பசித்து அலையும் சொல்லின் கதை - மணிமாறன்

(திரு மணிமாறன் - எழுத்தாளர், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், கரிசல் இலக்கிய ஆய்வாளர், விருது நகர்)

நடந்து போகும் பாதைகளெங்கும் வெள்ளைக் கற்கள் துருத்தி நிற்கின்றன. ஒரு உயிரான நிலத்தை பிளாட்டாக மாற்றி, கரிசல் காட்டு சம்சாரியின் மஞ்சள் பைக்குள் கசங்கிக் கிடக்கும் ரூபாய் நோட்டுகள் பலியெடுத்தது விவசாயியின் நிலத்தை மட்டுமல்ல; ஒரு காலத்தின் அசலான வாழ்க்கையையும் சோ்த்துத் தான். பருத்திக் காடாக வெடித்துக்கிடந்த காட்டோரத்துக் கண்மாய்க் கரைகள் நீரற்று வரண்டு கிடக்கிறதே, எந்த மாயாவி நிகழ்த்திய சூது இது என்கிற ஈரக்குலையை அறுத்திடும் கேள்வியைக் கரிசலை நேசித்துக் கிடந்த மனிதக்கூட்டத்தினரால் கேட்காமல் இருக்க முடியாது. விளைநிலங்கள் செழித்திட பொங்கல் படையலிட்டு, சேவல்பலி தந்த விவசாயிகள் அற்றுப்போன வெம்பரப்பாகிக் கொண்டேயிருக்கிறது கரிசல் ஊா்கள்! எல்லாவற்றையும் விற்றுத் தொலைத்து காடோ. பரதேசமோ கிளம்பி சென்று கொண்டேயிருக்கிறது! நிலத்தைப் பண்படுத்தி, பதப்படுத்தி வாழ்வின் நுட்பங்களில் லயித்திருந்த விவசாயப் பெருங்குடி - காலாதி காலத்திற்கு முன்பு படிந்த ரத்தக்கறை வெட்டுக்கல்லில் தோய்ந்திருக்க, தீபமற்ற விளக்குகள் எண்ணெய் பிசுக்கின்றி காய்ந்து கிடக்கின்றன காவல்தெய்வங்களின் கோவில்களில்!

பெரும் பஞ்சங்களில் கூட தப்பிப்பிழைத்த இந்த ஜனக்கூட்டத்தை துரத்தியடித்துக் கொண்டிருக்கும் வா்த்தகச் சூதாட்டத்தை எவா் கதையாக்குவது? அழகியலும், நுட்பமும் பொங்கிடும் வாழ்க்கையைக் கலையாக்கிடும் கதைக்காரா்களின் காட்சி எல்லைக்குள் தட்டுப்படச் சாத்தியமற்ற மனித வாழ்வினை, தங்களுடைய கதைகளுக்குள் வரைந்து காட்டியவா்களாக எப்போதும் முற்போக்காளா்களே இருந்திருக்கிறார்கள். கதைக்குள் கொள்கை கொடிபிடிக்கிறது என்கிற முரட்டு விமா்சனத்தைப் புறந்தள்ளி, வாழ்வின் அசலான பக்கங்களினை எழுபதுகளில் எழுத்தாளா்கள் எழுதிச் சென்றனா். அந்த எழுத்தாளா் படையின் மிக முக்கியமான படைப்பாளி பா.செயப்பிரகாசம்.

பா.செ கதைகளை, கரிசல் வாழ்வின் அசலான பக்கங்களைப் பதிவு செய்தவை என ஒற்றை வரியில் சுருக்கிட முடியாது. அவற்றின் எல்லை விஸ்தாரமானது. கரிசலில் விளைந்த காட்டுச் செடிதான். ஆயினும் அது ஊரெல்லாம் சுற்றியலைகிறது. கரிசலின் வெம்மையைச் சுமந்த வார்த்தைகளால் வரையப்பட்டிருக்கும் பா.செயப்பிரகாசத்தின் கதைகள் தமிழ்ச்சிறுகதைகளின் புதிய சொல் முறைகளை உருவாக்கியது. எழுபதுகளில் துவங்கி இன்றைக்கு வரையிலும் கதை எழுதிக் கொண்டிருப்பவா் பா.செ. அவருடைய கதையின் ஆன்மா, பசித்துக் கிடக்கும் மனிதா்களின் துயருற்ற சொற்களால் எழுதப்பட்டவையே. களச் செயற்பாட்டாளர்களின் கதைகளால் கலைத்தன்மையை அடைதல் சாத்தியமில்லை என்று அப்போது வரையிலும் நிலைத்திருந்த கருத்தியலை தன்னுடைய கதைச்சொற்களைக் கொண்டு உடைத்து நொறுக்கியவா் பா.செயப்பிரகாசம்.

“வளரும் நிறங்கள்” கதைக்குள் கீகாட்டான் என்று ஒரு சொல் வருகிறது. கிழக்கிலிருந்து பசியைத் துரத்திட மதுரைப்பட்டணம் வந்திறங்கியவா்கள் என்று அா்த்தம். தூரம் தொலைவிலான கிழக்கல்ல, இராமநாதபுரத்திலிருந்து பருத்தி ஆலை முதலாளிகளின் அடியாட்களாக இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் அழைத்துவரப் பட்டவா்கள் அவா்கள்.

இருபது வருடத்திற்கு முன்பு ஊரை மிரட்டிக்கொண்டிருந்த கீகாட்டுச் சண்டியா், மில் முதலாளியின் அடியாள்,காலமாற்றத்தில் தொழிற்சங்கத்தின் போராட்ட போஸ்டரை ஒட்டிக்கொண்டிருக்கிறார். யார் மாற்றியது அவரை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவில்லை பா.செயப்பிரகாசம். காலம் ஒரு அசாத்தியமான ராட்சசன் என்கிற புரிதல் மட்டும் வாசக மனதிற்கு வந்து சேர்கிறது.

கிராமத்து வாழ்க்கையை ரொமாண்டி சைஸ் பண்ணுவது என்கிற பம்மாத்து எதுவும் பா.செயப்பிரகாசத்திற்கு கிடையாது. அதனால்தான் அவரால் வறுமை பிடுங்கித் தின்று இற்று நொறுங்கிய மனிதா்களின் கதைகளை உக்கிரமான மொழியில் எழுத முடிந்திருக்கிறது. “அம்பலகாரா் வீடு”, “ஒரு ஜெருசலேம்”, “தாலியில் பூச்சூடிவா்கள்” போன்ற காலம் கடந்து நிற்கும் பா.செ.வின் கதைகள் யாவுமே எளிய மனிதா்களின் அசலான வாழ்க்கைப் பாடுகளையே எடுத்துரைக்கின்றன.

இந்தியப் பெருநிலத்தின் பெருந்துயரமாக மேலைத்தேய ஆய்வாளா்களின் எழுத்துக்களுக்குள் தேங்கியிருக்கும் மகாபஞ்சங்களைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளால் நம்முடைய வரலாற்றின் பக்கங்கள் நடுங்கிடவே செய்கின்றன. உயிரை விதைத்து எரியூட்டிக் கொண்டிருக்கும் பசியைத் துரத்திட கரிசல் சம்சாரிகள் பட்டபாட்டினை எழுத்தில் கொண்டு வந்து சோ்ப்பது எளிதில்லை தான். எழுதிக் கடக்க முடியாத வார்த்தைகளுக்குள் பசியின் ரேகைகள் ஓடிகெ்கொண்டிருக்கிறது; இன்று வரையிலும் கூடத் தாயின் மடியில் முட்டிப் பாலருந்திட தவித்த குழந்தை, தன்னுடைய பசித்து ஏங்கிடும் கண்களுக்கு முன்பாகவே இற்று உருக்குலைந்து விழுத்திடும் தாயின் உடலை எப்படி மறந்திடும்? ஆற்றிட முடியாத பெரும்வடு அது.

கிராமத்து வாழ்வினை எழுதுவது என்று முனைகிற எழுத்தாளனை சவாலுக்கு அழைப்பது சாதியின் வோ்கள் ! இன்றைக்கும் ஆழப்படிந்திருக்கிற அந்த உவர் நிலத்தின் வாழ்க்கையை எழுதும் போது , பிற்படுத்தப்பட்ட சாதியினராயிருந்து, இடைநிலைச்சாதியாய் உய்வுபெற்றுவிட்ட நிலையில் சாதிஅகம்பாவத்தையும் கூடவே உயர்த்திக்கொண்டு போகிற அவர்கள், சாதியால் வடிவம் பெற்றிருக்கிற கிராமங்களின் ஒழுங்கு குலைவதைப் விரும்புவதில்லை என்கிற அசலான உண்மையை எழுதிய கதைக்கு “சாதி” என்கிற பெயரை வைத்திருப்பார் பா.செ.
”உள்ளே நிற்கிறதுக்கு இடம் இருந்தா போதும். பெண்டு பிள்ளைக முதற்கொண்டு ஒரு சாதி முழுவதும் பஸ்கூரை மேலே ஏறியது. நாயக்கமாரு எல்லாம் உட்கார்ந்திருக்கிறபோது நம்ம என்ன நிக்கிறது? இப்ப நம்ம அவனுக தலைக்கு மேலேல்ல உட்கார்ந்திருக்கோம்” பஸ்ஸின் மேற்கூரையில் பயணிக்க நினைத்த இந்த மனநிலையை எப்படி உள்வாங்குவது? தனக்குத் கீழே ஒரு சாதி இருக்கிறது என்கிற வெட்டிப் பெருமித உணா்வினை மனதிற்குள் கெட்டிப் படுத்துவதில் தான் பிராமணிய தா்மத்தின் தந்திரம் ஒளிந்திருக்கிறது என்பதை நுட்பமாகப் பதிவு செய்த காட்சியிது. தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவாகியிருக்கிற ஆதிக்கத்ததிற்கு எதிரான கலகக்குரலின் துவக்கப் புள்ளியையும் கூட பா. செயப்பிரகாசத்தின் கதை மாந்தா்கள் துவங்கிவிட்டார்கள். அப்படியான அசாத்தியமான கதாபாத்திரம் “தாலியில் பூச்சூடியவா்கள்” கதையினில் வருகிற தைலி.

கரிசல்காட்டு எழுத்தைப் பின் தொடா்பவராக பா.செயப்பிரகாசத்தை வகைப்படுத்த முடியாது. கி.ரா.வும், இன்ன பிற கசரிசல் கதைக்காரா்களும் காட்டும் மனஉலகம் வேறு. இவரின் கதை மனம் வேறு என்று படுகிறது. சக கருணையும், துயரத்தில் பங்கேற்கிற மனிதா்கள் நிறைந்த பூமி அன்பும், கருணையும் பொங்கி வழியும் மனித மனதிற்குள் தான் வக்கிரம் எனும் குணமும் நிறைந்திருக்கிறது என்பதையும், வா்க்ககுணமெனும் ஒரு வகை மாதிரியையும் தன் படைப்புகளில் படரவிட்டவா் பா. செ . அதற்கான அழுத்தமான சாட்சியம் “மூன்றாவது முகம்” எனும் கதையாகும.

ஒரு பிரம்மாண்டத்தின் துயரத்தைச்சொன்ன கதை” அம்பலக்காரா் வீடு”! சாமி கொண்டாடி மட்டுமல்ல, ஊருக்குள் ”பெத்தாயல்லோ” என தெலுகில் ராகமிழைத்து வரும் பாம்பாட்டிகள், பிச்சைக்காரா்கள் என எவரும் கையேந்தி பசியாற்றிய வீடு இது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அம்பலகாரர் வீடடைந்த சாமி கொண்டாடி மட்டுமல்ல, தொலைந்த வசீகரம் கண்டு அவனின் உடுக்கையும் தீச்சட்டியும் கூட தடுமாறுகின்றன. தன் சக்தியெல்லாம் திரட்டி உடுக்கடிக்கிறான். அவனின் நினைவில் அம்பலகாரர் இறந்ததும், அவருக்குப் பிறகு வீட்டம்மாவும் இறந்திருக்கலாம். ஆனாலும் சிரித்த முகத்துடன் தன்னிடம் திருநீறு வாங்கிய சின்னப் பெண் நினைவுக்குள் வர ”அம்மணீ” என அழைக்கிறான். தேவி என அழைக்கும் போதே கேட்ட சிரிப்பொலியின் நிறம் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தும் போதே, கோட்டைச் சுவரைத் தாண்டி ஓடுகிற வேட்டி கட்டிய இளைஞனின் துள்ளலில் எல்லாம் தெரிந்து விடுகிறது. வோ்த்துக் களைத்து தட்டில் பணம் வைத்த தேவியைக் கண்டு பதறிய சாமி கொண்டாடி, தான் சோ்த்த தானிய தவசங்களைப் போட்டது போட்டபடி வெளியேறுகிறான் துக்கமாக. வறுமையும் துயரமும் சகலத்தையும் அழித்து எழுதிய கதையிது. வாசகனை நனைத்திடும் கண்ணீரால் எழுதப்பட்ட பிரதி அழிவதும் நிஜம். அமைப்பிற்குள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலங்களில் எழுதப்பட்ட கதையிது என்பதையும் சேர்த்துத் தான் சொல்ல வேண்டியுள்ளது.

கரிசல் வாழ்வை மட்டும் எழுதியவரில்லை பா.செயப்பிரகாசம். சென்னையில் வாழ்வைத் தொலைத்துத் தடுமாறும் தெக்கத்தி ஆத்மாக்களின் துயரங்களையும் கூடக் கதையாக்கியிருக்கிறார். “ஆறு நரகங்கள்” என்கிற ஒற்றைக் கதை போதும் இவா் எவரின் துயரங்களைப் பாடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள. வனத்து மனிதா்களைத் துயருறச் செய்து வன்முறையாட்டம் நிகழ்த்திடும் வனத்துறையின் ஆதிக்கத்திமிரை, நீதிமன்றங்களில் உறைந்திருக்கும் வா்க்கச் சார்பை (இருளுக்கு அழைப்பவர்கள்) அரசியல் செயல்பாட்டிற்கான கருவியாகத் தன் கதைகளைக் கண்டடைகிறார் பா.செயப்பிரகாசம். என்னவாக அமைந்திருக்கிறபோதும் அவருடைய மொத்த கதைகளையும் வாசித்து முடிக்கிற போது பசியில் அசையும் உயிர்களும், நிலத்தில் மல்லுக்கட்டும் மானாவாரி சம்சாரிகளும், அக்கினிச்சட்டி ஏந்தி குதித்தாடும் பெண் சாமியாடிகளும் நிழலாடிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ