யதார்த்தவியலுக்கு அன்னமிட்ட கை - வீர வேலுச்சாமி

சிறுகதை வெளியில் அறுபதுகளின் நடுவில் கரிசல்வட்டாரத்தின் மேற்கில் வித்தியாசமான ஒரு பூ விரிந்தது. வருகை சிறுகதைக்காடெல்லாம் மணந்தது. வாழ்வுப் பாலையில் வெக்கை தாங்காமல் வதங்கி உணங்கும் செடிகொடிகளின் பிரதிநிதியாகத் வெளிக்காட்டி, அவைகளின்ஊடாக, தான் வாழ்ந்ததைப் பேசியது. யதார்த்தவியல் என்ற இலக்கிய வகைமைக்கு கைநிறைய அன்னமிட்டது.

1970-களின் தொடக்கத்தில் வீர.வேலுச்சாமியின் நிறங்கள் – சிறுகதைத் தொகுப்பினை அன்னம் வெளியீடாக கவிஞர் மீரா கொண்டு வந்தார். சிறுகதைத் தொகுப்பை வால் பிடித்தபடி, வேலுச்சாமி கேட்டுக் கேட்டுச் சேகரித்த ‘தமிழ்நாட்டுச் சிறுவர் கதைகள்’ வெளிவந்தது. அவருடைய படைப்புப் பயணம் ஏழெட்டு வருடங்களுக்குள்ளாகவே தடைப்பட்டது. சீக்காளியாகி, மருத்துவம் பார்த்து நோயைச் சீராட்டுவதிலே படைப்பு ஆற்றல் முடங்கிவிட்டது. திட்டமிட்ட விலகல் அல்ல; அவருக்கொரு விபத்து அது.

ஆசிரியா் பணி, அதன் தொடர்ச்சியாக அரசு மாணவா் விடுதிக் காப்பாளர்.

24 வயதில் அவருக்குக் காச நோய் வந்தது. 1960-களில் அந்த நோய்க்கு இன்று கண்டிருக்கிற மருத்துவ முன்னேற்றம் இல்லை. நோய் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அவருக்குள் வசமாகச் சம்மணம் போட்டு உட்கார்ந்தது. கி.ராஜநாராயணன் ஆலோசனையின் பேரில் நுரையீரல் மருத்துவ நிபுணா் கதிரேசன் மேற்பார்வையில் சென்னை ஓட்டேரி காசநோய் மருத்துவமனையில் சோ்ந்தார். அப்போது நானும், பூமணியும் சென்னை நகரவாசிகள். கிராமங்களில் இருந்து அப்போது தான் நகரத்துக்குள் குடியேற்றம் ஆகி இருந்தோம்.

மருத்துவமனைக்குப் போய் அவரைப் பார்த்துப் பேசி வந்தோம்.

“சிவனேன்னு வாத்தியார் தொழிலிலேயே இருந்திருக்கலாம். அதிலிருந்து விடுதி வார்டனா மாறி வந்தது தப்பாப் போச்சு. ராத்திரி பகலாத் தூக்கம் இல்லாம நோய் கூடிக்கிருச்சி” என்றார். இரவுத் தூக்கம் அத்தது. பதில்த் தூக்கம் பகலில் கிடையாது. இளைப்பும் தகையும் கூடுகட்டிக் கொண்டது.

படைப்புக் களத்தில் அவர் வீசிக் கொண்டிருந்த சிலம்பத்தை நோய் அவா் கையிலிருந்து பறித்துக் கொண்டது, ”நீ போட்ட சிலா வரிசை போதும்” என்று வாங்கி வைத்துவிட்டது. நோய் அனுமதித்த அளவுக்கு வாசித்தார். கடைசி ஐந்தாறு மாதங்களில் கடன் கொடுத்த பொருளைப் போல் அதையும் நோய் வாங்கி வைத்துக்கொண்டது. “எல்லோருக்கும் சுமையாக இருந்துவிட்டேன்” என்ற கவலையில் 67 வயதில் அவா் முடிவைத் தழுவிக் கொண்ட ஜூலை 1, 2004 அன்று ஒரு முழுநிலவு நாள்.

யதார்த்த வகைமை என்ற இலக்கியச் சித்திரிப்புக்கு தலை வாரி, பொட்டுவைத்து,சிங்காரித்து, கூந்தலுள்ள சீமாட்டியாய் ஆக்கி அழகுசெய்தது இவர் வேலை; எல்லை மீறல் அற்ற சித்தரிப்பு; மனதைச் சுண்டியிழுக்கும் அளவான உச்சரிப்பு; நம்மோடு நேரடியாகப் பேசும் வாஞ்சனையான உரையாடல்.

2

1973-ல் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நான் மொழிபெயர்ப்பு அலுவலர். இப்போது கோட்டையில் உயர்ந்து நிற்கிற ’நாமக்கல் கவிஞர் மாளிகை’ என்கிற பத்து மாடிக் கட்டிடம் அப்போது இல்லை. உளுத்து, உதிர்ந்து இடிமண்ணாகிப்போவது போலிருந்த ஒரு பழைய பீத்தக் கட்டிடம். அது ராபெர்ட் கிளைவ் காலத்தில் கட்டப்பட்டது.அதற்கும் வயசாகிப் போனது. மாடியில் மொழிபெயர்புத் துறை. நான் மொழிபெயர்ப்பு அலுவலர். மொச்சைக் கொட்டை சாப்பிட்ட வயிற்றில் நமைச்சல் பிச்சிப் பிடுங்குமே - அதுபோல் மேலிருக்கும் அதிகார வர்க்கத்தாலும் கீழே இருக்கும் பணியாளர்களாலும் முழு நேரச் சித்திரவதை; திடலின் தென்மேற்கு மூலையில் அதேபோல் ஒரு பாழடைந்த கட்டிடத்தில்தான் கணக்கு கரூவூலத்துறையில் கந்தர்வன் எழுத்தராக, கணக்கராக.

ஒரு பறவைபோல் மென்னெஞ்சம் கொண்டவனாயிருந்தேன். அது அரசுப் பணிக்கு தோதுப்படவில்லை: ஒரு பறவையை அதன் கூட்டிலிருந்து விரட்டி, இன்னொரு இனப் பறவைக் கூட்டில் அடைக்க முடியுமா? அரசு அதிகாரத்தில் அதெல்லாம் சாத்தியம்: செய்தித்துறை அலுவலராக இருந்தவனை மொழிபெயர்ப்புத் துறைக்கு விரட்டியிருந்தார்கள். அந்த நேரத்தில் இரண்டு பாம்புகள் எனக்கு மேல் அதிகாரிகளாக இருந்தன. ஒரு புழுவைப் படாதபாடு படுத்தியபோது, முதலமைச்சர் அலுவலகம் வரை நீதி தேடிச் சென்றும் கிட்டடவில்லை. முதலமைச்சர் அலுவலகம் வரை நிலவிய இயக்குநரின் சாதிச் சேர்க்கை இந்தப் புழுவை நசுக்கி கருமாந்தரம் பண்ணிற்று.

பெரும் மனஅலைக்கழிப்பில், கூம்புச் சூறாவளிக்கு நடுவில் மாட்டிய செடிபோல்,முறுக்கி எடுக்கப்படுகையில், மயிலிறகாய் நீவினார் கருவூலத்துறையில் உதவியாளராகப் பணியாற்றிய நாகலிங்கம் என்ற கந்தர்வன். கரூவூலப்பணி கடுமையான வேலை. அதற்குள் மாட்டுப்பட்டிருக்கிறபோதும் கந்தர்வன் என்னைக் கண்டதும் எழுந்து வருவார். தேநீர் குடிக்க வெளியில் செல்வோம். அப்போது தான் அவர், “வீர.வேலுச்சாமியை வாசிச்சிருக்கீங்களா” என்று கேட்டார்.

அப்போது கந்தர்வன் எழுத்தைத் தொடங்கவில்லை. நான் எழுதத் தொடங்கியிருந்தேன்.

“மேகங்கள் நடுவே நீந்திப்போகிறது நிலா. மேகங்களுக்குள் பிடிபட்டும் அமுங்கியும் மறுபடி முங்கு நீச்சுக்காரன் தலை தூக்குகிற மாதிரி மேகத்தை ஒதுக்கிவிட்டு எட்டிப் பார்க்கிறதும் வேடிக்கையாயிருக்கு. அதைப் பார்த்துக்கொண்டே இந்த நிலாக்காலத்திலேதான் எல்லம்மா தன்னை இழந்தாள் அப்பய்யாவுக்கு. அவள் கன்னிமை அழித்து, கைவிட்டு ஓடிப் போகிறான் அப்பய்யா. கர்ப்பவதியாகி, வெளிவந்த சிசு கொதிக்கிற அண்டாத்தண்ணீரில் கொல்லப்படுகிறது. குழந்தை ஏக்கத்திலேயே கிணற்று நீரில் பாய்ந்த எல்லம்மா - கிணற்றுத் தண்ணியில் மிதந்த நிலாக் குழந்தையை அணைக்க கைவிரிக்கிறாள். அதே நிலா, குப்புறக்கிடந்த அந்த சடலத்தினடியில் ஒளிந்தும், வெளிப்பட்டும் கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருந்தது”

இவ்வாறு “ஒரு குடும்பத்தின் கதை” முடியும். சிலாகித்து சிலாகித்து கண்ணில் நீர்கோர்க்க நான் சொல்ல - கந்தர்வன் இன்னொரு கதையை விவரிக்க, இப்படியாக மாற்றி மாற்றி வீர. வேலுச்சாமி எங்களுக்குள் வந்த போனார்.

“ஏன் அழுதாள் மீனா?” - என்ற கதையில் கல்வி பற்றி, குறிப்பாக பள்ளிக்கூட கற்றுத்தருதல் பற்றி வீர.வேலுச்சாமி சொல்வார்

”பதில் சொல்ல முடியாமல் திணறிய பிள்ளைகளை “பாவம் அந்தப் பிள்ளைகள்! முக்கால்வாசி நாட்கள் வாத்தியார் இல்லாத வகுப்பு...! பாசனப்பயிருக்கும் மானாவாரி வெள்ளாமைக்கும் வித்தியாசமில்லையா?”

நமது அரசுப் பள்ளிக் கூடங்கள் இப்படித்தான். வேளா வேளைக்குத் தண்ணீர் பாய்ந்து கொழுவென்று இருக்கும் பாசனப் பயிர் அல்ல. ஆனால் மானாவரிப் பயிர் அப்படியில்லை. நெத்தலும் குத்தலுமாய் வாடிவதங்கிக் கிடக்கும்.

விடுவார்களா நமது கல்விச் சீமான்கள்? அரசின் கையாலாகாத்தனம் தமக்கான வாய்க்கால் அமைத்திட போட்டுக் கொடுத்த ’பட்டாநிலம்’ எனப் புரிந்துகொண்டார்கள்; பத்து கிராமங்களு ஒரு இடத்திற்கு ஒரு பள்ளி என்று ஆங்கிலப் பள்ளிகளைத் தொடங்கினார்கள். ஏகக் கொண்டாட்டடமாகி இன்னைக்கு அவர்கள் காட்டில் மழை பெய்ய அரசுக் கல்வி சொங்கிப் போய் நிற்கிறது.

உண்மையை கலைநுட்பம் ஊடாடத் தருவதுதான் யதார்த்தம்.

“தரித்திரியத்தையும், இல்லாமையையும் வைத்துக் கதைகள் பின்னுவது லேசு அல்ல. வாசகனுக்குச் சலிக்காதபடி, நயம்பட, மனசில் உறைக்கும்படியாக எழுதுவது ரொம்பக் கஷ்டம். ஆனாலும் வேலுச்சாமி இதை நன்றாகச் செய்திருக்கிறார்”

அத்தனை பரிபூரண அம்சங்களையும் மனசில் நிறுத்தி கி.ராஜநாராயணன் எழுதியது “நிறங்கள்” தொகுப்பு அணிந்துரை.

என் வாழ்நாள்ப் பணியில் சாதனைகளாக எண்ணிப் பெருமிதம் கொண்டவை மூன்று.

ஒன்று - நாட்டாரியலின் தெக்கத்தி ஆத்மா என அடையாளப் படுத்தப்பட்ட அண்ணாச்சி எஸ்.எஸ்.போத்தையாவின் சேகரிப்புகளை இரு நூல்களாகக் கொண்டு வந்தது - அது 2014.

மற்றொரு பணி - ஈழவிடுதலைப் போராளி, கவிஞர் கி.பி. அரவிந்தன் பற்றி பலரிடமும் கட்டுரைகள் பெற்று, தொகுத்து “கி.பி.அரவிந்தன்: ஒரு கனவின் மீதி” என்னும் தொகுப்பு நூலைக் கொண்டுவந்தது - இது 2015.

மூன்றாவதாய் - என் காலத்தின் படைப்பாளியாய்த் திகழ்ந்த வீர.வேலுச்சாமி படைப்புக்கள் அத்தனையையும் தொகுத்து நூலாய்ப் பதிப்பித்தது - இதுவும் 2016.

கி.பி.அரவிந்தன் பற்றின நூலில் தொகுப்பாளர் உரையில் ஒரு இடம் வரும். “அவர் ஒருக்காலும் தன் பசி போக்கியவர் இல்லை. நான் இங்கு குறிப்பிடுவது ‘கும்பிப்’ பசி அல்ல; அந்தப் பசியும் பூமிப்பரப்பில் எங்கும் தலைகாட்டக்கூடாது என நனவுப் பயணம் மேற்கொண்டவர் அவர். ஆனால் அங்கீகாரம், புகழ் என்ற தன் பசிக்கு இலக்காகாமல் அவர் நடந்தது இலட்சியம் பயணம். இந்தத் தன் பசியை எப்படிப் போக்கிக் கொள்வது என அதே வேலையாய் அலமந்து திரியும் பலரை, அரசியல் உலகில், இலக்கிய வீதியில் , சமூகத் தொண்டில் கண்டுகொண்டிருக்கிறோம். தன் பேர் பாடும் பசி அவர் அறியாதது. தன் நாவை தனக்காக அசைக்காது, எழுதுகோலை தன்மோக உழவிட கிஞ்சித்தும் இடமளிக்காது வாழ்ந்தார்”

இந்த வாழ்நாள் ஒழுங்கு சக தோழனான வீர.வேலுச்சாமிக்கும் அப்படியே இருந்தது.

வேலுச்சாமி ஆசிரியத்தொழில் பார்த்த காலத்தின் வாத்திமார்கள் ரொம்ப தேறிவிட்டிருந்தார்கள். வாத்தியார் தொழிலோடு, கூடுதல் தொழில் ஏதாயினும் செய்து கொண்டிருந்தார்கள். விவசாயம் பார்ப்பது, வட்டிக்கு விடுவது. கடை வியாபாரம் என ஒவ்வொருவரும் ஒரு தொழில் கைவசம் வைத்திருந்தார்கள். உங்களுக்குத் தெரியுமா? எங்கள் ஊரில் ஒரு வாத்தியார் ஜோசியம் பார்ப்பார். ஜாதகம் குறித்துக் கொடுப்பார். இன்னொரு வாத்தியார் கலியாணத் தரகர். வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கு கண்டதைக் கழியதை வாங்கிக்கொடுத்து வளைத்துப் போடுவது, அந்த நெருக்கத்தை மூலதனமாக்கி பாடம்சொல்லித் தராமல் ஊர் சுற்றுவது என இவர்கள் தொழில்த் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். வேலுச்சாமி இதெல்லாம் தெரியாத அப்பாவி. ‘எஞ்சிவனேன்னு’ உட்கார்ந்து வேலையைப் பார்த்துக் கொண்டு கிடப்பார். விடுதிக் காப்பாளர் ஆகிவிட்டபின், ரவ்வும் பகலும் விடுதியில் வாசம்; செப்புக்காசு கூட எடுக்காமல் விடுதிக் காப்பாளராய் பணியாற்றியவர் வீர.வேலுச்சாமி.

’நிறங்கள்’ தொகுப்பில் இல்லாத, வேலுச்சாமியின் கையெழுத்திலிருந்து மேலும் சில சிறு கதைகளை பிரகாஷ் தேடி எடுத்துத் தந்தார். மட்டுமல்ல, சில கவிதைகளும் தேடியதில் கிடைத்தன. அதுபோல் அவர் எழுதிய சில கடித வகையறாக்கள்.

நிறங்கள் தொகுப்பில் இல்லாத முக்கியமான ஒரு கதை – ”மீனா ஏன் அழுதாள்” - இக்கதையும் இன்னும் சிலவும் புதியவை. முன்னர் 1981, நவம்பர் மாதத்தில் ‘மனஓசை’ என்னும் கலை இலக்கிய மாத இதழை நாங்கள் தொடங்கினோம். இதழின் பொறுப்பாசிரியராய் இயங்கினாலும், அரசுப் பணியாளனாய் இருந்ததால், நான் தலைமறைவுப் பொறுப்பாசிரியர். மனஓசை மூன்றாவது இதழில் 1982- சனவரியில் இக்கதை வெளியிடப்பட்டது.

கி.ராஜநாராயணனைப் பதிப்பாசிரியராய்க் கொண்டு, அகரம் பதிப்பகம் வெளியிட்ட “சிறுவர் கதைகள்” இத்தொகுப்பில் முழுமையாய் இடம் பெற்றுள்ளது. பிரகாஷ் தேடி எடுத்துத் தந்த மேலும் சிறுவர்கதைகள் சிலதைச் சேர்த்துள்ளேன். இதில் இரண்டு மூன்று கதைகள் அரைகுறையாய் நிற்பதுதான் பரிதாபம். நம்மிடையில் வாழ்ந்து மறைந்த ஒரு படைப்பாளியின் எழுத்துக்களும் பூரணமாய்க் கிடைக்கவில்லையென்கிறபோது, முந்தியகாலத்தின் ஓலைச்சுவடிகள் கந்தர்கூளமாகி சிதைந்து போனதைப் பற்றி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

“வீர.வேலுச்சாமியும், சுப.கோ.நாராயணசாமியும் ஆரம்பத்தில் புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார்கள், ‘எழுத்து’ இதழில் ” என்று கி.ராஜநாராயணன் இந்நூலில் குறிப்பிடுகிறார். அப்போது எழுதின கவிதைகளெல்லாம் எங்கே மறைந்தனவோ தெரியவில்லை. அவை கிடைக்கவே இல்லை. கடைசியில் இதுதான் இருக்கு என்று ஒரு கவிதையை பிரகாஷ் தேடி எடுத்து அனுப்பினார்.

ஒரு ஆத்மாவைத் தெளிவாகப் படிக்க, தெரிந்து கொள்ள, கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, ஓவியம், இசை - என எத்துறையில் படைப்பாளியாய் வெளிப்பட்டாரோ, அத்துறைப் பணிகளால் மட்டும் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது. அவை போதுமானவை அல்ல. ஒருபடைப்பு - அவா் அதுவாக இருந்த கணங்களையே காட்டும். ஆனால் படைப்புத் துறை சாராத கணங்கள்தான் ஒருவரது வாழ்வில் அதிகளவிலானவை. மற்ற நேரங்களில் அவா் எவ்வாறு இருந்தார் என்பது முக்கியமானது. அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள, மதிப்பிட இவை அடிப்படையாய் நின்று துணை செய்கின்றன. இதனடிப்படையில் வீர.வேலுச்சாமி மற்றவா்க்கு எழுதின கடிதங்கள், மற்றவா் அவருக்கு எழுதினவையும் தொகுக்கப் பட்டுள்ளன.

இது போல் ஒரு தொகுப்பு கொண்டுவரவேண்டுமென்ற தனது விருப்பத்தை பரிசில் பதிப்பகத் தோழர் சிவ.செந்தில்நாதன் தெரிவித்தார். அதுவும் பரிசில் வெளியீடாக வரவெண்டுமென எண்ணினார். முதலில் நிறங்கள் தொகுப்பினைத்தான் மறுபதிப்பாக வெளியிடுவதாக நினைத்து இருந்தார். இப்போது வேலுச்சாமியின் வாழ்நாள் சாதனையும் (சில விடு பருத்தி இருந்தாலும்) கையில் கிடைத்து விட்டது. தூண்டுதலும் வெளியீடும் அவருடையன: தொகுத்தது நான் என ஆகிவிட்டது.



அப்பாவைப் போலவே உயர்ந்த உள்ளம் பிரகாஷுக்கு. பொறுமையாய், பொறுப்பாய் ஒவ்வொன்றையும் சேகரித்து ஒவ்வொன்றாய்க் கொடுத்தார். பிரகாஷுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்நூல் வெளிவருவதில் மேன்மைகள் கிட்டுமாயின், அவை அனைத்தும் அவர்களுக்கே உரித்தாகும் என உரைப்பதில் தயக்கமேதும் இல்லை.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?