ஜெயந்தன் காட்டுப்பூக்கள் - கவிதைகள்
ஒரு திருநாள் மாலையில்
வட்டமாய் நின்று சுற்றி வந்து
'அடி சொர்ணக்கிளி சொன்ன சொல்லை
சொல்லியபடி சொல்லியடி'
என்று கும்மி போட்ட போது,
நானும் கை கோர்த்து
'அடி கருத்த மச்சான் கன்னப்பொட்டு
சொன்ன சொல்லை சொல்லியடி
சொல்லியடி,'
- சில மின்னல் துண்டுகள் ஜெயந்தன் கை நழுவிக் கீழே விழுந்ததுண்டு. கவிதைகள் அவை. கை நழுவி - என்ற வார்த்தையைச் சொல்லப் பொருத்தமான காரணங்களுள. முதலாவதாய் ஜெயந்தன் நாடகாசிரியர் ,கதாசிரியர், நெடுங்கதைக்காரர் என்றெல்லாம் அங்கீகாரம். கவிதை வழங்கும் விரல்கள் என்றால் - ஜெயந்தன் கவிதை எழுதினாரா, எழுதுவாரா என்ற ஆச்சரியமான கேள்வி எழும்பும்.அவரை அறிந்தோரும், அறியாதோரும் கவிமேகம் எனக் கொண்டாடும் சூழல் வாய்க்க அவர் இடம் தந்ததில்லை.என மானுடப் பிளவைப் பார்த்து,
நகைத்துக் குமுறியதுண்டு,
என்ன செய்ய
நான்தான் நாகரிகமாகிப் போனேனே.
நான் நின்றபடி நிற்கிறேன்
நீங்கள் சென்றபடி இருக்கிறீர்கள்"
”அந்நியன்” என்னும் மேலே காட்டிய கவிதை, அவருக்கு கவிதை முயற்சி சாத்தியப்படும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இன்றைய கவிதைகள் பொய்ப்பூச்சு உடுத்தி ஆட்டம் போடும் போது, மெய்க்கவிதையை வடிவப் பொருத்தத்துடன் படைத்தார். கருத்து + வடிவம் ஆகியவற்றை காலப் பொருத்தத்துடன் தரமுடிகிற ஒருவரை – அவர் கவிதைகள் அடையாளப்படுத்துகின்றன. அந்நியமாதல் நேர்ந்த விதத்தை நாடகஉரை போல காட்சிரூபமாய் வைக்கிறார். கவிதையின் முத்தாய்ப்பான முடிவினுக்கு, அவர் தரும் ஒரு சிறுமுன்னுரை விளக்குத் தண்டு போல், விரிந்த அல்லியை ஏந்தும் நீண்ட தண்டு போல் முழுக்காட்சியையும் ஏந்தி அமைந்து விடுகிறது.
"ஒரு மழை மாலைசரியாகச் சொல்வோமென்றால், இது முன்னிலை விளக்கம் அன்று: தன்னிலை விளக்கம்.
வானிலிருந்து சின்னத்தூறல்
நனையத் தூண்டுகிறது.
தோளில் குடையை துப்பாக்கிபோல் போட்டு,
எதிரே தூறல் புகையில் மங்கி
நிரவலாய் ஓவியன் ஒருவன்
வேண்டுமென்றே மெழுகிய
தெளிவிலாப் படம் போல்
தெரியும் காட்சியில் சொக்கி நிற்கிறேன்.
தூரத்தே சாலை முனையில் நீங்கள்
கன்னியர் எழுவர்.
பருவமிடுக்கோடு வெக்கு வெக்கென
ஆனால் தாண்டித் தாண்டி
சிரித்துச் சிரித்து
ஒருவர்மேல் ஒருவர் மோதி, மோதி
"அடிதந்தானே தந்தானெ
தன தந்தானே"
பாடி வருகிறீர்கள்.
தூக்குப் போவணி, கருக்கறுவா
உழைப்பைச் சொல்ல,
நனைந்த ஆடைகள்
அங்கங்களுக்கு ஆபரணமாகி
தங்கம் வெள்ளியை
கொக்கணி செய்கின்றன.
என்னைப் பார்த்ததும்
தேன்மழைக் கானம் குறைகிறது
பையப் பைய பாடல்
உள்ளே போய்விட,
மனம் கொஞ்சம் அழுகிறது.
உங்கள் பாடலுக்கு நான்
அந்நியமான தெப்படி?
என் வெள்ளை உடுப்பும்
கிராப்புத் தலையும் கத்தை மீசையும்
செய்த வினையா?"
வெள்ளத்தனைய நீர்மட்டம் - என்பதே போன்றதான நிகழ்வு தான் வாழ்வு. வாழ்நிலை மாற மாற சிந்தனை மட்டம் மாறும். இங்கு வேறொரு முரண் கிரியை நிகழும். வாழ்நிலை எண்ணங்களை வடிவமைப்பதால், உயர உயர சிந்தனை மக்களிடமிருந்து விலகும். ஒரு கட்டத்தில் வேறோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்ட செடிபோல் தளுதளுக்கும். தன்னோடு விளையாடி, தன்னுடன் படித்து, தன்னோடு வாழ்ந்து தானாகவே இருந்த மக்கள் தனியாகிப் போகிறார்கள். எனில், உண்மை அதுவல்ல. அவர்கள் விலகவில்லை. இவன் தனியனாகிப் போனான். அந்நியமாகி விட்டவனை ’போனால் போகிறது. சேர்த்துக் கொள்கிறோம்' என்று தான் அவர்களின் பார்வைகள் வருகின்றன.
"அழிச்சி கிழிச்சி ஆட்டையை புதுசா வச்சிக்கலாம், வாறியா" - என்று அழைக்கிற வினயம், பெருங்குணம் அதற்குள் கொட்டுகிறது.
"உங்களில் ஓரிருவர் பார்வை‘நீ வேறு இடத்துப் பிள்ளை. உன்னைச் சேத்துக்கறதா’ - என்று விலகிப் போய் விடுகிறார்கள். போய்க்கொண்டேயிருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அந்நியமாதல் இவ்வாறுதான் நிகழுகிறது. அந்நியமாதல் தன்னிலேயே உற்பத்தியாகிறது. அந்நியமாகிப் போனதை எண்ணி, குமைந்து, உணர்ந்து எழுத்தில் பதிவு செய்து வைத்தல் மனசு அரிக்க, அரிக்கச் சொரிந்து கொள்ளும் சுகம்.
உன் நட்புக்கு வரவென்றே
சூசகம் சொல்கின்றன,
ஆனாலும் நான் நின்றபடி நிற்கிறேன்
நீங்கள் சென்றபடி இருக்கிறீர்கள்"
ஆனால் விமர்சனம், சுயவிமர்சனம் என்னும் இடத்துக்குக் கூட வந்து சேராதவர்கள், சேர விருப்பமற்றவர்கள் நிறைய நடமாடுகிற களம் இலக்கியக் களம்.
அந்நியமாகிப் போனதை உணர்ந்த போது,
"என்ன செய்யஎன்னும் சுய விமர்சனமாய் முடிகிறது.
நான்தான்
நாகரிகமாகிப் போனேனே"
நாகரிமாகிப் போதல் பல குணங்கள் கொண்ட ஒரு சொல். சாதாரண வாழ்வு முறையிலிருந்து விலகுதல், மக்களின் சிந்தனையிலிருந்து அப்புறப்படுதல், மேன்மக்களாகி விடுதல், இன்னொரு வர்க்கமாகிப் போதல், வேற்றுக் கிரகவாசியாய் செயல்படுதல் - என பல திசையாய் நடக்கிறது. மேலேமேலே போகப்போக நாகரீகமாகி விடுகிறோம். கீழே இறங்க இறங்க அய்க்கியமாகிப் போகிறோம். மேலே மேலே, கீழேகீழே - என்பவை மனித வினையாற்றல், வெற்றுச் சொற்கள் அல்ல. இதன் விளைவில் கிடைப்பவை நாகரீகமாகிப் போதல் அல்லது அய்க்கியமாதல்.
கவிதை வெளிப்பட்ட காலம் முக்கியமாகிறது - செப்டம்பர் 1975, கோவில்பட்டியிலிருந்து அண்ணாமலை என்ற இனிய நண்பர் நடத்திய 'நீலக்குயில்' இதழில்தான் கவிதை வெளியானது (அண்ணாமலை பற்றி - நீலக்குயில் இதழ்பற்றி கி.ராஜநாராயணன் விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார்). கவிதைகள், பாடல்கள், காட்டுப்பூக்கள் என்ற ஒரு தொகுப்பு மட்டும் ஜெயந்தன் கவிதைகளுக்கு அடையாளம். முதல் தொகுப்போடு கவிதை முயற்சி அல்லது கவிதையாக்கம் நின்று போயிற்று.
நீலக்குயில் - 1974, கணையாழி - 1775, கனவு - செப் - 1988, கணையாழி - செப். 1991, கவிதா சரண் - மார்ச் 1995, சுபமங்களா - 1996 - என ஒவ்வொன்றும் நீண்ட இடைவெளியின் பின் வெளியான கவிதைகள் . 1970, 1980 -களில் ஜெயந்தன் நாடகாசிரியராக, கதாசிரியராக வெகுசன ஊடகங்கள் மூலம் சென்றடைந்து கொண்டிருந்த காலம். இம்மாதிரி வெகுசன ஊடகங்களை ஏன் கவிதைகளின் வாகனமாக்கவில்லை, ஏன் சிற்றிதழ் தளத்தைத் தேர்வு செய்தார்? வணிகப் பத்திரிகைகளுக்கு பங்களிப்பு செய்தபோது, கதை, நாடகம் - போன்றவற்றை மேலோட்டமாகவும் (light reading), சிற்றிதழ்களில் உறைப்பாய், வீச்சுடைய, செறிவானவற்றையும் (serious literature) பதிவு செய்தார் என்ற 'சால்ஜாப்பை' இவருக்கு நீட்ட முடியாது. 70, 80 - கள் மருந்துக்குக்கூட கவிதைகளின் வாகனமாக வணிக இதழ்கள் இருக்கவில்லை என்ற நிதரிசனம் இவ்விடத்தில் சுட்டிக் காட்டலுக்கு உரியது.
ஏறக்குறைய ஒரு ஆண்டில் எழுதி முடிக்கப்பட்டவை மீதிக் கவிதைகள். ஓராண்டு அச்சிடும் முயற்சியில் கழிந்தது. அச்சாக்கும் முயற்சியிலிருந்தபோது, கவிதை வடிப்பதும், செப்பனிடுவதும் செய்து கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகள், அதற்கும் குறைவான காலத்தில் தொடர்ந்த வினையாற்றல் இத்தொகுப்பு.
நெடுங்கதை எழுதும் தொடர்காரியம் போல், அதே வேலையாக இருந்து கவிதைகளை எழுதி முடித்தார். தொகுப்பு வெளியான பின்னர் அவர் கவிதை ஏதும் எழுதவில்லை. தன் பணி முடிவுபெற்றது என்று கருதினார். என்னுடனான உரையாடலிலும் வெளிப்படுத்தினார். இங்கே அவதானிக்க வேண்டியது - கவிதைப் போக்கில், இது என்ன காலம் என்பதை அறிந்து கைப்பிடிக்கும் நுட்பம். வாசிப்பு, படைப்புத் தளம் காலத்துக்குக் காலம் எட்டி நடை போடுகிறது. கட்டம், கட்டமாய் நகர்ந்து, குறிப்பிட்ட காலத்தில் தாவல் அல்லது பாய்ச்சல் எய்துகிறது. அதுவே அப்போதைய கால இலக்கிய எல்லை. அதற்குத் தக அமைவன வெளிப்பாட்டு முறையும், எடுத்துரைப்புத் தளமும்.
ஒரு காலத்துக்குப் பாந்தமாயிருந்த பொருத்தமான மொழிநடை, மற்றொரு காலத்துக்கு எடுபடாது போகலாம்; எடுத்துக்காட்டு - 'வானம்பாடி' இயக்க காலத்தில் ஓங்கியிருந்த "பேச்சோசைக் கவிதைகள்”. எழுத்து இதழ்காலத்தில் பரவிய 'மவுன மொழி அல்லது அரூப எடுத்துரைப்புக் கவிதைகள். நேற்றைய வெளிபாட்டுமுறை, வடிவம் இன்று அந்நியப் பட்டுப் போகலாம், 'ஆடிப் பட்டம் தேடிவிதை' என்ற அனுபவச் சொல் இதற்கு முழுமையாய்ப் பொருந்துகிறது. எந்தக் காலத்தில் எந்த 'விதைப்பாடு' மகசூல் தரும் என்ற காலக் கணிப்பை எழுத்துக்காரன் கைக்கொண்டால், குறிப்பிட்ட காலத்தின் இலக்கிய முன்னோடியாக மாறுவான். இதையே கவிதை மொழி ஒன்றைக் கண்டடைதல் என்று மதிப்புரையில் இன்குலாப் குறிப்பிடுவார்.
எழுத்து மொழியின் உச்சம் உரைநடை எனில், பேச்சுமொழியின் உச்சம் நாட்டார் வழக்காறுகள். மக்கள் அரும்பாடுபட்டு குவித்து வைத்துள்ள வழக்காறுகள் சொல்லாடல், சொலவம், கதை, விடுகதை, பாடல் எனப் பலவகையின. நாட்டார் வழக்காறுகளிலிருந்து செழுப்பமான விளைச்சலையும், நவீன மொழியின் வீச்சையும் கலவை பண்ணி - உரைநடையில் புதுமொழியை உண்டு பண்ணியவர் கி. ராஜநாராயணன். கவிதையில் ஜெயந்தன்.
செழுப்பமான வழக்காற்றை நேரடியாய்க் கையாளுதல், அதே முறையில் புதிய வழக்காற்றை உண்டுபண்ணுதல் - என இரு வகைப்பயன்பாடும் காணப்படுகிறது. இதற்கு வழக்காறு தன் வயமாகியிருக்க வேண்டும். தன்வயமாதல் சட்டென்று உச்சியிலிருந்து தரையில் குதிப்பது போன்று அல்ல. அது ஒரு தொடர்வினை (process) . கிராமப் பிறப்பு, கிராமியத்தில் வாழ்தல், நகரம் நன்னினாலும் பூர்விக நினைப்பு என்னும் சுவாசிப்பைக் கொண்டிருத்தல், படைப்பில் பயன்பாடு என்னும் தொடர்வினையாகும்.
"சித்திரப் பூ தொட்டில் கட்டிநாட்டார் வழக்காற்றின் இந்த நிழல்மொழி லாவகமாய் கைவருகிறது ஜெயந்தனிடம்.
சீராட்டித் தாலாட்ட
அத்தை வரமாட்டா.
மாணிக்கத் தண்டையோட
ஏடு எழுத்தாணி வாங்கி
பாட்டன் வரமாட்டார்
பாதகத்தி என்னாலே"
"மலையோரம் கிணறு வெட்டி
மயிலைக் காளை ரெண்டு பூட்டி
அத்தை மகன் இறைக்கும் தண்ணி
அத்தனையும் சக்கரையே
***
வெள்ளைத் துணியா போவாடி
சித்திரச் சேலையா வருவாடி
பாட்டெல்லாம் பாடுவான்டி
பல்லை இளிப்பான்டி
'தட்டுப் பலாவே
நீ தயவு செய்தால் ஆகாதோ'
- நாட்டாரின் செழுப்பமான மொழியை இவ்வாறு நேரடியாய் உருவியெடுத்து வீசுதல் - இதை 'லாவிப்பிடித்தல்' என்பார்கள்.
ஆட்டில் பால் கறப்பது போல, அதற்கு ஈடான காரியம் இது. வெள்ளாடு ஒரு இடத்தில் நிற்காது. நின்றால் வெள்ளாடு இல்லை. மாடு என்றால் பக்கவாட்டிலிருந்து பால் கறக்கவேண்டும். ஆட்டுக்கு பின்னாலிருந்து பால் கறப்பார்கள். ஆட்டை லாவிப்பிடித்து, பின்னத்தங்கால்களை கவுட்டில் இடுக்கிக் கொண்டு கறப்பது 'முக்காலே மூணுவீசம்' பேருக்கு வராது, "அடியே, கொஞ்சம் போல பால் கறந்து தாயேன்டி" - என்று கெஞ்சுவார்கள். சிலபேருக்கு மட்டும் தான், ஆட்டில் கறக்க வாய்க்கும், நாட்டுப்புற வழக்காறுகளை கவுட்டில் இடுக்கி, லாவிப்பிடித்துக் கையாளும் வல்லமை - இக்கவிதைத் தொகுப்பில் ஜெயந்தனுக்கு வாய்த்துள்ளது 'காட்டுப் பூ' என்னும் தனித்தலைப்பில் மலர்ந்த கவிதைவனம் இது.
முன்னர் அச்சில் வந்த கவிதை ஏழெட்டுத் தேறும். கவிதை மொழியின் சூட்சுமத்தை, குறிப்பான காலத்தின் வெளிப்பாட்டு முறையை உள்வாங்கி ஒரு ஆண்டளவில் உட்கார்ந்து எழுதியவை மீதி அத்தனையும் . ஆனால் கவிதைத் தொகுதியும், கவிஞரின் திறனும் அறியப்படாமல் மறைப்பானது. இலக்கியத்தளத்தில் இவ்வாறான மறைப்புப் பிரதேசங்களை இயல்பாகவே உண்டாக்கிவிடுகிறார்கள். பேசியவர்களைப் பற்றியே பேசுவது, பேசுதல் என்பதினும் புலம்புவது, இந்தப் புலம்பல் பல பேரை மறைவுப்பிரதேசத்துள் காணாமல் அடித்துவிடும். எந்த ஒரு காரியமாயினும், தொடர்வினையாற்றல் முக்கியம். இவ்வாறு தொடர் வினையாற்றாது நிப்பாட்டிவிடுதல் இலக்கிய உலகத்துக்கு தொக்காகிப் போகிறது. இதுதான் கவிஞருக்கும் கவிதைக்கும் நிகழ்ந்தது.
2
அன்றைக்கு எதிரி துல்லியமாய்த் தெரிந்தான் - வெள்ளையன். எதிரில் நின்றான். நேர்ப் பகையை எதிரில் நின்று விரட்டியடித்த சாத்தியம் நடந்தது. நேர் எதிரி அற்றுப் போன நிலத்தில் எதிரி யார்? அவன் நெஞ்சுக்கு நேரே துப்பாக்கி காட்டுகிறான். அவன் இன்னொரு ரத்தம். இவன் நம் முடைய ரத்தமாக நமக்குள் இயங்குகிறான்."வாய்மையே வெல்லும் வெறும் தவிடா போச்சு- எதன் பெயரால் இவர்கள் அநியாயங்கள், அநீதிகளை காவடி தூக்கி ஆடுகிறார்கள்? சனநாயகம் - நமக்குள் இயங்கும் பகைமை அது! போலி சனநாயகம் என்ற புரிதலின்றியே நம்மில் இயங்குகிறது. அதன் ஒற்றை வேரபோல், ஆணிவேர்போல் காட்டுப்படும் வாக்குச் சீட்டு; இந்த மாய வளையத்துள் மக்கள் இருக்கும் வரை, மேலாண்மைக் கூட்டத்துக்குக் கொண்டாட்டம்.
வாயே வெல்லும் மணிமொழியா ஆச்சு
வாயே மூலதனமும் ஆச்சு
களஞ்சியமும் காணாமப் போச்சு.
பேசுறாங்க மேலிருந்து கீழா
கிழிருந்து மேலா
வடக்கிருந்து தெக்கா,
தெக்கிருந்து வடக்கா
எங்கிருந்து, எத்திசையிருந்து வந்தாலும்
பேசுறது ஒன்னேதான்
'என் நாற்காலி நிலைக்கோணும்
என் குடும்பம் தழைக்கோணும்,
பெரியாரும் போயாச்சு
பிமாராவும் போயாச்சு
ஓட்டுப் பொறுக்கும் வேகத்தில்
வேட்டி போறது தெரியாத இவனுக்கா
‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’
மனசுல தங்கும்?”
சாதி தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான நோய். இந்த 'ஒட்டுவார் ஒட்டி' நோய், இந்திய சமூகத்திடமிருந்து, நமக்குத் தொற்றிக் கொண்டது. கொஞ்சம் முந்திய காலத்தில் 'காலரா' என்ற நோய், பெருவாரி உயிர்களைக் காவு கொண்டு போனது. ஆனால் சாதி - என்னும் 'காலரா' - தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை - உயிரை இன்றும் நின்று வாரிக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. சாதியை ஒழிக்க இயலுமா? ஆனால் சாதிநோய் பிடித்தவர்களை கட்டிவைத்துத் தோலுரிக்க 'கனாக்' காண்கிறார் கவிஞர்.
"தொப்புள் கொடியோடு நாங்களுந்தான்
கைகொண்டு வந்தோம்
கால்கொண்டு வந்தோம்
நாசியும் நாவும்
தலைநிறைய மூளையும் கொண்டு வந்தோம்
அப்புறம் ஏன்டா நாய்களே
எங்களைப் பஞ்சமர் என்கிறீர்
பக்கம் வராதே என்கிறீர்
***
மக்களெல்லாம் கூடி - அவர்களை
கட்டி வைத்துத் தோலுரிக்க
கனாக் கண்டேன் தோழி"
- இந்தக் கனா எழுத்தில், வாசிப்பில் நிறைவேறும். நடைமுறையில் நிறைவேறுமா?
3
படைப்பில் மட்டுமல்ல, வெளியீட்டிலும் சுயத்தன்மை கொண்டவர். சுயத்தன்மைதான் தன் பொறுப்பில் கவிதை நூலை வெளியிட வைத்துள்ளது.விசையோடு படைத்துக் கொண்டிருந்த இருபது ஆண்டுகள் முன் அவரிடம் வெளிப்பட்ட சுயம், சுயமரியாதை பெரிது. 'நினைக்கப்படும்' - என்னும் குறு நாடகங்கள் மூலம் குமுதம் இதழில் அறிமுகமானார். வணிக ஊடகங்களில் பாதம்பதிக்க கூசி, அருவறுத்து ஒரு சாரார், மணிக்கொடி, சரஸ்வதி, தாமரை, எழுத்து, கசடதபற - என்றியங்கிய போது, தன் மக்கள் மீதான அக்கறையின் வெளிப்பாட்டை, தன் திறன் கொண்டு பீறிடும் படைப்பை வெகுசன ஊடகங்கள் என்ன செய்யும் என சோதித்துப் பார்க்க முயன்றார். தனது பாதங்களைப் பொசுக்கிக் கொள்ளவில்லை, காலடிச் சுவடுகளை அசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை, "என் காலடியின் கீழ் ஒரு படிக்கல்லாய் இருக்கக் கடவது" என்று அச்சு ஊடகங்களுக்கு கட்டளையிட்டார். வெகுமக்கள் பரப்பைச் சென்றடையத் தேர்வு செய்த வணிக இதழ்களினூடான நகர்வு, கவுரமான நகர்வாக இருந்தது.
அவர் மாற்று இலக்கியத்தளமாய் தோன்றிய சிற்றிதழ்களுக்கு நகர ஆரம்பித்தார்.நேரெதிர் நடைமுறை இது.மற்ற எழுத்துக்காரர்கள் சிற்றிதழ்களில் தொடங்கி பின்னர் வெகுசன ஊடகங்களுக்கு நகர்தல் வழக்கம்.ஜெயந்தன் எடுத்த எடுப்பில் வெகுசன இதழ்களில் தொடங்கி ,வலுவாய்க் கால் பதித்து பின்னர் சிற்றிதழ்த் தளத்துக்கு வருகிறார். சிற்றிதழ்களில் பயணித்தவரில் பெரும்பாலோனோர் மீது விழுகிற சாபம் அவர் மீதும் விழுகிறது. அந்நியமாதல் சிந்தனைவயமாய் வெளிப்படுகிறது. தன்னுடைய மனவெளியில் சஞ்சரித்து, தனக்குள்ளேயே உருவேற்றி - தன்மொழி என்ற தனிமொழியில் உலாவரத் தொடங்குவது அந்நியமாதல். அக்னிச் சட்டி ஏந்தி ஆடிய காலச் சாமியாடி அவரில் காணாமல் போகிறார்; தன்னை அடையாளப் படுத்துவது படைப்பு என்று அரூபச் சுருக்கிடலில் மாட்டிக்கொண்ட எழுத்துலகில் அவரும் பயணிக்கத் தொடங்கியது வேறொரு காரியத்துக்காக.அதுஅவர் முழுமையைத் தேடுபவராக மாறினார். முழுமை - முடிவில்லாதது. செல்லச் செல்ல நீண்டுகொண்டு செல்வது. முழுமையைத் தேடும் முயற்சியில் இருக்கிறபோது அவ்வக் காலத் தெளிதலுக்கு ஏற்ப படைப்புகள் வெளியாகியிருக்க வேண்டும். சிந்திப்பில், எழுத்தில், கலை வடிப்பில் முழுமையை நோக்கிய தேடலில், இலக்கியச் செயல்பாடுகள் சுருங்கின. இக்காலத்தின் அவரது சிந்திப்பின் அடையாளம் 'ஞானக்கிறுக்கன்' கதைகள்.
ஒரு கட்டத்தில் தன் எழுத்தின் மேல், தான் எதற்காக எழுதினோம், எத்தனைபேர் தன் எழுத்தை அறிவார்கள் என்ற கேள்வி உதிக்கிறது. எழுதுவதற்காய் 'கழிந்த வாழ்வின்' மீது சலிப்பு உண்டாகிறது. 'இறைவா எனக்கொரு வரம் கொடு' என்கிறார். கஷ்டப்பட்டு எதற்காகச் சிந்திக்கவேண்டும் என்று பேசத் தொடங்குகிறார்.
"சராசரி மனிதனாக்கி விடு என்னையும்
எல்லா சினிமாக்களையும் பார்க்க விடு
அதன் அபத்தங்களில் என்னையும்
சந்தோஷம் கொள்ளவிடு
இறைவா
எனக்கொரு வரம்கொடு
மனிதர்களின் பேச்சு
வெறும்பேச்சாகவே
எனக்கும் இருக்கட்டும்
உண்மை அர்த்தங்கள்
எனக்கு வேண்டாம்
என்னைப் பாராட்ட விடு
யாரையும் பாராட்ட விடு
எதையும் பாராட்ட விடு
குற்றம் பார்க்கும்
என் குணத்தைக்
கொன்று போடு.
நானும் டி.வி. பார்க்க வேண்டும்- ஒருநீண்ட கவிதை. வாழ்வின் சலிப்பை கவிதையாக உருமாற்றித் தந்திருக்கிறார். இதை இன்னொரு பக்கமாகப் பார்க்க முடியும்; பார்க்க வேண்டும். தன் விமர்சனமாகவும், சமூக விமர்சனமாகவும் ஒரே பொழுதில் வெளிப்பட்டுள்ளது. இலக்கியத்தில் ஆகச் சிறந்த படைப்புக்கள் அனைத்தும் தன் வாழ்வியலைப் பேசுகிறபோதே, தன் காலத்திலன் சமூகவாழ்வியலைப் பேசியவைதாம்.
நானும் தமிழ்ப் பாடல்கள்
கேட்க வேண்டும்
நண்பரோடு சிரிக்கவேண்டும்
எனது குடும்பத்தில்
எனது சுற்றத்தில்
நானும் ஒருவனாய் நிற்கவேண்டும்
மானுட சமுத்திரத்தில் நானும்
சங்கமித்துப் போக வேண்டும்
இறைவா,
எனக்கு இவ்வரங்கள் கொடு"
(நற்றிணை காலாண்டிதழ், ஜூலை–செப்டம்பர் 2014)
கருத்துகள்
கருத்துரையிடுக