கே.ஏ.குணசேகரன் நினைவேந்தல் உரை

(31-01-2016 ஞாயிற்றுக்கிழமை புதுவைப் பல்கலைக் கழக ‘கன்வென்ஷன் அரங்கில்’ நடைபெற்ற மண்ணின் கலைஞர் கே.ஏ.குணசேகரன் நினைவேந்தல் நிகழ்வில் ஆற்றிய உரையின் சில பதிவுகள்.) 



இவ்விடத்தில் ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் கடிதம் எழுதிவைத்து மரணம் எய்திய மாணவர் ரோஹித்தின் உயிரிழப்புக்கும், பல்கலைப் பணியிலிருக்கிறபோதே மரணமெய்திய கே.ஏ.குணசேகரனின் இழப்புக்கும் கண்ணுக்குப் புலனாகாத ஒரு இழை ஓடுவதைக் காணமுடிகிறது; இவ்வாறு நான் சொல்வதை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வீர்கள் என எனக்குத் தெரியாது. ஒரு தலித்தாக இருந்து இச்சமுதாயத்தின் சிறுமைகள், சூழ்ச்சிகளுக்கு ஈடு கொடுத்து வினையாற்ற வேண்டியிருந்தது. சிறுநீரக மாற்று அறுவைமருத்துவத்தின் பின் விடுப்பில் சென்று ஓய்வெடுத்திருக்க வேண்டும். விடுப்பில் செல்ல இயலாமல் தொடர்ந்து பணியிலிருக்க வேண்டிய நிர்ப்பந்தம்; நிறுவனத்தினுள் உடன்பிறந்த நோயாய் ஜீவித்துவரும் குணக் கேடுகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது, விடுப்பில் செல்லவோ, விருப்ப ஓய்வு பெறவோ தயாரில்லை. நோய்வாய்ப்பட்ட அவர் வாழ்வு தொடர்ந்து சித்திரவதைக்குள் மாட்டுப்பட்டது. இன்னொரு நண்பர் குறிப்பிட்டது போல, நிகழ்கலைத் துறைத் தலைவராக மட்டுமே இருந்திருக்கலாம்; புல முதன்மையர் (DEEN) பொறுப்பையும் சுமந்து அல்லல்பட்டிருக்க வேண்டாம்.


கிராமியக் கலைகள், இசை என அறியப்படும் மண்ணின் கலைகளை வெளிப்படுத்திய ”அக்கினி ஸ்வரங்கள்” என்னும் அவரது இசைப்பாடல் தொகுப்பு நூல் தொடக்க காலத்தில் எனது அணிந்துரையுடன் வெளியாயிற்று. இன்றைய காலம் போல் ஒலிப்பேழை, குறுந்தகடு என அறிவியல் தொழில் நுட்பங்கள் அன்று இல்லை; வாசிப்பு மட்டுமே நிலவிய நாட்கள் அவை. ”வடு” தன்வரலாற்றுப் புதினமும், தலித்திய , பெண்ணிய விடுதலையை முன்னிறுத்தும். ”பலியாடுகள்" நாடகமும் பரவலாக அறியப்பெற்றவை. வடு புதினம் ஆங்கிலத்திலும் ‘THE SCAR’ என்ற தலைப்பில் வெளியானது.


பெண் விடுதலை பேசும் நாடகம் ’பலியாடுகள்’. தமிழில் வெளியான முதல் தலித் நாடகம். 1992-ல் நிறப்பிரிகை தலித் இலக்கியச் சிறப்பிதழில் வெளியாகி, 1999-ல் நூலாக வடிவம் பெற்று - ஆங்கிலத்தில், மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப் பெற்று பாராட்டப் பெற்றது. புதுவைப் பலகலைக்கழக ஆங்கிலத் துறையில் 4 ஆண்டுகளாகவும், தமிழியல் துறையில் 4 ஆண்டுகளுக்கு மேலாகவும் பாடத்திட்டத்தில் வைக்கப் பெற்றுத் தொடருகிறது. டெல்லி தேசிய நாடகவிழாவில் அரங்காற்றுகை செய்யப்பட்டு பெரும் வரவேற்புப் பெற்றது. அந்நாடகம், அவர் பணியாற்றும் புதுவைப் பல்கலைக் கழகத்தில் , ‘உலக நாடகநாள் விழாவில்’ மதவாத சக்திகளின் எதிர்ப்புக் காரணமாய் நிகழ்த்தமுடியாமல் தடை செய்யப்பட்டதுதான் பெரும் நகைச்சுவை.

அவர் சார்ந்திருந்தது தலித் விடுதலை அரசியல்; அவர் மேலெடுத்தது தலித் விடுதலைக் கலைப் பணி.
”தலித் இல்லாமல் விடுதலை இல்லை
தலித் விடுதலை தனியே இல்லை“
- என்னும் விடுதலைக் கோட்பாட்டின் சாரத்தை கே.ஏ.குணசேகரன் முழுமையாய் உள்வாங்கியிருந்தார். களச் செயல்பாடு, கலை, இலக்கியச் செயல்பாடு அனைத்தையும் இவ்வகையில் ஒழுங்கமைவு செய்துகொண்டார். அதன் பிரகாரம் தலித் விடுதலையினை முதன்மைப்படுத்தி செயலாற்றும் இயக்கங்கள், மார்க்ஸீய – லெனினிய புரட்சிகர அமைப்புக்கள், இடதுசாரிகளின் நிகழ்வுகள் - என அவரது பங்களிப்பு நிகழ்ந்தது. அது பல்முனைப் பயன்தருவதாக இருப்பதைக் கண்டார். சமுதாய மாற்றத்தை விழையும் செயல்தளமுள்ள அனைத்து இயக்கத்தினரும் அவரைத் தமதாக எண்ணி பங்கேற்றிடச் செய்தார்கள். “எல்லோரும் இக்குழந்தையை இடுப்பில் தூக்கி இடுக்கிக் கொள்ள முடியும், இந்தக் குழந்தை எல்லோரின் கைகளுக்குள்ளும் தாவும்” என்ற சனநாயக நடைமுறையாக இதைக் காணவேண்டும். ஒடுக்கப்பட்டோரின் மீட்புக்கு சனநாயக சக்திகள் அனைவரின் குரலையும் கரங்களையும் ஒன்றினைக்க வேண்டியது கடமை என உணர்ந்து செயல்படுத்திய அதே நேரத்தில் முற்போக்கு முகாம் தவிர வேறு அரங்குகளில் ஒருபோதும் பங்கேற்றவரில்லை என்ற திடகாத்திரமான போக்கையும் காணத் தவறக் கூடாது.

அவர் மாணவராய், இசைக்கலைஞராய் உருவெடுத்து வந்தபோது அம்பேத்கர் நூற்றாண்டும் அதன் தாக்கமும் தமிழ்ச் சமுதாயத்தில் வினைபுரியத் தொடங்கிற்று. தலித்திய விடுதலைச் சிந்தனைகளுடன் மண்ணின் கலைகளை இணைத்து, சீராக வளர்த்துச் செல்லக்கூடும் என்பதனை நடைமுறையாக்கிக் கொண்டிருந்தார். புதிய புதிய எல்லைகள் காட்சிப்பட்டன .கிராமியக் கலையை, இசையை பழங்கருத்தினதும் பொழுதுபொக்குக்கான ரம்மியமாகவும் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் வரலாற்றை உசுப்பிவிடும் வாயிற்கதவுகளாக புதூ உத்வேகத்தை அதற்குள் நிகழ்த்திக் காட்டினார்.

அவருக்குள் ஒரு போராளி இயங்கினார்; எல்லோரும் பறை இசைத்தார்கள்; அவர் பறை முழக்கினார். பறை முழக்கமாக எழுந்ததற்கு காரணம் அவருக்குள் தொடர்ந்து உயிர்த்திருந்த போராளி தான்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ