் என்ற இரு இறக்கைகளில் தற்சார்பு (சுயமரியாதை) இயங்குகிறது. சுயமாகச் சிந்தியுங்கள்: சிந்திப்பின் அடியாக சுயமரியாதையுடன் செயல்படுங்கள் என்பது பெரியாரின் வழிகாட்டலாக இருந்தது. பின் தொடருபவர்களாக அழைக்கவில்லை: ‘அருகே வருக; கைகோர்த்துச் செல்வோம்’ என்பதாக அவருடைய அழைப்பு அமைந்தது.

அவரவர் தனித்தனி வாழ்க்கை நிலையிலிருக்கிறார்கள்; பெரியார் காட்டிய ஒளிமிக்க புதிய சமுதாயத்துக்கும் பழஞ் சமுதாயத்துக்குமான போராட்டம் நடந்துகொண்டிருக்கிற காலத்தில் நாம் வாழுகிறோம். நாம் எந்தப்பக்கம் என்பதை தீர்மானம் செய்யவேண்டும்.

1965-க்கு முன் தமிழ்நாட்டுக்கு காந்தி சிலமுறை வந்திருக்கிறார். அப்போது மயிலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டில் தங்குவார். வீட்டுக்குள் போக அனுமதியில்லை. திண்ணையில் தங்குவார். சீனுவாச அய்யங்கார் காந்தியால் மதிக்கப் பெற்ற காங்கிரஸ்காரர். காங்கிரசில் ஆதிக்கம் செலுத்திய உயர்குல மனப்பான்மையை ஏற்கமுடியாத பெரியார் 1925-இல் விலகி, சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து கொள்கிறார். 1925-லிருந்து பெரியார் முழுவீச்சில் தொடங்கிய சுயமரியாதைப் பரப்புரை, பகுத்தறிவு வீச்சு - சமதர்மப்பிரச்சாரம் போன்றவையின் விளைவு 1926-க்குப் பின் சீனுவாச அய்யங்கார் இல்லத்தில் நிகழ்ந்த மாற்றத்துக்கு அடிப்படை.

தமிழ்ப் பேரறிஞர் கா.நமச்சிவாயம் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்: அவருக்கு மாதச் சம்பளம் ரூபாய் 81. அதே மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்குச் சம்பளம் ரூபாய் 300. சாதிய அடிப்படையில் அமைந்த ஊதிய வேறுபாட்டை அரசு அங்கீகரித்திருந்தது: முக்கிய பதவிகளிலும் அரசியல் பொறுப்புகளிலும் பிராமணர்கள் ஆதிக்க மேலோங்கியிருந்தது. சாதி வேறுபாடு காரணமாய் தேக்கமுற்றுப் பாசிப்பிடித்துப் போயிருந்த சமுதாயக்குளத்தில் சுயமரியாதை இயக்கத்தின் முதல்கல்லெறிதலும், தொடர் கல்லெறிதலும் நிகழ்ந்தன.

பெண் ஏன் அடிமையானாள்?
சிந்திப்பில் உயிர்த்திருப்பினும், நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற சமுதாயம் இது: நம்பிக்கைகள் உண்மைகளெனத் தோற்றம் கொள்கின்றன: ஒவ்வொருவர் வாழ்வும் நம்பிக்கையை அடிக்களனாய்க் கொண்டு அசைகிறது: நம்பிக்கைகள் வழி இயங்கும் மனிதரால், சிந்தனையற்ற பொதுச் சமுதாயம் உண்டாகிறது. கணிணித் தொழில்நுட்பம் முதலாக, அனைத்து மின்னணு நுட்பங்களும் அறிவியல் பூர்வமானவையெனினும் – சிந்தனைத் திறனில்லா மனிதர்களை உருவாக்குவதில், இவையுட்பட கல்விச்சாலைகள் வரை கச்சைகட்டி நிற்கின்றன.

நவீனப்படுத்தப்பட்டு விட்ட இத்துறைகள் அனைத்திலும், பெண் பற்றிய பார்வை முன்னேற்றம் கொள்ளவில்லை. இலட்சங்கள் சம்பாதனையை தனதாக்கிக்கொள்ளும் பெண், ஒரு ஆணுக்குநிகராய் தன்னைச் சமப்படுத்திக் கொள்ளத் திணறுகிறாள். “படித்துப் பலகற்றும் பொம்பிளை பொம்பிளை தான்” என்ற ஆண் மையக் கருத்து, இருபாலரையும் வழிநடத்துகிறது.

இந்துதர்மமும் முதலான மதக்கோட்பாடுகள் யாவும் அறிவியல் பூர்வம் அல்லாதவையாக நம்பிக்கை அடிப்படையில் இயங்குகின்றன: காலஓட்டத்தில் நொறுங்கி உதிர்ந்து போகும் கருத்துக்களைக் கொண்டிருக்கும் மதங்கள், அவைகளைக் கெட்டியாய் இன்னும் இறுக்கி இடுக்கிக் கொண்டு நிற்கின்றன. நம்பிக்கைக்கள் நீடித்தால் மாத்திமே மதங்கள் நீடிக்க இயலும்.

நம்பிக்கை அப்படையில் கடவுளைத்தொட்டு, மதத்தைத்தொட்டு, சாதியைத் தொட்டு எல்லாமும் உண்டாக்கப்படுகிறது.

“எனவே சாதி, மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழித்துத்தான் ஆகவேண்டும். இவற்றில் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்துவராது……சாதியை மதத்திலிருந்து பிரிக்கவேண்டும்: பிரிப்பதற்கு முடியாதவகையில் சாதியும் மதமும் ஒன்றோடொன்று இறுகப் பின்னிக் கொண்டிருக்குமேயானால், இரண்டையுமே வீழ்த்தியாகவேண்டும்….. மதமானது வேதம், புராணம் என்பவைகளுடன் கட்டிப் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் வேதம், புராணங்களிலிருந்து மதத்தைப் பிரிக்கமுடியாதபடி கட்டு பலமாக இருந்தால், இங்கு இரண்டையும் சேர்த்து நெருப்புவைக்க வேண்டியதுதான். இந்தவேதம் கடவுளுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது: இதிலும். பிரிக்கமுடியாத பிணைப்பு இருந்தால் அந்தக்கடவுள் தலையிலும் கைவைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது”
(சாதி ஒழியவேண்டும், ஏன்? – பக்.6,7)

மனிதகுல வரலாற்றில் தலைமை ஆற்றலாய் இருந்தபெண், ஏன் அடிமையாக்கப்பட்டாள்? முதலாளிய சமுதாய பொருளியலுக்குள்ளிருந்து மார்க்சியம் விளக்கியது: முதலாளியசமுதாய பொருளியல் நிலைமைகள் தோன்றுவதற்கு முன்னிருந்த இந்துவர்ணாசிரம மூலத்திலிருந்து பெரியாரியம் அதைக் கண்டடைந்து விளக்கியது:

“பெண்களால் சவுகரியங்களையும் சலுகைகளையும் அதிகாரத்தையும் அனுபவிக்கும் ஆண்கள், பெண்விடுதலைக்கான செயல்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. பெண்கள் அவர்களது விடுதலையை அவர்களே தான் போராடி வென்றெடுக்க வேண்டும்” என்றார்.

மார்க்சியமும் பெரியாரியமும் அறிவியல் பூர்வமானவை. இரு அறிவியல் கோட்பாடுகளுக்குள் ஒவ்வாமை இருக்கவியலாது: பாலியல், சாதி, பொருளியல் முரண்களை சனநாயகமற்ற வேறொரு வழியில் இங்கு இந்து வர்ணாசிரமம் இறுக்கமாகப் பேணிவருகிறது.
பெண் தன்னை அடிமையாக்கிக் கொள்ளக் கூடாது என்ற செயலூக்கத்திற்காக, ”கர்ப்பப்பையை வெட்டி யெறியுங்கள்” என்றது பெரியார் வாசகம். பெரியார் உரைத்த கருத்தை ”கருப்பை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்” எனக் கவிதையாய் வழிமொழிந்தார் பாரதிதாசன்.

இனப்பெருக்கத்துக்கு நான் ஏன் வழி செய்யவேண்டும்: இனப்பெருக்கத்துக்கான வழியாய் என்னை ஏன் அடிமையாக்கிக் கொள்ளவேண்டும் எனக் கேள்வி எழுப்பி, வாழ்வில் நிமிர்ந்துநிற்கிற பெண்டுகள் இன்று அதிகரித்து வருகிறார்கள்; வாரீசுப் பெருக்கத்துக்கான இணைவிழைச்சினை அண்டாமல், தம்மைச் சமூகத் தொண்டுருவாக மாற்றிக் கொள்கிறார்கள். இவர்களை ‘வாழாவெட்டி’ என்று ஏளனமாய்ப் பார்க்கும் இழிவுப் பார்வை உள்ளது. இவ்வாறு தாரதம்மியமில்லாமல் நிந்தனை செய்கின்றோரை – சேறுபூசிக்கொள்ளும் பழமைவாதிகளெனவே பெரியாரியச் சிந்தனையாளர்கள் ஒதுக்குகிறார்கள்.

தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம்:
பூமிக்கு மேலிருக்கிற ஏதோன்றும், வானத்தின் கீழிருக்கிற அத்தனையும் மக்கள் பயன்பாட்டுக்கானது: மொழி மக்கள் பயன்பாட்டுக்கானது எனில், என்ன இருக்கிறதோ அதை அவ்வாறே கந்தலும் கதுக்கலுமாக உபயோகப் படுத்த இயலாது.: ஒழுங்குபடுத்தி, திருத்திய பொருளாகக் கையளிக்கவேண்டும்: பெரியார் அதைச் செய்தார்.

எழுத்துச் சீர்த்திருத்தைப் பெரியார் ஏன் செய்தார்? பெரியார் பட்டங்கள் பெற்றவரல்லர்; அவரே சொல்வதுபோல் ”நாம் 10 வயதுக்கு மேல் பள்ளிக்கூடம் போனதில்லை; நாம் புத்தக ஆராய்ச்சி செய்ததில்லை”

அறிவு வளர்ச்சி அனைவருக்கும் எப்படி ஏற்படுமோ, அப்படிப் பெரியாருக்கும் வேறொரு வகையினால், உருவானது; அது பட்டறிவினால் உண்டாகிற்று.

அறிவு வளர்ச்சி ஒருபோதும் ஒருவழிப்பாதை அல்ல; அது சனநாயக பூர்வமான இருவழிப்ப் பாதை.

எடுத்தல் கொடுத்தல்:
வாங்குதல் வழங்குதல்:
கேட்டல்  கூறல் :
கற்றல் கற்றுக்கொள்ளல் –

என இருவழிப் பாதையிலானது. அறிவின் ஒரு வழிப்பாதை என்பது அதிகாரம். அறிவின் இருவழிப்பாதையில் நடந்து   சிகரத்தை அடைந்தது பெரியாரின் சிறப்பு. “நமக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு, நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதன் மூலம் அறிவதும், ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களைச் சந்திக்கும்போது கேட்டு அறிவதும் தானே ஒழிய வேறில்லை என்பதை கண்ணியமாய் ஒப்புக்கொள்கிறோம்” (குடியரசு:25.12.1927).

தன் அனுபவத்தில் கற்றது, பிறரிடமிருந்து கற்றறிந்தது ஆகியவைகளைப் பகுத்தறிவுச் சல்லடையில் இறக்கி உட்கிரகித்துக் கொண்டார்; உட்கிரகித்ததை உலகுக்கு எடுத்துரைத்தார்; அவற்றை மக்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென்கிற போது, தன்னால் இயன்றவரை நடைமுறைப்படுத்திக் காட்டினார்.

கல்வியால் பெறுவது கையளவு: பட்டறிவினால் பெற்றுக்கொள்வது கடலளவு: அதற்கு சோதனைச் சாலை நமது வாழ்வியல்.

ஒரு மொழியைத் தனக்குதத் தெரிந்த அளவில் பயன்படுத்தி, பெற்ற அனுபவத்திலிருந்து பெரியார் மொழிச் சீர்த்திருத்தம் அவசியம் என்ற கருத்துக்கு வந்தார்.

“சாதாரணமாய், 500 வருஷத்துக்கு முந்தி இருந்த மக்களின் அறிவுக்கும் அவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்துக்கும் - இன்று இருக்கும் மக்களின் அறிவுக்கும், வாழ்க்கை அவசியத்துக்கும் எவ்வளவோ மாறுதலும், முற்போக்கும் இருந்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. அது போலவே, இன்னும் ஒரு 100 ஆண்டு அல்லது 500 ஆண்டுகள் சென்றால், இன்றைய நிலையிலிருந்து இன்னமும் எவ்வளவோ தூரம் மாற்றமடைந்து முன்னேற்றங்கள் என்பவை ஏற்படலாம். ஆகையால் மாறுதலைக் கண்டு அஞ்சாமல் அறிவுடைமையுடனும் ஆண்மையுடனும் நின்று விஷயங்களை நன்றாய் ஆராய்ச்சி செய்து, காலத்துக்கும் அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளி, கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்யவேண்டியது பகுத்தறிவு கொண்டவன் என்னும் மனிதனின் இன்றியமையாக் கடமையாகும் என்பதை அனேகர் உணர்ந்திருந்தாலும் - அதன் பயனாய் இன்றையத் தமிழ் எழுத்துக்களில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் பல என்பதைப் பற்றிப் பலருக்கு அபிப்பிராயம் இருந்தாலும் எவரும் தைரியமாய் முன்வராமலேயே இருக்கிறார்கள். ‘இவ்வளவு பெரிய காரியத்துக்கு பாஷா ஞானம், இலக்கண ஞானம், பொதுக்கல்வி இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா?’ என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம்; அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும், பாஷா ஞானமும், இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்காவிட்டால் என் செய்வது?தவம் செய்வதா?அல்லது ஜெபம் செய்வதா? தமிழ் இன்றல்ல நேற்றல்ல; எழுத்துக்கள் ஏற்பட்டதும் இன்றல்ல நேற்றல்ல. ஆனால் எழுத்துக்கள் கல்லிலும் ஓலையிலும் எழுதும் காலம் போய் காகிதத்தில் எழுதவும், அவற்றில் அச்சுவார்த்துக் கோர்க்கவும் ஏற்பட்ட காலம் தொட்டு இன்றுவரை, அவற்றில் யாதொரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் யாராவது ஒருவர் துணிந்து இறங்கவேண்டியதாயிற்று.” (குடி அரசு: 20 -1 -1935)

மொழிஞானமும், புலமையும் கொண்ட தமிழ்ப் புலமையாளர்கள் ஆற்றவேண்டிய காரியத்தைப் பெரியார் தம் தோள்மேல் போட்டுக்கொண்டார்.

இட ஒதுக்கீட்டுப் போர்:
தன் தோள்மேல் போட்டு பெரியார் எடுத்துக் கொண்ட செய்த முக்கியமான காரியம் - இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு மூலம் இந்து வருணாசிர சமுதாயம். மார்க்சிய சமுதாய அறிவியல் - முதலாளிய பொருள் உற்பத்தி முறையிலான விதிகளிலிருந்து பிறப்பெடுத்தது; ஆனால் இந்து வர்ணாசிரமத் தளத்திலான ஒரு விசித்திரமான சமுதாயமாக அமைந்த இந்தியாவில் அந்தச் சமுதாய அறிவியலை பிறிதொரு முறையில் அணுக வேண்டியிருந்தது. இங்கு சாதியப் படிநிலைகள் வர்க்கப்படி நிலைகளாகவும் வர்க்கப் படிநிலைகள் சாதியாகவும் முயங்கியிருந்தன.

பெரியார் கையிலெடுக்கும் முன்னரே, இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களுக்குக் கால்கோள் இடப்பட்டிருந்தது.

1920-தேர்தலில் நீதிக்கட்சி சென்னை மாகாண ஆட்சியைப் பிடித்தது ; 1922-இல் அந்த ஆட்சி வேலைவாய்ப்பில் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு அரசு ஆணை பிறப்பித்தது; ஆணையை நீதிக்கட்சியும் செயல்படுத்தவில்லை. 1926 - சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி தோற்று, கட்சி சார்பற்ற சுயேச்சையான சுப்பராயன் ஆட்சி அமைத்தார். அப்போது காங்கிரசுக் கட்சியின் பிராமண, உயர்குல ஆதரவுப்போக்கைக் கண்டித்து, முத்தையா முதலியார் அக்கட்சியிலிருந்து விலகி, சுப்பராயன் அமைச்சரவையில் இணைந்தார். அவர்தான் முதன் முதலாக, புதிய வகுப்புவாரி இடஒதுக்கீட்டுச் சட்டத்தை 04.11.1927 அன்று சென்னை மாகாண சட்டசபையில் நிறைவேற்றினார். சுப்பராயன் அமைச்சரவை இடஒதுக்கீட்டைச் சட்டமாக்கி ஆணை பிறப்பித்தது.

இந்தியா விடுதலை பெற்ற பின், 1950 சனவரி 26 - இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது; ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்கிற புதிய அரசமைப்புச் சட்டம் அது. சட்ட உறுப்பு - 15க்கு எதிரானது இந்த இடஒதுக்கீடு, என்று உயர்நீதி மன்றம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய,  உச்ச நீதிமன்றம் அதை உறுதி செய்தது.

காங்கிரஸின் உயர்குல மனப்போக்கை எதிர்த்து நின்ற பெரியார் 1925- ல் காங்கிரசிலிருந்து வெளியேறிய பின் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தைத் தீவிரமாய் முன்னெடுத்தார். இட ஒதுகீட்டை ரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பினை அரசியல் சட்ட திருத்தம் வழியாக மாற்றிடப் போராடினார்.

மாணவர்கள் போராடினர். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று, பல அமைப்புகள் போராடியது மட்டுமல்ல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர், இந்தியத் தலைமை அமைச்சர் நேருவுடன் பேசினார். இந்தக் கட்டத்தில், இடஒதுக்கீட்டை மீட்கும் போராட்டத்தில் பெரியாரின் பங்கேற்பு உச்சத்துக்கு இட்டுச் சென்றது.

சுமரியாதை வேர்:
அடிமைத்தனத்தின் மூலவேர் எதில் நிற்கிறதோ, அதைக் கெல்லி எறியும் கலகத்தை முன்னெடுக்க வேண்டுமென்றார். அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டங்களில், சுயமரியாதையுடனான அனைத்துப் போராட்டங்களில் பெரியார் நின்றார்; தான் களப் போர் புரிய வாய்ப்பில்லாத பிரச்சினைகளில் ஆதரித்து சார்பாக நின்றார்.

மொழி ஆதிக்கத்தை எதிர்த்து, 1938-இந்தி எதிர்ப்புப் போரில் முன்னின்றவர் பெரியார். முதலில் இந்தப் போரைத் தமிழறிஞர்கள் தொடங்கினர்: தமிழ்ப்பெரியோர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போர் தீவிரப்பட்ட உச்சநிலையில் பெரியார் இணைந்து கொள்கிறார். பெரியார் வருகையின் பின்னர் தான் அப்போராட்டத்திற்கொரு அரசியல் பரிமாணம் கிட்டிற்று.

நெடுங்காலப் பயணத்தில் வரும் ஒரு மொழியின் சிறப்பை ஒன்றுமில்லாமல் செய்ய, நேற்றுப் பிறந்த மொழிக்கு ஆதிக்கப்பீடம் அளிப்பது அடிமைத்தனமன்றி வேறென்ன? அதனால்தான் மொழிச் சமத்துவம் கேட்டு, குரல் கொடுத்து முன்நின்றார்.

இது தமிழறிஞர்களுக்கு, தமிழ் விரும்பிகளுக்கு இனியதாக அமையலாம்; ஆனால் பண்பாட்டுச் சமத்துவம் அற்ற மொழிச் சமத்துவத்தால் பயனேதும் உண்டா? சமஸ்கிருதம் உண்டாக்கிய சாஸ்திரங்கள், வேதங்கள், புராதாண இதிகாசங்களைப் புறமொதுக்கிவிட்டால் போதுமா? புறமொதுக்கினால் நம் மொழி காப்பாற்றப்படலாம்; இவை உண்டாக்கி வைத்திருக்கிற, நமக்குள் பதியச் செய்திருக்கிற கலாச்சாரத்தைப் புறமொதுக்கலாகுமா? இவை உண்டாக்கிய கலாச்சாரக் கயிகளின் இறுக்கத்திலிருந்து விடுபடல் பிரதானமாகிறது. நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள கலாச்சாரக் கயிறுகள் நம் வாழ்வுக்கு முன் தூக்குக் கயிறுகளாய் நிற்கின்றன. இந்தக் கலாச்சாரத் தூக்குக் கயிற்றிலிருந்து முற்றாக விடுபட, மொழிப்போராட்டம் ஒன்று மட்டுமே வெற்றியைச் சாத்தியப்படுத்தி விடாது. கலாச்சாரத்தின் பேரால் - இனத்தின் பேரால் போராட்டம் நடத்தவேண்டும்; அதில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் நாம் விடுதலை பெற்றவராவோம் என்ற பரப்புரையில் பெரியர் நின்றார். மொழிக் காப்பில், சமஸ்கிருதம், இந்தி  மொழிகள் எதிர்ப்பில் தீவிரம் காட்டிய தமிழறிஞர்கள், பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து போராட மனம் கொள்ளவில்லை. காரணம் அவர்கள் ஆரியக் கலாச்சரத்தின் அங்கமாக நடமாடினர்.

”மொழிப்போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானேயொழிய,  அது முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்கவழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவுநிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நீங்கியாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்றுவிடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிட மாட்டா” என்று கூறிய பெரியார், பின்வருமாறு எடுத்து வைத்தார்;

“இந்தி நுழைவு என்பது வடமொழி ஆதிக்கம் மட்டுமல்லாமல், சிறுபையன்களின் தூய மனதில் பச்சை மரத்தில் ஆணி அடிப்பது போல், ஆரிய வர்ணாசிரம கலாச்சாரத்தைப் புகுத்தும் அநீதியாகும். ஆகவே மொழிப் பிரைச்சனையோடு மாத்திரமின்றி நம் நாட்டுக் கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளிலும் வடநாட்டு ஆதிக்கம் கைவைத்து அழிக்கும் சூழ்ச்சி என்பதை மறந்து விடக்கூடாது”

மொழிப்போராட்டம் என்பதனை மொழிக்காப்புக்கு மட்டும் என்பதாக தமிழப்புலமையாளர் பார்த்தனர். பண்பாட்டு ஆக்கிரமிப்பு எதிர்ப்புக் கோட்பாடாக பெரியார் கண்டார்.

“நாம் இந்தியை எதிர்ப்பது இன்று அது தேசிய மொழியாகிவிட்டது என்பதற்காக மட்டும் அல்ல: ஆரியர்களின் கலை, மதம், சாத்திரம் முதலியவைகளை இந்த நாட்டில் புகுத்த அது ஒரு சாதனமாகக் கையாளப்படுகிறது என்பதற்காகவும் என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும்” (08.08.1953)

ஆரியர் கலை, மதம், சாத்திரம் என்பவைகளை வம்புக்கு அவர் எதிர்க்கவில்லை. தமிழின நலத்திலிருந்து எதிர்த்தார்: தமிழன் என்ற மனித குலத்தின் தற்சார்பை, (சுயமரியாதையை) அழிப்பனவாதலால் எதிர்த்தார். “எனக்கு மொழிப்பற்று, இனப்பற்று, கடவுள் பற்று, நாட்டுப்பற்று, மதப்பற்று போன்ற வேற எந்தப் பற்றும் இல்லை. மனிதப்பற்று ஒன்றுதான் உண்டு. அதுவும் வளர்ச்சி நோக்கிய மனிதப்பற்று.” (விடுதலை – 15.10.1962).

தமிழ் அறிவியல் மொழியா?
தமிழை அறிவியல் ரீதியாக வளர்க்க முனையாததை – சுய சிந்தனையற்ற ஒரு திரளை உருவாக்க முயலும் மொழியாகக் கையாள முயலுவதை பெரியார் சாடினார்.

ஒரு இனத்தின் மொழி - அந்த இன மக்களை அடிமைப்படுத்தியது கண்டு, பெரியார் கடுஞ்சினமுற்றார். மொழிக்கட்டமைப்பு என்பது அதன் எழுத்து, சொல், பொருள், விகுதி, வினைமுற்று என்று இலக்கண அமைப்பு மட்டுமல்ல, அம்மொழி உருவாக்கி வைத்துள்ள, உருவாக்கி வருகிற இலக்கிய அமைப்புகளையும், கருத்துக்களை, கொள்கைகளை உள்ளடக்கியது. தமிழ் இலக்கியங்களின் தகுதியையும், அதைத் தலைமேற்கொண்டு போற்றிவரும் தமிழ்ப்புலமையாளரின் போக்கையும் கண்டு கடுந்துயருற்று எரிச்சலுற்றார். தமிழ் இலக்கியங்கள் மதவாதிகளை உருவாக்கின; மதவாதிகள் தமிழ் இலக்கியங்களை உண்டு பண்ணினர்.

“தமிழ் படித்தால் நல்ல சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதே ஒழிய, அறிவு வாதியாக ஆகமுடிவதேயில்லை. அதுமாத்திரம் அல்லாமல், எவ்வளவுக்கு எவ்வளவு தமிழ்ப்படிப்பு ஏறுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அவனது கண்கள் முதுகுப்பக்கம் சென்று கூர்ந்து பார்க்க முடிகிறதே தவிர, முன்பக்கம் பார்க்க முடிவதில்லை.”

பின்னால் பார்க்கும் பார்வை உண்டாவது தவிர, முன்னால் கூர்ந்து நோக்கும் பார்வையால் தமிழ் இலக்கியங்கள் உருவாக்கப்படவில்லை; மற்றொருவரின் முதுகுக்குப் பின் போகிற பார்வை - சுய சிந்தனைக்குத் தடைச் சுவர் ஏற்படுத்தும்; இந்தப் பின்பற்றல் கலாச்சாரம் பிம்பங்களினால் உண்டாக்கப்படுகிறது. பிம்பங்கள் சுய சிந்திப்பை, சுயசிந்தனையைக் முறித்துப் போடுகின்றன. சுயசிந்திப்பு இல்லாத ஒரு சமூகம், ஒரு இனம் முன்னேறாது என்பது வரலாற்றுப் படிப்பினை.

“நாம் காட்டுமிராண்டி நிலையில் இருக்கிறோம்: நாம் எதில் முன்னேறி இருக்கிறோம்: சிந்திக்க வேண்டும்” என்றார்.

“தமிழரைக் காட்டுமிராண்டி என்றேன் என்று படித்தவன், அரசியலில் உள்ளவன் எல்லாம் கோபிக்கிறானே? உன்னை உள்ளே (கர்ப்பக்கிரகத்தினுள்) விடமாட்டேன் என்கிறானே, இதற்கு என்ன செய்தாய்? இன்னமும் சொல்கிறேன்.
உன் சாமி காட்டுமிராண்டி சாமி;
உன் மதம் காட்டுமிராண்டி மதம்;
உன் மொழி காட்டுமிராண்டி மொழி;
உன் இலக்கியங்கள் காட்டுமிராண்டி இலக்கியங்கள்."
விடுதலை 14.2.1967

மொழியை விமரிசனப் படுத்தியதாலே, மொழி முதல்வர்களுக்கு சினம் மூண்டது.மொழிப் போராட்டத்துக்காகப் பெரியாரைப் போற்றிய நாக்குகள், அவரது கலாச்சாரக் கலகத்தைக் கொண்டு கொள்ளவில்லை. ஆரியக் கலாச்சார ஆதிக்கத்தை எதிர்த்து இவர்கள் என்ன கிழித்தார்கள் என்று பெரியாருடன் சேர்ந்து கேட்கத் தோன்றுகிறது.

பெரியார் தமிழனா?
“நம் நாட்டுக்கு, சமுதாயத்துக்கு, இனத்துக்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதாலும், நமக்கு அது பொதுக்குறிப்புச் சொல்லும் ஆரிய எதிர்ப்புச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கர்னாடக, கேரள நாட்டு மக்கள் அல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள்.பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்ததால், அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவையில்லை;”
(விடுதலை-12.10.1955)

“எது திராவிட நாடு? யார் திராவிடர்?” என்னும் கேள்வியை முன்வைத்த பெரியார், தான் தமிழன் என்பதற்கான தருக்க ரீதியான முடிவுக்கு வருகிறார்.

”சென்னை மாகாணத்தை நாம் திராவிட நாடு என்று கூறி வருகிறோம், திராவிட நாட்டிலே நமக்கு மிகுந்த தொல்லை செய்துவரும் பழம் பண்டிதர்கள் இமயம் வரை நம்முடையதாயிற்றே என்று கூச்சலிடுவார்கள். இமயம் வரை ஆண்டதாக ஒரு காலத்தில் இருந்திருந்தால் இருந்து போகட்டும்; அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.இப்போது இருப்பதையாவது நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

”தமிழர்களாகிய நாம், திராவிட நாடு திராவிடருக்கே ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம். சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்; இல்லையேல் மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்.” (குடி அரசு – 03.06.1964).

கன்னடரோ, கேரளரோ, தெலுங்கரோ இவர்கள் மூவரும் திராவிடன் என்று சொல்வதிலிருந்து ஒழிந்தால் ஒழியட்டும்; ரொம்ப நல்லது. அவர்களற்ற  தமிழன், தமிழ்நாடு உருவாகட்டும்;ஆனால் தமிழன் தன்னை ஒருபோதும் இந்தியனாகக் கருதக்கூட்டது, அந்தத் திசைக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்பது பெரியாரின் இறுதி லட்சியம்.

“தமிழன் தன்னை ‘இந்தியன்’ என்று கருதியதால் தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும் கலையையும் நாகரிகத்தையும் மறந்தான் : தமிழன் தன்னை ‘இந்து’ என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும் பகுத்தறிவையும் உரிமையையும் இழந்தான்.இப்போது தமிழன் ‘இந்தியன்’ என்பதையும் ‘இந்து’ என்பதையும் மறப்பதாலேயே, அக்கட்டுகளிலிருந்தும் விடுபட்டு விடுவதாலேயே – தன்னை ஒரு மனிதன் என்றும் ஞானத்துக்கும் வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.” (குடி அரசு – 17.09.1939, சேலம் சொற்பொழிவு - 03.09.39).

பெரியார் தமிழன் இல்லை: கன்னடன் என்று ஒதுக்கும் வெறுப்பரசியல் நோய் பரப்பப்படுகிறது: இவர் தமிழன் இல்லை; தெலுங்கன். இவர் தமிழன் இல்லை; மலையாளி என்று ஒதுக்கிக்கொண்டு போய் ஆதித் தூய தமிழனைத் தொட்டுவிட முடியுமா? ஒரு தத்துவத்துக்கு, கொள்கைக்கு, கருத்தியலுக்கு - இனம், மொழி, வட்டாரம் என்ற வேறுபாடு உண்டா? மனிதகுல முன்னேற்றத்துக்குப் பொதுவானதும் குறிப்பானதுமான கருத்தியல்கள், சித்தாந்தங்கள் எங்கிருந்து, எவரிடமிருந்து வந்தால் என்ன?

கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தமிழன் இல்லை: ஆகையால் மானுடகுலத்துக்கு வழங்கிய சித்தாந்தமான மார்க்ஸியக் கொடை தேவையில்லை: மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கண்டடைந்த கம்யூனிஸ்ட் அறிக்கை தேவையில்லை என்று தூக்கி வீசி விடலாமா? இங்கர்சால் தமிழனில்லை; அதனால் இங்கர்சாலின் பகுத்தறிவுச் சிந்தனைகள் வேண்டியதில்லை. காந்தி குஜராத்திக்காரர்; தமிழனில்லை. காந்தியக் கொள்கைகளைப் புறமொதுக்கலாம் தானே.

பெரியாரை நிராகரிப்போரை இவ்வாறான எளிய தருக்கங்களினடியாக நிராகரித்து விடமுடியும்.

தமிழ்ச் சமுதாயத்தின் மானத்தைக் காக்கவேண்டும் என்பதில் தந்தை பெரியாருக்கு உள்ள கொள்கை நிலைபாட்டை, தமிழர்களுக்கு எதிரான கருத்தாக சித்திரிக்க - ஆய்வு மனநிலையில் உள்ள எவரும் ஒப்பமாட்டார்கள்.

(13-03-2019 அன்று புதுவை பல்கலைக்கழகம், சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி & இலக்கியப் புலம் நடத்திய தந்தை பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவில் ஆற்றிய தலைமை உரையின் செழுமைப் படுத்திய உரை)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌