என்னுடைய மனம் என்கிற ராஜசபையில் இவருக்கு ஒரு தனி இடம் உண்டு - கி.ரா

ஒரு ஜெருசலேம் - முதற்பதிப்பின் முன்னுரை


தீரவாசத்து இலக்கியம் என்று இருப்பதுபோல கரிசல் காட்டு இலக்கியம் என்று ஒன்றிருக்கிறது.

முதலில் இதைத் தொட்டு உண்டாக்கியது கு.அழகிரிசாமி.

தொடர்ந்து இதைப் பின்பற்றியவர்கள் வீர.வேலுச்சாமி, பூமணி, பா.செயப்பிரகாசம் முதலியவர்கள். இதைப் பின்னாலும் தொடர்ந்து செய்து கொண்டுவர இங்கே பல புதிய கரிசல் எழுத்தாளர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வானம் பார்த்த பூமியான இந்தக் கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும்போது எங்களுக்குத் தாங்க முடியாத துக்கம் நெஞ்சை அடைக்கும். இந்த மக்களைப் பற்றி இதுவரை நாங்கள் சொல்லியதெல்லாம் விட, இன்னும் சொல்லாததே அதிகம் இருக்கிறது.

இவர்களைப் பற்றி பூரணமாகச் சொல்லித் தீர்க்க ஒரு லியோ டால்ஸ்டாயோ, ஒரு மைக்கேல் ஷோலகோவோ வந்தாலும் கூட காணாது.

கு.அழகிரிசாமி எழுதிய கதைத் தொகுதியிலிருந்து கரிசல் கதைகளை மட்டும் பிரித்துத் தனியாக எடுத்து “அழகிரிசாமியின் கரிசல் கதைகள்” என்று ஒரு தொகுதி கொண்டுவரவேண்டும் என்று எனக்கு சமீப நாட்களாக ஒரு ஆசை மனசை அரித்துக் கொண்டிருக்கிறது.

’கரிசல் மலர்’ என்று ஒன்றைக் கூட்டுமுயற்சியாக “தாமரை” மூலமாகக் கொண்டுவந்தோம் 1970-இல். அதில் இந்த மக்களைப் பற்றிய சிறுகதைகள், இவர்கள் தங்களுடைய பேச்சு வழக்கில் உபயோகிக்கும் வட்டாரச் சொற்கள், வசவுகள், சொலவடைகள், இவர்கள் அணிந்துகொள்ளும் நகைகள், ரோராட்டு, ஒப்பு, இவர்களுடைய மூடநம்பிக்கைகள், இவர்களிடையே புழங்கும் நாடோடிக் கதைகள், நாடோடிப் பாடல்கள், பொழுதுபோக்குக்காக விளையாடும் விளையாட்டு வகைகள் இப்படி இப்படி.

“கரிசல்” என்று ஒரு நாவலை அன்பர் பொன்னீலன் எழுதி அது அச்சுக்காகக் காத்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர் நாஞ்சில்நாட்டைச் சேர்ந்தவர். உத்தியோகம் காரணமாகச் சில காலம் இந்தக் கரிசல் காட்டில் தங்க நேர்ந்தது அவருக்கு. இந்த மக்களைப் பற்றி ஒரு நாவலே எழுதவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது ஒரு விசேஷம்.

நண்பர்களிடையே பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சுவாக்கில், கரிசல் மாவட்டம் என்று ஒன்றை உண்டாக்கவேண்டும் என்று சொல்லுவேன். இப்படித் தனியாக நிர்வகித்துக் கவனித்தால் ஒருவேளை இவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க ஏது உண்டு என்கிற நினைப்பு. மற்றபடி எத்தனை நிதி ஒதுக்கல்கள், ஐந்தாண்டுத் திட்டங்கள் வந்தாலும் இவர்களுக்குப் பலன் இல்லை. தனியாக விசேசித்துக் கவனிக்கவேண்டிய சோனிக் குழந்தை இது.

அருமை நண்பர் பா.செயப்பிரகாசம் அவர்களுடைய முதல் சிறுகதைத் தொகுதி இதோ வெளிவந்திருக்கிறது.

என்னுடைய மனம் என்கிற ராஜசபையில் இவருக்கு ஒரு தனி இடம் உண்டு.

பொதுவாக, மேலே சொன்ன எனது எழுத்தாள அன்பர்கள் எவர் எழுதிய எழுத்தைப் படித்தாலும் மனம் உருகிப் போவேன். அவை இந்த மண்ணின் மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டவை. இவர்களுடைய எழுத்துக்களை என்னைவிட யாரும் அதிகம் அனுபவிக்க முடியாது. அம்புட்டும் எனது மக்களைப் பற்றிய சேதிகள் அடங்கியவை.

செயப்பிரகாசத்தின் எழுத்தில் என்னை ரொம்பவும் கவர்ந்தது, அவருடைய கவித்துவ நடை. அதைப் பல இடங்களில் படிக்கும்போது, ஐயோ நமக்கு இப்படி எழுத வரமாட்டேங்குதே என்று நினைப்பேன்.

இந்தக் கதைகளையெல்லாம் ஒருங்கே சேர்த்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்ததில் பெருமிதம் கொள்ள முடிகிறது. இந்த 1975-ம் வருஷம் கரிசல் இலக்கியத்துக்கு யோகமான வருஷம்.

இந்த மண் எங்களுக்கு ஒரு புனிதமான ஜெருசலேம்.

சாவதற்கு முன்னால் தன் மனைவியிடம் கு.அழகிரிசாமி சொன்னானாம், “சீதா, என்னை இந்தக் கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டில் கொண்டுபோய் எரித்து விடாதே. என் உடம்பை இடைசெவலுக்குக் கொண்டு போய் அந்த மண்ணில் ஆழமாகப் புதைத்துவிடு.”

சத்தியம் நிறைந்த வார்த்தைகள் இவை.

எரித்தால் சாம்பல் காற்றிலே பறந்து வேற்றிடத்துக்குப் போய்விடும். ஆழமாக இந்த மண்ணுக்குள் புதைத்துவிட்டால் கதகதப்பாகவும் நிம்மதியாகவும் அடங்கிவிடலாம்.

உயிருடன் இருக்கும்போது மக்களோடு ஐக்கியமாகவும் உயிர் பிரிந்தபின் மண்ணோடு ஐக்கியமாகவும் வேண்டும்.

ஒரு ஜெருசலேம் கதையில் செயப்பிரகாசம் இந்த மண்ணை எவ்வளவு வெறியோடு நேசிக்கிறார் என்று தெரிகிறது.

‘அம்பலகாரர் வீடு’ கதையில் இந்த மண் எப்படி சீரழிந்துகொண்டு வருகிறது என்று சித்திரிக்கிறார்.

செயப்பிரகாசம் இந்தக் கரிசல் மண்ணில் பிறந்து வளர்ந்தவர். “கலப்புல் தின்றாலும் காடை காட்டிலே.” அவர் எங்கே இருந்தாலும் அவருடைய எண்ணமெல்லாம் இங்கேதான் இருக்கும்.

ஒரு ஜெருசலேம் கதைத் தொகுதியைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

‘ராஜபவனம்’
கி.ராஜநாராயணன்
இடைசெவல்
ஜூன், 1975

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌