துயரங்களின் பின்வாசல் - உமா மோகன் கவிதைகள்


ஆகவே பெண் என்ன செய்ய வேண்டியிருக்கிறது? அவள் யாராக இருக்கிறாள்? பஞ்சாபிக் கவி மஞ்சித் திவானா சொல்கிறார்
“இது என்ன காலம்?
நுழைவாயிலில் அமர்ந்துகொண்டு,
நம் வீடு எங்கேயென்று
தேடிக் கொண்டிருக்கிறோம்”
இப்போது வீடுகள் இருக்கின்றன; வாசல்களும் உள்ளன. வீடும் வாசலும் நமக்குரியன அல்ல; நாம் துயரங்களின் பின் வாசலில் நிற்கிறோம்; பெண் தனக்குரிய வீட்டை, வாசலை, வாழ்வைத் தேடிக்கொண்டிருக்கிறாள். ஒதுங்கியுள்ள சமையற்கட்டு மூலையும், அதனுள் ஒளித்துவைக்கப்பட்டுள்ள பெண்ணும், பின் வாசல்வழி வெளியேறும் துயரங்களுமென வாழுகிறோம்.

பின்வாசல் தோற்றம் பற்றிய கருத்துசித்திரத்தை தெளிவாய்த் தீட்டிக் கொள்வது நல்லது. ஆதியில் நதிக்கரை வாழ்வு தோன்றியது; அதிலிருந்து வளர்ந்தது நதிக்கரை நாகரீகம். வாழ்விடங்கள் நதிக்கரையில் உண்டாகின என்பதினும், நீருள்ள இடங்களிலேயே உருவாகின. குளிக்க, துவைக்க, சமையல் செய்ய என பின்வாசல் வழியாக தண்ணீர்ப் பழக்கம் தேவையானது. வேளாண் சமுதாய பாய்ச்சலில் உழைக்கும் பெண்களின் ஒதுங்கும் இடமாக பின்வாசல் ஆகிப்போனது. மட்டுமல்ல, பெண்கள் ஒதுக்கப்படுமிடமாகவும் மாறிப் போனது.

- பெண் தன் வலியை - வெப்புராளத்தை முன்வாசல் வழியாகக் கடத்த இயலாது. எதனையும் பரிமாறிக் கொள்ளவோ, பறிக்கப்பட்டதைக் கேட்கவோ முன்வாசல் அதிகாரம் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை.
- வாசல் வீட்டுக்குரியது. வீடு யாருக்குரியது? ஒவ்வொரு வீடும் வாசல்களும் யாருக்குரியதோ, அந்த ஆண்மகனுடையது.
- கிராமம், நகரம் என வேறுபடுகிறார்கள் மனிதர்கள். கிராமங்களில் சொத்துடமை மனிதன், அல்லாத மனிதன் – என இருவகை மனிதர்களுள்ள கூறு போட்ட சமுதாயமிது. நிலபுலன் கொண்ட வீடுகளில் முன்வாசல்கள் ஆண்களின் நடமாட்டத்துக்கு உண்டானவை. முன்வாசலிலும் முன்னறையிலும் மன்னர்கள் நடமாடுகிறார்கள். முன்வாசலில் உட்காரவோ, உட்கார்ந்து பேசவோ பெண்டிருக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை. இரண்டாம் பாலினமாகிய அவர்கள் பேசவோ, புட்டத்தைச் சாய்த்துக் கொள்ளவோ லவிக்கப்பட்டது பின் வாசல்தான்.
- ஆனால் சாதாரணர் வீடுகளுக்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு முகம்; ஆண்கள் வரப்போக லேசாய் ஒதுங்கிக் கொண்டு, பெண்கள் முன்வாசலில்தான் அமர்ந்தார்கள். படிக்கட்டுகளில் பேசினார்கள். ஊர்க் கதையும் பொறணியும் அந்த வாசல்களிலிருந்து ஊற்றெடுத்தன. அவர்களின் எளியபொருளாதாரம் குடும்ப நடமாட்டத்துள் சம நிலையைக் கோரியது.
- சாதரண வீடுகளில், முன்வாசல் பெண்டிருக்கு உரியது என்பதற்கு என் பாட்டி வீடு சாட்சி சொன்னது. பாட்டி ஊரில் இருந்து நான் படித்து வந்தேன். பாட்டி ஊர் இல்லையென்றால், பள்ளிக்கூடம் கண்டிருக்க மாட்டேன். நிலபுலன், மாடு, வண்டி, விவசாயம் என்று ‘மேக்கூடிய’ ஒரு அம்மா பின் தெருவிலிருந்தார். வாரம் ஒரு தடவை 15.கி.மீ அப்பாலுள்ள நகரம் போய்ப் படம் பார்த்துவிட்டு வந்துவிடுவார். படம் பார்த்து வந்தால் கதை சொல்ல வேண்டுமல்லவா? பாட்டியின் முன்வாசல் இருந்தது; முற்றம் காத்திருந்தது. கருகருவென்று மசங்கும் மாலை வேளையில் கதை சொல்ல ஆரம்பித்தால் - கொம்மை (உமி) கட்டத் தொடங்கிய கம்மங்கருதையும் பால் பிடிக்க வைத்துவிடுவார் கதை சொல்லி; காடு மேடெல்லாம் பேசிக் கொண்டு அலையமாட்டார். படத்தில் என்ன உண்டுமோ அது உதிர்ந்துகொண்டிருக்கும். கேட்கிற பெண்டுகள் ஒருவார்த்தை சிந்தாமல் பிடித்துக் கொள்வார்கள்.
- “என்ன பாத்து என்ன செய்ய? சவக்கழிச்சிட்டுக் கிடக்கு. பாத்தா இப்படிப் படம் பாக்கணும் ”
- ‘கொஞ்சம் சலங்கை’ படம் பார்த்து விட்டு வந்து அந்தக் கதைசொல்லி சொன்ன வாசகம் இது. அப்போது நான் ஏழாம் வகுப்பு.

கேட்டுக் கொண்டிருந்த பெண்டுகளும் துயரங்களையோ, ஆங்காரத்தையோ கூட்டிப்பெருக்கி முன்வாசல் வழியாய்த்தான் வெளியே கொட்டினர்கள்.

நாம் அறிந்த நல்லமனிதர் ஒருவர் பொதுவுடைமைக் கட்சியின் தொண்டராகத் தீவிரமாய்ப் பணியாற்றினார். கோவில்பட்டியைத் தளமாகக் கொண்டு, அங்கும் சுற்று வட்டாரங்களிலும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கோவில்பட்டி சுற்றுவட்டத்தில் சமதர்மச் சுவாசம் இல்லாமல் ஒரு உசுப்பிராணி கூட இல்லை என்று சொல்கிறமாதிரி மாற்றங்களைக் கொண்டுவந்தார். இரவென்றில்லை; பகலென்றில்லை, எந்த நேரத்தில் வெளியேறுகிறார்; எந்த நேரத்தில் வீடு வந்து சேருவார் என்று சொல்ல முடியாது. பக்கத்து வீடுகளுக்குத் தொந்தரவாய் இருக்கிறதென்று, அவர் பின்வாசல் வழியாக வெளியேறுவார்; பின்வாசல் வழிதான் திரும்புதல்; அவ்வாறு ஒரு நாள் பணிமுடிந்து நள்ளிரவில் திரும்பிய போது, அவரது துணைவியார் சொன்னார் “இனிமே நீங்க முன்வாசல் வழியாவே வாங்க. பக்கத்திலிருக்கிறவங்க ஐயறவாப் பாக்குறாங்க”

யாரோ இரவுகளில் பின்வாசல் வழி வந்து போறாங்க என்று தெரு சந்தேகத்தோடு பார்க்கத் தொடங்கியது. அன்றிலிருந்து தோழர் நல்லகண்ணு முன்வாசல் வழியாகவே வந்து போவது என்று மாற்றிக் கொண்டார். முன்வாசலாயினும், பின்வாசலாயினும் இங்கும் ஒரு ஆணின் நடமாட்டம் பெண்ணின் பிரச்னையாக உள்ளது. பெண்ணின் இருப்பை தெரு, ஊர், சமுதாயம் கேள்விப்படுத்துகிறது. தோழர்களின் அர்ப்பணிப்புப்பணிகளாலும், பாதிப்புக்குள்ளாகிறாள் பெண். ஆகவே, தேவனிடம் வேண்டுவது போல்,
“இந்த நிமிடத்திற்குக்
களங்கம் சேர்க்காமலிருக்க
மனிதர்களை ஆசீர்வதியும்” (பக்-74)
- என்று முணுமுணுக்க வேண்டியுள்ளது.

2

“எல்லாவற்றையும் எப்போதோ
சொல்லிவிட
வாய்க்கிறது உனக்கு
எப்போதும் இல்லை எனக்கு”
முக்கால் தடுமாற்றம் அல்லது முழுத்தடுமாற்றம் என இதனைக் குறிக்கலாம்.முழுப்பணிவு எனவும் கூறலாம். துணிவின்மை, அடிமைத்தனம் என்றும் பொருள் கூட்டலாம். சொல்ல வாய்க்கிறதுக்கும் சொல்ல வாய்க்காததுக்கும் பலப் பல இருக்கும். இருவகைக்கும் மூலமாய் காலின் கீழ் நெருஞ்சிக்காடு இருந்திருக்கும்; கைகள் இண்டம் புதருக்குள் மாட்டி ரணம்கொட்டி இருக்கும்; உடல் முழுதும் ‘செந்தட்டி’ பட்டு அரிப்புக் கொண்டிருக்கும். இத்தனையையும் ஒரு மனசு வெளிப்படுத்த, இன்னொரு மனசுக்கு அது வாய்க்காது போகிறது, வாழ்வியல் - அதனை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் விதம் இதற்கு மூலமாகிறது. தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையில் ஒரு பிரச்சினையும் தீராது என்பது பொது விதி, ”பிறந்த குழந்தை கூட அழுகைப் புரட்சி செய்தே தன் தேவையை நிறைவேற்றிக்கொள்கிறது’ என்ற வாசகமும் நம் பக்கத்திலேயே வாழுகிறது.
“என்னைத் தாண்டிய
எறும்பு நிழலையும்...
நான்?...”
முன்னர்க் காட்டிய கவிதையின் நீட்சி இது. கடக்க முடியாத, தீர்மானிக்க முடியாத ஒவ்வொன்றும் நடுத்தரத்தின் மென்மனதை அதிரச் செய்கின்றன. நமக்கெல்லாம் வாய்க்கப் பெற்றிருப்பது நடுத்தர மனசுதானே!
“ஒரு குரோதம்
ஒரு புன்னகை
ஒரு விரத்தி
ஒரு ஏக்கம்
.......................
ரயில் பெட்டி போல்
யார் இவற்றைக் கோர்த்தது?
தடதடத்துக் கொண்டிருக்கிறேன்”
குரோதம் புன்னகை விரக்தி எல்லாமும் தன்னால் நேர்ந்தவை அல்ல; தன்னோடு எவரோலோ கோர்க்கப்பட்டவை. ஆனால் தடதடக்கும் ரயில் பெட்டிகள் இயங்குகின்றன.

முன்னேறிக்கொண்டிருக்கின்றன. மனசு மட்டும் இயக்கம் இல்லாமல் முடக்கமாகிப் போகின்றது.

உமா மோகனிடம் இதுபோன்ற வெம்புதலை, வெதும்பலை நிறையவே கேட்க முடிகிறது. ஆம், பெண்ணின் குரலை நிறையவே கேட்க முடிகிறது..
“இந்த நொடி மட்டும்தான்
கைவசம் என்றேன்
அதற்கும் கைநீளும் என்பதறியாமல்”
தன் வசமாகிவிட்ட நொடியை/வாழ்வை தனது என வசப்படுத்துகிற வேளையில் தட்டிப் பறிக்க நீளும் கைகள். இவை பெரும்பாலும் ஆணினுடையவை. அல்லது அவனால் இயங்கும் சமுதாயத்தினுடையது. பெண்ணின் அனைத்து வினைகளும், எதிர்வினைகளும் ஒரு ஆணின் வினைகளாலேயே அமைகின்றன - நிரூபீக்கிறார் இன்னொரு கவிதையில்.
“வீடு பூட்டும் கவலை
ஏதுமின்றி
தேர் ஏறிவிட்ட சுவாமி
காத்திருக்கிறார்”
சன்னல், கதவு எல்லாமும் பூட்டப்பட்உள்ளதா எனச் சரிபார்த்து, வீட்டைப் பூட்டி, சாவியை ஆண் கையில் தரும் ‘பெண்சாதி’கள் தமிழ்ச் சமுதாயத்தில் அற்றுப் போகவில்லை. இருக்கிறார்கள். தெருவில் வாகனத்தில் காத்திருக்கிற சாமியோடு ஓட வேண்டும். வாகனத்தில் ஏறிவிட்ட சாமிகளைமட்டுமல்ல, ஒரு பொறுப்பும் சுமக்காமல் மலையேறிவிட்ட சாமிகளையும் கவனப்படுத்துகிறது கவிதை;
“திறப்பாய்
என்று காத்திருக்கையில்
இன்னொரு பூட்டு”
அதே அர்த்தத்துடன், முந்திய பொருளடக்கத்துடனேயே இதனைக் கொழுவிக் கொள்ளலாம். இதை ஒரு மனித மனத்தின் நடமாட்டமாகக் கொள்ளமுடிந்தாலும், ஆணதிகாரத்தை நோக்கிய சிந்தனைத் தெறிப்பாகவே ஏந்திக்கொள்ளத் தோன்றுகிறது.

உள்முகத் தேடல்கொண்டு கவிதைப் பின்னல் போடும் கவிஞர், அகத் தளத்திலிருந்து பொதுத் தளத்துக்கு கவிதையை எடுத்துச் செல்லும் முயற்சியில் முன்னகர்கிறார். “எவ்வளவோ மாறிட்டோம்” என்னும் கவிதை அப்படியான ஒன்று:
“வாடாது கீரைக்கட்டு காத்து
ஐம்பது ஐம்பது காசுகளாய் சேர்க்கும்
தருமாம்பா கிழவி,
புருஷனின் சாராயம் மணக்கும் சட்டையை
இரவலாய் அணிந்து
கல்சுமக்கும் கனகா
நள்ளிரவில் தெருக்கூட்டி
குப்பை டிராக்டர் குலுக்கலும் நாற்றமும்
இயல்பாய் ஏற்ற செல்வி,

எவருக்கும் சொல்லாமலே
இந்த வருடமும்
வருகிறது மகளிர் தினம்
தவறாமல் தருவார்கள்
வைரநகைக்குத் தள்ளுபடி”
இதுவரை சரி; நிறைந்து நிலவும் ஏழ்மையையும், கவலையே அற்று வந்து செல்லும் மகளிர் தினத்தின் பகட்டையும் வெளிச்சமாய்க் காட்டுகிற கவிதை. இத்துடன் கவிதை முடிந்திருக்க வேண்டும்
“இவர்களோ இப்போது
வைரம் என்று எவருக்கும்
பெயர் கூட வைப்பதில்லை
பழுசா இருக்காம்”
- என்று அந்தப் பழசான கொசுறு கவிதையின் உயரத்தைக் குறைத்துவிடுகிறது. மைய முரணை எடுப்பாக வைத்தபின், முந்திய சொல்முறைப் பாணி மீட்டெடுக்க வேண்டுமா? இவ்வகைக் கவிதைகளின் கும்மாளமும், கவிஞர் பாரம்பரியமும், அவர்களுக்குக் கிடைத்த பூமாலைகளும் 2000-க்கு முன்பே முடிந்து விட்டன. முரண் அடுக்குதல் என்னும் பேச்சோசை முறை கவியரங்கிற்கு எடுபடலாம். முரண்கள் அடுக்கி அட்டமணியம் பண்ணிய காலம் மலையேறி விட்டது. இலக்கிய வகை ஒவ்வொன்றும் தாவலில் மேலேமேலே போய்க் கொண்டிருக்கின்றன என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

“உங்கள் மழையும் எங்கள் மழையும்” என்ற மற்றொரு கவிதை.
“இங்கேதான்
நேற்று பத்து செ.மீ. மழை அளவு
பதிவானதாகக் குறிப்பிடுகிறார்கள்
நீங்களும் நாங்களும்
இதே ஊரில்தான் இருக்கிறோம் .
முத்தங்களை நினைவூட்டிய
தழுவிடத் தோள்தேடிய
நறுமணத் தேநீரோ,
கரகரப்பும் சூடும் நிரம்பிய
கொறிப்பான்களோ,
ஏன்
குளிரின் ஆவி பறக்கும்
ஐஸ்கிரீமோ
ஏந்திய மழை உங்களுடையது
அது சன்னலின் கம்பிகளுக்கு வெளியிலோ
இறுக மூடிய கண்ணாடிகளுக்கு அப்பாலோ
வழிந்த மழை;
எங்களுடையது
கூரைப் பொத்தல்வழி
குடியிருப்புகளுக்குள் பொழிந்த மழை
அது,
தள்ளுவண்டிகளை ஏறக்கட்டி
நாற்றுமுடிகளையும்
சாந்துச் சட்டிகளையும் கைவிட்டு
போர்த்தித் திரும்பிய சவ்வுத்தாள்வழி
வழிந்தோடி
அடுப்புகளை அணைத்த மழை
..................................
அதனால் தான் சொல்கிறேன்
உங்கள் மழையும்
எங்கள் மழையும் ஒன்றல்ல”
இங்கு ஒரு தனித்தனி ஓவியங்கள் தீட்டப்பட்டன; இறுதியில் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டிட ஒரு உவமையால் இணைக்கப் படுகிறது.

ஒரு கவிதை அதே விசயத்தைப் பற்றி சித்தரித்த பல கவிதைகளை நினைவு படுத்தலாம்; நினைவு படுத்த வேண்டும் - அது கவிதை.

மும்பை நகரின் தாராவி – குடிசைகளின் நகரம்; அவ்வாறு குறிக்கிறபோதே குடிசைவாழ் மக்களுக்கு “நரகமாக” இருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். தமிழர்கள் பிழைக்க வந்த பூமி அது. அம்மக்களின் வாழ்வு பற்றி. அங்கு சிலகாலம் வாழ்ந்த ‘ஆராவயல் பெரியய்யா’ என்ற கவிஞர் “தாராவிச் சித்திரம்” என்றொரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டார்.

தாராவி மக்களுக்கு மழை எப்படி இருந்தது?
“குடிநீருக்காக
மழை வேண்டுமென்பது உண்மைதான்;
ஆனாலும் நாங்கள்
மழையை வெறுக்கிறோம்;
மின் சாரத்திற்காக
மழை வேண்டுமென்பது உண்மைதான்
ஆனாலும் நாங்கள்
மழையை வெறுக்கிறோம்.
உலகம் சுழல்வதே
மழையின் கொடையால் என்பது
மிகமிகச் சரியான உண்மைதான்
ஆனாலும்
இந்தியாவில் கோடி மக்களாகிய
நாங்கள்
மழையை வெறுக்கிறோம்.
நீங்கள் எங்கள்மீது
கோபப்பட்டுப் பயனில்லை
கூரை சொந்தமாயிருக்கும்
உங்களுக்கு
மழையின்
கொடுமை புரியாது!”
- மனதின் அசைவுகளை, மனசின் கலாச்சாரத்தை அதிகம் பேசுபவை உமாவின் கவிதைகள்; தகிக்கும் உக்கிரமமான பிரச்சினைகளின் திசையில் இப்போது நகரத் தொடங்கியுள்ளன. ஒரு படைப்பில் ஒரு சிந்திப்பு வாசைப்போரை வேற பல சிந்திப்புகளுக்கு இட்டுச் செல்லவேண்டும். ஒரு கவிதை வேறு பல கவிதைகளை நினைவு படுத்த வேண்டும். தன்னைத் தொட்டபடியும், சுற்றியுமிருக்கும் பல கவிதைகளைக் கூட்டி வர வேண்டும்; அது நல்ல கவிதை! உமாமோகனின் பல கவிதைகளுக்கும் இதனைக் கொளுவிக் கொள்ளலாம் தடையில்லாமல்

ஒவ்வொன்றின் மீதும் படைப்பாளிக்குள் பீறிடும் உள்முகமான எதிர்ப்பில் இலக்கியம் உருவாகிறது. ஒரு படைப்பாளி தனக்குள் செய்யும் முதல் கலகம்தான் படைப்பு. தனக்குள் கிளர்ந்தெழும் எதிர்ப்பை மற்றவர்க்கு தெரியப்படுத்திடல் வேண்டும் என்ற உற்சாகம் தான்; இந்த உந்துதல் பேச்சாக, இசையாக, ஓவியக்கோடுகளாக, கவிதையாக, கதையாக ஒரு வடிவம் கொள்கிறது. அடுத்தவரிடம் போய் ஒட்டும் வரை அது நம் குழந்தை. அடுத்தவரிடம் போய்ச் சேர்ந்தவுடன் மற்றவர் ஏந்திக் கொள்ளும் பிரதியாகிவிடுகிறது. அது நம் உதிரமாகவே இருப்பினும் மற்றவர் கைபோய்ச் சேர்ந்ததும் அது அவர்களுக்குரியதாக மாறிவிடுகிறது. அவரவர் திறனின் அடிப்படையில் கையாண்டு விகசிப்பர்.

”ஒரு கலைஞனுக்குத் தான் படைக்கிற விசயத்தின் மீது காதல், நேயம், கொண்டாட்டம் இருக்கவேண்டும்” என உரைக்கிறார் ஒரு கவிஞர். அதற்குமுன் ஆதிக்கேள்வி ஒன்றிருக்கிறது! படைக்கத் தேர்வு செய்கிற விசயம், அனுபவம்? உள்முகத் தேடலிலேயே தேடித் தேடித் தொடுகிற விசயமா? விசயத்தேர்வைத் தீர்மானிக்கிறபோது அது, புற வெளியிலிருந்து எடுக்கப்படினும் தன்னனுபவமாக ஆக்கப் படல் வேண்டும். உமா மோகன் போல் இந்தத் தலைமுறைக் கவிஞர்கள் பேசமலிருக்கவும் மவுனித்திருக்கவும் இந்தப் புற உலகு கட்டாயப் படுத்த முடியாது என கவிதையில் காட்டுகின்றனர்.

“துயரங்களின் பின்வாசல்”
கவிஞர் உமா மோகன்
வெளியீடு: வெர்சோ பேஜஸ்,
(எண்:30, முதல் தளம் மாடி,
விமானநிலையச் சாலை,
முத்துலிங்கபேட்டை, புதுச்சேரி 605008)
விலை: ரூ. 80
தொடர்புக்கு: 9894660669

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ