அளவிடு உரை - சாரோண் செந்தில் குமார்

தோண்டிய புதுமண் போல
புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் போல
அப்பொழுதுதான் சமைந்த பயிர்போல
மக்களும் அவர்தம் போராட்டங்களும்
காலத்தின் கிழிசல்களைத் தைப்பதற்காக
கெட்டி தட்டிப் போன மண்ணோடும் வாழ்வோடும்
- சாரோண் செந்தில் குமார்
(பா.செ-யின் படைப்புக்களை "பா.செயப்பிரகாசம் கதைகளில் மண்ணும் மக்களும் (1999 - 2004)" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்)
கோடம்பாக்கம் விடுதியில் தங்கி முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். விடுதியில் சில நண்பர்கள் நூலகங்களிலிருந்து தங்களுக்கு பிடித்த வார இதழ்களை உள் பனியனுக்குள் மறைத்துக் கொண்டு வருவார்கள். அவ்வாறான இதழ்களின் நடுப் பக்கங்களில் இருக்கும் நடிகைகளின் படம் மறுநாள் ஏதாவது ஓர் அறையின் முகப்பில் அம்பேத்கர், பெரியார், காந்தி படங்களை ஓரந்தள்ளி இடம் பிடித்து இளித்துக் கொண்டிருக்கும். ஒருநாள் ஜூ.வி. கொண்டு வந்த மாணவனிடம் ‘டயலாக்’ பகுதியைப் படிப்பதற்காக வாங்கிப்புரட்டிக் கொண்டிருக்கையில்தான் ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ தொடரில் முதன் முதலாக பா.செ.வின் பெயரைப் பார்த்தேன்.

எப்பொழுதுதாவது குறிப்பிட்ட சில புத்தகங்களுக்காக மட்டும் நூலகம் போகும் நான் வாராவாரம் ஜூ.வி.யைத் தேடி ‘தெக்கத்தி ஆத்மாக்களைப்’ படிக்கத் தொடங்கினேன். எதைப் படித்தாலும் நண்பர்களிடம் சொல்லிவிடும் பழக்கத்திலிருந்த நான் அத்தொடரைப் பற்றி மட்டும் யாரிடமும் சொல்லவில்லை. காரணம் வாரம் ஒரு கரிசலின் வித்தியாசமான மனித ஆளுமையைப் படிக்கையில் எனக்குள்ளும் என் கிராமம் சார்ந்த மனிதர்களின் நினைவுகளும், அவர்களின் செயல்களும் ஊற்றெடுக்கத் தொடங்கியிருந்தன. அந்த நேரங்களில்தான் கண்ணகி சிலையருகே ‘நண்பர்கள் சபை’ என அழைத்து கூடிப் பேசி பிரியத் தொடங்கியிருந்தோம். அந்தக் கூடுகையில் புத்தகம், திரைப்படம், ஆன்மீகம், பெரியார், இயேசு, பிரபாகரன், அம்பேத்கர், காரல் மார்க்ஸ், நற்செய்திக் கூட்டங்கள் இப்படி பல தகவல்களைப் பேசுவதும், இலக்கியப் போட்டிகளுக்கு ஆயத்தமாவதும் நடக்கும். அப்பொழுது நான் என் மனதுள் ஊறும் வித்தியாசமான மனிதர்களைச் சொல்லுவேன். என் நண்பர்கள் ‘தெக்கத்தி ஆத்மாக்களில்’ பா.செ. எழுதும் மனிதர்களைப் பற்றிச் சொல்லுவார்கள். நான் அது பற்றி ஒன்றும் தெரியாதது போல் கேட்டுக் கொண்டிருப்பேன். அது புத்தகமாக வந்ததும் 40 ரூபாய் கொடுத்து வாங்கினேன் (முதன் முதலில் நான் 113 ரூபாய்க்கு புத்தகம் வாங்கியது அன்றுதான்).

பார்ப்பவர்களிடமெல்லாம் ‘பா.செ’வோட தெக்கத்தி ஆத்மாக்கள் படிச்சிட்டிங்களா, பிரமாதம்’ என்று பிறகு அனிச்சையாக சொல்லத் தொடங்கியிருந்தேன். இப்படித்தான் பா.செ எனக்கு அறிமுகமானது (அதற்கு முன்பே ‘சூரிய தீபன்’ என்ற பெயரை கேள்விப்பட்டிருப்பதாய் நினைவு)

நான் முதலில் எனது முனைவர்பட்ட ஆய்விற்கு ‘பின் நவீனத்துவத்தில் நிறப்பிரிகையின் பங்களிப்பு’ என்று பதிவு செய்திருந்தேன். சில மாதங்களுக்குள் மிகச் சில இதழ்களும் புத்தகங்களுமே சேமிக்க முடிந்தது. அவைகளும் ஒரு வாசிப்பில் அறிந்து கொள்ள முடிபவைகளாகத் தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கையில் அவற்றின் எல்லா வழிகாட்டு நூல்களும் ஆங்கிலத்தில் இருப்பதாக கேள்வியுற்றது என்னை அச்சுறுத்தியது. உள்ளுக்குள் உதறல். வெளியில் மட்டும் ஒரு பந்தாவிற்காக பின் நவீனத்தில் ஆய்வு பண்ணுறேன் என்று சொல்லித் திரிந்தேன். எனது நெறியாளர் முனைவர் சுதந்திரமுத்து அவர்களும் எனது நண்பன் கஜேந்திரனும் நூற்களின் பட்டியல்களையும், இருக்குமிடத்தையும் சொல்லுவார்கள். நான் பலமாய்த் தலையாட்டுவேன். உள்ளே அந்த நம்பிக்கையே இல்லாமல் இருந்தது.

ஒருநாள் சென்னை கிறித்தவக் கல்லூரியில் நடக்கும் ‘வனம்’ கவிதை வட்டத்தில் பங்ககெடுக்க நானும் நண்பன் கஜேந்திரனும் சென்று கொண்டிருக்கையில் அவன்தான் சொன்னான். ‘நீ ஆய்வு செய்யும் தலைப்பு எவ்விதத்திலும் உன்னோடு தொடர்பு இல்லாமல் இருக்கிறது, நீ வேறு ஏதாகிலும் படைப்பிலக்கியத்தில் ஆய்வு செய்தால் சிறப்பாயிருக்கும்’ என்றான். அப்பொழுது நான் ‘எதை எடுத்து பண்றதுன்னு தெரியலடா’ என்றேன். அவன் சொன்னான் “உங்க ஆளுத பண்ணேன்” அப்படின்னான். யாரோடது என்றேன். பா.செயப்பிரகாசத்தோட படைப்புக்கள் என்றான்.

மறுநாள் பா.செயப்பிரகாசம் கதைகள் எனும் புத்தகத்தை என்னிடம் நீட்டினான் கஜேந்திரன். அது பா.செ.வின் ஒரு ஜெருசலேம் - காடு - கிராமத்து ராத்திரிகள் எனும் மூன்று தொகுப்புகளின் முழுத் தொகுப்பு. ஏதோ ஒரு வேகத்தில் வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். கதையின் பெயர்களில் ‘ஜெருசலேம்’ என்ற பெயரை அதிகம் கேட்டிருப்பதாகவும், விவிலிய பெயர் என்பதாலும் ஒரு ஈர்ப்போடு முதலில் படிக்கத் தொடங்கியது ‘ஒரு ஜெருசலேம்’ கதையைத்தான்.
கலில் ஜிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்’ என் இரவுகளை கடுமையாக ஆளுகை செய்துகொண்டிருந்த நாட்கள் அவை. யாராவது ஒருத்திக்காக நான் உருகி, உருகி காவியம் எழுத வேண்டும் ‘என் சல்மாவின் விரல்களால் கோதிவிடப்பட்ட தலைமுடிக்கு அதைவிட பெரிய கிரிடம் வேறு என்ன இருக்கப் போகிறது’ என்னும் வரியை விஞ்சி நானும் எழுதவேண்டும், அவளை யாரோ கொன்றுவிட்டால் அவளின் கல்லறையருகே காவலிருந்து தினம் தினம் புதிய பூக்களை கல்லறையில் வைத்து கண்ணீர் சிந்த வேண்டும் என்று வெறியாய் கழித்துக் கொண்டிருந்த நாட்கள்.

அப்பொழுதுதான் பா.செ.வின் ‘ஒரு ஜெருசலேம்’ ஒரு கம்பீர நினைவோடு துவங்கி பலூனுக்குள் நுழையும் காற்றுப்போல் என்னுள் நுழைந்தது. பால்ய ரணம் - அது என்னை உப்பவும் உஷ்ணப்படவும் செய்தபடியிருந்தது. எல்லோரும் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கீழே மீந்த உணவுகளைத் தின்பதற்கு பெருச்சாளிகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. நான் எழுந்து நின்று கொண்டேன். ஏதோ பயம் என்னைப் பற்றிக் கொண்டது.
பஞ்சில் பால் துவைத்து, பிஞ்சுக் கரங்களில் தந்து அம்மாவின் வாயில்விட அழைக்கும் அந்த அத்தையின் குரல் எனக்கு அறிமுகமான குரல்போல் கேட்டது. பஞ்சத்தில் முள்மரத்தில் கண்ணாடிக்காய் பிடுங்கி - கோரைப்புற்களின் வேரில் கிழங்கு பிடுங்கித் தின்னும் சிறுவர்கள், எங்கள் ஊரில் நாங்கள் ஆட்டுப் புளுக்கைகளில் ‘புங்கன் கொட்டைகளைத்’ தேடி உடைத்து அதன் பயிறுகளைத் தின்றதை நினைவுபடுத்தியது. தொடர்ந்து படிக்க முடியவில்லை.

மறுநாள் நான் கல்லூரி போகவில்லை. காலையில் படுத்தேன். எல்லோரும் போய்விட்ட பிறகு பத்து மணிக்கு எழுந்து மீண்டும் வேகமாய் வாய்விட்டு படிக்கத் தொடங்கி இரண்டு நாட்களில் 30 கதைகளையும் படித்து முடித்தேன்.

1971 - 1977 வரை காலச்சுழலில் எழுதப்பட்ட இக்கதைகளில் குற்றம், ஆறு நரகங்கள், திறக்கப்படாத உள்ளங்கள், வேரில்லா உயிர்கள் போன்று சில கதைகளைத் தவிர மற்ற எல்லாவற்றிலுமே கரிசலின் வாழ்க்கையே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதுவெறும் மொழியால் எழுதப்படாமல் வெவ்வேறு உணர்ச்சிகளாய் வெளிப்படுகின்றன.

கரிசல் மண்ணின் வெவ்வேறு தனிமனித வாழ்க்கையினைப் பேசும் பா.செ வின் குரல் ஒரு தொகுப்புக்குள்ளிருந்து மொத்தமாய் வெளிப்படுகையில் சிதைந்தபோன சமூக வாழ்வினை எதிரொலிக்கின்றதை உணரலாம்.

மூன்று வெவ்வேறு களங்களில் கதைகள் நகர்கின்றன. கிராமம், நகரம், மாநகரம்.

கிராமம்
கரிசல்மண் - வறட்சி - வறுமை - மின்சார வருகை - பயிர் மாற்றங்கள் - மனித உறவுகளின் சிதைவு - பணப்புழக்கம் - சிறுவர் - பெண்கள்

நகரம்
தொழிலாளிகள் - வறுமை - போராட்டங்கள் - அடக்குமுறை முதலாளிகள் - மாணவர் குழுக்கள் - கட்சிகள் வருகை - சிதவுற்ற மெய்மை உணர்வுகள் - பெண்கள்

மாநகரம்
குடும்பம் - ஆடம்பர பொருட்கள் வருகை - உடைபடும் உறவுகள் - இயந்திரங்களாக மாறிப்போகும் வாழ்க்கை - பெண்கள்

உதிரி வாழ்க்கை
கழைக்கூத்தாடி - மலைவாழ் மக்கள் - கூர்க்கா - ரிக்கார்டு டான்ஸ் கலைஞர்கள் - நாடோடிகள் - அவர்களது பெண்கள் - அடையாளத்திற்குள் அடைக்க முடியாமல் பாதிக்கப்படும் உதிரிகள்.

கதைகளில் வரும் முக்கிய பாத்திரமாகவும் அவரே வெளிப்படுகிறார். தாயை இழந்த குழந்தை, வறுமையில் வதைப்படும் சிறுவன், தகப்பனின் கர்ஜனைக்கும், ஆசிரியரின் பிரம்பிற்கும் இடையில் ஊடாடும் சிறுவன், காராச்சேவுக்கு ஆசைப்பட்டு கல்வியை விட்டுவிடத் துணியும் சிறுவன், பாட்டியின் கட்டளைக்குப் பயந்து சாணம் சேகரிப்பவன். களையெடுப்புக் காலங்களில் சித்தியின் கால் மறைவில் கூலி வேலைக்குப் பதுங்கும் சிறுவன் என வருவதும், அரசு அலுவலனாய், தொழிலாளியாய், நகர வாழ்விற்குள் சிக்கி சிதையுறுகின்ற குடும்பத் தலைவனாய், அரசியல் கட்சியில் இடம் வகிக்கும் மாணவர் தலைவன் இப்படி பல முகங்களோடு பா.செ.காட்சி தருகிறார்.

படைப்புக் களம் எனும் எல்லையில் பா.செ. தாம் பயணித்த இடங்களையும் அங்கு வாழ்ந்த மனிதர்களையும் நிலவிய சூழ்நிலைகளையும் தம் எழுத்துகளால் காட்சிப்படுத்துகிறார். பட்டணமோ பட்டிக்காடோ எல்லாம் மாறிக் கொண்டே இருக்கின்றன. போன தலைமுறை மனிதர்களைப் போல் இந்த இளந்தலைமுறையினர் இல்லை. நேற்று இருந்தது போல இன்று பார்க்க முடிவதில்லை. ஊரின் வெளியிலிருந்து நிறைய ஊருக்குள்ளே வருகின்றன. உள்ளிருந்து மனிதர்களை வெளியே கொண்டு செல்லுகின்றன. ஆனால் உள்ளே வந்தவையால் மண்ணில் ஏற்படும் மாற்றம் உள்ளிருக்கும் மனித வாழ்வை சிதைத்து வருகின்றது. மண்ணிலிருந்து இன்பமும் வறுமையும் வீட்டிற்கு வந்தபோது எல்லாம் நம் தலையெழுத்து என்று இருந்த மக்களிடம், புதியமுறை விவசாயம் பெரும் பிளவை ஏற்படுத்துவதைப் பேசும் குரலே தேர்ந்த வாசகனுக்கு பா.செ.வின் கரிசல் கதைகளில் கிடைக்கும் முதல் முக்கிய செய்தி. மற்றொன்று, கிராமத்தை (கரிசலை) விட்டு வெளியூருக்கு பிழைப்புத் தேடிப் போகும் கிராம மனிதர்களை, அவர்களுக்குள்ளிருந்த உயிர்ப்பான உணர்வுகளை வேரறுத்து, அவர்களுக்குள் மாயையான கேடு நிறைந்த குணங்களைப் புகட்டிவிடும் கொடுமையை மிகச் சில கதைகளில் பேசினாலும் ஆழமும் நுட்பமும் கொண்டவையாக அதனை வெளிப்படுத்துகிறார்.

எங்கு, யாரை, எதைப் பேசினாலும் அதில் சிதைந்த வாழ்வையும், சீரழிந்த மனித உறவுகளையுமே பா.செ வின் கதைகள் எதிரொலிக்கின்றன.

பிறந்து சிறு வயதிலிருந்து பழகிய நம் முன்னோர்கள் வாழ்ந்த சொந்த ஊர் ஒன்றுமில்லாததாகத் தெரிகிறது. தனிப்பட்டு ஏற்படும் வெறுப்பினை அந்த மண்ணுக்கு உரியதாக மாற்றிப் பார்க்கையில் ஏன் இந்த ஊரில் பிறந்தோமோ எனத் தோன்றுகிறது. மண்ணை விட்டு சற்றுத் தொலைவு போன பிறகு திரும்பிப் பார்க்கையில் இருட்டாய்த் தெரியும் கடந்த கால வாழ்விற்குள் நிறைய அகப்படுகின்றன. ஊர் வளர்ச்சியடைகிறது. ஒரு செடியைப் போல பூத்து, காய்த்து, இழந்து, பெற்று, உருமாறி, பாதை அடைத்து, புதிய பாதைகள் தோன்றி, புதிய மனிதர்களைப் பெற்று, நிறைய மனிதர்களை இழந்து, பழக்க வழக்கங்கள் தொலைந்து, புதிய வழக்கங்கள், புதிய விளையாட்டுகள், புதிய பண்டிகைகள், பொது நிகழ்வுகளில் புதிய நடைமுறைகள் இப்படி எவ்வளவோ மாற்றங்களை ஊர்கள் மௌனமாய் ஏற்றுக் கடத்துகின்றன. அதை விட்டு வெளியே போனவர்களுக்கே அதன் முந்தைய வாழ்வின் உன்னதங்களும் பின்னடைவுகளும் தெரியும். பா.செ வுக்கும் இளம் வயதில் கரிசல் ஒன்றுமில்லாததாக அலுப்பூட்டுவதாக விட்டு ஓடிவிட்டால் நலம் என்று தோன்றுவதாக இருந்திருக்க வேண்டும். அப்படி வெளியே வந்த பிறகு பா.செ கரிசலைத் திரும்பி நினைவு கூறுகிறார்.

மின்சாரத்தாலும் பணப் பயிர்களாலும் காவு கொள்ளப்படாமல் தானியங்களாலும், பண்ட மாற்றாலும் உழைப்பும் உறவுகளும் போற்றப்பட்ட கரிசல் நிலம்; சாலைகளும் வாகன இரைச்சல்களும் வியாபார மோகமும் அறிமுகமில்லாது பால், வெண்ணைய், மோர் யாருக்கும் யாரும் இலவசமாய் தரவும் பெறவும் இசைந்த கரிசல்மண்; சாதியமும், எல்லை மீறிய காமமும் வறுமையும் தலைவிரித்தாடிய கரிசல் பூமி; முறை மாமன், மஞ்சள் நீர், நாளேறு, சித்திரைப் பொங்கல் என மனித உறவுகளால் மணந்த கரிசல் வாழ்வு.

மின்சார வருகை, கலப்பையைக்கொன்று இயந்திரங்கள் உள் நுழைந்து, அண்ணன் தம்பிகளைப் பங்காளிகளாக்கி, உடன் பிறப்பின் உடலை உரமாக்கி, நிலத்தின் மேல் நாணயங்களை காணத் துடித்த கரிசல்; தன் மனைவியை வீட்டுக்குள் பூட்டி, பிறன் மனைவியைத் தேடி நடு இரவில் போக, பெண்கள் பொறுத்திருக்கப் பணித்த கரிசல்: தானியம் போய் பணம் புழக்கத்தில் வர, உயிர்போகும் தம்பியின் குழந்தையைக் காப்பாற்ற உதவி செய்யாது இறுகிப் போன மனம் கொண்ட மனிதர்களைக் கொண்ட கரிசல் மண்... என கருப்பு மண்ணின் வரலாற்றை உணர்வுகளால் ஆவணப்படுத்தி வைத்துள்ளன பா.செ வின் கதைகள்.

வாழ்விற்கும் புனைவிற்கும் இடையில் பா.செ. பெரும் போராட்டத்தை சந்தித்தாலும் வாழ்வின் பக்கமே நின்று பரிந்து பேசுகிறவராகவும் அதன் காயங்களுக்கும், ஊனங்களுக்கும் நியாயம் கோருபவராகவும் இருக்கிறார். முக்கியமாக ஊர் - சேரி, நகரம் - கிராமம், படித்தவர் - பாமரர் என எல்லா நிலைகளிலும் பிறந்தது தொடங்கி முதுமை வரைக்கும் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பதை உணர்த்தியபடியே இருக்கின்றன அவரது படைப்புக்கள்.
மொழியில் மாற்றம் ஏற்பட்டாலும் படைப்புத்தளத்தில் மாற்றம் வந்தாலும் அவரது நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கானது என்பது மட்டும் மாறவேயில்லை.

பா.செ.வின் கதை உலகில் ஆண்களும் பெண்களும் சாதிய வேறுபாட்டில் அழுத்தமுடையவர்களாக வருகிறார்கள். கீழ்ச்சாதிக்காரனை செருப்பால் அடித்ததினால் தன் செருப்பு தீட்டுப்பட்டு விட்டது என்றும் அதனால் அந்த கீழ்ச்சாதி இனமே அழிந்தால்தான் மீண்டும் செருப்பு போடுவேன் என்று வெறுங்காலோடு நடமாடும் மேல் சாதி ரெட்டி - கீழ் சாதிப் பெண் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஊரில் உள்ளே போக அனுமதிக்காத மேல் சாதிப்பெண்கள் - அவளை வைத்திருக்கும் வடரெட்டி என்பவனின் தைரியத்தால் ஊர்வழியே தண்ணிக்குப் போய் தண்டிக்கப்படும் ‘தைலி’ - கீழ்ச்சாதியினருக்கு அரசுக் குடியிருப்பு கட்டித்தருவதையும் ஊருக்கு புறம்பாகவே கட்டித் தருதல், போலீஸ்காரர்கள் மேல் சாதிக்காரர்களுக்கு ஆதரவாகவே நின்று கீழ்சாதியினரை ஒடுக்குவது, கீழ்ச்சாதிக்காரர்களின் பெண்களை மேல் சாதி ‘ரெட்டி’ ஆண்கள் அத்துமீறி அடைவது, அதாவது தவறு செய்பவர்களும் தண்டனை கொடுப்பவர்களும் அவர்களாகவே இருக்கும் கொடுமை, சாதியினால் சிதைவுறும் சமூகம் என்றெல்லாம் கரிசலின் வாழ்வியலைத் தெளிவான வாசிப்பிற்குத்தர பா.செ விற்கு மட்டும் எப்படி இத்தனை விமர்சனப் பார்வை சாத்தியப்படுகிறது என்று தீவிரமாய் யோசிக்கத் தோன்றுகிறது.

ஆனால், தீவிரமாய்த் தொடங்கி, சில படைப்புகளிலே தங்களை ஜனரஞ்சகப் படைப்பாளிகள் என்னும் முகமூடிக்குள் அடைத்துக் கொண்டு விளம்பர மோகத்தோடு அலைபவர்கள் ஏராளம். பா.செ எப்படி அந்த மாயைகளையெல்லாம் அடையாளம் கண்டு, கடந்து வந்தார் என்று நினைக்கையில் எழும் வியப்பிற்கு அவர் சார்ந்திருந்த கொள்கையில் உறுதி, பதில் கூறுவதாக அமைகிறது. சதா எழுத்தையே பிரதான தொழிலாகக்கொண்டு இருப்பவர்களாலே செய்யமுடியாத தீவிர பார்வையினை அரசு ஊழியனாய் இருந்து கைக்கொண்டுள்ளது இதை அழுத்தமாய் உறுதிப்படுத்துகிறது.

பா.செ வின் படைப்புமொழி என்பது அவரது வட்டாரம் சார்ந்ததாக இல்லாமல் தனித்துவமான கவிதை மொழியைக் கொண்டிருப்பதை முதல் மூன்று தொகுப்புகளில் காணலாம். பொதுவாக வலிகளைப் பதிவு செய்கையில் உரையாடல்கள் குறித்து படைப்பாளியே அதிகம் பேச வேண்டி இருக்கின்றது. அதனால் படைப்பாளி அந்த வலி நிறைந்த வாழ்க்கையினை தன் மொழியினால் உயர்த்திக் காட்டிவிடுகிறார். உரையாடல் என வருகையில் மக்களின் பேச்சு மொழியிலே வருகிறது.

பா.செ.வின் கதைகள் வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சூழ்நிலைகள், நிகழ்வுகள் போல ஒரு மையத்திலிருந்து துவக்கம் கொள்ளுகின்றன. அவற்றின் முடிவுகளும் தமிழ் சினிமா போல ‘சுபம்’ ‘வணக்கம்’ வெற்றி என்று முடிவுறாமல் அதன் போக்குகளோடு ஓரிடத்தில் முடிந்து வாசகனுக்குள் தொடர்கின்றனவனாய் விடப்பட்டுள்ளன. மெனக்கெடுதலோ, திட்டமிட்ட வரைவிற்குள் அடக்க வலியவெட்டுதலோ அவருடைய முதல் மூன்று தொகுதிகளில் காணப்படுவதில்லை. வாழ்க்கை அவர் வழியாயும் வாழ்வின் வழியாய் பா.செ. யும் பயணிக்கின்றனர். எனவே பா.செ.வின் கதைகள் நீளமானவைகள், அவற்றுள் தேவையற்று வருபவர்களுமில்லை; தேவையில்லாமல் தொடர்பவர்களுமில்லை.

ஒரு முரண், ஒரு அவலம் என மனித வாழ்வியலுக்கு எதிரான ஒன்றையே பா.செ வின் கதைகள் பேசுகின்றன. இதற்கு பா.செ. ஒரு இடதுசாரிக் கொள்கையாளர் என்பது மட்டுமே காரணம் எனச் சொல்லிவிட முடியாது. தனக்குள்ளேயே தான் சார்ந்த கொள்கையின் ‘கங்கு’ பெயர் தெரியாமல் பால்யம் முதல் கனன்றிருப்பதுதான் காரணம். இதற்கு சான்றாக அவர் கதைகளில் உலவும் மனிதர்களையும் அவரின் கதைகள் பேசும் பிரச்சனைகளையுமே சொல்லலாம்.

மேற்சாதி மனிதர்கள், பணம் படைத்தவர்கள், முதலாளிகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், போலீஸ்காரர்கள், ஆண்கள், படித்தவர்கள் என எல்லோரும் வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கையை விமர்சனத்திற்கு உட்படுத்த மட்டுமே பா.செ அவர்களை தம் படைப்பிற்குள் அனுமதித்திருக்கிறார். வர்க்க வேர்கள் அதிர்வடையும்படியான நிகழ்வுகளில் முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் வருவதைக் காணலாம். அதேபோல் நகரம், கிராமம் என்றில்லாமல் ஆண்கள் - பெண்களின் போராட்டம் முடிவுறாமல் நீள்கிறதை பா.செ.வின் கதைகளில் காண முடிகின்றது.

முழுக்க முழுக்க கரிசல் எழுத்தாளராக அறியப்பட்டிருந்தவர். அவரது இரண்டாம் கால கட்டத்தில் ஒரு இடதுசாரி சிந்தனையாளராக வெளிப்படுகிறார். நகர வாழ்வைப் பேசும் கதைகளில் தொழிலாளர்களை, அவர்தம் ஒடுக்கப்படும் வாழ்வை, பெண்களை பேச முற்படுகிறார். இதில் வழக்கமான குரலாக இல்லாமல் கலகக் குரலாய் ஓங்கி ஒலிக்கிறது. பிரசவப்பணம் முன்னூறு ரூபாய்க்காக கருத்தரிக்கும் ஒரு தொழிலாளியின் குடும்பம். அவன் பேறுகாலம் நெருங்குகையிலே அந்த சலுகை நீக்கப்பட்டதை அறிவிக்க இடிந்துபோகிறாள். யாரோ வட்டிக்கு பணம் தந்தவனின் கடன் அடைக்கவென்றே அந்தக் கருவைச் சுமக்கிறாள். இந்தப் பதிவு முந்தைய காலத்தினது. ஆனால் பிறகான காலக் கதைகள் தொழிலாளிகள் முதலாளிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக விழித்தெழுவதைப் பேசுகின்றன.
‘புதியன’ தொகுப்பு முழுக்க தங்கள் வழியை தாமே அமைத்துக் கொள்ளும் பெண்கள் பற்றியவை. புரட்சிகர கொள்கையினால் மாற்றத்தை தம் வாழ்வில் ஏற்று, வதைப்படும் பெண்களுக்கு வழிகாட்டும் துணைகளாக முன்னறிவிப்பவர்களைப் பேச வைக்கிறார். கரிசல் வாழ்வில் அனுபவங்களைப் பேசிய பா.செ நகர வாழ்வில் தம் கொள்கைகளை மாந்தர்கள் வழியாய் வெளிப்படுத்துகிறார். கொள்கைகளை முன்னிருத்தி கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் இவைகளில் படைப்புமொழி என்ற அடையாளத்தை தொலைத்து பிரச்சார நெடியே மேலோங்கி நிற்கிறது. இது அவரின் முந்தைய படைப்புகளிலிருந்து பின்னடைந்தே நிற்கின்றன. ஒரு கொள்கையாளராக உறுதியாய் நிற்கும் பா.செ. படைப்பாளி எனும் தளத்திற்கு தந்திருக்கும் முக்கியத்துவம் இத்தொகுப்பில் இரண்டாம் பட்சம்தான்.

பா.செ வின் பெண் பாத்திரங்கள் கூடுதலான கரங்களோடும் நவீன ஆயுதங்களோடும் அலைந்து பெண்ணுரிமையை மீட்டெடுக்கும் புரட்சித் தென்றல்களாக தொடக்கத்தில் இல்லை. புதியன கதையின் நாயகி இதற்கு மாறானவள்.

சாதாரணமாய் நாம் அன்றாடம் சந்திக்கும் சராசரிப் பெண்களாக முந்திய கதைகளில் வருகிறார்கள் அவர்கள். புரிதலற்று ஆணின் ஆசைகளுக்காக சுகங்களை வழங்கலும் தன் சுய ஆசைகளை சிறகொடித்துக் கொண்டு முதிர்ந்த வயதிலும் தன் உடலை வருத்தி கணவனின் கட்டளைகளை நிறைவேற்றுகிறவர்களாக வருகிறார்கள். நுட்பமான வாசிப்பிற்குள்ளாய் இவைகளை அணுகும்போது ஒருவித மௌன விமர்சனத்தை பா.செ வைத்திருக்கிறார். பெண் பாத்திரங்கள் வாசகனிடம் தன்னை விடுவிக்கவோ, தனக்காக குரல் கொடுக்கவோ கோராமல் தம் தம் சுயவாழ்க்கையின் மீது கவனிப்பு செலுத்தவும் அதிலிருந்து தன் அக்கா, தங்கை, மகள், மனைவி, மருமகள் போன்றோரின் உணர்வுகள் மதிப்பிடப்படுதலையே, தம் அறைகூவல்களாய் முன் வைக்கின்றன. இவைகளோடு சாதியத்தை எதிர்க்கும் தைலி, ஆணாதிக்கத்தை எதிர்க்கும் ஞானம், நந்தினி என்று தமது சமூக அரசியல் புரிதலோடும் பாத்திரங்களை உருவாக்கி முன்மாதிரி மனிதர்களை பா.செ படைக்கிறார்.

‘புயலுள்ள நதி’ தொகுதி நாகரீக வாழ்வின் எச்சங்களில் சிக்கியுள்ள குடும்பங்களை மையமிட்ட கதைகள். ஆடம்பரமாகத் தோன்றும் பல பொருட்கள் இன்றைய வாழ்வில் அத்தியாவசியங்களுடையதாய் மாறிப்போவதை இவைகள் பேசுகின்றன. குறிப்பாக தொலைக்காட்சிப் பெட்டி, தொலைபேசி, கார், ஏ.சி. போன்றவை குடும்ப ஐக்கியத்தை சீர் குலைக்கும் சக்திகளாக சிறிது காலத்திலே மாறிவிடுகின்றதை வெளிப்படுத்துகின்றன.

இப்படி ஒவ்வொரு ஆடம்பரப் பொருட்களும் வாழ்வின் உறவுகளை சிதைத்து ஒரே குடும்பத்தில் பிள்ளைகள் தனியாகவும கணவன் தனித்தும், மனைவி தனித்தும் இருக்க நேர்கின்ற இயந்திர வாழ்வினையும் சக மனிதனுக்கு தண்ணீர் தரக்கூட மனம் வராத ஸேவியர், வீணாய் அதை கால்வாயில் திறந்து விடுவதிலிருந்து நகர வாழ்வினையும் புரிந்து கொள்ளலாம்.

2

தனக்குச் சொந்தமில்லாத ஒரு வாழ்க்கையை வேடிக்கை பார்த்து எழுதுகின்ற போக்குகள் பா.செ வின் கதைகளில் இல்லை. குறிப்பாக கரிசல் குறித்து எழுதுகையில் தன் வாழ்வையும் தன் வாழ்வின் எல்லைக்குட்பட்ட மாமா, பெரியம்மா, பாட்டி, சித்தப்பா என வாழ்வோடு நெருங்கியவர்களையே பதிவு செய்திருக்கிறார். அது புழுதியில் பெய்த மழையில் வீசும் மண் மணத்தின் வெவ்வேறு நிலைகளாக உருப்பெற்றிருக்கின்றன. தம் மண்ணில் அன்றாடம் சந்தித்த கீழ்ச்சாதி மக்கள், எல்லா நிலைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வாழ்நாளைக் கடத்தும் பெண்கள், நெல் சோற்றின் ஏக்கத்தில் செத்துப்போகும் சிறுவன், வறுமையினால் எலிகளைத் தேடி அலையும் சிறுவர் கூட்டம், கிழங்கு தேடி அலையும் பெண்கள், அபகரிக்கப்பட்ட வாழ்விற்கு நியாயம் கேட்டு தோற்றுப்போகும் மொட்டையணாசாரி, வக்கிர எண்ணங்களோடு சேரிகளுக்குள் நடமாடும் மேற்சாதி இளைஞர்கள் போன்றவர்கள் பா.செ வின் படைப்புகளில் சாதாரணமாய் பதிவு செய்யப்படுவது போல் தெரிகிறது. ஆனால் பல கதைகளின் சம்பவங்களை சரியாக ஒன்றிணைத்தால், ஒரு மண்ணின் உண்மையான சமூக வரலாற்றை மீட்டெடுக்கலாம்.

3

பா.செ வின் படைப்புலகத்தில் நீண்ட மௌனம். (1987 - 1996) பிறகு 1996-இல் எழுத தொடங்கிய அவரின் படைப்புகளில் முந்தைய வாழ்வையும் மொழியையும், இழந்தே கதைகள் வருகின்றன; வந்திருக்கின்றன. கொள்கைக்காக தன் படைப்பு மனத்தை ஆழத்தில் வீசி எறிந்துவிட்டு தேடும் முயற்சியினை பிரதான படைப்புக்களாய் காணலாம். இளமையை அதன் காலத்தில் வீணாக்கி மீண்டும் அதை தன் புற அடையாளத்தில் பூட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சி போல பா.செ வின் படைப்புலகை மௌனத்திற்கு முன் - மௌனத்திற்கு பின் என்று பிரிக்கலாம்.

முதற் காலத்தில் உயிரோட்டமான வாழ்வும் ஊற்றெடுக்கும் கவித்துவ மொழியும் ததும்பிய நிலை. பிந்தைய காலம் சிந்தனை நிரம்பிய கொள்கைகளும் அதனை வெளிப்படுத்த வலிந்து கட்டப்பட்ட குருவிக் கூட்டினைப் போன்ற கதை வடிவமுமாக இந்தக் கால கட்டத்தில் பா. செ தன்னை ஒரு கொள்கை பரப்பாளனாகவே முன் நிறுத்துகிறார். இந்தக் கால படைப்புகளில் பா.செ கதையெனும் இனிப்பு பூச்சுக்குள் தம் கலக உணர்வுகளை வாசக மனங்களுக்கு மாத்திரையாக்கியுள்ளார்.

இதில் -

பெண் விடுதலை, வர்க்கப் போராட்டம், நகரம் - கிராமம் வாழ்வியல் சார்ந்த உரசல், மேல் கீழ் அதிகாரங்களிலுள்ள வெளிப்படுத்த முடியாத பெருமூச்சுகள் போன்றவற்றைப் பேசுகிறார். ஆனால் நகரம் - கிராமம், மேற்சாதி - கீழ்ச்சாதி போராட்ட நிலை, வலிமையற்றவைகளாக கற்பாறையில் விழுந்த விதையின் ஆழம் ஊன்றாத வேர் போன்று காணப்படுகிறது.

தாம் தொலைத்த அந்த படைப்பு மொழியையும், வாழ்வையும் மீண்டும் தேடிப் பிடிக்கும் முனைப்பிறகு பா.செ மிக விரைவில் வந்துள்ளார். ஆனால் அது கையகப்படாமல் உடைந்து போய் ஒன்றிணைக்க முடியாத கண்ணாடி போல் துண்டு துண்டாகவே அவரைக் காட்டுகிறது. கொள்கைக்காய் தம் படைப்பு ஆளுமையை, மொழியைத் தொலைத்த சுய அனுபவம், இலக்கிய வாழ்வில் பா.செ வைப் போல் வேறு யாருக்கும் நேர்ந்திருக்குமா எனத் தெரியவில்லை.

புதுத் துளிர்களுக்காக தன் பழுத்த இலைகளை உதிர்த்துக் கொள்ளும் மரம் போன்றதோ, புதிய இறகுகளுக்காக தன் முதிர்ந்த சிறகுகளை உதிர்த்துக் கொள்ளும் பறவை போன்றதோ அல்ல இந்த இழப்பு. கொள்கைக்கான சுய விருப்பு இந்த முடிவும் அதன் விளைவும் அதன் வழியாய் அவரின் படைப்பாளி அடையாளம் என்பது மங்கிப் போயிருக்கின்றது.

பா.செ வின் பிறகான தொகுப்புகளில் ஒவ்வொன்றிலும் ஓர் உள்ளடக்க ஒற்றுமையைக் காணலாம். பிரச்சார நெடியாக அவைகள் தெரிந்தாலும் அவை சாதாரண மனிதனின் வாழ்வின் மேம்பாட்டை மையமிட்டவை. குறிப்பாக பெண்களை அவர்களின் எல்லா இயலாமைகளிலும், வீண் சகிப்பு நிலையிலிருந்து வெளியேறு என அறிவுறுத்துபவை. புதியன, இரவு மழை, மூன்றாவது முகம், புயலுள்ள நதி - என பிந்திய தொகுப்புகளில் பேசப்படும் கதைகள் வாழ்வை சம்பவங்களாக பதிவு செய்யாமல் எதிர்வினையாற்ற வழி சொல்லுகின்றன. இவற்றின் வடிவத்தில் ஒரு முன்முடிவு என்பது ஆரம்பத்திலேயே புலப்பட்டு விடுகின்றது.

வலிந்து சில கோட்பாடுகளை அவரது மனிதர்கள் பேசுகிறார்கள். மையமிட்ட ஒரு புள்ளியை நோக்கி அவை நகர்த்தப்படுகின்றன. அந்தத் தடத்தில் அதன் செயல்பாடுகள் தடுமாற்றமில்லாமல் போய்ச் சேருகின்றன. இதில் சில கதைகளின் பெயர்களில் (புயலுள்ள நதி, இரவு மழை, காணாத பாடல், மயானத்தின் மீதி) அவர் இழந்த படைப்பு மொழிகளின் தெறிப்பும், சில கதைகளில் மண்ணின் ஏக்கமும் பளிச்சிடுகின்றன.

பா.செ தம் படைப்பு மனத்தை மீட்டுருவாக்கம் செய்ய விழைந்த முனைப்பில் சில கதைகளில் மொழி அளவிலும் உள்ளடக்கத்திலும் புதிய அணுகுமுறையினைத் தொட்டுள்ளவை என அவரின் ‘பூத உலா’ தொகுப்பில் உள்ள கதைகளைக் குறிப்பிடலாம். உதிரிகளாக நகரின் நசிவுக் கலாச்சாரத்தினுள் சிக்கி வாழ்வை எண்ணங்களில் மட்டுமே மகிழ்ச்சியாய் சுவாசிக்கும் வாழ்க்கையினை இக்கதைகளில் காணலாம். சில குறிப்பிட்ட மனித வாழ்வின் உள் புழுக்கங்களை அறியும் வாய்ப்பை இக்கதைகள் நமக்கு வழங்குகின்றன.

தம் இளம்பிராயத்தில் பார்த்த அவலங்களையும் முரண்பாடுகளையும் முதற் பகுதி கதைகளில் கரிசலின் அன்றாட நிகழ்வுகளாக பதிவு செய்திருக்கிறார். பிற்காலப் படைப்பில் தம் கொள்கையுணர்வால் ஒரு புரிதலுக்குள் வந்தவராக சமூகத்தின் முக்கிய அவலங்களுக்கு எதிர் வினைகளை வெளிப்படுத்தியுள்ளார். இதில், சாதிய உணர்வு நிலை என்பது அவரால் மறைக்கப்பட்ட ஒன்றாகவே காண முடிகிறது. தம் குழந்தைப் பருவம், கிட்டிப்புள், மட்டைப்பந்து, செதுக்கு முத்து, பம்பரம், இவற்றோடு தாழ்த்தப்பட்டோர் தெருக்களில் கீழ்சாதி சிறுவர்களுடன் விளையாடி கழித்ததாயும், அவர்கள் கீழ்ச்சாதியினர் என்று உணரப்படாததால், அந்த போக்கு தொடர்ந்ததாயும் பா.செ ஒரு நாள் நேரில் பேசுகையில் குறிப்பிட்டார். தலித் மக்களின் பொருளாதார நிலையும் தங்களின் குடும்ப பொருளாதார நிலையும் சமமான மட்டத்தில் இருந்தது முக்கியக் காரணம் எனவும் தெரிவித்தார். அந்த நேரங்களில் பெரியவர்களின் அதட்டுதலும், கண்டிப்பும் இருந்ததாயும், அதை பெரிதாய் கவனத்தில் கொள்ளாமல் 10, 12 வயது வரைக்கும் தம் வாழ்க்கை தலித் மக்கள் வாழ்ந்த தெருக்களிலேயே கழிந்ததாய் அவர் குறிப்பிட்டார். ஆனால் அவரின் தாலியில் பூச்சூடியவர்கள், சாதி, மயான காண்டம் போன்ற ஒரு சில கதைகளில் தவிர, பிற்காலப் படைப்புகளில் இது குறித்த ‘ஆத்திரமான’ கோபமோ அல்லது அந்த சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கலகக் குரலோ வெளிப்படவில்லை.

கரிசலில், ஊர்த் தெருக்களில் சேரி மக்கள் நடக்கவோ, நுழையவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஊர் மக்கள் தம் தேவைக்கு ஏற்ப சேரிக்குள் மட்டுமல்லாது வீடுகளிலும் அதைத் தாண்டியும் நுழையும் அதிகாரம் உடையவர்களாய் இருந்ததை பா.செ.வின் முற்பகுதிக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் பிற்பகுதியில், பெண்ணடிமை முரண்பாடு போன்றவற்றிக்கு எதிராக எழுப்பப்பட்டது போன்ற ஓர் ஆழமான பார்வை தலித் விடுதலை அல்லது சாதிய முரண்பாட்டிற்கு எதிரான குரல் அவர் கதைகளில் வெளிப்படாதது அவரின் படைப்பு வெளியின் முன் நிற்கும் மிக முக்கிய கேள்வியாக உள்ளது.

இப்படியான கேள்விகளை பா.செ.விடம் கேட்பது மிக பொருத்தமாகவே இருக்கிறது. ஊரின் அமைப்பை சுட்டும் போது பறக்குடி, பள்ளக்குடி, சக்கிலியக்குடி, வண்ணாக்குடி என ஊர் என்ற அடுக்கு நிலை கரிசலில் இருந்ததை அவரது கதைகளில் தெளிவுபடுத்துவது போல், வெளிப்படையாய் யாரும் பேசவில்லை. அதைப்போல் ஒரு சாதியானாலும் பொருளாதார ஈரமே அவர்களின் உயர்வு தாழ்வை தீர்மானித்ததை “ரெட்டியார் சாதி” மக்களிடமிருந்த அந்த உடைமை சமூக ஆதிக்க நிலையினை அவரது ‘பலிப்பூக்கள்’ கதை பேசுகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியவன் உயர்சாதியனாக இருந்தாலும் அவன் “இடைநிலை அந்தஸ்து” உடையவனாகவே வாழும் நிலையினை அவர் பேசுகிறார்.

“சாணார்” பார்க்கத்தகாதவர்கள் என்று சமூகம் ஒதுக்கியிருந்த மக்கள் கிறித்துவமதத்தின் வருகைக்கு பிறகு வணிகத்தை கையில் எடுத்து பொருளாதார மேம்பாடு அடைந்து இப்பொழுது நாடார், என்று இடைநிலை சாதி அந்தஸ்த்தை பெற்றிருப்பது போல கரிசலிலும் யாதவர், வெள்ளாளர், போன்றோர் இடைநிலை சாதிகளாக இருந்ததையும் அவர்களின் வாழ்வுநிலை பொருளாதார முன்னேற்றம் சார்ந்து மேல் நிலைக்கு வந்திருப்பதையும் அவர் சுட்டுகிறார்.

‘சக்கிலியர்’ என்று குறிப்பிடப்படும் கீழ் சாதியினர் ‘தெலுங்கு’ பேசுபவர்களாகவும், மாட்டுத்தோல் தொழில் செய்பவராகவும் இருந்ததாலேயே அவர்கள் தலித்துகளுக்கு கீழானவர்களாக கரிசலில் வாழ்ந்ததைக் காணலாம். காரணம் கரிசலில் ஆதிக்க சாதியினர் பெரும்பாலும் தெலுங்கு பேசுபவர்களாக இருந்ததால், அந்த மொழியினை பேசுவோரான சக்கிலியரையும் தம்முடன் கொண்டுவந்தால் தொழிலாலும் கீழ்நிலையை பெற்றிருக்கலாம் எனும் முடிவிற்கு வரவேண்டி உள்ளது.

அவரது ‘தாலியில் பூச்சூடியவர்கள்’ போன்ற சில கதைகளை வைத்து தலித் இலக்கியத்தை முன்னெடுத்தவர் என சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அது கரிசலின் சம்பவமாகவே அவர் பதிவு செய்துள்ளார். இந்த ஆரோக்கியமான உண்மையை பா.செ ஒப்புக்கொள்வதில் அவரின் படைப்பு நேர்மை புரிகின்றது. இப்படி தாம் தவறவிட்டது குறித்து பா.செ வருத்தமும் தெரிவிக்கின்றார். தாம் எழுதாமலேயே புதிதாய் தோன்றும் இலக்கிய ‘இசங்களில்’ தமக்கு இடம் தேடி சில வார்த்தைகளையும் வரிகளையும் கிள்ளிப் போட்டு தாளிப்பவர்களிடையே ஒரு நேர்மையான படைப்பாளராய் பா.செ.வை காண முடிகிறது.

இவ்வாறு தொடரும் பா.செ வின் கதைவெளி உயிர்ப்போடு நகர்கின்றது. மனித வாழ்வை, வதைபடும் இளம் பிராயத்தை, மண்ணின் மாற்றத்தோடு மாற்றம் அடையும் மனித வாழ்வைப் பேசுதல்கள் பா.செ வின் தனித்த முகவரிகள் எனலாம். தீவிர இலக்கிய பிரகடனங்களோடு தொடங்கும் படைப்பு மனங்கள், சில படைப்புகளிலேயே ஊடக மோகத்தை நோக்கித் திரும்பி அதற்கு நியாயம் கற்பிக்கும் சூழலில், அதற்கு எதிரானவராக தம் படைப்பு ஆளுமையை கொள்கைக்காக வளைத்தது, நெகிழ்த்தியமை பா.செ வின் தனித்த முகவரி எனலாம்.

பா.செ.வின் கதைகளுக்குள் ஒரு தொடர் நூலிழை பயணிப்பது குறிப்பிடத் தகுந்தது. எங்கு எந்த வாழ்வை பேசினாலும் அங்கு வதைப்படும் (அ) ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையே பேசுவது குறிப்பிடத்தக்கது. முதல் பகுதி படைப்புகளில் பிரச்சினைகளையும், வலிகளையும் கிராம வாழ்விலிருந்து பேசிய பா. செ பிறகான படைப்புகளில் அது போன்ற வாழ்விற்கு புதிய தடங்களை உருவாக்கும் முயற்சிகளைச் செய்துள்ளார். பெண்கள், சிறுவர், தொழிலாளர்கள், உதிரிகள் என தம் படைப்பின் உள்ளடக்கத்தை தீர்மானித்து எழுதும் அவரின் கதைவெளி மிகவும் உயிர்ப்பானதாகும்.

பல்கலைக்கழக ஆய்வுகள் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகின்றன, ஆய்வேடுகள் அங்கு எதற்குப் பயன்படுகின்றன என்பதை ஒருமுறை ஆய்வியல் துறைக்குப் போனவர்களுக்குத் தெரியும். இந்த நிலையில் என் வாழ்வை, என் மண்ணை, என் மக்களை நினைவிற்குள் கொண்டுவந்து அவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் உயிர்ப்பான எண்ணத்திற்குள் கொண்டுபோன இக்கதைகளுக்கு நான் எதை அளவிடு உரையாக எழுதிவிட முடியும்.

படிப்பவனை அவனது சொந்த அனுபவத்திற்குள்ளாகவோ அறிந்த வாழ்வை நினைவுறுத்தவோ, புதிய உணர்விற்குள் கொண்டு போகவோ செய்வதைவிட வேறு பெரிய எந்த இலக்கை ஒரு படைப்பு அடைந்துவிடக்கூடும்!

திரைப்படம், வணிக இதழ்கள், வருவாய் தரும் எழுத்து என்ற அதிபயங்கரக் கவர்ச்சியை கடக்கும் உத்தியை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். சிலர் மாத்திரமே தன் வாழ்வனுபவத்தை பாதச்சுவடாய் வைத்து முன் நடப்பார்கள். அதை பா.செ செய்திருந்தார்.

- சாரோண்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?