மரணத்துள் வாழ்வு

அவள் கைகளில் கண்ணாடி வளையல். உடைந்த கண்ணாடி வளையல்களை துண்டுத்துண்டாகச் கோர்த்து கழுத்தில் பாசிமாலையாகப் போட்டிருந்தாள். அது அந்நாளைய வழக்கம். முந்திய காலத்தில் கல்யாணம் மூன்று நாள், ஏழு நாள் நடக்கும். மூன்றாவது நாள் அலங்கரித்த பல்லக்கில் ஏறி மாப்பிள்ளையும், பொண்ணும் பட்டணப்பிரவேசம் போவார்கள். பட்டிணம் என்று சொல்வது அந்த குக்கிராமத்தை. பழங்கால மன்னராட்சியில் மக்களைக் காண மன்னர் நகர்வலம் போனார். அப்போது நகர் ஆக இருந்தது. இருநூற்றாண்டுகளின் முன் பட்டணம் ஆனது. கிராமியத் தெருக்களில் வலம் வருவது பட்டணப் பிரவேசம் என மேல்நிலையாக்கக் கருத்தில் அழைக்கப்பட்டிருக்கும்.

கோயில் தேரில் தொங்கும் தொம்பைகள் போல் பல்லக்கில் நான்குபக்கமும் கண்ணாடிப்பாசிகளால் ஆன தொம்பைகள் ஆடின. மாட்டு வண்டிக்கு மேல் அமர்த்திய பல்லக்கு மேடு பள்ளமான நொடிகளில் கடக்கும்போது, ஜல் என்ற இனிய நாதம் கேட்க சிறுமிகள் காத்திருப்பார்கள். அப்போது பாசிகள் ஜல ஜல சத்தத்துடன் உதிரும். உதிர்ந்த பாசிமணிகளை கோர்த்து அந்தச் சிறுமி கழுத்தில் தொங்கவிட்டிருந்தாள். எண்ணெய் ஈரம் காணாத தலைமுடி விறகுச் சிலும்புகளாய் கிடக்க, உடம்பில் மேல்சட்டை இல்லாத அந்த ஒன்றரைக்கண் என்னைப் பார்த்தது.

அந்த ஊர் மந்தைப்புஞ்சையில் காலடி வைத்ததும் பாவாடை கட்டிய ஒன்றரைக் கண் கேட்டது.

”நீ என்ன வர்ணம்?”

கரிசல் குளத்தில் இறங்கி எங்கள் ஊருக்கு பதினோரு கி.மீ., நடக்க வேண்டும் ஒரே வாலாய் இடையில் ஊர் எதுவும் இல்லை. கரிசல் காங்கை வீசியது. பண்ணிரெண்டு வயதின் எனக்கு அவள் பேசியது புரியவில்லை. என்ன என்பதுபோல் ஏறெடுத்துப் பார்த்தேன். என் பார்வைச் சூட்டில் அவள் கொஞ்சமாவது அலுங்கியிருக்க வேண்டும்: அல்லது ’பொசுங்கட்டை’யாகியிருப்பாள் என நினைத்தேன்..

”நீ என்ன சாதின்னு கேட்கேறேனில்லை”

உனக்கு எதற்கு சொல்ல வேண்டும் என்பது போல் எட்டு வைத்து நடந்தேன்.

கருக்கு அழியாமல் ஞாபகத்தில் தங்கிவிட்ட சம்பவம் இன்னும் இங்கே கூத்தாடும் சாதிகளைக் குற்றம் சொல்கிறது. சாதி மதம் என்ற எல்லாக் குதிரைகளின் லகானும் மனிதன் கையில் இருக்க , இவன் சவாரி செய்வது போய், மனிதன் மீது சவாரி செய்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1996-ல் கவிஞர் இளசை அருணாவின் ”ஒரு கவிஞன் சொன்ன கதைகள்” நூல் வெளியீட்டு விழா.

இளசை அருணாவின் அழைப்பிதழ் கிடைத்த போது, சென்னையில் மழைக்குப் பதிலாய் இடி பெய்து கொண்டிருந்தது. இரவு 9 மணி முதல் 11 மணிவரை அலைஅலையாக நிரை பிடித்தது போல் ஒரு முனையில் இடித்து மறுமுனை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன இடிகள். மின்சாரம் அறுந்து, விளக்குகள் செத்துஇருண்ட பூமியில் மஞ்சள் சாரைப்பாம்பு போல் இடிகள். வெள்ளைநிறம் இல்லை. இயற்கையைக் கடந்த நிறம். இதுவரை ஆடாத தாண்டவம். மக்களுக்கு உயிர் மீதான பயம் வந்தது. “இடி விழுந்தான் கூத்தை இருந்து இருந்து பாரு” என்கிற கதையாய் ஆகிவிடுமோ என்று அஞ்சிய அதே நேரம் தான் ஓட்டப்பிடாரத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.

வரலாற்றை மாற்றி எழுதுவதற்காக, வீரம் விளைந்த உயிர்கள் விதைத்த தென்மாவட்டங்களில் சாதி இடி இடித்து, ஊரூராக மனிதர்களை வெட்டி வீழ்த்தி ஓடிக் கொண்டிருந்தார்கள்.

பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திடப் பிறந்த பாரதி பிறந்த பூமி,
பரலி சு.நெல்லையப்பர் நடந்த மண்.
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ
பாரினில் மேன்மைகள் வேறினியார்க்கோ –
என்று பதை பதைத்து ஈரல் குலை துடித்து செக்கிழுத்துச் செக்கிழுத்துச் செத்துச் செத்து சுண்ணாம்பாகிய வ.உ.சி என்ற புயல் பயின்ற சீமை -

வா மகனே என்று வாஞ்சையோடு நெஞ்சைத் தடவினால் வயிற்றிலிருப்பதையும் வாந்தி எடுத்துக் கொடுக்கும் வாஞ்சையுள்ள சனம் வாழுகிற பூமி-

இப்போது தாழ்த்தபட்ட மகனின் ரத்தத்தால் மெழுகப்படுகிறது.

மரணக் காங்கை வீசுகிற கரிசலில், கொஞ்சம் மண்ணெடுத்து முகர்ந்தேன். ரத்த வாடை!

மனித நெறிகளின் விளிம்புகளுக்கு அப்பால் புரண்ட அந்தக் கொடூரங்களை ஒரு கவிதையாக்கித் தான் தூர வீசியெறிய முடிந்தது.
அவன் ஒருவன், வந்தவர் பலர்;
கர்ப்பவதியாய் அசைந்தது காற்று
அத்துவானக் காட்டில் அழுதது நிலா
ஈசான மூலை இருண்டு இருண்டு
மைக்கூடாய் கறுத்தது மழை மேகம்.
"எங்கிருந்தடா நீ?”
எதிர் வந்தவர் கேட்டனர் அவனை.
வாது சூதறியா வெள்ளந்தி வந்த ஊர் காட்டினான்
”பள்ளர்புரமா நீ, பழி எடுங்கடா அவனை”
தலை மேல் உயர்ந்த மரணத்தை
அடையாளம் கண்டு அலறினான்
”அண்ணே நா நம்ம சாதி”
கேட்பதற்கு இல்லை மனித சாதி.
இரவு முழுவதும் பெய்கிறது மழை.
மீண்டும் பகலிலும்.
வெட்டரிவாளுக்கு மழையா வெயிலா?
மழை நீரின் நிறம் சிவப்பு.
மற்றவர்க்கு வாழ்வில் மரணம்
எம் காட்டில் மரணத்தில் வாழ்வு
சாதி என்ற சுவரை ஒரு கவிதையால் மட்டும் தாண்ட முடியும் என்று நான் நம்பவில்லை.

2

2003 பிப்ரவரி மாதத்தில் காரைக்குடி புத்தகக் கண்காட்சியில் உரை நிகழ்த்தச் சென்றிருந்தேன். சாதியச் சொல்லாடல், சொலவடைகள், சாதிய வசவுகளை ஒரு நாள் வாழ்வில் எவ்வாறெல்லாம் இந்த மனுசப் பிறவிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை மையமிட்டு என் உரை அமைந்தது. சாதியச் சிந்திப்பு இல்லாது தமிழர்களின் ஒரு நாள் ஆட்டை கூட நடைபெறுவதில்லை என்று விளக்கினேன். ஆனால் பேசி முடித்து வெளியேறியபோது ஒருவர் வழிமறித்தார். அவர் எந்த சாதி என நான் அறியேன். காரைக்குடி உள்ளுர் நண்பர்கள் அறிவார்கள் போல, எவராகவாவது அவர் இருந்துவிட்டுப் போகட்டும்.

”அஞ்சு வருசமா புத்தகக் கண்காட்சி நடத்திட்டு வர்றோம். இதுவரை ஒருத்தர்கூட சாதி பற்றிப் பேசினதில்ல. நீங்க இன்னைக்குப் பேசிட்டீங்க” சடைத்துக் கொண்டதுபோல் தெரிந்தாலும் குற்றம் சாட்டுவது போலத்தான் பேசினார். வாது செய்ய, வாக்குவாதம் பண்ண முஸ்தீப்போடும் வந்திருந்தார். பேருந்து பிடித்து ஊர் திரும்பும் அவசரத்தில் இருந்தேன். முறுக்கிக்கொண்டு அடிக்க வருபவர் போல் அவர் கேட்டதற்கு நின்ன நிலையிலேயே பதில் அளித்திருக்க முடியும். அவருடைய நல்ல காலம் எனக்கு நேரமில்லை.

சொலவம், சொலவடை என்று சொல்லப்படும் பழமொழிகள் குறிப்பிட்ட கால சமுதாய அமைப்பு முறையை அம்பலப் படுத்துகின்றன. குறிப்பிட்ட சமுதாயத்தின் உளப்பாங்கு, மனக்கடடமைப்பு, உறவுநிலை, குணவாகு போன்றவைகளுக்கு அளவெடுத்து தைத்த சட்டைகள் அவை. ஒரு பழமொழியைச் சொன்னால் அக்காலத்திய வரலாறு, வாழ்வியல் முன்னால் வந்து நிற்கும். பழைய பார்வையை, வரலாற்றை நாம் கடந்து வந்துவிட்டோம். அதைக் கட்டியழ வேண்டிய தேவையில்லை. இன்றும் சில பேரிடம் அந்த ஈரஞ் செமித்துப்போகாமல் தங்கியிருக்கிறது என்பதுதான் என் பேச்சின் சாரம். இதைச் சுட்டிக் காட்டிப் பேசியதற்குத்தான் அந்த ஆள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு முட்டிக் கொண்டு நின்றார்.

”ஒரு நல்ல புத்தகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைக்கதவு மூடப்படுகிறது.”

”நீங்கள் எதுவாக ஆக விரும்புகிறீர்களோ, அதுவாக ஆக உதவுகிறது புத்தகம்”

”புத்தகம் - புதிய சிந்தனைகளின் ஏணிப்படி”

புத்தகக் கண்காட்சி முகப்பில் ஆஸ்கார் வைல்டு போன்ற எழுத்தாளர், அறிஞர்களின் வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. சிந்திப்பு வாசலில் நுழைவதற்கான திறவுகோலை இவை தந்தன. இவைகளைக் கண்ணுற்ற பிறகும், சமுதாய ஒவ்வாமைகள் நம் நெஞ்சில் நம்பிக்கையாக, நினைப்பாக, சொல்லாடலாக, வழக்காறுகளாக உயிர்தரித்து நிற்பதை கண்டும் காணாமல் போக வேண்டுமா? முன்னாலே வைக்கப்பட்டிருந்த வாசகங்ககள் தாம் பின்னாலே பேசிய பேச்சுக்கு உரம் போட்டது.

காலையில் செய்தித்தாள் வாசிப்புடன் உங்கள் ஒருநாள் தொடங்குகிறது, செய்தி இதழாக இருந்தாலும் முதல் பக்கத்தில் நேர்த்தியான புன்னகையுடன் முதல்வரோ, பிரதமரோ கை கூப்பி வணங்குகிறார். படித்து முடித்த பின் வீதியில் கால் வைக்கிறீர்கள். மேல் நாட்டு நகரங்கள் போல நவீன வாகனங்களின் துணையால் தொழில்நுட்ப வசதியுடன் சுத்திகரிப்பு செய்யப்பட்டிராத வீதியில் நீங்கள் காலடி வைத்துப் போகிறீர்கள். கண்களில் தூசு படாமல் செல்ல ஏதுவாக துப்புரவுத் தொழிலாளி வீதியைக் கூட்டி அள்ளி தூய்மையாக வைத்திருக்கிறார். அவரை இழிதொழில் செய்பவராக மனசுக்குள் கருதி, சில சொல்லாடல்களை உங்களுக்குள் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்குள் பதியமிடப்பட்ட நினைப்புடனேயே அந்த துப்புரவுத் தொழிலாளியை அழைத்து வீட்டு முன்னுள்ள குப்பையையோ, சாக்கடைக் கால்வாயையோ காட்டுகிறீர்கள். ”பெறகு வந்து செய்றேன், சார்” என்று சொல்லிவிட்டு நகருகிறார். மேலிருந்து கண்காணிப்பாளர் கட்டளையோ அல்லது அவசரச் செய்தியோ எதுவோ அவரை அகலச் செய்திருக்கிறது. அதைக் கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாமல், ”கொட்டு, கொட்டுறான்னா கொடட மாட்டான்” என்ற பழையமாதிரி நினைப்புடன் நடக்கிறீர்கள். இந்த மூளைக்காய்ச்சல் நோயை உங்களுக்குள் வைத்துக்கொண்டே திடமான ஆரோக்கியசாலி போல் நாள் முழுதும் நடக்கிறீர்கள்.

இந்தக் கருத்துக்களை புத்தகக் கண்காட்சியில் வைக்காமல், நான் வேறெங்கு போய் இறக்கி வைக்கக்கூடும்? அதனினும் தகுதியான இடம் வேறொன்று உண்டா? வாதுக்குவந்து நின்ற அந்த காரைக்குடி நண்பர்தான் சொல்லட்டும்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?