கொஞ்சம் சோறு நிறைய நஞ்சு

அணுமின் உலைகள் இந்தியக் கொலைக்களங்களாக ஆகியுள்ளன என்பது மட்டுமல்ல; உலகின் கொலைக்களங்களாகவும் ஆகிவரும் உண்மை மறைப்பானது அல்ல, இந்தியாவில் அணு உலைகள் இருபது எண்ணிக்கை என சொல்லப்படுகிறது. உலக முழுமையுமான எண்ணிக்கை 400. இந்த இருபதின் வழியாகவும் உற்பத்தியாகும் மின்னளவு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் மூன்று விழுக்காடு. உலக முழுவதுமான நானுறு மின்னுலைகளால், உலகிற்கான தேவையில் உற்பத்தியாவது ஏழு விழுக்காடு. இந்த மூன்று விழுக்காட்டுக்காகவும் ஏழு விழுக்காட்டுக்காகவும் ஒவ்வொரு மனிதனும் தன் உயிரின் கீழ் அணுகுண்டு சுமந்து வாழுகிறான். இவ்வளவு சொற்பமான சுண்டைக்காய் உற்பத்திக்கு இத்தனை லட்சம் கோடிகளா, இத்தனை உயிர்ப் பணயமா என்ற கேள்வி எழுவது நியாயம்.



"ஆனால் அணு மின்சார தயாரிப்பு சாதனங்களையும் தொழில் நுட்பங்களையும் விற்கும் நிறுவனங்கள் கற்பனைக்கு எட்டாத வகையில் கோடிக்கணக்கான ரூபாய் லாபத்தில் இயங்குபவை. வளரும் நாடுகளின் அரசியல் தலைவர்களையும், ஆட்சியாளர்களையும் கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்து வளைத்துப் பிடித்திருக்கிறார்கள்" (உலக சமாதான நோபல் விருது அறிஞர்கள் ஒன்பது பேரின் கூட்டறிக்கை – 22.4.2011)

இவர்கள் அணுமின் நிலையிங்களில் அதிகம் முதலீடு செய்துள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட 31 நாடுகளின் தலைவர்களை நோக்கி இந்த வேண்டுகோளை வைத்துள்ளனர். ஒரு அடிமை எப்போதும் தன் எஜமானனின் காலடியிலேயே அமர்கிறான் என்றபடி உலகளாவிய எஜமானர்களுக்கு கால் ஷீ-க்களை முத்தமிட்டும், உள்நாட்டு எஜமானர்களின் காலடியிலும் அமர்ந்து கொண்டிருக்கிற வல்லரசுக் கனவில் வாழும் அரசியல் தலைமைகளை இந்த உண்மைகள் ஒன்றும் அசைக்காது.

பெரும்பாலான அணுமின் நிலையங்கள் இந்தியக் கடலோரங்களில் நிறுவப்பட்டுள்ளன. கடல் தாண்டி அந்நிய நாடுகள், குறிப்பாய் பகைநாடுகள் தாக்க முடியாது என்பதால் கடலோரங்கள் பாதுகாப்பானவை என ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.

பருவநிலையை, நீர், நிலத்தை ஒழுங்கு செய்து, வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகிற ஆற்றலை இயற்கை தனக்குத் தானே கொண்டிருக்கிறது. இந்த இயற்கை தந்துதவிய வாழிடங்களையெல்லாம் கழிவுக் கிடங்காக்கி மாசுபடுத்தி வருகிறார்கள். மாசுகளால் கடற்கரைப் பிரதேசத்தையும், கடல் நீரையும் குப்பைத் தொட்டியாக்கியுள்ளார்கள். கடலோரங்களில் அமைக்கப்படும் அணுமின் நிலையங்களின் உலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கதிரியக்க கன நீர் கடலில் விடப்படுகிறது. கதிரியக்கக் கழிவு நீர் கடலின் மீன் வளத்தை முற்றாக ஒழிக்கும். கடல் இல்லையேல் பாரம்பரிய மீனவர்களுக்கு வாழ்க்கை இல்லை. மீனவர்கள் கடலுக்குப் போகவில்லையெனில் அவர்களுக்கு உணவு மறுக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல; அனைத்துச் சமூக மக்களுக்கும் மீன் உணவு இல்லையென்றாகிறது. பேரா.வரீதையா குறிப்பிடுவதுபோல் "மீன் உணவு மறுக்கப்படுவது, நாட்டில் தீவிரமான மருத்துவ, பொருளாதார விளைவுகளை உருவாக்கும்".

கடல் ஆதாரத்தை ஒழிப்பதன் வழியாய், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைக் கழற்றியெறிந்து விட்டு எவரை, எந்த நாட்டு மக்களை இவர்கள் காக்க இருக்கிறார்கள்? கடல் வளத்தின் பிரதானக் கூறான மீன் வள ஒழிப்பை இந்தியா செய்கிற வேளையில், அருகிலிருக்கும் தமிழக மீனவர்கள் அழிப்பை இலங்கை நிறைவேற்றி வருகிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சித்திவதை செய்வது, இழிவுபடுத்துவது, மீன்பிடி படகுகள், வலைகளைச் சேதப்படுத்துவது என இலங்கைக் கடற்படை அன்றாடம் நிறைவேற்றுகிறது. தமிழக மீனவர்அழிப்பை வேடிக்கை பார்க்கும் இந்திய அரசு, நாளை இலங்கை பகைமைகொண்டு (சிங்களருக்கு தமிழர் மீதான பகைமையே, முதல் பகைமை) கூடங்குளம் அணு உலையைச் சேதாரப்படுத்துமானால், அழிவது தமிழர்கள்தானே என்று நடுவணரசு பார்த்துக் கொண்டிருக்குமோ? வியப்படைவதற்கில்லை. தோளிலே சவாரி செய்கிற செல்லப்பிள்ளை காதைக் கடித்தபோதும், கண்டு கொள்ளாமலிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

"இலங்கையில் போர் நடைபெற்றபோது, தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு உதவி செய்தது. கச்சத் தீவுப் பிரச்சினையில் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானங்களை மதிக்கவில்லை"

"தமிழக அரசு கோரியபடி ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்யவில்லை. தமிழக மக்களுக்கு எதிராக, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்துகொள்வது தெரிகிறது"

டெல்லியில் பிரதமரைச் சந்தித்து திரும்பிய போராட்டக்குழுவினர் (9.10.2011) மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தி, இவ்வாறு மக்களின் உணர்வுகளைக் கொட்டியிருக்கிறார்கள். இவை தலைமையேற்கும் சக்திகளின் வார்த்தைகளோ, உள்ளுணர்வுகளோ மட்டுமல்ல. மக்களின் உணர்வுகள், நினைப்புகளின் குரலை வெளிப்படுத்தியுள்ளார்கள். டெல்லிப் பேரரர்சகளின் செயல்பாடுகளால் தமிழர்கள் வெறுப்படைந்து நிற்கிறார்கள் என்பதை வழிமொழிகின்றன இவ்வாசகங்கள்.

சீனா, பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவின் பகை நாடுகள். இலங்கையில் சீனா வலுவாகக் காலூன்றியுள்ளது. இந்தியா மேல் சீனா அணுகுண்டு வீச வேண்டியதில்லை. வெறும் 18 மைல் கடல் இடைவெளியே உள்ள இலங்கையிலிருந்து கூடங்குளம் அணு உலைகளைத் தாக்கினால் போதும். தமிழகமும், கேரளாவும், தவிடு தவிடாகி அழியும்.

ஒரு புறம் அட்லாண்டிக் கடல்; மற்றொரு புறம் பசிபிக் பெருங்கடல். இரு கடல்களும்தான் அமெரிக்கா வல்லரசாக வளர்வதற்கு அரணாக அமைந்தன. இந்த நீர் அரண்களைத் தாண்டி, அமெரிக்காவை எவரும் ஒரு போதும் தாக்க இயலாது. அமெரிக்காவின் சமுத்திர பலம் இன்னும் யாராலும் கேள்விக்குள்ளாக்கப்பட முடியாதது. முதன் முதலாக அமெரிக்கா தாக்கப்பட்டது இந்தக் கடல்கள் வழியாக அல்ல (இரட்டைக் கோபுரத் தாக்குதல்); தாக்குதல் உள்ளிருந்துதான் வந்தது. தாக்குதலுக்கு அமெரிக்க விமானங்கள் பயன்படுத்தப்பட்டன, அமெரிக்க எரிபொருள் பயன்படுத்தப்பட்டது; அமெரிக்க மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அமெரிக்கப் பயணிகள் இருந்ததின் கனம் காரணமாக தாக்குதல் உராய்வு அதிகமாய் வெளிப்பட்டது. அமெரிக்காவைத் தாக்க, அமெரிக்காவின் உள்ளிருக்கும் வளங்களே பயன்படுத்தப்பட்டன.

வரலாற்றுக் காலந்தொட்டு இந்தியாவுக்குத் தாக்குதல் வடக்கிலும், வடமேற்கிலுமிருந்துதான் வந்துள்ளது. 2500 "கடல் மைல்" நீளம் கொண்ட இந்துப் பெருங்கடல் இந்தியாவுக்கு ஒரு அரண். தெற்குக் கடல்வழியாகத் தாக்கி இந்தியாவைக் கைப்பற்றிறய வரலாறு இல்லை. மேற்குக் கடலை ஊடுருவித்தான் முதன் முதலாக மும்பைத் தாக்குதல் நடந்தது. 2500 "கடல் மைல்" நீண்ட தெற்கு நீர் அரணை கேள்விக்குள்ளாக்கக்கூடியது 18 மைல் தொலைவிலுள்ள இலங்கையின் புவியியல் அமைவிடம். இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவது இந்த 18 மைல் கடல் இடைவெளியும் இலங்கையும்தான். ஈழத்தின் தமிழ் மக்களை, விடுதலைப் போரை இந்தியா சரிவரக் கையாளாததால் உலகப் பெருவல்லரசாக வளர்ந்துகொண்டிருக்கும் ஆசிய வல்லரசான சீனா இலங்கையில் ராசபக்ஷே அரசின் உதவியுடன் காலூன்றி விட்டது.

2016-ல் சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்தும் என பாரத் தர்மா என்ற இதழியலாளர் 2009-ல் ஒரு கட்டுரை எழுதினார். சீனா இந்தியாவைத் தாக்கும் என்ற அச்சம் இராணுவ வட்டாரத்தில் உறுதிப்பட்டுள்ளது. இலங்கையில் சீனா உட்கார்ந்துவிட்டபடியால் - இந்துப் பெருங்கடல் நீர்அரண் பாதுகாப்பு கேள்விக்குள்ளாவதால் இந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. முதலில் பாதிப்புக்குள்ளாகப் போவது தமிழகமும் கேரளமும்தான். தமிழகத்தின் 7 கோடி மக்களும் கேரளத்தின் 4 கோடி மக்களும் சாம்பல் மேடாக ஆவார்கள். கூடங்குளம் அணுமின் நிலையம் வழியாக அந்தச் சாம்பல்மேடு உருவாகும்.

அனைத்து நியாயங்களும் பேசப்பட்டு விட்டன. 1974-ல் இந்திரகாந்தி வெடித்த 'கார்கில்' அணுகுண்டு முதல், வாஜ்பாய் வெடித்த பொக்ரான் குண்டுவரை நியாயங்கள் மிச்சம் மீதியில்லாமல் பேசப்பட்டுள்ளன. கார்கில் அணுவெடிப்புச் சோதனை நடத்தப்பட்டபோது இது அமைதிக்கான குண்டுவெடிப்பு என்றார்கள். 'புத்தரின் சிரிப்பு' என்று பெயரிட்டார்கள். இந்தியா அணுகுண்டு வெடித்தால் புத்தர் சிரித்தார். அதையே பாகிஸ்தான் செய்தால் `அல்கொய்தா` சிரிப்பாக சித்திரம் தீட்டினார்கள்.

கூடங்குளம் குறித்து அச்சம் வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. எந்த ஆபத்தும் ஏற்படாதென்று நடுவண் அமைச்சர்கள், அரசியல் தலைமைகள், சில விஞ்ஞானிகள் இடை இடையே 'வீச் வீச்’ சென்று கத்தி தங்கள் ஆதங்கத்தை நிறைவு செய்கிறார்கள்.

1998-ல் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பின் போது பிரதமராய் இருந்தார் வாஜ்பாய். அணுகுண்டு வெடிப்புக்கு மூலசக்தியாக, அப்போது அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையாக இருந்த இன்னொரு பெரிய மனுஷர் அப்துல்கலாம். "குழந்தைகளின் சிரிப்பையும் அணுவின் வெடிப்பையும் ஏவுகணையின் சீற்றத்தையும் சமமாகக் கண்டு குதூகலப்படுபவர்" (தீராநதி ஆகஸ்டு 2010 - செ.சண்முக சுந்தரம்) 1998-ன் அணு வெடிப்புக்குப் பின் பொக்ரானிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், ஏற்பட்ட கதிரியக்கப் பாதிப்புகளினால் பிறந்த குழந்தைகள் பெருமளவு போலியோ நோயினால் பாதிக்கப்பட்டன. வேறு பல நோய்களுக்கு மக்கள் ஆளாகினர். ”அணு வெடிப்புக்குப் பின் ஏற்பட்ட கதிரியக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது" என்றார் பிரதமர் வாஜ்பாய் . அவர் பொய் சொன்னார். கதிரியக்க "ஐசோடோப்" என்பவவைகளின் ஆயுட்காலம்- அதாவது 100 கிராம் கதிரியக்க ஐசடோப் 50 கிராமாக குறைவதற்கு எடுக்கும் கால அளவு 40 ஆயிரம் ஆண்டுகள் என்பதை அவர் அறிவார். ஒரு வேளை அவர் அறியாதபடி மறைக்கப்பட்டிருந்தால் மறைத்த குற்றவாளி அப்துல்கலாம் தவிர வேறு யார்?

"கல்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையங்கள் சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் விதத்தில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளன” கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.சி சேதலும், அப்துல்கலாம் மாதிரி உறுதி கொடுக்கிறார் (17.9 2011)

"நில நடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியமற்ற இரண்டாம் நிலை மண்டலத்தில்தான், இந்த அணுமின் நிலையம் உள்ளது. சிறந்த பாதுகாப்பான குளிர்விப்பு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளதால் சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும் அணுமின் நிலையத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சுனாமி தாக்கியபோதும் கூடங்குளத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை." கூடங்குள அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மக்களுக்கு விரிவாகக் கூறினார் ஜெயலலிதா (16.9.2011).

16.9.2011 அன்று பன்னாட்டு மூலதனங்களின் நோக்காக ஒலித்த குரல், 17.9.2011 அன்று முற்றிலும் மாறுபட்டு "அணு உலைப் பாதுகாப்பு குறித்து உங்கள் உயர் நிலை அலுவலர்கள், விஞ்ஞானிகள் கூறும் காரணங்கள், மக்களின் அச்சத்தைப் போக்கவில்லை.அவர்களின் அச்சத்தைக் களைந்திட கடந்த பத்து நாட்களாகப் போராட்டம் நடத்தும் மக்களைச் சந்திக்க மத்திய அரசிலிருந்த எவரும் வரவில்லை" என்று ஒலித்தது.

இது போன்ற கர்ணம் அடித்தலை இவரது முந்திய ஒரு செயலிலும் காணமுடிகிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தனக்கு எந்த அதிகாரமும் இல்லையென்று சட்டமன்றத்தில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, மறுநாள் அதே சட்ட மன்றத்தில் மூவரின் தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கும் வேண்டுகோள் தீர்மானத்தை நிறைவேற்றி நடுவணரசுக்கு அனுப்பினார்.இவ்விரு நிகழ்வுகளிலும் ஒரேமாதிரியான வினையாற்றல் ஜெயலலிதாவிடம் இருப்பதை அவதானிக்கலாம். ஒன்று - உருவான புயலை நடுவணரசின் மைதானத்துக்கு தள்ளிவிடுவது. இரண்டாவதாய் - மக்களின் உணர்வுக்கெதிராய் வெறுப்பைத் தேடிக் கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கைக்கு காது கொடுப்பது.

கூடங்குளம் திட்டத்துக்கான முன்ஆய்வு நிகழ்த்தப்பட்ட காலம் முதல் ஒப்பந்தம் கையெழுத்தாதல், கட்டம் கட்டமாய் பணி நிறைவேற்றம், முதல் அணு உலை இயங்கத் தயாராதல் வரை கடந்த இருபது ஆண்டுக்காலமாய் ஆட்சியிலிருந்து தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் எதிர்ப்புக் காட்டவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம், முன்னர் கேரளமாநிலம் பெரின்கோம் என்னுமிடத்தில் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை தொடக்கத்திலேயே கேரளமக்கள் காட்டிய தீவிர எதிர்ப்பால், அணுமின்நிலையம் நகர்ந்து ஆந்திரா, கர்நாடகத்துக்கு பயணமானது. இந்த அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்ததாலும், ஓரளவு நிதி உதவி செய்ய இவை முன்வந்ததாலும் வஞ்சகத்தின் காரணமாய் தமிழகத்தில் கூடங்குளம் தேர்வானது. தலையாட்டும் பொம்மைகளான தி.மு.க, அ.தி.மு.க அரசுகள் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் நடுவரணரசுடன் இணைந்து, மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப பல்வேறு தந்திரங்களை மேற்கொண்டன. இன்றைய தமிழக முதல்வரும் 16.9.2011 வரை எந்த அக்கறையும் காட்டவில்லை. இதில் அகில இந்தியக் கட்சிகள்,மாநிலக் கட்சிகள் என்று எந்த வேறுபாடும் அற்றுப் போய் மக்களின் உள்மனதைத் தொட்டுப் பார்க்காமலே கிடந்தன. தென்கடலுக்குப் பக்கத்திலேயே இன்னுமொரு கடல் பொங்கியெழுந்தபோது இவர்கள் தூக்கத்திலிருந்து விழித்தார்கள்.

கூடங்குளம் வட்டாரத்தின் ஒவ்வொரு ஊர்களும் கடலாக எழுந்தன. மக்கள் திரள்வதைத் தடுக்க அரச நிர்வாகம் இடிந்தகரை வழியாகச் செல்லும் பேருந்துகளை நிறுத்தியது. படைப்பாளிகளாகிய நாங்கள் போயிருந்த செப்டம்பர் 15 அன்று கூடங்குளம் மக்கள் இனி அங்கு வாழவே முடியாது என்று வீடுகளைக் காலி செய்து வந்திருந்தார்கள். சுற்றிலுமுள்ள கிராமங்களிலிருந்து அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டபோதும், தனியார் வேன், லாரி, பேருந்துகளை ஏற்பாடு செய்து காலை 5 மணிக்கே புறப்பட்டு வருகிற மக்கள் "நாங்கள் உயிர் வாழ்வதற்காகத்தான் இவர்கள் உயிர் விடுகிறார்கள்" என்று உண்ணாநோன்பிருக்கும் சக தோழர்களோடு பட்டினி கிடந்து மாலை 6 மணிக்கு மேல் புறப்பட்டு வீட்டில் உலை வைத்தாரகள். 127 தோழர்கள் காலவரையற்ற பட்டினியிலிருந்த அத்தனை நாட்களும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மாணவ மாணவியர் பள்ளி செல்லாமல் திரண்டிருந்தார்கள். ராதாபுரம் வட்டம் எங்கும் பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை. தலைமையாசிரியரும் நிர்வாகியும் காவல்காக்க, திறந்திருக்கும் சவப் பெட்டி போல் பள்ளிகள் காட்சியளித்தன. கல்லூரி மாணவ மாணவியர் மற்ற கிராமங்களுக்குப் போய் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டார்கள். 'உழன்றும் உழவே தலை' என்ற தலையெழுத்தைச் சுமந்து திரிகிற விவசாயிகள் போராடுகிறவர்களோடு இணைந்தார்கள். கடலுக்கு வரும் ஆபத்து நிலத்துக்கும் வரும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

மைக்கேல் ராயப்பன் - ராதாபுரம் சட்டமன்ற தே.தி.மு.க உறுப்பினர். போராட்டம் திட்டமிட்டுத் தொடங்கி மேலேழுந்து போகிறபோது ஐந்து நாட்கள் கழித்து அவரும் உண்ணா நோன்பிருந்தார். "நீங்கள் ச.ம.உ ஆனது எங்களால். எங்களுக்காக எங்களுடன் இருக்கப் போகிறீர்களா? அல்லது கூட்டணி தர்மம் என்பதற்காக அரசுக்கு ஆதரவாய் இருக்கப் போகிறீர்களா?“ என்று மக்கள் கேட்ட கேள்வி - அவரைக் கட்டுப்பட வைத்தது. ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்று கூடிக்கொண்டே போன மக்கள், இனி இடமில்லை என்கிற அளவு 30 ஆயிரம் எனப் பெருகிய நாளில். தே.தி.மு.க தலைவர் விஜயகாந்த் வந்து ஆதரவாய்ப் பேசியது இதன் தொடர்ச்சிதான் எனக் காண முடியும். ஆதரவாய் பேசாது, எந்த அரசியல் இயக்கமும் அங்கிருந்து மீண்டிருக்க முடியாது.

போராட்டக்குழு செய்த உன்னதமான செயல் ஒன்று உண்டு - அரசியல் இயக்கங்களைத் தூர நிறுத்தியதுதான் அது. போராடும் மக்களிடம் எந்த அரசியல் கட்சியையும் காண முடியவில்லை. எந்தவொரு கட்சியும் பின்னிருந்தோ, உடன் இணைந்தோ போராட அவர்கள் அனுமதித்தார்களில்லை. கட்சிகளை ,சாதி, மதம்,குழு அனைத்தையும் வெளியே நிறுத்தியிருந்தார்கள்.

போராட்டத்தின் ஒவ்வொரு விசயத்திலும், ஒவ்வொரு அடுத்த அசைவிலும் மக்களின் கருத்தறியப்பட்டது. மக்களின் ஒப்புதலின் பின் போராட்டக்குழு ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டது. மக்கள், தங்களுக்கான நேரடி சனநாயகத்தை முதன்முறையாக சுவைத்தார்கள்.

எடுத்துக்காட்டாய் இரு நிகழ்வுகளை குறிப்பிடலாம். அச்சம் கொள்ளவேண்டாம் என செப்டம்பர் 16ல் அறிக்கை மூலம் தெரிவித்த முதல்வர் செயலலிதா, அதன்பின் போராட்டக் குழுவினரைச் சந்தித்துப் பேச விரும்புவதாக செய்தி வந்தது. போராட்டக் குழுவினர் மக்களுடன் கலந்தாலோசித்தபோது, "எங்களுக்கு வழிகாட்ட, எங்களைப் பாதுகாக்க இங்கே இருங்கள். உண்மையிலேயே பிரச்னையைத் தீர்த்து வைக்க விரும்பினால் முதலமைச்சர் தனது பிரதிநிதிகளை இங்கே அனுப்பி வைக்கட்டும்" என்றார்கள். மக்கள் கருத்துப்படி, போராட்டக்குழு முதலமைச்சரை சந்திப்பதை மறுத்துவிட, அதன் பின்னரே முதல்வர் பிரதமரைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு குழுவை அனுப்ப முடிவெடுத்தார்.

நடைமுறைகளில் சனநாயகம் பேணுவதை போராட்டக்குழுவினர் நூற்றுக்கு நூறு சரியாகவே செய்தனர் எனலாம். பிரதமரின் அறிவுறுத்தலுக்கேற்ப 26.9.11 அன்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி போராட்டக் குழுவினரை ராதாபுரத்தில் சந்திக்கலாம் எனச் சொல்லப்பட்டது. நிராகரித்த மக்கள் "அமைச்சர்தான் இங்கு வர வேண்டும். நாம் அங்கு போகக்கூடாது" என்றனர். பிரச்னையைப் பேச விரும்புகிறவர்கள் களத்துக்கு வர வேண்டும். களம் அங்கே போகக்கூடாது என்பது அதன்பொருள். அதன்படி அமைச்சர்தான் அங்கு வந்து சென்றார்.

எங்கு களம் அமைத்தால் உண்மையான வெற்றி கிட்டுமோ அங்கே களம் அமைத்தார்கள். களம் அமைத்ததே முதல் வெற்றியாய் தொடங்கிவிட்டது. உண்ணா நோன்புக் களத்தை தலைநகரான சென்னையிலோ, மாவட்டத் தலைநகரிலோ அமைத்திருந்தால் ஆட்சியாளர்களும் அரசியல் தலைமைகளும் எளிதாக நீர்த்துப் போகச் செய்திருப்பார்கள். இடிந்தகரையில் திரட்டிய அளவு மக்கள் சக்தியை வேறிடத்தில் திரட்டமுடியாமல், ஒருமுகப்படுத்த முடியாமல் போயிருக்கும்.

நேற்று -அணுஉலை கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என முதல்வர் பேசியது இன்று - "கூடங்குள மக்களின் அச்சதைப் போக்கும்வரை அணுஉலைப் பணிகளை தொடரக்கூடாது" என்று தீர்மானம் நிறைவேற்றுவது-

இது பிரநிதித்துவ சனநாயகம் தோல்வியுற்று, மக்களின் நேரடி சனநாயகம் வெற்றி பெற்றதின் சிறந்த முன்னுதாரணம்.

நாடாளுமன்றம், சட்டமன்றம் இவை பிரதிநிதித்துவ சனநாயகத்தின் உறுப்புக்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி, சட்டமன்ற உறுப்பினர்களும் சரி, இந்த பிரதிநிதித்துவ சனநாயகத்தின் உறுப்பினர்களே. வாக்களிப்பதன் வழி உருவாகிற பிரதிநிதித்துவத்துக்கு அப்பாலும், மக்களின் சனநாயகப் பணி இருக்கிறது என்பதை இந்தப் போராட்டம் மூலம் தெளிவாக கூடங்குள மக்கள் உணர்த்தியுள்ளார்கள். இது நேரடி சனநாயகம். ஒருமுறை வாக்களித்து தேர்ந்தெடுத்ததுடன் தங்கள் கடமை முடிந்து போனது என்று எண்ணாமல் தொடர்ந்து எல்லாக்காலத்திலும் போராடுவது,வெற்றியடைவதுதான் நேரடி சனநாயகம்.

முன்பு அவர்கள் எடுத்த போராட்டங்களிலிருந்தும், வெளியே மற்றவர் நடத்திய போராட்டங்களிலிருந்தும் கற்றுக்கொண்ட படிப்பினை இது. மக்களுக்கு எதிராகப் படமெடுத்தாடும் பிரதிநிதித்துவ சனநாயகத்தை பாம்பைஅடிப்பது போல் அடித்து, நேரடி சனநாயகத்தின் ஆற்றல் எத்தகையது என்பதை உணர்த்தியுள்ளார்கள். அரசியல் இயக்கங்களை உள் நுழைய விட்டால் பிரநிதித்துவ சனநாயகமும் நுழைந்து விடுகிறது. இங்கே எல்லா அரசியல் இயக்கங்களும் பிரதிநிதித்துவ சனநாயகத்துக்காக நிற்பவை. இந்த அரசியல் கட்சிகள் நடைமுறைப்படுத்தாத உட்கட்சி சனநாயகத்தை, மக்களிடம் பயிற்சி முறைபோல் கொண்டு சென்று இருக்கிறார்கள். ஒவ்வொரு விசயத்தையும் மக்களின் கருத்தறிந்து போராட்டக்குழு நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

மக்களின் நேரடிப் பங்கேற்பு, எழுச்சி இவை சிறப்பான சனநாயகத்தின் தோற்றம். பிரதிநிதித்துவ சனநாயகம் பயனற்றுப் போகும்போது, செயலற்றுப் போகிறபோது, நேரடி சனநயாக முறைகளால் வழிக்குக் கொண்டு வந்தார்கள் கூடங்குள மக்கள்.

சனநாயகத்தின் பேரால் அதிகாரம் செலுத்துகிறவர்கள் மக்கள் வெற்றிபெறுவதை விரும்புகிறார்களில்லை. அதனை மக்களிடம் தோற்றுப் போவதாய் கருதுகிறார்கள்.

உண்மையில் எந்த அரசு மக்களிடம் தோற்றுப் போகிறதோ அதுதான் நல்ல சிறப்பான அரசாங்கம். மக்களின் பிரச்சினைகளுக்கு காதுகொடுத்து, பரிசீலித்து பணிந்து ஏற்றறுக்கொள்வதில் எந்த அவமானமும் இல்லை. இங்கு மக்கள் வெற்றி பெறுகிறார்கள். அரசாங்கம் தோல்வியுறுகிறது. சேவை செய்ய வந்தவர்கள், மக்களின் வெற்றியில் மகிழ்ச்சி காண்பார்கள். அதிகாரம் செலுத்த வந்தவர்கள் ஆத்திரம் கொள்வார்கள். சனநாயகம் நடைமுறையில் இருக்கிறது என்பதைச் சொல்லும் அடையாளப்புள்ளி மக்களிடம் அதிகாரம் தோற்பது மட்டுமே.

அனுமின் நிலையம் வருவதால், தங்கள் வாழ்வு ஒரு அங்குலம் கூட உயராது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். செலவழிக்கப்பட்ட ரூ. 14,000/- கோடியால், அப்பகுதி மக்கள் நூறு பேருக்குக் கூட வேலை கிடைக்கப் போவதில்லை. எங்கெங்கோ இருக்கிற அறிவியலாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், மட்டுமே இங்கு பணி அமர்த்தப் படுவார்கள்.

இப்போது தயாராயுள்ள இரு மின்னுலைகள் வழியாக 2000 மெகவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று பிரதமர்கூறியிருக்கிறார். இதில் 925 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும் என்கிறார். எங்கெங்கோ இருக்கிற வணிக நிறுவனங்களும், முதலாளிகளும் மட்டுமே பயன்பெறுவார்கள். இதுதான் இந்திய வளர்ச்சி.

சாதாரண மக்களும் அணுமின் உற்பத்தி பற்றி புரிந்து கொண்டிருந்தார்கள். புரிந்து கொள்ளும் அளவுக்கு போராட்டக் குழுவினரும் ஆதரவு சக்திகளும் எடுத்துப் போய் உள்ளிறக்கியிருந்தனர். நீர், சூரியஒளி, காற்று, நிலக்கரி இவைகளிலிருந்தும் மின்தேவையை நிறைவு செய்ய முடியும். இந்த மாற்று வழிகளில் முயலாமல் மனிதகுலத்துக்குப் பேரழிவை உண்டாக்கும் அணு உலைகள் ஏன் என்று அந்த மக்கள் கேட்டார்கள். பிற வழிகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ 2 முதல் 3 ஆக இருக்கையில், அணு உலைகளிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை ரு 7 லிருந்து 8 ஆக இருப்பது ஏன்? அழிவிலிருந்து ஆதாயம் பெறும் வல்லரசுக் கனவு தேவையா? என்று சாதாரணர் கேட்டார்கள்.

அழிவை விரிவு செய்து ஆதாயம் பெருக்குவது முதலாளியம். அணுவிலிருந்து மின் உற்பத்தி என்பது வல்லரசுக் கனவிலிருப்போரின் முதல் நோக்கமன்று; அணுத்துகள்களிலிருந்து அணுகுண்டு செய்வது, பிறநாடுகளை அதன்வழி அச்சப்பட வைப்பது பிரதான நோக்கம். அணுவைப் பிளப்பதால் உருவாகும் அபரிதமான சக்தியைச் சேமித்து இயக்கி மின்சாரத்தை தயாரிப்பது ஒரு தொழில் நுட்பம் . மின்சாரம் உற்பத்தி செய்யும் போது உண்டாகும் துணைப் பொருட்களால், அணுகுண்டு செய்யப்படுகிறது.

இது இன்னொரு தொழில்நுட்பம். பிரிட்டனின் முதல் அணு உலையான கேல்டர் உஹானிலிருந்து தான், பிரிட்டன் முதல் அணுகுண்டைத் தயாரித்தது. இந்தியாவும் மும்பையின் பாபா அணுசக்தி மையத்தில் உள்ள பரிமசோதனை அணுஉலையின் கழிவுகளிலிருந்து யுரேனியத்தை எடுத்து செறிவாக்கித் தான் 1974-ல் முதல் அணுகுண்டை வெடித்தது. அதே பாதையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் துணைப் பொருளான புளுடோனியத்திலிருந்து, அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய நடக்கிறார்கள். பக்கமாய் பகைநாடுகளை உருவாக்கி வைத்து , அவைகளை 'நீ பெரியவன் என்றா நினைத்தாய்; உன்னை விட நான் பெரியவன்‘ என்று அச்சுறுத்த தேவைப்படுவது அணு ஆயுதம். மின் உற்பத்தி என்ற முதற்காரணத்தை விட, இந்த இரண்டாவது காரணமே அணுஉலைச் செயற்பாடுகளில் இந்தியாவுக்கு முக்கியமானது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மட்டுமே மக்கள் போராட்டத்தின் திசையல்ல. எதிர்வரும் தலைமுறைகளை வாரிவிழுங்கும் அணு மின் உற்பத்தியே வேண்டாம் என உலகத்துக்கான குரலாக நீட்சி பெற்றுவிட்டது. மூடு, மூடு; வேண்டாம், வேண்டாம் என்ற அவர்கள் வாசகங்களின் பொருள் இதுவே.

"14 ஆயிரம் கோடி செலவழித்தாகிவிட்டது. இப்போது அணு உலை வேண்டாமென்றால் இழப்பல்லவா" என்று அரசுத் தரப்பிலிருந்தும் சில விஞ்ஞானிகளிடமிருந்தும் கேள்விகள் வருகின்றன. அவ்வாறு வந்த கேள்விகளுக்கு மேடையேறிய கூடங்குளம் பெண் ஒரு எதிர்க் கேள்வி போட்டடார்.

"ரூ 14 ஆயிரம் கோடிதான் இழப்பாத் தெரியுதா? வெளிநாட்டு வங்கிகளிலும் ஸ்விஸ் வங்கியிலும் பதுக்கி வைக்கப்பட்ட லட்சக்கணககான கோடிகள் கறுப்புப் பணம் இழப்பாய் தெரியலையா? 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல்னு புதுசு புதுசா வருதே அது இழப்பில்லையா? இந்த அணு மின் உலைகளாலே நாங்க உயிர் அழிஞ்சா அது இழப்பாத் தெரியலையா?"

சமாதானத்துக்கான நோபல் விருது பெற்ற ஒன்பது உலக அறிஞர்கள் கூட்டறிக்கையிலும் இதையே பேசினார்கள் "அணு மின்சாரம் மலிவானதோ, அணு மின்சாரம் தயாரிப்பு முறைகள் பாதுகாப்பனதோ, அணு மின் நிலையத்தை நிறுவுவது எளிதானதோ அல்ல. புதிதாக அணுமின் நிலையங்கள் வேண்டாம். ஏற்கனவே உருவாக்கப்பட்ட அணுமின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தி அவற்றை அக்குவேறு, ஆணிவேறாகக் கழற்றி அப்புறப்படுத்தினாலும் பெரிய இழப்பு வந்துவிடப் போவதில்லை. அதே சமயம் இப்போதுள்ள தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் அணுக்கதிர் வீச்சிலிருந்து தப்பிக்கும்’’ (வாசிங்டன் - 21.4.2011)

மக்கள் எப்போது கேட்கிறார்களோ அப்போது அணு உலையை இயக்கலாம் என்று முடிவெடுக்கப் போகிறார்களாம். மக்கள் மீண்டும் கேட்க மாட்டார்கள்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?