கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

எனக்கு முதன் முதலாக பா.செ அவர்களின் அறிமுகம் என்பது கவிதை வழியேதான் நிகழ்ந்தது. அது கரிசல் மண்ணின் கதை சொல்லியாக அல்ல. கரிசலின் தீவிரமும், தகிப்பும் கொண்டதான ஓர் கவிதைக்காரராக, சூரியதீபனாகதான் அந்த அறிமுகம். கவிதைகளில் வெம்மை கொண்ட சூரியதீபன் தான் செயப்பிரகாசம் என்று அறிவதற்குள்ளாக அவரது கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். கிராவின் ‘கரிசல்காட்டுக் கடுதாசிக்குப்’ பிறகு, ஜுனியர் விகடன் இதழில் வந்த தொடர்களில் எனக்குப் பிடித்ததாக ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ இருந்தது. கரிசல் என்பது இரத்தமும், சதையும் கொண்ட மனிதர்கள் நம்மக்கிடையே உலவும் ஒரு பகுதிதான் என்பதை அவரது எழுத்துக்கள் சொல்லின. அந்த வாழ்க்கை முற்றிலும் தஞ்சை மண்ணுக்கு அந்நியமான ’கம்மஞ்சோறு’ போலவே இருந்தது.

பா.செ தொகுத்த-மொழிபெயர்த்த ‘சோசலிசக் கவிதைகள்’ என்ற உலக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் களங்கள் பற்றிய சிறு-கவிதைத் தொகுப்பு. அதை தேடி வாசிப்பதற்கு காரணமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்-கலை இலக்கிய முகமான ‘புலிகளின்குரல்’ ஏட்டில் ‘சோசலிசக் கவிதைகள்’ நூலிலிருந்து ஒரு கவிதை பிரசுரமாகியிருந்தது. போருக்குப் போகும் ஓர் கெரில்லா இளைஞன் தனது தாயிடம் விடை பெறுவதாக வரும் கவிதை அது என்று நினைவு. முதலில் சூரியதீபன் என்பது ஈழப் போராளி ஒருவர் என்றே நினைத்திருந்தேன். அந்த கவிதைத் தொகுப்பை பின்னர் தீவிரமாகத் தேடி கண்டுபிடித்து வாசிக்க அது காரணமாக இருந்தது.

பின்னாளில் அந்த கவிதை தொகுப்பு தன்னிடம் இல்லை தேடித்தர முடியுமா? என்று ஜேபி அவர்கள் கேட்டபோது, எங்கள் ஊர் நூலகத்தை குடைந்தேன். இரண்டொரு நாளில் அதைத் தேடி கண்டெடுத்தும் விட்டேன்! நகலெடுத்து, மீள வாசித்துவிட்டுப் பிறகே அதை அனுப்பிவைத்தேன். அந்த கவிதைகள் உலகெங்கும் உள்ள போராடும் மனிதர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு வாழ்க்கையின் பொதுமனமாக இருப்பதைக் காணமுடிந்தது.

‘அக்னி மூலை’ சிறுகதையை மெய்யாகவே நான் செவிவழியாகவே கேள்விபட்டிருந்தேன். அந்தச் சிறுகதைத் தொகுப்பை பின்னர் நூலகத்தில் தேடி வாசித்தபோதுதான் ஜெபியின் சிறுகதை உலகம் எனக்குள் விரிந்தது. அப்போதெல்லாம் வீட்டுத் தேவைகள், சுபகாரியங்கள் அல்லது அசுபகாரியங்கள் எல்லமே மூன்று நாட்கள் அல்லது அவரவர் சக்கதிக்கு மேல் நடப்பதுண்டு. அதுபோன்ற ஓர் உறவினர் வீட்டுத் திருமண ஓய்வில் பெரியவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவர்களது பேச்சில் ‘அக்னி மூலை’ சிறுகதையும் இருந்தது நினைவிருக்கிறது. திரைப்படங்களும்-பத்திரிகை அரசியல் செய்திகளுக்கிடையே வெகு அபூர்வமாக இது நிகழும்.

ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள் இடையேதான் ‘அக்னிமூலை’ பற்றிப் பேசப்பட்டது. உறவினர் ஒருவர் முதலில் ஜெயகாந்தன் கதை என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார். சாமியாடி பத்தி செயக்காந்தன் எப்போதாவது எழுதியிருக்காரா? என்ன என்று ஒருவர் எதிர்க் கேள்வி போட்டார். அந்த கூட்டத்தில் ‘அக்னிமூலை’ சிறுகதையை ஓர் திரைபடத்திற்கு நிகராக விவரித்து சொன்னவர்தான் அதை செயப்பிரகாசம் என்பதையும் சொன்னாதாக நினைவு. ஆக எனக்கு முதலில் பா.செவின் சிறுகதைதான் அறிமுகம் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. பின்னர் அக்னிமூலை சிறுகதையை நான் நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்தபோதுதான் அதன் முழு வீச்சைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அக்னி மூலை ஓர் முழுமையான சிறுகதை. ஒரு சாமியாடியை அதே ஆவேசத்துடன் வெளிப்படுத்தும் நிகழ் கதை. தெய்வம் மனிதன் மீது ஏறுகிறதா அல்லது மனிதன் தெய்வத்தின் மீது ஏறுகின்றானா, தெரியவில்லை. ஆனால் அசாத்தியமான நம்பிக்கைக்கு என்றே அவனுக்கு கடவுள் தேவைப்படுகிறது. அடக்குமுறையிலும், ஒடுக்குமுறையிலும் உள்ள ஒருவனின் நரம்புகளைவிட்டு அவனது இயலாமையானது ஆவேசத்துடன் வெளியேறிச் செல்லும்போது அவனது அசாத்தியத்தின் நம்பிக்கை, கோழியை நிராகரித்து மனிதனை பலி கொள்ள வைத்துவிடுகிறது. முழு நிலவின் கீழ் நிகழும் அந்த வெறியாட்டை ஜெபியின் எழுத்தில் மெள்ள விடுவிக்கப்படும் புதிரின் வியர்வைத்துளிகள் நம்மில் துளிர்ப்பதை சொல்ல வேண்டும்.

இன்றைக்கு பா.செயப்பிரகாசத்தின் ஒட்டுமொத்த சிறுகதைகளையும் வாசிக்கும்போது கரிசல் மண்ணும் அதில் கிளைக்கும் மனிதர்களும் வேறு வேறு அல்ல என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கும். மண்ணும் மனிதர்களும் மாறி மாறி நிகழ்த்தும் உணர்வுப் போராட்டங்கள் அந்நிலத்திற்கே உரியதாகும். நிலத்தில் வேர் கொண்டிருக்கும் ஓர் கரிசல் செடியாகவே மனிதர்களும் மண்ணின் வாசத்தைப் பரப்புபவர்களாக இருக்கிறார்கள். பா.செ மனிதர்களை சொல்வதன் வழி தனது மண்ணைத்தான் சொல்கிறார். மண் உருவாக்கும் மனிதர்களைத்தான் சொல்கிறார். பா.செ உருவாக்கும் பிரபஞ்ச வெளி என்பது மேல், கீழ் என சகலமும் கரிசலால் நிறைந்தாக இருக்கிறது.

வானம் பார்த்த பூமியான தெக்கத்தி கரிசல் மண் எப்போதாவது மழையை கொடையெனப் பெறும்போதே மனிதர்களும் குளிர்கிறார்கள். தரிசு பிளந்து பூமி வெடிக்கும் போது மனிதர்களும் சிதறிப் போகிறார்கள். பஞ்சம் பிழைத்தல் என்பது அவர்களை அறிவிக்கப்படாத ஓர் உள்நாட்டு ஏதிலியாக்குகிறது. இடப்பெயர்வின் சாபம் அவர்களை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. வறுமையுடனான அவர்களது போர் தொடர்ந்து அம்மண்ணை செம்மைப் படியச் செய்கிறது. பசித் தீயின் பேதமற்ற நாக்குகள் கரிசலை மேலும் சாம்பலாக்குகிறது. எனினும் கரிசல் காப்பாற்றி வைத்திருக்கும் ஈரம் தொடர்ந்து மனிதர்களில் ஊற்றெடுக்கவே செய்கிறது. பா.செ அப்பாடியான ஊற்றுக் கண்ணை திறந்து வைக்கிறார்.

வெடித்துக் கிடக்கும் கரிசல் ஊடாகப் பேனா உழுது செல்கிறது; அந்த முன்னத்தி ஏர் நகர்ந்து செல்லும் வழியில் நாமும் மண் நுகர்ந்து பின் தொடர்கிறோம். பருத்தியும், மல்லியும் விளையாத நாளில் வறுமை படரும் நிலத்தில் பசியின் வெண்சாம்பல் சுடுகிறது. மற்ற எல்லா நிலங்களையும் போன்றே கரிசல் மண்ணும் மேடும், பள்ளமாக, மேல், கீழாகப் பிரிந்திருக்கிறது. அல்லது பிரிக்கப்பட்டிருக்கிறது. வளமையின் நீர்க்கால்கள் மேட்டைப் பசுமையாகவும், பள்ளத்தை பொட்டலாகவும் வைத்திருப்பதை பா.செ-வின் எழுத்துக்கள் அறத் தராசில் நிறுத்தி உள்ளார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. வறுமையும், பசியும் ஒருசிலருக்கே வாய்த்திருப்பதை அவரது படைப்புகள் கொதிப்புடன் முன்வைக்கின்றன. வெக்கையில் வெடிக்கும் மண்ணின் வாசம் சுமந்த இலக்கியத் தகுதியைத் தானே பெற்றுக் கொள்ளும் படைப்புகளாக அவை இருக்கின்றன.
ஒரு படைப்பாளனாக, கரிசல்காரனாக, அதற்கும் மேல் மனிதனாக வாய்த்திருக்கும் ஒருவராலேயே கரிசல் படைப்பை முழுமைப் படுத்த இயலும். பா.செ-வின் கரிசல் மனிதர்கள் அவரது இதயத்திலிருந்து வருகிறார்கள். அல்லது வயிற்றிலிருந்து வருகிறார்கள். அல்லது வயிற்றுக்கும் இதயத்திற்குமான உறவிலிருந்து வருகிறார்கள். முழுத் தொகுப்புமே ஓர் காயசண்டிகையின் பெரும்பசியாகித் துடிப்பதை காணமுடிகிறது. இந்த முழு பிரபஞ்சமுமே ஏன் இப்புவி பெரு உருண்டையுமே ஓர் அசுரனின் வயிற்றைப்போல சதா பசித் தீயில் எரிகிறது; விளிம்பு நிலை மனிதர்களின் சிறு சிறு வயிறுகள். அச்சிறு வயிற்றுப் பொறியின் பெருந்தீ கரிசலின் வெக்கையை மேலும் எரித்து பொசுக்குவதைக் களமாகக் கொண்டிருக்கின்றன அச்சிறுகதைகள்.

ஒரு இரசிகன் பார்ப்பதற்கும் ஓர் போராளி பார்ப்பதற்குமான கரிசலை நான் இந்தச் சிறுகதைகளில் கண்டேன். மண்ணையும் மனிதர்களையும் நேசிக்கும் இரசிகன் அடுத்தக் கட்டமாக போராளியாகி விடுகிறான். ஜெபி சிறுகதைகளில் கதைசொலியாக ஓர் போராளியைப் பார்க்கின்றோம். ஜெபியின் கதைகள் போராட்டக் களத்திற்குரியவை. போராட்டத்தை வாழ்வாகக் கொண்டவை. போராளிகளின் கருவிகளில் ஒன்றானவை.
கரிசல் ஓர் வாழ்வு. அதை அதே கவிச்சியுடன் தருகிறார் பா.செ. கருவைப் பூவும், மல்லிச் செடியும், பருத்திப் பஞ்சாகவும் மணம் பரப்பும் விதவிதமான மண்ணின் தாவரங்கள் போன்றே விதவிதமான கரிசல் மனிதர்களை நுகரத் தருகிறார். எப்போதாவது பெய்து செல்லும் மழை போன்றே அவர்களது வாழ்வில் துளிர்ப்பு வருகிறது. பின்னர் உரிய காலத்தில் எடுக்கப்படாத பருத்திப் பஞ்சை போல அவையும் காற்றில் பறந்தலைந்து காணாமல் போய்விடுகிறது. இவை பேரரசுகளின் கதையல்ல, எளிய மனிதர்களின் அலங்காரமற்ற வாழ்வு. மண்ணுக்குள் புதைந்துபோன - எளிய சரித்திரம்.

இந்த மனிதர்கள் யார்? வெக்கை விளையும் இம் மண்ணில் எப்படி அன்பாய் துளிர்த்தார்கள்? இழப்பதற்கு எதுவுமற்ற மனிதர்களிடம் எஞ்சுவது அன்புமட்டுமே. அல்லது அன்பே உருவானவரிடம் எதுவும் எஞ்சுவதில்லை எனலாம். பசி ஓர் இரக்கமற்ற கொடிய விலங்கென கரிசல்காட்டில் எதிர்ப்படும்போதெல்லாம் அவர்கள் அன்பையும், நேசத்தையும் தமது உயிரெனக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். அல்லது எதிர்த்துப் போராடுகிறார்கள். ஒரு கோணத்தில் அவர்கள் பசியுடன் போராடுவதாகத் தோற்றமளிப்பது போல தோன்றினாலும் அவர்கள் அன்பை தக்கவைத்துக் கொள்வதற்கான, மனிதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கானப் போராட்டமாகவே அவை இருக்கின்றன. உறவுகளை கொள்ளையடித்துப் போகும் வழிப்பறிக்காரனாகவே பசி இருக்கிறது. முதலாளியின் அதிகாரத்தில் பசி ஒளிந்திருக்கிறது. சுரண்டலின் பின்னும் அதுவே இருக்கிறது. போராட்டம் அன்பின் பிறிதொரு வடிவம். வாழ்வு என்பது அன்பை ஒருவகையில் மீட்பதற்கானப் போராட்டமே. அன்பான மனிதர்களின் வாழ்வு அதனால்தான் போராட்டங்களாவே இருக்கிறது. ஜேபி அன்பைத்தான் பிறிதொருவடிவில் எழுதிச் செல்கிறார்.
கரிசலில் ஓர் களையைப் போன்று வளரும் பசியை அம்மக்கள் களைந்து வீச, வீச அது முளைவிட்டுக் கொண்டே இருக்கிறது. மண்ணின் களையாகவே பசி இருக்கிறது. அதை வீட்டு ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வேறுவழியற்று உண்கிறார்கள். பசியை அவர்கள் உண்ணும்போது பசி அவர்களை உண்கிறது. பசி அவர்களது நிழலாகவே உள்ளது என்று ஜெ.பி சொல்வது அற்புதமானது. ஆனால் இரவில் அது உறங்கப்போய்விடுகிறது. காலையில் ஓர் கடன்காரன் போல மறுபடியும் வாசலில் வந்து நிற்கிறது, கடன்காரன் சும்மா போய்விடுவதில்லை. வட்டியையும், முதலையும் கையோடு வசூலித்துக் கொண்டு போகக்கூடியவன்.

சதா பசியுடன் அலையும் மனிதர்கள். பசியுடன் போராடும் மனிதர்கள். அதனுடன் வாழப் பழகிய மனிதர்கள். அதற்கு மண்டியிடும் மனிதர்கள். பலியாகும் மனிதர்கள் என கரிசல் பசியாலான வாழ்வாயிருக்கிறது. எதைப் பற்றி எழுதினாலும் பசி முன்வந்து நிற்கும்போது வேறு எதை எழுத முடியும்! பசியோடு வாழ்ந்து, பசியோடு வளர்ந்து பசியோடு இறக்கும் மனிதர்களை வாழ்வெனும் பெரும்பசி கொன்றுபோடுகிறது. கசிசல் என்பது பெரும்பசியில் கருத்த வயிறு.

ஒவ்வொருவரும் ஒவ்வருவிதமாக எதிர்கொள்ளும் பசி பெண்களை, ஓர் காமந்தகாரனாயும், ஆண்களை அவர்களது முதலாளியாகவும், குழந்தைகளை பூச்சாண்டியாகவும், தீப்பெட்டி தொழிற்சாலையாவும் சிறுகதைகள் முழுமையும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. கரிசலை எழுதுவதாக ஜெபி எழுதியிருப்பதெல்லாம் விதவிதமான பசிகளையே. விதவிதமான கரிசலை, மனிதர்களை எழுதுவது என்பதும் ஒருவகையில் கரிசலை எழுதுவதாகி விடுகிறது.

பெருவாழ்வு வாழ்ந்த மேல்வீட்டுப் பெண்ணின் தீராப் பசியை சொல்கிறது ‘அம்பலகாரர் வீடு’. வீதியால் செல்லும் இளம் பெண்னை ஓர் இளைஞனைப் போன்று பின் தொடர்கிறது பசி. யாருமற்ற வீட்டில் ஓர் அகற்ற இயலாத ஒட்டடை போன்று அலங்காரமாக ஒட்டிக் கொண்டிருக்கிறது வறுமை. ஊறுக்கு நெல் அளந்த பொது களஞ்சியமாக நின்றிருந்த அந்த வீட்டில் யாதொருவரும் பொறுக்கிச் செல்லாத நெல் மணிகளைப்போல் கண்ணீர் சிதறி கிடக்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு பஞ்சத்தைத் தன் சாட்டையால் துரத்திச் சென்ற சாமியாடி ஓரிரவு ஊர் திரும்புகிறான். அம்மன் கொண்டாடியை கொண்டாடும் மேல் வீட்டிற்கு செல்கிறான் - அது முறை. இருள் அந்த வீட்டைச் சுற்றி கால் தடமற்ற இடத்தில் முட்செடியென படர்ந்து கிடக்கிறது. தான் வந்திருப்பதை உரக்கச் சொல்லி அவன் அழைக்கிறான். தான் சிறு வயதில் பார்த்த அந்த வீட்டின் பெண் தேவதை, தேவி இப்போது வளர்ந்து நிற்பதைக் கற்பனை செய்து கொண்டே உட்கூடம் எட்டுமாறு குரல் கொடுக்கிறான். ஆனால் அவனுக்கு ஓர் ஆணும், பெண்ணும் உரசிக் கொள்ளும் தீயின் புகை காதுகளைச் சுடுகிறது. சில வினாடிக்குப் பின் அவள் வருகிறாள். ஆடை களைந்து, நெற்றி வியர்வைத்துளிகளுடன். ஆண்களற்ற வீட்டின் ஆண் குரலும் அவளது கோலமும் நிமையை விளக்கப் போதுமானதாகி விடுகின்றன. அவளது உடலைச் சுற்றி வெள்ளைச் சேலையென வறுமை படர்ந்திருப்பதையும், கொடுப்பதற்கு எதுவுமற்றவளை காமம் தின்று துப்பிய குருதியென நெற்றி வியர்வைத் துளிகளையும் காண்கிறான். “இன்று இவ்வளவுதான் கிடைத்தது!” என்று சொல்லும் தேவியின் குரல் உடுக்கை ஒலி கேட்ட காதுகளில் நரம்பறுந்த யாழாய் ஒலிக்கிறது. தன்னிடம் இருக்கும் எஞ்சிய நெல்மணிகளை அந்த வீட்டு முற்றத்தில் வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கிறான் சாமியாடி. வறுமை ஒரு சில நாட்களேனும் அந்த கள்ள உறவைப் போல் ஓடி ஒளிந்து கொள்ளட்டும் என்ற நினைப்போ தெரியவில்லை.

எவ்வளவு நாசுக்கான வார்த்தைகளில் அம்பலகாரர் வீடு எழுகிறது. வறுமையினதும், முகமற்றவனதும் பிடியில் சிக்கியிருக்கும் தேவி போன்ற பெண்களை இன்றய எழுத்துப் போக்குகள் அங்கம் அங்கமாக அல்லவா தடவிச் செல்வதாக இருக்கும். நெற்றி வியர்வை போதாதா அவளது அவலம் சொல்ல? பசியை சொல்வதாய் கிசியை சொல்பவர்கள் இடையே பசியை பச்சையாய் சொல்வதில் ஜேபி யின் எழுத்து கொஞ்சமும் கூசுவதில்லை.

கரிசல் நிலத்தை பெண்களின் காமமும் வறுமையும், பசியும் வெடிப்புறச் செய்கின்றன. வாழ்க்கையும், வீடும் இருண்ட பண்ணின் வீட்டில் ஒளியேற்ற வரும் ஆண்மகன்கள் தொடங்கி மேலத்தெரு ஆண்கள், கீழத் தெரு வீடுட்டுப் படலையை எளிதாகத் தள்ளி திறந்துவிடுவது வரை, பெண்களின் வாழ்வு கரிசலின் கருவேல முள்ளில் சிக்கிக் கொண்ட ஒன்றாகவே இருந்துவிடுகிறது. கம்பெனிக் கொடுக்கும் பேற்றுப் பணத்திற்காகவே பிள்ளை பெற்றுக்கொள்ளும் ராமலெட்சுமிக்கு அது கிடைக்காமல் போகும் தருணத்தில் பேற்று வலியினும் மிகுதியான வலியை தாங்கிக் கொள்ள வேண்டியவளாகிறாள். பேற்றில் இறந்தாலும் மகிழ்ந்திருப்பாள் போலும். பெண்ணின் கருப்பை வரை நீண்டுச சுரண்டும் முதலாளிகளின் கொடும் கரங்களை அந்த பெண்களின் கண்ணீர் கூட சுடுவதாயில்லை.

கரிசல் பூக்கும்போது பெண்கள் பூக்கிறார்கள், கலைகள் பூக்கின்றன. கருவேலம் பூக்கிறது. அம்மன் கொடையும் கோயில் செண்டை மேளமும் பூக்கிறது. கரிசல் பூப்பதும் பெண்டிர் பூப்பதும் ஒன்றுதான். கரிசல் வெடிக்கும்போது பெண்களின் புன்னகைகூட உதிர்ந்து விடுகிறது. வெடித்தப் பருத்தியைப் போல. கரிசலின் கலை உதிர்த்துப் போன பெண்கள் தமது கலைத் தொழிலை நகரத்தில் தொலைக்கிறார்கள். கலை செழித்த உடல்களை யார் யாரோ அறுவடை செய்கிறார்கள். சொந்த மண்ணிலிருந்து பிடுங்கப்படும் எதுவும் ’வேரில்லா உயிர்கள்தானே’. உடல்கள் மட்டும் வாழும் நகரத்தை யார் நகரமென்று சொன்னது. பெண்களின் மாமிசம் நகரத்தின் சந்துகளில் மட்டுமே விற்க கிடைக்கும். கரிசல் பூக்கள் இப்படித்தான் நகரத்தின் ‘பலி பூக்களாகின்றன’.

பெண்கள் எப்போதும் தனித்து வரவில்லை. அவர்களது கைகளில் குழந்தைகள் இருக்கிறார்கள். நடக்கும் வயதில், ஓடும் வயதில் என்று விதவிதமாக. குழுந்தை அழும்போது அவர்களும் அழுகிறார்கள். குழந்தை பசியாறும்போது பெண்கள் மனம் ஆறுகிறார்கள். கையை பற்றிக் கொண்டு, அல்லது இடுப்பில் ஒன்றாக குழந்தைகள் அவர்களுடன் நெருக்கமாக முள்ளடைந்த பாதையில், இருளடர்ந்த வேளைகளில் செல்ல வேண்டியிருக்கிறது. எந்த நேரத்திலும் பிள்ளைப் பிடிப்பவன் போல பசி அவர்களை தூக்கிச் சென்றுவிடலாம். குழந்தைகள், பெண்களின் கனவுகளில் பசியரக்கன் விண்ணளவு உயரத்தில் நிற்கிறான். நகம் வளர்த்த கைகளால் அவர்களின் கண்களை குத்துவதற்கு முயல்கிறான். குழந்தைகள் இரவில் வீறிட்டு அழுகின்றன. சிறுவர்களின் டவுசர் பையின் தேசையைப் பசி, ஒரு திருடன் போல எடுத்துச் செல்லப் பார்க்கிறது. அவர்கள் அரணாக் கயிற்றை டவுசருடன் சேர்த்துத் தூக்கத்திலேயே இழுத்துவிட்டுக் கொள்கிறார்கள்.

சிறுகதைகள் எங்கும் பசி ஓர் பஞ்சுமிட்டாய்காரன் போல பையன்களிடம் ஆசை காட்டுகிறது. அடம்பிடிக்க வைக்கிறது. சமயத்தில் அடிவாங்க வைக்கிறது. குழந்தைகளை சமாளிக்கத் தெரியாத பெண்கள் வக்கற்று இரவை வெறிக்கிறார்கள். அடுப்பிற்கு அருகில் இருப்பதாலோ என்னவோ பசியின் முழு தகிப்பையும் உணர்பவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள்.

ஜேபியின் சிறார்கள் வெயிலை உண்பவர்கள், தொலைக்க இயலாத துயரங்களை கரிசல் நிலத்தின் விளையாட்டுக்களில் ஒன்றாக மாற்றி விளையாடத் தெரிந்தவர்கள். பசி அவர்களுடைய இணைபிரியாத் தோழனாக இருக்கிறது. அதனுடன் அவர்கள் கண்ணாமூச்சியாடக் கற்றிருக்கிறார்கள். கம்மாக் கரைகளில், காடு கரைகளில் கோரைக்கிழங்கும், தப்புச் செடியின் தானியங்களும் பொறுக்க கற்றிருந்தார்கள். போணிகளில் அடைத்து யாதொருவருக்கும் தெரியாமல் தூக்கிச் சொல்லக் கற்றிருந்தார்கள். பசி ஓர் பிச்சைகாரனைப் போன்று சமயத்தில் நண்பனைப் போன்று அவர்களிடம் கெஞ்சிக் கொண்டும், மிஞ்சிக் கொண்டும் இருந்தது. அதற்காகவே அவர்கள் தமது டவுசர் பைகளில் தோசை மீதங்களை பத்திரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘தோசை’ அவர்களது விருந்தாளி வீட்டுப் பையன். பசி நீண்ட நாள் நண்பன்.

பசி புத்தகப்பையை பெருஞ்சுமையென ஆக்குகிறது. ‘சாருடன்’ பேசிக் கொண்டிருக்கும் ‘டீச்சரை’ காட்டிக்கொடுக்கச் செய்கிறது. கம்மஞ்சோறும் இல்லாத செத்த நாக்கில் சரஸ்வதி மட்டும் வாழமுடியுமா? பசித்த நாக்குக்கு பழையதும் அமிர்தம். வீட்டையும், ஊரையும் பள்ளியையும் துறந்து சித்தியுடன் செல்லும் சிறுவனுக்கு ‘சேவு’ கனவாக இருப்பதில் என்ன இருக்கமுடியும். பசித்தவன் கனவில் பதுமைகள் ஒருபோதும் வருவதில்லை. பள்ளிக்கூடம் எங்கும்தான் இருக்கிறது. மூக்குப்பொடி வாங்கிவரச் சொல்லும் வாத்திகளும், அ,ஆ,இ,ஈ-யும், பிரம்படியும் எங்கும்தான் இருக்கிறது. சேவு அப்படியல்ல. சேவுக்கு ஊறும் நாக்கில் சரஸ்வதி எங்ஙனம் ஊற்றெடுப்பது!

தாயம்மாவின் பிள்ளைகளை பசி ஓர் நகரத்து ’யாவாரி’ போல நின்று கேட்டது. அவள் மேலவீட்டு முதலாளியைப் போல விரட்டி அடித்துக் கொண்டிருந்தாள் அதை. கங்கையை கமண்டலத்தில் அடக்கும் குட்டை முனியென போகணிக்குள் பசியை அடக்கி பிள்ளைகளிடம் தருவாள் அவள். மதிய உணவு பள்ளிகளில் அறிமுகப்படுத்திய நாளில் அரசாங்கம் போடும் சாப்பாடு தர்மசாப்பாடு அவளது கிழிசலையும், இழிசலையும் சொல்லாமல் சொல்வதாக நினைக்கிறாள். வெவரம் தெரிந்தால், காமராசர் சோத்தை போடுவதற்குப் பதிலாக தன்மானத்தை போடலாம் என்று சொல்லியிருப்பாள். உழைக்காமல் வரும் கம்மஞ்சோற்றை வீட்டு நாயிக்கும் உதறமாட்டாத பெண்கள் இருந்தார்கள். “ஒருத்தங்கிட்ட நீங்க பிச்சை எடுத்து பாக்கறது இந்த உசிர் தரிக்காது பிச்சைய்யா” என்ற தயாம்மாவின் பேரப்பிள்ளை வேண்டுமானல் பிச்சைய்யாவாக இருக்கலாம்; அது தன்மானப் பிச்சை. உழைப்பில் வரும் தன்மானம் வியர்வையினும் பெரிதாய் இருந்தது. நெகிழிப் பைகள் தன்மானத்துடன் சேர்த்து காற்றில் பறக்கும் காலத்திலும் பார்க்க, மீன் வாங்கும் ஒமல் கொட்டானைக் கூட மீன்காரன் இலவசமாய் தருவதை ஏற்கமாட்டார்கள் எங்கள் பாட்டன்கள்.
இன்றைக்கு இலவசங்களை கொடுத்து தன்மானத்தைப் பறித்துக் கொண்டதை பார்க்கிறோம். இலவசங்கள் எங்கும் கிடைக்கின்றன. தன்மானம் அப்படி கிடைத்துவிடுவதில்லை. தன்மானம் பறிக்கப்பட்டவர்கள் முதுகெலும்பற்ற புழுவைப் போல ஊர்ந்து சென்று, இலவச அரிசிக்கும், வேட்டி சேலைக்கும் வரிசையில் நிர்கிறார்கள். அரசு சாராயக் கடைகளிலும், இலவசப் பொருட்கள் வழங்குமிடங்களிலும் ‘விலையில்லாமல்’ தன்மானத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கால்களும், கைகளும் இயங்கும்போதே முடமாக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.

பசியும், பசிப்பதும் இயற்கை அது அப்படியே இருக்கவிட்டிருப்பது அரசியல். கரிசலின் மண்ணையும் மக்களையும், பயிர்பச்சைகளையும் வேறோடு சுரண்டுகிறார்கள். நெல்லை எடுத்துக் கொண்டு உமியைத் தருவது போல, சின்ன மீனும் பெரிய மீனும் விழுங்கும் ஒப்பந்தங்களை தொழிலாளிகளுடன் போட்டுக் கொள்கிறார்கள். உயர்ந்து நிற்கும் ஆலைகள் அவர்களது குருதியை உறிஞ்சிக் கொண்டு வறுமையைத் தருகின்றன. ஆலைகளின் வேலிகள் முதலாளி- தொழிலாளி வேலைப் பிரிவினையைத் தெளிவாகப் பிரித்து வைக்கின்றன.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் நகரத்தின் சதுக்க பூதமென எழுகின்றன. பிறக்கும் குழந்தைகள் தவிர்த்து அவை மற்றெல்லா பருவக் குழந்தைகளையும் பலியென கேட்கின்றன. தனது கந்தக வாயால் தின்று ஏப்பமிடுகின்றன. கந்தகத்தைத் தீப்பெட்டியில் அடுக்கும் வித்தைத் தெரிந்த குழந்தைகள் தாயின் வயிற்றிலேயே விரல் பிரித்துக் கொள்கின்றன. கந்தகப் பூமியில் பிறந்த அக்னி குஞ்சுகள், கந்தகத்திடையே பிறந்து, கந்தகத்திடையே பூப்பெய்தி, காதல் செய்து தொடர்கின்றன. லேபிள் ஒட்டப்படாத வாழ்வு. குழந்தைமையைத் தீப்பெட்டிக்குள் அடைத்துவிடும் குழந்தைகளுக்கு அவை சவப்பெட்டிகளாகவே இருந்துவிடுகின்றன. குழந்தைத் தொழிலாளர் பற்றிய பா.செவின் பார்வை பட்டாசில் பற்றிய நெருப்பென வெடித்துச் சிதறுகிறது. கரிசலின் மொட்டுகள் பசியின் பெயரால் ஒவ்வொரு நாளும் கருகிப்போவது கொடுமை. ஒவ்வொரு தீக்குச்சியும் பற்றி அணையும்போது ஓர் அடுப்பு எரியத்தான் செய்கிறது. தீ-யினால் சுட்ட புண் ஆறிவிடும் உள்ளாறாது தளிர்க் கைகள் செய்த தீக்குச்சி, தீ-குச்சி என்று புதுக் குறள் தோன்றுகிறது.

சேரிகளின் பசிப் பிணியைப் போக்க தெய்வங்கள் அவர்கள் மீது வந்து இறங்குகின்றன. பலிகளும், கொடைகளும் ஏற்கின்றன. கேட்கின்றன. எனினும் எந்த்த் தெய்வத்தாலும் அவை பலியேற்கும் கோழியின் குருதியைப் போல சனங்களின் பசியை உரிஞ்சி குடித்துவிட முடிவதில்லை. சுடச்சுட வறுமையை, அக்னிச் சட்டியைப் போல அவை ஏந்திக் கொண்டு விடுவதுமில்லை. மேலும் தெய்வங்களுக்கு மேல், கீழ் இருப்பதில்லை. மேலை வீட்டு ஆண்கள் இரவில் தொடவிரும்பும், தீண்டப்படக்கூடாத தையிலியின் உடலை தெய்வம் தீண்டுகிறது. என்ன நடக்கும்? பா.செ தனக்கேயுரிய எள்ளலுடன் அதை சூடத்தை ஏற்றி நாக்கில் வைக்கும் சாமியாடியின் செயலைப்போல நொடியில் விவரித்துவிடுகிறார். “பெண்கள் ஒரு கனம் பள்ள வீட்டு சாமியை கையெடுத்து கும்பிட்ட பின் ஒரு பள்ள வீட்டு சாமியாடியைக் கும்பிட்டதை உணர்ந்து கையை கீழே போட்டார்கள்!”(பக்-326).( தாலியில் பூச்சூடியவர்கள்)

நாட்டார் தெய்வங்கள் பல சாதியற்றவை. சாதியை கடந்து செல்பவை. ஆனால் அவற்றால் சாதியை ஒழிக்கும். பசியை ஒழிக்கும் எந்த வரத்தினையும் தரமுடிவதில்லை. தெய்வம் எளிதாகத் தீண்டும் தைலியை, தீண்ட இயலாதவர்களின் சாபம் தெய்வத்தினும் பலிப்பதாய் இருக்கிறது. ஆனால் தெய்வத்தால் ஆகாதது தைலியால் முடியும். இன்றில்லாவிட்டாலும் என்றாவது.

கரிசல் பெண்கள் சதாவிடும் கண்ணீர் ஓர் நாள் கரிசலை பூக்கவைக்கத்தான் போகிறது. ஊர்க் குடிசை எரிக்கும் வறுமையை, பசியை இவர்கள் கண்ணீர் ஒரு நாள் அணைக்கத்தான் போகிறது. வறுமை ஓர் பூனைபோன்று நுழைந்து படுத்திருக்கும் அவர்களது அடுப்புகளில் பசித் தீயை அணைக்கும் தீ ஒன்று தன் செந்நாக்குகளால் அடுப்பின் இருளை விரட்டத்தான் போகிறது.

ஒரு நடுத்தர வர்க்கத்து பெண்ணின் கண்ணீரைச் சொல்லும் ‘இரவுகள் விடியும்’ ஓர் முக்கியமான சிறுகதை. ஒரு பெண் கணவனை இழக்கும்போது மட்டுமல்ல அவளது ‘உரிமைகள் எப்போதெல்லாம் பறிபோகிறதோ அப்போதெல்லாம் விதவையாகிறாள்’ என்ற ஜெபியின் இந்த வரிகளே அந்த கதையைச் சொல்லப் போதுமானது. என்பதுகளின் கல்லூரிக் காலங்கள். சமூக அமைப்பு என்பதனூடாக பெண்சித்திரம் வரையப்படுகிறது. காலங்கள் மாறினால் என்ன? அவள் விதவையாகும் தரும் கூடிக்கொண்டுதான் போகிறதே தவிர குறைந்தபாடில்லை. நேற்று புடவை. இன்று சுரிதார் அவ்வளவே. ஆனால் இன்று அவளை யாதொருவரும் விதவை யாக்குவதில்லை. அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன; ஆகையால் ஒரே அடியாகப் படுகொலை செய்துவிடுகிறார்கள். கவுரவக் கொலை. அல்லது ஆணவக் கொலை. ஆளுக்கொரு கத்தியை நாக்கில் வைத்திருக்கும் யாதொருவரும் அவளை வார்த்தைகளால் படுகொலை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். கத்தியின்றி ரத்தமின்றி படுகொலை நடந்து கொண்டுதானிருக்கிறது. பெண் படுகொலையாகும் தருணங்கள் என்று இன்றைக்கு எதையும் யோசிக்கத் தோன்றவில்லை. அவள் எதிர்ப்படும் போதெல்லாம் அது நிகழ்ந்துவிடுகிறது. சுயம் பறித்தெடுக்கப்படும் ஒவ்வொரு பெண்ணும் அவளாகவே வாழ்ந்து மடிய வேண்டியவளாக இருக்கிறாள். அதிகாரமற்ற அன்புடன் ஒரு அபூர்வமானத் தருணத்தின் ’செல்பியை’ அவளுடன் எடுத்துக் கொள்ள முடிகிறதா என்று பார்க்கலாம்.

ஜேபி-யின் கதைகளில் இழையாகச் செல்லும் தொடர் வண்டிகளையும், தண்டவாளங்களையும் காணலாம். கதை நிகழ்களத்தின் சாட்சியாக அவை இருக்கின்றன. பல முகமற்ற மனிதர்களின் கதைகள் காலடித்தடம் போல இருப்புப் பாதைகளுடன் ஓடி வருகின்றன. பார்க்க அலுக்காத ரயிலைப் போல வாசிக்க அலுக்காதவை ரயில் பற்றி வரும் கதைகளும் சித்திரங்களும். ஜேபி சொல்வது துருப்பிடித்த அதிகாரத்தின் அத்துமீறலை. எளிய மனிதர்கள் மீது அவர்கள் செலுத்தும் இரும்பினாலான ஆயுதமாக இரயிலதிகாரம் , இரயில்வே துறைசார் அதிகாரம் இருப்பதை. ஒன்று இரயிலுக்குள்ளும், பிறிதொன்று வெளியிலுமாக நிகழ்கிறது, மனிதனுக்கு அதிகாரத்தை கொடுப்பதன் வழியாக அவனை கருணையற்ற இரும்புத் துண்டாக மாற்றிவிடுகிறோம். இரும்புத் துண்டுகள்தான் ஆயுதங்களாக மாற்றப்படுகின்றன. ஆயுதத்திலிருந்துதான் எல்லா அதிகாரங்களும் பிறக்கின்றன. தொடர் வண்டிகள் தொடர்க்கதைகளாவது இப்படித்தான்.

மொழியை முதுகு சொரியப் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். ஜேபி தனது மொழியை வேறு எவரையும் விட காத்திரமான விவரிப்பின் வழி அவற்றை அதிகாரத்திற்கெதிரான, ஒடுக்குமுறைக்கு எதிரான வலிமையான சொல்லாக, உரையாடலாக நிறுத்துகிறார். ஒரு கதை சொல்லியின் பணி வெற்று கதையாடல் அல்ல. கதையாடல்களில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதே. வெற்றிடம் என்பது உயிரற்றது, சீவனற்றது. ஜேபியின் எழுத்துக்கள் உயிர்ப்பையும், சீவனையும் கதைகளுக்குத் தரவல்லவை.

- இரா.மோகன்ராஜன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

துயரங்களின் பின்வாசல் - உமா மோகன் கவிதைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்