பா.செயப்பிரகாசம் முகநூல் பதிவுகள்

முகநூல் - 14 ஜனவரி 2021
ஆ.மாதவன்

நாங்கள் சென்ற நூற்றாண்டில் எழுதுகோல் எடுத்தவர்கள். 1966 மதுரைத் தியகராசர் கல்லூரி நூலகத்துக்கு எதிரிலான பசும்புல்வெளி எங்களை ஏந்திக் கொள்கிறது. கவிஞர் நா.காமராசன் “குங்குமம்” என்ற மாத இலக்கிய இதழைக் காட்டுகிறார். பிறமொழிக் கதைகள் வெளிப்படும் நவீன இலக்கியப் போக்குக்கு அது முன்னோடி. திராவிட மொழிகளில் மொழிக்கு ஒன்றாக ஒரு கதை ஒரு இதழிலேயே தருவார்கள். ஆசிரியர் இளஞ்சேரன். அவர் யார், எங்கு அவர் வாசம் என்றெல்லாம் அறியோம். அவருடைய முன் முயற்சிக்கு எல்லமுமாக பின்னின்றவர் திருவனந்தபுரம் வாழ் ஆ.மாதவன் என அறிந்தோம்; பின்னர் ஒவ்வொரு மாதமும் குங்குமம் இதழ் பெற மதுரை மத்திய பேருந்து நிலையம் போய்க் காத்திருப்பு.
அடுத்த காட்சி தான் சுவையானது. 1972-ல் நெல்லை, கன்னியாகுமரி இரு மாவட்டங்களின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தபோது, நாகர்கோவில் பேருந்து ஏறி திருவனந்தபுரத்தில் கடை வீதியிலிருந்த ஆ.மாதவனின் பாத்திரக் கடையில் ஏறினேன். “நா ஒங்கள பாத்திரம் வாங்க வந்த வாடிக்கையாளர்னு நெனைச்சேன்” என்றார் ஆ.மாதவன். இதுதான் முதல் சந்திப்பு.
முகநூலின் சுறுசுறுப்பு அதிர்ச்சியடைச் செய்கிறது. மன நிறைவுச் செய்திகளை தருகிறதோ இல்லையோ, மறைவுச் செய்திகளை உடனுக்குடன் தந்துவிடும். நேற்று முதல்நாள் ஐயா தொ.ப நேற்று தோழர் இளவேனில். கவிஞர் இளவேனிலுக்கு இரங்கல் பதிவு செய்த மை உலரவில்லை. இன்று ஆ.மாதவன்.
இலக்கியப் பெருங்கிளையிலிருந்து ஒவ்வொரு கனியாய் உதிர்கின்றன. நாளை எனதாக இருக்குமோ? நான் கடந்த நூற்றாண்டின் மனிதன். நூற்றாண்டை நோக்கி நடக்கிற கி.ரா முன்னோடியாக நிற்கிறார்; ”எமன் பிள்ளைய பேயடிக்குமா” என்று நிமிச்சலாகக் கேட்கிறார். அவர் தடத்தில் இன்னும் இன்னும் வலுவாகக் கால் பதிப்போம்.


ஒயிலாட்டக் கலைஞர் கைலாசமூர்த்தியின் மறைவுக்கு எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதிய அஞ்சலி - 11/07/2020


நிறைய எழுத்தாளகளைச் சந்தித்திருக்கிறேன். நிறையக் கலைஞர்களைக் கண்டிருக்கிறேன். நிறையநிறைய தமிழன்பர்கள், அறிஞர்களுடன் பழகியிருக்கிறேன். உச்சத்திற்குப் போகப் போகப் பலர் மனிதனை மறந்து போவார்கள். ஒரு கலைஞர், ஆடல் பாடல் கற்கை வழங்கும் வாத்தியார், இந்திய மக்கள் நாடக மன்றத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், பெருமன்றத்தின் மாநில துணைத்தலைவர் – எல்லாவற்றுக்கும் மேல் அவர் ஒரு மனிதர். தோழர் பொ.கைலாசமூர்த்தி என்னும் மாமனிதர் மறைந்தார். தோழரே, உங்கள் தடத்தை வேறெவரும் அச்செடுக்க இயலுமா? சென்று வாருங்கள், தோழரே, வீரவணக்கம்.



முகநூல் - 6 ஜனவரி 2021
தோழர் இளவேனில்!

நண்பர்கள் தோழர்கள் வெகு பலர் எழுதியும் பேசியும் கடமையாற்றி இருக்கிறார்கள். இதழாசிரியர் - எழுத்தாளர் - கவிஞர் - நாவலாசிரியர்- திரைப்பட இயக்குனர் - உரைநடையை கவிதை ஆக்கியவர் - இன்ன பலவாறாக! சரஸ்வதி தாமரை சாந்தி போன்ற யதார்த்த வியல் இதழ்கள் மத்தியில் 1970இன் தொடக்கத்தில் வித்தியாசமாய் ஒரு குரல் எழுந்து வருகிறது. இலக்கியவாதிகளே நீங்கள் யார் பக்கம்?
"நான் மனிதன் பக்கம்" என்று எழுதிய படைப்பாளி கார்க்கியின் குரல் இங்கு எதிரொலிக்கிறது. முகப்பு, இலச்சினை ஓவியமாகக் கொண்டு ஒரு இதழ் உருவாகிறது: பெயர் கார்க்கி. ஆசிரியர் இளவேனில். கார்க்கி இதழில் எஸ்.கே.எஸ் சாகுல் அமீது, இன்குலாப் ஆகிறார். பெயர் சூட்டியது இளவேனில். அதே இதழில் பா.செயப்பிரகாசம், சூரியதீபன் ஆகிறார். 'பட்ட மரமும் பூப் பூக்கும்' என்ற எனது முதல் கட்டுரை 1973 கார்க்கியில் வெளியானது. பின்னர் சில காலம் தாண்டி இருவரும் தொலைவு தொலைவுக்கு நகர்ந்து விட்டோம். ஆனால் தோழமை தொடர்கிறது.


முகநூல் - 25 டிசம்பர் 2020
ஆய்வறிஞர் தொ.ப. மறைவு:

உடல் உறுப்புகளில் தான் முதுமை; சிந்தனையில், ஆய்வில், செயலில், புதுமை பூத்துக் கொண்டே இருந்தது. அறுபதுகளின் இறுதியிலிருந்து அறிந்த தோழரை நான் இழந்துவிட்டேன். முன்னும் பின்னுமான அறிஞர்கள் மேதைகளின் இழப்புகளில் நாமும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தோழரே நீங்கள் வென்று விட்டுச் சென்றவை எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்.


முகநூல் - 14 டிசம்பர் 2020
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று 17- வது நாள்! 

விமானத்தில் மூன்று மணிப்பொழுது: விரைவு ரயிலில் ஏறினால் இரு முழு நாள். தனி வாகனப் பயணமெனில் எத்தனை நாளெனெச் சொல்ல இயலாது: வெகுதொலைவு இந்தியத் தலைநகர் டெல்லி :: இந்தியத் துணைக்கண்டத்தின் மையத்திலில்லை – பட்டென்று போய் இறங்கிவிட! 

டிராகடர்கள் பேரணி, மறியல், முக்கிய சாலைகள் முற்றுகை,பட்டினிப் போர் என படிப்படியாய் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் போராளிகளான விவசாயிகளுடன் போராட்டத்தில் நேரில் பங்கேற்க இயலவில்லை:
இங்கிருக்கும் உப்பரிகை இரும்புக் காதுகளுக்குக் கேட்காத நம் குரல் டெல்லி செங்கோட்டையின் இதயமற்ற சுவர்களை எப்படித் தட்டும்? 

ஆயினும், விவசாயிகள் போராட்டத்துக்கான சிறு பங்களிப்பையாவது நான் செய்தாகவேண்டும். டெல்லியில் காலூன்றிப் போரிடும் தோழர்களுக்கு, போராட்ட நிதியாக ரூ.ஐயாயிரம் இன்று வங்கி மூலம் அனுப்பி வைத்தேன். விவசாயிகள் போராட்டத்திற்கு தமுஎகச தோழமைநிதி வழியாக இது சேர்க்கப்பட்டது. 

தாங்களும் அனுப்ப நினைத்தால் தொகையை கீழ்க்காணும் வங்கிக் கணக்குக்கு அனுப்புக. அனுப்பிய பின் தமுஎகச தோழர்களுக்கும் தெரிவிக்கவும். 
ALL INDIA KISAN SABHA, 
A/c no: 200 320 32 844, ALLAHABAD BANK, DELHI IFSC Code: ALLA 0210163

 
முகநூல் - 11 டிசம்பர் 2020
எங்கே காணோம் அந்த எழுத்தாளர்?

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாய் 15-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாதமி விருதுகளை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்கள். முன்னர் கல்புர்கி முதலாக சமூக செயற்பாட்டாளர்கள் வரை பலர் வெறுப்பு அரசியலால் கொலை செய்யப்பட்டபோது கண்டனம் தெரிவித்து ஏறக்குறைய 65 எழுத்தாளர்கள் விருதுகளைத் திரும்ப ஒப்படைத்தார்கள். விவசாயிகளின் பிரச்சனைக்காக எழுதப்பட்டது; குறிப்பாக நீர்நிலைகளின் பராமரிப்பு தொடர்பாக எழுதப்பட்டது சூல் நாவல் என்று சொல்கிற சூத்திரதாரி இப்போது எங்கே போனார்? "விருதுகள் வழங்குவதற்கான விதிகள் மட்டுமே உள்ளது; திரும்பப் பெறுவதற்கான விதி எதுவும் இல்லை " என்ற சாகித்ய அகாதமி அறிவிப்பில் முடங்கிப் போனதா சூல்? பரிதாபம்!


முகநூல் - 9 டிசம்பர் 2020
அம்பேத்கர்.

"பெற்றது அரசியல் விடுதலை தானே தவிர சமூக விடுதலை அல்ல" என அம்பேத்கர் கருதினார். காந்தி சமூக விடுதலையில் பெரிதும் கருத்துச் செலுத்தவில்லை. கருத்துச் செலுத்தியி ருந்தால் அவர் மற்றொரு அம்பேத்கராக உருவாகி இருப்பார்: பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னாலேயே அவர் உயிர் பறிக்கப்பட்டிருக்கும்; இந்திய சனாதனங்களும் இந்திய ஆளும் வர்க்க குழுக்களும் அவரை அனுமதித்திருக்க மாட்டார்கள். பிர்லா மாளிகை அவரை தியானத்திற்கு அனுமதித்திருக்காது. அகிம்சை கொள்கைகளில் உடன்பாடு கொண்டவர்கள் பிர்லா மாளிகையில் தியானத்திற்கு வந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல!


முகநூல் - 5 டிசம்பர் 2020
‘சிஸ்டம் ’என்றால் என்ன?

” சிஸ்டம் சரி இல்லை , இந்த சிஸ்டத்தை மாத்தனும் “
6 மாதங்கள் முன்னர் ரஜனி குரல் தந்தார். அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ரசிக மனசுகள் ஆடிக் கொண்டிருந்த கிளித்தட்டு ஆட்டத்தை , கிளி முடிவுக்குக் கொண்டுவந்து விட்டது.
சிஸ்டம் என்றால் என்ன?
இந்த சமுதாய அமைப்பு, சமுதாய அமைப்பைத் தாங்கி நிலைநிறுத்திக் கொண்டிருக்கிற அரசமைப்பு : சோஷியல் அண்ட் பொலிடிகல் சிஸ்டம்; (Social and political system). வரலாற்றுக் காலம் முதலாக இந்த சமுதாய அமைப்பும் அரசமைப்பும் மக்களுக்கானதாக இருந்ததில்லை.

சமுதாய அமைப்பு சரி இல்லை என்றால், அதைதாங்கி நிற்கும் தூணாக அரசமைப்பு இருக்கிறதெனில், மாற்றியமைக்க மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டும்; கிளர்ச்சி செய்ய வேண்டும் ; புரட்சிகர அரசியல் செய்ய வேண்டும். இதற்கு சினிமா சாகஸம் பயன்படாது. செல்லரித்துப் போன கால்களும் தூண்களும் கொண்டு நெடியகாலமாகத் தள்ளாடும் - லேசாய்த் தட்டிவிட்டால் ’சரசரவென’ சரிந்துவிடும் சமூக அமைப்புக் கூடாரத்தை - தன் கான்கிரீட் கலவையாலும் சிமெண்ட் தூண்களாலும் காத்துக் கொண்டிருக்கிற முதலாளிய அரசு அதிகார அமைப்பை வீழ்த்துவதற்கு மாற்று அரசியல் வேண்டும். தேவை புரட்சிகர அரசியல், வினையாற்றும் புரட்சியாளர்கள்.

ரஜினி சிஸ்டம் எனக் குறிப்பிடுவது அமைப்பு அல்ல; ஆட்சி சரியில்லை என்பது; ஆட்சிமாற்றம் என்பதுதான்; இது தேர்தல் அரசியல். இங்குஅரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்தச் செயல்பாடு என்பது ஒன்றே ஒன்று மட்டுமாகச் சுருங்கிவிட்டது.. அடுத்த தேர்தலுக்காக காத்திருப்பது; எதிர்வரும் 5 ஆண்டுகளும் அதற்காக உழைப்பது.

ரஜனி இவ்வளவு ஆழமாக அர்த்ததப் படுத்துவதாக இருந்தால் வரவேற்புக்குரியது. இந்த சிஸ்டம் சரி இல்லை என்றால் அதற்குப் பின்னணியாக இருப்பது ரஜனி வர்க்கமும், ரஜனி சாதியும், ரஜனி கூட்டமும் தான்!

பாலிய வயதுச் சிறுமி அல்லது ஒரு பதின்ம வயதுப் பெண் சினிமாவுக்குள் வந்துவிட்டால், அவள் தலையில் அறிவுக் குருவிகள் எல்லாவற்றையும் உட்காரவைத்து முத்துக்கள் உதிர்ப்பதாகக் காட்டும் ஊடகங்கள் அரிப்பெடுத்துச் சொறிய ஆரம்பித்துள்ளன. எழுதப்படுவதெல்லம் மெய் என்று மக்கள் எண்ணுகிறார்கள். தேர்தலுக்குத் தேர்தல் புதுபுதுக் காளான்கள் முளைக்கின்றன. காளான்களைக் குடைகளாக உருவாக்கம் செய்து மக்கள் கைகளில் திணிக்கிற வேலையைச் செவ்வனே போட்டி போட்டுச் செய்யத் தொடங்கிவிட்டன. ”சூப்பர் ஸ்டார் 45: ரஜனிகாந்த் எனும் செயல் புயலின் பன்முகப் பயணம்” எனத் தலைப்பிட்டு ’இந்து தமிழ்திசை’ சிறப்பு மலர் வெளியிடுகிறது.


முகநூல் - 9 ஜூன் 2020
ஊர் அடங்கினாலும்...

’உலகத்தில் பாதியை சப்பித் தின்று தீர்த்துவிட்டு ஓய்வேன்’ என கொரோனா தொற்று நட்டுக்க நிற்கிறது. உலகமுழுதும் நடுக்கம்! குறிப்பாக மேல் கீழ் வர்க்க, வர்ணாசிரம இந்தியாவில் ஊரடங்கு அறிவிப்பு மூன்று மாதங்களாய்.

ஊரடங்கு ஒழுங்கை மக்கள் மிகச் சரியாகவே கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால் ஊரடங்கைப் பயன்படுத்தி எட்டுவழிச்சாலையை முடித்தே தீருவோமென அமைச்சர்கள், அரசஅதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள். மத்தியிலிருக்கும் ராமர் பால ஆசாமிகளின் துணையோடு எட்டுவழி சாலை, பத்தம் வகுப்புத் தேர்வு என காரியம் நடக்கின்றன.

எட்டுவழி சாலையை எதிர்த்து விவசாயிகள் ஐந்து ஐந்து பேராய் அணி அணியாய் நின்று, கறுப்புகொடி கையேந்தி கிராம சபைகள் முற்றுகை, நெடுஞ்சாலைத்துறை அலுவலக முற்றுகை, ஆர்ப்பாட்டம் என கொதிப்பை வெளிப்படுத்துகின்றனர். நாள் முழுதும் வெயிலில் நின்று போராடுகிறார்கள்.

இந்தி பேசும். இந்தி பேசாத வட மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் புலம் பெயர்ந்தார்கள். கொரோனாவால் வாழ்விழந்து ”ஆறடி மண்ணும் எம் சொந்த மண்ணாக இருக்கட்டும்“ என்று சொந்த ஊரை நோக்கிப் பெயருகிறார்கள். புலம் பெயர்ந்த அவர்கள் இன்று அகதிகள் .
இந்த அகதிகள் பற்றி துளி அக்கறையுமற்று - ஆனால் இந்தியை வளர்க்க, திணிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழித்துறை அதிக நிதி ஒதுக்கீடு, அதிகாரக் கட்டளைகள் என, ஒட்டுமொத்த அரசு நிர்வாகப் பணிகளும் முடங்கிக் கிடக்கும் நிலையிலும் அமீத்ஷா சுறுசுறுப்பாய் இயங்குகிகின்றார்.

ஊரடங்கினாலும் இவர்கள் அடங்க மாட்டார்கள். ஊரடங்கு என்னும் முகக்கவசம் அணிந்து ஊடறுப்பு, நடுச்செங்கல் உருவுகிற வேலையைத் தொடருவார்கள்.


முகநூல் - 1 ஜூன் 2020
நிறவெறியின் வேர்கள்
தமிழில்: சூரியதீபன்

அமெரிக்காவில் ’மின்னியாபோலிஸ்’ என்னுமிடத்தில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் வெள்ளை இன போலீசாரால் மண்டியிடச் செய்து காட்டுமிராண்டித்தனமாக அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த இனவெறிப் படுகொலையை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்துப் பரவி வருகிறது. சனிக்கிழமை இரவு வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொஞ்சநேரம் முடங்கிப் போனது: ”சூறையாடல் ஆரம்பமாகும் இடத்தில், துப்பாக்கி சூடும் ஆரம்பமாகிறது” என அதிபர் டிரம்ப் மூடப்பட்ட மாளிகையினுள்ளிருந்து டுவிட்டரில் பதிவு செய்தார்.

நிறவெறி வேர்கள் நம்மில் ஆணிவேர் ஊன்றி, சில்லு வேர்களுமாய்ப் பரவியுள்ளன என்பதை சொல்கிறது இந்த வசன கவிதை.

“அன்பார்ந்த தென் ஆசிய மக்களே!
நீக்ரோ என்ற உங்கள் வார்த்தை
ஒரு நிறவெறி உச்சரிப்பு.

கறுப்பினப் பண்பாட்டை ஆதாயத்துக்காக
அபகரித்தல் ஒரு நிறவெறி;

உங்களது சாதியப் பார்வை, சாதியப் பரப்புரை
கறுப்பினத்திற்கு எதிரான நிறவேறியே.

டிரம்ப், மோடி அல்லது பாசிஸவாதிகளுக்கு
நீங்கள் நீட்டும் ஆதரவுக் கரம்
நிறவேறிச் செயலே!

வெள்ளை, சிவப்புத் தோல் மீது
உங்களின் மோகம் ஒரு நிறவெறி.
வெள்ளை சிவப்புத் தோல்கொண்டு
மினுக்கும் நடிகர் நடிகையர்
நிறவெறியர் தாம்.

பண்பாட்டை அபகரிப்போருக்கு
நீங்கள் தரும் ஆதரவும் நிறவெறியே.

கறுப்பர்கள் மீதான காவல் துறையின்
காட்டுமிராண்டித்தனம், சிறையடைப்பு, கொலை
- கண்டும் வினையாற்றாத
உங்கள் மௌனம் ஒரு நிறவெறிப் போக்கு!

மாதிரிச்சிறுபான்மை (Model minority) கட்டுக்கதைகளுக்கு
உங்கள் ஆதரவு ஒரு நிறவெறி.

உங்களின் ’கோரோ’ வடிவிலான
பாடல்களும் இசையும் நிறவெறியே.

செயலற்ற தன்மை - அதன்பொருள்
நீங்கள் அதன் கூட்டாளிகளே!

தென்னாசிய வட்டாரங்களில் நிலவும்
கறுப்பினத்துக்கு எதிரான போக்குக்கு முடிவு கட்ட
நம்மை நாமே கற்பித்துக் கொள்வோம்;
இதை அமெரிக்காவில் தொடங்குவோம்.


முகநூல் - 3 பிப்ரவரி 2020
தேசியக் குற்றம்

அண்மையில் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் கண்டுள்ளபடி, 2019-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் 10 ஆயிரத்து 349 பேர்; இவர்களில் 4 ஆயிரத்து 586 பேர் விவசாயத் தொழிலாளிகள்; 505 பேர் விவ்சாயக் குடும்பப் பெண்கள். இந்தச் சூழலில்தான் இந்தியாவின் பெருமைமிகு குடியரசுத்தலைவர் 31-1-2020 ல், நாடாளுமன்றங்களின் கூட்டு அவையின் உரையில்
”உழுவார் உலகத்தார்க்கு ஆணி; அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து’’
என்ற குறளை மேற்கோள் காட்டிச் சொல்கிறார்.

”நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நாடு கடமைப்பட்டிருக்கிறது. நாட்டுக்காக தன்னலமின்றி உழைத்துவரும் விவசாயிகளுக்காக, விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர்த்த நடுவணரசு அயராது பாடுபடும்”
நாடாளுமன்றத்தில் ஒரு குடியரசுத் தலைவர் மூலம் திருக்குறள் ஒலிக்கிறதே என்று மொழிமுதல்வர்களான தமிழன்பர்களுக்கு மகிழ்ச்சியுண்டாகலாம்.

ஆனால் இரண்டு செய்திகளும் ஒரேநாளில் வெளியாகின்றன. என்ன ஒரு நகைமுரண்! முதாலாவது நிகழ்வு யதார்த்தம். பிறிதொன்று கற்பனை. உழவர்களின் தற்கொலைகளை தேசியக் குற்றமாக கருதாத ஒரு கற்பனையான மனம் இந்தியாவின் தலைமைப் பீடத்தில் அமர்ந்து இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய அவலம்.

- இப்பதிவு 06 பிப்ரவரி 2020 ஆனந்த விகடனில் வெளியானது


முகநூல் - 13 நவம்பர் 2018
’மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள்’ ஆகிய படங்கள் ஒரு உண்மையை உணர்த்துகின்றன. கதாநாயகர்களின் காலம் முடிவடைந்து கொண்டிருக்கிறது: கதைகளின் காலம் வந்து கொண்டிருக்கிறது. கதாநாயக மாயையிலிருந்து திரையுலகம் மீண்டுகொண்டிருக்கும் தொடக்கம் தெளிவாகியுள்ளது. இந்த மாயைக் கைப்பிடித்து கதநாயக பிம்பங்கள் அரசியல் உலகில் பதிக்கும் காலடிகளும் நடுக்கமாகின்றன. தன்னைச் சுற்றி ஒரு கதாநாயக பிம்பத்தைக் கட்டியமைக்க முண்டிக்கொண்டிருக்கிற எழுத்துலக ஜெயமோகன்களுக்கு இது ஒரு எச்சரிக்கை.


முகநூல் - 25 அக்டோபர் 2018



ஒவ்வொரு ஆளுமையாக நம்மை விட்டு உதிர்ந்து கொண்டிருக்கிறார்கள்: நேற்று முதல் நாள் மண்ணின் இசைக் கலைஞர் கே.ஏ.குணசேகரன்: நேற்று மக்கள் கவிஞர் இன்குலாப்: சற்றுப் பின்னாளில் மா.அரங்கநாதன். இன்று கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி. பயிலுதலும் பயிற்றுவித்தலும் என அவரின் நாடகப் பரிசோதனை முயற்சி தொடர்ந்தது. அந்தச் சோதனை நாற்றங்காலில் விளைந்தவை தாம் இன்றைய நிகழ்த்து கலை, திரைக்கலையின் சில பயிர்கள். அங்கே ஒரு விருட்சம் நின்று கொண்டிருக்கிறது, அதை நோக்கி வாருங்கள் என பலருக்கும் அழைப்பு விட்டுப் போயிருக்கிறார்.


முகநூல் - 15 ஜூலை 2018
#மணலே ஒரு பாத்திரமாய்....


மணல் ஒரு சடப் பொருள். அதற்கு உயிரில்லை; பணப் பொருளாக எழுந்து நடக்க ஆரம்பித்ததும், அது உயிருள்ளதாகவும், ஒரு பாத்திரமாகவும் மாறிவிடுகிறது. கட்டுமானத் தொழிலுக்கு அத்தியாவசியப் பொருளாக, சந்தைக்கானதாக பயணிக்கிறது; விவசாயத்துக்குத் தண்ணீரில்லை; குடிக்க நீரில்லை; மக்களைக் குற்றுயிரும் குலையுயிருமாய் நகர வீதிகளுக்குத் தள்ளுகிறது. இங்கே மணல் தன்னைப் பற்றி எழுதும் படைப்பாளியைக் கூட ஒரு பாத்திரமாக்கி விட்டது. வைப்பாறு மணல் கொள்ளை தொடர்பாய்ப் பதிவுசெய்ய சொந்த வட்டாரத்துக்குப் போய் வருவது இது ஏழாவது தடவை.


முகநூல் - 7 ஜூன் 2018
காலா - திரைப்படம் முழுக்க முழுக்கதலித் அரசியலை பேசுவதாக வன்னி அரசு பதிவு செய்துள்ளார், வி. சி. கட்சியின் ஒரு படம் என்று கூறியுள்ளார் ரஜனி என்ற நடிகரிடமிருந்து தலித் அரசியலைத் தனித்துப் பிரித்துப் பார்க்கும் பார்வை எத்தனை மக்களுக்கு வரும்?திரைப்படங்களில் ஒரு நல்ல பாடலைக் கேட்கிற போது அதைப்பாடிய -அல்லது பாட வாயசைத்த அந்த நடிகனே நினைவுக்கு வருவான்.பாடல் கருத்து, எழுதியவர், பாடியவர்- எல்லாம் குப்பைக்குப் போய்விடும்.இங்கு நடிக பிம்பம் தான் முதலில். மற்றதெல்லாம் கல்லில் அரிசி பொறுக்குகிற வேலைதான்.


முகநூல் - 3 ஜூன் 2018
ரஜனிகாந்த் –ஆன்மீகவாதி, தமிழருவி மணியன் – காந்தியவாதி, சுப்பிரமணிய சாமி – அராஜகவாதி, காலா - திரைப்பட வாதி : எல்லாவாதிகளும் அம்பலப்பட்டுப் போனார்கள் . தூத்துக்குடி மக்களுக்கு நன்றி . இத்தனை உயிரிழப்புகள் தந்து தான் அம்பலப்பட வேண்டுமென்றால் நாம் கொடுத்த விலை அதிகம்.


முகநூல் - 2 ஜூன் 2018
புதுவை மண் பாரதி என்ற சான்றோனால் அடையாளம் கொண்டது.
”கெடல் எங்கே தமிழின் நலம் , அங்கெலாம் கிளர்ச்சி செய்க” என்ற பாரதிதாசனால் பெருமிதமாகியது: கவிஞர் தமிழ் ஒளியால் ஒளிகொண்டது. தமிழறிஞர், பண்பாளர், மாமனிதர் மா.லெ.தங்கப்பா எனும் சான்றோனால் புதுவை அறியப்படுவது தற்காலம்.பேராசிரியர், மொழியாக்கப் படைப்பாளி, கட்டுரையாளர், கவிஞர், பன்மொழி அறிஞர்; அனைத்துக்கும் மேலாய் தமிழ்த்தேசியப் போராளி.
தமிழறிஞர் மா.லெ.தங்கப்பா மறைந்தார்
தோற்றம்:08-03-1934 ; மறைவு 31-05- 2018


எழுத்து, சொல், மேடை என ஒரு வாழ்வையும், சொந்த வாழ்வு தனியாயும் என இருவாழ்வு கொண்டவர் அல்ல; தன் வாழ்வுக்கும், எழுத்து, சொல் என்பவற்றிற்கும் இடைவெளி அகற்றியவர் .
விருதுகளும், அவர் மேல் குவியும் பாராட்டுரைகளும் புகழுரையும் அவரை எதுவும் செய்யாது. கொஞ்சமும் அவரை அசைக்காது. தன்னைப் பற்றிய அளவீட்டைப் பிழையின்றிச் செய்தார் ஒரு கவிதையில்.
“அவன்,
உண்மை என்னும்
மெழுகு பூசிக் கொண்டிருக்கிறான்
பாலும் தேனுமாய்
பாராட்டுரைகளை
அவன் மேல் ஊற்றினும்
வழிந்து கீழே போகுமன்றி
ஒன்றும் அவன்மேல் ஒட்டுவதில்லையே!”
இது தான் தங்கப்பா. இவர்தான் தங்கப்பா!




முகநூல் - 28 மே 2018
அடுத்த புதினம்
2007- ல் ஒரு முறை; 2013-ல் ஒரு முறை. கரிசல் வட்டாரத்தைச் சேர்ந்த வைப்பாற்றை மொட்டியடித்தார்கள். ஆறு வானத்துத் துளிகளைத் தண்ணீராக்கித் தருகிறது: காற்றில் கலந்துள்ள மாசுகளின் வழியாக இறங்கும் நீரை, மணல் துகள்கள் என்னும் தேர்ந்த வடிப்பான் மூலம் வடிகட்டித் தரும் இயற்கையின் ஆற்றல் அபூர்வமானது. இந்த ’வைப்பாறு’ எட்டு ஓடை ஒன்னாச் சேர்ந்து ஓடி ஒரு ஆறு உண்டாகிருக்கு. இந்த ஆறு உண்டாகி 2500 வருசமிருக்குமா? 3000 – வருசமிருக்குமில்லையா? மூவாயிரம் ஆண்டுகளாய் சேர்த்து வைச்ச மணலை ஒரு பத்து வருசத்தில தீர்த்திட்டாங்க. மணலை, நீரைக் கொள்ளையடிப்பது அதிகாரசக்திகளின் அறமெனில் நிலத்தையும் நீரையும் காக்கப்போராடுதல் மக்களின் அறம்.
வாழ்வாதாரத்தைச் சாகடிக்கிற மணல் கொள்ளையை எதிர்த்து, கிராமம் கிராமமாய் சனங்களைத் திரட்டினார்கள்; போராடினார்கள். அந்தக் கதைதான் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் புதிய நாவல் " மணல்” .



முகநூல் - 23 மே 2018

ஸ்டெரிலைட் பச்சைப் படுகொலையைக் கண்டித்து புதுச்சேரியில் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய சாலைமறியல் இது . எத்தனை போராட்டங்கள் நடந்தாலும், இன்னும் இன்னும் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டாலும், அதனைச் சாம்பல் மேடாக்கி அசையாது படுத்திருக்கும் அடுப்புப் பூனைகளுக்கு இனி சூடு நடந்தால்தான் சரி வருமோ !


முகநூல் - 23 மே 2018
கலவரம், வன்முறை என்றே ஊடகங்கள் பேசுகின்றன. மக்கள் எழுச்சிகள் என்று ஊடகங்கள் ஒரு நாளும் சொல்வதில்லை. கார்ப்பரேட்டுகளுக்கும், அவர்களிடம் கமிஷன் தெண்டும் அரசியல்வாதிகளுக்கும் இது கலவரம், வன்முறை. அத்துமீறல். நமக்கு மக்கள் எழுச்சிகள்! கதிராமங்கலம் முதல் காவிரிப் படுகை எங்கும் மக்கள் எழுச்சிகள் காத்திருக்கின்றன.


முகநூல் - 23 மே 2018
போங்கடா, நாய்களா!

எந்ததெந்த கண்டங்களில்ருந்தோ வெட்டி எடுக்கப்படும் தாமிரத் தாதுவை இங்கு கொண்டுவந்து சுத்தத் தாமிரமாகப் பிரித்து மீண்டும் அந்த நாடுகளுக்கு அனுப்புவது தான் ஸ்டெரிலைட். அதிலிருந்து வெளியேறும் ஆலைக்கழிவுகள் வேளாண் நிலத்தைப் பாழாக்குகிறது. நச்சுப் புகை மக்களின் ஆரோக்கியத்தை அழிக்கிறது. இத்தனை நாசங்களையும் செய்யும் ஆலையை அகற்றப் போராடிய பத்துப் பேர் பலியாகியிருக்கின்றனர். ஆலை நிறுவப்பட்டதிலிருந்து எழுந்த எதிர்ப்பைக் கவனத்தில் எடுத்து தடைசெய்திருந்தால் இந்தப் பத்து உயிர்களும் காக்கப்பட்டிருக்கும். 50 கிராமங்களின் பத்து லடசம் மக்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

போங்கடா, நாய்களா!


முகநூல் - 21 மார்ச் 2018
எனக்கு மட்டும் தானா 144 ?
இங்கு என்ன நடக்கிறது? ராம ராஜ்ஜியமா? ஆர்.எஸ்.எஸ். ராஜ்ஜியம் தான் மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிறது என்பதை ரதயாத்திரை போகும் இடமெங்களிலும் விதிக்கப்படும் 144- தடையுத்தரவு காட்டுகிறது. கூட்டம் கூடும் உரிமை மறுக்கப்படுகிறதெனில் அது ராமராஜ்ஜிய ரதயாத்திரைக்கும் தானே?ஆனால் ரதத்துக்கு முன் பூரண கும்பம் எடுப்பதும் கும்மியடித்து குலவைபோட்டு ஆடுவதும் கூட்டமில்லையா, பள்ளிச் சிறார் சிறுமிகளை கூட்டிப் போய் கும்பிடச் செய்வதும் கூட்டம் கூடுவதில்லையா? 144- தடைக் கத்தி எதிர்ப்புக் குரல்களின் குரல்வளை நோக்கி மட்டும் பாய்வதேன்?

இல்லாத ராஜ்ஜியத்தைக் காட்டி, இருக்கிற வாக்குககளை அள்ளிச் செல்வதற்கா? மதம் என்பது அதற்கும் மேலே ! அது சிந்திப்பைத் தடை செய்கிறது.இப்படியெல்லாம் குறுக்கமறுக்க சிந்தனையை ஓடவிடக் கூடாது என்பது அதன் முதன்மை நோக்கம்.சிந்திக்கத் தெரியாதவர் தொகைகள் எவ்வளவுக்கு கூடுதலாகிறதோ, ,அது ஆர்.எஸ்.எஸ்- ஸூக்குக் கொண்டாட்டம்.


முகநூல் - 13 ஜனவரி 2018
கருவாடு அறியுமோ கற்பூர வாசனை!

வைரமுத்து கட்டுரையையும் வைரமுத்துவையும்
புறந்தள்ளப் போதுமானவை மூன்று காரணங்கள்:

1. முதலில் இது ஆய்வுக்குரிய நடையல்ல; அலங்கார நடை. திரைப்படத்துக்குப் பாட்டுக்கட்டி பாட்டுக் கட்டி சந்தமும் சத்தமுமாய் கலந்து இணைந்து வரும் கருத்துக்குப் பொருந்தா எடுத்துரைப்பு முறையில் ஆய்வும் செய்ய முடியாது; ஒரு புல்லும் பிடுங்க முடியாது.

2. எந்தபொருள் ஆய்வுக்குரியதோ, அப்பொருள் மையப்படுத்தப் படவில்லை; எல்லாத்தோடும் இதுவொன்னு என்றுதான் போகிறதே தவிர, அதுகுறித்த ஆய்வுக்குள் போகாமல் அச்சப்பட்டு நிற்கிறது. ’அமெரிக்க இண்டியான பல்கலைகழக’ ஆய்வேட்டின் ஒத்தை வரியை காட்டி முட்டுச் சந்தில் போய் முடிகிறது. அந்த ஆய்வேடோ, கட்டுரையைத் தந்த ஆசிரியரோ முன்வைக்கும் தரவுகள் யாவை என விரிவாகப் போகவில்லை.

3.ஒரு கருத்தை முன்வைத்துவிட்டால், அந்த வித்தைத் வேரோடத் தாங்கும் வலிமையும் வளர்த்தெடுக்கும் திராணியும் தேவை. பிசையப் பிசைய மாறும் குழைத்தெடுத்த மண் அந்த உறுதி காட்டுமா? இந்த மண்ணில் ஊறுவது முதுகெலும்பும் அற்ற ஒரு புழு.


முகநூல் - 19 ஜூன் 2017



தோழர்களே,
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி ”இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு” இம்மாதம் 20-ஆம் நாள், புதுச்சேரியில் நடக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! ஆம் உண்மைதான். மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுமாறு, 1965 மாணவ இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்ற என்னை அழைத்தார்கள். ஏற்றுக் கொண்டேன். இன, மொழி தொடர்பாக அவர்களிடம் இப்படியொரு மாற்றம் ஏற்பட்டதை வரவேற்போம்: ஈழ விடுதலைப் போராட்டம், தேசிய இனங்களின் உரிமைப் போராட்டம் போன்ற நிலைப்பாடுகளிலும் மாறுதல் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாமா.

தமிழ் இந்து - 20 ஜூன் 2017


முகநூல் - 21 ஜூலை 2016

இன்றைக்கு தமிழ்நாட்டை ஆட்டிப்படைப்பது எது?


தகவல்தொழில்நுட்ப ஊடகப் பெருக்கம், அதன் செய்வினை - சமுதாய இயக்கம் அனைத்தையும் தீர்மானிக்கிற சக்தியாக திமிரி மேலெழுந்து நிக்கிறது. ஒற்றைச் சக்தியாய் திகிடு முகுடாய் நிற்கும் அதன் முன் - மற்றவை அனைத்தும் ஒதுக்கம் கொண்டுவிட்டன.தமிழகத்தின் பிரதான ,எரியும் பிரச்சினைகளைக் கூட திசைமாற்றம் செய்துள்ளன.கிராமப்புறத்தில் சிறுபிள்ளைகள் குண்டக்க மண்டக்க படுத்திருப்பதை “ கால்மாடு தலைமாடாய்ப் படுத்திருக்குக” என்பார்கள். அதுபோல் விளம்பரப் பேராற்றல் பிரச்சினைகளை கால்மாடு தலைமாடாய் திசைமாற்றி வைத்துள்ளன என்பதற்கு “ கபாலி” ஒரு சாட்சி !

விசுவரூபமாய் காட்டப்படும் பிரச்சினை எது? அமெரிக்காவில் உட்கார்ந்துள்ள நடிகன் ரஜினியின் ‘கபாலி’. அந்தத் திரைப்படம் இந்தியாவில் வெள்ளை ஆதிக்கத்தை விரட்டி விடியலை வாங்கித்தந்ததல்லவா? அதற்காக அஞ்சல்துறை சிறப்பு உறைகள் வெளியிடுகிறது. சிறப்பு விமானம் மூலம் பெங்களுருலிருந்து சென்னைக்கு ஏர் ஆசிய நிறுவனம் ரசிகர்களை அழைத்து வருகிறது. அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 500 திரைகள், இலங்கை, ஆஸ்திரேலியா, அரபுதேசத்தில் 175 திரைகள், மலேசியா, சிங்கப்பூரில் 200 திரைகள், இதர நாடுகளில் 25 திரைகள் என்று 1000 வெளிநாட்டுத்திரைகளில் தோன்றப்போகிறான் ‘கபாலி’. கபாலி திரைப்படம் போல் உலகெங்கும் பறந்து செல்வீர் எமது விமானத்தில் என ‘ஏர் ஆசியா நிறுவனம்’ தொடர்ந்து விளம்பரம் அருளிக்கொண்டிருக்கிறது.

இத்தனை ஆர்ப்பாட்டங்கள், அரங்கேறுகைகளுக்கும் பிதாவான ரஜினி என்ற பிம்பம் அமெரிக்காவில் ஒரு நகரத்தின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு சாமியாரின் ஆசிரமத்தில் அமர்ந்து அட்டகாசமாய் ஒரு ஞானியின் பாத்திரத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.அந்த சாமியார் யாருமில்லை,அமெரிக்காவிலிருந்து விமானத்தில் பறந்து வந்து ‘பாபா ‘ படம் பார்த்துவிட்டுத் திரும்புகையில் மரணமடைந்தவர்.

‘கபாலி’ செய்த சாதனைப் பட்டியல் கணக்கிலடங்காது.

  1. மக்களின் வாழ்வாதாரமான தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்கிறது.
  2. டிசம்பர் 2015- ஜனவரி 2016- களில் தலைநகர் சென்னையின் மீதும் ஐந்து மாவட்ட மக்களின் மேலும் நடந்த மழை வெள்ள தடுப்புக்கு நிரந்தர உபாயத்தை விரித்துப்பேசுகிறது.
  3. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வணிகக்கொள்ளையர்களை வளைத்துப் பந்தாடுகிறது.
  4. கனிம வளங்கள் சூறை, ஆற்றுமணல் கொள்ளை, வனம் அழிப்பு செய்யும் மனிதவிரோதிகளை அடித்து நொறுக்கி சிறையில் தள்ளியுள்ளது.
  5. தூக்குக் கயிற்றின் முன் வாழ்நாள் முழுக்க நின்று பரிதவிக்கும் ஏழு தமிழர் உயிரை மீட்டு வந்திருக்கிறது.
  6. சமகால பிரச்சினைகள் அத்தனைக்கும் அறிவியல் பூர்வமான தீர்வுகளை முன்வைத்துச் செல்கிறது .

ஒன்னொன்னா நூறா, ஒருமிக்க நூறா - என்கிற வியப்பு மேலிடுகிற சூழலில் “ரஜினி தமிழ்நாட்டிற்கு செய்த நன்மைகள் என்ன?” என்று முகநூலில் நண்பர் கே. ராஜாபாலகிருஷ்ணன், நாகையிலிருந்து கேள்விகளைப் பதிவிடுகிறார்:

  1. சென்னை வெள்ளம் வந்தபோது எங்கடா கபாலி?
  2. தமிழக மீனவர் பிரச்சினை - எங்கடா கபாலி?
  3. தமிழ்நாட்டில் கபாலியின் முதலீடு என்ன?
  4. நதி நீர் இணைப்புக்கு கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி எங்கே?
  5. காவேரி பிரச்சினையில் கபாலி யார் பக்கம்?

கூத்தாடிகளை தூக்கி வைத்து ஆடாதீர்கள். ஏற்கனவே தமிழ்நாட்டை ஒரு கூத்தாடி ஆட்டிவைப்பது போதும்” என்கிறார் நண்பர் ராஜா பாலகிருஷ்ணன். உங்களுக்கும் சொல்ல நிறைய இருக்கும்.


முகநூல் - 10 ஜூன் 2017

எனது மூன்று பிறந்த நாட்கள்

ஜூன் 2, 2016- ஐ, எனது பிறந்த நாள் எனக் கருதி பலரும் வாழ்த்தினார்கள். அது பள்ளிச் சான்றிதழில், அரசுப் பணியின் சான்றிதழில் உள்ள பிறந்த நாள்.

உண்மையான பிறந்த நாள் டிசம்பர் 7.

அரசுப் பணியிலிருந்து நான் ஓய்வு பெற்ற போது “இன்று நான் பிறந்தேன்“ என்று கவிதை எழுதி அந்த நாளைக் கொண்டாடினேன்.

அரசுப் பணி என் சிந்தனையில் ஏற்றப்பட்ட பளு! அந்தப் பளுவை எப்போது உதறுவது என்று காத்திருந்தேன். கேவலங்களும் பரிதாபங்களும் வன்மங்களும் நிறைந்த ’இருட்டுக் கெசம்’ அது. ஒவ்வொருவரையும் பேய் பிடித்தாட்டும் இடம். அந்தப் பேயாட்டத்திலிருந்து தப்பித்த நாளை பிறந்த நாளாய்க் கொண்டாடிய கவிதை:
இன்றுதான் நான் பிறந்தேன்
கிளி என்றால் பேச,
பறவை என்றால் பறக்க,
வெற்றுடம்பின் புழு என்றால்
ஊர்வதும் உண்டாம்;
பேச , பறக்க, ஊர்ந்து செல்லவும்
அனுமதி வேண்டும் அரசு ஊழியனுக்கு.
இன்று சிந்தனைச் சுதந்திரம் தொடக்கம்,
நான் ஓய்வு பெறுகிறேன் (30-06-1999)
இன்றுதான் நான் பிறந்தேன்
நேரடியாயும் மறைந்தும் பிணைத்த
அடிமை விலங்குகள் அற!
இலக்கியப் பெருவெளியில்
கத்தரித்த சிறகுகள்
இனி முளைக்கும்
கலைந்த கரு உயிர்க்கும்
இனி உங்களுடன் என்றென்றும் நான்.
இந்த மூன்றாவது பிறந்தநாள் எனக்குக் கொண்டாட்டமாக ஆனது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி. இனி நான் வேண்டுவது இதுதான். எனது எந்தப் பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள் சொல்லாதீர். எனக்கு என் பிறந்த நாள், நேர்மையாகச் சொல்கிறேன், நினைவிலிருப்பதில்லை. உங்களுக்கும் மறக்கட்டும் அது.


முகநூல் - 9 ஏப்ரல் 2016

மன்னிப்புக் கேட்பதால் மாறிவிடுமா மனப்போக்கு?

ஈழத் தமிழனோ, இங்குள்ள தமிழனோ, உலகத் தமிழனோ எவராக இருந்தாலும் சாதித் தமிழனாகவே இருக்கிறான். தமிழ்த் தேசியவாதிகள் பெரும்பாலோனோர் சாதியத்திலிருந்து விடுபட்டவர்களாக இல்லை: அவர்கள் சாதிகள் ஆற்றும் வினையைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. மொழிவழி, இனவழி தேசியம் பேசுவதும், அவற்றின் அடிப்படையில் சாதி ஆற்றும் கொடுஞ்செயலைக் காணாமல் புறம் போவதும் இவர்களுக்கு வழமை. இங்கு மொழியால் இயங்கிறபோதும், இனத்தால் இயங்குகிற போதும் தமிழன் சாதியாக இருக்கிறான்.சாதியாக வாழ்கிறான்.

எத்தனை உயரத்திற்குப் போனவர்களாக நாம் கருதுகிறவர்களும் இதிலிருந்து விடுபட்டவர்கள் இல்லை என்பதற்கு ஒரு சாட்சி வை.கோ.

மன்னிப்புக் கேட்டதால் அனைத்தும் துடைக்கப்பட்டு விடுவதில்லை;அது எப்படி பேச்சில் வருகிறது? சட்டியிலிருப்பது தான் அகப்பையில் வரும்;மனசுக்குள் கிடப்பதுதான் வாய்மொழியில் வெளிப்பட்டது. மனசிலிருந்து சாதிக்கழிவை அகற்றுவதற்கு முதல் தேவை வாழ்க்கைப் பயிற்சி ! சிந்தனை, சொல், செயல் என்ற அனைத்துத் தளத்திலும் அது வாழ்க்கைமுறையாக மாற வேண்டும்.மற்றெல்லாவற்றிலும் தமிழ்த் தேசியவாததிற்கு இயைப வாழ்வுமுறையைக் கடைப்பிடிக்கும் தமிழ்த்தேசியர்கள் சாதியில் மட்டும் வாழ்வியல்பயிற்சியை மேற்கொள்வதில்லை.

நான் சொல்வது - முதலில் சாதியச் சிந்தனையை ஒழி;

பிறகு சமுதாயப் பணிக்கு வா.


முகநூல் - 27 ஜனவரி 2016

தேங்காய் திருடுவது எப்படி?

தென்னை மரத்தில ஒருத்தன் தேங்காய் திருடுறதுக்காக ஏறினான். மரத்தில் ஏறியதை தோப்புக்காரர் கண்டுவிட்டார். கையும் களவுமா இன்னைக்கு பிடிபட்டுட்டான் என்று நேரே வந்து ” எதுக்குடா மரத்தில ஏறின “ என்று கேட்டார்.

திருடன் சொன்னான் ” புல்லுப் பிடுங்குறதுக்கு ஏறுனேன்”
“அங்கயாடா புல்லு கிடைக்கும்?”

”அதான் எறங்குறன்” சாமர்த்தியமாய்ப் பேசினான்.

விருதை மறுக்கும் ஜெயமோகன் கதை இதுதான் –

தோப்புக்காரர் யார்?

விழிப்புணர்வுள்ள வாசகர், எழுத்தாளர், சிந்தனையாளர்கள் அனைவரும். அவர் செல்லும் பாதையும் சென்றடைந்த தோப்பும் எது என எல்லோருக்கும் தெரிந்துபோனது. மாட்டுப்பட்டதும் ‘எதிர்க் கூட்டம் என்னைக் கடுமையாக விமரிசிப்பர்‘ என சாமர்த்தியமாய் எதிர்ச் சிலம்பம் வீசுகிறார்.


முகநூல் - 12 டிசம்பர் 2015

பிரளயம்

அம்மாவின் தலைக்கு மேல் அடிமைகள் இல்லை.ஏனெனில் அம்மா எவருக்கும் தலைவணங்குபவர் இல்லை; அம்மாவுக்குக் கீழேதான் அடிமைகள் இருக்கிறார்கள். ”என்ன செய்வது கும்பிடுகிற எனது கைகள் ஒரே கைககளாகத்தான் இருக்கின்றன. கால்கள் தான் மாறிக்கொண்டே இருக்கின்றன” என்று சொன்ன அறிவாளிகள் போலல்ல இவர்கள். கால்கள் ஒரே கால்கள், கைகள் அதே கைகள். சுயசிந்திப்பு துளியுமில்லாது அடிமைச் சேவகம் புரிவோராக இருந்தால் இருக்கட்டும். அது இன்றைய அரசியலின் குணவாகு.

மக்களையும் தம்போல் ஆக்கி வைக்க முயன்றார்கள்.

இப்போதுதான், இப்போதுதான், இப்போதுதான்.

மக்கள் சுயமாகச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்; ஊடகங்களும் முதன்முதலாக அதைப் பேசத் தொடங்கியிருக்கின்றன. மக்களின் சிந்திப்புக்கு ஒரு பிரளயம் தேவைப்பட்டிருக்கிறது. சுய சிந்திப்பு ஒரு பிரளயம்தான்!


முகநூல் - 3 டிசம்பர் 2015

வாழ்விழந்தனர் தமிழர்
உயிரற்றது தமிழகம்
கண்டது வெள்ளம்
காணக் கிடைக்கவில்லை ஆட்சியாளர்
அரசியல் செய்வோரும்!
எங்கெங்கு காணினும் நெருப்பு
மழையிலும் நெருப்பு.

சொந்தங்களே துயரங்களைப் பகிர்ந்து கொள்வோம். துயரத்தைக் கையளிப்பது தானே தமிழன் விதி. ஏற்கனவே கொள்ளளவு தாண்டி துயரங்கள் சுமந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சாதிக்கு சுமை தாங்குமோ? இது மாறி மாறி அரசணையில் வீற்றிருந்த கட்சிகளின் மனிதர்கள் உண்டக்கி வைத்துச் சென்ற "செயற்கையாய் உண்டு பண்ணிய பேரழிவு"; இயற்கைப் பேரழிவு ஓரளவுதான்.

வாசிக்க நாளிதழ் இல்லை; பார்க்கத் தொலைக்காட்சி இல்லை; குடிக்கப் பாலில்லை; சாப்பிட ஒன்றுமே இல்லை. வாழ்க்கைத் தீவு இதுதான்.

தீவிலிருந்து வெளியேற தலைமுறை ஆகலாம் தமிழ்ச் சமுதாயத்துக்கு! நாளை நமதே என்பது வெற்றுச் சொல் உதிர்ப்புத் தான்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்