கற்பக தரு சொக்கப்பனை ஆகிறது!


அரை நூற்றாண்டு முன் இராமநாதபுரத்திலிருந்து இராமேசுவரத்துக்கு தொடர் வண்டிப் பயணம் சென்றதுண்டுமா நீங்கள்? நான்கு தலைமுறைக்குப் பிந்தி வந்தவர்களா நீங்கள். தொடர்வண்டி, பேருந்து, மகிழுந்து எதில் பயணிக்கும்போதும் எல்லாமும் வாலாந்தரவை, உச்சிப்புளி என்னும் சின்னஞ்சிறு ஊர்களில் நிற்கின்றன. கண்பார்வை போகிறவரை கற்பகதரு என்று பெயர் சுமந்த பனந்தோப்புகள்; அச்சிறு நிலையங்களில் வண்டி நிற்கையில் பயணிகள் கையில் காலைப்பொழுதினும் பசியதாய் மிளிரும் தளிர்மட்டை கொடுக்கப் பட்டது. மட்டை பிடித்த பயணிகள் இனிய சுவைதரும் காலைப் பதநீர் சாப்பிட, ”எல்லாரும் சாப்பிட்டாச்சா” என்றொரு பார்வை வீசிவிட்டு - "இந்த மண்வாகுக்குத் தான் அத்தனை தித்திப்பான பதநீர் வரும்” என்றொரு சொல்லும் சொல்லிவிட்டு ’கார்டு’ பச்சைக்கொடி அசைப்பார். கொஞ்சம் முன்னால் ’சொட்டாங்கு’ போட்டு உள்ளிறக்கிய பதநீர்ச் சுவை அவர் நாக்கிலும் தங்கியிருந்தது சொற்களாய் வெளிப்பட்டது எனச் சொல்லலாம்.

50 வருடங்கள் முன் ஒரு இராமேசுவரம் தீவு இருந்தது. கடலுக்குத் தடுப்பு போட்டது போல் இராமநாதசாமி கோயில். காலகாலமாய் மண் உண்ட கடல் பொங்கிச் சுழற்றி விழுங்கியபோது, தெய்வமும் மனுசரும் செய்வதறியாது நின்றனர் - அது 1964.

சாமிக்கு கோயிலும் மனுசப் பிறவிகளுக்கு வீடுகளும் போக அந்தத் தீவில் பகல், இரவு பார்க்காமல் சத்தம் செய்யும் கற்பக தருக்கள்.

நெருநெருவென்ற மணலில் நெல் விளையாது. நாத்துச் சோளம் எங்கயாவது தென்படும். மா, புளி, முருங்கை , ஒடை; ஒட்டாரங்காடு, ஒடங்காடுதான் ஒருகால இராமேஸ்வரம் தீவு. ஒடை மரத்திலிருந்து உலுப்பிய காய்களை – காயவைத்து – நெற்றாக்கி – ஓலைப்பெட்டிகளில் கொட்டுகிறபோது கலகலவென்று சத்தம் வரும். ஆடு வளர்ப்போருக்கு அது இசை; ஆடுகளுக்கு குளிர்காலத் தீனி.

ஒட்டாரங்காடு, ஒடங்காடு தவிர மீதியெல்லாம் கற்பக தரு என்று அழைக்கபடும் பனந்தோப்புகள். மேலோகத்தில் கேட்டதெல்லாம் தரும் ஒரு பசு உண்டாம் – காமதேனு. பூலோகத்தில் மனுசன் கேட்காமலே கொடுக்கும் ஒரு காமதேனு - அது கற்பக தரு என்கிற பனை.

இராமநாத சுவாமி கோயில் மேலக் கோபுர வாசலில் அரசாங்கம் ஒரு கடை போட்டிருந்தது. பேர் கற்பக விருட்சம். 50, 60, 80-கள் வரை கடை இருந்தது. கற்பகவிருட்சத்தை பனைப் பொருட்கள் கூட்டுறவுக் கழகம் நடத்தியது. பனையிலிருந்து உண்டு பண்ணப்படும் கைவினைப் பொருட்கள் விற்பனையாகின.

ஒன்னாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எங்களூர் இடைநிலைப் பள்ளி. ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு சட்டாம் பிள்ளை (class leader). நல்லாப் படிக்கிறவன் இல்லையென்றால் வளர்த்தியாயும் வாளிப்பாயும் இருக்கிறவன் வகுப்புச் சட்டாம்பிள்ளை. வகுப்பில் கெட்டிக்காரப் பையனாக இருந்த போதும், ஒரு தடவை கூட நான் சட்டாம்பிள்ளை உத்தியோகம் பார்த்தது இல்லை. ஆள் குருவி மாதிரி இருக்கான். இவன் பிள்ளைகள என்னத்த மேய்க்கப் போறான் என்ற வாத்திமார்கள் நினைப்பு காரணமாக இருக்கலாம். பனைமரம் பாட்டு வருகிறபோது மட்டும் ராமர் வாத்தியாருக்கு என் வளமான உச்சநிலைத் தொண்டை தேவைப்பட்டது,
“பனைமரமே பனைமரமே
ஏன் வளர்ந்தாய் பனைமரமே?
நான் வளர்ந்த காரணத்தை
நாடறியச் சொல்லுகிறேன்”
1950-களின் தலைமுறை இந்தப் பாடலைப் பாடியிருக்கிறது. பள்ளிக் கொட்டகைக்குள்ளிருந்து நழுவிய பாடலை வெளியே இருந்த தலைமுறை கேட்டது. 1950கள், 1960-கள் தலைமுறையில் நீங்கள் இல்லை; பாடியதும் இல்லை. கேட்டதும் இல்லை.
“பனைமரமே பனைமரமே
பாதையில் ஏன் முளைச்சே?”
இதுக்கு எசப்பாட்டு பனையிடமிருந்து கேட்கும்.
”குடிக்கப் பதினியானேன்
கொண்டு விற்க நுங்கானேன்
கட்டில் கட்ட நாரானேன்
கயிறு திரிக்கத் தும்பானேன்
தூரத்துப் பொண்ணுகளின்
தூதோலை நானானேன்
வாழுகிற பெண்டுகளுக்கு
வர்ணச் சொளகு, வர்ணக் கொட்டான் நானானேன்
பெட்டி முடையும் ஓலையானேன்
பொல்லம் பொத்த நானானேன்
பாலகன் எழுதும் குருத்தோலை
பனங்கருப்பட்டியானேன்
சில்லுக் கருப்பட்டி
திங்க ’தகண்’ நானானேன்
பனங்கிழங்கு பனம்பழமும்
பதிஞ்சமனை விட்டமானேன்”
பனைமரத்தின் பாட்டை சின்னப் பயல்கள் மூச்சு விடாமல் பாடிக் கொண்டிருந்தோம்.

வேர் முதல் உச்சி வரை எடுத்துக்கோ, என்னை எடுத்துக்கோ என்று பனைபாடும் பாட்டு மேலே மேலே போய் கிண்ணென்று எங்கள் பள்ளிக்கூட உச்சியில் நின்றது.

2

தமிழ்நாட்டின் பலதிசைகளிலிருந்தும் இராமேசுவரம் தீவுக்கு வந்து போவார்கள். தனஷ்கோடிக் கடற்கரை அப்போது பிரபல்யம்.
”தனுஷ்கோடி பாம்பன் முதல்
தயங்காத ராமேசுவரம்
அநியாயப் புயலடித்து
அழிந்த கதை சொல்லிவாரேன்
அமைதியாகக் கேளும்
அந்தக் கதையை எந்த நாளும்”
அரை நூற்றாண்டுக்கு முந்தி நடந்த கடல்கோள் நம் நினைவு மூலையில் எங்கோ அரைவாசி கால்வாசிப் புள்ளியாய் மின்னித் தங்கியிருக்க, 1964-ல் புயலடித்து கடல் பொங்கி தனுஷ்கோடியை விழுங்கிய சோகம் நாட்டுப் புறக் கலைநிகழ்ச்சியில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.

வெளியூர்ப் பயணிகள் மட்டுமல்ல. தமிழ்நாட்டுக்கு அப்பாலிருந்து காசி யாத்திரை தொடங்கி இராமேசுவரத்தில் முடிக்கும் வடநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மொது மோதுவெனக் கூடும் இடம் மேலக்கோபுர வாசலிலுள்ள அரசாங்கத்தின் கற்பக விருட்சம் கடை.


  1. தண்ணீர் விட்டாலும் கீழிறங்காத பனைநாரில் முடைந்த நார்க் கொட்டான்
  2. குருத்து ஓலையில் செய்த அஞ்சறைப்பெட்டி
  3. நடுத்தர ஓலையில் பின்னிய கிளி
  4. சின்னச்சின்ன உருண்டைக் கல் உள் வைத்துச் செய்யப்பட்ட கிலுகிலுப்பை
  5. சுக்குச்சாறு, ஏலம், லவங்கம் போட்டுக் காய்ச்சிய கருப்பட்டி
  6. வெல்லப்பாகில் செய்த சில்லுக்கருப்பட்டி (ஓலைக்கெட்டானுக்கும் சில்லுக்கருப்பட்டிக்கும் பொருத்தம். வேறெதில் போட்டு வைத்தாலும் வேத்து ருசி வந்துவிடும். ஓலை மணமும் சேர்ந்து வருகையில் சுவை ஒரு அங்குலம் உயர்ந்துநிற்கும்)
  7. பனக்கிழங்கு - ஆசை தீர உரித்து சாப்பிட்டுக் கொண்டு நடப்பார்கள்
  8. பனம்பழத்தின் சாறும் சதையும் உருட்டித் திரட்டி பிசைந்து செய்யப்பட்ட பனாட்டு
  9. குருத்தோலை சீவி அழகு பண்ணி வடிவாய்ப் பின்னிய பாய். மடிப்புப் பாய், சுருட்டுப் பாய், எனப் பலவகை. எல்லாவற்றையும்விட பயணிகளுக்குப் பிரியமானது சாப்பிட உட்காரும் மெல்லிசு பனந்தடுக்கு.
பனை உண்டாக்கிய அதிசயப் பொருட்களை வெலியூர்ப் பயணிகள் ஒன்றுவிடாமல் கைப்பற்றிக் கொண்டு, திரும்பி தம்ஊருக்குப் போய்க் கால்வைக்கையில் காட்டுவதற்கு மட்டுமல்ல. சொல்வதற்கும் கதைகள் இருந்தன.

வேத்து ஊரில் மணமுடித்துக் கொடுத்த மகளைப் பார்க்க பெற்றவர்கள், உடன்பிறப்புகள் நார்ப்பெட்டியில் புளி, கருவாடு, முருங்கைக்காய் தலைச்சுமையாய்க் கொண்டு போய் இறக்கினார்கள். நார்ப்பெட்டி இல்லையென்றால் ஓலையில் நெருக்கிப் பின்னிய கடகாப் பெட்டி.

மஞ்சப் புத்து செட்டியார் சமூகம் மதுரை, பரமக்குடியில் உண்டு; கல்யாணத்தில் குருத்தோலையில் செஞ்ச அஞ்சறைப்பெட்டி, வெற்றிலைக் கொட்டான், வண்ண நார்ப்பெட்டி, வண்ணச் சொளகு என பனைச் சாமான்களை சீர்வரிசை செய்தார்கள். இன்றைக்கும் அச்சமூகம் வாழ்கிறது. ஆனால் பனைச் சீதனம் ஒரு சடங்காகவாவது தொடரவில்லை. சீர்வரிசையாய் குளிர்சாதனப் பெட்டி, சலைவைஇயந்திரம்,கிரைண்டர் என்று மற்ற சமூகங்கள் போல் கால்மாடு தலைாடு ஆக மாறிப் போனது மஞ்சப்புத்து செட்டியார் சமூகமும்.

3

சிறுபயல் என்று யாரும் சொல்ல முடியாதபடிக்கு ரத்தினம் தேவாங்கு மாதிரி இருப்பான். கை கால் வைத்த உடம்பு வெறும் கூடாக இருந்தது. என்ன சீக்கு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மரத்துக் கள் நல்ல மருந்து. தொயந்து ஒருமாதம் சாப்பிட்டால் வாசியாகி ஆள் தேறிவிடுவான் என்றார்கள். தினமும் அவன் அய்யா வாலாந்தரவை பனையடிக்குக் கூட்டிக் கொண்டு போக, பிறகு அய்யாவை விட்டுவிட்டு அவனே போனான். காலையில் எழுந்ததும் ஆள் தென்படவில்லையெனில் பனையடியில் கண்டுகொள்ளலாம். முப்பதே நாளில் பனந்தூர் மாதிரி ஆள் தெம்பாக அலைகிறான் என்றார்கள்.

சிலகாலம் முன் கள் இறக்க அனுமதியிருந்தது.

கள் காலை உணவானது. மருந்தானது. குறைச்சலான காசும் கொண்டது. கள்ளிறக்கம் தடைபட்டுப் போனதின் பின்னால் பதநீர் பாட்டிலில் விற்க ஆரம்பித்தார்கள். கற்பக விருட்சம் கடைதான் பாட்டில் பதநீரை முதலில் அறிமுகப்படுத்தியது.

பனம்பழத்தை அவித்து சாறெடுத்து செய்த ’பனாட்டு’ கிடைத்தது. கிழக்குச் சீமையினர் பனாட்டை சீர்வரிசையாகவும் அனுப்பினார்கள். இந்தப் பனாட்டு ஈழத்திலும் கிடைத்தது. அங்கேயும் இதை சீர்வைசயாய் செய்யும் முறை யுத்தம் தொடங்கும் முன் வரை இருந்திருக்கிறது.

கொட்டையைப் புதைத்து வைத்தால் கிழங்கு கிளம்பி வரும். பனங்கிழங்கைப் பறித்தபின், கொட்டையில் தேங்காய் மாதிரி தண்ணீர்ச் சதசதப்புடன் வெள்ளை முட்டை இருக்கும். பனை முட்டை என்பார்கள். அத்தனை ருசி.

பனை ஒரு வரம். அதில் விளையும் நுங்கு உடம்புக்கு ஆயிரம் வரம். சென்னையிலிருக்கிற சித்த மருத்தவர் சங்கீதா விளக்குகிறார்.

”கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு ; பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை பனையிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவகுணம் வாய்ந்தவை. நுங்கும் மருத்துவகுணம் மிக்கது. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி.சி. இரும்புச் சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம் மக்னீசியம் பொட்டாசியம் தயமின் அஸ்கார்பி அமிலம் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் துங்கை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியைத் தூண்டுகிறது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம்.”

இன்றைய நாளில் தேடித் தேடி அலைந்தாலும் நுங்கு கிடைப்பதில்லை. உடல் எடையைக் குறைக்க நுங்கைத் தேடி அலயலாம்.

தண்ணீருக்குப் பதிலாய் பதநீரில் அரிசி போட்டு பதனிச் சோறு செய்தார்கள். சர்க்கரை பொங்கல் மாதிரி ருசி. இன்றைக்குப் பதநீரே கிடைப்பதில்லை. அப்புறம்தானே பதனிச்சோறு.

மரத்தின் சிறு அம்சமான ஒரு நுங்கின் உயரம் இவ்வளவு என்றால் இத்தனை கர்ப்பங்களையும் சுமக்கும் கற்பகதரு உயரம் எவ்வளவு?

4

அன்று பூர்ணிமை! பூமியை குனிந்து குனிந்து முத்தமி்ட்டுத் தழுவிக் கொண்டிருந்தது தனுமை.

“இப்ப பனங்காட்டுக்கு போய் வரலாமா?” கேட்டவனை விசித்திரமான பார்வையால் ஏறிட்டார் போத்தையா.

நாட்டாரியலின் தெக்கத்தி ஆத்மா எஸ்.எஸ்.போத்தையாவின் ஊர் தங்கம்மாள்புரம். கரிசலும் செவலும் மருவிய பூமி. கீழ்திசை செம்மண்காடு; மேற்கிலும் தெற்கேயும் கரிசல். இருமண் பூமியில் மக்கள் தமக்கென தனி வாழ்க்கையை வணைந்திருந்தார்கள். கம்பு சோளம், மல்லி, மிளகாய் தானிய விளைச்சலுக்கு கரிசல் காடு: பதினி, நுங்கு, கருப்பட்டி, பனங்கிழங்கு, நார், ஓலை, கட்டில் பயன்பாடுகளுக்கு தேரிக்காடு.

கிழக்கு மந்தையிலிருந்து தொடங்குகிறது தேரிக் காடு. நிறைய தேரி மேடுகள். ஒரு உச்சியில் போய் அமர்ந்தோம்.
“கண்டொம் கண்டோம் சபையோரே
உம்மை கையெடத்துக் கும்பிடறோம் சபையோரே”
காலடிகளுக்குக் கீழே பனைக் கொன்னைகள் (உச்சி) வளைந்து வளைந்து ஆடுவது கிராமியக் கலைஞர்கள் ஆடிப்பாடி வணக்கம் செய்வது போலி்ருந்தது.

“இப்ப பனை எல்லாம் காணாமப் போய்ட்டிருக்கு” கவலையைப் பதிவு செய்தார் அண்ணாச்சி. பனையோடு சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பது உட்பொருள். எங்கள் காலடியில் கிடக்கும் பனங்கூட்டத்துக்கும் மேலே உயர்ந்திருக்கிறது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி. சுற்றிலுமுள்ள பத்து ஊர்களுக்கும் குழாய் பதித்து தண்ணீர் வழங்கல். நிலத்தடி நீர் உள்ளே போகப்போக கடல்நீர் உள்ளிறங்குகிறது. நன்னீர் உப்புக்கரிக்கிறது. வேரடி நீர்ப்பதமிழந்த பனைகள் மொட்டை மொட்டையாய் காய்ந்து கருகுகின்றன.
2002-அக்டோபரில் அமைதி ஒப்பந்த காலமாதலால் ஈழம் சென்றிருந்தோம். யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற ”மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டுக்குப்” போயிருந்த போது. கொழும்பிலிருந்து யாழ்பாணத்துக்கு தரை வழியேதான் சென்றோம். யாழ்நகர் சென்று சேரும் வரை சிங்கள இராணுவத்தால் சிதைக்கப்பட்டிருந்த யுத்தபூமியைக் கண்டுகொண்டே போனோம். குண்டு துளைக்காத ஒரு சுவரும் இல்லை. சாவு விழாத ஒரு வீடும் இல்லை. மொட்டையாகாத ஒரு பனையும் இல்லை என்றிருந்தது! இராணுவ செல்லடிகளால் தலை துண்டிக்கப்பட்டு முண்டமாய் நின்றன பனைகள்.

நாங்கள் தங்கியிருந்த நாட்களில் ஒரு நாள் அந்த விடுதலைப் புலிகளின் தலைமையகத்திலிருந்து ஒரு அறிவிப்பு வெளியாயிற்று. ”லட்சம் பனைகள் நடுவோம்”; மக்களோடு போராளிகளும் இணைந்து பனைநடும் பணியைச் செய்யத் தொடங்கினார்கள். அமைதிக் காலத்திலும் மக்களோடு இணைந்து சுய பொருளாதார வளர்ச்சியைத் திட்டமிட்டார்கள்.

யுத்தம் என்ற ’காடேத்து’ இல்லாமலே தமிழகத்தில் பனங்காடு மொட்டையாகிக் கொண்டிருக்கிறது. கடல் மேலாய்க் கிளம்பிய உப்பங்காற்றும் மே காற்றும் ராத்திரியெல்லாம் ஊருக்கு மேலாகப் பேசிக் கொண்டிருக்குமே அந்தச் சலசலப்பைக் காணோம் . மொட்டையாகிப் போன சம்சாரிகளின் இடத்தை கண்ணில் ஈரப்பசை இல்லாத வியாபாரிகள் பிடித்தார்கள். கோடரி இல்லை. கை ரம்பம் வேண்டாம். மோட்டார் பொருத்திய நவீன ரம்பம் கரகரவென்று அறுத்துத் தள்ளுகிறது. வெட்டுப்பட்டு, துண்டுபட்டு லாரியில் அம்பாரம்அம்பாரமாய் ஏற்றி செங்கல் சூளைக்குள் போகிறது.

ஓட்டு வீடுகளின் பாரம்பரியம் கேரளா; வைரம் பாய்ந்த பனைகளை வீடு கட்ட கொண்டு போகிறார்கள். மாடுகள் திறந்த டெம்போக்களில் கடத்தப் பட , லாரிகளில் கடத்தப்படுகின்றன பனைகள் அந்த பூமிக்கு.

”மாடு உங்க (உண்ண) ,
பனை உறங்க (வீடுகட்ட)
அது உங்க, இது உறங்க.” ஒரு சொலவடை போல, தென் வட்டார மக்களிடம் இந்த வசனம் முண்டுகிறது.

அடுத்த நூற்றாண்டு காண இன்னும் இருக்கின்றன 85-ஆண்டுகள். அடுத்த நூற்றாண்டுக்கு நடந்து போகக் கூடாது. ஓடி ஒரே தாவலில் அடைந்துவிட முயற்சி செய்கிறார்கள் வைகுண்ட ராஜன்களும் கே.ஆர்.பி.க்களும்: அடுத்த நூறறாண்டக்கு அழைத்துச் செல்லத்தான் இவர்களின் காலில் சக்கரம் கட்டிவிட்டிருக்கிறார்கள் இந்த அரசுகள்.

2000-த்தில் அமெரிக்காவி்ல் மத்திய நீதிபதியாக இருந்தவர் ஜெரோம் பெரீஸ் (Jerone ferres). அவர் வசித்தது சியாட்டில் நகர். வாசிங்டன் ஏரி என்ற கடல் அளவு ஏரி உண்டு சியாட்டில் நகரில்; ஏரிக்கரையின் மேல் மலைச்சரிவில் நீதிபதி வீடு: மலைவளமும் வனவளமும் உள்ள பெரிய எஸ்டேட் அது. நீதிபதியை, அவரது குடும்பத்தினரை நெடுங்காலமாய் உறுத்தி நமைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தது ஒரு பிரச்சனை. ஏரியின் நேரடிப் பார்வையை தடுத்தன நெடிய விருட்சங்கள்.

அமெரிக்காவில் ஒவ்வொருவர் கையிலும் சுடுகலன் (துப்பாக்கி) உண்டு, ஒருவர் மற்றொருவரைச் சுட்டுத் தள்ள , யாருடைய அனுமதியும் வேண்டியதில்லை. ஆனால் ஒரு மரம் என்றாலும் வெட்டி வீழ்த்த நகராட்சியின் அனுமதி வேண்டும்; இயற்கை ஆர்வலர்கள் போராடிப் பெற்ற சட்டம் இது. நீதிபதி அறியாத சட்டமா? வீட்டு முன் மலைச் சரிவிலிருந்த 120 மரங்களை வெட்டிச் சாய்த்தார். அவை அமெரிக்கர் நேசிக்கும் மேப்பிள் மரங்கள்.

நீதிபதி செய்தார் என்று கிஞ்சித்தும் கவலை கொள்ளாத இயற்கை ஆர்வலர்கள், வீட்டை முற்றுகையிட்டார்கள். வழக்குத் தொடுத்தார்கள். வழக்கின் தீர்ப்பில், ஆறு லட்சத்து 18 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ30 கோடி) அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் சிறைத்தண்டனை இல்லை. 120 கொலைகள் செய்தவரை எப்படித் தப்பவிடலாம் என்று கேள்வி எழுப்பியது சியாட்டில் டைம்ஸ் (Seattle times) நாளிதழ்.

தேக்கு, சந்தனம், செம்மரம் வெட்டப்படுவது குற்றம். பனைகள் குற்றவியல் சட்டத்தில் வரவில்லை. தேக்கும் சந்தனமும் செம்மரமும் செல்வம் கொழிக்கும் மரங்கள். ’வெம்பெறப்பாய்’ அலைகிற ஏழை பாழைகள்தாம் பனைகள். ஏழை என்றால் வெட்டுப்படலாம்தானே!

மனிதர்கள் மூளையில் 12% விழுக்காடு மட்டுமே பயன்படுத்தகிறார்களாம்; இப்படி ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது. மூளையின் மீதிப் பகுதியை 88% விழுக்காட்டை சும்மா உறையவிட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். மீதி மூளை மனுசனில் தூங்கிக் கொண்டிருக்கிறது. 12% மூளையினால் மட்டமே மனுசன் இவ்வளவு அழிவைச் செய்ய முடியுமென்றால், மீதி 88-ஐயும் பயன்படுத்தினால் இந்த பூமியை ஒரு நாளில் நாசம் பண்ணிவிடலாமே! இந்த 12%-ஐ சரியாகப் பயன்படுத்தினால் வருங்கால தலைமுறைக்கென்று மண்ணும் நீரும் நெருப்பும் காற்றும் ஆகாயமுமான இந்த பூமியைத் தக்கவைக்க முடியும் என்கிறார்கள்.
”மண்ணை நம்பி மரமிருக்கு ஏலேலோ ஐலசா
மரத்தை நம்பி கொப்பிருக்கு ஏலேலோ ஐலசா
கொப்பை நம்பி இலையிருக்கு ஏலேலோ ஐலசா
இலையை நம்பி கொழுந்திருக்கு ஏலேலோ ஐலசா
கொழுந்தை நம்பி பிஞ்சிருக்கு ஏலேலோ ஐலசா
பிஞ்சை நம்பி காயிருக்கு ஏலேலோ ஐலசா
காயை நம்பி பழமிருக்கு ஏலேலோ ஐலசா
பழத்தை நம்பி கொட்டையிருக்கு ஏலேலோ ஐலசா
கொட்டையை நம்பி மரமிருக்கு ஏலேலோ ஐலசா”
நமது வாழ்க்கை இந்த சுழற்சி வரலாறுதான். இந்த பூமி தனக்குள் ஒரு சுழற்சியைக் கொண்டிருக்கிறது. தன்னையொரு உயிரியாக இயக்கிக்கொள்கிற இயற்கையை உயரில்லா சவமாக ஆக்குகிறவனாய் மனிதன் சுறுசுறுப்பாக ஆகி விட்டான்.

தமிழனின் சுறுசுறுப்பு பண வேட்டையில் இருக்கிறது. தமிழன் தமிழன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோருக்கும் இந்தச் சுறுசுறுப்பில் குறைவில்லை. இப்போ பாவம் பார்த்தால் லாபம் ஈட்ட முடியாது. லாபம் என்பது நயத்தகு நாகரீகமான வார்த்தை.
”எதுவொன்றும் அழி எல்லாவற்றையம் அழி”

இன்றைய நீதி இது. இதுவே பனை நீதியும்.

வாழ்க்கைப் பயன்பாடுகளிலிருந்து முற்றாக நீக்கப்பட்ட பனை இப்போ எங்கே தென்படும்? வாருங்கள் இராமநாத சாமி கோயிலுக்கு. கோயில் அருகிலுள்ள திடலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகைத் திருவிழாவுக்கு மூன்றாம் கார்த்திகையில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். பனையை வெட்டி திடலில் நடுகிறார்கள். குறக்கு வசத்தில் பனையில் துளை போட்டு கம்புகள் சொருகுகிறார்கள். அவை படிக்கட்டுகள். படிக்கட்டகள் விழியே மேலேறி, உச்சியிலிருந்த காய்ந்த பனை ஓலைகளால் கூடாரம் போல் வேய்ந்துகொண்டு வருகிறார்கள். ஒல்லிக் குச்சிப் பனை ஒரு ஆலமரத்தூர் அளவுக்கு பருமனாகி, தன் ஓலைகளால் தானே கருகிப் பலியாக காத்திருக்கிறது. மூன்றாம்நாள் சொக்கப்பனை கொளுத்துகிறார்கள்.

கோயில் சடங்கில் இருக்கிறது பனை. தமிழ் மண்ணின் அடையாளம் சொக்கப்பனையாய் கருகுகிறது.

- பா.செயப்பிரகாசம் முகநூல் (24 நவம்பர் 2015)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?