புத்தாண்டுக்கு - புத்தகக் கொண்டாட்டம் தேவையா?

”பெரிய கொண்டாடத்துக்கு தயராக இருக்கின்றன தமிழகம் முழுவதும் புத்தகக் கடைகள். இன்று 31-1-2015 நள்ளிரவிலும் கடைகளைத் திறந்துவைத்துக் காத்திருப்பார்கள் புத்தகக் கடைக்காரர்கள். 10 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரையில் தள்ளுபடி அறிவித்திருக்கிறார்கள் பதிப்பாளர்கள். எல்லாம் வரலாற்றில் முதல்முறை; எல்லாம் உங்களுக்காக“

அதிர்ச்சி தருகிறது இச்செய்தி.அதிர்ச்சியளிப்பது மட்டுமல்ல, அடடே என நொந்து போகவும் வைக்கிறது.

புத்தாண்டுக் கொண்டாட்டம் முதலாளிய நாடுகளில் அனைவரும் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து மகிழும் சனநாயக முறையாக இருக்கிறது. இந்தியாவில் அது ஆங்கில ஆட்சி மீதான விசுவாசத்தின் பக்கமாகத் தொடங்கிற்று. இன்றும் அடிமை ஊழியத்தின் வெளிப்பாடாக அரசின் அதிகாரப் படிநிலைகளில், தனியார் நிறுவன அமைப்புகளில் தொடருகிறது.இளைய தலைமுறை, நடுத்தர வயதுகள்,முதியோர் என மதுக்கடைகள், களியாட்ட அரங்குகள் வழி புத்தாண்டைத் தரிசிப்பார்கள். ஐம்பது ஆண்டுகள் முன் இத்தனை தீவிரமாய் கொண்டாடப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் எடுத்து, இப்போது வெறியோடு சிறுநகரம் முதல் பெருநகர்வரை, ஏன் கிராமங்களிலும் கூட ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி.

வணிகச் சந்தையை நோக்கி எல்லோரையும் திரளவைக்கிறது புத்தாண்டு. அன்றைக்குத் தள்ளுபடியில் பொருளை வாங்காவிட்டால் வேறு என்றைக்குமே இல்லை என்ற உளவியல் அவசரத்தை உண்டுபண்ணுகிறது . அதுபோல் தள்ளுபடி விற்பனையில் நள்ளிரவிலும் திறக்கின்றன நமது புத்தக நிலையங்களும்!

நள்ளிரவுக் கொண்டாட்டங்களுக்கு மாற்றாய் புத்தகத் திருவிழா நடத்துவது கற்றலின் மகத்துவத்தை மேம்படுத்தும் ஒரு நல்முயற்சி. புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மடைமாற்றும் அறிவார்த்த முயற்சி வரவேற்புக்குரியது. ஆயினும் புததகக் கொண்டாட்டம் நடத்துதற்குரிய காலம் இதுதானா, என்ன காலம் இது!


வெள்ளம் வடிந்தும் வேதனை வடியவில்லை; லட்சக்கணக்கானோர் வீடிழந்து நிற்கின்றனர்;வீடுள்ளோரில் இன்னும் பாதிப்பேர் சொந்தவீடுகளுக்குள் நுழைய இயலாது நிற்கின்றனர்.தரையும் சுவரும் ஓதம் ஏறி, ’சீத் சீத்’–தென்று தண்ணீர் கொப்புளிக்கின்றன. எல்லா இழப்புகளையும் ஈடு செய்துவிடலாம். உயிரிழப்புகளை எதைக்கொண்டு ஈடு செய்வது? பணமோ, பொருளோ எது கொடுத்தும் மீளப்பெற முடியாத 470 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. கண்ணில் ரத்தம் வருகிற மாதிரி மக்கள் வாழ்விடங்கள் தண்ணீா் சூழ்ந்த கல்லறைகளாகின.

இயற்கைப் பேரிடர் என்ற வார்த்தையை ஏற்கத்தான் வேண்டுமா? புவி வெப்பமடைதலுக்கான காரணங்களை. கண்ணுக்குத் தெரியாத பேரிடரை அழைத்து வந்த வல்லரசியமும் கண்ணெதிரில் செயற்கைப் பேரிடராக மாற்றிய உள்ளூர் ஆட்சியும் தான் நம்வாழ்வுக்குள் வெள்ளத்தை அழைத்து வந்தவர்கள்.

இந்த நேரத்தில் அறிவுத் திருவிழா கொண்டாட்டம் ஏன்? இதற்கு ஒரேயொரு நேர்னையான பதில்தான் உண்டு - தத்தமது கல்லாப்பெட்டிகளை நிரப்பிக் கொள்ளுதலுக்குக்காக என்னும் பதில் அது.

நீங்கள் விற்பனைக்குக் குறிவைக்கும் வாசகர் யார்? படித்த கீழ்த்தட்டு, மத்திய தரப் பகுதியினர், ’எலைட்’ என குறிப்பிடப்படுகிற மேனிலை மக்கள் – இந்தச் சகலரின் வாழ்வையும் வேறுப்பாடின்றி புரட்டிப் போட்டுவிட்டது வெள்ளம். இவர்களுக்குள்ளிருந்து தானே உங்கள் வாசகர்கள் வருகிறார்கள்? இவர்களில் 75% பேர் சென்னை நகரவாசிகள்.

மற்ற எல்லா பதிப்பாளரையும் விட ஒரு படி மேலே போய் விட்டார் மனுஷ்யபுத்திரன். ”இந்தக் கொண்ட்டாட்டத்தை சனவரி 31-வரை நீடிக்கிறோம்; எங்களிடம் புத்தகம் வாங்குவோருக்கு 40% வரை தள்ளுபடி” என்று உயிர்மை பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன் அறிவிக்கிறார். எப்போதும் மற்றவர்களைப் பின்தள்ளி ஒரே தாவலில் முன்போய் நிற்பது அவர் இயல்பு.

இது தொடர்பில் வெளியான அனைத்துச் செய்திகளையும் அறிக்கைகளையும் கூர்ந்து வாசித்தேன்; BETWEEN THE LINES-என்று சொல்வார்களே, அதுபோல் சந்து பொந்துகளில்,வரிகளுக்கிடையில் நழுவுவிடப் போகிறது என்று விழிகளில் வெளக்கெண்ணய் வீட்டுக்கொண்டு தேடினேன். புத்தக விற்பனையில் ஒரு பகுதியை வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்களின் துயர் துயர் துடைக்கப் பயன்படுத்துவோம் என ஒரு துளிச் செய்தியுமில்லை. என்ன செய்திருக்க வேண்டும்? மக்களை வெள்ளத்தில் மாட்டிவிட்டது யார் என்ற உண்மையை வெளிப்படுத்தி துண்டுப் பிரசுரங்களை, சிறுவெளியீடுகளை இலவசமாக அந்த மக்களிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும்; இயற்கைப் பேரிடர் என்று ’புரூடா’ விட்டுக் கொண்டிருக்கும்உலக வல்லரசுகளையும் உள்ளூர் ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்தி இது செயற்கைப் பேரிடர் தான் என்று விளக்கியிருக்க வேண்டும். இதுதான் உண்மையில் மக்களோடு நிற்கும் அறிவார்த்தப் பணி.

எல்லாவற்றையும் அடித்துச் சென்ற வெள்ளம் மனித நேயத்தை அடித்துச் செல்லவில்லை. ஊருக்கு நூறு போ் என்ற உன்னதா்கள் அப்போது தெரிந்தார்கள். அந்த உன்னதர்கள் யார் என அடையாளம் காட்டியது வெள்ளம். இவர்கள் நாம் வாக்களித்துத் தேர்வு செய்யாத, நமக்காக உயிரையும் பொருட்படுத்தாத பிரதிநிதிகள். இந்தத் தொண்டூழியத்தை புதுப்பித்துக் கொள்ளும் வகையாக, நமக்குள் கிடக்கும் மனிதநேயத்தினை மீட்டெடுக்கும் விதமாக புத்தகப் பதிப்பாளர்களும் கைகோர்த்து பாதிப்புகுள்ளான பல லட்சம் மக்களை அணைவாகக் கைதூக்கிவிட வேண்டிய காலமிது. துயர் துடைப்பது கடமை - ஆம், இது கடமை தான். இந்த ஓராண்டாவது புத்தகக் கொண்டாட்டத்தைத் தவிர்த்து அடுத்த ஆண்டுக்கு நகர்த்துங்கள்; வேண்டாமெனச் சொல்லவில்லை அறிவுத் திருவிழாவை.

- பா.செயப்பிரகாசம் முகநூல் (1 ஜனவரி 2016)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?