அணு உலைக்கு எதிரான படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள் & செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை
அணு உலைக்கு எதிரான படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்களின் கூட்டறிக்கை 17.9.2012 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான படைப்பாளிகளும், பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையை வெளியிட்ட பேராசிரியர் கல்யாணி, எழுத்தாளர் வ.கீதா, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பூவுலகின் நண்பர்கள் ஆர்.ஆர்.சீனிவாசன், இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கான தங்கள் ஆதரவையும், அரசாங்கத்துக்கு கண்டனங்களையும் தெரிவித்தனர். பத்திரிகையாளர் - எழுத்தாளர் கவின்மலர், எழுத்தாளர்கள், சந்திரா, பா.செயப்பிரகாசம், யமுனா ராஜேந்திரன், கவிதா முரளிதரன், விஷ்ணுபுரம் சரவணன் உள்ளிட்டோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு இந்த கூட்டறிக்கையை வெளியிட ஏற்பாடு செய்திருந்தது.
இந்த அறிக்கைக்கு பிரபஞ்சன், எஸ் ராமகிருஷ்ணன், பொன்னீலன், பா.செயப்பிரகாசம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், கோணங்கி, தமிழச்சி தங்கபாண்டியன், மனுஷ்யபுத்திரன் உள்பட ஏராளமான எழுத்தாளர்கள், மணிவண்ணன், சேரன், வெற்றிமாறன், அமீர், ஜனநாதன், சீனுராமசாமி உள்ளிட்ட இயக்குநர்கள், திரளான பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர், அணு உலைக்கெதிரான செயற்பாட்டாளர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் ஒப்புதல் அளித்துள்ளனர். சமீப கால போராட்டங்களில் இத்தனை திரளாக எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கரம் கோர்த்திருப்பது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த அறிக்கை மத்திய மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட செயல் திட்டம் குறித்து ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் நம்மிடம் கூறியதாவது: ஏற்கெனவே இரு பத்திரிகைச் சந்திப்புகளை இந்தப் போராட்டம் தொடர்பாக நடத்திய இந்த கூட்டமைப்பு, இன்று மூன்றாவது சந்திப்பை நடத்தி போராட்ட ஆதரவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளோம். இந்த அறிக்கை வெளியிடப்பட்டு, அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்குப் பிறகு அடுத்து உண்ணாநிலை போராட்டம் அறிவிக்கப்படும். அதற்கான தேதி, இடம் போன்றவற்றை ஆர்.ஆர்.சீனிவாசன் அறிவிப்பார். நாங்கள் எழுத்தாளர்கள் ஏற்கெனவே கூடங்குளம் சென்று மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். எழுத்தாளர்கள் வ.கீதா, பிரேமா ரேவதி போன்றவர்கள் தங்களால் முடிந்த அளவு பணிகளை அங்கே போராட்டக் களத்திலேயே இருந்து ஆற்றி வருகின்றனர்," என்றார்.
அறிக்கை விவரம்:
சோவியத் ரஷ்ய உதவியுடன் அணு உலைத் திட்டத்தை கேரளாவில் தொடங்குவதாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முதலில் அறிவித்தார். அங்கே கடும் எதிர்ப்பு வந்ததும் அது தமிழ்நாட்டின் மீது சுமத்தப்பட்டது. கேரளாவைப் போல நாமும் நம் மாநிலத்தில் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.
இந்திரா காந்தி 1984ல் கொல்லப்பட்டபின், பதவியேற்ற ராஜீவ் காந்தியின் அரசு சோவியத் ரஷ்யாவுடன் 1987ல் ஒப்பந்தம் செய்து கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை அறிவித்தது. அப்போது முதல் அத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் பல கட்டங்களாக மக்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஆபத்தான அணு உலைத் திட்டத்தை கைவிட்டு, மாற்று மின் திட்டங்களை முன்னெடுக்க ஆரம்ப காலம் முதல் மக்களும், மாற்று அறிவியலாளர்களும் அரசுக்கு கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர். மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், ஜனநாயகக் குரலையும் துவக்கம் முதல் அரசு கண்டுகொள்ளவில்லை. அணு உலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவை நடத்த முயற்சித்து மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கூடங்குளத்திற்கு செல்லாமல் ராஜீவ் காந்தி மதுரையில் அடிக்கல் நாட்டிவிட்டுத் திரும்பினார். 1989ல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கன்னியாகுமரியில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பேரணியில் தமிழக அரசு காவல்துறையை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பின்னர் 1991ல் சோவியத் ரஷ்யா உடைந்தபின், அத்திட்டம் தொடராமல் இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பும் தணிந்திருந்தது. பின்னர் பத்தாண்டுகள் கழித்து, 2001ல் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு ரஷிய நாட்டுடன் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை மீண்டும் துவங்கியதும் அதற்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் துவங்கின. இத்திட்டத்தை துவக்கம் முதல் இடிந்தகரையிலும், இடிந்தகரைக்கு வெளியேயும் மக்கள் எதிர்த்துப் போராடியதை மறைக்க பொய்ப் பிரச்சாரங்கள் அணு உலை ஆதரவாளர்களால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழுகிற மக்களின் கருத்துக்களையும், ஒப்புதலையும் பெறாமலே எதிர்ப்புக் குரல்களை கண்டுகொள்ளாமல் ரஷிய நாட்டு உதவியுடன் உதவியுடன் 1000 மெகா வாட் உற்பத்திக்கான 2 அணு உலைகளை இந்திய அரசு கட்டியது. நேரடியான பாதிப்பிற்குள்ளாகிற அம்மக்களின் கேள்விகளுக்கு இதுவரையில் உரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் இல்லை. இந்த அணு உலைகளின் தினசரி கதிரியக்க அளவு, அணு உலைக் கழிவுகளின் அளவு, அவற்றை பாதுகாக்கிற முறை, அணு உலைக்கு தேவைப்படுகிற நீரின் அளவு, அணு உலையிலிருந்து வெளியேறிக் கலக்கும் நீரினால் கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு, அணு உலையை குளிர்விக்க ஆகும் செலவு, அதன் விளைவுகள், இழப்பீடு தொடர்பாக ரஷ்யாவின் பொறுப்பு ஆகியவை தொடர்பான மக்களின் கேள்விகள் மிகவும் நியாயமானவை.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் தற்போது ஒரு முக்கியக் கட்டத்தை அடைந்திருக்கிறது. சுதந்திர இந்தியா சந்தித்த மக்கள் திரள் போராட்டங்களில் முக்கியமான ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம். இந்திய தேசத்தின் ஆன்மாவை நோக்கி வலிமையான கேள்விகளை எழுப்பிய இந்தப் போராட்டம் இன்று அதிகாரத்தின் வன்கரங்களால் நசுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் விடுதலையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் போராடும் கூடங்குளம் வட்டார மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தார்மீகக் கடமை என்று நம்புகிறோம்.
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களாகிய நாங்கள் போராடும் மக்களுடன் நிற்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் அரசாங்கம் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஜனநாயக விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு, அறவழியில் நின்று போராடிய மக்கள் மீது இன்று மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் சர்வாதிகார அடக்குமுறையை ஏவியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 10 அன்று நடந்த முற்றுகைப் போராட்டத்தில் அந்த மக்கள் மீது கண்ணீர்ப் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் அராஜகமும், குலசேகரப்பட்டினத்தில் அந்தோணி என்கிற மீனவர் பலியாகக் காரணமான துப்பாக்கிச்சூடும் கடும் கண்டனத்துக்குரியது. போராடும் மக்களின் ஒருங்கிணைப்பாளராகிய சுப.உதயகுமாரையும் போராட்டக்குழுவினரையும் மனித உரிமைகளுக்கு புறம்பான முறையில் காவல்துறை நடத்துவதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண்களின் அதிகபட்ச பங்கேற்புடன் நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் இருப்பதை, தொடர்ந்து கொச்சைப்படுத்தும் ஆணாதிக்கப் பேச்சுகளுக்கும் எங்களது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
தமிழக அரசும் இந்திய அரசும் இந்த அராஜகப் போக்கை உடனடியாகக் கைவிட்டு போராடும் மக்களின் தார்மீக உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்க முன்வரவேண்டும்; இடிந்தகரை பகுதி மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்கும் வகையில், காவல்துறையினர் நடத்திவரும் அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் கைவிடவேண்டும். மக்களின் கோரிக்கையை ஏற்று அணு உலையில் எரிபொருள் நிரப்பும் முயற்சிகளைக் கைவிட்டு, அணு உலையை மூடவேண்டும் என்று மக்களுடன் இணைந்து நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இடிந்தகரை மக்களின் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை விலக்கிக்கொள்ளவும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும், காவல்துறையினரின் தாக்குதல்களால் உண்டான சேதங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும், வன்முறையை ஏவிய காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடுக்கப்படவேண்டும் என்றும் வற்புறுத்துகிறோம்.
- ஒருங்கிணைப்புக் குழு
17.9.2012
சென்னை
கருத்துகள்
கருத்துரையிடுக