காலமெல்லாம் பறைப் பாட்டிசைத்த கே.ஏ.குணசேகரன்

கொட்டிக் கொட்டிப் பறைமுழக்கு
உன் குருதி முறுக்கேற தாளமிருக்கு!
1982-ன் நவம்பர் 22- ஆம் நாள் இரவு. மதுரை வடக்கு வெளிவீதி, தேவி திரையரங்கம் அருகில் கே.ஏ.குணசேகரனின் கலை நிகழ்வு. அப்போது மதுரைப் பல்கலையில் அவர் ஆய்வு மாணவர். கிராமிய இசைநிகழ்ச்சி தொடங்குமுன் நடைபெறும் சொற்பொழிவுச் சடங்கில் நானும் பங்கேற்றேன். சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த நான், உடல்நலமில்லாமலிருந்த என் தந்தையாரைப் பேணுவதற்காக மதுரை வந்து தங்கியிருந்தேன். மேடையில் அமர்ந்திருந்த போது, என் தந்தை இறந்துவிட்ட சேதி கிடைத்தது. குணசேகரனிடம் தெரிவித்துவிட்டு கீழே இறங்கினேன். ”உடனே புறப்படுங்க” என்று அவசரப்படுத்தி அனுப்பினார். மறுநாட் காலை எங்கள் வீட்டுக்கு வந்து என் தந்தையாருக்கு அஞ்சலி செய்து திரும்பினார். 34 ஆண்டுகளின் பின்னர் அதே குணசேகரனின் உடலுக்கு நான் இறுதி வணக்கம் செலுத்த வேண்டியதாயிற்று. முந்திய நிகழ்வு மதுரை. இது புதுச்சேரி என்னும் பாண்டிச்சேரி.


அவர் அறுபதை முடிக்கவில்லை. நான் தற்சமயம் 73-ல் நிற்கிறேன். என்னை அவர் தொட இன்னும் 13 ஆண்டுகள் உள்ளன. என் போன்றவர்களை அனுப்பிவிட்டு அவர் புறப்பட்டுப் போயிருந்தால் சரியாயிருந்திருக்கும். அவ்வாறுதான் நிகழும் என நினைத்திருந்தேன். ஒராண்டுக்கு முன் அவர் மாற்றுச் சிறுநீரக அறுவை மருத்துவம் செய்திருந்தார். அவருடைய அண்ணன் கருணாநிதியின் ஒரு சிறுநீரகம் இடப்பெயர்வாகியிருந்தது. இடப்பெயர்வு, புலப்பெயர்வு ஆகிற வேளையில் மானுடக் கூட்டம் படும்பாடாக, அலைப்புறும் அகதி வாழ்க்கையாக, சிறுநீரக மாற்றுக்குப் பின் அவர் வாழ்வு தொடர்ந்து சித்திரவதைக்குள் மாட்டுப்பட்டது. அறுவை மருத்துவம் முடிந்ததும் அவர் ஓய்வெடுத்திருக்க வேண்டும். தொடர்ந்து பணியிலிருக்க வேண்டிய நிர்ப்பந்தம்; நிகழ்த்து கலைத்துறையின் புலமுதன்மையர், துறைத் தலைவர் என்ற அதே கட்டமைப்பில் முன்னர் இருந்ததினும் தீவிரமாய் ,காற்றுச் சல்லடையை முகத்தில் கட்டிக் கொண்டு (FACE MASK) பணியாற்றத் தொடங்கினார். தொற்றுநோய் (INFECTION) தொடரத் தொடர சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனைக்கும் புதுச்சேரிக்குமாக அலைய வழிகோலிவிட்டது.

பல்கலை மாணவராயிருந்த நாட்களில் குணசேகரன் பிறந்த ஊரான சிவகங்கையில், கிராமிய ஆட்டக்கலைப் பயிற்சி முகாமை நடத்தியிருந்தார். ஆட்டக்கலைப் பயிற்சியை நடத்திய ‘கிராமியக் கலையகம்’, “கிராமிய இசைப்பயிற்சி முகாம்” ஒன்றினை கீழ்க்கண்ட நாட்களில் நடத்தியது.

27-5-1983- இசை உத்தி முறை
28-5-1983 இசைக் கருவிகள் இயக்குமுறை,
29-5-1983 பாடல்கள் பயிற்சி முறை என மூவகையாகப் பயிற்சி முகாம் பகுக்கப்பட்டிருந்தது.

அப்போது மக்கள் கலாச்சாரக் கழகம் என்ற அமைப்பின் இதழாக நாங்கள் நடத்திக் கொண்டிருந்த ”மனஓசை” 1983 மே இதழில் இந்த அறிவிப்பை அவரிடமிருந்து பெற்று வெளியிட்டிருந்தோம். மதுரைக்கு மேற்கில் பாலமேடு செல்லும் வழியில் 20 கி.மீ.தொலைவில் சாத்தையாறு அணைக்கட்டு மாந்தோப்பில் பயிற்சி முகாம் நடந்தது. குணசேகரனின் அண்ணன் கருணாநிதி அந்த அணையில் மீன்வளத்துறை ஆய்வாளராக (FISHERIES INSPECTOR) இருந்தார். இசைப் பயிற்சி முகாம் கிரமமாக நடைபெற கருணாநிதியின் ஒத்துழைப்பும் முன்முயற்சியும் அடிப்படை மூலங்களாக இருந்தன. சாத்தையாறு அணையில் நடந்த மூன்று நாள் இசைப்பயிற்சி முகாமில், மக்கள் கலாச்சாரக் கழகம் சார்பில் மூவர் இசைப் பயிற்சி எடுத்தோம். இசைப் பயிற்சி முகாமில் நானும் கே.ஏ.குணசேகரனின் மாணவன்.

அவருக்குள் ஒரு கலைஞனிருந்தான்; அவன் கிராமியக் கலைஞனாக இருந்தான். அவன் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதன்; சாதி ஆணவத் தேர்ச்சக்கரம் ஏறி நசுக்கப்பட்டவன். விடுதலை முண்டுதலின் வேணவா கிராமியக்கலைகளின் தேடுதலாகப் புறப்பட்டிருக்க வேண்டும். தேடுதலின் தொடக்கப்புள்ளிகளாக கிராமிய ஆட்டக் கலைப் பயிற்சி முகாம், கிராமிய இசைப் பயிற்சி முகாம் உருவெடுத்தன; அவரளவுக்கு அந்தப் புதையுண்ட செல்வத்தை தேடியவருமில்லை. அவரளவுக்கு மக்கள் பயன்பாட்டுக்கு எடுத்துச் சுமந்தவரும் இல்லை.
”கொட்டிக் கொட்டிப் பறைமுழக்கு-உன்
குருதி முறுக்கேற தாளமிருக்கு
பட்டிதொட்டி யெங்கும் ஒழிச்சிப்புட்டான்- ஆனா
பறையனென்ற பட்டம் போச்சா, என்ன கிழிச்சான் ?
கொட்டிக் கொட்டிப் பறைமுழக்கு – உன்
குருதி முருக்கேற தாளமிருக்கு.”
இது சிதம்பரத்தில் வாழும் ‘தமிழ்மண் மக்களிசைக் குழுப்’ பாவலர் மு.வ.வின் பாடல். மண்ணின் பாடல் என்பது இந்த தலித் கலைஞரைப் பொறுத்தவரை விடுதலை கீதங்களே. ஒரு தொலைக்காட்சி நிலைய அழைப்பின் பேரில் பறையைக் கக்கத்தில் இடுக்கியபடி குணசேகரன் போனார். தொலைகட்சி நிலையத்தார் கிராமிய இசைக் கலஞராக, நாட்டுப்புறப் பாடகராக மட்டும் இவரைப் பார்த்தார்கள். நாட்டுப்புற இசைப்பாடலை, அதுவும் சுகமான பாடல்களை கேட்க, ஒளிபரப்ப காத்திருந்தனர். பறை இசைத்தபடி அவர் பாடத் தொடங்கியதும் அதிர்ந்தனர். பறையை அவர்கள் இசைக் கருவியாக கனவிலும் கருதவில்லை. தமிழரின் புராதன இசைக்கருவி பறை என அறிந்தவர்களில்லை அவர்கள். தாய்த்தமிழ் மண்ணில் மட்டுமன்று, ஈழத்தமிழ் மண்ணின் தொன்மைக் கலையான தென்மோடிக் கூத்துக் கலையைச் சுருதி சுத்தமாகவும், அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்புடனும் நிகழ்த்திக்காட்ட புராதன இசைக்கருவிகளில் ஒன்றான பறைதான் பிரதான வாத்தியமாக இருந்துவருகிறது என்னும் கலை வரலாறும் அவர்கள் அறியார். தமிழ் மண்ணின் இசைப்புல வரலாறு அறியாதவர்கள், குணசேகரண் பறை இசைத்துப் பாடத் தொடங்கியதும், ’இது அனுமதிக்கப்படுவதில்லை என எதிர்ப்புக் காட்டினர். வாய்ப்பாட்டு மட்டுமே பாடுமாறு’ கேட்டுக் கொண்டனர். ”பறை இசைக்காமல் நாம் பாடுவதில்லை” என்று தொலைக்காட்சி நிலையத்திலிருந்து வெளியேறினார் கே.ஏ.குணசேகரன்.

நஞ்சுண்ணும் பூமியின் நடமாட்ட சாட்சியங்கள் தேடி, ஊர், உலகத்துக்குப் போக வேண்டாம். கே.ஏ.குணசேகரனின் ‘பலியாடுகள்’ நாடகம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மார்ச் 27 நிகழ்வு தடை செய்யப்பட்டது. அதே பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நிகழ்த்து கலைத்துறைத் தலைவர் அவர்.

24-03-15 முதல் 27 முடிய உலக நாடக நாள் விழா - மூன்று நாள் கருத்தரங்கினை துறைத்தலைவரான அவர் ஒழுங்கு செய்திருந்தார். நிறைவு நாளின் முதல் நாளிரவு துணைவேந்தர் தொலைபேசியில் “பலியாடுகள் நாடகத்தில் பிராமணர்களைத் தாக்கிப் பேசும் காட்சிகள் வருவதாகவும், பிராமணத் துவேஷம் வெளிப்படும் நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் எனவும் தெரிவிக்கிறார். அறங்கேறுமானால் நுழைவு வாசலில்லேயே மறித்துப் போராட்டம் செய்வோம் என்று சில அரசியல் சக்திகள் சொல்கிறார்கள்” என்று நாடகத் தடைக்கு காரணம் காட்டினார். ஒரு நிறுவனத்தின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் துணைவேந்தர் ஆணையிடுகையில் கீழே இருப்பவர் மறுதலிக்கக் கூடுமா? “நாடக எழுத்து வடிவத்தை நான் காண வேண்டும். காலையில் எடுத்து வர இயலுமா?” என்றெல்லாம் துணைவேந்தர் கோரவில்லை.

’பலியாடுகள்’ பெண் விடுதலை பேசும் நாடகம். தமிழில் வெளியான முதல் தலித் நாடகம். 1992-ல் நிறப்பிரிகை தலித் இலக்கியச் சிறப்பிதழில் வெளியாகி, 1999-ல் நூலாக வடிவம் பெற்றது. ஆங்கிலத்தில், மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப் பெற்று பாராட்டப் பெற்றது. புதுவைப் பலகலைக்கழக ஆங்கிலத் துறையில் 4 ஆண்டுகளாகவும், தமிழியல் துறையில் 4 ஆண்டுகளுக்கு மேலாகவும் பாடத்திட்டத்தில் வைக்கப் பெற்றுத் தொடருகிறது. டெல்லி தேசிய நாடகவிழாவில் அரங்காற்றுகை செய்யப்பட்டு பெரும் வரவேற்புப் பெற்றது.

27.3.2015 உலக நாடக நாளை முன்னிட்டு அன்று தமிழ் இந்து நாளிதழில் ”கூத்துப் பாக்கலாம் வாங்க” என்று கே.ஏ.குணசேகரன் கட்டுரை வெளியானது; “கூத்துப் பாக்க வராதீங்க” என்று அன்று அதிகார உச்சத்தின் குரலும் வெளிப்படுகிறது.

எதிர்ப்புக் குரல் உருவாகி, மதியத்துக்குப் பின்னான வெயிலாய் உக்கிரம் கொண்டு, மாலையில் மாணவர்கள் திரண்டு துணைவேந்தரிடம் போனார்கள். உடன் குணசேகரனை அழைத்துப் பேசுகிறார் துணைவேந்தர். இரவு 7 மணிக்கு தடை நீக்கம். ஏப்ரல் 14-ல் அம்பேத்கர் பிறந்த நாளில் நடத்திக் கொள்ள துணைவேந்தர் ஒப்புதல் தருகிறார். தலித் விடுதலைக்குப் போராடிய அம்பேத்கர் பிறந்த நாளில் ஒரு தலித் நாடகம் அரங்கேறியது.

ஈழத்தின் தொன்மையான நிகழ்த்து கலைகளில் சுடர்மிகு இரு விழிகளாகத் திகழ்பவை - தென்மோடிக் கூத்து: வடமோடிக் கூத்து. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை தென்மோடிக் கூத்து அதிகமாகவும் பிரதானமாயும் திகழ்ந்தது. தமிழ்நாட்டில் கூத்துக்கலைகள் பயிற்றுவிப்போரை ’வாத்தியார்’ என அழைப்பதுபோல், ஈழத்தில் ‘அண்ணாவியர்’ என அழைத்திடுதல் சொல்வழக்கு. பிப்ரவரி 2015-ல் கனடாவிலிருந்து அண்ணாவியர் ச.மிக்கேல்தாஸ், நோர்வேயிலிருந்து அவரது இளவல் அண்ணாவியார் ச.ஜெயராஜா ஆகிய தென்மோடிக் கூத்துக் கலைஞர்கள் தமிழகம் வந்திருந்தார்கள். புலம்பெயர்வுக்கு ஆளான பின்னும் இவர்கள் கூத்து ஆட்டத்தினை தம்முடன் கொண்டு சென்றிருந்தனர்.


தென்மோடிக் கூத்துக்கலையின் புதிய நாற்றங்கால்களை உருவாக்கி வளர்க்கும் அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்களின் கலைச்சேவையைப் பாராட்டி ஒருவிருது ”புதுவைப் பல்கலைக்கழக நாடகப்பள்ளி (school of performing arts) சார்பில் வழங்கலாம் என என் விருப்பத்தை முன்வைத்த போது சிறு தயக்கமும் கொள்ளாமல் ”வழங்கலாமே” என்று ஏற்றார். ’கலைச் செம்மல்’ என்று வழங்கலாம் என நான் தெரிவித்தபோது, ”கூத்துக் கலைச் செம்மல்” என வழங்கலாம் என்று விருதை வளப்படுத்தினார். பெருமைக்குரிய அந்நிகழ்வு கே.ஏ.குணசேகரன் தலைமையில் பல்கலைக் கழகப் பதிவாளர் விருது வழங்கிட நாடக அரங்கில் நடந்தது.

வாழும் காலத்திலேயே கலைஞர்கள் கனம் பண்ணுதலுக்கும் கௌரவித்தலுக்கும் உரியவர்கள் என்பதனை உணர்ந்து விருது வழங்கியமை ஆகப்பெரும் சிறப்பு என அறிய முடிந்தது. அந்தப் பொழுதில்தான் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் ஆவதற்கு அவர் முயற்சி செய்தபோது. அவர் புறக்கணிக்கப்பட்டதின் ஆறாவடு ரணம் கொண்டு இன்னும் பச்சைக்காயமாய் அவர் உள்ளில் கிடந்தது என அறிந்து கொண்டேன்.

”அக்கினி ஸ்வரங்கள்” என்னும் அவரது இசைப்பாடல் நூல் தொடக்க காலத்தில் எனது அணிந்துரையுடன் வெளியாயிற்று. இன்றைய காலம் போல் ஒலிப்பேழை, குறுந்தகடு போன்ற அறிவியல் தொழில் நுட்பங்கள் அன்று இல்லாதபோது, புத்தக வாசிப்பு மட்டுமே நிலவிய நாட்கள் அவை. கிராமியக் கலைகள், இசை என அறியப்படும் மண்ணின் கலைகளைப் பற்றி மட்டுமின்றி, முன்னைத் தமிழ் பற்றிய ஆய்வுகள் பலவும் அவர் செய்தார். ”பட்டினப்பாலை - மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்“ என்ற நூல் அவரது ஆய்வு வெளிப்பாட்டில் இறுதியில் வந்த நூல். (04-11-2015) அன்று இந்நூலினை ’அருமைத் தோழருக்கு’ என அவர் கையெழுத்திட்டு வழங்கியிருந்தார்). ”வடு” தன்வரலாற்றுப் புதினமும், தலித்தியம், பெண்ணிய விடுதலையை முன்னிறுத்தும். ”பலியாடுகள்" நாடகமும் பரவலாக அறியப்பெற்றவை. வடு புதினம் ஆங்கிலத்திலும் ‘THE SCARE’ என்ற தலைப்பில் வெளியானது.


தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக் கோட்பாட்டை வழங்கியவர் அம்பேத்கர். அம்மக்களின் விடுதலையை கலை. வடிவில் எடுத்துச் சென்றவர் கே.ஏ.குணசேகரன். மக்கள் பாவலர் இன்குலாப் எழுதிய "மனுஷங்கடா, நாங்க மனுஷங்கடா” பாடல் தமிழகத்திலும் உலகத் தமிழர் வீதிகளிலும் ஒலிக்கச் செய்த அந்த கணீர்க் குரலை, அவர் பாட நேரில் இனி கேட்க இயலுமா? புதுச்சேரி மயானத்தில் நாடகத் தந்தை சங்கரதாஸின் கல்லறையினை ஒட்டி அமைதியாய்த் துயிலும் குணசேகரனின் புதைமேட்டில் இறுதி நினைவேந்தல் நடந்தது. வீரவணக்கம் உரித்தாக்கி உரை நிகழ்த்தினோம். ’தமிழ்மண் மக்களிசைக் குழுப்’ பாவலர் மு.வரதராசன் இப்பாடலைக் காணிக்கையாக்கினார்.
சாமான்ய மக்களின் சஞ்சலத்தை வெளிக்காட்ட
அக்கினிச் சுரம் எடுத்து அதிர வைத்தாய்;
அகிலத்தை என்னான்னு கேட்க, யாருமிலா எங்களுக்கு
‘தன்னானே’ என்று தாளம் சொல்லித் தந்தாய்
ஒட்டுப் போட்டு தச்ச சேலையை ,
ஊரணியில் துவைக்கப் போன தாயிடம்
“பாவாடை சட்டை கிழிஞ்ச பள்ளிக்கூடத்துப்
பிள்ளைவிடும் கண்ணீரையும்”
இளைய குஞ்சிக்கு இரைதேடப் போயி
கண்ணிக்குள்ளே மாட்டிக் கொண்ட
”ஆக்காட்டிக் குருவியின் கண்ணீரையும்”
எமக்குக் காட்டியவரே,
எம் கண்ணீரை யார் துடைப்பார்!
நன்றி: பொங்குதமிழ் - 19 ஜனவரி 2016

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

மலேயா கணபதி

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?