புக்குஷிமா - ஒரு பேரழிவின் கதை


பிரஞ்சு எழுத்தாளரான ’மிக்கேல் பெரியே’ எழுதி, தமிழரான வெங்கிட சுப்புராய நாயகர் மொழியாக்கத்தில் வெளிப்பட்டுள்ள இந்நூல் ஒரு அபாய அறிவிப்பு. நிலநடுக்கம், சுனாமி, புக்குஷிமா - என இந்நூல் வரிசைப்படுத்தும் பேரழிவை அறிகையில் - இந்நூலின் உள்ளிருந்தும், இந்நூலின் வெளியிலிருந்தும் அறிய வருகிற தெளிவான கருத்து – மனிதனுக்கு வாழத் தெரியவில்லை என்பது; இயற்கையோடு இணைந்து வாழ மனிதப் பிறவிகளுக்குத் தெரியவில்லை.

ஒரு ஊரில் இழவு கேட்டுப் போகையில், அந்தக் குடும்பத்தின் மூத்த அக்கா சொன்னது “பிழைக்க மதியத்த பய”. எனினும் அது தான் சரியான சாடல். அதுதான் சரியானதொரு சொல்லாடல். பிழைக்க மதியத்துப் போய் முதலாளிய மைந்தர்கள் இயற்கையைப் சிதைத்து தற்கொலைக்குள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்; முதலாளிய தற்கொலைக்குக் கூட்டளிகளாக சாதா சனங்களான நாமும் உள்ளிழுக்கப் பட்டுள்ளோம்.

ஐந்தறிவு உசுப்பிராணி எதுவும் இயற்கையை அழித்து வாழ்வதில்லை. இயற்கை எதனைத் தருகிறதோ அதனை உண்டு - இயற்கை தந்த இடத்தை உறைவிடமாக்கி - இயற்கைக்குள் வாழ்கின்றன. பறவைகள் விதைப்பதுமில்லை, எடுப்பதுமில்லை. உயிர் வாழினங்களின் அகராதியில் சேமிப்பு, குவிப்பு என்ற வார்த்தைகள் காணோம். முதலாளித்துவ வாதிகள், உள்ளுர் வங்கி முதல் சுவீஷ் வங்கி வரை சேர்த்து வைக்க ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.

வேளாண் சமூகத்தில் பணக் குவிப்புக்கு வழியில்லை. சொத்து பத்து, நிலபுலம், நகை நட்டு, தங்கம் வெள்ளி என்று அளவுக்கு அதிகமாய்ச் சேர்க்க முடியாது. “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” - என்ற அச்சுறுத்தல் இருந்தது. பண்டமாற்று முறை மனித உறவுகளுக்கு ஆரோக்கியம் தருவதாய் அமைந்தது. தயாள குணமும் தார்மீக குணங்களும், தான தரும் சிந்தனைகளும் மேலோங்கி வந்தன. நவீன முதலாளியச் செயல்களுக்கு இந்த எல்லை இல்லை. பண்ட மாற்றை ஒழித்து நாணயப் பண மாற்று முறையை - வணிக வர்த்தக முறையினை உண்டாக்கியது கூறுகெட்ட மனச் சாட்சியமற்ற முத்லாளியம்!

பணம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட போது – அது எல்லாவற்றையும் நாசக்காடாக்கியது. குறிப்பாக, அதன் முதல் பலிப்பொருள் மனிதகுணம். கண்ணதாசனின் திரைப்படப் பாடல் ஒன்றுண்டு. “ஒடிவது போல் இடையிருக்கும், இருக்கட்டுமே” – என்பன போல, கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் அவருடைய கவிதைகள் மேல் கடுமையான விமர்சனத்தை ஏந்த வைக்கின்றன. விதிவிலக்காக – தேவையான, பொருத்தமான ஒன்றிரண்டு கவிதைகளையும் தந்து போனவர் என்பதை ஏற்பதில் எனக்குத் தயக்கமில்லை.
“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்.
மனிதன் மாறி விட்டான்”
மனிதன் மாறுவதற்கு பணம் காரணமாகிற்று. பணம் பிறந்த நட்சத்திரத்தில் முதலாளியம் பிறந்தது. மனிதம் நசுங்கியது. பணம் படைக்கப்பட்ட போது, வேளாண்மை சமூகத்தின் நற்குணங்கள் நொறுக்கப்பட்டன.
“ வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடலும் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்”
வானம், மதி, விண்மீன், கடல், காற்று, மலர், மண், தாவரம், சோலை இயற்கையின் உயிர்க் கூறுகளாய்க் கிளைத்தன.வளர்ந்தன. மாறாத இவைகளையெல்லாம் மாற்றி அக்னித்திராவகம் வீசப்பட்ட முகம்போல் லாபவேட்டையின் பொருட்டு குரூரமாகச் சிதைத்தான். பாலாறு, காவிரி, தென்பண்ணை, தாமிரபரணி, முல்லையாறுகள் எங்கே? தொண்ணூற்று ஒன்பது மலர்களைத் தொகுத்து கபிலர் பாடிய குறிஞ்சி மலையெங்கே?

“கல்லூரி முன்புறம் அலையடிக்கும் தெப்பக்குளம்; கல்லூரியின் பின்புறம் வைகை நதி. அலைவீசும் தெப்பக்குளமும் காலமெல்லாம் பெருக்கெடுத்த வைகையும் வற்றியதில்லை. இரு நீர்நிலைகளுக்கு நடுவில் எழுந்து நிற்கும் கட்டிடத் தாஜ்மகால்” என்று மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி பற்றி தீராநதி இதழில் எழுதினேன். அறுபதுகளில் நாங்கள் கல்லுரியில் பயின்றபோது எழுதின பதிவு இது. 01.03.2017 அன்று மதுரை தியாகராசர் கல்லூரியில் புலவர் விழாவினை கவிஞர் இன்குலாப் விழாவாக நடத்திய போது தீராநதியை வாசித்திருந்த கல்லூரி முதல்வர் என்னிடம் கேட்டார்:
”அலையடிக்கும் தெப்பக் குளம் என்று எழுதியிருந்தீர்களே? அங்கே பாருங்கள்” வலது பக்கம் கை நீட்டினார். வறண்டு, மொட்டாந்தரையாய் தெப்பக்குளம். மேலை நாட்டு விளையாட்டுக்களில் கிறுக்குப் பிடித்த இளையோர் கூட்டம் பொட்டலில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தது. இடது புறம் வறண்ட வைகை. கரையோரமாக இருவழிச் சாலை; உலகமயமாக்கலின் காங்கிரீட் வெளிப்பாடாய் தியாகராசர் கல்லூரியின் பின்புறமுள்ள வண்டியூரையும் மதுரை நகரின் பின்புற விரிவாக்கத்தையும் இணைக்கும் இருவழி மேம்பாலத்தின் கீழ் மொட்டையடிக்கப்பட்ட ஆறு கிடந்தது.
“குடலெடுத்த கோழியாய்க்
கிடக்கிறது ஆறு.
மேலாக்க ஒரு காற்று
அந்தச் சடலம் தடவி ஓடும்
உள்ளிருந்தும் வெளியிலிருந்தும்
இறங்கிய அழிவை
ஆற்றுவயிற்றில் அறிவிக்கிறது
கிரிக்கெட் ஆடுகளம்”
என, முன்னொரு பொழுதில் பாலாற்றைப் பற்றி ஒரு கவிதையில் பதிவு செய்திருந்த நினைவு மேல்வந்ததது.

எது தேசப்பற்று?
நதி, நீர்நிலை, மலை, செடி, கொடி, தாவரம், வனம் எல்லாவற்றையும் ஒரு மண்ணுமில்லாமல் மனிதன் அழித்துவிட்டதின் எதிரொலிப்புத்தான் புக்குஷிமாவும், அதன் தொடர்ச்சியான கூடங்குளம், மீத்தேன், நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் – அனைத்தும்: பன்னாட்டு வேட்டைகளால் மக்களின்வளம் சூறையாடப்படுவதன் அபாய எதிரொலிப்புகள் இவை. இந்த ஒவ்வாமைகளை சுட்டிக்காட்டியதும், தேசப்பற்று கொடி பிடித்து எதிரில் நிற்பார்கள் நமது தேசபக்திக்காரர்கள். இவையெல்லாம் தேச விரோதச் சொற்கள்; இவை பற்றி உச்சரிப்போர், சிந்திப்போர் எழுதுபவர், வாசிப்பாளர்கள் எல்லோரும் தேச விரோத சக்திகள் என்பார்கள்!

டெல்லி பல்கலைக் கழகத்தில் பயிலும் குர்மெஹர் 1999 கார்கில் போரில் உயிரிழந்த ராணுவத் தளபதியின் மகள் “என் தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல; போர்தான்”.

தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குர்மெஹர் பதிவிட்டிருந்தார். “பொய் சொல்லு: என் தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் என்று சொல்” - இஸ்லாமியப் பூச்சாண்டி காட்டி உயிர்வாழும் ஆர்.எஸ்.எஸ் அவருக்குக் கட்டளையிட்டது. அக்கல்லூரியில் இயங்கும் அதன் மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி.யினரை வைத்து மிரட்டியது. டெல்லி ராம் ஜாஸ் கல்லூரியில் ஏ.பி.வி.பி மாணவர் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். அஞ்சாத பெண்ணான குர்மெஹர் சொன்னார். “நான் டெல்லி பல்கலைக் கழக மாணவி. ஏ.பி.வி.பி.யைக் கண்டு எனக்குப் பயமில்லை. நான் தனி ஆள் இல்லை, ஒவ்வொரு இந்திய மாணவரும் என்னுடன் இருக்கிறார்” வாசகம் எழுதிய காகிதத்தை தன் நெஞ்சில் ஏந்தி ஒளிப்படம் பிடித்து ‘டுவிட்டரில்’ பதிவிட்டார்.

ஆர்.எஸ்.எஸ்-காரரான, கிரிக்கெட் விளையாட்டுக்காரர் வீரேந்திர சேவக் ”பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்தது நான் அல்ல; என் மட்டை” என்று குர்மெஹரைக் கேலி செய்யும் பதாகையை ஏந்திய பதிவைச் செய்தார். பாலிவுட் நடிகன் ரந்தீப் ஹூடா பதிவிட்டார் “பாவப்பட்ட பொண்ணு. அரசியல் பகடைக் காயாகப் பயன்படுத்தப்படுகிறார்”. ஒரு மத்திய அமைச்சர் கடத்தல் கொள்ளையன் தாவுத் இப்ராஹிமுடன் இணைத்து அவமதித்தார். இந்தியா – பாகிஸ்தான் யுத்தம் முதல், இலங்கையின் இனப்படு கொலைக்குப் பாதுகாவலாய் நின்ற இக்காலம் வரை ‘தேசபக்தி’ பிராண்ட் இவர்களுக்கு உபயோகமாகவே இருந்து வந்துள்ளது. இவர்களுடைய தேசபக்தி எப்போதெல்லாம் பீறிடுமோ அப்போதெல்லாம் மக்களுக்கு நாசம் வந்து தீரும் என்ற தரிசனம் கிட்டுகிறது.

“உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சுரண்டப்படுபவர்கள் ஒடுக்கப்படுபவர்கள் தேசாபிமானிகள்: சுரண்டுபவர், ஒடுக்குபவர் தேச எதிரிகள்”.

இது இந்திய ஆட்சியாளர்களின், ஆளும் வர்க்கங்களின் தேசபக்தி வரையறை அல்ல. கியூபப் புரட்சியாளன் பிடல் காஸ்ட்ரோவினுடையது. தேசாபிமானிகள் யார்? ஒரு மனிதனின் பார்வையில் யாரெல்லாம் தேசப் பற்றாளர்? நம் தலைவர்களும் அதனை ஏற்று இயங்கும் நாமும் பேசும் தேசப்பற்று இதற்கு எதிரானது. பா.ஜ.க-வின் இந்தியத் தலைவர்களில் ஒருவரான இல.கணேசனின் “ஒட்டு மொத்த நாட்டு நலனுக்காக தமிழகத்தை விட்டுக் கொடுக்கலாம்” என்கிற தேசபக்தி நமது அல்ல. வேண்டுமானால், இல.கணேசன் அவருடைய பாரதத்துக்கு அவரையே விட்டுக் கொடுக்கட்டும்; ஆட்சேபணையில்லை. அகண்ட பாரத நலனை தமிழ்நாட்டின் அழிவில் தான் காக்க முடியுமெனில், எங்களுக்கும் எங்களை பாதுகாத்துக் கொள்ளத் தெரியும் என்னும் திடமான முடிவை நோக்கி நகர வேண்டியிருக்கும்.

மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற பொருளாதாரம்:
சுதேசிப் பொருளாதாரத்தை - இந்திய விடுதலைக்குப் பின் காந்தி முன் வைத்தார். அவருடைய சீடர்களான நேரு, பட்டேல் போன்றோர் விதேசிப் பொருளாதாரத்தை (முதலாளியப் பொருளாதாரம்) வளர்க்கும் திட்டங்களை முன்னிறுத்தி நாலுகால் பாய்ச்சலில் ஓடினர். தமிழ்நாட்டை அந்தக் காலத்தில் ஆண்ட காமராசரும் அந்த வழியில் ஓடினார்.

மின்னுற்பத்தியைப் பெருக்கி கிராமப்புற விவசாயிகள் கிணறுகளில் மின்சார பம்ப் செட்டுகளை (நீர் இறைப் பான்கள்) பயன்படுத்த காமராசர் திட்டம் போட்டார். கிராமப் புறங்களில் மின்சார நீர் இறைப்பான்கள் மூலம் நீரெடுக்கும் கிணற்றுப் பாசன முறையை மிகக் கவனமாகக் கையாள வேண்டுமென சுதேசிப் பொருளாதாரச் சிந்தனையாளர் ஜே.சி. குமரப்பா வேண்டுகோள் விடுத்தார். நேரிலும் கேட்டுக் கொண்டார். பம்ப் செட்டுகளுக்கு மாற்றாக, நீர்நிலைகளையும் குளங்களையும் அரசு பெருக்க வேண்டுமென்று சொன்னார். பம்ப் செட் பாசனம் பணப்பயிர்களான கரும்பு, வாழை, பருத்தி, புகையிலை, மரவள்ளி போன்றவற்றின் உற்பத்திக்குப் பயன்படுவது. இவை நகர வணிகத்தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படுபவை. வணிகத்தை முதன்மையாக்கி, வேளாண்மையைத் தலைகீழாக்கிவிடும் என்றார் ஜே.சி.குமரப்பா. யார் கேட்டார்கள்?

கரும்பு உற்பத்தியோடு கூடவே கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உருவாக்கினார் காமராசர். கரும்பு உற்பத்தி, வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி, எரிசாராய உற்பத்தி ஆகியவற்றுக்கு ஆதரவாய் காங்கிரஸ் அரசு சட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்தது. சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக பனை மரங்களையும், காபி, தேநீருக்குப் பதிலாக பத நீரும், பாணக்கரமும், கருப்பட்டி உற்பத்தியையும் மேம்படுத்த வேண்டுமென்றார் குமரப்பா. கிராம வேளாண்மையில் புஞ்சைப் பயிர்களான சிறு தானியங்கள், தீவனங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகை போன்றவை, உள்ளுர் மக்களின் வாழ்வாதாரத்துக்கானவை. ஆவை பெருமளவில் உற்பத்தி செய்ய திட்டங்கள் தீட்டப்பட வேண்டுமென்றார். கேட்டால் தானே!

உணவுப் பொருள்கள் விளையும் நல்ல நிலங்களை கரும்பு, புகையிலை, மக்காச் சோளம், வணிகப் பயிர்கள் சாகுபடிக்கு மாற்றுவதற்குப் பதிலாக, உபயோகமற்றுக் கிடக்கும் நிலங்களில் பனை மரங்கள் வளர்க்க உதவிட வேண்டும்.ஆலை முதலாளிகளுக்கும் எரிசாராய வியாபரிகளுக்கும் பெரும் இலாபத்தைக் கொட்டித் தரும் சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக, ஏழைத் தொழிலாளர்களுக்கு வாழ்வு தர வேண்டுமென்றார் குமரப்பா. கேட்டால் தானே!

இயற்கையைக் கொன்று குவித்து குறுகிய காலத்தில் அளவில்லாத உற்பத்தி செய்து பெரும் லாபமீட்டும் முதலாளியப் பொருளாதாரத்தை ’கொள்ளைப் பொருளாதாரம்’ என்றார் குமரப்பா.

முதலாளிகள், பெரும் வணிகர்களின் லாப நோக்கிற்காக அரசாங்கம் அனைத்தையும் செய்தது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் அனுமதியை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்தது. நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயு எடுக்க இயற்கை வளங்கள் நிறைந்த நிலங்கள், மலைகள்- இலவசம், சலுகைவிலையில்.

இந்த முதலாளியப் பொருளாதாரத்துக்கும் மக்கள் நலன்களுக்குமிடையில் ஒரு இணக்கக்கோட்டைப் போடமுடியாதா என்றால் முடியவே முடியாது என்னும் பதிலின் விபரீதமான புள்ளிகள் தான் அணுஉலை, கூடங்குளம், மீத்தேன், நெடுவாசல். முதலாளிகள் பண வேட்டைக்கான இந்தக் கேடுகளின் தீர்வு என்ன? ‘புக்குஷிமா – ஒரு பேரழிவின் கதை’ நூலாரிசியர் குறிப்பிடுகிறார். “இந்தியா அணு உலை நாடாக முன்னேறி வருவதைக் காண முடிகிறது. ஆனால், 2014–ம் ஆண்டு முதல் 3.5 விழுக்காடு மின் சக்திதான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு நிச்சயமாக மின்சக்தி தேவைதான். ஆனால், அது அழிவை உண்டாக்கும் அணு சக்தியிலிருந்து தான் தருவிக்க வேண்டுமா? அங்கு வசிக்கும் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.”

மக்களின் முடிவுக்கு விடுகிறார் மிக்கேல் பெரியே. மக்களும் கார்ப்பொரேட் கொள்ளைகளை அனுமதிப்பதில்லை என்ற முடிவோடுதான் இன்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ’முடிவெடுக்கும் நிலையில் இல்லாத மக்கள் எம் கைவசம்; அவர்களை சுயசிந்தனையற்ற காயடிக்கப்பட்ட மாடுகளாகவே வைத்திருக்கிறோம்’ என இனி எந்த அரசியல்வாதியும் அதிகார வர்க்கமும் எண்ணுதல் முடியாது.. முடிவெடுப்பது 5 ஆண்டுகளுக்கு ஒருதரமெனும் மாயை முடிவடைந்துவிட்டது. ஜே.சி.குமரப்பா முன் வைத்த மண்ணுக்கும் மக்களுக்கம் ஏத்த பொருளாதாரம் செயல்படுத்தப் பட்டிருந்தால், உலகமயம் உள் நுழைவு ஆகியிருக்காது. உலகமய வால் ஒட்ட நறுக்கப் பட்டிருக்கும் என்பதை மக்கள் எழுச்சி சொல்லிச் சொல்லிக் காட்டுகிறது.
புக்குஷிமா அணுஉலை விபத்து நடந்த இடத்திலிருந்து 329 – கி.மீ. தொலைவில் உள்ளது. சப்பான் தலைநகர் டோக்கியோ. அணுஉலை விபத்தின் கதிரியக்கப் பாதிப்பு இன்னும் டோக்கியோவின் மீது கவிந்து கொண்டிருக்கிறது என்கிறார் மிக்கேல் பெரியே. சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ளது கல்பாக்கம். நாகர்கோவிலிருந்து 80 கி.மீ தொலைவிலும் மதுரையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும் உள்ளது கூடங்குளம். விபத்து நேர்ந்தால் இவையெல்லாம் ஒரு தூரமே இல்லை என்கிறார் மிக்கேல்பெரியே. இன்னும் நூறு அல்லது இலட்சக் கணக்கான ஆண்டுகள் வரை வசிப்பதற்கு இயலாத பகுதிகளாக இவைகளை கதிரியக்கப் பாதிப்பு ஆக்கும்.

மாற்று என்ன?
புக்குஷிமா, கூடங்குளம், கல்பாக்கம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நெடுவாசல் - இயற்கையை அழிக்காமல் வளர்ச்சியை நோக்கிய மாற்று வழிகள் என்ன?

“உலக முழுதும் புரட்சி செய்யுங்கள்: எந்தெந்த நாட்டில், எங்கெங்கு தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் புரட்சி செய்க” என்ற சேகுவேரா தான் மாற்று .சேகுவோரவின் உலகப் புரட்சி மொழி யே மாற்று.

நாகசாகி, ஹிரோசிமாவில் விழுந்தவை இரு அணுகுண்டுகள் மட்டுமே. நம் தலைமீது விழக் காத்திருக்கின்றன மூன்றாவது, நான்காவது குண்டுகள். நாகசாகி, ஹிரோசிமாவைப் பற்றிப் பேசுகிற படித்த மேதாவிகள், அப்துல்கலாம் உட்பட கல்பாக்கத்தை, கூடங்குளத்தைப் பற்றிப் பேசமாட்டார்கள். ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு வடிவில் உலகப் புரட்சி சேதியை தேவைப்படுகிற இடங்களுக்கெல்லாம் இன்று கடத்த வேண்டியுள்ளது. புக்குஷிமா மொழியாக்கம் மூலமாக நமக்குள் கடத்துகிற இப்பணியால் சே.கு.வேரா- வின் தூதுவர் ஆகிறார் வெங்கடசுப்புராய நாயகர்.

அணு உலைப் பாதிப்பை பரப்புரை செய்கிற அனைவரும் புரட்சி செய்பவர்கள்தாம். மீத்தேன், நெடுவாசல் வரை அது நீளுகிறது. “ஆகாவென எழுந்து பார் யுகப்புரட்சி” என்றான் பாரதி. யுகப்புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டு ஆகியும், அவன் தெரிவித்து ஒரு நூற்றாண்டு கடந்தும் இன்னும் நாம் எழுந்திருக்கவில்லை.
நம்முடைய முப்பாட்டன் கணியன் பூங்குன்றன் ஒரு கவிதை சொன்னான். “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. அவனது மானுட நேய வாசகத்துள், சேகுராவின் புரட்சிகர மொழியின் அர்த்தத்தைக் கடத்துவோம்.

எங்கெங்கு நாடுகள் ஒடுக்கப்படுகிறதோ, சுரண்டலுக்கு ஆட்படுத்தப்படுகிறதோ, அவையெல்லாம் நமது ஊர்கள்: “யாதும் ஊரே”.

எங்கெங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அடிமைகளாய் நடத்தப்படுகிறார்களோ, அந்த மக்களெல்லாம் நமது உறவினர்கள் - “யாவரும் கேளிர்!”

முப்பாட்டன் கணியன் பூங்குன்றனின் மானுட நேய மொழிக்குள், போராளி சேகுவோராவின் புரட்சிகர மொழியை இணைத்தால், அது தான் பேரழிவின் கதைகளுக்கெல்லாம் ஒரு முடிவாக இருக்கும்.

பேரழிவின் கதைகளை புக்குஷிமாவை முன்வைத்து விரித்து வைக்கிற இந்நூல் அனைவரது மனச்சாட்சிகள் மீது வீசப்படும் ஒரு அறிவுச் சாட்டை. இந்திய ஆட்சியாளர்கள், தமிழக அடிவருடிகள் இனியாவது புதை குழிக்குள் கால்வைக்காமலிருப்பார்களா? இது தான் கேள்வி!

வெங்கட சுப்புராய நாயகர் மொழியாக்கப் பணிகள் பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அது பற்றி “புக்குஷிமா” நூலாசிரியர் மிக்கேல் பெரியே – சொல்வதே சிறப்பு.

“நோபல் விருது பெற்ற லே கிளாசியோவின் ’சூறாவளி’ புதினத்தை தமிழில் ஆக்கியவர் நாயகர். அந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் லே கிளேசியோவிடமிருந்து ஒரு நாள் காலை நான் டோக்கியோவில் இருந்த போது எனக்குக் கிடைத்த கடிதம் இன்னமும் என் நினைவில் உள்ளது…… புக்குஷிமா பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்த போது, அக்கடிதத்தை என்னோடு எடுத்துச் சென்றிருந்தேன்…… லே கிளேசியோவை மொழியாக்கம் செய்த இந்தியர் என்னுடைய நூலை மொழி பெயர்த்துள்ளார் என்பதை அவர் மூலம் அறியும் போது, எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. லே கிளேஸியோ வரிசையில் என்னை வைத்து, எனக்குப் பெருமை சேர்த்தமைக்காக நாயகருக்கு நான் நன்றி கூறுகிறேன்”

பிரஞ்சிலிருந்து தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
தடாகம் வெளியீடு. விலை: ரூ. 200/=

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ