பாரதிபுத்திரன் என்ற மானுடன்


அது ஒரு துணிச்சலான காரியம். மாலைமயங்கும் வேளை திருவல்லிக்கேணியிலுள்ள அச்சகத்திலிருந்து ‘மனஓசை’ என்ற கலை, இலக்கி இதழின் 2000 படிகளுள்ள கட்டுக்களை ஏற்றிக் கொண்டு ரிக்ஷா பச்சையப்பன் கல்லூரி வாசலில் நுழைந்து மாணவர் விடுதிக்குச் சென்றது (அக்காலத்தில் ’தானி’ என்று சொல்லப்படும் ஆட்டோக்கள் இல்லை). கல்லூரி விடுமுறைக் காலம்: வெளிச்சப் புள்ளிகள் ஓரிரு அறைகளில் அசைந்தன.

’மனஓசை இதழ்களை’ அஞ்சல் மூலம் அனுப்பும் பணி முதலில் என் வீட்டில் நடந்தது. வீடு சென்னை அமைந்தகரையிலிருந்தது; ஒற்றை அறை கொண்ட வீடு. அமைந்தகரை பேருந்து நிறுத்தத்துக்கு அடுத்த பேருந்து நிறுத்தம் பச்சையப்பன் கல்லூரி. மாலை வேளையில் எங்களுடன் மாணவ நண்பர்களும் இணைந்து ’மனஓசை’ இதழ்களை அஞ்சலில் அனுப்ப விடுதி பொருத்தமாயிருந்தது.

ஏதேனும் ஒன்று நிகழ்ந்த பின், இப்படி செய்திருந்தால் இது நிகழ்ந்திருக்காதே என்ற யோசிப்புத் தோன்றுகிறது: அப்படித்தான் அன்றைய நிகழ்வும் நடந்தது. நிகழ்ந்த ஒன்று எப்போதும் தனக்குரிய செயல்களில் தீவிரமடைந்துவிடும். பாதகமானதும் சாதகமானதுமான விளைவுகள் வந்தடையும்.

அவர் விடுதியின் முதிய காவலாளி, பார்வையற்றவர்: கைத்தடியால் ’தட்டித் தட்டி’ விடுதி முழுவதும் சுற்றி வருவார். விழித்திரை மறைவுபட்டதே தவிர, மனித நடமாட்டத்தை அறியும் மற்றைய புலன்கள் விழித்திருந்தன. விடுதியின் மற்றொருபக்க வாசலில் போய் ரிக்ஷா நின்ற சத்தம் கேட்டதும் அப்பக்கமாய் வந்தார். நான் அறை எண் குறிப்பிட்டு நண்பரைப் பார்க்க வந்துள்ளேன் என்று தெரிவித்தேன். அவ்விடம் விட்டு நகர்ந்தார். ரிக்ஷாவிலிருந்து புத்தகக் கட்டுகளை இறங்கி வைத்து, கீழ்த் தளத்திலுள்ள அறைக்குக் கொண்டு போனதை அவர் கண்டிருக்க இயலாது. மனஓசை இதழ்களை அனுப்பும் பணி மும்மரப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், விடுதிக் காப்பாளர் வந்தார். வாசலில் நின்று நடக்கும் காரியத்தைப் பார்வையிட்டவர், அறைக்குரிய மாணவரை அலுவலகம் வந்தடையப் பணித்தார்.

அறை மாணவருக்கு விடுதியில் ‘சீட்டு’ கிழிக்கப்பட்டது: விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர் கல்லூரியின் பின்புற வாயிலுக்கு முன்னுள்ள தனியார் விடுதியில் சேர்ந்து தன் கல்வியைத் தொடர்ந்தார்.

சமநிலை அற்றுப்போகும் இயற்கை, ஒவ்வாமையை ஏதோ ஒரு ரூபத்தில் வெளிக்கொட்டுகிறது. பெருமழை, கடல் கொந்தளிப்பு, காற்றின் பேருருவான புயல், சுனாமி என இத்தகைய சீற்றங்கள் பல. சீரான சூழலும் வாழ்வுக்கு ஆதாராமான வேரும் விடுதி வாழ்க்கையில் வாய்த்திருந்தது. உன்னாலேதானே இப்படி ஆயிற்று எனச் சீற்றம் காட்டவுமில்லை. பிறகும் நேரில் சந்தித்தோம்: பேசினோம்: தன் மனத் துயரத்தை எந்தவொரு அசைவிலும் காட்டிக்கொள்ளவில்லை. விடுதியிலிருந்து வீதிக்குத் தள்ளிவிட்டப்பட்டதை நாங்கள் முன்னெடுத்த சமூகப் பணிக்கு உற்ற துணையாய் இருத்தல் என்று அவர் கருதியிருக்க வேண்டும். அந்த துன்பியல் பற்றி இந்த வினாடி வரை அவர் உச்சரித்ததில்லை.

பாலு என்ற பாரதிபுத்திரன் அதற்கு முன்பும் எங்களோடு இருந்தவரே: விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னும் எங்களுடன் இருந்தார்: தஞ்சை, ஈரோடு என ’மக்கள் கலாச்சாரக் கழக’ நிகழ்ச்சிகளில் எங்களுடன் பங்கேற்று உரையாற்றினார். ஒரு வேளை அப்படியே எங்களுடன் தொடர்ந்திருந்தால், என்னைப் போல் ஆகியிருப்பாரோ என்னவோ! எழுத்தில் முன்னர் கைக்கொண்டிருந்த எல்லா வல்லமையும் இழந்து சரிந்து போனதற்கு நான் சாட்சியாகியிருந்தேன். அந்த ஏடாகூடமான ஆபத்து நிகழாமல் தன்னைத் தக்கவைத்துக் கொண்ட பாலு வியப்புக்குரியவராகத் தோன்றுகிறார்.

2

என் மகள் சாருலதா - வயது மூன்று: தாகூரின் கவித்துவமான ஒரு புதினத்தில் வரும் சாருலதா என்ற பாத்திரம்; ‘வசந்தத்தின் இடி முழக்கமான’– நக்சல்பாரி எழுச்சிக்கு முன்னோடியாக இருந்த சாரு மஜீம்தார் என்ற புரட்சியாளர் - இவ்விரு பெயர்களின் தாக்கம் என் மகளுக்கு சாருலதா எனப் பெயர் சூட்டக் காரணமாயிற்று.

சாருவை – பாலுவுக்கு ரொம்பப் பிடிக்கும். அமைந்தகரையிலிருந்த எங்கள் வீட்டிற்கு வருகிற போதெல்லாம் ‘பெரு விரல்‘ பருமனுள்ள குண்டு சாக்லெட்டை நீட்டுவார்.

மகள் சாருலதாவின் திருமண அழைப்பிதழை ஒரு நாள் அவர் கையில் வைத்த போது, ஆச்சரியம் அவரைச் சூழ்ந்திருக்க வேண்டும். “சாருவுக்கா, சின்னக் குழந்தையாச்சே, நம்பவே முடியலை” என்றார்.

சாருவைப் பற்றி அவரிடம் உண்டாகிய மனப் பதிவு பின்னரும் தொடர்ந்தது போல! இயங்குகிற உயிரிகள் எல்லாமும் வளருகின்றன என்பதை அவரால் ஒப்ப முடியாமல் போயிற்று. பாலு உதிர்த்திட்ட “சின்னக் குழந்தையாச்சே, ஜே.பி” என்ற வாசகம் அது தான்!

ஒரு ஜெருசலேம், காடு ஆகிய எனது சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்திருந்தன. கவித்துவ எடுத்துரைப்பு முறையைக் கைக்கொண்டிருந்தேன். இப்போது கூட சிலர் என்னை நோக்கி குற்றமிழைத்துவிட்டது போல் சொல்வார்கள் ”நீங்கள் ஒரு கவிஞனாக தலையெடுத்திருக்க வேண்டியவர். அந்த இடத்தை காலியாகவே வைத்திருக்கிறீர்கள்”.

கவித்துவம் பொங்க வெளியான மூன்று கதைத் தொகுதிகள் மூலம் நான் ’பொங்கு கொழித்துக் கொண்டிருந்த’ காலம், அவை அந்த இளங்கவிஞனைப் பாதித்திருக்கலாம்; இரு ஆண்டுகளின் முன்னர் புதுச்சேரி மொழியியல் ஆய்வு நிறுவனத்தில் ஒரு அறக்கட்டளைச் சொற்பொழிவாற்ற வந்த வேளையில், நான் அமர்ந்திருந்த போது அவர் குறிப்பிட்டார் “நான் எங்கே படித்தேன்; அவரிடம் தான் படித்தேன்”.

2016 ஆகஸ்டு, நான்காம் நாள் தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் “தமிழியல் ஆய்வு மன்றத்தைத்“ தொடங்கி வைத்திட துறைத்தலைவர் நா.பாலுசாமியும், என் உயிரிணைய நண்பர் நல்லரசு அவர்களின் புதல்வரும், தமிழியல் ஆய்வுமன்றத்தின் பொறுப்பாசிரியருமான நா.இளங்கோவும் அழைத்திருந்தனர். உரை நிகழ்த்திய வேளையில் மனஓசை இதழுக்கு பாரதிபுத்திரன் வழங்கிய கவிதைக் கொடைகளை நினைவு கூர்ந்தேன்.

மனஓசை என்ற கலை இலக்கியத் திங்களிதழில் பாரதிபுத்திரன் ஆசிரியர் குழுவில் இல்லை: அவருடைய பங்களிப்பு அதனிலும் கூடுதலானது என்று குறிப்பிட்டேன்.

1.11.1981 நவம்பரில் நாங்கள் மனஓசை இதழைத் தொடங்கினோம்; அரசுப் பணியாற்றிய காலத்தில் ஆசிரியர் எனப் பெயர் போட இயலாததால், தலைமறைவு ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டேன். “இந்த வைகறையில்” என்ற கவிதை நா.பாலுச்சாமி என்ற பெயரில் முதல் இதழில் வந்தது.
“சேவல்கள் கூவுகின்றன:
சிவந்த கொண்டைச் சேவல்கள்
கூவுகின்றன”
இக்கவிதை ஒவ்வொரு பத்தியும் சந்த நயத்துடன் வெளிப்பட்டிருந்தது.

இரண்டாவது இதழில் வெளியான ‘ஜனகணமன’ என்ற பகடிக் கவிதை இப்படி முடியும்;
“எந்திரீடா…. எந்திரி…!
ஜனகணமன பாடுது
ஏந்திரீடா….எந்திரி…!
தர்ம சக்கரம் பொறிச்ச கொடி
தலைக்கு மேல சுழலுது!
நேரா நிமுந்து நின்னு
நல்லா ஒரு சலாம் அடி!”
இந்தக் கவிதையில் நா.பாலுச்சாமி பின்னுக்குப் போய், பாரதிபுத்திரன் முன்னுக்கு வருகிறார்.

மரபுக்கவிதை வடிவத்தில் காலடி வைத்த எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது, இன்குலாப் எனப் புனை பெயர் சூட்டிக் கொண்டவுடன் புதுக் கவிதைப் பயணம் தொடங்கிற்று.  1967-ல் இளவேனில் சென்னையில் ஆசிரியராக நடத்திய ’கார்க்கி’ இதழில் எஸ்.கே.சாகுல் அமீது - இன்குலாப் ஆகிறார். அதே கார்க்கி இதழில் பா.செயப்பிரகாசம் சூரியதீபன் ஆனார்.

“ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் புனைபெயரை வரித்துக் கொள்ளலாம் - புதுமைப்பித்தன் போல. அல்லது வலுவான ஒரு எதிரியைப் பற்றி எழுதும்போது, தனது காலம் கனிகிறவரை தன்னை மறைத்துக் கொள்வதற்காகவும் புனை பெயர் சூட்டிக் கொள்ளலாம். நாங்கள் சூட்டிக்கொண்டது இக்காரணங்களுக்காகத்தான்” என்கிறார் இன்குலாப்.

அதுபோல் புரட்சிகர மக்கள் கலை இலக்கிய இதழான மனஓசையில் பாலுச்சாமி, பாரதிபுத்திரன் ஆகிறார்.

மனஓசை - ஜூன் 1982 எட்டாவது இதழில் - ‘சிவகாசிச் சிசுக்கள்’ என்ற தலைப்பில் பாரதிபுத்திரன் கவிதை தருகிறார்.

டிசம்பர் 82-ல் அடுத்த கவிதை “நீ செய்ய வேண்டியது”; அதில் பாரதிபுத்திரன் பிரகடனம் செய்கிறார்.
“தடிகள் அடித்தால் தாங்கிக் கொள்ள
துப்பாக்கி வெடித்தால் துளைபட்டுக் கொள்ள
அகிம்சையே உயர்ந்தது அறிந்து கொள்க”
பிப்ரவரி 1982 - ஞானம் வெளஞ்ச மண்ணு
மே 1982 - நிரந்தர நிறம்
சனவரி 1983 - சீறி எழுந்து
சனவரி 1985 - இல்லறக் கல்லறை
மார்ச் 1985 - இங்கே என் சகோதரிகள்
செப்டம்பர் 1984 - கல்லறைகள்
”ஞானம் வெளஞ்ச மண்ணு
ஞானப் பயிர் செழிச்ச மண்ணு!
வேதாந்த வித்தகரும்
சித்தாந்த சித்தர்களும்
ஜலத்திலும் தீயினிலும்
ஜெனிச்சுவந்த பூமியல்லோ……
ஞானம் வெளஞ்ச மண்ணு - இது
ஞானப் பயிர் செழிச்ச மண்ணு!
மீனாட்சி கல்யாணத்துல
மீந்து போன சோத்தை
குண்டோதரன் தின்ன கதை
குந்தி ஒரு நாள் கேட்டா
கும்பி நெறயுமல்லோ
குணமோட்சங் கிட்டுமல்லோ….
யாருக்கும் தெரியாத
எங்களோட வேதத்துல
எவ்வளவோ சரக்கிருக்கும்
என்னெழவோ யாரு கண்டா…
இது-
ஞானம் வெளஞ்ச மண்ணு
ஞானப் பயிர் செழிச்ச மண்ணு!”
எனது சொற்பொழிவில் இவைபற்றியெல்லாம் குறிப்பிட்ட போது, தங்களின் ஆசிரியரும் வழிகாட்டியுமான பேராசிரியர் பற்றிய சிலாகிப்பில் மாணவ, மாணவியர் கரைந்து நின்றனர்.

பாரதபுத்திரர்கள் கொண்டாடும் வேத மரபை - அதன் கட்டுக் கதைகளை - அதன் நடைமுறை ரூபங்களைப் பகடி செய்யும் சந்தக் கவிதை இது. பழங்குப்பைகளுக்கு தீ மூட்டும் இந்த ஒரு விசயத்தில் அவர் குருவுக்கு தாசராக இல்லை; மூச்சுக்கு மூச்சு பாரதி என்று வரிந்து கட்டி நிற்கிற பாரதிபுத்திரன், பாரதி கால் பதித்த பக்தி மரபு, வேத மரபு, இந்திய ஞான மரபு போன்ற எடுத்துரைப்புகளுக்கு எதிர்நிலை கொள்கிறார்.

ஒன்றை நான் உறுதிபடச் சொல்ல முடியும். சமூகப் புலத்தில் சரியான, உறுதியான காலடி பதிப்பவர் எவரோ அவர், கலைப் புலத்தில், கல்விப் புலத்தில், இலக்கிய ஆய்வுப் புலத்தில் சரியானதும் அளவானதுமான காலடிகளையே வைப்பார். இத்தகைய ஒரு நல்லவர் இவர். நல்லவர்கள் இயங்கும் புலத்தில் போராட்டங்கள் இல்லாது போய் விடும் என்பதில்லை. நல்லவர் என்பது போதும்; ’கையில காசு வாயில தோசை’ என்று இயங்கும்காரியக் கிறுக்கர்கள் முச்சூடும் எதிர்பார்க்கும் வல்லவர் என்ற ’அழுகல்’ பட்டம் வேண்டாம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்