பா.செயப்பிரகாசம் எங்கள் முன்னோடி - ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.

எங்கள் கரிசல் மண்ணின் கதைகளை எங்களுக்கு முன்பாக உணர்ச்சிக் கொந்தளிப்புடன் சொன்ன எங்கள் முன்னோடி பா.செயப்பிரகாசம். நானறிய ஒன்பது சிறுகதைத் தொகுப்புகளும் ,ஐந்து கட்டுரைத்தொகுப்புகளும், இரண்டு கவிதைத் தொகுப்புகளும் என வளமான பங்களிப்பை - பெரிய இடைவெளியோ, மௌனமோ இன்றித் தொடர்ந்து படைப்புலகில் நிகழ்த்தியவர் - தந்தவர் ஜேபி என நண்பர்களால் அன்போடு அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம். பங்களித்த அளவுக்கு அவர் கொண்டாடப்பட்டதில்லை. நல்ல படைப்பாளிகள் எல்லோருக்கும் இங்கு நடப்பது இதுதானே.

எங்கள் கோவில்பட்டியிலிருந்து வந்துகொண்டிருந்த - அண்ணாமலை நடத்திய ’நீலக்குயில்’ இதழில்தான் அவருடைய கதையை முதன்முதலாகப் படித்த நினைவு. ’வேரில்லா உயிர்கள்’ என்கிற கதை. என்னை முற்றிலுமாக உலுக்கிப்போட்ட கதை. அது 1973 அல்லது 1974 ஆக இருக்கலாம். அந்த நாட்களில் ’ரிக்கார்டு டான்ஸ்’ என்ற பேரில் தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் சினிமாப் பாட்டுக்குப் பெண்களை ஆபாசமாக ஆடவிட்டு ஊர்கூடிப் பார்க்கும் பழக்கம் இருந்தது. எழுபதுகளில் அது முற்றிலுமாக அரசால் தடை செய்யப்பட்டது. அப்போது நகர்ப்புறங்களில் நடக்கும் பொருட்காட்சிகளிலெல்லாம் இந்த டான்ஸ் நடக்கும்.

கொட்டகை ஒன்று இருக்கும். கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களிலெல்லாம் ரிக்கார்டு டான்ஸ் போட்டுவிடுவார்கள். பெரும்பாலும் மதுரையிலிருந்து ஆட்டக்காரிகளை அழைத்து வருவார்கள். அதில் சிறப்புப் பட்டம் பெற்ற பெண்களும் இருப்பார்கள். மதுரை ரவுடி சரோஜா என்கிற பெண் எங்கள் ஊர்ப்பக்கம் ரொம்ப பிரபலம். அப்படிப் பெண்களைப் பற்றிய கதைதான் ’வேரில்லா உயிர்கள்';  அற்புதமான வரிகளால் சொல்லப்பட்ட கதை.

அந்த ஆட்டம் பார்க்க ராத்திரிகளில் ஒளிந்து வரும் ஊர்ப் பெரியவர்கள் பற்றி அவர் சொல்லுவார் “தனிச்சொத்தைப்  பாதுக்காக்கப் பழக்கப்பட்டதைப் போலவே, தங்கள் பெண்டு பிள்ளைகளின் நிர்வாணத்தை அவர்கள் பாதுகாத்தார்கள். பொதுச்சொத்தை நிர்வாணமாகப் பார்க்க அவர்கள் ஆசைப்பட்டார்கள். பொதுச்சொத்தை அனுபவிப்பதற்கு அவர்களுக்கு எந்தத் தடையும் தேவையில்லாமலிருந்தது”.

பல்வேறு மனக்குழப்பங்களில் கிடந்த அந்த இருபது வயதில் நான் வாசித்த இந்த வரிகள் என் முகத்தில் அறைந்தன. மனதைக் கிழித்து அழுக்குகளைப் பெருக்கித் தள்ளின என்பேன். மீண்டும் 2005-இல் கணையாழியில் இதே போல ஒரு கதை ஆட்டம் என்கிற பெயரில் எழுதியுள்ளார். ஆண்களின் மன வக்கிரங்களைத் தோலுரித்த இன்னொரு கதை அது. இதுபோல ஆபாச நடனம் நடப்பதாகக் கேள்விப்பட்டுப் பழைய திரையரங்கிற்குப் போனவர்கள், ஆட்டம் ’கேன்சல்’ என்று அறிவிக்கப்பட்டதால் ஆத்திரத்துடன் பெஞ்சுகளை உடைத்துப்போட்டு விட்டு கூட்டமாக வெளியேறும் காட்சியை அக்கதையில் வர்ணிக்கும் இடம் முக்கியமானது.

கூட்டத்தில் முன்னேறி படிக்கட்டில் நின்று பார்த்தார். இங்கிருந்து பார்த்தபோது கையில் விளக்குமாறுடன் ஒரு பெண் எதிரில் நிற்பது தெரிந்தது. ஒரு பெரிய சண்டைக் களத்தை உண்டாக்கக் காத்திருப்பதுபோல் காளி ரூபத்தில் நின்றாள்.

“இன்னைக்கு வரட்டும், இருக்கு ஒனக்கு வெளக்கு மாத்துப் பூசை”

கையில் விளக்குமாற்றை உருட்டிக்கொண்டே பேசினாள்.

“யாரைத் தேடுற?”

வெளியில் நின்ற பெரியவர் கேட்டார். அவர் இசைத்தட்டு நடனம் பார்க்க வந்தவராகத் தெரியவில்லை. எசகு பிசகாய் ஏதோ நடந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு வந்திருக்க வேண்டும்.

“வேற யார? எம் மாப்பிள்ளையைத்தான்”

அந்தப் பெண் மாப்பிள்ளை என்றது அவள் வீட்டுக்காரனை. முகம் செவ செவ என ரத்த நரம்புகள் ஏறிக் கனன்றது. தூக்கிப் பிடித்த விளக்குமாறுடன் அவள் நின்றபோது அரங்கிலிருந்து வெளியேறுகிற ஒவ்வொருவரும் அடி வாங்கியதுபோல முகம் ‘சுரீச்சி’ வெளியேறினார்கள்.

“அப்படியே எல்லோருக்கும் பொறத்தாலே நாலு போடு போட்டு அனுப்பு“ என்றார் பெரியவர்.

”ஏன் முன்னாலே போட்டா ஆகாதா?”

இக்காட்சி பூடகமாகவும் நுட்பமாகவும் ஆண் வாசக மனதில் அதிர்வுகளை ஏற்படுத்துபவை. ஜேபியின் ஒவ்வொரு கதையும் அழுத்தமான வார்த்தைகளோடு பிசிரற்ற குரலில் வாழ்க்கையைப் பேசுபவை. ஒரு சுவாரஸ்யமான துவக்கத்துக்காக ’ஆட்டம் கதையில்’ ஆரம்பித்துவிட்டேன். உண்மையில் பா.செ.யின் அடையாளம் ‘கரிசல் கிராமத்தின்’ காற்றுப் போல் நிறைந்திருந்த வறுமையைக் கொந்தளிக்கும் குரலில் பேசியவர் என்பதே ஆகும்.

அப்புறமாக அவருடைய எழுத்துக்களைத் தேடித்தேடி வாசிக்கத் துவங்கினேன். அம்பலகாரர் வீடு என்கிற கதையையும் ஒரு ஜெருசேலம் கதையையும் படித்துவிட்டுக் கதறி அழுதிருக்கிறேன். தன் அம்மாவைப் புதைத்த இடத்தில் முளைத்த கோரைப்புற்களைப் பிடுங்கும் சிறுவனான மந்தி ராமசாமியை, அவனை விடச் சிறுவனான இவன் ”அங்கே புல் புடுங்காதே, அது எங்க அம்மா செத்த இடம்” என்று கதறும்போது நம்மால் தொடர்ந்து வாசிக்க முடியாது. அழவைத்து வாசகனைச் செயலிழக்கச் செய்யும் கதைகளல்ல ஜேபியின் கதைகள். ஆழப்பாய்ந்து நம்மைப் புரட்டிச் செயலுக்குத் தூண்டுபவையாகவே அவருடைய கதைகளெல்லாம் இருக்கின்றன.

தனிப்பட்ட வாழ்க்கையைச் சொல்லும் கதையானாலும், அதைப் பொது அரசியலுடன் இணைக்கும் மாயவித்தை கைவரப்பெற்ற தமிழ்ப் படைப்பாளியாக எப்போதும் பா.செ அவர்களை நான் வியப்போடு பார்ப்பேன். என் மனம் அவருடைய கதைகளின் பின்னால் இழுபட இன்னொரு முக்கிய காரணம் என் கதைகளில் போலவே அவருடைய கதைகளிலும் எங்கும் அம்மா இல்லாத பிள்ளைகள், அப்பா இல்லாத பெண்மக்கள் என வளர்க்க ஆளில்லாத துக்கத்தை முகத்தில் ஏந்தி நிற்கும் இளம் மானுடத்தைக் காணமுடிவதுதான். இது எங்கள் கரிசல் மண்ணுக்கே சொந்தமான சோகம் போலும். கு.அழகிரிசாமியின் பல கதைகளிலும் இதைக் காணலாம்.

பா.செ.யின் ஆரம்பக் கதைகளின் மொழி குறித்து அவருக்கே பின்னர் விமர்சனம் இருந்ததாக - அவர் எதிலோ சொன்னதாக ஞாபகம். திராவிட இயக்கத்தாரின் மேடைச் சொல் உருட்டுகளில் சற்று மயங்கியிருந்தேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் ஒரு வாசகனாக நான் அப்படி எப்போதும் உணர்ந்ததில்லை. இப்போது அவருடைய  எல்லாக் கதைகளையும் ஒரே  மூச்சில் வாசித்தபோதும் கூட மொழி இடையூறாக இருக்கவில்லை. செறிவையும் அடர்த்தியையும் அதிகப்படுத்துவதாகவே உணர்கிறேன். ”கதை மாந்தர்களின் வாழ்க்கை பள்ளத்திலும், எனது மொழி நடை மேட்டிலும் இருப்பதாகக் காண்கிறேன்” என்று அகரம் வெளியிட்ட அவரது கதைத்தொகுப்பின் என்னுரையில் அவர் குறிப்பிடுகிறார். ஆனால் வாசக அனுபவம் அப்படி இல்லை.

“வறுமை வயிற்றின் கதவுகளைத் தட்டுகிறபோது, எல்லா அசிங்கங்களையும் ஏற்றுக்கொள்கிற மேன்மை வந்து விடுகிறது. எல்லாத் திசையும் இருண்டிருக்கிற போது, நம்பிக்கையுடன் கால் பதிக்கிற திசையும் பள்ளமாகி விடுகிறது” என்பது போன்ற வார்த்தைகள் எத்தனை அனுபவமும் துயரமும் ததும்பி நிற்கும் வார்த்தைகள். இந்த வரியே ஒரு கதையாகி இருளின் புத்ரியான அமுதாவை அதோ அந்த இருளடைந்த வீட்டில் யாருடைய வருகைக்காகவோ காத்திருக்க வைத்திருக்கிறது. கைவிடப்பட்டவர்களின் கதைகளை அதிகமாக எழுதிய தமிழ் எழுத்தாளர் இவர்தானோ என்று இக்கதைகளையெல்லாம் ஒருசேர வாசித்தபோது தோன்றியது. சமூகம் கவனிக்கத் தவறியவற்றை அதே சமூகத்துக்கு உரத்த குரலில் உணர்ச்சியோடு உறைக்கும் விதமாகச் சொல்பவன்தானே கலைஞன்? பா.செயப்பிரகாசம் ஒரு மகத்தான கலைஞன்!

சூரியதீபனாக அவர் எழுதிய கதைகளின் தொகுப்பு ’இரவுகள் உடையும்’ இப்போது வாசிக்கக் கிடைக்கவில்லை. எமர்ஜென்சிக் கொடுமைகள் பற்றிய கதைகள் அத்தொகுப்பின் பலமான கதைகள். பெண்வாழ்வு பற்றிய ”இரவுகள் உடையும்” கதை வாசித்த கணத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் கூட என் உடம்பில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அவருடைய கதைகளில் ஒரு ஜெருசேலம், அம்பலகாரர் வீடு, இருளின் புத்ரிகள், வேரில்லா உயிர்கள், இருளுக்கு அழைப்பவர்கள், தாலியில் பூச்சூடியவர்கள், ஆட்டம், வளரும் நிறங்கள் போன்ற கதைகள் எப்போதும் நின்று என்னை வதைக்கும் கதைகளாக இருக்கின்றன. கரிசல் காட்டின் கதையை நைனா கி.ரா துவங்கி பூமணி, வீர.வேலுச்சாமி, சோ.தருமன் என ஒரு பட்டாளமே எழுந்து வந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்றாலும் பா.செ.யின் குரல் தனித்துவமிக்கது. அழுத்தமும் அடர்த்தியும் செறிவும் உணர்ச்சிக் கொந்தளிப்புமான குரலில் கதை சொன்னவர் அவர். அதற்கும் மேலாக தனிவாழ்வைப் பொதுவாக்கி பொதுவைத் தனிப்பட்ட அனுபவமாக்கிக் கதை சொல்வதில் வெற்றி கண்டு பொறாமையூட்டும் ஒரு முன்னோடியாக அவரை நான் கொண்டாடுவேன். பாலியல் பிரச்சனைகளை ஒரு  நாட்டுப்புறக் கலைஞனைப் போல் பட்டவர்த்தனமாகவும் ஆழமான உளவியல் அணுகுமுறையோடும் பா.செ.யைப் போலச் சொன்ன படைப்பாளிகள் தமிழில் மிகக்குறைவு.

மனநிலைதான் போலும். ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவு.அவருடைய ஒரு கட்டுரையின் தலைப்பைப் போல “உண்மை - ஏற்கனவே தயாரிக்கப்பட்டிராத சொற்களில் வருகிறது” - அவர் அப்படியேதான் வாழ்கிறார்.

அவருடைய கதைகளின் மொத்தத்தொகுப்பை யாரேனும் வெளியிட்டால் தமிழ் இலக்கிய உலகம் அவருக்கு நன்றி செலுத்தும். 1998 -இல் அகரம் வெளியிட்ட 30 கதைகளின் தொகுப்புகூட இப்போது கிடைப்பதில்லை. மறுபதிப்பில்லை.

“காலத்திற்குள் அடைபட்டதுதான் இலக்கியம். ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சித்தரிக்கிற ஒரு படைப்பு அந்தக் காலகட்டத்தையும் தாண்டி வாழ்கிறது. அது அந்தக் காலத்தின் சமுதாய வரலாறாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் அந்த சமுதாயத்துக்குள் இலக்கியவாதி வாழ்ந்த வாழ்க்கையாகவும் இருக்கிறது” என்கிற வரிகளுக்கு ஏற்ப வாழும் நம் சமகாலக் கலைஞனாக பா.செயப்பிரகாசம் திகழ்கிறார்.

கதைகள் பிறந்த கதையை சில கட்டுரைகளாக அவர் எழுதிப் பார்த்திருக்கிறார். அதுவும் தமிழில் அபூர்வமாக நிகழும் முயற்சி தான். ஒரு பேரனின் கதைகள் என்கிற சிறு புத்தகமாக அது வந்துள்ளது (சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது).

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ