மறுபடி துளிர்விடும் புயல் விருட்சம்


அரிச்சலாக ஞாபகம் இருக்கிறது.

‘உலகங்கள் வெல்லப்படுகின்றன’ என்ற சிறுகதைத் தொகுப்பு என் கையில்:
அது ஈழத் தமிழ் எழுத்தாளர் எழுதியதா அல்லது இங்குள்ள எழுத்தாளருடையதா என்பது அப்போது எனக்குத் தெரியாது. மொழி நெருடியது. புரிதலுக்குரிய சொற்களேயாயினும், சொற்கோர்வைக்குள் தீக்கடையும் கோல் சுழன்று கொண்டிருந்தது; பேனாவுக்குள் நெருப்பு ஊற்றி நிறைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது.

‘பஞ்சமர்’ நாவலை 75-76 வாக்கில் படித்தேன். அப்போதும், அவரை நான் நேரில் தெரிந்திருக்கவில்லை. ஒருவரை இன்னொருவர் தொட, ஆள் அருகிருக்க வேண்டியதில்லை; எழுத்துக்கள் அருகாமையாகிவிடும்.

மக்களைத் தொட எவ்வளவு தேவையோ அவ்வளவு, மக்கள் எழுச்சி பெற எந்த அளவு கலையம்சங்கள் வேண்டுமோ அந்தளவு, என்ன விசை கொடுக்க வேண்டுமோ அந்த வேகத்துடன் அந்த நாவல் எல்லோரையும் தைத்திருக்கிறது. அது போல தைத்தது என்னையும்.

1981 ஒரு அக்னி நட்சத்திர காலம்.

மக்கள் கலாச்சாரக் கழகம் - குழந்தை நடைபயின்ற நேரம். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பழைய நூலகத்தின் மாடியில் நூலகரின் துணையுடன், மக்கள் கலாச்சாரக் கழகத் தோழர்கள் பதினைந்து, இருபது பேர் அவருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடன் எப்போதும் உடனிருக்கும் விரி இளங்கோவனும் ஈழத்திலிருந்து வந்திருந்தார்.

இரவு 11 மணிக்குக் கூட்டம் முடிந்து தோழர்கள் திரும்பினோம்; எத்தகைய ஒரு இலக்கியப் போராளியைச் சந்தித்துவிட்டோம் என்ற பெருமிதம் எம் முகம் முழுசும் ஓடியது.

1986, மார்ச் 23.

தோழர் டேனியல் இறந்துவிட்டார்.

தன் காலத்தின் மீது சுவடு பதிக்கும் படைப்புகளைத் தந்தவர் இந்த உலகிலிருந்தே விடை பெற்றுக் கொண்டார்.

மரணம் வருகிற வேளையிலும், அவரது பேனா எதிரிகளை நோக்கி குறிவைத்துக் கொண்டிருந்தது. அரசியலிலும், இலக்கியத்திலும் எதிரி வர்க்கத்தை நோக்கி உயர்த்திய போர்க் கொடியை அவர் இறக்கிற வேளையிலும் கீழே இறக்கவில்லை. கடைசி நேரத்திலும் அவர் போர்க்கள ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். கானல், பஞ்ச கோணங்கள். தண்ணீர் போன்ற நாவல்கள்தான்.

மக்களின் எதிரிகளை நோக்கி, கடைசிவரை களத்தில் போராடி மடிவது வீரமரணம் என்றால் டேனியலுடையது வீரமரணமே! எழுத்திலும் எண்னத்திலுமாக அவர் இருந்தார்.

செங்கொடி போர்த்திய உடலுடன், மனிதகுல விடுதலைக்கான முழக்கங்களுடன் தஞ்சைத் தோழர்கள் அவரை அடக்கம் செய்திருக்கிறார்கள்.

அவருடைய நாவல்கள் அச்சேறுவதைப் பார்வையிடவும், கண்பார்வைக் குறைவு, நீரழிவு நோய்களுக்குச் சிகிச்சை பெறவும் அவர் தமிழகம் வந்தார். உற்ற தோழனாய் தோழர் இளங்கோவனும் எப்போதும் உடனிருந்தார். தஞ்சையில் தோழர் அ.மார்க்சின் இல்லத்தில் தங்கி, பொதிய வெற்பன் போன்ற தோழர்கள் துணைதர பணிகளை மேற்கொண்டிருந்தார்.

மார்ச் 23-ஆம் தேதி, பிற்பகல் ஒரு பஸ்ஸில், செ.கணேசலிங்கனைச் சந்தித்தபோது சொன்னார், “டேனியல் இறந்துவிட்டார். இப்போதுதான் தஞ்சையில் மார்க்சிடமிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது.”

1981க்கும் 1986க்கும் இடையே உருண்டோடிய ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல, டேனியலின் உடல் நிலையும்தான். நீரழிவு என்னும் கொடுங்கத்தி, அதைக் கழிவுக்கணக்கில் செதுக்கிக் கொண்டிருந்தது. மார்ச் மாதத்தில் சென்னையில் அன்று மதியம் அவர் தங்கியிருந்த அறையில் சந்தித்தேன். மிக மெதுவாக அவருடைய தளர்ந்த குரல் வந்தது. நான் உரக்கப் பேசவேண்டி இருந்தது. நினைவுகளும், ஞாபகத் தொடர்ச்சிகளும் தேய்ந்து கொண்டிருப்பது போல் தெரிந்தது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை அவர் மார்க்சிய விஞ்ஞான அடிப்படையில் கருத்துக்களை வைத்தார். கடைசிவரை அதில் உறுதியாக இருந்தார்.

மக்கள் உரிமைக் கழக வெளியீடான இலங்கைத் தீர்வு ‘ஈழப் போராளிகளுக்கு ஒரு பதில்’ என்ற சிறு ஏட்டை அவர் கையில் கொடுத்தேன். அதைப் பிரித்துப் பார்க்காமல், வாங்கிய நிலையிலேயே சொன்னார்,
“உங்களுக்கு எங்கள் நாட்டில் என்ன நடக்கிறதென்று தெரியாது. உங்களையெல்லாம் விட கூடுதலான விவரங்கள் எங்களிடம் உண்டு. நீங்கள் இங்கே மந்தரித்து விட்டவர்கள் போல், தலைவர்களின் அறிக்கைகளில் வருவதைப் பார்த்துவிட்டு, தனி ஈழம் தீர்வு என்று முடிவுக்கு வருகிறீர்கள்.” என்று இலங்கைத் தமிழிலேயே சொன்னார். “அதிலும் கடலுக்கப்பாலிருந்து ஊகிப்பால் உணரக்கூடியதில்ல. எனவேதான் தமிழகத்திலிருந்து இலங்கை சம்பந்தமான அரசியல் கருத்துக்களைச் சொல்பவர்கள் நன்றாக அவதானித்துச் சொல்ல வேண்டியவராயிருக்கின்றனர்.”

அப்போது உடனிருந்த நண்பர் அ.மார்க்ஸ் சொன்னார் “இல்லை. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதும், உங்களுடைய கருத்தும் ஒன்றுதான். உங்க கருத்தோட ஒத்துப்போகும்.”

அன்று மாலை புரட்சிப் பண்பாட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும், அவர் இதையே திடமாக வைத்தார்.

“சர்வாதிகாரி ஜெயவர்த்தனாவின் வெறியாட்டத்தை எதிர்த்து, ஈழப் போராளிகள் ஒரு விடுதலைப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். டேனியல், அதை மிகவும் கொச்சைப்படுத்திவிட்டார்” என்றும்,
“இவ்வளவு பெரிய பிரச்சனை பற்றி, அவர் எழுதவில்லை என்பதைப் பார்க்கிறபோது, அவர் சிந்திப்பதையே நிறுத்திக்கொண்டுவிட்டார் என்று தெரிகிறது” என்றும் ஆவேசமான தாக்குதல்கள் வந்தன.

ஈழம் பற்றிய கருத்தில், டேனியல் உறுதியாக இருந்தார்.

“இன்றைக்கு இலங்கை ஜெயவர்த்தனே அரசின் அடக்குமுறையும், ஈழப் போராளிகளின் ஆயுதந்தாங்கிய போராட்டமும் எதற்காக நடைபெறுகின்றன என்பதை நான் அறிவேன். ஏற்கெனவே இரு இனங்களிலும் மேல் நிலையிலிருப்பவர்களின் இன்னும் கூடுதலான மேலதிக வசதிக்காக நடைபெறுபவை இவை.”

மரணம் அவரைக் கவ்விக் கொண்டிருக்கிற, ஈழம் பற்றிய அவர் கருத்துக்கள், இன்னும் பதில் அளிக்கப்படாமல் அப்படியேதான் இருக்கின்றன.

“இலங்கை இனக்கலவரங்களுக்கு அடிப்படை பொருளாதாரப் பிரச்சனைதான். தொடர்ந்து அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாகத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர்களின் கோரிக்கைகள் நாட்டின் பொதுக்கோரிக்கைகளுடன் இணைந்து நிற்கவில்லை. தனியாக நிற்பதுதான் வகுப்புக் கலவரங்கள் மேலோங்குவதற்குக் காரணம்.”

“எந்த இனம் உரிமை பெருவதாக இருந்தாலும், அந்த இனம் நாட்டிற்குப் பொதுவான வர்க்க நிலைபாடுகளை முன்னெடுத்துச் செல்லாதபட்சத்தில், அது வெற்றி பெற முடியாது என்பது என்னுடைய அபிப்ராயம். இன்றைய உலக நாடுகளில் இதுபோன்ற இயக்கங்கள் முன்னேற முடியாமல் தவிப்பது இதற்கு நல்ல உதாரணம். இதை ஈழப்போராளிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.”

“தமிழ் மற்றும் சிங்கள சாமான்யக் குடும்பங்களிலிருந்து இந்தக் கலவரம் தோன்றவில்லை. அவர்கள் பிரச்சனை வேறு. வாழ்க்கை நெருக்கடி, அது இனம், மொழி, ஜாதி என்கிற பிரச்சனைகள். எல்லாமே மெத்தப் படித்த மேல் தட்டு, நடுத் தட்டு வர்க்கத்தினரிடமிருந்தே தோற்றுவித்துப் பரப்பப்படுகின்றன.”

“இலங்கையில் இத்தனை கொடுமைகளும் காட்டுமிராண்டித் தனங்களும் நடந்து கொண்டிருக்கிறபோது, இந்த டேனியல் காலம் போன பிரச்சனைகளை எழுதிக் கொண்டிருக்கிறாரே என்று சில இலக்கியக்காரர்கள் கேட்கிறார்கள். என் மீது பழி சுமத்தும் இலக்கியக்காரர்களை, இதே ரீதியில் நான் ஒன்று கேட்டாக வேண்டும்.”

“இலங்கைத் தமிழர் கோரிக்கைகளுக்கும், இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கும் இருக்கும் ஒட்டுறவு பற்றிய கணிப்பை எந்த அளவுகோலைக் கொண்டு முடிவெடுத்திருக்கிறீர்கள்?” என்பதுதான் அந்தக் கேள்வி.

“நிலம் பறிக்கப்படுகிறது. உயர்கல்வி வசதி பறிக்கப்படுகிறது; தமிழர் உயர்பதவிகள் ஒழிக்கப்படுகிறது; அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது; தமிழன் தீண்டத்தகாதவன் ஆக்கப்படுகிறான்” என்பவைகள்தான் இங்குள்ளவர்களின் கூக்குரல். அரசின் மிலேச்சத்தனத்தை எதிர்த்து அதற்காகவே நாட்டுப்பிரிவினை கோரப்படுகிறது.

ஆனால் ஈழத்திலுள்ள தாழ்த்தப்பட்டவர்களும் மற்றையவர்களால் இதே ஐந்து மிலேச்சத்தனங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆனால் இதை எதிர்த்து எந்தப் போராளியும் விரல் அசைக்கவில்லை.

நிலச் சொந்தக்காரனையும், நிலமில்லாதவனையும், எஜமானனையும் அடிமையையும், இனப்பிரச்சனை சுலோகத்தின்கீழ் ஒன்றிணைந்து, இறுதியில், தமிழருக்கென மட்டுமே ஒரு தமிழ்ச் சோசலிச ஈழத்தை உருவாக்கிவிடலாம் என இவர்கள் முடிவு கட்டியிருக்கிறார்கள்.”

டேனியல் உறுதியாக இருந்தார்.

அதே நேரத்தில், ஒரு இனவெறி அரசின் பாசிச அடக்குமுறைக்கு எதிராய் அவர் ஏன் அழுத்தமாய்க் குரல் எழுப்பவில்லை என்பதற்கு நாம் நியாயம் கற்பித்துவிடமுடியாது.போராட்டத்தினை, போராளி இயக்கங்களை விமரிசிப்பதில் எடுத்த உறுதிப்பாடு இதில் ஏன் இல்லாமல் ஆக்கப்பட்டது?

சாதியப் பிரச்சனைகள் உச்சம் கொண்டு நிற்பவை அவருடைய நாவல்கள். டேனியல் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவராக இருந்தார். அதற்காக, தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை சாதிய முறையில் திரளுவதில் இருக்கிறது என்று அவர் ஒருபோதும் வைத்ததில்லை.

”உலகலாவிய வர்க்கப்போராட்ட முனைக்கு, சமூக ஒடுக்குமுறைக்குள் துன்பப்படுகின்ற மக்களை வழிநடத்திச் செல்லும் வகையில், சமூகக் இழிவுகளில் ஒன்றான சாதி முறையை இலக்கியமாக்குவதே என் நோக்கம்.”

‘பஞ்சமர்’ நாவல் சொல்வதும், சுட்டுவதும் இதுதான்.

”சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக, சில நடவடிக்கைகளிலிருந்து பஞ்சம மக்களை மேலும் உற்சாகம் கொள்ளும்படி வழிநடத்தி, அவர்களோடு மொத்த பிரச்சனைகளை உள்ளடக்கிய முழு மக்களையும் வர்க்க அடிப்படையில் இணைக்கும் ஐக்கியப்பாட்டின் அடிப்படையிலேயே பஞ்சமர் நாவலை முடித்திருக்கிறேன்” என்றார்.

அதைத் தொடர்ந்து ஒரு கேள்வி எழுப்புகிறார். “சாதிய ஒடுக்கு முறையைப் பிரதானப் படுத்துவதனால், வர்க்கப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தவில்லை என்கிறீர்கள். ஆனால் எந்த வகையில் அவை வர்க்கப் போராட்டத்திற்கு எதிரானது?”

அவர் அரசியலையும் இலக்கியத்தையும் இணைத்தே வைத்தார். “நான் வெறும் இலக்கியம் செய்யும் பார்வையாளனில்லை. வர்க்கம் சார்ந்தவன்” என்று பிரகடனம் செய்தார்.

அவரே சொல்வது போல் ‘மற்றவர்கள் இலக்கியத்திலிருந்து அரசியலுக்கு வந்தார்கள். அவர் அரசியலிலிருந்து இலக்கியத்திற்கு வந்தவர்’.

“தனிச்சொத்துரிமையால் வருவிக்கப்பட்ட வறுமையும், நிலவுடமை முறையினால் தோற்றுவிக்கப்பட்ட சாதி முறையும் ஒன்றோடொன்று பிணைந்து நிற்கின்றன. இவை இரண்டையும் சேர்த்தே அழித்து விடுவதென்பது, தனியே இலக்கியக்காரனால் சாதிக்கக் கூடியதல்ல. இதை உணரும்போது இங்கே அரசியல் வந்து விடுகிறது. இந்த அரசியலை நிராகரித்து விட்டு, மனிதனிடமிருக்கும், இவ்விரு அடக்கு முறைகளையும் அழித்து விட முற்படும் செயல்பாடு தற்கொலைக்கு ஒப்பானது. இந்த அரசியலை ஏற்றுக்கொண்டு இலக்கியக்காரன் எழுத முற்படும்போது, அவன் மக்கள் கூட்டத்துடன் சங்கமிக்க வேண்டும். அப்படிச் சரியான இலக்கியங்களை ஆக்கமுடியும்.”

அவர் சங்கமித்தார். தாழ்த்தப்பட்டவரில் ஒருவராக இருந்தார். அறிவறிந்த பருவத்திலிருந்து, இன்றுவரை, இந்த மக்கள் கூட்டத்தின் பிரச்சனைகளில் பங்கு கொண்டார்; அவர்கள் துன்பப்பட்டு கண்ணீர் விட்ட போதெல்லாம், அதில் அவருடைய கண்ணீரிருந்தது. அவர்கள் சிறுசிறு வெற்றிகள் கண்டு மகிழ்ந்த போதெல்லாம் அவரும் மகிழ்ந்தார். பல்வேறு கால கட்டங்களில் கூட்டாகவும், தனியாகவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அல்லலுற்று, அனுபவங்கள் பெற்றார். அமைப்பு ரீதியாக இயங்கிப் பெற்றார்.

“அநீதிகளுக்கு எதிரான போராட்டம் என்பது, ’பஞ்சுத் திரணைகளால்’ எதிரிகளைத் தாக்குவது போன்றதல்ல”
எழுதியதைப் பேசியதற்காக, பேசியதைச் செய்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிலரைப்போல், படைப்புக்கு மூலவித்தான கருப்பொருளை, ஓரிடத்தில், குந்தி இருந்து, சிந்தனையைச் சுழலவிட்டு, சேகரிக்க வேண்டிய அவசியத்தில் அவர் இல்லை. நாவலுக்குரிய கருவை வரிந்து தேடவேண்டிய நிர்ப்பந்தமும் அவருக்கில்லை.

நாவலில் நடமாடும் பாத்திரங்களும் அவர் சிருட்டித்தவை அல்ல. சம்பவங்களும், அவருடைய கற்பனா லோகத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை அல்ல. எல்லாம் பஞ்சப் பட்ட மக்கள் சுமத்தப்பட்ட நுகத்தடியைக் கழற்றி எறிய எடுத்துக்கொண்ட, போராட்டங்களில் அவர் பங்குபெற்ற அனுபவங்களிலிருந்து சேகரித்துக் கொண்டவைகள்.

புரட்சிக்கான இலக்கியம் என்பதைப் பற்றி அவர் வறட்டுத்தனமான கருத்து வைத்திருக்கவில்லை. “புரட்சிகர வர்க்கங்களை வழிநடத்தி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பெரும் புரட்சியை ஏற்படுத்துவதென்பது, இன்றோ நாளையோ, அல்லது மறு நாளோ செய்து முடிக்கக்கூடிய ஒன்றல்ல. இதில் இலக்கியக்காரனின் பங்கு அந்தந்தக் கால கட்டத்திற்குரியதாக அமைய வேண்டும்” என்பார்.

’கானல்’ நாவலை எழுதி முடித்தார், அதற்கு மேலும் அவரால் எழுத முடியாது என்று தோன்றியது போலிருக்கிறது. கடைசியாய், மேலாதிக்கத்திற்கும் மேலதிக அறுவடையாக ’பஞ்சக் கோணங்கள்’ என்ற நாவலை, உடல் வாதனையைத் தாக்குப்பிடித்து எழுதினார். இன்னும் வெளிவராத இந்தப் ‘பஞ்சக் கோணங்கள்’ நாவலில் கடைசியாய் வாசகர்களுடன் பேசினார்.

“இதற்கு மேலும் இதேயளவு விளக்கமாக ஒரு நாவலை எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனது உடல்நிலை அப்படி ஆகிக்கொண்டே வருகிறது.”

உடல் தேய்ந்து, ஆவி கொஞ்ச கொஞ்சமாய் அற்று வந்தது; குரல் தீட்சண்யத்துடன் ஒலித்தது. “ஆயினும் இந்தப் ‘பஞ்சம’ மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை, ஒரு வர்க்கப்போருக்கு அவர்களையும், அவர்களோடொத்த மக்களையும் - தயாராக்கி, அரசியல் அதிகாரத்திற்குக் கொண்டு வரும் வரை எழுதுவதற்குப் பலர் தோன்றிவிட்டனர் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.”

டேனியல் உடலின் கடைசி அத்தியாயம் முடிந்துவிட்டது. ஆனால் ’பஞ்சமராக, அடிமைகளாக, கோவிந்தனாக, கானலாக‘ வாழ்கிறார் எங்களுக்குப் பக்கத்திலேயே!

- சூரியதீபன்
- மனஓசை, மாத இதழ், ஏப்ரல் 1986

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ