இன்குலாப் - பாரதிக்குப் பின்


நண்பர் நாஞ்சில் நாடன் ஒரு கண்ணாடியை நம் பார்வைக்குத் தூக்கிப் பிடிக்கிறார்:

செக் குடியரசின் தலைநகரான பிராக் (PRAUGE) விமானநிலையத்தில் இறங்குகிறீர்கள். வெளியில் வந்ததும் முகப்பில் ஒரு அறிவிப்புப் பதாகை - ‘இசைக்கலைஞர் மொசாட், எழுத்தாளர் காப்கா பிறந்த மண் உங்களை வரவேற்கிறது’.

நெல்லை தொடர் வண்டி நிலையத்தில் இறங்குகிறோம். தொடர் வண்டி நிலைய முகப்பில் 'மகாகவி பாரதி பிறந்த மண்: புதுமைப் பித்தன் பிறந்த பூமி வரவேற்கிறது' என சின்னஞ்சிறு அறிவிப்பினையேனும் செக்கொஸ்லாவிகா தலைநகரின் வரவேற்பை தொடர் வண்டி நிலையம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பதாக கருதிப் பார்க்க இயலுமா? கனவு மெய்ப்படாது.

மற்றொரு வரலாற்றுப் பதிவு:
பிரான்சின் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து அல்ஜீரியா போராடிக் கொண்டிருந்தது. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தில் சேர்ந்து பலப்படுத்துமாறு இளைஞர்களை பிரெஞ்சு அரசு அழைப்புவிடுத்தது. ’விடுதலைக்குப் போராடும் அல்ஜீரிய மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டோம்’ என்ற இளைஞர்களின் எதிர்ப்பினை நியாயமானது என வரவேற்றார் எழுத்தாளர் ழீன் பால்சாத்தரே. பிரான்ஸ் காலனியாதிக்கத்தின் கீழ் வதைபடும் அல்ஜீரியர்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் இளைஞர்களைப் போராடுமாறு அழைத்தார். பிரான்ஸ்க்கு எதிராக இளைஞர்களைத் தூண்டிவிடுகிறார்; ஜீன்பாழ் சாத்தரேயைக் கைது செய்வீர்களா என பிரெஞ்சு அதிபரிடம் கேட்கப்பட்டது. பிரான்ஸின் அதிபராக அப்போது இருந்தவர் துகேலே என்ற ராணுவ அதிகாரி. இராணுவ அதிகாரியான துகேலே அதை நிராகரித்தார். “சாத்தரேயைக் கைது செய்வது பிரான்சைக் கைது செய்வதாகும்” - எனப் பதிலளித்தார்.

எழுத்தாளர்களைக் கொண்டாடுவது இதுதான். அறிவுக்கம்பீரத்தின் வெளிப்பாட்டை அடக்கிவைத்தால், அது தேசத்திற்கு கரும்புள்ளியாகி விடும் என்று ஒரு இராணுவத் தளபதியே பிரெஞ்சு அதிபராக இருந்தும் அதை நிராகரித்தார். எழுத்து மேதமைக்கு அளித்த இது போன்றதொரு மதிப்பை – முற்றாக இராணுவ மயப்படுத்தப்பட்டு விட்ட இங்குள்ள அரசியல் மனங்களிடம் எதிர்பார்க்க இயலுமா?

இலக்கிய மனம் மேன்மையானது: மென்மையானது. அது காற்றின் நடமாட்டம் போன்றது. காற்றின் திசைகளை மூடிவைத்து காற்றைத் தடை செய்ய ஏலுமோ எவரேனும்? எங்கேனும்? காற்றின் நடமாட்டத்துக்குக் கட்டுப்பாடு போடும் இராணுவ மனம் இங்குள்ள அரசியல் அரங்கிலும் கல்விப்புலத்தினுள்ளும் நடமாடத் தொடங்கியுள்ள காலமிது.

எத்தனை எழுத்தாளர்கள் வாழ்ந்து மறைந்தார்கள்! எத்தனை கவிஞர்கள் மரணமிலாப் பெருவாழ்வு எய்தியிருக்கிறார்கள்! ஆனால் ஒரு மரணத்தின் போதாவது தமிழ்நாடு சட்டமன்றம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதாக வரலாறு உண்டா? ஆளுங்கட்சி (அ.இ.அ.தி.மு.க), எதிர்க்கட்சி (தி.மு.க) ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுபட்டு சட்டமன்றத்தில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றிய அந்த 1985 மார்ச் மாதம் நினைவிருக்கிறதா நண்பர்களே?

“கழகத் தலைவர் கலைஞரையும், திருமதி இந்திரா காந்தியையும், தமிழ்ப் பெருமன்னன் இராசராசனையும் அவதூறு செய்த ’இன்குலாப் கவிதைகள்’ நூல் சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படவேண்டும்” என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றியது.

கல்விப்புலம் சுயமாக, தன்னுரிமையுடன் இயங்கும் ஆற்றல் கொண்டது. மனிதவளத்தை மேம்பட இயக்கும் தொடர் மூச்சுடையது. சுய சிந்தனை உதிப்பு, தீர்மானம், செயலூக்கம் ஆகிய மூன்றும் அதன் குணங்கள். சமுதாயவெளியில், அரசியல்தளத்தில், செயல்படும் சூதுவாதுக்கு ஆட்படாது, சுயமான வேலைத்திட்டத்தில் கல்விப்புலம் இயங்கிட இல்லை என்பது - இன்குலாப் கவிதைகள் நூல் நீக்கப்பட்டதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் என்ற பாரம்பரியமிக்க கல்விப்புலம் சிறு முணுமுணுப்பு கூட வெளிப்படுத்தவில்லை என்பதால் வெளிச்சமாக்கியது.

இந்தக் கல்விப் புலங்களின் செயல்பாடுகளில் தனக்கு நிறைவில்லை என்பதைத் தொடர்ந்து இன்குலாப் எடுத்துரைத்து வந்துள்ளார்.

2

பாரதி காலத்தின் பெரும் பிரச்சினை அந்நிய ஆட்சி. அவனுடைய நாட்களில் இந்தியா குடியேற்ற (காலனியாதிக்க) நாடு. அடிமை வாசிகளின் குணங்களை மக்களும் பெற்றிருந்தனர்.
“சிப்பாயைக் கண்டஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்
துப்பாக்கி கொண்டொருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந்தெழுந்து நிற்பார்
எப்போதும் கை கட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள் போலேங்கி நடப்பார்”
காலனிய ஆதிக்கம் நீங்கியபின்னரும், இந்தியாவின் குணவாகில் மாற்றமேதும் ஏற்படவில்லை போலவே, மக்களின் குணவாகும் பெரிய மாற்றம் கொள்ளவில்லை.

ஒரு காலனியாதிக்கத்தை விரட்டிவிட்டோம் எனப் பெருமிதம் கொண்டனர்; மாறாய் பல காலனியாதிக்கங்களின் மடமாக இந்தியா ஆனது. நோபெல் விருது பெற்ற கென்ய எழுத்தாளர் கூகி-வா-தியாங்ஙோ படைத்த “சிலுவையில் தொங்கும் சாத்தான்” என்ற நாவலில் வருகிற மாதிரி நடந்தேறியது: ” என் சொந்த நாட்டுக்கு முன்வாசல் வழியாக அனுப்பிவைக்கப்பட்டால்,இந்த நாட்டின் பின்வாசல் வழியாக மறுபடியும் நுழைவேன். முன்னைக் காட்டிலும் ஆழமாக வேரூன்றக்கூடிய விதைகளை விதைப்பேன்”.

பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களின் வேட்டைப் பிராணிகளாக ஆக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இப்படியாக ஆளும்வர்க்கங்கள் வைத்திருக்கின்றனர். “இந்தியத் துணைக் கண்டத்தில் நான் ஒரு கைதியாகவே உணர்கிறேன். 1945 ஆகஸ்டு 15–ம் நாள் ஏதோ ஒன்று கிடைத்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆளும்வர்க்கங்களுக்கு ஏதோ ஒன்று கிடைத்திருக்கலாம்; இந்தியாவில் சாதாரணமானவனுக்கு அது கிடைக்கவில்லை”


இன்குலாப்பின் அம்புறாக் கூட்டில் இது போல் எதார்த்த அக்கினிக் கணைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
“உழுது விதைத்து அறுத்துத்
தந்தவனின் பெயர் பொறியாத
பிடிச்சோறு போல
வாய்த்துள்ளது நமக்கான விடுதலை”
என்று மனசு உளைந்து போவார்.

இன்குலாப்பின் எழுத்தை எங்கிருந்து, எப்பக்கத்திலிருந்து அணுகுவது, மதிப்பீடு செய்வது?

நிலவும் சமகால வாழ்வியலிலிருந்து மதிப்பீடு செய்யவேண்டும். சமகால வாழ்வியலில் நாம் நிறைய நிறையக் கூடங்குளங்கள், நெடுவாசல்கள், கதிராமங்கலங்கள், மீத்தேன், மழைகாலமாயின் தண்ணீர்க் கல்லறைக்குள் மூழ்கும் மக்கள், சாதாரண காலத்தில் கண்ணீரைக் குடம்குடமாய் கொட்டும் விழிகளுடன் பெண்டிர் நடத்தும் தண்ணீர் யுத்தம் - என புறப்பிரச்சினைப் பிசாசுகளால் உளவியல் நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டோம்; சமகால வாழ்வியலின் புறப்பிரச்சனைகள் மலையாக நம்மை அழுத்தி அக உளைச்சலைத் தளும்பச் செய்கின்றன.

பாரதி காலத்தின் ஒற்றைப் பெரும் பிசாசு வெள்ளையன் ஆட்சி. அந்நியனால் உண்டாக்கப்பட்ட பாரதி காலத்தின் பிரச்சினைகளின் பிசாசு ஒருநூறு என்றால், பாரதிதாசன் காலத்தில் அவை ஐநூறு. இன்குலாப் காலத்தில் ஓராயிரம் பிசாசுகள் பெருக்கெடுத்தன.

இது பாரதி காலம், இது பாரதிதாசன் காலம், என்பது போல் இது இன்குலாப் காலம். இது நாம் நிற்கும் காலம்.

அவருடைய காலம் வசந்தத்தின் இடிமுழக்கமாக இருந்தது. இந்நூற்றாண்டின் மத்திக்கு சற்றுப் பின்னர் புரட்சியின் வாசற்படி திறக்கப்படுகிறது. அந்த வாசற்படியில் தான் இன்குலாப் நின்றார்: எஸ்.வி.ஆர் நின்றார். தமிழில் பரட்சிப்பாடல் எழுதிய ஆதி என்ற கனல் நின்றார். கோ.கேசவன், அ.மார்க்ஸ், நாங்கள் நின்றோம்.
காலம்தான் கவிதை இயலை, இலக்கிய இயலை, கலையியலை நிர்ணயிக்கிறது. பாரதிக்குப் பிந்திய காலத்தை சரியாகக் கணித்தவர் இன்குலாப்.


சமகால வாழ்வியலின் புறப்பிரச்சனைகள் மலையாக அழுத்தி அக உளைச்சலைத் தளும்பச் செய்கின்றன. பின் காலனியமாக ஆக்கப்பட்டுவிட்ட நாட்டில் வாழ்க்கையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு மக்கள் நாதியற்றவராயினர். சாதிய ஆணவத்தால் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர் ,ஆணதிகாரத்தால் ஒடுக்கப்படும் பெண்டிர், ஆதிக்கக் குழுக்களால் சிதைபடும் தொழிலாளர், மொழி ஆதிக்கத்தால் ஒடுக்கப்படும் தமிழர் - இவர்களும் இவர்களே போன்றோரும் என நாதியற்றோர் வரிசை நீளும்.
“வெள்ளை எதிர்ப்பின் மனிதம் புரியக்
கறுப்பனாய் இருந்து பார்
ஆதிக்கமொழி எதிர்ப்பின் வரலாறுதெரிய
தமிழனாய் இருந்து பார்
பார்ப்பன எதிர்ப்பின் தன்மானம் உணரப்
பறையனாய் இருந்து பார்
வல்லாங்கு செய்யப்பட்ட
பெண்ணாய் இருந்து பார்
வன்முறை ஏன் என்ற காரணம் புரியும்“
நாதியற்ற அனைத்து மக்களின் குரலை அவா் ஒலித்தார்.

மனிதர்கள் சுருங்கிப் போய்விட்டனர். மனச் சுருக்கம் கொண்டுவிட்டனர். இயந்திர வாகனங்களை இயக்கி, அவைகளை விடவும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சென்னை - வண்டலூர் உயிரியல் பூங்காவின் பின்புற இடதுபக்கம் உள்ளது அய்யஞ்சேரி என்ற கிராமம் - இப்போது அதுவும் நகர்மய வளையில்: 2002–ல் மனைவாங்கி வீடு கட்டிக் குடிபுகுந்தார் இன்குலாப்.

இயற்கை – முழுப் பரிமாணத்துடன் கும்மாளமிடும் நிலம் அய்யஞ்சேரி. வீட்டுக்கு முன்னும் பின்னும் வலப்பக்கமும் இடப்பக்கமும் வனம். இரவுகளில் உயிரியல் பூங்காவிலிருந்து வரும் உயிரினங்களின் ஓசை - யானைபிளிறும்; சிங்கம் கர்ஜிக்கும்; புலி உறுமும்; நரிகள் ஊளை; மயில்களின் அகவல் – ஆனாலும் என்ன, ’இசைக்கச்சேரி’ கேட்டுக்கொண்டிருப்பார் இன்குலாப் என்ற கவி.



வீட்டைச் சுற்றியும் மண்டிக் கிடந்த தாவரக் காட்டில் மலர்ந்தன காந்தள் மலர்கள்; அவருக்குப் பார்க்க, கேட்க, உறவாட இயற்கையிருந்தது. உறவாட கவிதையிருந்தது.
“பசுமை முண்டிக் கொண்டிருக்கிறது
வீட்டு முன் மண்டும் புதர்களில்
குடுகுடுவென ஓடும்
சிறிதும் பெரிதுமாய்க் கவுதாரிகள்.
மறுநாள்
தாவிக் குதித்தது ஒரு குறுமுயல்.
வனத் துறையின் நீண்ட சுவர்களிலிருந்து
அகவி,
தோகை விரிக்கும் ஒரு சாயல் மயில்.
மரவண்ணத்தில் வளைந்து நெளிந்து செல்லும்
ஒரு சாரைப் பாம்பு
பின் தொடரும் என் கவிதை”
இயற்கைச் சூழலுக்குள் வீடும் வாழ்வும் வசப்பட்டபின் கவிதையும் எழுத்தும் இயற்கை வசப்படுகிறது. இயற்கைக்குள் எப்படி வாழ்வது என்பதை கவிஞர் கற்றுக் கொண்டிருந்தார். வீட்டின் முன்புறத்தில் ஒரு மாமரத்தையும், இரு பக்கங்களிலும் நெல்லி மரம் ஒரு பக்கவாட்டிலும், வாழை, தேக்கு மரங்களை மற்றொரு பக்க வாட்டிலும் நட்டு வைத்தார். வீட்டின் பின்புறத்தில் மூன்று தேக்கு மரங்கள் நட்டார். மரங்கள், செடி கொடி, தாவர மென பசுமைச் சூழல் கொண்ட இல்லத்துக்கு ‘பசுங்குடில்’ எனப் பெயரிட்டார்.

இயற்கை சூழலுக்குள் வருகையும், புறஉலகத் தொடர்புகளிலிருந்து வெளியேறுதலும் ஒரு சேர நிகழ்ந்தன போல் எங்களில் சிலருக்குத் தோன்றிற்று. அவ்வப்போது போய் பார்த்துப் பேசிவருகிற எங்களுக்கு “என்ன இப்படி தனியா வந்திட்டீங்களே” என்ற ஆதங்கம் படரும். அவரிடம் ஒருமுறை தெரிவித்தேன் ”நீங்கள் இங்கே வந்திருக்கக் கூடாது”

இவ்வாறு தனிமைப்படவா இத்தனைகாலம் நெருப்பேந்தி, சுடர்கொண்டு நடந்தீர் என நாங்கள் சடவுற்ற போது, அவர் தனிமையை வரமாக்கிக் கொண்டிருந்தார்.

புதுச்சேரி என்றழைக்கப் பெறும் பாண்டிசேரிக்கு புலப்பெயர்வான பின் பாரதிக்கு வாய்க்கப் பெற்றது தனிமை; புதுச்சேரி அப்போது நகரமில்லை. குயில்தோப்பு, முந்திரிக்காடு, வயல்வெளி, நீலக்கடல் - அந்தக் கடற்காற்றில் பாரதிக்கு அடிமைதனத்தின் நோய்கள் அகன்றன.கவிதை பிறந்தது. கவிதையின் ஆயுள் கூடியது. கதைகள், கட்டுரைகள் ’கெத்கெத்தென்று’ தப்பளமிட்டன.

இயற்கையின் முற்றுகைக்குள் தனிமை கை கொடுக்க பாரதி – குயில் தோப்பை விவரித்தான்:
“காலை யிளம்பரிதி வீசுங்கதிர்களிலே
நீலக்கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை”
இயற்கை தன்வயமாயும் தான் இயற்கை வயமாயும் கரைந்ததில் பரவசப்பட்டு குயில்பாட்டிசைத்தான்.

இல்லத்தைச் சுற்றியிருந்த வனம் - இன்குலாபுக்கு கவிதைப் பாலூட்டியது;
சன்னல் வலைக்கு வெளியே
தலைவிரிக்கும்
தென்னங்கீற்றுகளின் இடுக்கில்
தெரியும் விண்மீன்களோடு
வலை ஓரத்தில் சுடர்கிறது
நாள்தோறும்
ஓர் ஒற்றை மின்மினி.
வலை கிழித்து வா
வானுக்கென அழைக்கிறதோ”
என்று மின்மினியை அழைத்தார்.

”கொய்யாக் கிளைகளைச் சுற்றிச் சுற்றி
சீச்சிட்டுக் கொண்டிருந்தது
அந்த சிட்டுக் குருவி
கத்தலில்
அதன் சொண்டே உதிர்ந்து விடும் போல்…
என்ன வென்றறிய
நானும் மரத்தடிக்கு விரைந்தேன்
.................
வெளிர்பச்சை நிறத்தில் கரும்புள்ளிகள் கொண்ட
ஒரு முட்டையும்
சிவந்தவாய் அக்காந்து
தலை தொங்கி
கண்ணாடித் தோலை இறகுமூடாத ஒரு குஞ்சும்…
என்னைக் கண்டதும்
கூடுதலாய்க் கத்தியது குருவி
செயலற்று நின்ற என்னையும்
குருவியையும் பற்றி அக்கறையின்றிச்
சுற்றுச் சுவரில்
அலகுதீட்டிக் கொண்டிருந்தது
ஒரு பறவை”
- சிட்டுக் குருவிக்காய் சிந்தை கலங்கினார்.

மலர்கள் வாசத்தை, வண்ணங்களை, சுவையைக் கொண்டாடினார்.குடிபெயர்வு ஆன நாட்களிலிருந்து வனவாசியாய், இயற்கைப் பயணியாய் தன் இலக்கியத் தொப்பூழ் கொடியை நகர்மய நெருக்குதலிலிலிருந்து அத்தெறிந்துவிட்டு எழுதினார்.
வீட்டின் சுவரை ஒட்டித்தான் வளா்கிறது
சாத்துக்குடிக் கன்று
சுவருக்குப் பின்னால் குவிந்த
சருகுகளைக் கொளுத்தத் தீமூட்டினார்
பின்மனைக்குரியவா்.
அவா் கோபத்தைப் போலவே வளா்ந்த
கொழுந்துகளில் கரிந்தது
கன்றின் பின்புறம்
கன்றின் கதை முடிந்தது
கன்றின் கதை முடிந்தது என்றிருந்தேன்
பாத்திகளுக்குப் பாயும்நீா்
அதற்கும் பொசிந்தது
பூக்கிற காலம்
நான்கு நாட்களுக்குமுன்
அதுவும் அரும்பியது
வெள்ளையாய்.
பேரன் சொன்னது நினைவுக்கு வந்தது
எனது காலும்வளரும் என்று…
காலிழந்த தன் அகத்துயரை ஒரு சாத்துக்குடிக் கன்றின் பூக்கும் காலத்தில் பதித்துப் பேரனின் பெருவிருப்பைப் பதிவுசெய்துள்ளார்.

மலர்களின் வாசத்தை, வண்ணங்களை, அழகைக் கொண்டாடினார். குடிபெயர்வு ஆன நாட்களிலிருந்து வனவாசியாய், இயற்கைப் பயணியாய் புதிய தொப்பூழ்க் கொடியை ஏந்திக்கொண்டார். நகர்மய பழைய கொடி அகன்று போயிற்று.

எனினும் தன்னையும் தன் மக்களையும் சுற்றி இறுக்கிவரும் ஆதிக்கக் கயிறுகளை அறுத்தெறியும் நாடோறும் கனன்று கொண்டேதான் இருந்தது. முனைப்பு சிறிதும் குறைவுபடவில்லை. எதிர்ப்புணர்வுகளை முறுக்கேற்ற இயற்கையைத் துணை சேர்த்துக்கொண்டார்.

’கண்ணீர்க் கோடு’ கவிதை, ஆகஸ்டு 15-ஐ, முன்னிட்டு 26.07.2007-இல், எழுதப்பட்டது என்ற சிறு குறிப்புடன் வரும்.
ஒருபக்கம் மட்டுமே
கிளைத்துப் பூத்துக் காய்த்துக் கனிகிற
அறுபதாண்டு மரம் இது.
கன்றாய் நட்ட இதனது பாத்தியில்
குடம்குடமாய் ஊற்றினோம்
எங்கள் வியர்வையை.
அடியுரமாய்
எரிக்கப்பட்ட எங்கள் சாம்பல்
நீண்டு செல்லும் இதனது வேர்கள்
இன்று எங்களது நரம்புகளை அடுத்துத்தான்.
எனினும் சுவைத்ததில்லை
இதன் பூவில் துளித் தேன்
கிளை உரசும் மாளிகைகளுக்குள்ளும்
எங்கிருந்தோ வரும் பறவைகளுக்கும்
எப்பொழுதும் இதன் காயும் கனியும்.
கசப்புக் கொட்டும் வெறும்வாயுடன்
எம்குஞ்சுகள்
இதன் நிழலும் அண்டாத பாழ்வெளி
எமது அறுபதாண்டுகள் நீளும்
கண்ணீர்க் கோடு.
எங்களுக்கென்றொரு
கன்று நடுவோம்”
ஆதிக்கத்தின் அனலை எதிர்த்தடிக்கும் நிழலை இயற்கையிலிருந்தே அள்ளிக்கொண்டு வந்தார்.ஒடுக்குதல்களுக்கு எதிராய் வெளியான அவரது கவிதைகள் இயற்கையின் சிரிப்பைத் தன் கக்கத்தில் இடுக்கியபடி வெளிப்பட்டன.


குடிபெயர்வின் பின்னான காலத்தில் அவர் வீட்டுக்கு எதிரில் நூறு அடி தாண்டி ஒரு பூங்கா. புதிய குடியிருப்பு வடிவமைப்புச் செய்தபோது சமூக நலக்கூடம், பேருந்து நிலையம், விளையாட்டுத்திடல், பூங்காவுக்கான இடம் ஒதுக்கப்பட்டன. எல்லாம் செய்யும் வல்லமைகொண்ட அரசியல் கட்சியினர், அதிகார வர்க்கம், ரியல் எஸ்டேட் தாதாக்கள் என்னும் முக்கூட்டு விளையாட்டினால் சமூக நலக்கூடம், பேருந்து நிலைய இடம் கபளீகரம் செய்யப்பட்டது. பூங்காவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தையும் ஆக்கிரமித்த போது, இன்குலாப் அங்குள்ள குடியிருப்போர் சங்கம் மூலம் வழக்குத் தொடர்ந்து, பலமுறை கொலை மிரட்டல்கள வந்தபோதும் அஞ்சாமல், கடைசி வரை போராடினார். இரண்டாண்டுகளின் பின் அது பூங்காவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பொதுச் சொத்து என நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அவர் இறப்புக்கு இரு மாதம் முன்பு தீர்ப்பு வந்தது. நிலஅபகரிப்பை எதிர்த்துப் போராடி அதை மக்களுக்காக்கியதில் இன்குலாப் பெருமகிழ்ச்சியடைத்திருந்தார். போராட்டத்தின் முடிவில் வசப்படுகிற மகிழ்ச்சி அது.
“புதுத் தளிர்களால்
கொண்டாடக் காத்திருக்கிறது தரு
ஒரு பாடலுடன் வரவிருக்கிறது குயில்
உடன் தளிர்த்து வீழும் சருகுகளைத் தொடர்ந்து
ஒரு பழுப்புடை தரித்து
என் பயணமும்
இலையுதிர் காலம் எனினும்
சருகாவதில்லை வேர்கள்”
என முதுமைமுற்றுகையிடும் போதும் ,நீரிழிவால் ஒருகால் நீக்கமாகி ஊனமுற்ற போதும், போர்க்குணம் ஊணமாகிடவில்லை.
“வாழ்வது இனிமையானது
போராட்டங்ளோடும் புன்னகையோடும்.
இறப்பது நிறைவானது - நம்பிக்கையோடு”
என்றார்.

07.02.2009-ல் தன் நினைவோடு அவர் எழுதிவைத்த இந்த மரண உரை அவருடைய மகள் ஆமினா பர்வினால் 07.02.2017-இல் கண்டெடுக்கப்பட்டது.
“தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமை திறவாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்”
எனப் பாவேந்தர் பாரதிதாசன் உரைத்தாரே, அதுபோல் நடந்தது.

பாரதி – தன் கவிதா தீப்பந்தங்களைக் கைமாற்றித் தந்தது வேறு யாரிடம்?

இருவரிடம் - ஒருவர் பாரதிதாசன், மற்றவர் இன்குலாப்.

இன்குலாப் தான் ஏந்திய சுடரை யாரிடம் கைமாற்றிச் சென்றிருக்கிறார்? சேரிகளும் வயல்களும் புதுப்புதுச் சாலைகளும் என நீளும் மனுசங்க வெளியில்! அவரின் கவிதைகளின் பயணமும் வாழ்வின் பயணமும் அங்குதான் தொடருகிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?