முடிவிலாப் பயணம் - நீர் கொத்தி மனிதர்கள்


முதலில் ஒன்றைச் சொல்லிவிட விழைகிறேன். முடிவாக வைக்க வேண்டியதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

“இப்படியொரு செழுப்பமான, விளைந்த கம்பங்காடு போன்ற தலித் எழுத்தை அபிமானி காலதாமதத்துக்கு பலியாக்கியிருக்கக் கூடாது. இந்நேரத்துக்கு சில நெடுங்கதைகளாவது விளைச்சலாகியிருக்க வேண்டும்”

தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் கொடூரங்களுக்குள் இயங்குகிற அபிமானி என்ற பாத்திரம்கூட நெளிசல் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பதை அறிவேன். ஒரு நடுத்தர வா்க்க வாழ்க்கையை எட்டிப் பிடித்த பின்னரும் சாதிச் சதியாட்ட முற்றுகைக்குள் அவரிருந்தார். இந்த முற்றுகையைப் பிளந்த வெளியேற்றம். குடும்பக் கவனிப்புகள் என அவர் எழுத்தை வெளிப்படவிடாது தாமசிக்கச் செய்த காரணிகள் என்பதை அறிந்திருக்கிறேன்.

மூன்றாம் உலகப்போர் தண்ணீரில் கருக்கொள்கிறது. உலகமய தண்ணீர்க் கொள்ளை நீரை உறிஞ்சி, விநியோகிப்பை தனியார் கைவசத்துக்குள் அடைத்துள்ளது. பொலிவியா என்பது லத்தீன் அமெரிக்க நாடு; பொலிவியாவில் தண்ணீருக்கான யுத்தம் நடந்தது; மக்கள் நடத்தினார்கள். வணிக மயமாக்கப்படுவதற்குப் பதில் வாழ்வு மயமாக்கப்படவேண்டும் என்று நடத்தப்பெற்ற போரில் மக்கள் வெற்றி பெற்றார்கள்.

தமிழ்ச் சமூகத்தில், தண்ணீர் சாதி மயமாக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மேப்பொறந்தான்களுக்குமான (மேல்சாதி) குடிநீர்ப்பிரச்சனை சாதிமயமாக கொதிநிலை அடைகிறது.

உழைத்துச் சலித்து வீட்டுக்கு வந்த வந்த பொன்னாபரணம் ஒரு மடக்குத் தண்ணீருக்கு தொண்டை வறளக் கத்துகிறாள். குடிதண்ணீர்க் கிணற்றில் நீர் சேந்த முடியாது. நீரைக் கோரி, உயர்சாதியினர் இவர்களுக்கு ஊற்றும் வரை காத்திருக்க வேண்டும். தண்ணீர் வேண்டி ஏனத்துடன் கிணற்றடிக்கு நடந்த பெண்பிள்ளைகள் ராணி, மணிமேகலை மேல் கொதிகஞ்சியாய் விழுகிறார்கள் மேப்பொறந்தான் பெண்டுகள்.

“சர்வோதய சங்கக் கட்டிடக்” குழாய்கூட, பாவப்பட்டவர்களுக்கு தண்ணீர் தராமல் மூடிக்கொள்கிறது. தாழ்த்தப்பட்டோருக்குரிய வாழ்வுரிமைகளை வழங்க காந்தியமே மறுத்து விட்ட வேளையில் காந்தியத்தின் துண்டு துக்காணியான, சர்வோதயம் தந்துவிடுமா? காந்தியம், வினோபாவின் சர்வோதயம் போன்றன தருமகர்த்தா முறையில் வேர்கொண்டுள்ளன. முதலாளியத்துக்குள் போய்நிற்கும் ஒரு சமுதாய அமைப்பில் தருமகர்த்தா முறை செல்லுபடியாகுமா?

தண்ணிக் கொடுமை என்றால் ஒரு கொடுமையா? ஒன்னொன்னா நூறா, ஒருமிக்க நூறா என்று கேட்கும் சொலவம் போல் மொத்தமாய்க் குவிந்து கிடக்கிறது.

“கழுவுறதுக்கு தண்ணி இருக்காயா?”

இரவு நெருக்கத்தை விரும்பிய ஆம்பிளையைப் பார்த்து பொன்னாபரணம் சீறினாள். இரவுக் கொடுப்பினை கூட, ஏழைபாழைகளுக்கு தண்ணீரால் இல்லாமல் போகிறது.   வாழ்தலை அர்த்தமற்றதாய் ஆக்கும்-வாழ்தலில் நெருப்பள்ளிப் போடுகிறவைதாம் இந்த வார்த்தைகள்.

ராணி-காடாவிளக்கில் தாவணிபட்டு அந்த இளம் உயிர் தீயில் கருகிய போது, தண்ணீர் இருந்திருந்தால் உயிரைப் பிடித்து வைத்திருக்கக்கூடும். வீட்டில் நீர் இல்லை. வீட்டுவீட்டுக்கு ஓடினாலும் கிடைக்கவில்லை. வெந்து கொப்புளங்களாகி, வாழை இலையில் மாற்றி மாற்றிக் கிடத்தி இரண்டு நாட்களில் பறி கொடுத்துவிட்டார்கள்.

“கருந்தாரைத் தேக்கிவைத்த மாதிரி, கிணற்றுக்குள் இருட்டாய் மின்னியது. துவளத்தின் மேல்மட்டம் வரை “இருள்” சலம்பிக் கொண்டிருந்தது. கிணற்றின் அடிமட்டத்தில் செரங்கு போலக் கிடக்கும் தண்ணீரில் ஓலைப்பட்டடைகள் விழுந்து சிரமப்பட்டு நீர் கோரிய கடந்தகால சங்கடங்கள் சின்னத்துரையின் நினைவை அழுத்தின. இப்போது யாரும் கண்டுகொள்ளாத அனாதையாய் அருமாண்டு கிடந்தது கிணறு. அநியாயமாய் தன் அக்கா ராணியை பறிகொடுத்ததற்கு இந்தக் கிணறும் ஒரு காரணம் என்பதை அவன் நினைத்துப் பார்த்துக் கொண்டான். அன்று மட்டும் இந்தக் கிணற்றில் இன்றிருப்பதுபோல் தண்ணீர் நிறை கட்டிக் கிடந்திருந்தால், உடனே நீர்கோரி வந்து அவள் உடம்பில் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்திருக்கலாம் என்று தோன்றியது.”

படித்து, ஒருவங்கியில் வேலை பெற்று, மணமாகி, குழந்தைகளுடன் ஊர்திரும்பி கிணற்றின் வாகரையில் நின்ற சின்னத்துரை மீள் நினைவுகளில் சிதைக்கப்படுகிறான்.

சில பத்தாண்டுகளுக்கு முன், இந்திய சோசலிஸ்டுகளில் ஒருவாயிருந்த ஜார்ஜ் பெர்னான்டஸ் சொன்னது நினைவில் வருகிறது. “இந்தியக் குக்கிராமங்களில் குடிக்கத் தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ, கொக்கோ-கோலா கிடைக்கிறது”

குடிக்கக் கிணறு இல்லை. குளம் இல்லை, ஆறு இல்லை. “டாஸ்மாக்” ஊர் ஊராய் உண்டு. இல்லாமைகளை, போதாமைகளைக் கண்டு, வெதும்பி வேகம் கொண்டு விடக்கூடாதென மயக்கத்தில் மக்களைப் பூட்டிவைத்திருக்க அரசுகள் கற்றுக் கொண்டன. நிலம், நீர், கல்வி, மருத்துவம் அனைத்தும் அரசுகள் மக்களுக்கு வழங்கும் கடப்பாடுடையன. எல்லாவற்றையும் தனியார் நடத்துகிறார்கள். “டாஸ்மாக்கை” அரசு நடத்துகிறது. எல்லாவற்றையும் தனியார் கைகளில் தாரை வார்த்துவிட்ட அரசின் இரு கைகளில் ஒரு கையில் தடி, துப்பாக்கி, மற்றொரு கையில் “டாஸ்மாக்”.

சாதியற்ற ஒரு இடம் அதுவாகத்தான் இருக்க முடியும். கிராமப் புறங்களில் அங்கும் சமத்துவம்  உலவுவதாகத் தெரியவில்லை. சரக்கை வாங்கிக் கொண்டதும் மதுக்கடைக்குள்ளும் ஓரம் ஒதுங்க விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இல்லையென்றால் மேப்பொறந்தான்கள் மிடுக்காய் உட்கார்ந்து எச்சரிக்கை பண்ணுவார்கள்.

பொன்னாபரணத்தின் வறண்ட நாக்குக்கு மடக்கு நீர் வேண்ட, சிறுசுகளான சின்னத்துரையும், மணிமேகலையும் கிணற்றடிக்கு போய் வெகுநேரம் காத்திருக்க திடீரென அந்தப் பொம்பளைக்கு என்ன ஞானோதயம் வந்ததோ, தெரியவில்லை.

“ஏம்ல, முழிச்சிக்கிட்டு நிக்க? தூக்குப் போணிய கீழ வையி”

உத்தரவு போட்டாள். “போணிய வச்சிருக்கித லட்சணத்தைப் பாரு”

உதட்டுக்குள் கரித்துக் கொண்டே, தன் குடத்தை உயரமாய்த் தூக்கிக் கவிழ்த்தி போணிக்குள் நீரைச் சரித்தாள்..... தவிர்க்க முடியாத நெருக்கடியில் சேரிச்சனங்கள் முண்டியடித்து வந்து குழாயில் குடத்தை வைத்தோ, பாத்திரங்களை வைத்தோ நீர் பிடித்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் பயமும் இருந்தன மேட்டுக்குடிப் பொம்பிளைகளுக்கு; சேரிப் பாத்திரங்கள் பட்ட நீர்க்குழாயில் தாங்களும் குடம்வைத்து நீர்பிடித்துக் கொள்வது சாத்திரத்திற்கு அடுக்காது என்று தீர்மானித்திருந்தார்கள் என்கிறார் அபிமானி.

ஒவ்வொரு ரத்தத்திலும், மனசிலும் இருக்கிற சாதி நீரில் வந்து கொட்டுகிறது; வார்த்தைகளாய் வழிகிறது.

முதலில் நம் ரத்தத்துக்குள் சாதி சம்மணம் போட்டிருக்கிறது. அது குடும்பமாய் இருக்கிறது. குடும்பத்துக்கு வெளியில் நட்பு, சிநேகம், சொந்தமாய் வலைவிரித்துள்ளது. கட்சி அரசியலாய், தேர்தல் அரசியலாய் நடனமிடுகிறது. கட்சிகள் சாதியின் மறு உருவங்களாய் வேறு வேறு பெயர்களில் அலைகின்றன. எந்த வட்டாரத்தில் எந்தச் சாதியினர் இருக்கிறார்களோ, அவா்கள்தாம் வட்ட, மாவட்டச் செயலர்களாகிறார்கள். பெருவாரிச் சாதி இலக்கணத்தில் கால்பதித்து தொகுதியில் வேட்பாளர் வெற்றிபெறுகிறார். சாதி உலவாத வெளி (space) என்பது எங்கும், எதிலும் இல்லை.

இந்த “கெட்ட சாதிக்காற்று”தான் தருமபுரி இளவரசனை இல்லாமல் ஆக்கிற்று. ராணி என்ற 16 வயது இளம் உயிரின் மரணத்தை தீக்கொழுந்தில் எழுதியது.

இப்படியான கொடுமையில்தான் கிணற்றடியில் “எப்போதும் கலவரம் பண்ணியே நியாயத்தை நிலைநாட்ட வேண்டியிருந்தது சேரிப் பொம்பளைகளுக்கு”.

ஒரு சரியான சொல்லைக் கண்டு பிடித்து, அனுபவமாக உணர்ந்து முன்னெடுத்துத் தருகிறார் அபிமானி.

எந்தப் பகுதியில் எந்தவொரு சாதிக் கூட்டம் அதிகமாயிருக்கிறதோ, அந்த சாதி ஆதிக்கமாக இருக்கிறது என்பது உண்மை. இதைப் பொதுவிதியாக்கிட முடியுமா? கூட்ட எண்ணிக்கை வலுக்குறைந்த இடத்தில் கூட, உயர்சாதி ஆதிக்கம் வலுவாய் இருக்க என்ன அடிப்படை?

அடிப்படை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாய் வேர்போட்டு வளர்ந்த இந்துவர்ணாசிரம விஷவிருட்சத்தில் இருக்கிறது ; சொத்துடமையில் இருக்கிறது. எவனொருவன் வர்ணாகிரம முறையில் மேலே இருக்கிறானோ, அவனே சொத்தும் கொண்டு இருக்கிறான். அதிகாரம் கொண்டும் இருக்கிறான். இது எந்த மதமாயினும் , இஸ்லாமியம், கிறித்துவம் போல் வந்த மதமாயினும், சாதியை வேரறுத்துப் போட்டதில்லை.

அந்த ஊரில் சாம்பாக்மார் 50 குடிகள். லுலுக்கக்குடி 20 பேர். சாம்பாக்கமார் ஏழைபாழைகள். துலுக்கக்குடி வசதிபடைத்த  குடும்பங்கள். சாம்பாக்கமார் தெருப்பக்கத்திலேயே மேல்நிலைத் தொட்டி வைத்து நீர்தேக்கி, குழாய் வைத்துக் கொடுத்தும் சாம்பாக்கமார் நீர்பிடிக்க முடியாமல் ஆகிறது. குழாயில் வரிசை போட்டுப் பிடித்தார்கள். துலுக்கக் குடியைச் சேர்நத் தண்டித் தண்டிப் பொம்பிளைகள் அவர்களை இடித்துத் தள்ளிவிட்டு முதலில் நின்று பிடிப்பார்கள் - காரணம் இருந்தது. முன்னால் தாட்டியமாய் வந்து இடித்துத் தள்ளி தண்ணீர் பிடிக்கும் ஆயிஷாவின் புருசன் இஸ்மாயில் ஆளுங்கட்சிக்காரன். சாம்பாக்கமார் எவ்வளவோ சத்தம் போட்டுப் பார்த்தார்கள். அப்பவும் கேட்கவில்லை. அடிதடியில் முடிந்தது. பிறகு ஊர்வலம், போராட்டம், பட்டினிப் போராட்டம் என்று கொந்தளிப்பாகி, ஆட்சிநிர்வாகம் இப்போது காதுகொடுத்துக் கேட்கிறது.

முன்பொரு சாதி ஆதிக்கம் கோலெடுத்த இடத்தில் காலவளர்ச்சயில் இன்னொரு சாதி ஆதிக்கம் கொள்கிறது. முன்பு ஊரில் துலுக்கக்குடி + பிள்ளைமார்.

இப்போது மேற்குப் பக்கம் வெட்டாவெளியாய் கிடந்த தரிசு நிலத்தில், பெரிய பெரிய வீடுகள். நாடார், செட்டியார், பிள்ளைமார் என்று பல வகை சாதிகள். துலுக்குக்குடி வீடுகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறாற்போல் கம்பீரமாகவும் பகட்டாகவும் உயர்ந்து நிற்கின்றன புதிய வீடுகள்.

முன்பொரு கூட்டம் ஆதிக்கம் செய்த போதும்; கால வளர்ச்சி இன்னொரு கூட்டத்தை ‘ஆதிக்க இடத்தில் நிறுத்திவைக்கிற போதும் - சாம்பாக்கமார் தெருக்களுக்கு இதே பாடுதான். புதிதாய்க் குடியேறியிருக்கும் மேப்பொறந்தான்களை எதிர்த்துப் போரிடும் பாடுதான்.

பொன்னம்மா சத்தம் போட்டுப் பேசினாள்;

“எல்லாப் பொம்பளைங்களும் கவனமாக கேளுங்க. நாளைக்குச் சாயந்தரம் அவளுவ தண்ணி பிடிக்க வரும்போது, சித்திரைதான் அந்த மலையங்குறிச்சி மறத்திய மொதல்ல சண்டைக்கு இழுப்பா. அவளுவ நாலஞ்சுபேர்தான் இருக்காளுவ. நாம தெருப்பெருத்த பொம்பிளைய. நாமதான் அவளுக்குப் பக்க பலமா நிக்கனும். புரிஞ்சுதா?”

“புரிஞ்சுது”

ஒட்டுமொத்மாய்க் குரல்கள் எழுந்து உயர்ந்தன.

புரிகிறது. கலகம் செய்யாமல் நீதி கிடைக்காது என்று நமக்கும் புரிகிறது. அழுகைப் புரட்சி செய்யாத குழந்தை, தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லை. கலகம் செய்யாத மக்கள்-தாழ்த்தப்பட்டவராயினும் ஒடுக்கப்பட்டவாயினும் தங்களுக்கான வாழ்வை நிலைநாட்டிக் கொள்ள முடிவதில்லை. நமக்கு அல்ல, ‘எதுக்கு இன்னும் இந்த அம்மாவுக்கு சள்ளை பிடிச்ச வேலை’ என்று போராட்டமாகவே வாழ்வை நகர்த்தும் தாயைப் பற்றி சின்னத்துரை போல் படித்து, வேலை வாங்கி நடுத்தர வர்க்கத்துக்கு வளர்ந்து விட்ட ஒரு பகுதி நினைக்கிறது.போரிடாது மீள்வாழ்வு இல்லை. விரிந்து பரந்து உழலும் தலித் மக்களுக்கு உணர்த்தும் புள்ளியில் இந்தக் கதை முடிந்து விடுகிறது. போராட்டம் ஓய்வதில்லை - தண்ணீர் யுத்தத்தின் இரண்டாவது காட்சி நிரூபித்து நிற்கிறது.

2

தண்ணீர்க் கொடுமையை முன்னிறுத்தி தமிழில் முதலில் வரும் தலித் எழுத்து இது.

“சக்கிலிச்சிகள்லாம் கொஞ்சம் ஒதுங்கி நின்னு தண்ணி எடுங்க. ஒட்டி ஒரசிக்கிட்டு... மட்டு மருவாதி இல்லாம. கொஞ்சமாவது அறிவு வேண்டாமா?”

அடுப்பில் உலையேற்றி வைத்துவிட்டு அவசரத்திலும் பரபரப்பிலும் கிணற்றடிக்கு வந்திருந்தாள் பேச்சியம்மா. அவளை நோக்கி வெட்ட வெடுக்கென்று எச்சரித்தவள் வழக்கமான துலுக்குக் குடி இஸ்மாயில் சாயபு சம்சாரம் ஆயிஷா இல்லை. உருளை உருளையாய் கைகளும் கால்களும் திரண்டு நிற்க, கூந்தலை அள்ளிச் செருகிக் கொண்டு அடிப்பதைப் போல் முண்டிக் கொண்டு வரும் மலையங்குறிச்சி மறத்தி அல்ல.

முறுக்கிக் கொண்டு பேச்சியம்மாவை அடிக்கப்போனவள் சாம்பாக்கமாரைச் சேர்ந்த செல்லக்கிளி.

பேச்சியம்மாவுக்குப் பொறிகலங்கிப் போகிறது. பகடைத் தெருவிலிருந்து அப்போது அவள் மட்டுமே நீரிறைக்க வந்து நின்றிருந்தாள். பேச்சுத் தடித்து இன்னும் ஒரு பட்டை நீரைக் கூட இறைத்திராத பேச்சியம்மாவின் கையை வல்லடியாய் பிடித்திழுத்து பலவந்தமாய்த் தள்ளி விடுகிறாள் செல்லக்கிளி.

பகடைத் தெரு சக்கிலியர்களை, சாம்பாக்கமார்த் தெரு பறையர் தங்களினும் கீழான சாதியாகப் பார்த்து எத்தி எறிவது இது முதல் முறையல்ல. செல்வராசும் சின்னத்துரையும் ஒரே வகுப்பில் படிக்கும் சேக்காளிகள். சின்னத்துரை சாம்பாக்கமார்த் தெரு, செல்வராசு பகடைத் தெரு. சேக்காளிகளுக்குள் மேல், கீழ் என்ற உள்சாதிப் படிநிலை துடைத் தெறியப்படுகிறது. சின்னத் துரை வீட்டுக்கு வந்த செல்வராசு, சின்னத்துரை வீட்டுச் சுவர் மேல் ஏறி உட்கார்ந்து பேசுகிறான். கீழே சின்னத்துரை. அது நட்பின் அடையாளம். பேசி முடித்துவிட்டு வீதியில் நடந்துவந்த செல்வராசை

“ஏம்ல, ஒரு சக்கிலியப் பயலுக்கு தரையில் நின்னு பேசுனா ஆவாதோ”

எதிர்த்த வீட்டுப் பெரிசு சிரஞ்சீவி இவன் கன்னத்தில் பளார் என்று அறைகிறார்.

ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இடையேயான உள்க்காய்ச்சல், இங்கு அதிகாரமாக வீசப்படுகிறது. ஒவ்வொரு சாதிக்கும் இன்னொரு கீழ்சாதி இருக்க வேண்டுமென்ற மனமோகம் இந்த உள்மோதலுக்கு அடிப்படை. இதைப் பேசித்தான் ஆக வேண்டும். உரையாடாமல் உள்வெக்கையாய் வளர்த்துக் கொண்டிருந்தால், “தலித் விடுதலை” ஒரு போதும் இல்லை.

ஒரு நாய் மற்றொரு நாயை நோக்கிக் குலைக்கிறது. தன் எல்லைக்குட்பட்ட தெருவில், இன்னொரு நாய் நுழைவதா என்ற அதிகார மமதையன்றி, இதற்கு வேறென்ன சொல்ல? அதிகாரம் எந்த மனதில் அமருகிறதோ, அங்கு மனிதம் அகன்று போய்விடுகிறது.

ஒரு அடிமை, இன்னொரு அடிமையைத் துணை சேர்த்துக் கொள்ளவேண்டும். மற்ற அடிமைகளை விட தான் மேலானவன் என்னும் மேட்டிமைத் தனம் பழைய துடைப்பத்தால் அடித்து நீக்கப்பட வேண்டும். வேற்றுமையை உதறிய சாட்சிகளாய் சின்னத்துரையும் செல்வராசும் நிற்கிறார்கள்.

அபிமானி எனும் சமூகவிஞ்ஞானி  தலித் வாழ்வியல் அனுபவங்களிலிருந்து பேசியிருக்கிறார்.

“தனது காலச் சூழலை உணர்ந்து, அதைத் தனது பார்வையில் விமரிசித்துப் பதிவு செய்யாதவன் எவ்வளவு மகத்தான எழுத்தாற்றல் பெற்றவனாக இருந்தாலும், பிரபலமானவனாக இருந்தாலும் அவன் தன் தாய் மண்ணுக்குப் பாரம். அவன் ஒரு பாவி எழுத்தாளனாகவே காலத்தால் புறந்தள்ளப்படுவான்” என்று சொல்வார் எனது நண்பரும் கவிஞருமான புவியரசு. பாவி என்ற சொல்லுக்கு மோசமான எழுத்தாளன் என்றே பொருள் கொள்கிறேன். இந்தச் சாட்டையை எடுத்து வீசினால், தமிழ் இலக்கிய சமூகத்தில் நிறைய எழுத்துப் பிரபலங்களின் முதுகுத்தண்டு வளைந்து போகும்.

தலித் விடுதலை என்ற தன் பார்வையில் நின்று அபிமானி விமரிசிக்கிறபோது – விமர்சனமும் கலைத்தொழிலும் இணைவாகப் பயணிக்கின்றன. இரண்டும் மேக்காப்பூட்டில் நெடுங்கதை வண்டியை ஊர் போய்ச் சேர்க்கின்றன.

ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்று சொல்வது உண்டு. படைப்பிலக்கியத்துக்கு இது பொருந்தும். பொருத்தமில்லாச் சொற்கள் தூக்கலாய் வருமானால், சொல்லப் படவேண்டிய கருவை அர்த்தமிழக்கச் செய்துவிடும். இவை கொல்லும் சொற்கள். அவ்வாறான சொற்கள் தவிர்த்து வெல்லும் சொற்களால் கோர்த்திருக்கிறார்.

“இரவு தன் சுயமான போக்கை வழக்கம்போல் ஆழ்ந்த மௌனத்தில் செலுத்திக் கொண்டிருந்தது. ஆள் அரவமில்லாமல், நாய்களின் அதிரும்படியான குரைப்புகள் இல்லாமல், கடலில் மிதந்து வரும் கப்பலைப் போல் நகர்ந்து கொண்டிருந்தது.”

“கருந்தாரைத் தேக்கி வைத்த மாதிரி, கிணற்றுக்குள் இருட்டாய் மின்னுகிறது”

“ தலை உச்சியில் நின்று சூரியன் குதியாளம் போட்டது”.

“நல்ல பாம்பு மாதிரி அவன். வெசத்தக் கடவாயில ஒதுக்கி வச்சிக்கிட்டே அலைவான்”

ஒரு வட்டாரத்தின், ஒரு இன மக்களின் மொழி எந்த உச்சரிப்பில், வெளிப்பாட்டில் விழுகிறதோ, அதே உயிர்ப்பில் அதிசயம் நிகழ்த்துகிறது.

அக்கிசியாய் (அக்கறை), சீண்டறம், அலுசியம் (அதிசயம்), தலைச்சிறை, தொடுவெட்டியாய் (தொடர்ச்சியாய்), ஆவுதுணை, அதல குதலம் (ஏறுக்குமாறாய்), தாக்காட்டம், கங்குல் முங்கல் (செங்கமங்கலாய்), பேச்சுமொழியின் வளம் நீக்கமற கதிகட்டிக் கொண்டு வெளிப்படுகிறது.

எங்கள் வட்டாரம் விளாத்திகுளம். பேர்பெற்ற இசைக்கலைஞரான விளாத்திகுளம் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த ஊர்.

விளாத்திகுளத்தில் பூமணிப் பாட்டி என்று ஒரு அம்மா இருந்தார். பத்து ஆண்டுகள் முன் இறந்து போனார். அவர் வாய்திறந்தால் நாட்டுப்பாடல்களும், சொலவடைகளும், கதையும், கேலிகளும் பொலபொலவெனக் கொட்டும். அவர் வீட்டு முன்னடியில் ஒரு தாம்பாளத்தில் வெத்தலை, கொட்டைப்பாக்கு – இதுகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தார்.

“பாட்டி என்ன விக்குறீங்க”
நான் கேட்டேன்.
“பஞ்சவரை விக்கறேன்” என்றார் பூமணிப்பாட்டி.
“பஞ்சவரா?”
“ஆமா, பஞ்சபாண்டவர் தெரியாதா, அதுதான் பஞ்சவர்”
- என்று சொல்லிவிட்டு ஒரு வெத்தலையைக் கையில் எடுத்தார்.
“இது என்ன காம்பு. (பிறகு அதைக் கிழித்தார்)
        இது என்ன கிழிப்பு. (பாக்கை வெத்தலையில் மடித்தார்)
        இது என்ன? மடிப்பு. (சுண்ணாம்பு தடவுகிறார்)
        உரைப்பு, (வாயில் போட்டு மெல்லுகிறார்) சிவப்பு.

இப்ப சரியாப் போச்சா? காம்பு, கிழிப்பு, மடிப்பு, உரைப்பு, சிவப்பு-அந்த பஞ்சவரைத் தான் வித்துக்கிட்டிருக்கேன்”

அடுத்த யோசிப்புக்கு போக இயலாமல் அயர்ந்து நின்றேன்.

பூமணிப் பாட்டியின் மரபில், மக்கள் மொழியில் மக்களது பிரச்சனைகளை உயிர்ப்புடன் வைக்கும் ஒரு கதை சொல்லி இவர். இந்தக் கதை சொல்லியைத் தான் இவ்வளவு காலமும் எதிர்பார்த்து நின்றிருந்தோம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ