கதை சொல்லி கந்தர்வன்
சாவு - கொடூரமானது.
இறந்தவருக்கு அது ஒன்றுமில்லை. இருப்பவர்களுக்கு அது தான் சாவு.
இறப்பு சித்தித்தவருக்கு அதன்பின் எந்த அனுபவமும் இல்லை. இருப்பவர்களுக்கு அவரால் இனி நிகழவிருக்கிற எல்லா அனுபவங்களும் உண்டு.
இறந்து போனவருக்கு சிந்திப்பின் புள்ளி மறைந்து விடுகிறது. வாழ்ந்து தீர வேண்டும் என்றிருப்பவர்களுக்கு, இனிமேல் தான் ஆரம்பமாகிறது.
இழப்பின் வெறுமை அல்லது கொடூரம் ஒன்றாகவும் இருக்கலாம். பலவாகவும் இருக்கலாம். ஒருவருக்கோ, பலருக்கோ வாழ்நாளில் ஏகமாகி ரணம் கொட்டலாம்.
ஒரு சாவு தரும் வெறுமையை, முதுமை முன் கூட்டியே தூக்கிக் கொண்டு வந்து காட்டுகிறது. இனி ஏதும் செய்வதற்கில்லை என்ற அயர்ந்த மனதின் வெளிப்பாடென இதுவரை கை கூடி வந்த கூட்டல்கள் எல்லாம் முதுமையில் இப்போது கழித்தல்களாக மாறுகின்றன. மலையாளக் கவிஞர் சுகதகுமாரி முதுமையின் இழப்புகளை ஒவ்வொன்றாய் பட்டியலிடுகிறார். இவற்றை கவிதையில் தரும் காரியத்துக்கு சுகதகுமாரி நீண்டநாள் காத்திருந்திருப்பார். அவை ஒவ்வொன்றாய் தொகுத்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட கவிதையில் இளம்பாரதியின் சீரான மொழியாக்கத்தின் பின்பாதி இது.
இனி இந்த மனதினில் கவிதை இல்லை
”இருண்ட மனதிலினிப் பண்டிகையில்லைகவிதையை வாசித்துக் கொண்டிருக்கையில் தோழர் கந்தவர்னின் மறைவுச் சேதி வந்தது. கவிதையும், சாவுச் சேதியும் ஒரு சேரக் கிடைத்தன. ஒன்று கையில்; மற்றொன்று இதயத்தில். இரண்டும் இணைந்து முட்டித்தகர்த்த அதிர்ச்சியின் பின்னும், மெல்லிய சவ்வு இற்று நைந்து போகாத எதையும் தாங்கும் இதயம் எனக்கிருந்தது.
சிரிப்பில்லை, களிப்பில்லை, சிறகுமில்லை
மலர் தேடியோடும் மலைச் சரிவில்
நிழல் பரப்பி நின்ற மாந்தோப்பில்லை
தாய் வீட்டு முற்றத்து மெல்லோசையும்
நிறைதிரியிட்ட குத்து விளக்கும்
வளைந்த இலவ மரக் கொம்பில் கட்டிய
ஊஞ்சலில் ஆட்டமில்லை, பாட்டுமில்லை
அன்பு நிறைந்த மெலிந்த கையால்
அம்மா பரிமாறும் பதமான சோறுமில்லை
ஒரு பிரளயத்தில் மிதந்து போகும்
காலகட்டம் விழிமூடிட
இருண்டுவிட்ட மனதிலினிப்
பண்டிகையில்லை..
இனி இந்த மனதில் கவிதையில்லை
இனி இந்த மனதில் என்னதான் உண்டு?
கனவின் நான்கைந்து துளிகள் மட்டுமே!
ஒரு கெண்டித் தண்ணீரும்
அதன் உள்ளில் சின்னத் துளசிக் கதிரும்
அணையா விளக்கும் ஒரு பிடிச் சாம்பலும்
துளிர்த்த கண்ணீர் விழுந்ததால்
அதனின்று பொங்கும் புகைச் சுருளும்
ஒர் அரவமில்லா அலறலும் மட்டுமே!
இங்கே என்னிடத்தில்
வேறொன்றுமில்லை…
கவிதைக்காக கைகட்டி நிற்பவனே
வெறுங்கையனாய்ப் போ.
திரும்பிப் போ”
1969 மதுரையில் கல்லூரித் துணைப்பேராசிரியர் பணி. கோடை விடுமுறைகளில் சென்னை வந்து போவேன். தமிழகத்திலிருந்து ஈழத்துக்குக் கடல் நீந்திக் கரை சேர்வது போலத்தான் சென்னைக்கு வந்து போவதும்; அது ஒரு சாகஸம். அந்த சாமார்த்தியம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கைவரப் பெற்றது. தேர்வுத் தாள் திருத்தும் தகுதி எனக்கு அப்போது இல்லை. அதற்குத் தனியாகப் பல்கலைக்கழக விதி இருக்கிறது. ஆனால் பிற கல்லூரிகளுக்குத் தேர்வுக் கண்காணிப்பாளராக அனுப்பினார்கள். அந்த நாட்களில் ஒரு தேர்வுக் கண்காணிப்புக்கு ஐந்து ரூபாய். எத்தனை வேண்டுமானாலும் தாராளமாய்ப் போடுங்கள் என்று பேர் கொடுத்தேன். ஒரு நாளைக்கு இரண்டுக்கு மேல் போட அவர்களால் முடியாது. அப்படிச் சேர்த்த பணத்தில் நண்பர்களைச் சந்திக்க, அவர்களுடன் தங்கிப் போக சென்னை வருவேன். இன்குலாப்பும், நா.காமராசனும் சென்னையில் பணியாற்றினார்கள்.
1969 - தஞ்சை ராமமூர்த்தி ‘சோஷலிஸ்ட்’ என்ற வார இதழை சென்னையில் நடத்திக் கொண்டிருந்தார். தியாகராய நகரிலுள்ள பத்திரிக்கை அலுவலகத்துக்கு மாலையில் கந்தர்வன், நச்சினார்க்கினியன், மீசை ’கார்க்கி’ அனைவரும் வந்தார்கள். அந்திக் கலம்பகமாக அது அமையாது. அனல் கலம்பமாக மாறும். இதுவரை நான் அறிந்திராத உரையாடல். அவர்கள் போகிற அடர்த்தியான வனாந்தரத்துக்குள் போய், உராய்வுகள், கீறல்களுடன் பயணித்து அவர்கள் நீந்திச் செல்கிற கடலலைகளிலெல்லாம் நீந்தி மூச்சு முட்டி இளைத்துத் திரும்பினேன். தமிழ் மட்டுமே எழுதப் பேச தெரிந்த - தமிழ் இலக்கியம் மட்டுமே அறிந்த துணைப் பேராசிரியராக - அங்கே நான் மட்டுமே இருந்திருக்க முடியும். அவர்கள் சமுதாயத்துக்குள்ளிருந்து வந்தார்கள். நான் பாடப் புத்தகத்துக்குள் இருந்தேன்.
அந்நாட்களில் கந்தர்வன் என்ற நாகலிங்கம் எந்த இயக்கத்தின் தொடர்பிலுமில்லை. ஆனால் இடது சாரி அரசியல் அவரை உள்ளிழுத்துச் சுருட்டிக் கொண்டிருந்தது. வசந்ததின் இடி முழக்கமான நக்சல்பாரி அனல் கலை, கவிதா, இலக்கிய மனங்களில் துளிகளைக் கொட்டி வீசியிருந்தது. புயல் மரத்தை உலுக்குவது போல, காற்று பூவை மலரச் செய்வது போல எல்லோரையும் தொட்டு தன்மயமான வெப்பத்தைத் தந்து கொண்டிருந்தது. புரட்சிகர அரசியல் வெப்பம் கந்தர்வன் நாக்கில் தங்கியிருந்ததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.
கூடுவிட்டு கூடு பாயும் வித்தையில் ஆணழகன் உருவிலிருந்து கோரமான குரங்கு உருவுக்கு மாறினேன். அறிவு, எழுத்து, வாசிப்பு என்ற கல்லூரி இடத்திலிருந்து, எள் முனையும் தொடர்பற்ற அதிகாரமும் அடிமைத்தனமும் நிறைந்த அரசு அலுவலர் பதவிக்கு 1971-ல் மாறியிருந்தேன். என் அதிகாரம் கீழிருப்பவர்களுக்கு; என் அடிமைத்தனம் மேலிருந்தவர்களுக்கு. ஆயினும் என் அதிகாரம் கீழிருந்தவர்கள் மேல் எதிர்பார்த்தது போல் செல்லுபடியாகவில்லை. 1971-ல் மாவட்ட செய்தித்துறை அலுவலராய் வாழ்வில் ஒருமுறை வாங்கிக் கொண்ட சாபக் கேட்டை பணி ஓய்வு பெறும் காலம் வரை உதற முடியவில்லை.
மாவட்டங்களில் அலுவலராக இருந்த போதும், பின்னர் தலைமைச் செயலகத்தில் நான் பணியிலிருந்த போதும், கந்தர்வன் மாநிலத் தலைமைக் கருவூலத் துறையில் பணியாற்றினார். கோட்டையில் தான் அலுவலகம் அவருக்கும் எனக்கும்.
வேலையற்ற பொழுதுகளை நானே உருவாக்கிக் கொண்டு, அடிக்கடி கந்தர்வனைக் சந்திக்க நடப்பேன். ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடம், அவ்வளவுதான். அவர் பேச்சு அதிசயிப்புகளாக வெளிப்படும்.
ஒரு எழுத்தாளரைக் குறிப்பிட்டு ”அவரைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததுண்டா? பாருங்கள். அவசியம். அதுவும் காலை நேரத்தில் பார்க்கணும். ஒவ்வொரு காலை செய்தித்தாளிலும் வார இதழிலிலும் என்னோட பெயர் இருக்கிறதா என்று பார்ப்பார். இல்லையென்றால் பத்திரிகையை வீசி எறிவார்” என்று லாவகமாய் வீசிக் காட்டுவார்.
”வீர வேலுச்சாமியை வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான கலைஞன். யதார்த்தம்னா என்னன்னு அவர்ட்டதான் தெரிஞ்சிக்கிரணும்” என்றார்; பிறகு வீரவேலுச்சாமியை ‘தாமரை’ இதழ் மூலம் உட்செறிக்கத் தொடங்கினேன்.
காவல்துறையில் மாநில அளவில் தலைமையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார் அந்த அதிகாரி. அவர் ஒரு ஆங்கிலோ இந்தியர். ஓய்வு பெற்ற போது கணக்கிடுதலில் ஒரு பைசா வித்தியாசம். காவல் துறை தலைமை அலுவலராயிருந்த அவர், அந்த ஒரு பைசா வித்தியாசத்தை சரிசெய்து அனுப்புங்கள் என்று ஓய்வூதிய ஆணையைத் திருப்பி அனுப்பி விட்டார்.
கோப்பு மேல்நிலை அலுவலருக்குப் போவதும் வருவதுமாய் கந்தர்வன் மேசை மேல் கிடக்கும். அதைக் காட்டிச் சொல்வார்.
”ஒரு பைசா ஆபிசர் வந்தாச்சு.”
அதிசயப்புக்குரிய, ஆச்சரியமான விசயங்களை, நிகழ்வுகளைத் தேடி எடுத்துப் பேசுவார். அதிசயிப்பான மொழியில் வழங்குவார். வித்தியாசப்பட்ட மனிதர்களைப் பார்த்து பார்த்து பொறுக்கி எடுப்பார். பின்னாளில் எழுதத் தொடங்கிய போது அவருடைய கதைகள் அதிசயிப்புகளின் குலுக்கை (பட்டறை) ஆக வெளிப்பட்டமை இங்கிருந்து தொடங்குகிறது.
ஒவ்வொன்றையும் வியந்து, அதிசயித்து, வாசிப்பவனையும் அந்த இடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிற சித்தரிப்பு அவருடைய படைப்புகள்.
இன்று, இன்றில்லாவிட்டால் நாளை என்ற நினைப்பில் எழுத்துக் காரியம் என் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருந்தது. அந்நாளில் ஒரு மார்க்க்சீய - லெனினிய புரட்சிகர அரசியல் அமைப்பின் கலை இலக்கியப் பிரிவினதும் ‘மனஓசை’ என்ற கலை இலக்கிய மாத இதழினதும் செயல்பாடுகளே கதியென்று கிடந்தேன். கலை இலக்கியம் பற்றி விகற்பமான கேள்விகளை அவை எழுப்பிவிட்டிருந்தன். போராட்டமே சிறந்த இலக்கியம், புரட்சியிலும் மேலான இலக்கியம் வேறெதுவும் இல்லை என்ற வாசகத்தில் ஊசலாட்டம் எதுவும் எனக்கு இல்லை அந்நாளில்.
இப்போது திறந்து கொள்ளலாம், பிறகு திறந்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் திறக்க முடியும் எனற நினைப்பில் எனக்குள்ளிருந்த படைப்பாற்றலின் தங்கச் சுரங்கத்தை மூடிவிட்டேன்.
’நீங்கள் பொன் விளையும் பூமியை மூடிவிட்டீர்கள் என்று கேட்டு என்னை உசுப்பி விடுகிற ஒரு கடிதம் நண்பர் கந்தர்வனிடமிருந்து வந்தது - 1995ல்.
எண்பதுகளில் எனது கலை, இலக்கியப் பதிவுகள் எதுவும் இல்லை. தொடர் காரியமாய் தொண்ணூறு தொடக்கத்தில் அதைப் பற்றி மதுரை பல்கலையில் ஆய்வுக் கட்டுரை வாசித்த கந்தர்வன் ‘ஒரு ஜெருசலேம்’, ‘காடு’ போன்ற சுடர்மிகு படைப்புகள் பார்க்க முடியாமல் போனது மனசுக்கு வருத்தம் தருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
பி 5/4, ஆலங்குளம் ஹவுசிங் யூனிட்,
புதுக் கோட்டை – 622005, 19-01-1995
அன்புத் தோழர் ஜே.பி அவர்களுக்கு,
வணக்கம்.
இன்று நூலஞ்சலில் ‘எண்பதுகளில் சிறுகதை’ பற்றிய ஒரு நூலை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். இதற்கு ஒரு முக்கிய காரணமுண்டு. உங்களோடு எனக்கிருந்த நெருக்கமும் உங்கள் எழுத்தும் எனக்கு இன்றும் ஆதர்சம்.
மேற்கண்ட தலைப்பில் இரண்டாண்டுகளுக்கு முன் மதுரைப் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு அது. ஒரு முன்னோடி எழுத்தாளரான உங்களைக் குறிப்பிட்டு எந்தக் கட்டுரையாளரும் சொல்லாதது எனக்குக் கவலயளித்தது.
என் கட்டுரையின் கடைசிப் பகுதியில் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தேன். அதை நீங்கள் படிக்க வேண்டுமென்பதற்காக இதை உங்களுக்கு அனுப்பவில்லை. நீங்கள் இப்போது எழுதாமலிருப்பது சரியல்லவென்றும், எழுத உங்களை ரோசப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் அனுப்பியிருக்கிறேன்.
முரட்டு அரசியல் மனசில் ஏறியதற்கும் உங்கள் மென்மைக் குணமே காரணம். இரண்டுமே என் போன்றோரை உங்கள் பால் ஈர்த்தது. எந்த அரசியல் நிலைப்பாடும் கலைஞனைப் படைக்க விடாமல் செய்துவிடக்கூடாது. நீங்கள் எழுத வேண்டும்.
இன்னொன்று ஒரு தாலுகா அளவில் அதிகாரியாயிருக்கும் எனக்குள்ள அலுவலகப் பிடுங்கல்கள் சொல்லி முடியாது. ஒரு மாநில அளவிலான அதிகாரிக்கு எவ்வளவு பிடுங்கல்கள் என்பதை நானறிவேன். ஆனால் நாலு தொழிற்சங்கங்களுக்குத் தலைவராகவும் அதில் ஏழு கமிட்டிகளுக்குப் பொறுப்பாகவும் இருந்து கொண்டுதான் எழுதுகிறேன்.
பத்திரிகை நடத்துவது, அதோடு இழுபட்டது எல்லாம் சரி. ஆனால் நீங்கள் அடிப்படையில் ஒரு உயரிய படைப்பாளி.
நீங்கள் எழுத வேண்டும். மதுரையில் திடீரென்று சந்தித்தபோது சரியாகப் பேசிக் கொள்ள முடியவில்லை.
வீட்டில் எல்லோருக்கும் எங்களன்பைச் சொல்லுங்கள்.
இந்தப் பக்கம் வரும்போது என் வீட்டிற்கு வந்து ஒரு வேளை சாப்பிட்டுச் செல்ல வேண்டும்.
கந்தர்வன்.
பி.கு: புத்தகம் உங்களிடம் பத்திரமாக இருக்கட்டும். பிறகு வாங்கிக் கொள்கிறேன்.
கந்தர்வன் தான் ஒப்புக் கொடுத்த அரசியல் இயக்கத்துக்கு முன்னுரிமை தந்தார். அவர் சிறுகதை எழுதத் தொடங்கியது மிகப்பிந்தியே (1980). ஆனால் அமைப்பும், அரசியல் நிலைபாடும் கலைஞனைப் படைக்க விடாமல் செய்துவிடக் கூடாது என்ற காப்புணர்வு அவருக்கிருந்தது. அரசியல் முன்னுரிமையையும் படைப்பாக்கத்தையும் தனித்தனிக் குழிகளாக வைத்துக் கொண்டு பல்லாங்குழி ஆடினார். அரசியலை முன்னிலைப்படுத்தியதாக கட்டுரை, கவிதைகளும், மற்றவர்களை ஈர்ப்பவையென கதைகளும் என்ற பிரிப்பு துல்லியமாக அப்போது அவருக்குள் உருவாகியிருந்தது. கதை ஆக்கம் அரசியல் நிழல் பாவாமல் வந்தது. சமூகத்தின் நடப்புச் காட்சியாகப் பேசின. அரசியல் நிலைப்பாடு படைப்பாக்கம் இரண்டையும் ஒன்றாக குழைக்காமல், அல்லது குழப்பிக் கொள்ளாமல். தனித்தனி வாகனங்களில் பயணம் செய்தார். அவருக்குள் எப்போதும் இருந்தது - இந்த சுய விழிப்புக் கண்.
”இலக்கியவாதிகளுக்கு நம்பிக்கையளிக்குபடி எந்த இயக்கங்களும் இல்லை” என்ற எனது நேர்காணல் ஜீலை 2003 தீராநதி இதழில் வெளியாகியிருந்தது. அது அவரை மிகவும் எரிச்சலூட்டியது.
”எங்க ஆட்க ரொம்ப கொதிச்சிப் போயிருக்காங்க” என்றார். கட்சிக்காரர்களை. கட்சி சார்ந்த இலக்கியப் பிரியர்களையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
"எந்த மக்களுக்கு அவர்கள் (அரசியல்வாதிகள்) உண்மையாக இருப்பதாகச் சொல்றார்களோ அந்த மக்களுக்கு அவர்கள் உண்மையாக இருப்பதில்லை. நுண்ணறிவு கொண்ட இலக்கியவாதிகள் இந்த அமைப்புகளுக்குள் அடங்கிக் கிடக்க முடியாது. தேர்தல் கூட்டணிக்காக நடக்கும் அசிங்கங்களை சகித்துக்கொள்ள முடியாது”
எனது நேர்காணலில் இந்த வாசகம் வந்திருந்தது. தான் சார்ந்த அமைப்பைச் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி) சாடுவதாக அவர் உண்ர்ந்தார். அவர் நினைத்தது சரியே. பெயர் சொல்லாமல் நான் சுட்டிக் காட்டியவைகளில் அவருடைய அமைப்பும் உள்ளடக்கம்.
ஒரு கட்டத்தில் - மக்களுக்கு உண்மையாக இருப்பதைவிட, இயக்கத்துக்கு உண்மையானவராக தன்னை மாற்றிக் கொண்டார் என்னைப் போலவே என்பது தெரிந்தது. ’முரட்டு அரசியல் உங்களிடம் ஏறிவிட்டது’ என்று கடிதத்தில் எழுதியதற்கு அவர் தன்னையும் இணைத்துக் கொண்டார் எனப் புரிந்தது. நான் அரசியல் தளச் செயற்பாட்டுக்குப் போனது உண்மையில் முரட்டு அரசியல் அல்ல. அக்காலத்தின் புரட்சிகரமான அரசியல். புரட்சிகர அரசியலைச் செயல்படுத்திய வழிமுறைகள் விமர்சனத்துக்குரியவனவாக இருந்தன. ‘தீராநதி‘ நேர்காணலில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.
”பொதுவுடைமை இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் தமிழகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என எத்தனையோ திட்டங்களை முன் வைத்தன. ஆனால் இன்றைக்கு அம்மாதிரி எந்தத் திசையுமே இல்லாத சூழலே இருக்கிறது. தேர்தல் பாதை, திருடர் பாதையானது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் மேல்தட்டு வர்க்கத்தினரின் - ஆதிக்க சாதியினரின் கைகளுக்குள் சுருண்டனர். கீழ்நிலையில் உள்ளவர்களைக் கை கழுவினர். இது தி.மு.க.வுக்கு மட்டுமல்ல. எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே தயாராக இருக்கிற அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு உழைக்கும் வர்க்கம் தனக்காக எதையும் சாதிக்க முடியாது” என்று லெனின் சொன்ன வாசகத்தைக் குறிப்பிட்டு.… ”எனவே எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்து இயங்குவது இன்றைய நிலையில் சாத்தியமில்லை…” என கோடிட்டுச் சொல்லியிருந்தேன்.
எனது நிலைப்பாட்டிலுள்ள தர்க்கத்தை அவர் எற்கவில்லை. தன்னைப் போல் அமைப்புக் கோட்பாட்டின் நம்பிக்கையில் இயங்குகிற மார்க்சியர்களைத் தொந்தரவு செய்கிறது என்று கருதினார்.
அரசியல் பார்வை வேண்டும். அது கட்சிப் பார்வையாக இருக்கக் கூடாது. கட்சி மட்டுமல்ல. குழு, சாதி, மதம், பாலியல் என தன்னிலை சார்ந்த பார்வையாகவும் இருத்தல் கூடாது என்பது எனது கருத்து வெளிபாட்டின் சாரமாக அமைந்தது. அந்நாட்களில் அவர் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை. முதலில் ஒரு கட்சி, அதன் தலைவர் என அறிவார்த்தமான தளத்தில் ஈர்க்கப்பட்டாலும், பின்னர் அது நம்பிக்கை சார்ந்ததாக மாறிவிடுகிறது. ஆகவே அமைப்புக் கட்டுப்பாட்டோடு இயங்குதல், அதற்குப்பால் எதுவுமில்லை என்னும் நம்பிக்கையே, சுய தேடலை, சுய சிந்திப்பை கட்டுப்படுத்துகிறது. இங்கு இயக்கம் அல்லது கட்சியே ஒரு பிம்ப வழிபாட்டுக்குரியதாக ஆகிவிடுகிறது.
இதற்கு எதிர்வினையாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. ‘வனத்தின் குரல்’ என்ற எனது கட்டுரை நூலுக்கு ‘இந்தியா டுடே’ யில் உடைபடும் பிம்பம் என்று கடுமையாக எழுது கோல் வீசியிருந்தார். ‘வனத்தின் குரல்’ நூல் பற்றிய விமர்சனத்தைவிட கட்சியின் மீது கொண்ட பற்று தூக்கலாக வெளிப்பட்டிருந்தது.
இத்தகைய சீற்றத்தை ஜெயமோகன் நூல் வெளியிட்டு நிகழ்ச்சியின் போது அவர் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட அந்த நூலைப் பற்றி மட்டும் பேசி முடித்தார். குறிப்பிட்ட நூலை மட்டும் திறந்து, அதற்குள் மட்டும் ‘கோட்டைக் கட்டிக் கொண்டு’ நின்று பார்த்தல், மற்றவர் எழுத்துக்குச் சரியாக இருக்கலாம், ஆனால் ஜெயமோகன் எழுத்துக்கு அல்ல.
“புலமையும் வெளிப்பாட்டுத் திறனும் மட்டும் முடிவாகாது. எழுத்தாளர்கள், விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் புதிய நோக்கில் திறனுடனும் செயல்பட வேண்டும்.” என்ற எழுத்தாளர் யஷ்பாலின் வாசகத்தைக் கவனிக்க வேண்டும். தமிழ் இலக்கிய பீடங்களில் புலமையும், வெளிப்பாட்டு நேர்த்தியும் கொண்டவர்கள் நிறைய உண்டு. ஆனால் அது தனக்குத்தானே அழகு காட்டும் சுயமோக எழுத்தா? அல்லது புதிய நோக்கில் திறனுடன் செயல்படும் எழுத்தா? என்பதுதான் முக்கியம். ஜெயமோகனின் அறிவார்த்தமல்ல முக்கியம், ஜெயமோகன் காட்டும் வெளிப்பாட்டு நேர்த்தி அல்ல முக்கியம். அப்படிப் பார்த்தால் எஸ்.ராமகிருஷ்ணன் ‘தீராநதி’யில் ரஜினிகாந்த் பற்றி எழுதிய ‘பாபாவோடு சில நாட்கள்’ கட்டுரை உலகத்தரம் வாய்ந்த எழுத்துக்களில் ஒன்று என்று சொல்ல முடியும். ரஜினிகாந்த் ஏற்கனவே என்னவாக இருந்தாரோ - அந்த இந்துத்வா சக்தியாக இன்று வெளிப்பட்டிருக்கிறார் என்ற உண்மையை எடுத்துரைக்காத எஸ்.ராமகிருஷ்ணனின் அந்தக் கட்டுரை எழுத்துத்திறன் புழுத்துப் போன பழம் என்பதைச் சொல்லும்.
‘வனத்தின் குரல்’ - நூலை விமர்சிக்கையில் வெளிப்பட்ட அரசியலும், அமைப்புச் சார்பும், ஜெயமோகனை விமர்சிக்கையில் ஒதுங்கிவிட்டது அதிசயமானது.
படைப்பு என்பது சமூகம் பற்றிய விமர்சினம். எந்த ஒரு எழுத்தும் இந்த சமூகத்தைப் பற்றி ஏதோ சொல்ல இருக்கிறது என்ற வித்தியாசப்படும் புள்ளியிலேயே பிறக்கிறது. சமூகத்தை விமர்சிக்கிற ஒவ்வொரு உள்ளடக்கமும் எவ்வகையில் வெளிப்பாடு கொள்வது என்பது அதனோடு ஒட்டியே இருக்கிறது. கலைஞனின் ஆளுமை அல்லது கையாளுதல் இந்த வெளிப்பாட்டில் தீர்மானகரமான பங்காற்றுகிறது.
கந்தர்வனின் படைப்புக்கள் நேற்றைய இன்றைய, நாளைய சமுதாயத்தின் விமரிசனங்கள். அந்த விமர்சனத்தை எந்த வகையில் தர வேண்டும் என்ற தெளிவு கொண்டிருந்தார். சமூகத்தின் மனச்சாட்சியாக எழுந்தது அவரது குரல், உள்ளொடுங்கி மடங்கிய குரலாக வெளிப்படவில்லை. அத்துமீறிய பிரவேசமாகவும் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. அவருக்கேயான ஒரு எழுத்து லாவகம் கைகூடி வந்திருந்தது.
கந்தவர்வன் நிறைய பேசுவார். பேசிக் கொண்டேயிருப்பார். அதை வைத்தே ஒரு சிறுகதை நயமாகப் பின்னியிருந்தார். மற்றவர்களையும் நிறைய பேச வைக்கும்படி கொக்கி போட்டு இழுப்பார். அந்த மற்றவர்கள் மக்கள் அவர்கள் தாங்கள் ஒரு கதை சொல்லியிடம் கதை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலே வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டே போவார்கள். எதிரே ஆதரவான ஒரு மனிதர்; அவர் அதைக் கதையாக மாற்றப் போகிறார் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு கதையும் முடிப்பு என்பது தோற்றாமலே இருக்கும். இன்னும் எழுதப்படுவதற்காக காத்துக் கொண்டிருப்பது போல் தெரியும்.
பணி ஓய்வுக்குப் பின் சென்னை கெளரிவாக்கத்தில் மகள் வீட்டில் இருந்தார். இரண்டு தடவை வீட்டுக்குப் போய் சந்தித்துப் பேசயிருக்கிறேன். அந்த இரண்டு தடவையும் உடல் நலம் பாதிக்கப்பட்டு தாம்பரம் மருத்துவமனையில் சேர்ந்து அவர் திரும்பியிருந்த நேரம். இரண்டு தடவையும் அவரிடம் பேசியது குறைவு. அவரைப் பேசாமல் இருக்குமாறு செய்து, அவருடைய துணைவியாரிடமிருந்தே அவரது உடல்நிலை பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்.
அவருடைய மறைவுக்கு இரு நாட்கள் முன்னால் தொலைபேசி செய்தேன். தியாகராய நகரிலுள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்து பேசிக் கொண்டிருக்கையில் மயக்கமாகி அங்கேயே மருத்துவமனையில் சேர்த்த சேதி தெரியாது.
வீட்டுக்கு வந்து இருபது நாட்கள் ஆகியிருந்தன். அவருடைய துணைவியார் தான் பேசினார். “அவர் படுத்திருக்கிறார். தொலைபேசியில் கூட அவரால் முடியாது.”
“நான் பேசினேன் என்று தகவல் சொல்லிவிடுங்கள்.”
அவர் பேசுவதற்காகக் காத்திருக்கிறேன்.
- கணையாழி (ஜூன் 2004)
கருத்துகள்
கருத்துரையிடுக