வாசிப்பு வாசல்


வாசிப்பு பற்றிய யோசிப்பு தோன்றியதும், பாலிய காலத் தோழியின் நினைவுகள் மேல் எழுந்து வருதல் போல், பழைய ஊற்றுக்கள் பீறிட்டு வருகின்றன. இரு ஊற்றுக்களும் பிரியமான பாட்டியின் ஊரோடு உறவுடையவை.

ஆனால் நம் அனைவருக்கும் இப்படி ஏன் - பாலியகாலத் தோழனை ஒரு பெண் நினைவு கூறுவது போல் என ஏன் சொல்ல வரவில்லை? முந்தைய காதல் நினைவுகளில் முங்கு நீச்சல் போட்டு, கனவுகளை மனசின் கரைகளுக்குக் கொண்டுவந்து, ஈரம் வடிய வடிய தடவித்தருதல் என்னும் ஆணின் விருப்பு அல்லது உரித்து  ஒரு  பெண்ணுக்கு ஏன் உண்டாவதில்லை? பழங்காதலனின் நினைவுகள் போல என சிந்திப்பு வருவதில்லையே ஏன்? ஒரு பெண்ணின் மனப்பயணத்தை அனுமதிக்கும் மரபு, குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் இல்லை: இலக்கியத்தில் இல்லை. பழைய நினைவே கூடாது என்று பெண்ணுயிரை அடக்கி வைக்கிற சமூகமாக உண்டுமா, இல்லையா? காதல் அல்லது பிரியம், இளம் நெஞ்சின் முதல் பூர்வீகமெனில், அந்தப் பூர்வீக வாசமே கூடாது என்று பெண்கள் நினைக்கிறார்களே! ’கற்பு’ இவ்வாறு மனசுக்குள் பூட்டிவைக்கப்படும் ஒன்றாய் நிலவுடமைக் கலாச்சாரத்தில் தான் இருக்கிறது. முதலாளிய சமூகத்தில் இவ்வாறு எண்ணுதல் தடையோ, உரையாடல் தடையோ கிடையாது.

ஆணுடையதோ பெண்ணுடையதோ - இரு பயணங்களும் நிகரமையானவை. பெண்ணுக்கு இந்நினைவுப் பயணத்தை சாத்தியமில்லாமல் செய்துள்ளது நமது ‘மதிப்பு’ள்ள தமிழ்ச் சமூகம்.’

பிரியத்திற்குரிய முந்திய உறவின்மேல் சமாதி எழுப்பிய பின்னரே ஒவ்வொரு பெண்ணும் மண வாழ்க்கைக்குள் புக அனுமதிக்கப்படுகிறாள். ஓர் ஆண் இழந்த காதலை பேசுவது போல் - மணமான பெண் தன் இழந்த காதலைப் பேசிய எழுத்தை தமிழில் காண்பது அரிது. நான் பெரும்பாலும் வாசித்ததில்லை. இதற்கான தடை வேறொரு புள்ளியில் ஆடுகிறதைக் காணுகிறேன். நெஞ்சாங்கூட்டு நினைவுகள் பிறந்த குஞ்சுகளாய் வாய் திறந்து விடாமல், நெஞ்சின்மேல் ஆடும் தாலி அடைத்து விடுகிறது. அது அங்கொரு அணைக்கட்டின் மதகு அல்ல; அசைக்கவொன்னாத பாறாங்கல். “திருமணத்திற்குப் பின் பிறந்த வீட்டு நினைவை விட்டுவிடு; புகுந்த வீடே கதியென அர்ப்பணித்துக் கொள்.” என்ற சட்டகம் செயல்படுகிறது. மனசால் வாழ்தலினும் சமுதாய  சட்டகத்துள் அடக்கப்படும் பரிதாபியாகவே  காலந்தோறும் பெண் வாழுகிறாள்.

இப்படி யாரிருக்கிறாரோ, அவள் நம் சாதிப் பெண். அவளே நம் மதப் பெண். நம் குலப் பெண்! அவளே நம் பெண்! என்ற அங்கீகாரம் இங்கு உண்டு.பெண் என்ற பெரு மரம் கிளைபரப்ப, பூக்க, காய்க்க, உயரம் கொள்ளமுடியாமல் சாதியும் மதமுமான கொடிகள் இறுக்கி வளைத்துள்ளன.

இரு பழைய ஊற்றுக்கள் மேலெழுந்தன என்று சொன்னேன். பாட்டியின் ஊரில் இடைநிலைப் பள்ளி வரை படிப்பு. அப்போது சின்னச்சாமி வாத்தியாருடன் பேச வேண்டுமென்றால் “ஏழாப்பு ஸாரைக் கூப்பிடுலே” என்பார்கள் வாத்தியார், அதேநேரம் வியாபாரி.

பாட்டி வீட்டோடு ஒட்டிய வீட்டில் ’சின்னச்சாமி வாத்தியார்’ மளிகைக் கடை நடத்தினார். மளிகை என்ற பேர் பின்காலத்தில் வழக்கில் ஒட்டிக் கொண்டது. அதற்கு முன்னால் ’பலசரக்கு’த் தான் இருந்தது. எல்லாக் கிராமங்களிலும், எல்லாப் பலசரக்குக் கடைகளும் வீட்டோடு கடையாய் அமைந்தன. அதாவது கடைக்குள் நுழைந்தால் பின்னாலிருப்பது வீடு.

கடை எதிரில் மூக்கையாத் தாத்தா வீடு. அவர் பாட்டியின் சொந்த அண்ணன். பாட்டிக்கும் அண்ணனுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. ஆனால் நாங்கள் பேசிக்கொள்வோம். வீட்டை இரண்டாகப் பிளந்ததுபோல், முன் தாழ்வாரத்தில் சோத்துக் கைப்பக்கம் திண்ணை, பீச்சாங் கைப்பக்கம் ஆடு அடையும் தொழுவடி. இரவில் புழுக்கை, மூத்திரம், ஆட்டுக்கவுச்சி வீதி நெடுகிலும் பிச்சிக் கொண்டு பாயும்.

இரண்டு கி.மீ.ரில் பக்கத்து சிறுநகரம் பந்தல்குடி. பதினைந்து கி.மீ.ல் பெருநகர் அருப்புக்கோட்டை. சரக்கு மடித்துக் கொடுக்க பந்தல் குடியில் அல்லது அருப்புக்கோட்டையிலிருந்து, பழைய பேப்பர் வாங்கி வருவார்கள். முன்னாலுள்ள மூக்கையா வீட்டுத் திண்ணையில் இறக்குவார்கள். அதெல்லாமும் தினத்தந்திப் பத்திரிகை. முன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கால், அரையாய் வெட்டிக் கிழித்து அடுக்குகிறேன். படித்துக் கிழிப்பேன். திண்ணைச் சுவர் சாய்ந்து விடாமல், அண்டக் கொடுத்து தொடங்கிற்று - பழைய தினத்தந்தியில் என் வாசிப்பு.

கிராமத்து கோடை இரவுகள் இனிமையானவை. தென்காற்று மேனி தழுவ, கோடையில் வீட்டைப் பூட்டி தெருவில் படுத்துத் தூங்குவார்கள். பனை நார்க் கட்டில் சயனம் தனிச் சுகம். வீட்டு முற்றத்தில் பாய் போட்டு கதைகள் பரிமாறிக் கொண்டிருந்த ஒரு குளுந்த இரவில் வடக்குத் தெரு மூலையிலிருந்து மெல்லிய இசை மிதந்து வந்தது. சின்னப் பயல்களை எழுப்பி உட்கார வைத்தது; இதுவரை கேட்காததும், எதிலிருந்து வருகிறதென்று தெரியாததுமான இசை வந்த திசை நோக்கிப் பறந்தோம். வடக்குத் தெரு மூலைவீடு. ஊரில் நில புலம் கொண்ட பெரிய வீடு. புத்திர பாக்கியம் இல்லை. இருந்ததும்  தக்கவில்லை. மூத்த மகன் நல்லையா. நீச்சல் தெரியாது. கலியாணப் பருவத்து இளவட்டம், கிணற்றில் படிக்கட்டுகளில் இறங்கி கால் கழுவிக் கொண்டிருக்கையில் எப்படியோ தடுமாறி குப்புற அடித்து விழுந்தார். பிணமாகத் தூக்கி வெளியில் போட்டார்கள்.

இரண்டாவது மகனுக்கு வராத சீக்கு வந்தது. நாட்டு வைத்தியம் பார்த்தும் முடியாமல் , மதுரை பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காட்டியும் ஆகாமல், மதுரை ’கிச்சலே’ டாக்டரிடம் காட்டி குணமாக்கிக் கூட்டி வந்தார்கள். இந்த ஒன்றாவது தக்க  வேண்டுமென வெகு பிரயாசைப்பட்டார்கள். ’பாவா’ என்ற செல்லமாக அழைத்தார்கள். பாவா என்ற சொல்லுக்கு தெலுங்கில் ’மாமா’ என்று பொருள்.பிறகு ராமலிங்கம் என்ற பெயர் காணாமல் போய், ஊர் முழுக்க ’பாவா’ ஆனார். அந்த வீட்டு மொட்டை மாடியிலிருந்து பாட்டுக்களைப் பீய்ச்சித் தள்ளிய கருவிக்குப் பெயர் “பூனைக்காரன் பெட்டி”. அது நாங்கள் வைத்த பெயர். (கிராம போன் என்ற பெயரிருப்பது பின்னர் தெரிந்தது) மொட்டை மாடியில் இரவில் ஒவ்வொரு நாளும் பூனைக்காரன் பெட்டி கூப்பிட, நாங்கள் மாடிப்படி வழியேறி பூனைக்காரனைச் சுற்றி உட்கார்ந்து கேட்க இப்படியானது இரவுக் கதை.

’பாவா’ ஆறாம் வகுப்பு வரை மதுரை பசுமலைப் பள்ளிக் கூடத்தில் படித்தார். அதற்குப் பிறகுதான் சீக்காளியானார். சீக்காளியின் அறையில் பாவாவுடன் ‘பொன்னியின் செல்வன்’ இருந்தான். ‘சிவகாமி சபதம்’ சொன்னாள். சாண்டில்யன், ஜெகசிற்பியன் என அந்தக் கால நாவலாசிரியர்கள் 'பைண்ட்' செய்யப்பட்டு உட்கார்ந்திருந்தார்கள். பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், இசை கேட்பதும் என “பாவா” உடல் நலம் தேறிக் கொண்டிருந்தார். அது பலிதமாக வேண்டுமென்றுதான் பெற்றோர் இந்த நியமங்களை நேர்ந்திருந்தார்கள்.

இசைக்காக இரவில் சென்று கொண்டிருந்த நான் - பகலில் ஒரு நாள் புத்தகத்துக்காகப் போனேன். பாவாவுக்கு ஆச்சரியம். “ஒவ்வொன்னா எடுத்திட்டுப் போய் படிச்சிட்டு வந்து கொடு” என்னை ஆசிர்வதித்தார். புத்தகம் பெறுவது ஆசீர்வாதம் தானே.  பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும், கல்கியும், ஆனந்தவிகடனும் பாவாவிலிருந்து என்னில் இறங்கினார்கள்.

எட்டாம் வகுப்பில், அரசாங்கத் திட்டப்படி இடைநிலைப் பள்ளியில்  நல்ல நூல்களாக வாங்கிக் குவித்திருந்தார்கள். பாவாவுக்குப் பிறகு பள்ளி நூலகம்.

கற்றலும் தேடலும் திசை சார்ந்தவை. எத்திசையில் போக வேண்டுமென்று எண்ணுகிறோமோ அத்திசைக் குறிக்கோளில் வாசிக்க வேண்டும். தேர்வு செய்த வாசிப்பது முக்கியம். “கண்டதைத் திங்க குண்டாவான்” என்னுமாப் போல கண்டதைக் கற்கப் பண்டிதனாவான் என்றும் ஆகிறது. வித்துவத்துவம், மேதாவிலாசம், பிரசங்கம், பேருரை, மேடை, பட்டிமன்றம் என பிரபல்யமாவதற்கு ”எதையும் வாசி எல்லாவற்றையும் வாசி” என்பது பொருத்தமாக இருக்கும் - அது  ஒரு உப்புக்கல்லுக்குப்  பிரயோசனப்படாது.

மேலத்தெரு சீதாராம அண்ணன்- வாசிப்புக்குக் குறிக்கோள் உண்டு என்று காட்டியவர். அவர் ஒரு கருப்புச் சட்டைக்காரர். அந்தக் காலத்தில் தி.க. தி.மு.க எல்லோருக்கும் கருப்புச்சட்டை என்றுதான் கிராமத்தில் பெயர். மும்பையிலிருந்து முத்து என்ற டெய்லர் நல்ல இளமையில் வந்து சேர்ந்திருந்தார். மும்பையிலிருந்து இறக்குமதி செய்த ஒரு தையல் இயந்திரம் மட்டுமல்ல; விடுதலை, திராவிடநாடு, கலைமன்றம், முரசொலி போன்ற சுயமரியாதை இதழ்களும் அவை வெளியிட்ட மலர்களுமாய் மூட்டையாய்   கொண்டுவந்து இறங்கினார். அதெல்லாம் சீதாராம் அண்ணன் வீட்டிலே அடைக்கலம் ஆகின.

சீத்தாராமன் அண்ணன் வீட்டுத் திண்ணை ஒரு படிப்பகமாயிற்று: கலைமன்றம், பொன்னி, திராவிட நாடு, முரசொலி இதழ்கள் வாசிக்க வந்து சென்றவர்களில் அவன் எட்டாம் வகுப்பு மாணவன்: திராவிட நாடா, விடுதலையா, முரசொலி மலரா என முட்டி முட்டித் தேடினாலும் ஞாபகம் பிழைக்கிறது: தெய்வங்களின் திருவிளையாடல்களை – குறிப்பாகப் பாலியல் உறவாட்டங்களை ஒரு மலரில் அம்பலப்படுத்தி  கோட்டோவியங்களாய்ச் சித்தரித்திருந்தனர். இப்படிக் கொச்சைப் படுத்தலாமா, மற்றவர்கள் போல நான் அசூசையாக உணர்ந்தான்.

பிள்ளையார் கோயில் மடத்தில் ‘விசிப் பலகை’ மேல் புத்தகம் விரித்து புராணவாசிப்பு. கையில் அரிக்கேன் விளக்கு தூக்கிக்கொண்டு ’கதை  கேட்கப்’ போவார்கள். அண்ணாமலைத் தாத்தா  வாசிப்பார். அது அருணாச்சல புராணம். சிவனும் பார்வதியும் உல்லாசமாய் மலைகளுக்கிடையில் உலா வந்து கொண்டிருக்கையில் ஒரு களிறும் (ஆண் யானை), மத்தகமும் (பெண் யானை) சல்லாபித்துக் கொண்டிருப்பது காணுகிறார்கள். கண்டதும் இவர்களுக்கும் அதுபோல் சல்லாபிக்க வேண்டுமென்று விருப்பமாகி, “யானைபோல் உருவெடுத்துப் புணர்ந்தார்கள்” என்று வரும்: அதைப் படித்துவிட்டு, கண்ணாடி வழியாகக் கூட்டத்தை ஏறிட்டுப் பார்த்தார் அண்ணாமலைத் தாத்தா. வாசிப்பைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்த சங்கம்மா ஒரு கைம்பெண்: ஒத்தைப்பாரி: கொஞ்ச வயசுக்காரியான சங்கம்மா சொல்வாள் “கடைசியில கடவுளும் இந்த வேலைதான் பாத்திருக்காக. அண்ணாமலையாரும் உண்ணாமுலையாரும் ஒருத்தரை ஒருத்தர் தொடுத்துக் கிட்டாங்களாக்கும்”.

இந்த விசயத்தைத் தானே, சீத்தாராம் அண்ணன் வீட்டில் வாசித்த மலரில் சித்திரமாகப் போட்டிருந்தர்கள். அன்று வாசித்தவேளையில் அசூயையாய்த்   தென்பட்ட அது யோசிக்கையில் ஒன்று தப்பிதமாய்ச் சொல்லவில்லை யெனப்பட்டது. மனிதன் கற்பித்த கடவுளுக்கு மனிதன் தன்னுடைய குணங்களைப் பாயவைத்து தன்னைக் காணுகிறான் .கோயில் மடத்துக்கு புராணவாசிப்புக்கு பாட்டியுடன்  போவது அன்றோடு அத்துப்போனது.

இப்படிதான் சாமி இல்லை எனப் பேசிடும் சீத்தராமன், சீனிவாசகன் என்ற இளந்தாரிகள் எனக்குள் அறிமுகமானார்கள்: பாட்டியின் நிழலாகத் தொடர்ந்தாலும், கருத்தின் நிழல் அந்த இரு இளந்தாரிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது. சாமியில்லை என்று சொன்ன ‘கறுப்புச் சட்டைக்காரர்களான’ பெரியாரும் அண்ணாவும் எனக்குள் எதிர்மறை வழியாக இறங்கினார்கள்.

அந்த ஆண்டில் பள்ளி நூலகம் புதிதாய் ஏற்படுத்தியிருந்தனர்: புதிய நூலகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, உலக அறிவுச் சேகரிப்புகளை மொத்தமாய்க்   தரிசிக்க வைத்தார்கள்: கொழுத்த மீன் ஒன்று என் அறிவு வயிற்றுக்குள் அசைந்தது போல் உயிர்ப்புடன் நூலகம்: முதலில் ’பாவா’ வீட்டு மாடி; இரண்டாவதாய் சீத்தாராமன் வீட்டுத் திண்ணை;  அடுத்து  பள்ளி நூலகம். இந்த மேய்ச்சல் மாடு எல்லாக் ’கம்பங் காட்டையும்’ காலி செய்துவிட்டிருந்தது.

பள்ளி நூலகத்தில் தமிழறிஞர்கள் இருந்தார்கள்: எட்டயபுரத்துக் குயிலும், புதுவைப் புயலும் வாழ்ந்தார்கள்: திரு.வி.க இருந்தார். மு.வ வந்தார். இந்தக் கூட்டத்தில் அண்ணாவைக் கண்டேன். ரோமாபுரி ராணிகள், சிவாஜிகண்ட இந்து ராஜ்யம்; தில்லை வில்லாளன், டி.கே.சீனிவாசன், புலவர் குழந்தை, அப்பாத்துரையார், சேக்ஷ்பியர் வரை அனைவரும் நூலகம் வழி பேசினார்கள்.

2

மதுரை வைகை ஆற்றின் தென்கரைமேல் தியாகராசர் கல்லூரி. 1962 முதல் 1967 கல்லூரிக் காலம். சேதுபதி அரசர் வரிசையில் வந்த பாண்டித்துரைத் தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தார். அய்ந்தாம் தமிழ்ச் சங்கம் என அழைக்கப்பட்டது மதுரைத் தியாகராசர் கல்லூரி. ஆய்ந்துணர்ந்த புலமையுள்ள   ஒரு தலைமுறை அப்போது தமிழ்த்துறையில் பணியாற்றினார்கள். தமிழ்த் துறையின் மூத்த கண்ணி அவ்வை துரைசாமிப்பிள்ளை- கடைசியாய் தமிழ்த்துறையினை வந்தடைந்த இளைய கண்ணி அவ்வை நடராசன். அவ்வையின் தலைப்பிள்ளை. பேராசிரியர்கள் அ.கி.பரந்தாமனார், முனைவர் மொ.துரையரங்கனார், சி.இலக்குவனார், இறுதியாய் முதல்வராயும் துறைத்தலைவராகவும் வந்துசேர்ந்த அ.சிதம்பரநாதனார் என இந்தப் பெருங்கடல்களில் நீந்தி தமிழ் உணர்வும் நவீன இலக்கியத் தொடர்பும் கொண்டவர்களாய் 1962-67 எங்களை உருவாக்கிற்று.

மதுரை மேலமாசிவீதியில் அப்போதிருந்தது மாவட்ட மையநூலகம். மேய்ந்து திரும்புதலாக என் வாசிப்பு.

“ஆட்டுப் பாலூட்டியுனை ஆதரிக்கப் பார்த்தாலும்
ஆடு கடிக்கும் மரம் அத்தனையும் மொட்டையடா”

எங்கள் வட்டாரப் பாடல் சொல்வது போல் என் நிலை ஆயிற்று. பொது நூலக ஆட்டுப்பால் ‘போஷாக்கு’ எனக்குப் போதவில்லை.உள்ளேயுள்ள அத்தனையையும் மேய்ந்து மொட்டையாக்கித் திரும்பிய நான், புத்திலக்கிய வருகையை நோக்கி புத்தகநிலையங்களுக்குச் செல்லத் தொடங்கினேன். புகுமுக வகுப்பில் (pre-university course) தோல்வியடைந்து வீட்டிலிருந்த அந்த ஓராண்டு இளம்பருவ காலம் ’வாசிப்பு’ என்னும் வெட்டிவேர் வாசத்தை மேல்நோக்கி எழவைத்தது. மேற்குத் திசையிலிருந்த பாரதி புத்தக நிலையத்துக்குப் போவது வழக்கமானது. பாரதி புத்தக நிலைய உரிமையாளர் சாமிநாதன் தமிழ்ப் பற்றாளர். பாவேந்தர் பாரதிதாசனும் சாமிநாதனும் அணுக்க நண்பர்கள். சாமிநாதனின் துணைவியார் மதுரை டோக்பெருமாட்டி மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளர். அவர்களுடைய வாழ்வு ஒருவரை ஒருவர் விரும்பும் பிரியத்தில் தொடங்கி சாதி கடந்த கலப்புத்திருமணத்தில்  பிணைப்புற்றது.

பாரதிதாசன் மதுரைக்கு வந்தால், அவர் கால்கள்  தொடர்வண்டி நிலையத்தின் எதிரில் டவுன்ஹால் சாலையிலிருந்த பாரதி புத்தக நிலையத்தை தானாக வந்தடையும். தமிழார்வலர் சாமிநாதன் திட்டமிடலில் அவருடைய பயணம் அமையும். அவரது தரிப்பிடம் சொக்கிகுளத்திலுள்ள ’பாரதிபுத்தக நிலைய’ சாமிநாதன் வீடு என்றறிவோம்.

மதுரை காந்தி அருங்காட்சியக திறந்தவெளி அரங்கில் பாரதிதாசன் தலைமையில் ‘பாஞ்சாலி சபதம்’ நாடகம். நாடகத்தை தொடங்கிவைத்துவிட்டு, பின்புறத்தில் கட்டாங் கடைசி மேட்டாந் தரையில் அமர்ந்து நாடகம் பார்த்தார்கள் பாரதிதாசானும் சாமிநாதனும். அவர்களுடன் ஒண்டி அருகணைந்து மாணவனான நான்.

நாடகத்தில் ஒரு காட்சி:

“கண்ணாளா, காதல் மீதூற நிற்கிறேன். எனக்கு ஒரு முத்தம் தா”

-பாஞ்சாலி, காதல் மணாளன் அர்ச்சுணனைக் கேட்கிறாள்.

“ஐயா, பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் இப்படியான வசனம் வருகிறதா?”

சாமிநாதன் சந்தேகம் கேட்டார்.

பாரதிதாசன் சொல்வார் “ஐயர் பாட்டில் அப்படி இல்ல.இவ இங்கிலீஷ் பாஞ்சாலி”

சிரிப்பு மேலெழுந்தது. முன்னால் உட்கார்ந்திருந்த பார்வையாளர்கள் திரும்பி அடங்காச் சிரிப்பை ரசித்தார்கள்.

மணிக்கணக்கில் பாரதிபுத்தக நிலையத்தில் நின்று, புதிய வருகையை வாசித்துக் கொண்டிருந்தேன். புதிய புத்தகங்கள் வாங்கிச் செல்வது, இயலாத போது புத்தகக் கடையில் நின்று வாசிப்பது என்ற என் இலக்கிய ஈடுபாடு, சாமிநாதனை ஈர்த்திருக்க வேண்டும். ஏறக்குறைய நாள் தவறினாலும், அங்கு நான் செல்வது தவறாது.

“தம்பி, நீங்க புத்தகம் எடுத்திட்டுப் போங்க. குறிச்சி வச்சிக்கிருவேன். பெறகு பணம் கொடுங்க” சாமிநாதன் சொன்னார். இந்த ஏற்பாடு எனக்கு மிகவும் பிடித்தது. அதைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். புத்தகக் கடையில், அதுவும் புதிய புத்தகக் கடையில் கடன்சொல்லி வாங்கிய முதல் ஆள் நானாக இருக்கும். அதுபோல் குறித்துக்கொண்டு கடனுக்குப் புத்தகங்கள் வழங்கிய ’பெருந்தகையாளர்’ சாமிநாதனாகவே இருக்கும்.

3


டவுன்ஹால் சாலையில் பாரதி புத்தகநிலைய வாசலில் புதிய புத்தகங்களின் வருகையைக் குறிக்க ஒரு கரும்பலகை வைக்கப் பட்டிருக்கும். என் கண்கள் கண்டடைந்தது ‘ஏழைபடும் பாடு’ என்னும் புதினம்.

அப்போது யோகி சுத்தானந்த பாரதியாரைத் தெரியாது: அது போல் பலப்பல அர்த்தமுள்ள மொழியாக்கங்களைச் செய்து தந்தவர் அவர் எனப் பின்னாளில் அறிந்தேன். பிரெஞ்சு நெடுங்கதையாசிரியர் விக்டர் கியூகோவின் ’லே மிஸ்ஸெரபில்’ என்ற நூலினை தமிழில் ‘ஏழை படும்பாடு’ என்றொரு அற்புதவடிவில் தந்திருந்தார்.

மொழியாக்கத்தின் சூட்சுமப் பெட்டியை மாயமந்திரக் கதைக்குள் வரும் குகையைத் திறப்பது போல் திறந்து காட்டினார். அக்காலத்தில் மொழிபெயர்ப்பு உண்டு. மொழியாக்கம் என்னும் வார்த்தையாடல் இல்லை.சுத்தானந்த பாரதி செய்தது மொழியாக்கம் - எந்நேரமும் ஒரு படைப்பாக்கம் என்ற ஓர்மையைப் பதிவு செய்துகொண்டு நடந்தார். வேக வேகமாய் எட்டுப் போட்டாலும் மெல்ல மெல்ல நடந்தாலும் அவருக்கு அது ஒரு படைப்பாக்கம்.

”பீரங்கிப் புலவன்” என்ற சொற்பயன்பாடு நாம் ஆயுளுளிலும் கேள்விப் பட்டதுண்டா? நாவலாசிரியர் விக்டர் குயூகோவின் பிரஞ்சு மொழியிலும் இல்லை: தமிழிலும் யாம் கண்டதில்லை. நெப்போலியன் இராணுவக் கல்விகற்று, படைத் தலைவனாகிப் போர்க் கருவிகளைக் கையாண்ட திறத்தை, பீரங்கிப் புலவன் என்ற பென்னம்பெரிய, அட்டகாசமான வார்த்தையால் சுட்டியபோது, அவர் என்னைச் சுண்டி இழுத்து தன்பக்கம் வைத்துக் கொண்டார்.
   
“தூக்குமேடை தச்சன் செய்த மரவேலையல்ல: மனித சமூகத்தின் பாவமே அந்த வடிவமாக நிற்கிறது. மனிதரைத் தூக்கு மேடை உண்கிறது.தூக்குத் தண்டனை ஏன்? குற்றவாளியைத் திருத்தக் கூடாதா?”

மனிதனைச் செயலற்ற பூஜ்யமாக ஆக்குகிற மரண தண்டனைக்கு எதிராய் உதித்தது சென்ற நூற்றாண்டு விக்டர் கியூகோவின் வாசகம்.

டால்ஸ்டாயின் ‘அன்னாகரீனா’, கியூகோவின் ’ஏழை படும் பாடு’ போன்ற நூல்கள் தாம் - மொழியாக்கப் படைப்பிலக்கியம் நோக்கி என் பயணம் திசைதிரும்பியதற்கு மூல காரணம். உருது, பாரசீகக் கவிதைகளின் கவித்துவத் தெறிப்புகள், கலீல் ஜிப்ரானின்” முறிந்த சிறகுககள்” என கவித்துவ மொழியாக்கப் படைப்புகளில் போய் மண்டியிட வைத்தது. வங்கத்தின் சரத் சந்திரர்,தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பண்டோபாத்யாய, உருதுக் கவி  இக்பால், இந்தியின் சதுர சேன சாஸ்திரி, மராட்டியத்தின் காண்டேகர் என்று தேடி தேடிப் போய்ச்சேர்ந்தேன். அவர்களுடனேயே பயணம் செய்து கொண்டிருந்தேன்.தமிழின் நவீனப்படைப்பாளிகளுடன் ’பத்துவிழுக்காடு’ என்றால், மீதி 90 விழுக்காடு பிற மொழிப் படைப்பாளிகளுடன்  என் நடையிருந்தது. என் படைப்புக்களான சிறுகதைகள் வாழ்க்கைச் சித்திரங்களாய் வெளிப்பட, அவையான கதை, கட்டுரைகளில் கவித்துவ மொழிநடை தூக்கலாய்ப் புலப்படுமெனில், அது இவ்வகை மொழியாக்கங்களின் கிரகிப்புத் தாம்.

1965-ல் இளங்கலை இறுதியாண்டு. இளமை ஊஞ்சலாட்டத்தின் இளவேனிற்காலம்.இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர், முடிந்ததும் “ இந்திய தேசீயப் பாதுகாப்புச் சட்டத்தில்” பாளையன்கோட்டைச் சிறைவாசம் என கொடுவேனிலாய் மாறியது.சிறையிருந்த மூன்று மாதங்களில் அறிவுபூர்வமானதும் அற்றதுமான விசயங்கள் உரையடலில் வந்தன.

விருதுநகர்த் தொகுதியில் காமராசரைப் பின்னாளில் தோற்கடித்த மாணவர் பெ.சீனிவாசன், எங்கள் பத்துப் பேரில் மூத்தவர். அக்கால திரை நட்சத்திரங்களான நாகேஸ்வரராவ் - சாவித்திரி நடித்து வெளியான ’தேவதாஸ்’ படம் அவரை ஈர்த்திருந்தது. நாகேஸ்வரராவின் சோக நடிப்பு, கனத்த குரல் ’கண்டசாலாவின்’ உருக்கம் பற்றி அடிக்கடி பேசுவார். ’தேவதாஸ்’ புதினத்தை எழுதிய எழுத்தாளர் சரத்சந்திரரின் அனைத்துப் புதினங்களையும் நான் வாசித்திருந்தேன். வங்கத்திலிருந்து அ.க்.செயராமன், சௌரி, த.நா.குமாரசாமி பொன்றோர் தமிழுக்கு ஆக்கம் செய்து வழங்கியிருந்தனர்.சரத்சந்திரர் புதினங்களைப் பட்டியலிட்டால் அவை யாவும் ஒரு சோகத் தொடர்ச்சி மலை. அத்தனையும் வஞ்சிக்கப்பட்ட பெண்களின் வாதனை. ஆணுக்கு வாழ்க்கை ஒரு விளையாட்டு; பெண்ணுக்கு ஊழிச் சுமை.

”புறச் சமூகத்திலிருந்து வரும் ஆதிக்கம், தனக்குள் உறைந்து கெட்டியாய்க் கிடக்கும் ஆதிக்கம், தன்னில் நிலவும் அறியாமை – ஆகிய மூன்று மலைகளை ஒரு ஆண் சுமக்கிறான்; ஒரு பெண் நான்காவதாய் ஒரு மலையச் சுமக்கிறாள் – அது ஆணாதிக்கம்” என்றொரு மார்க்சிய வாசகம் உண்டு.

சரத்சந்திரர் வாசிப்பு, என்னுள் சோகலயத்தின் நிரந்தர வசிப்பாக ஆகியது.வாழ்வின் இழப்புகளை, இல்லாமையை வரைகிற ஒரு எழுதுகோலை என் கைகளில் தந்தது. ஒருசெருசலேம், சரஸ்வதி மரணம், கறுத்த சொப்னம், பொய்மலரும் - போன்ற பாலிய கால சோகப் படைப்புக்கள் ஆக்கிரமித்தன.

வாசிப்பில் சுய வாசிப்பு, எழுத்து வாசிப்பு எனக் கிளை பிரிகிறது. சொந்த அனுபவங்களைக் கோர்த்துக் கொள்ள வைக்கிறது சுய வாசிப்பு. தன் வாழ்வும் தன்னருகேயான வாழ்வும் என சுயவாசிப்பில் சேமிப்பாகிறது. எழுத்து வாசிப்பு அப்படியானதல்ல; பிறர் எழுதி வைத்துப் போனவைகளை வாசித்து உணர்வது.

எனது நண்பரொருவர் சுயானுபவங்களைக் கிரகிப்பதில் வல்லாளன். தன்வசத்தும் மற்றவர் வசத்தும் நடந்தவைகளை அசைபோட்டு, அசைபோட்டு சுவாரசியமாய்ச் சொல்வார். மக்களின் சொல்லாடல்களினூடாக தனக்கான தனிச் சொல்லாடல்களையும் உருவாக்கிக் கொள்வார். அவ்வளவு நைப்பாய் இருக்கும் அவரது உரையாடல். ஆனால் ஒன்றும் எழுதமாட்டார்.

”உங்களை பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது.வாசித்தவருக்கு குறைவானால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.என்னைப் பாருங்கள் - வாசிப்பும் இல்லை; எழுத்தும் இல்லை. இருந்தால்தானே குறைய”

இப்படி மெய்ப்பாய்ச் சொன்னது அவர்.

‘அன்னம் போடுங்க தாயே’ என்று வீட்டு வீட்டுக்கு போய் நிற்பது போல் அன்று மதுரை பாரதி புத்தக நிலையம் போய் நின்றது  ஒருகாலம்: இன்று வேண்டாம் வேண்டாம் என்று இருகை வீசினாலும் வந்து மடியில் ஏறிக்கொள்கின்றன வெளியீடுகள். படிக்க இல்லையே என்று குமைந்து கொண்ட காலம் போய் , படிக்க முடியாத அளவு குவிந்து கொண்டேயுள்ளன.

(நற்றிணை காலாண்டிதழ் ஏப்ரல் – ஜூன் 2014, இதழில் வெளியானது)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?