இசுலாமியர் கைகளிலும் காவியக் கொடியா?

எழுத்தாளர் கூத்தலிங்கம் கதையில் ஒரு இடம் வருகிறது. "இத்தனை காலமா நாங்க தப்படிச்சோம், அடிச்சு அடிச்சு எங்க கை அசந்து போச்சு. கொஞ்ச காலம் நீங்க அடிச்சா அதுல என்ன தப்புங்கறேன்" - பாதாளத்துக்குள் தள்ளப்பட்டோரிடமிருந்து இவ்வாறு பளிச்சென கேள்விகள் வந்து விழ ஆரம்பித்துவிட்டன. பழையதுகளை பரிசீலிக்கத் திராணியற்றவர்களை இது போன்ற கேள்விகள் பரிதாபமாய் ஆக்கிவிடுகின்றன. இந்தக் கேள்விகள் எடக்கு முடக்காய் நம்மை மடக்குவது மட்டுமல்ல, நாம் காப்பாற்றி வந்த மதிப்பீடுகளையும் கேள்விக்கு ஆளாக்குகிறதே என்ற கோபம், இயற்கையாய் அதிகார வன்முறைக்குக் கைநீள வைக்கிறது.

முட்டுச் சந்துகளே இல்லாத காற்றோட்ட வீதிகளை புதிய தலைமுறையினர் உருவாக்க முயலுகிறார்கள். உடைக்கவே முடியாது என்று தோன்றிய முட்டுச் சந்துகளை அவர்கள் உடைக்கிறார்கள், உடைக்கும் அவசியத்தைக் காலமும், எதிர்கொள்ளும் நிலைமைகளும் உருவாக்கித் தருகின்றன. சுதந்திரத்தைச் சுவாசிக்க நினைக்கும் எவரும் இந்த உடைப்பை அதனுடன் புதிய நிர்மாணத் தைத் வரவேற்கவே செய்வார்கள்.

மாற்றங்களை ஏற்றிடாதவர்கள் அறிவுக்கும், சிந்தனைக்கும் பரிணாமம் உண்டென்பதை உணர மறுப்பவர் ஆகிறார்கள்.

அறிவின் பரிணாமம், சிந்தனையின் பரிணாமம், உண்டு பண்ணும் புதிய கருத்துகள் விடுதலையைப் பேசுகின்றன. பழமைவாத எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதி, மத எதிர்ப்பு, பெண் விடுதலை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, மனித உரிமைகள் என இன்றைய கால கட்டத்தில் மனிதனை விடுதலை செய்கிற கருத்தியல்கள் முன்னகர்த்தப்பட்டுள்ளன. புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன. எல்லா மதங்களும் போலவே இஸ்லாமும் பெண்ணை அடிமையாகப் பார்க்கும் இருட்டை எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் உடைக்க முயல்கிறார், இஸ்லாமியத்துக்குள் பெண்ணை அடிமைப்படுத்தும் கோட்பாடுகளை, மதத் தலைமைகளை எதிர்த்தார். அந்தக் கோட்பாடுகளை தமக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ளும் ஆண்கள் மதச் சமூகம் என்ற பெயரில் எதிர்த்தார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஆண்கள் மணந்து கொண்டது போல நானும் எனக்கு வசதி இருந்தால் பல ஆண்களை மணந்து கொண்டிருப்பேன் என இஸ்லாமிய ஆண் ஆதிக்கத்தை எதிர்த்து, இது போன்ற கேள்விகளை எழுப்பினார் தஸ்லிமா நஸ்ரின்.

அவரைக் கொலை செய்யும் முயற்சிகளை மதவெறியர்கள் தொடக்கினார்கள், பட்வாக்கள் பிறப்பித்தார்கள், அவர் பிறந்த வங்கதேசத்திலேயே இது நடந்தது. வங்கதேசத்திலிருந்து நாடு கடந்து இந்தியாவுக்குள் தஞ்சம் அடைந்தார்.

தஸ்லீமா நஸ்ரின் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட அந்தக் கால கட்டத்திலும் சரி, இப்பொழுதும் சரி, பெண்களே வங்க தேசத்தில் ஆட்சித் தலைமையில் இருந்தனர், இருக்கின்றனர். மதத்தில் நிலவும் ஆண் அடக்குமுறைகளுக்கு எதிராக அவர்கள் ஒரு வார்த்தை பேசியதில்லை, பேசியிருந்தால் மத உணர்வுகளைத் தூண்டிப் பாதுகாப்பாய்ச் சுரண்டுகிற மதத் தலைமைகள் தூக்கியெறிந்திருக்கும். அப்படிப் பேசுவது அரச பதவிகளின் அடிப்படையையே வேரறுக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட லஜ்ஜா என்ற தனது நூல் வெளியீட்டு நிகழ்வில் ஹைதராபாத்தில் கலந்து கொண்ட தஸ்லிமா நஸ்ரின் - மஜ்லீஸ், ஹதுல் முஸ்லீம் என்ற அமைப்பைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.


மஜ்லீஸ் இதே ஹதுல் முஸ்லீம் அமைப்பின் தலைவர் சுல்தான் அலாவுதீன், சட்டமன்ற உறுப்பினரான அவரது மகன் அபிருதீன், இன்னும் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவே தாக்கியுள்ளனர். மதவெறியாளர்களாய் இருப்பதில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்ற உயர்நிலை அடையாளங்கள் பெரிதில்லை என்பதையே தாக்குதல் சொல்லுகிறது. காஷ்மீர் முதலமைச்சர், காங்கிரஸ் குலாம் நபி ஆசாத் இரண்டு பேருமே தவறு செய்திருக்கிறார்கள் என்று கூச்சமில்லாமல் பேசியிருக்கிறார். மதவெறியர்களைக் கண்டித்திட வேண்டிய குரல் பதவிகளைத் தக்கவைக்கும் தலைமைகளின் ஆதரவுக் குரலாய் வெளிப்பட்டிருக்கிறது, தஸ்லீமா நஸ்ரின் மத உணர்வுகளைக் காயப்படுத்தலாமா என்று கேட்கிறார்கள். ‘இந்து மதத்துக்கு மூன்று எதிரிகள் சூலாயுதத்துக்கு மூன்று முனைகள்’ என்று பகிரங்க வன்முறை தூண்டிய பிரவீன் தொகாடியா கூட மத உணர்வுகளைக் காயப்படுத்துகிறார்கள் என்றுதான் பேசுகிறார், பகுத்தறிவுக்கு எதிராக, பெண் விடுதலைக்கு எதிரானதாக தஸ்லீமா நஸ்ரின் எதுவும் பேசவில்லை, காயப்படுத்துகிறது என்றால் நீங்கள் கண் திறந்து பார்க்கத் தயாரில்லை என்று பொருள்.

எச்.ஜி.ரசூல் என்ற கவிஞர், அவருடைய ஒவ்வொரு கவிதையும் படிமங்களாய்ப் பயணிக்கும், படிமங்களுக்குள் பயணித்தால் காட்சிகளாய் விரியும், காட்சிகள் யதார்த்தங்களை விரித்துக் காட்டும், யதார்த்தங்கள் இஸ்லாமிய சமூகத்தின் சிந்தனைப் போக்கு, மதத்தின் இருண்ட பக்கங்கள், வாழ்வு வகை, நாலாந்த நடவடிக்கைகளுக்கு நடத்திச் செல்லும்.

மதச் சமூகத்தின் திரைகள் ஆயிரம்; தனித்த வாழ்வுமுறை, சடங்கு சம்பிரதாயம், பலதார மண உறவு, பெண்ணடிமை எனும் ஒவ்வொரு திரையையும் அவருடைய ஒவ்வொரு கவிதையும் உருவிக் கீழே எறிகிறது. அந்தச் சமூகத்தில் சரிபாதிக்கும் மேலாயிருக்கிற பெண்களின் அடிமைநிலை, பெண்களை காற்பந்துகளாய் எத்தி ஆடும் ஆண்களின் ஆட்டம், பெண்ணெழுச்சி ஆகியவை பற்றிக் குறிப்பாக எழுதத்தொடங்கிய போது மதச் சமூகம் வெட்டுக்கத்திகளைத் தூக்கிக் கொண்டு வந்தது,
வந்துதிக்காத ஓர் இனத்தின் நபி - என்ற கவிதை
பயானில் கேட்டது
திசையெங்கும் உலகை உய்விக்க வந்துதித்தது
ஒரு லட்சத்து இருவத்து நான்காயிரம்
நபிமார்களென்று
திருக்குர்ஆன் காட்டியது
கல்லடியும் சொல்லடியும் தாங்கி
வரலாறாய் மாறியது
இருபத்தைந்து நபிமார் என்று
சொல்லிக் கொண்டிருந்த போது செல்ல மகள்
கேட்டாள்
இத்தனை இத்தனை
ஆண் நபிகளுக்கு மத்தியில்
ஏன் வாப்பா இல்லை
ஒரு பெண் நபி.
சாலமன் ருஷ்டியை விரட்டியது போல், பெண் விடுதலை எழுதிய தஸ்லீமா நஸ்ரினை விரட்டியது போல், இந்தக் கவிதைக்காக எச்.ஜி. ரசூலை வேட்டையாடத் தொடங்கினார்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை நகர ஜமாத்துகள். இந்த ஒரு கவிதை மட்டுமன்று. இது போன்ற பல கருத்து அம்புகள் அவரது அம்புறாத்துணியிலிருந்து புறப்பட்டதற்காக இஸ்லாமிய சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர் (காபிர்) என அறிவிக்கப்படுகிறார் ஜமாத்துகளால். காபிர் என்றால், அவர் சார்ந்த சமூகத்திலிருந்து மட்டுமன்று, அவர் இயங்கும் குடும்பத்துக்குள்ளிருந்தும் விலக்கப்பட்டார். மனைவி, குழந்தைகளும் அவருடையவர்களல்லர். பலகாலம் முயற்சிகள் செய்து, விளக்கம் தந்த அவரை - இஸ்லாமில் புதிதாய்ச் சேருகிறவர்களை கலீமா சொல்லவைத்து எப்படிச் சேர்த்துக் கொள்வார்களோ, அது போல் கலிமா சொல்லச் செய்து மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஜமாத்துகள், அலீமாக்கள், உலமாக்கள் கருத்துப்படி அவர் ஏற்கனவே முஸ்லீம் அல்லர், புதிதாக முஸ்லீம் ஆனவர்.

இப்போது மத அதிகாரத்தின் உச்சத்திற்குப் போய் ஆடுகிறார்கள். ஆறேழு ஆண்டுகளின் பின் முந்திய அவரது கவிதைக்காக மட்டுமன்று - இப்போது வெளியான கட்டுரைகளுக்காக - அவரை ஊர் விலக்கம், மத விலக்கம் செய்து தீர்ப்புரைத்திருக்கிறார்கள்.

நீதிமன்றம் போய் இடைக்காலத்தடை வாங்கி வருகிறார் ரசூல். நீதிமன்றத் தடை பற்றிய அச்சமின்றி மதச்சபை விலக்கம் செய்தது செய்ததுதான் என்று நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகாயத்துக்குக் கீழே இருக்கிற எதைப்பற்றியும் விமர்சிக்கும் உரிமை உண்டு. மார்க்கமோ விதி விலக்கன்று. சமூக விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் உருவானதென நாம் நேசிக்கிற மார்க்சியமும் அப்பாற்பட்டதன்று. ஆனால் ஏதொன்றும் சமூக விஞ்ஞான நோக்கில் அலசப் படவேண்டும் என்பதில் சிறு சந்தேகம் கூட இல்லை. ஒரு கதாசிரியனாய் தான் வாழும் சமு தாயத்தின் மூடுண்ட வாழ்வை வெளிச்சத்தில் கொண்டு வந்து வைத்தவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான். அவருடைய முதல் நாவல் கடலோரக் கிராமத்தின் கதைக்கு எதிர்ப்புக்களை வெளிப்படுத்திய மார்க்கவாதிகள் நாவலைத் தீக்கொளுத்தவும் செய்தார்கள்.

மதத்தின் கட்டு திட்டுகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாமல் திமிறி எழுந்தவர் இன்குலாப். இஸ்லாத்தின் வரையறைகள் இதுதான் எனப் பட்டியலிடுவீர்களெனில், அந்த இஸ்லாத்துக்குள் நான் இல்லை என அறிவித்து, வாழ்வில் நிகழ்த்திக் காட்டினார். 1980களில் தராசு, நக்கீரன் போன்ற இதழ்களில் எழுதிய போது, அவரைப் பணியாற்றிய கல்லூரியிலிருந்து விரட்ட, எந்த ஆதாரத்தில் நிற்கிறாரோ அந்த வாழ்விலிருந்து பிடுங்கி எறியும் முயற்சிகளும், உயிரோடு விட்டு வைக்கமாட்டோம் என்ற மிரட்டல்களும் நடந்தன. ஒரு கோட்பாடு தவறானது என்பதை அனுபவங்கள் உணர்த்துமானால் அதை உதறிவிட்டுச் செல்வதுதான் பகுத்தறிவுப்பூர்வமானது என்கிறார் இன்குலாப்.

உலகம் இஸ்லாமியப் பயங்கரவாதத்தில் நடுங்கிக் கொண்டிருப்பதான ஒரு மாயையை அமெரிக்கா போன்ற உலகப் பேரரசுகள் விதைத்துக் கொண்டிருக்கின்றன. மார்க்க நடைமுறை என்ற பெயரில் உள்ளூர்ப் பயங்கரவாதம் அதை உறுதி செய்துவிட வேண்டாம். சிறுபான்மை இனமாய் ஏற்கனவே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாம் தனக்குள் உயர்த்திய காவிக்கொடியை வீசி எறிய வேண்டாமா?

நன்றி: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2007, கீற்று

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ