அதிகாரத்தை நோக்கி வாளும் மயிலிறகுகளும்

1970-களின் பிற்பகுதியில் பேராசிரியர் கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோர் முதன்மைப்படுத்திய முற்போக்கிலிருந்து வேறுபட்ட தடங்களைப் பதிவு செய்த ‘அலை’ என்னும் இதழில் எழுதத் தொடங்கி, இன்று வரை பல்வேறு இதழ்களில் பங்களிப்பைச் செய்து கொண்டிருப்பவர் அ.யேசுராசா. எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர் எனப் பன்முகங்களில் அறியப்பட்ட அ.யேசுராசாவுக்கு இலங்கை அரசு, தேசத்தின் உயர் விருதுகளில் ஒன்றான கலா கீர்த்தி என்னும் விருதை 2005-ல் வழங்கியது (இங்கே குடியரசுத் தலைவர்  வழங்குகிற பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளின் தரத்துக்கு எண்ணப்படுவது கலாகீர்த்தி). அவ்விருதை ஏற்க மறுத்த யேசுராசா, அதற்கான காரணத்தை விளக்கி அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதம் மேதமைத் துணிவு என்பதின் முழுப்பரிமாணத்தையும் உணர்த்துகிறது. மேதமை என்பது, அறிவு நிலைச் செயல்பாடு மட்டுமேயல்ல, மானுடச் செயல்பாடு இணைந்தது. இலக்கிய மாண்பை விட, மனித மாண்பு மேலானது என்பதை உணர்த்துவதோடு, ஒரு எழுத்தாளார் எவ்வாறு இயங்கவேண்டுமென்ற முன்மாதிரி உண்மையையும் எடுத்து வைக்கிறது. கலாகீர்த்தி விருதை மறுக்கும் யேசுராசாவின் பதில்;

“கலை இலக்கியத் துறையில் செயற்பட்டு வருபவனான எனக்கு, மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் கலாகீர்த்தி விருது வழங்கப்படவுள்ளதைத் தெரிவிக்கும் கடிதம் கிடைக்கப் பெற்றது. முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயினும் இரண்டாந்தரப் பிரஜை என்ற உணர்வுடனேயே வாழத் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வரப்படும் தமிழ் மக்களில் ஒருவன் என்ற வகையில், கசப்பான இந்த யதார்த்த நிலை மீது கவனத்தைக் குவியச் செய்யும் பொருட்டு, கலாகீர்த்தி விருதைப் பெற்றுக்; கொள்ள விரும்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனங்களில் சமத்துவமற்ற நிலைமை பல தளங்களிலும் நிலவி வருவதுதான், இன்று இலங்கையில் நாமெல்லோரும் எதிர்கொள்ளும் அவலங்களுக்கான நெருக்கடிகளின் அடிப்படை என்பது எல்லோராலும் உணரப்படவேண்டியது; அந்த நிலைமையை மாற்றுவதற்குரிய நேர்மையான வெளிப்படையான செயற்பாடுகளே இக்கால கட்டத்தில் இன்றியமையாதனவாய் உள்ளன. இனப் பாரபட்சமான நடவடிக்கைகள், நிலைகள் பற்றிய விரிவான விளக்கத்தினை தவிர்க்கிறேன். எனினும் தங்களின் விருது பற்றிய அறிவிப்புக் கடிதம் கூட எனது தாய் மொழியான தமிழில் அமைந்திருக்கவில்லை என்பதைக் கவலையுடன் அறியத் தருகிறேன்.

தனது மேலான நோக்கங்களின் பொருட்டு அரசின் உயர் விருதுகளை முன்பு ஏற்றுக் கொள்ள மறுத்த சகோதர சிங்களக் கலைஞர்களான பிரசன்ன விதாகே, அசோக விஹாத்த ஆகியோரின் முன்னுதாரனத்தை இவ்வேளையில் மதிப்புக்குரிய செயலாக நினைவு கூறுகிறேன்”.

இலங்கையில் தமிழ்ச் செயற்பாட்டாளார்கள் பலருக்கும் கலாகீர்த்தி, சாகித்ய ரத்னா போன்ற விருதுகள் இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளன. இவைகளை அவர்களனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இனப் பாரபட்சம், சுயமரியாதை போன்ற புள்ளிகளிலிருந்து பெற்றுக் கொள்ள மறுத்த முன்னுதாரணங்களை எந்தத் தமிழிறிஞரும் விட்டுச் செல்லவில்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு என்று தன்னிச்சையான தீர்மானங்களிலிருந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டார்கள். அதன் காரணமாகவே அ.யேசுராசா விருதைப் பெறாது புறந்தள்ளிய சிங்கள அறிவுலகச் செயற்பாட்டாளர்களின் உதாரணங்களைத் தந்தார்.

இவ்வாறான முக்கிய வரலாற்றுப் புள்ளிகள்தாம் மேதைகள் செயற்படுவதற்குரிய தருணங்கள். கடமைகளை மக்களுக்கு ஆற்றுவதற்கான வாய்ப்பை எழுத்தாளர், கலைஞன், சிந்தனையாளன் போன்ற தனிமனிதப் பாத்திரங்களுக்கு வரலாறு ஏற்படுத்தித் தருகிறது. தன் மக்களுக்கு நேர்வது தானே தனக்கும் நேர்கிறது என்ற சமூகப் பொறுப்போடு, பொதுக்காரணியோடு இத்தகைய பாராட்டுக்களைத் தவிர்த்தல் என்பது தமிழக இலக்கிய உலகில் நடைபெற்றதில்லை.

யேசுராசா ஆற்றிய வரலாற்றுக் கடமையை ஒப்பிடுகையில், சிவத்தம்பி, சின்னத்தம்பியாகி விட்டார். சின்னத்தம்பி பெரியதம்பி ஆகிவிட்டார்.

பிரான்சின் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து அல்ஜீரியா போராடிக் கொண்டிருந்தது. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து பலப்படுத்துமாறு இளைஞர்களை அரசு அழைத்தது. விடுதலைக்குப் போராடும் அல்ஜீரிய மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டோம் என்ற இளைஞர்களின் மறுப்பை நியாயமானது என வரவேற்றார் ழீன் பால்சாத்தரே. பிரான்சில் வாழுகிற வதைபடும் அல்ஜீரியர்களுக்கு ஆதரவாக அரசின் கொடுமைகளைக் கண்டித்து வெளிப்படையாகப் பேட்டி தந்தார் ழீன் பால்சாத்தரே. அவரைக் கைது செய்ய வேண்டும் என பிரெஞ்சு அதிபர் துகேலிடம் கேட்ட வேளையில்,

“சாத்தரேயைக் கைது செய்வது பிரான்சு தேசத்தைக் கைது செய்வதாகும்” - எனப் பதிலளித்தார். அறிவுக் கம்பீரத்தின் குறியீட்டை அடக்கிவைத்தால், அது தேசத்தின் கரும்புள்ளியாகி விடும் என்று உணர்ந்து கொண்டதால் ராணவத் தளபதியே பிரெஞ்சு அதிபராக இருந்தும் ஏற்கவில்லை. ஒதுக்கம் கொண்டது பிரெஞ்சு அதிகாரம். ராணுவத் தளபதியாயிருந்து அதிபரான சார்லஸ் துகேலே எழுத்து மேதமைக்கு அளித்தது போன்ற ஒரு மதிப்பை – இங்குள்ள சனநாயகவாதிகளிடமும் எதிர்பார்க்க முடியாது. இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் சனநாயக வேடதாரிகளே. எழுத்துலகில் கருத்துக்கள் எந்த அடிப்படையிலிருந்து பிறப்பெடுத்து வருகின்றன, எந்தக் கோணத்தில் வைக்கப்படுகின்றன, அவர்களின் அல்லது அக்கருத்துக்களின் சமூக மதிப்பு யாது என மதிக்கத் தெர்ந்த ஒருவராக தமிழக முதல்வர் கருணாநிதி இல்லை. இருந்திருந்தால் செம்மொழித் தமிழ் மாநாட்டு அறிவிப்புச் செய்ததுமே சிவத்தம்பியின் வேண்டுகோளுக்கு செவி கொடுத்திருப்பார்.

பேராசிரியர் சிவத்தம்பியின் நிலைப்பாடு தொடக்கத்தில் வேறொன்றாக இருந்தது. “மாநாட்டில் நான் கலந்து கொள்வேனா என்ற கேள்வி இப்போது எழவில்லை. இப்போதைய கேள்வி என்ன வென்றால் இலங்கைத் தமிழர் பேரவலத்தைத் தீர்க்க கலைஞர் என்ன செய்யப் போகிறார் என்பது தான். இந்த வினாவுக்கு கலைஞர் சரியான முறையில் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்” (அக்டோபர்  19, 2009 தமிழ் ஓசை).

அவருடைய நம்பிக்கைக்கு, நேர் கேள்விக்கு எந்த விடையும் இதுவரை அளிக்கப்படவில்லை. இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந்தும், பதவி நலன்களுக்காக அந்த ஆற்றலைப் பயன்படுத்தாத ஒருவரை பேரா.சிவத்தம்பி போலவே நாமும் அடையாளம் கண்டோம்; இனத்தை அழித்து விட்டு அந்த இனம் பேசும் மொழியை வளர்ப்பது எவ்வாறு என்று மனச்சாட்சியுடன் பெரும்பாலோர் கேள்வி எழுப்பினோம். ஆனால் சிவத்தம்பியின் இரண்டாவது கட்ட நிலைப்பாடு “கலைஞர்  கருணாநிதி போன்ற ஒரு நல்ல தமிழறிஞர் தலைமையில் நடைபெறுகிற மாநாட்டை” வரவேற்பதாக அமைந்தது. மாநாட்டில் கலந்து கொள்வதில் அவர் உறுதியாய் இருப்பதாக சமீபத்தில் கொழும்பு சென்ற என்னிடம் நண்பர்கள் தெரிவித்தார்கள்.

பேராசிரியர் சிவத்தம்பி தம்முடைய முதல் நிலைப்பாட்டில் உறுதியாகத் தொடார்ந்திருந்தால், அவரைப் போன்ற பிற தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் தம் உள்ளக்கிடக்கைகளை அவரின் தொடர்ச்சியாய் வெளிப்படுத்தியிருப்பார்கள். வெளிப்படுத்தியிருந்தால் தமிழ் மேதைமைகளை முறித்துக் கொண்டு மாநாட்டினை நடத்திட வேண்டுமா என்ற மீள் பரிசீலனைக்கு கருணாநிதி ஒருவேளை வந்திருக்கக்கூடும். சாத்தரேயிடம் பிரெஞ்சு அதிபர் ஜெனரல் சார்லஸ் துகேலுக்கு ஏற்பட்டது போன்றதொரு மதிப்பு - தமிழிறிஞர்கள் பற்றி மாநாட்டு ஏற்பாட்டாளருக்கு நிகழ்ந்திருக்கும். ஆனால் இதுவரை ஏற்படவில்லை.

உலகத் தமிழ்மாநாட்டுக்கு ஒப்புதல் அளிக்காமல், தம் நிறுவனத்தின் தற்சார்பு நிலையை உறுதிப்படுத்தியதோடு, தம் புலமைத் தகுதியையும் காத்துக் கொண்டார் நொபாரு கரோஷிமா. இங்குள்ள தமிழ்ப் புலமைகளோ செம்மொழித்தமிழ் மாநாட்டுக்குப் பின்னுள்ள உண்மையான காரணிகளைக் கண்டறிந்து தம்முடைய தகுதியை நிலைப்படுத்திக் கொள்ளவில்லை.

“இவ்விடத்தில் என்னுடைய நிலைப்பாடு அரசியல் அல்ல. தமிழ்மொழி வளர்ச்கிக்கான ஆதரவு என்பதைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று மாநாட்டில் கலந்து கொள்ள உறுதி பூண்டார் சிவத்தம்பி (குமுதம் 18.11.2009). செம்மொழித் தமிழ் மாநாட்டுக்குப் பின்னாலுள்ள அவரது சொந்த மண்ணின் பூதாகரமான இனப்படுகொலை அரசியலை ஒதுக்கி அதிலிருந்த தன்னை விலக்கிக் கொண்டார் சிவத்தம்பி.

தமிழ் வளர்ச்சிக்கென்று இங்கு என்ன நடக்கிறது? அடிப்படை மக்களுக்கு அன்றாட வாழ்வில் பயன்படாதவாறு - வாழ்வுப் போட்டிகளில் அவர்கள் முன்னேற முடியாதவாறு ஆங்கிலத்தால் தடுத்து நிறுத்தப் படுகிறார்கள். ஆங்கிலத்தால் பிராமண்ட வசதிகள் பெறும் ஒரு மேட்டுக்குடியினர், உயர் நடுத்தர வர்க்கத்தினா; உருவாக்கப்படுகின்றனர். அவர்களுக்கான கொளுப்புச் சத்தாக கல்வி ஆக்கப்பட்டுள்ளது; சமச்சீர் கல்வியில் தமிழ் பயிற்று மொழி இல்லை. தாய்மொழி பயிற்று மொழியாக இல்லாத கல்வியில் சமச்சீர் எப்படி நிலவும்? அரசு அலுவலகங்களில் இன்னும் தமிழ் உள்ளே நுழையவில்லை. அது ஆங்கிலத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தமிழனும் உள்ளே நுழைய முடியவில்லை. நீதி மன்றங்களில் தமிழில்லாததால், அங்கும் தமிழன் இரண்டாந்தரக் குடிமகனானான். தமிழன் இல்லாமல் தமிழனைத்தாண்டி ஒரு தமிழ் வளர்ச்சி எங்கிருக்கும்?



தான் பெற்ற கல்வி மூலம், அதிலிருந்து பெற்ற சிந்தனை வழியில் தனக்கென ஒரு இலக்கியக் கொள்கையை உருவாக்கிக் கொள்வார்கள் ஒவ்வொருவரும். கொள்கைப் பகுப்பு என்பது, தான் வகுத்துக் கொண்ட சமூக, அரசியல் கொள்கைகளிலிருந்து பிறப்பெடுக்கிறது. கலை இலக்கிய ஆக்கங்கள், ஆய்வுகள் அனைத்துக்கும் இதுதான் அடிப்படை. மட்டுமல்லாமல் சமுதாய மனிதனாக இயங்குவதற்கு அரசியல், சமூகக் கொள்கை பற்றிய தெளிவு அவசியமாகிறது; ஆனால் செம்மொழித் தமிழ் மாநாட்டில் எந்த அரசியலும் இல்லை என்பது போல், “இவ்விடத்தில் என்னுடைய நிலைப்பாடு அரசியல் அல்ல” என்று கூறி அதிகாரத்தை சார்ந்து செல்லும் சார்புத்தன்மையை நிரூபிக்கிறார் சிவத்தம்பி.

“ஆனால் பி.பி.சி.க்கு அளித்த போட்டியில் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளீர்களே?” - என்று கேட்கிறபோது (குமுதம் 18.11.2009) “ஈழத் தமிழர் பிரச்சனையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் இன்னும் கூடுதலாகச் செயல்பட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. ஆனால் இலங்கையில் தற்போதுள்ள சூழலிலும், எனது உடல் நலமின்மையாலும் நான் நேரடியாகப் பங்கேற்பது சற்று சிரமமாக இருக்கும் என்று தான் கூறினேன்” - என்று விளக்கமளிக்கையில் விளகெண்ணை வழிகிறது. சிவத்தம்பி பற்றிய நடைமுறச் சித்திரம் தெளிவாய் வரையப்பட்டு விடுகிறது.

பேராசிரியர் சிவத்தம்பி, 1995-ல், தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ மாநாட்டில் பங்கேற்க முடியாமல் திருப்பியனுப்பப்பட்டார். தமிழ் மண்ணில் கால் பதிக்க விடாமல் அப்போதைய ஜெயலலிதா அரசால் திருப்பியனுப்பப்பட்டமை ’புலி ஆதரவாளர்’ என்ற அரசியல் நிலைப்பாட்டிலிருந்து தான் எடுக்கப்பட்டது. இப்போது சிவத்தம்பி அழைக்கப்பட்டிருப்பதும் அரசியல் நிலைப்பாட்டிலிருந்துதான். இரண்டும் ஈழவிடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்த நடத்தப்பட்ட - நடத்தப்படுகிற காரியங்கள். அவமானகரமான 1995-ன் மறுப்புக்கும், தலைமேல் தூக்கி வைத்து ஆடும் 2009-இன் வரவேற்புக்கும் ஊடாக ஓடுவது சுயநல அரசியல் மட்டுமே.

வருத்தப்படுவதற்கும் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை என்கிறார்கள் சமீபத்தில் நான் கொழும்பு சென்றிருந்த வேளையில் சந்தித்த நண்பர்கள். 2002 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்க்கூடல் மாநாட்டினைத் தொடங்கி வைத்து, தலைமை உரையில் சிவத்தம்பி பேசினார். அந்த மாநாடு விடுதலைப் புலிகளின் நிதர்சனம் வெளியீட்டகமும் கலைப் பண்பாட்டுக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாநாடாகும்.”

“இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழுகிறார்கள் என்ற பதிவே இல்லாமல் செய்யும் முயற்சி 1948-லிருந்து தீவிரப்பட்டது. தமிழினம் என்ற ஒன்றே இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளின் எதிர்வினையாகவே ஈழத்தமிழ் மக்களுடைய குரல் எழுந்து வரத் தொடங்கிற்று. அப்போது இளைஞர்களுடைய வருகையும், இடர்களைய அவர்கள் மேற்கொண்ட உக்கிரமும் இந்தப் போராட்டத்தை ஒரு ஆயுதப் போராட்டமாக்கி விட்டது... மானுடவிடுதலை நோக்கிய திசையில் உதித்தது ஈழத்தமிழர்களின் விடுதலைப் போர்”

- அந்த மானுட விடுதலை அழிக்கப்பட துணை நின்ற ஒரு பெரும் அரசியல் சக்தி, சிவத்தம்பி என்ற ஒரு பெரும் தமிழ் மலையை முன்னிறுத்தி செம்மொழித் தமிழ் மாநாட்டை ஒப்பேற்றி விடலாம் என்று நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் 2002 அக்டோபர் மாநாட்டுக்குப் பின் நடந்த ஒரு நிகழச்சியை வைத்துப் பார்க்கையில் சிவத்தம்பியை புரிந்து கொள்வதில் நாங்கள் தவறிழைத்து விட்டோம் எனத் தெரிந்தது.

2002, அக்டோபரின் போதும் அதன் பின்பும் சந்திரிகா இலங்கை அதிபராக இருந்தார். இனவெறி (கம்யூனிஸ்டு) அமைப்பான ஜே.வி.பி.யைச் சேர்ந்த விஜிததேரா கலாச்சார அமைச்சர். அப்போது பேரா.க.சிவத்தம்பிக்கு சாகித்ய ரத்னா விருது வழங்க முடிவு செய்தாகள். “அவர் புலி ஆதரவாளர். அவருக்கு விருது வழங்கலாமா?” என கேள்வி எழுப்பிய போது “அத்தகைய ஒரு தமிழ்ப் பேரறிஞரையும் நாங்கள் மதிக்கிறோம் என்பதைத் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தவே வழங்குகிறோம்”.

- என இனக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மக்களின் உளவியலைச் சீர்செய்யப் பயன்படுமென, வழங்கப்பட்டது. அதற்காகவே வழங்குகிறோம் என ஜே.வி.பி.யைச் சார்ந்த கலாச்சார அமைச்சர்; பதில் சொன்னார். விருதுடன் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாததால், சிவத்தம்பி நேரில் செல்ல இயலவில்லை. தன் சார்பில் மருமகனை அனுப்பி வைத்தார். அதிபரால் விருது வழங்கும் விழா என்பதால் பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக விருதுக்குரியவர் அல்லாத இன்னொருவர் விருதைப் பெற இயலாமல் ஆனது. சில நாட்கள் கழித்து ஜே.வி.பி.யைச் சேர்ந்த கலாச்சாரத் துறை அமைச்சர் விஜித தேரா சிவத்தம்பியின் வீட்டுக்கு வந்து விருதை நேரில் வழங்கினார். புகைப்படமும் எடுத்துக் கொண்டு மறுநாள் பத்திக்கைகளிலும் தொலைக்காட்சியிலும் இலங்கை அரசினர் விளம்பரம் செய்தார்கள்.



சிவத்தம்பி பற்றி ஈழத்தில் பிரபலமாகியிருக்கிற ஒரு வாசகம் உண்டு. “கொழும்பில் இருக்கிறபோது அவர் சிங்களர்; ஆணையிறவு தாண்டினால் அவர் தமிழர்”.

தமிழறிஞர்களை புலமை சார்ந்து மதிப்பிட்டு, அவர்களின் வாழ்வுப் பாங்கு குறித்து மதிப்பிடாத ஒரு தவறை செய்திருக்கிறோம். சமகால எழுத்துலகச் சிகரங்கள் குறித்தும் இதே தவறைத் தொடர்கிறோம் என்றுபடுகிறது.

நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியப் படைப்பாளிகள் பலரும் காலச் சூழல் குறித்த விமர்சனப் பார்வையுடனே இயங்கினார்கள். இலக்கியம் என்பது அது தோற்றமெடுக்கும் சமூக, அரசியல், பொருளியல், வரலாற்றுச் சூழல்களிலிருந்து தப்பித்துப் பிறக்க முடியாது. ஏதேனும் ஒரு வகையில் இந்தத் தொடர்புகளிலிருந்தே பிறக்கிறது. தமிழில் நுண்மாண் நுழைபுலம் கொண்டோர் - சமூக அறம், அதிகாரம், அடித்தட்டினர், பெண்கள், தலித்துகள், சுற்றுச்சூழல், மனித உரிமைகள், உலகமயம் போன்ற தம்மைச் சுற்றி நிகழும் பிரச்சனைகளில் அக்கறை கொண்டோரா என்பது கேள்வி. தமிழும் தமிழர் வாழ்வும் மேற்காட்டிய நிலைமைகளிலிருந்து பிரிக்க முடியாதவை, என்பதை வேறு எவரினும் மேலாய் தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் உணர்ந்து - சாமாணியத் தமிழரின் வாழ்வைப் பாதிக்கும் விசயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய வேளை இது.

அதிகாரத்துக்கு எதிரான தம் அறிவுத் தகுதியை நிறுவ வேண்டிய தருணம் இப்போது வாய்த்திருக்கிறது. ஆனால், அதிகாரத்துக்கு அடிபணிவதான, அடியொற்றிப் போகும் தம் தகுதியை -

“கும்பிடுகிற என் கைகள் ஒரே கைகள்தான்.
கால்கள்தான் மாறிக் கொண்டே இருக்கின்றன”

- என தமிழ்ப் பேராசிரியர், பேரறிஞர் ஒருவர் வெளிப்படுத்தினார். அதாவது கால்கள் மாறிக்கொண்டே இருந்தாலும், என் கைகள் கும்பீட்டுக் கொண்டே இருக்கும் என்பதான போன்றதான நகர்வுகளையே கொண்டியங்குகிறார்கள் பலர்; அதிகார வளைப்புக்கு புதிது புதிதாய் தம்மைத் தீனியாய்க் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஒரு கவிஞர் பற்றி

“மற்றவர்களை விமர்சிக்கையில் அவருடைய நாக்கில் வாளிருந்தது:
கருணாநிதிக்கு மாத்திரம் அவருடைய நாக்கில் மயில்தோகை இருந்தது”

என்று எழுதிய எனது முந்திய கருத்தை மீள் பதிவு செய்வது இங்கு அவசியமாகிறது.

செம்மொழித்தமிழ் மாநாட்டின் வெளிப்பாடுகள் எத்திசையில், எவ்வாறு அமையும்? அதற்கான முன்நகர்வுகள் தோன்றத் தொடங்கியுள்ளன. சென்னை சங்கமத்தின் ஒரு பிரதான கூறான ‘தமிழ்ச் சங்கமத்தின்’ பொங்கல் நாள் நிகழ்வில், ந.முருகேச பாண்டியன் எழுதிய

‘திராவிட இயக்க வளா;ச்சியில்
கலைஞரின் நாடகங்கள்’

என்ற நூல் வெளியீட்டில், வழக்கம் போல் அமைச்சர்கள், கவிஞர்கள், வாலி பங்கேற்பினூடாக, கூத்துப்பட்டறை ந.முத்துச்சாமி, பேரா.அ.ராமசாமி போன்ற சமகால கலை இலக்கியத் திறமைகளும் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத சப்பானிய அறிஞரும், உலகத் தமிழாராய்ச்சிக்கு குழுவின் தலைவருமான நொபாருகொராஷிமா இந்த அரசியல் சதுராட்டங்களுக்கு ஆட்படாது தமது புலமைத் தகுதியை நிறுவியுள்ளார்.

‘பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்”

- என்ற புறநானூற்று வரிகளை, மாணவர்களுக்குப் பயிற்றுவித்த சான்றோர்களிடம், அவ்வரிகளை மெய்ப்பிக்குமாறு இன்றின் வரலாறு கோருகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று கொண்டாட்ட உணர்வில் இல்லை. முள்வேலியில் முடங்கிய தமிழர்கள் வாய் பேச முடியா நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வெளியே இருப்போரின் நிலையும் அதுவே. திசையெட்டும் சிதறிய உறவுகள் வாய்புதைத்து அழுகின்றனர். தமிழினம் இருந்தால்தான் தமிழும் இருக்கும் என்ற எளிய உண்மையை உரக்கச் சொல்ல வேண்டிய நேரமல்லவா?

யாழப்பாணத்தில் வாழுகிற எழுத்தாளர் அ.யேசுராசா ஒரு நண்பரிடம் சொன்னாராம்;

“யாழ்ப்பாணத்தில் இப்போது நான்
ஒருவன் மட்டுமே இருக்கிறேன்”

- அங்கு இன்றைய நாளில் தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் பலரும் காற்றடிக்கிற பக்கம் - சாய்ந்து விட்டார்கள் என்பதை அவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இங்கு தமிழகத்திலும் சில யேசுராசாக்கள் மிஞ்சுவார்களா? கோவை ஞானி, ம.லெ.தங்கப்பா, பேரா.தொ.பரமசிவன், கவிஞர் இன்குலாப், கவிஞர் புவியரசு, இராசேந்திரசோழன், மாலதி மைத்திரி, சுகிர்தராணி எனச் சிலர் மிஞ்சுகிறார்கள்.

- சூரியதீபன்
(காலச்சுவடு, பிப்ரவரி 2010)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?