இசைப்போர்

19.2.2017 ஞாயிறு புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் கறம்பக்குடி பேரூரில் நடைபெற்ற துரை.குணாவின் ‘கீழத்தெரான்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினேன்.

தனது இசைப்பாடல் நூலுக்கு அணிந்துரை கேட்டு வந்திட்ட தலித் சுப்பையா – ஒரு கவிஞர். பாட்டுக் கட்டி இசையமைத்துப் பாடுகிற இசைஞர். இன்னொரு பெருமிதம் கொள்ளத்தக்க பாரம்பரிய உறவும் எங்களுக்கிடையில் இருந்தது. இருவரும் முன்பின்னான ஆண்டுகளில் பயின்ற கலாசாலை மதுரைத் தியாகராசர் கல்லூரி.

2016-ல் ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற புதினத்தை எழுதியதால் ஊரிலிருக்கும் அடாவடிச்சாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானவர் துரை.குணா. சாதிக் கொளுப்பு சற்றும் அடங்காதவர்களின் தூண்டுதல் காரணமாய், ஜூன் மாதம் பத்தாம் தேதி அதிகாலை ஐந்தரை மணிக்கு தட்டி எழுப்பி இழுத்துப் போய் பொய் வழக்குப் போட்டார் கறம்பக்குடி காவல்துறை ஆய்வாளர். ஒரே நேரத்தில் ஆதிக்க சாதியினர், காவல் துறை ஆய்வாளர் ஆகிய இரு வன்முறைக்கும் ஆளான தலித் எழுத்தாளர் துரைகுணாவின் கவிதை நூல் ”கீழத்தெரான்”- கீழத்தெருக்காரன் என்று பொருள்.
“இயல்பாகவே சிறுமை கண்டு பொங்கும் எழுத்து குணாவுக்கு” என்பார் முத்துப் பேட்டை மோகன்ராஜ். அணிந்துரையின் முடிவில்
“90-களில் தலித் கவிதை மொழி தீவிரம் கொண்ட நிலையில் - தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமான முயற்சிகள் புலம்பல்களாக, வசவுகளாக, தன்னிரக்கமாக நின்றுவிட்ட நிலையில் எதிர்த்தடிக்கும், பகடி செய்யும், வம்பிழுக்கும் கவிதைமொழி வசப்படாமலே தமிழிலக்கியம் பின்தங்கிவிடுமோ என்றஞ்சிய காலத்தில் - தலித் சுப்பையா, தலையாரி, அபிமானி, இரவிக்குமார், விழி.பா.இதயவேந்தன் போன்றோரால் தமிழ்ச் சூழலில், குறிப்பாக தமிழகச் சூழலில் தலித் கவிதை ஆயுதமாகப் பரிணமித்தது” என்று குறிப்பிடுவார்.

’கீழத்தெரான்’ நூலின் அணிந்துரையில், தலித்கவிதையை ஆயுதமாக ஏந்தியவர்களின் பெயராக முதலில் வருகிற ஒரு தலித் இசைக் கலைஞரின் பாட்டு நூலுக்கு எழுத நேர்ந்த நிகழ்வினை எனக்களிக்கப்பட்ட பெருமையாக நெஞ்சுக்குள் நிறைத்துக் கொள்கிறேன்.

மக்கள் கலைஞர்களின் பாடல் தொகுப்புக்களுக்கு அணிந்துரை அளிக்க இதன்முன்னர் நேர்ந்த சந்தர்ப்பங்கள் இரண்டு. முதலாவது – மண்ணின் இசைக் கலைஞர் கே. ஏ. குணசேகரனின் “அக்னீஸ்வரங்கள்” இசைப்பாடல் நூல். அது புதுக்கோட்டை ‘ராதா பதிப்பகத்தால் 1980-ல் அச்சாக்கப் பெற்றிருந்தது. இது கே.ஏ.ஜி.யின் முதல் நூல். இந்நூல் எனது அணிந்துரையுடன் வெளியாயிற்று.அதன் பின் பல பாடல்கள் சேர்க்கப்பட்டு அடுத்தடுத்து பல பதிப்புக்கள் வந்தன. அடுத்தடுத்து வெளிவந்த பதிப்புக்களில் எனது அணிந்துரை நீக்கப்பட்டு, வேறு சிலரின் அணிந்துரைகள் வெளியாகின. நான் எழுதிய அணிந்துரையுடனான முதல் பதிப்பும் என் வசம் இல்லாமல் போனது.

இரண்டாவது 1980–களின் தொடக்கத்தில் புரட்சிகரக் கலை இலக்கியச் செயல்பாடுகளின் களமான ‘மக்கள் கலாச்சாரக் கழகம்’ என்ற கலை இலக்கிய அமைப்பின் வெளியீடாக நாங்கள் கொண்டு வந்த – மாயாண்டியின் “வசந்தத்தின் இடிமுழக்கம்” – என்னும் இசைப்பாடல் தொகுப்பு. கலை இலக்கியத் தளத்தில் ‘மனஓசை’ என்கிற மாத இதழ் மூலம் வலுவான எதிர்ப்புக் குரலை பரப்புரை செய்து கொண்டிருந்த காலம் 80-களாகும். காடுகள், வனங்கள், மலைப்பகுதிகளின் வட்டாரமான ’டார்ஜிலிங்’கில் எழுந்தது ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’. வசந்தத்தின் இடிமுழக்கம் சமவெளியிலும் கேட்கும் என்ற கருத்தினை உள்ளடக்கி ”சம வெளிகளிலும் தீப்பிடிக்கும்” – என்ற அணிந்துரையை மாயாண்டி நூலுக்கு எழுதினேன். 2005 – ல் “மக்கள் கவிஞர் மாயாண்டி பாடல்கள்” – என்று இசைப்பாடல் நூலாக வந்த இரண்டாம் பதிப்பிலும் எனது அணிந்துரை தொடர்ந்திருந்தது.

இந்நூலின் முன்னுரையில்
“எனது பாடல்களும் ராகங்களும் - எனது அதீத மூளையிலிருந்து உருகி ஒழுகியவை அல்ல. மக்களது வெப்பக் காற்றில் விளைந்தவையாகும். மக்களின் உலைக்களத்தில் உருவாக்கப்பட்ட அந்த ஆயுதங்கள் எனது மேற்பார்வையில் அணிவகுத்து நிற்கின்றன. அதனை விதையிட்டுப் பயிராக்கிய மக்களுக்கே, அவர்கள் விளைவித்த அப்பூக்களை மாலையாக்கி அணிவிக்கிறேன்” என மாயாண்டி குறிப்பிடுவார்.

இதனினும் மேலாய் ஒரு மக்கள் கலைஞனின் சுய பிரகடனம் அமைய முடியாது. மக்கள் பணியை மேலெடுத்துச் செய்கிற இசைப்பாடகராய், கலைஞராய், தலித் சுப்பையா விளங்குகிறார். எத்திசை நோக்கியது எந்த மக்களுக்கானது அவரது பணி என்பதை ‘தலித்’ என்ற முன்னொட்டு தெளிவுபடுத்துகிறது.

இன்றைக்கு முயன்றாலும் முன்னர் தந்த அணிந்துரைகள் போல்“தண்ணீரில் தீப்பிடிக்கும் காலமிதோ வருகிறது” என்று எழுத முடியுமா எனத் தோன்றுகிறது. காலம் நம் குரலைத் தீர்மானிக்கிறது. முன்னைக் காலம் போல் - அல்லது நாங்கள் முன்னர் கருதியது போல் ஒருமுகப் பிரச்சினையின் காலமாக இல்லை எதுவும்: ஒவ்வொரு முனையிலும் ஓரொரு உக்கிரமான பிரச்சினைக் கூர்மை. தகவல் தொழில்நுட்பம் விரிக்கும் மாயவலைக்குள் மாட்டுப் படாமல் இன்று ஒரு உயிரும் உலகில் கிடையாது. ‘பிரச்சினை ஒன்றும் இல்லை: போராட்டம் என்று எதுவும் வேண்டியதில்லை ’ என்ற தகவல் தொழில்நுட்பம் விரிக்கிற வலை தமிழ்ச் சமுதாயம் பற்றிய நமது கனவைக் கலைத்துப் போட்டுள்ளது.

முக்கியமான கேள்வி – இது வர்க்க சமுதாயமா வர்ணாசிரம சமுதாயமா என்ற கேள்வி . யாருடைய விடுதலை என்ற கேள்வி நம்முன் வடிவெடுத்துள்ளது.

2

இசைப் பாட்டுகளுக்கும் கவிதைக்கும் வேறுபாடுகள் பல; பிரதான வித்தியாசம் - இசைக்குள் அடங்குவது பாட்டு;சந்தம், சொற்கட்டு, மெட்டு என இசையும் இசை சார்ந்த விதிகளுக்கும் கட்டுப்பட்டது. உரைவீச்சிலான நவ கவிதை எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காதது. அதன் சொல் புதிது: பொருள் புதிது.

இசை, பாட்டு, கூத்து – போன்ற நிகழ்த்து கலைகளை –
இலக்கியம், ஓவியம் போன்ற நுண்கலைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அதன் பரப்பரைத் தன்மைதான். ”இசை தெய்வீகமானது. ஏளிய மக்களின் தொடு உணர்வுக்கு அப்பாற்பட்டது: சாதாரண வாழ்வியலின் நீரோட்டத்துக்கு இசையை இறக்குதல் கூடாது. தெய்வ வழிபாடு என்ற உச்சம் நோக்கியே இயங்குதற்குரியது” என்ற வரையறுப்பும் அதன் செயல்திசை பரப்புரை என்பதை வறையறுப்பதாகவே இருக்கிறது. இந்த இசை உடமை வர்க்கங்களின் உப்பரிகைகளுக்கு திரைச் சேலையாய் ஆடின: மன்னர், பேரரசர், மேட்டுக் குடியினரின் மாளிகைகளின் மனச் சல்லாபங்களுக்கு சங்கதியாகின.

அடித்தட்டு ஒடுக்கப்படும் மக்களை வாழ்வியல் வேதனையிலிருந்து விடுவிப்பது ஒன்றே – உள்ளடக்கமாகக் கொண்டது ‘இசைப்போர்’. எந்தப் புள்ளியிலும் சமரசம் கொள்ளாத எள்ளல், பகடி, சினம், சீற்றம், விமர்சனம் போன்ற உணர்வுகளின் வெளிப்பாடு இத்தொகுப்பு. குடியரசுத் தலைவர் பதவி பற்றி ‘வேலை ஒன்னு காலியாயிருக்கு’ என்ற பாடல் எள்ளலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் பற்றி இப்பாடலில் பின்குறிப்பு ஒன்று வருகிறது. தாழ்த்தப்பட்ட இனமாக இருந்தாலும் ’தலித்’ – என்பதின் குணமாக வாழ்ந்தவரில்லை என்பதால் அவரைப் பற்றிய மற்றொரு குறிப்பு வழங்கி வருகிறது; “இதுவரை குடியரசுத் தலைவர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் ஆகியிருக்கிறார்கள்; இப்போது முதல்முதலாக ஒரு ரப்பர்ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் ஆகியிருக்கிறது”

சாதி, மதம், அரசியல், சமுதாயம், குடும்ப உறவுகள் - யாவை பற்றியும் விமர்சனங்கள் இப்பாடல்கள். அடிமைக்குணம் கப்பிய சமவெளிகளில் தீப் பற்றவைக்கிற முழக்கங்கள் தோழர் தலித் சுப்பையாவின் ‘இசைப்போர்’.

வானொலி, ஒலிப்பேழை, குறுவட்டு , தொலைக்காட்சி – என தொழில்நுட்பத்தின் வடிவங்கள் முன்னேறிக்கொண்டிருகின்றன. இந்த ஒலி, ஒளி ஊடகக் கருவிகளே காற்றில் கலந்த ஓசையாய் ஆகிவிடக் கூடிய அம்சம் அதனுள்ளேயே இருக்கிறது. புத்தகம் என்ற கருத்து ஊடகம் இன்னும் காலாவதியாகி விடவில்லை. ‘விடுதலைச் சிறகுகள்’ போல் எத்தனை இசைக்குறுந்தகடுகள் வெளிப்பட்ட போதும், இசைப்போர் நூல் வடிவில் வருவது பெருமிதம் கொள்ளச் செய்யும் ஒரு நிகழ்வு.

ஊர்த் திருவிழா நடக்கிறது: சொந்த பந்தம் எல்லாமும் வருகிறது. பெத்தமகன் மட்டும் வரவில்லை. கடிதம் எழுதித் தெரிவித்தும் ஒவ்வொரு வருடமும் மகனின் உதாசீனத்தால் வெறுமையாய்க் கடக்கிறது திருவிழா. தனியாய் இருக்கும் அம்மாவும் அக்காவும் அதையும் கடிதத்தில் வருத்தமுடன் தெரிவிப்பார்கள். ‘ஆடுமாடு மேய்ச்ச சனம்’ - என்ற பாடலில்
“சொத்து பத்து சொகங் கிடைச்சதும்
செத்துப் போச்சா பந்த பாசம்”
வரிகள் முள் பாய்ச்சுபவை. சற்று கூர்மையாய் நோக்கின், இது ஒரு சாபம் கொடுக்கும் பாடல். ஒரு மூத்த தாயின், சகோதரியின் வெப்பக் காற்று –அவர்கள் வெளியேற்றும் சாபம் என்பதல்லாமல் வேறென்ன?

படைப்பாக்க முயற்சிகள் பல்துறை சர்ர்ந்து வேறுவேறாக இருப்பினும் - அனைத்தினூடாக ஒரு பொதுத் தன்மை உள்ளது. ஒரே அமர்வில் எழுதிவிடவோ, படைத்து விடுவதோ எவரொருவருக்கும் சாத்தியமில்லை. அதுவும் சமகாலச் சூழலில் அவ்வாறு சொல்வது சுய தமுக்கடிப்பாகவே இருக்கும். ஒரு கவிஞராக, பாடகராக தலித் சுப்பையா இதற்கு விதிவிலக்கில்லை என்பதை – “இந்தியாவின் இதயத்திலே...” என்று தொடங்கும் பாடலை எப்படி எழுதினேன் என்பதில் விவரித்துள்ளார்.

இறுதியாக ஒன்று சொல்வேன்: தலித் சுப்பையா என்றே பெயர் தொடரட்டும்: லெனின் சுப்பையா என்று இணைத்து எழுதினால் அது புரட்கர அடையாளமாய் நிற்கும் என்பதில் பிழையில்லை. இன்றைய சூழலில் ‘தலித்’ – என்னும் சொல்லே புரட்சிகரமானது. அவ்வாறே அவர் இருக்கட்டும்.

மாயாண்டியின் வசந்தத்தின் இடிமுழக்கம் பாடல்கள் தொகுப்பினை வழங்கிய போது ஒன்றிரண்டு பாடல்கள் தவிர, மற்றவைக்கு இத்தகைய வரலாற்றுப் பின்புலம் பதிவாகவில்லை. பாடல்கள் தமது கம்பீரத்தால் மட்டுமே நிற்கட்டும் என விட்டுவிட்டோம். வரலாற்றுப் பின்னணியும் இணைகிற போது – பாடல்களின் கம்பீரம் இன்னும் உச்சம் பெற்றுவிடுகிறது என்பதை ’இசைப்போரில்’ காணுகிறோம்.
“கைகள் கடவுளை வணங்க மட்டுமா
கடப்பாரை எடுத்தால் சுவர் மிஞ்சுமா?”
என்ற வரிகள் எல்லாச் சுவர்களையும் தீக் கொளுத்தி நிமிர்கின்றன. உத்தபுரம் தீண்டாமைச் சுவரின் வரலாறு தரப்படுவதால் பாடலின் பரிமாணம் கூடுகிறது. உத்தபுரம் - தீண்டாமைச் சுவர் பற்றி இசைக்கையில், மனித சமுதாயத்தைக் கூறு போட்டுப் பிரித்த வரலாற்றின் கறுப்புச் சுவர்களை செர்மனியின் பெர்லின் சுவர் முதல் சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்குச் சுவர் வரை - இசையில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது – வரலாற்று ஓர்மையைக் காட்டும்.

பாடலில் ஒருவர் பல்லவி தொடங்கிட,
“அது மக்கள் சீனத்தில் அமைந்த அதிசயம்
இது மனுவின் தேசத்தில் நிகழ்ந்த கேவலம்”
- என கலைக்குழுவினர் சரணமிசைப்பு சிறப்பான கலை உத்தி. நாட்டுப்புறப் பாடல்களில் தெம்மாங்கு முதல்பத்தி ஒரு மெட்டு; தொடர்ந்து வருகிற பத்திகள் வேறவேற மெட்டுகள். அதற்கேற்ப ஆட்ட அசைவுகள், காலடிவைப்பு, கைகொட்டு என்ற தரவுகள் மாறுகின்றன போல் பல்லவி எடுப்பு ஒரு மெட்டு: சரணம் என்கிற தொடுப்பு இன்னொரு மெட்டு என இசைஉத்திகள் கவனப் படுத்தப்பெறுகின்றன.

3

தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, மொத்த மனித சமூகத்தினது புதிய உளவியல் கட்டியமைக்கப்பட வேண்டும். மக்களிடையில் நிலவும் கவைக்குதவாத உளவியலைச் சிதைத்து - அவ்விடத்தில் போர்க்குண உளவியலை உருவாக்குவது தான் புதிய உளவியல். தமக்கான சனநாயகத்தை தாமே கையாளுவது: தமக்கான அதிகாரத்தை தாமே கைவசப்படுத்தும் மக்கள் ஒழுங்குதான் புதிய மானுட உளவியல்.

விடிகாலை நான்கு மணிக்கு வீடு புகுந்து ஒரு எழுத்தாளரை, காவல் துறை ஆய்வாளன் இழுத்து வந்து விளாச முடியுமென்றால் -
மதுக் கொடுமைகளுவக்கு எதிராக வீரமாய்ப் போராடுகிற பெண்களின் கூட்டத்தில் புகுந்து ஒரு பெண்ணை காதோடு சேர்த்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளன் அறைய முடியுமென்றால் –
அடிப்பதற்கு அவர்கள்: அடிவாங்க நாம் என்ற உளவியல் தான் காரணம். பிறப்பிலிருந்து உடன்பிறந்த நோயாய் வரும் இந்தச் சனியனை “தூரப் போ” என்று விரட்டியடித்தல் நமது முதற் பணி.

எதையும் எதிர்த்துக் குரல் தர முடியாத தொண்டைக் குழி: ஏதொன்றையும் தட்டிக் கேட்க முடியாத நாக்கு - இவைகளைத் தந்தது யார்? நமக்குள் உருவாக்கியது எவர்? உடமைச்சமுதாய தோற்ற கால முதல் இன்று வரை, மேலாண்மை சக்திகள் தமக்காய் உருவாக்கிய சமூக ஒழுங்கை, நாம் நமக்கான சமூக ஒழுங்காக ஏற்றுச் செயல்பட்டு வருகிறோம்.கட்டியமைத்துக் காத்துப் பாதுகாத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிமைக் கூட்டமா நாம்?

இவ்வாறு தான் இயங்குதல் வேண்டும்: இதுதான் முறை என்ற எண்ணத்தை சில சொல்லாடல்கள் கட்டமைத்தன. எடுத்துக்காட்டு – ஆண்டை.

நிலப்பரப்பை, சொத்துக்களைக் கொண்ட நில உடமைப் பிரபு இந்த ஆண்டை. இந்த ஆண்டையின் விரிவு அரசன். ’ஆண்டை சொல்லுக்கு அட்டியில்லை; மன்னன் சொல்லுக்கு மறு சொல் இல்லை’ என்ற மனோபாவம் தான் நம் உளவியல் கட்டமைப்பு.

சில சொல்லாடல்களை நம் வாழ்விலிருந்தும் , மனசிலிருந்தும் அப்புறப்படுத்தியாக வேண்டும்: எடுத்துக் காட்டு- காவல் துறை என்ற சொல். மக்களைக் காப்பதற்கு, ஏற்படுத்தப்பட்ட துறை என்ற புரிதலுடன் பவனி வருகிறது. உண்மை அது தானா? மக்களைக் கண்காணிக்கவும் சமூக மேலாண் சக்திகள் வகுத்த ஒழுங்கு, கோட்பாட்டுக்கு எதிராக நடந்தால் அடிக்க, உதைக்க, உயிர்பறிக்கவும் உண்டான அடக்குமுறை அமைப்பு. மாற்றுச் சொல்லாடலை நாம் உருவாக்கி, நமக்குள் பயிற்றுவிக்கும் பயிற்சி பழைய நிலைமயை அழிக்கும். காவல்துறை என்பதற்குப் பதிலியாக – காக்கிச் சட்டைக் கூட்டம், தடி, துப்பாக்கிகளின் கூட்டம் – என்பன போன்ற புதிய சொல்லாடலைப் பயன்படுத்தலாம்.

படைவீரன், இராணுவ வீரன் என்ற சொல்: அரசர் ஆட்சியின் போது இருந்தவனுக்குப் பெயர் படை வீரன்: இப்போது முதலாளித்துவ ஆட்சியில் அவனுக்குப் பெயர் இராணுவ வீரன். உண்மையில் மேலாண் சக்திகள் தமக்கான சமூக ஒழுங்கைக் காக்க இடும் கட்டளையை – சொந்த மக்களை அடி என்றால் அடிக்க, பிற நாட்டு மக்களைக் கொல் என்றால் கொன்றிட பணிக்கப்பட்ட கூலியாட்கள்.இவர்கள் இராணுவ வீரர்கள் அல்ல; வெறும் சிப்பாய்கள்.

மேலைத் தேயத்திலிருந்து நம்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தன ’கிரிக்கெட்’ ஆடுபவர்களை கிரிக்கெட்ட விளையாட்டு வீரர் என்று பெயரிடுகிறார்கள். அடிப்படையில் அவர்கள் வீரர்கள் அல்ல; கிரிக்கெட் கொள்ளையர்கள்.

இப்படி - முற்கால முதலாக சமகாலம் வரையும் நமக்குள் புற்றுநோயாய் செயல்பட்டுக் கொண்டுவரும் சொல்லாடல்களை மாற்ற வேண்டும்; அது மனித சமூகத்தின் உளவியலை மாற்றியமைக்கும். நிலவுகிற மேலாண் சக்திகளின் சமூக மனவியலுக்கு மாற்றாய் புதிய சமூக மனவியலைக் கட்டமைக்க இப்பாடல்கள் முன்னடை போடுகிற பாங்கைக் காணமுடிகிறது. தலித் சுப்பையா போல பலரை இப்பாடல்கள் நமக்குக் கையளிக்கும் என்னும் உறுதி இதனுள்ளிருந்து கிட்டுகிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ