மகரந்தமிலாப் பூ கொள்ளுமோ சூல்!

வானும் மண்ணும்
திசையும் ஒளியும் தனதாக்கிட
அலைவதில்லை ஆர்ப்பரிப்பதுமில்லை
ஓரிடத்து வாழும் மரஞ் செடிகொடிகள்;
அவை,
திசையறியாப் பறவைகள்
வன்மமிலாப் பிராணிகள்.

ஓரொருகாலம் ஓரொரு நிறம்
ஒவ்வொரு பொழுதுமொரு லாவகம்
ஓரிடத்துச் சொக்குப்பொடி
ஓரிடத்து முற்றத்துக் கோலப்பொடி
பொங்கும்காலத்தின் புளி
மங்கும்காலத்தின் மாங்காய்
கலையாடும் தாண்டவத்தின் புழுதியில்
எட்டுத்திக்கும் பறக்கின்றன சொற்கள்.

சொற்களின் மயக்குச் சுவையோடு
கைகளில் சுடர்கவி,
ஆகாயநிலா அருகில் கண்சிமிட்டும்
ஒற்றைமீன் போல் !

தலைகீழாய் மூழ்கி முத்தெடுத்து வரும்
எழுத்துப் பிரம்மாக்கள் எவரது
எழுதுகோலும் கேட்கவில்லை
முகிலன் எங்கே?
தூக்கு மரத்துக்கிளை முறிபட்டுச்
சுறுக்குக்கயிறு அறுபடுமோ
எழுவருக்கு?

தவித்த வாய்க்கு எங்கே மடக்கு நீர்?
குடங்கள் தலைபாரமேற்றி
நெடும்பயணம் போகும்
மக்கள்வயிற்றில் புளிகரைக்க
நிலத்தடிமண்ணைக் கரைசலாக்கி
கழனி வாயில் கைவிட்டெடுக்கும் மீத்தேன்,
ஹைட்ரொ கார்பன் வாந்தி ;
கேட்டீரோ ஒரு வார்த்தை,
எழுதினீரோ ஓரெழுத்து?

‘புளித்த மாவில்’ வெளிப்பட்டீர்
கும்பல் கலாச்சாரம் உம் குரல் நெரிக்கையில்
எமக்கும் பரிதவிப்பு, தவிதாயம்;
பதறும் இதயமுள்ள எல்லோரும் ஒன்றாய்.

மகரந்தமில்லாப் பூ கொள்ளுமோ சூல்?

- சூரியதீபன் (21 ஜூன் 2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ