ஒரு குடை பாடம் சொல்கிறது

”சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து”
தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் எச்சரிக்கை: 15-09-2018

1

வேர்மூட்டில் தண்ணீா் தேங்கி வெங்காயப் பயிர் அழுகியது. வெளியே தாள் தலை தென்பட்டாலாவது குடுமியைப் பிடித்துத் தூக்கி இழுத்துப் போட்டிருப்பார்கள். அழுகிய வெங்காயம் சந்தை ஏறாது; களத்துமேட்டுக்கு வந்து கொள்முதல் செய்யும் ஒரு வியாபாரி தலையும் தென்பபடாது. கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூா் வட்டார வெங்காய விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் கூடி அழுகிய வெங்காயத்தைக் கொட்டினா்; ஆயிரம் விவசாயிகள் கூடியிருப்பார்கள். கோரிக்கை மனுவைப் பெற கோட்டாட்சியா் இல்லை. நேர்முக உதவியாளரிடம் கையளித்து விட்டுத் திரும்பினார்கள் விவசாயிகள்.

கோட்டட்சியர் இல்லாமற் போனார் என்பது கூட பெரிய பிழையில்லை; ’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகமாய்’ உலகுக்கு உணவூட்டும் விவசாயிகள் அழுகிய வெங்காயத்தை கொண்டுபோய்க் குமி குமியாய்க் கொட்டி அழுதபோது, கரைந்துருக ஒரு ஊராட்சி ஒன்றியத் தலைவா், பேரூராட்சி, நகராட்சித் தலைவர்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினா், நாடாளுமன்ற உறுப்பினா், ஒரு ஈ, காக்கை, குஞ்சு கூட தென்படவில்லை. வேளாண் வாழ்க்கை அழுகி வீச்சமெடுத்துப் போகிறது என்பதின் குறியீடு இந்த விவசாயிகள் கோட்டாட்சியர் என்ற சுடலை ஏகி மயானம் காத்த கதை.

அழுகல் வெங்காயக் குப்பையை விவசாயி கோட்டாட்சியா் அலுவலகம் முன் கொட்டுவதற்கும், உலகமயமாதலுக்கும் தொடா்பு உண்டுமா? ‘கெக்கே, புக்கே’ என்று சிரிப்பீர்கள்; புவி வெப்ப மயமாதலுக்கும், 2015-ல் சென்னையின் தலைமேல் கொட்டித்தீா்த்த மழைக்கும் என்று உரைத்தால், அடடே ”தமாஷ் நல்ல, தமாஷ்” என்ற வார்த்தைகள் வருமானால் ஆச்சரியமில்லை.

2

2019 செப்டம்பர் 10-ஆம் நாள், சேலம் பாலம் வாசகர் வட்டத்தில் “இயற்கைப் பேரிடர்” தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேரா.எஸ்.ஜனகராஜன் மனித சமூகம் பேரழிவைச் சந்திக்கும் ஆபத்தை முன்னுணர்ந்து எச்சரித்துள்ளார்.

”புவி வெப்பமாதலால் கடல்மட்டம் உயர்ந்து சென்னை, நாகை போன்ற கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது. இதில் நாகை மாவட்டத்துக்கு பெரும் ஆபத்துள்ள நிலையில், அங்கிருந்து ’மீத்தேன்’ எடுத்தால் நிலத்தடியில் வெற்றிடம் ஏற்பட்டு நிலமட்டம் தாழ்ந்து போகும். கடல்நீர் எளிதில் உட்புகும். இயற்கையின் சமநிலையை நாம் எப்போதும் சீர்குலைக்கக் கூடாது.”

சூழலியல் வல்லுநர் ஜனகராஜன் குறிப்பிடும் புவி வெப்பமயமாதல் பருவநிலைச் சீர்கேட்டுக்கு மற்றொரு பெயர் "எல்நினோ".
  • “எல்நினோ என்ற பெயர்கொண்ட புவி வெப்பத் தாக்கத்தால் ஆசிய, பசிபிக் கடல்களில் 2015 ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை கடும் வெப்பம் நிலவியது. இதன் காரணமாய் சில நாடுகளில் 2015 டிசம்பா் வரை கடும்மழை அடித்தது. ஆசியக் கண்டம் மற்றும் உலக நாடுகளில் ’எல்நினோ’ வெப்பத்தாக்கம் 1998 முதலாய் பருவநிலையில் கடும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை முந்தைய வருடங்கள் போலவே இந்த ஆண்டும் உணர்த்தியது ………… 1997-98க்குப் பின் ’எல்நினோ’ தாக்கம் 2015–16ல் கடுமையாக இருக்கும். இந்தியாவின் தென்மாநிலங்களில் வழக்கத்தை விட அபரிதமாய் மழை பெய்யும். பசிபிக்கடலில் ஏற்பட்ட கொடும்வெப்பத்தால் டிசம்பா் வரை வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தது .…………….. ஏற்கனவே சென்னை பெருமழையைச் சந்தித்து விட்டது”
இந்த அறிக்கையை ஐ.நா.வின் பொருளாதார, சமூக ஆணையம் வெளியிட்டுள்ளது; ஒன்றிரண்டு இலக்கிய இதழ்கள் ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டன. இந்த இதழ்களுக்கு வழக்கம் போல் இலையில் படைக்கும் இல்லக்கியச் சோற்றுருண்டைகள் முக்கியம்.

2015-ல் சென்னையின் ‘மேனத்தான’ வாழ்க்கையை குதப்பித் துப்பியது பேய்மழை. செம்பரம்பாக்கம் ஏரி தலைநகரின் தலைமீது நடந்து வெள்ளம், வீடுகளில் வந்து விசாரித்துவிட்டுத் திரும்பியது.


வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 24-ஆம் நாள் தொடங்கியது. அப்போது முதல்வர் ஜெயலலிதா கொடநாடு மாளிகையிலிருந்தார். அப்போதிருந்தே வானிலை ஆய்வுமையம் நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெருமழை பெய்யும் என அலறத் தொடங்கிற்று. அக்டோபா் 28-ல் தொடங்கி நவம்பா் 4 வரை கனமழை கொட்டியது. நான்கு உயிர்ப்பலி நடந்திருந்தது. அப்போதே இரண்டாவது பாட்டம் மழையடித்து கடலூா் தத்தளித்தது. திருவள்ளூர் தீவாகிப் போயிருந்தது. மூன்றாவது தாக்குதலுக்கு தூத்துக்குடி, நெல்லை மாவட்டம் சின்னபின்னமானது. வேர்மூட்டில் அழுகிய வெங்காயத் தாள்களைச் சுமந்து நீதிகேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் நெடும்பயணம் போனது இந்நேரத்தில் தான்.

நவம்பா் 8 ஆம் தேதி கொட்டும் மழையில் கொடநாட்டிலிருந்து முதல்வர் திரும்பியபோது சென்னை பாதி மூழ்கி, மீதி தெரிந்தது .
“உங்களின் வாழ்வுச் சிதைப்பு உலகில் தொடக்கம் கொண்டு உள்ளுரில் முடிகிறது” என்று சொன்னால் ஒருவரும் நம்பப் போவதில்லை.

3

முதலாளித்துவ நாடுகளின் வாகனப்புகை, தொழிற்சாலைக் கழிவு, சுற்றுச்சூழல் மாசு என அடுக்கிக்கொண்டே செல்லலாம். ‘எல்நினோ’வை உருவாக்கியவா்கள் சாதாரண வாழ்வுக்குப் அன்னாடம் போராடிக்கொண்டிருக்கும் ஏழை, பாழைகள், சாமானியர்கள், விவசாயிகள் அல்லர்; உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒரு கடல் வெப்பமடைந்தால் ஒன்றும் தொடர்பில்லாத இந்த மக்கள் தலையில் விடிகிறதுக்குக் காரணமானோர் மேற்குலக வல்லரசு நாடுகள். வல்லரசாக இறக்கை பரப்பிக்கொண்டிருக்கும் இந்தியாவும் கதாநாயகர்களில் ஒருவன்.

வளா்ந்த நாடுகள் என்று சொல்லப்பட்ட வல்லரசுகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கரிய மிலவாயு வெளிப்பாட்டுக்குக் காரணமான நிலக்கரி, எரிவாயு, மற்றும் பெட்ரோலியப் பொருட்களைப் வல்லரசு நாடுகள் தொழில்வளா்ச்சி என்ற பெயரில் அபரிதமாகப் பயன்படுத்துவதால், உலகின் பல மூலைகளிலும் புவி வெப்பமாதல் அதிகரித்து பருவநிலைப் பதட்டம் ஏற்படுகிறது. சுனாமி, புயல், பெருவெள்ளம், நில அதிர்வு என மக்கள் கூட்டுப்பலி ஆகிறார்கள். சென்னை உட்பட 5 மாவட்டங்கள் மூழ்கியதற்கு அகிலஉலக அவா்களும், உள்ளுர் அளவிலான அரசியலாளர்களும் பொறுப்பு. இவர்கள் இருவரும் தான் மக்களின் அன்றாட வாழ்வுக்குள் வெள்ளத்தை அழைத்து வந்தவர்கள்.

புவியைப் பாதுகாக்கவும், மனிதகுல இருப்பைத் தக்கவைக்கவும் ’பருவநிலைக் காப்பு மாநாடு’ 2015 டிசம்பர் 25-ல் பாரீஸில் நடைபெற்றது. பருவநிலையில் ’திடீர்’ மாற்றமாகி நிலநடுக்கம், புயல், சுனாமி, பேய்மழை - என பாதகங்களை விதைத்துப் போவதைத் தடுத்து நிறுத்துவது எவ்வாறு என்ற வினாவுக்குப் பதில் தேடக் கூடின 195 உலகநாடுகள். பொதுநோக்கம் என்பதன் நிமித்தம் குழுமினர் என்பதினும், தத்தம் பிராந்திய நலன் பேணும் கடப்பாட்டின் பொருட்டுக் கூடினர் என்பது தெளிவாகியது.இந்த இழவுவீட்டிலும் வல்லரசு நாடுகளின் வாயளப்புக்கு குறைவில்லை.

மாநாட்டின் தொடக்கத்தில் பருவநிலை பற்றிய ஐ.நா.வின் கோட்பாடு முன்வைக்கப் பெற்றது:
  • புவியை மாசுபடுத்தியவர்கள் அதைச் சரி செய்வதற்கான பொறுப்பையும் ஏற்கவேண்டும். கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதில் வளர்ந்த நாடுகள் (வல்லரசுகள்) கூடுதலாகப் பங்களிக்க வேண்டும்.
  • வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படும் வல்லரசுகளின் கரியமிலவாயுப் பெருக்கத்துக்கு, சாதாரணப் பிற நாடுகளின் மக்கள் பலியாடுகள். புவி வெப்பமடைதலுக்குப் பொறுப்பானவர்கள் வல்லரசுகளே; இயற்கைப் பேரிடர் என்று சொல்லி செயற்கைப் பேரிடரை உருவாக்குகிற இவர்கள், அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்”
மாநாட்டில் ஐ.நா முன்மொழிவு இவை.

2015-ல் பாரீஸில் நடைபெற்று முடிந்த நடந்த ’பருவநிலைக் காப்பு மாநாட்டில்’ புவியின் வெப்பநிலையை 1.5 செல்ஸியசுக்கு குறைக்க வேண்டுமென கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு வல்லரசு நாடுகள் ஒப்புதல் அளிக்கவில்லை. இப்போதும் செப்டம்பர் 21 முதல் 23 வரை நியூயார்க்கில் ஐ.நா பருவநிலைச் செயல்பாட்டு உச்சி மாநாட்டில் 3 செல்ஸியசிலிருந்து இதே அளவுக்குக் குறைக்க வேண்டுமென்னும் கோரிக்கை வைக்கப் பெற்றது.பருவநிலை மாநாட்டில் 195 நாடுகள் பங்கேற்ற போதும், செயல்திட்டங்களை உறுதிப்படுத்தும் மாநாட்டில் 70 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இதில் அமெரிக்கா பங்கேற்கவில்லை.

மேற்கு அண்டார்டிகாவில் பனிப்பாறைப் படலம் உருகி கடல் மட்டம் உயரும் ஆபத்தை அறிவியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். 2 செல்ஸியஸ் வெப்ப உயர்வு கிரீன்லாண்ட் பனிப்படலத்தை பலவீனமடையச் செய்யும்; உலக சராசரி வெப்ப நிலையில் 1.5 செல்ஸியஸ் அளவுக்கு கூட உயர்வது பேராபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கிறார்கள்.

பாரீஸ் பருவநிலை மாநாட்டின் தீர்மானத்தை ஏற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துவிட்டார். வல்லரசுப் பந்தயத்தில் முன்னுக்கு ஓடிக்கொண்டிருக்கும் சீனா, அந்த மைதானதில் கால் வைக்க வேகவேகமாய் முந்தும் இந்தியா ஆகிய இருநாடுகளும் தீர்மானத்தில் ஒப்பமிட மறுத்தன. புவியின் வெப்பத்தை 1.5 செல்ஸியசில் இருந்து 2 செல்ஸியசுக்கு உயர்த்துவது என்று தீர்மனத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர்தான் இந்தியா, சீனா கையொப்பமிட்டன. இதன் காரணமாய் 12 நாட்களில் முடிய வேண்டிய மாநாடு 13 நாட்களை எடுத்துக் கொண்டது.
சாதாரணப் பொதுமகனுக்கு எதுவும் செய்யாத முதலாளியப் பொருளாதாரத்துக்கு முட்டுக்கொடுக்கும் திருப்பணியை வல்லரசு நாடுகள் மேற்கொள்வது ஆச்சரியமில்லை. சீனாவும் இந்தியாவும் அடிப்படையில் வேளாண்மை நாடுகள்.

’இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. இந்தியப் பொருளாதாரம் என்பது கிராமங்களுக்கு இசைவான விவசாயப் பொருளாதாரமே’ என்ற பொருண்மையை முன்வைத்தார் காந்தி. இது தற்சார்புப் பொருளாதாரம் என்று அர்த்தப்படுத்தினார். இயற்கையைச் சிதைக்காமல் மேம்படுத்தும் பருவநிலைக் காப்பில் விவசாயப் பொருளாதாரம் அடங்கியுள்ளது. பெரும்பான்மை மக்களின் சுய பொருளாதாரத்துக்கு துணை நிற்காமல், சிற்சில உப்பரிகைகளுக்குப் பயன்படும் முதலாளியப் பொருளாதார வலையில் இந்திய ஆட்சியாளர்கள் வீழ்ந்துள்ளனர் என்பதை ”பருவநிலைக் காப்பு மாநாட்டில்” இந்தியாவின் நடத்தை வெளிப்படுத்திற்று.

மேற்குத் தொடர்ச்சி மழையின் நீளம் பிரமிக்க வைப்பது. குஜராத், மராட்டியம் இரு மாநிலமும் இணையும் இடத்தில் ஆரம்பித்து, கோவா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு என்று ஆயிரத்து அறுநூறு கி.மீ மேல் நீண்டது. இமயமலைக் காடுகளைக் காட்டிலும் அதிக அடர்த்தியானவை மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள். அரிதிலும் அரிதான தாவர வகைகள் அங்குள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை இந்தியாவின் ஏழு மாநிலங்களுக்கு ஒரு பாதுகாப்புச் சுற்றுச்சுவராய் அமைந்து பருவநிலயை சமப்படுத்தி சீராக வைத்திருக்கிறது.தெற்கு மாநிலங்களில் பெய்யும் பருவமழைக்கு இந்த மலைத்தொடர் தான் ஆதாரம். மழைநீரைச் சுமந்து வரும் மேகங்களைத் தடுத்து நிலப்பரப்பிலேயே மழை பெய்யும்படி செய்கிறது. கனிமச் சுரங்கங்கள், காடுகள் அழிப்பு, குடியிருப்புகள் என இந்த மலையை இல்லாமல் ஆக்கினால் என்ன விளையுமோ அது எல்லாமும் நடந்து விட்டது.

1970-களில் ஆப்பிள் தோட்டம் அமைப்பதற்காக அத்தனை மரங்களையும் அழிக்க ஆரம்பித்தார்கள். ஆப்பிள் தோட்டம் அமைக்கிற பொறுப்பை அப்போது பிரதமராயிருந்த இந்திராகாந்தி யாரிடம் ஒப்படைத்தார்? அமெரிக்கக் கம்பெனியிடம். வனமழித்தல் இன்றும் நடக்கிறது. என்ன நடந்தது? மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து வழியும் நதிகளினும் பெரிய நதி மக்களின் கண்களில் வழிகிறது.

அண்மையில் பாங்காக் நகரில் நடைபெற்ற பருவநிலைக் காப்பு மாநாட்டில், ஐ.நா ஒரு எச்சரிக்கையை முன்வைத்துள்ளது.
“புவிவெப்ப மயமாதலால் ’பசுங்குடில் வாயு வெளியேற்றம், இயற்கைப் பேரிடர்’ உள்ளிட்ட பிரச்சினைகள் மட்டுமல்ல, ’கடவுளின் தேசம்’ என்றழைக்கப்படும் கேரளாவை பெருநாசங்களின் தேசமாக மாற்றியதும் இதுதான்” என்று தெளிவாக எடுத்து வைத்துள்ளது (10-09-2018ல் வெளியான செய்தி)

ஏழு மாநிலங்களில் பரவியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழல், பாதுகாப்பு குறித்து, அறிவியலாளர் மாதவ் காட்கில் அளித்த அறிக்கையை சுட்டிக் காட்டுகிறார் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் பேரா.ஜனகராஜன்.”மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கையைச் சிதைக்கும் வகையில் எந்தத் திட்டங்களையும் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினார் மாதவ் காட்கில். ஆனால் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் அதை ஏற்க மறுத்துவிட்டன. இதன் விளைவுதான் கேரளாவில் ஏற்பட்ட பேய்மழை, பெருவெள்ளம், நிலச்சரிவு எல்லாமும்” என்கிறார் பேரா.ஜனகராஜன், இது மனிதர்கள் உண்டாக்கிய செயற்கைப் பேரிடர் என்று அழுத்திக் கூறுகிறார்.

வளா்ச்சி மந்திரத்தில் சொக்கிச் சுருளும் ஆட்சிகள், கட்சித் தலைமைகள் - ‘புரிந்துணா்வு ஒப்பந்தங்களைப்’ போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இயற்கையை அழிப்பதில் கைகோர்த்து பேரிடருக்கு ஒப்பந்தம் போட்டுக் கொண்டே போகிறார்கள். புவிவெப்பமடைவதால் கிரீன்லாண்ட் பனிப்படலங்கள் முழுமையாக உருகும்போது தற்போதுள்ளதை விட கடல்மட்டம் 23 அடி உயரும். துபாய், சிங்கப்பூர், மும்பை, சென்னை போன்ற நகரங்கள் முற்றாக மூழ்கடிக்கப்படும் .
”என் கவலையெல்லாம்
எப்பேர்ப்பட்ட பேய்மழையானாலும்,
என் மக்களை நனைய விடக்கூடாது;
எப்படிப்பட்ட வெயிலானாலும்
என் மக்களைக் காயவிடக் கூடாது”
(சீனக் கவிதை - அய்குங்)
மக்களைக் காப்பது பற்றி ஒரு குடை பேசுகிறது.

கற்றுக் கொள்வார்களா இவர்கள்?

- பேசும் புதிய சக்தி: டிசம்பர், 2019

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?