பேராசிரியர் பிரபா.கல்விமணி - தோழமையின் தொடக்கம்


தாயின் கருப்பையில் தலித் குழந்தை பாதுகாப்புடன் இல்லை. கர்ப்பப்பையிலுள்ள ஓருயிரின் பாதுகாப்பு இன்னொரு உயிருடன் கொளுவப்பட்டு, பெரிய உயிரால் சின்ன உயிர் பேணப்படுகிறது. பெரிய உயிருக்கே உடல்நலம் காக்க முடியாத மண்ணில், கர்ப்பத்துக்குள் வளரும் தலித் உயிர் எந்த ஆதாரத்தில் உரம்கொள்ளும்? புறவெளியில் எந்த ஆதாரங்களும் அதற்கு இல்லை.நிலம், நீர், கல்வி, வேலை, வருமான ஆதாரங்கள் அழிக்கப்பட்ட பூமியில் விழுகிறது. வாழ்வுக்கான ஆதாரங்கள் அனைத்தும் மாட்டுப்பட்டுள்ள மேலாண்மை சாதியினரை நம்பி அவ்வுயிரின் ஒவ்வொரு மூச்சுக்காற்றும் இயங்குகிறது.

அவர்கள் உழைக்கத் தயாராயிருக்கிறார்கள். நிலம் இல்லை. தலை சாய்க்க இடம் தேடுகிறார்கள். மனை இல்லை. தொழில் செய்யக் கரங்களுண்டு. அவர்கள் எல்லாவற்றுக்கும் தயார். மேன்மக்கள் எதையும் கொடுக்கத் தயாரில்லை.

கார் உற்பத்தி ஆலைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மின்னனுப் பொறிகளின் வளர்ச்சி என்ற நவீன பிரம்மாண்டங்கள் எதிலும் அவன் பொருத்தப்படவில்லை. பிரமாண்டங்களை உருவாக்கும் கடைக் கோடி கூலியாக அவன். அல்லது எங்கோ ஒரு சில்லுண்டித் தொழிலாளியாய் நிற்கிறான்.

இந்நிலையில் அவனுக்குரியவையாக எழும் குரல்கள் சந்தேகத்துக்கு உரியவையாகின்றன. அவன் இந்த முகங்களை நம்பிக்கையற்றவனாய்ப் பார்க்கிறான். இந்த முகங்களிலிருந்து உதிரும் சொற்களுக்குள் உள்ள இதயங்களைத் தேடுகிறான். அவை அவ்னுக்கானவை அல்ல. தீண்டக்காதவர்களுக்காக தீண்டுபவர்களின் குரல், சாதியற்றவர்களுக்காக சாதியினரின் கரம், ஒடுக்கப்படுபவருக்காக ஒடுக்குவோரின் காருண்யம் எல்லாமும் ஏமாற்று வேலைகளாக உண்மைகாண முடிகிறது. கருப்பின மக்களின் விடுதலைக்காக வெள்ளை இனம் பாடுபடுவது, பெண்களின் விடுதலையை ஆண்பேசுவது போன்றனவும் அவனுடைய பார்வையில் இத்தகைய போலியான பாவனைகள்.

அடிமை நிலைக்கு எவர் காரணமோ அவர்களே விடுதலையையும் பேசுவது ஒரு தந்திரமாகவே கருதப்படும்.

அடிமை கொள்ளப்பட்ட மனங்களிலிலிருந்து பிரவிகித்து வரும் விடுதலைக் கருத்தியல் சுயமானது. அழுக்கில்லா சுயம்புவானது. அடிமைப்பட்டவரின் உணர்வு நிலையில் தன்னை நிறுத்தி விடுதலைக்கு முன்னிற்கவரும் ஒருவரை எவ்வாறு அடையாளம் காணபது?அவர் தலித் அல்லாதவராக இருப்பின் என்னும் கேள்வி அர்த்தமுள்ளது.

இங்கு தலித்துக்களை தலித்துகள் அல்லாதோர் அங்கீகரிக்கிறார்களா என்பதல்ல முக்கியம். தலித் அல்லாதோரை தலித்துகள் அங்கீகரிக்கிறார்களா, தனதாளாக ஏற்கிறார்களா என்பதுதான் முக்கியம்.

பேராசிரியர் கல்யாணி என்ற பிரபா கல்வி மணிக்கு இது சாத்தியமாகியிருக்கிறது. நீரை நீர் அடித்து விலகாது; ஒன்றுபடக் கலக்கும். இந்தக் கலப்பு இருவருக்கும் எளிதாகியிருக்கிறது.

ஆயிரத்திலொன்றாய் நடக்கிற இந்த ஏற்பு - ஆயிரக்கணக்காய் நடக்கும் சமுதாயமாக மாற வேண்டும். நடக்கும் என்பதின் சமிக்ஞையாக, பேரா.கல்விமணி திகழ்கிறார்.

முகமில்லாத மனிதன் இருக்க முடியுமா?

இருக்கிறான் அவன் இன்றைய சமகால மனிதன்.

என்னென்ன உயரங்களுண்டோ அத்தனை உயரங்ளையும் கபளீகரம் செய்ய எண்ணுபவர்களுக்கு ஒருமுகமும் இல்லை. மனிதன் என்னும் இருக்கிற முகத்தையும் தொலைத்து விடுகிறான்.எந்த உயரத்தையும் தன் செயல்களால் தொட்டு விடுகிற முயல்கிறவருக்கு ஒரேயொரு முகம்தான் உண்டு - போர்க்குண முகம்.

முகமற்ற மனிதர்களுக்குள் போர்க்குண முகத்தோடு நடைபோடுகிறவர் பிரா.கல்விமணி.

வாயால் வாழுகிறவர்களின் பூமி இது; வாயால் எவ்வளவுக்கு உழுகிறார்களோ, அந்த அளவுக்கு மகசூல். அறுவடை காணுகிற காலமிது. இதயத்தால் வாழ்வது முற்றிலும் அற்றுப் போயிற்று. ’புத்தகங்களைச் சுமந்து பொய்கள் பிதற்றுவீர்’ என்ற சித்தர்தம் கூற்றுக்கு உதாரணமாகிப் போனோம்.

வாயால் வாழுகிற கூட்டத்தில் பலர் சிந்தனையை விற்பவர்கள். இவர்கள் வார்த்தை வியாபாரிகள். சில்லறை சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்கிறார்கள். ஒருவன் தன் சிந்தனைகளை கற்பனை, புனைவுகள் நார் கோர்த்து, அலங்கரிப்பாக்கிச் செய்கிறானோ அந்தளவு பேரும் பெற்றுவிடுகிறான்.

தமிழகத்தில் படு ஜோராக நடப்பது கல்வி வியாபாரமும் பேச்சு வியாபாரமும். அறிவை ஆற்றலை தமிழ்ப் புலவர்கள், பேராசிரியர்கள் விற்பனையாக்கிப் பொருள் சேர்த்தார்கள். அறிவை விற்பனை செய்வதில் என்னதவறு என்றார்கள். அறிவை விற்பனை செய்யும் வியாபாரிகள் மத்தியில் அவர் இல்லை.

மேற்கோள் வாசகங்களால் வகுப்பறையை நிரப்புகிறவர்கள் பேராசிரியர்கள் என்ற பொதுவான கருத்து: அவர் அப்படிச் சொன்னார், இதில் இப்படிச் சொல்லபட்டிருக்கிறது என்று மேற்கோள்கள் இல்லாமல் எந்தப் பேராசிரியரும் மேடைப் பேச்சாளரும் பேசுவதில்லை. தான் ஆகப்பெரிய சிந்தனையாளன் என்று காட்டி எதிரில் இருப்பவர்களை அச்சுறுத்த மேற்கோள்கள் பயன்படுகின்றன.

மேற்கோள் வாசகம் உதிர்க்காத, இல்லாத ஒரு பேராசிரியர் கல்விமணி. தானே ஒரு மேற்கோளாக வாழ்ந்து வருபவர். சொல்லால் காலம் கடத்துகிற ஆசிரியர்கள் கூட்டதில் சொல் ஒதுக்கி செயலால் வாழ்ந்து காட்டுகிறவர் பேராசிரியர் கல்விமணி.

ஆகாயத்தில் கீழிருக்கிற எதுவொன்றும் புனிதமானதல்ல. புனிதம் பூமிக்குள் புதைபட்டு விட்டது. மானுட உயர்வுக்கு உயிரான கல்வி - இன்று ஒரு வியாபாரம். கல்வியை சூதாட்டமாக ஆக்கி சம்பாதிக்க இவர்கள் தயங்கவில்லை. அது இவர்களுக்கு இனிப்பானது.

கல்வியை பிள்ளைகளுக்குத் தரவேண்டிய பொறுப்பில் இருக்கிற ஆசிரியர்களே தனிப்பயிற்சி (Tuition) என்று வீட்டுக்கு வரச்சொல்லி அல்லது ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து நடத்தினார்கள். தனிப்பயிற்சிக்குச் சென்றால்தான் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற முடிவுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டார்கள். வகுப்பில் பாடங்களை ஒழுங்காக நடத்தாமல் தன்னிடம் தனிப்பயிற்சி பெற்றாலே வெற்றி என்று மிரட்டுகிறவர்களாக ஆனார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் மாணவர்களைத் தனிப்பயிற்சிக்கு கட்டாயப்படுத்துபவர்களாக ஆசிரியர்கள் மாறிப் போனார்கள்.

இந்த ஆசிரியர் வரிசையில் பேராசிரியர் கல்யாணி இல்லை.

மக்கள் கல்வி இயக்கம் தொடங்கினார்; ஆரம்ப களமாக அவர் ஆசிரியப் பணியாற்றிய திண்டிவனம் அமைந்தது.

கல்விக் கொள்ளையரை எதிர்த்த போதே ஆசிரியர்களின் தனிப்பியற்சி சீரழிவை எதிர்த்தும், சீர்கேடுகளை எதிர்த்த போராட்டமாகவும் மக்கள் கல்வி இயக்கம் உருவெடுத்தது. இன்று அதனின் உச்சமான உன்னதமிக்க செயலாக திண்டிவனத்தில் தாய்த்தமிழ்ப் பள்ளி இயங்கி வருகிறது. வணிகமயக் கல்விக்கும், ஆங்கிலவழி வகுப்பறைகளுக்கும் ஒரு அறைகூவல் விட்டபடி எழுந்து நிற்கிறது பள்ளி.

குழு மனப்பான்மையிலிருந்து தன்னை முற்றாய் விலக்கிக் கொண்டவர் கல்விமணி.

குழு மனப்பான்மை பொல்லாதது. ஒரு சார்பான சிந்தனை, செயல் என்னும் பாழுங் கிணற்றில் தளிவிடுவது அது. பிரச்னையில் நியாய அநியாயம் பார்க்காமல். சரி தவறு பார்க்காமல் குழுவின் நடவடிக்கையே சரி என்று பார்ப்பது அது. சாதியாக, மதமாக, கட்சியாக,நிறுவனமாக இயங்கும் எல்லாமும் குழு மனப்போக்கு.

தன் சார்ந்த அனைத்துச் செயல்பாடுகளும் சரியானவை என்ற குழுச் சிந்தனையில் பேராசிரியர் கல்விமணி இல்லை. தனக்குச் சரியென்று படுவதை ஒரு குழுவின் முடிவுகளுக்கு எதிரானதாக இருந்தாலும் முன் வைத்தார்.

2

"நான் பயந்த சுபாவமுள்ளவன். போலிஸ், அடிதடி என்று வந்தால் பயப்படுகிறவன். பழங்குடி இருளர் மத்தியிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும் பணி செய்ய ஆரம்பித்த பின்னர், இந்தப் பயம் மெல்ல மெல்ல என்னை விட்டுப் போனது. தாழ்த்தப்பட்டவர், ஒடுக்கப்பட்டவருக்காக பணியாற்றுதல் ஒன்றே பயம் நீக்குவதற்கான பயிற்சியாக ஆனது" - பேராசிரியர் கல்விமணி குறிப்பிட்டார்.

போலீஸா, வழக்கா, நீதிமன்றமா வந்துபார் என்று எதிர் கொள்ள ஆரம்பித்தார். அவருக்குப் போராட்டத் துணிவை வழங்கியதே இந்த தாழ்த்தப்பட்டவர்கள் தான். தீவிரவாதி என்ற மகுடத்தைசூட்டி விட எப்போதும் காத்திருக்கிறது போலீஸ். அவர் மேல் பதியப்பட்ட சதி வழக்குகள் முனை முறிந்து கீழே விழுந்தன.

தலித்துகளுக்குள்ளும், பழங்குடி இனத்துக்குள்ளும் உள்ளிறங்க உள்ளிறங்க அவரை அவர்கள் அங்கீகரித்தார்கள். அவர் அவர்களானாதும் அவர்கள் அவரானதுமான புதிய சமநிலை வாய்ப்பாடு நிகழ்ந்தது. இது சிலருக்கு மட்டுமே, சில போராளிகளுக்கு மட்டுமே வாய்ப்பது.
தலித் விடுதலை தனியே இல்லை.
தலித் இல்லாமல் விடுதலை இல்லை.
- இது தலித் விடுதலைச் சிந்தனையாளர்கள் மனசில் கொள்ளவேண்டிய வாசகம். ஒருவருக்கொருவர் துணையாயும் ஒருவரையொருவர் சார்ந்தும் அமைவது விடுதலை. அடிநிலை மக்கள் இல்லாது அந்த விடுதலை சாத்தியமில்லை: அடிநிலை மக்களின் விடுதலை துணையாய் நிற்கும் சக்திகள் இல்லாமல் சாத்தியமில்லை.

தலித் விடுதலையை முன்னெடுக்கிறவரான கல்விமணி என்னைக் கெளரவியுங்கள் என்று கேட்கவில்லை. கேட்க மாட்டார், கேட்டால் அவர் கல்விமணி இல்லை.

'நான் பாராட்டப்படுகிறேன் எல்லோரும் வாருங்கள் தோழர்களே' என்று அவர் எவரையும் அழைக்கவில்லை. அவர் அழைக்க மாட்டார். அழைத்தால் அவர் கல்வி மணி இல்லை.

தன்னைப்பற்றிப் பேசாத தகுதி அவருடையது! தகுதி படைத்தவர்கள், தகுதி படைத்தவருக்கு விருது வழங்குகிறார்கள். முன்னர் விடுதலைச் சிறுத்தைகளால் அவருக்கு வழங்கப்பட்ட அம்பேத்கார் சுடர் என்ற விருது அதற்கான தகுதிகொண்டவர் என்பதின் அடையாளம். மக்கள் உரிமைப் போராளி பி.வி.பக்தவத்சலம் நினைவாய் இன்று வழங்கப்படும் சமூகப் போராளி விருது - தகுதி படைத்தவருக்கு விருது வழங்குகிறார்கள் என்பதின் இன்னொரு அடையாளம்.

ஒருவரோ, ஒரு குடும்பமோ, ஒரு மக்கள் கூட்டமோ, ஒரு இனமோ, ஒரு நாடோ விடுதலைக்குப் போராடுகிறபோது ஆதரவுக் கரங்களை ஒன்று சேர்க்க வேண்டியுள்ளது. தன்னைச்சுற்றியும் தனக்கு அப்பாலும் இயங்குகிற தோழமைச் சக்திகளின் ஆதரவும் வேண்டப்படுகிறது. இன்றைய நாட்களில் சர்வ தேசத்தின் ஆதரவுக் குரலும் தேவைப்படுகிறது.

கிடைப்பது ஒரு துளி தோழமை என்றாலும் விரல் இடுக்குகளில் ஒழுக விட்டு விடக்கூடாது. விடுதலைக்கு எந்தக் கரங்கள் உயருகிறதோ அந்தக் கரங்கள் தோழமைத் துளிகளைச் சேகரிக்கிற உள்ளங்கைகளையும் கொண்டிருக்க வேண்டும். பி.வி.பி நினைவேந்தர் நிகழ்வில், இத்தகைய ஒரு தோழமையை அடையாளம் கண்டு கரம் இணைத்துக் கொள்வதில் நாம் கம்பீரம் கொள்கிறோம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?